|
770 |
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே. | 3.72.1 |
771. | கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன் ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே. | 3.72.2
|
772. | காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலோர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே. | 3.72.3
|
773. | இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள் உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராவெழுமினே. | 3.72.4
|
774. | துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானோர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே. | 3.72.5
|
775. | மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர் வானுலகம் ஏறலெளிதே. | 3.72.6
|
776. | வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே. | 3.72.7
|
777. | தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை நிற்றலில போகுமுடனே. | 3.72.8
|
778. | தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை யாயினவும் அகல்வதெளிதே. | 3.72.9
|
779. | காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே. | 3.72.10
|
780. | கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்குமுடனே. | 3.72.11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அடைக்கலங்காத்தநாதர், தேவியார் - புவனநாயகியம்மை.