|
759 |
கோழைமிட றாககவி கோளுமில வாகஇசை கூடுவகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாந்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. | 3.71.1 |
760. | அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகஎழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடஅழ கார்குயில்மி ழற்றுபொழில் வைகாவிலே. | 3.71.2
|
761. | ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவையு ணர்ந்தஅடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்கள் தோறுமழகார்
வானமதி யோடுமழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே. | 3.71.3
|
762. | இன்னவுரு இன்னநிறம் என்றறிவ தேலரிது நீதிபலவுந்
தன்னவுரு வாமெனமி குத்ததவன் நீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போம்வகையி னால்முழு துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னஇரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே. | 3.71.4
|
763. | வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகான்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே. | 3.71.5
|
764. | நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல் கரந்தசிவ லோகனமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழின்இசை யெண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே. | 3.71.6
|
765. | நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையாற்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறும் நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதி கொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே. | 3.71.7
|
766. | கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடன் நெரித்தஅழ கன்றனிடமாங்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே. | 3.71.8
|
767. | அந்தமுதல் ஆதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மான்இறைவன் என்றுதொழ நின்றருள்செ யீசனிடமாஞ்
சிந்தைசெய்து பாடும்அடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே. | 3.71.9
|
768. | ஈசனெமை யாளுடைய எந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடந்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே. | 3.71.10
|
769. | முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்திருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனுரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே. | 3.71.11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வில்லவனேசர், தேவியார் - வளைக்கைவல்லியம்மை.