திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருச்செங்காட்டங்குடி தேவாரத் திருப்பதிகம்

(மூன்றாம் திருமுறை 63வது திருப்பதிகம்)

3. 063 திருச்செங்காட்டங்குடி

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

671

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய
வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.

01
672.

பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும்
அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்காள்
கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே.

02
673.

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தால் இரைதேரும் இருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

03
674.

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

04
675.

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயில்தூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே.

05
676.

குறைக்கொண்டார் இடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னி கணபதீச்சரம் மேய
சிறுத்தொண்டன் பெருமான்சீர் அருளொருநாள் பெறலாமே.

06
677.

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
ஒருவடியாள் இரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.

07
678.

கூராரல் இரைதேர்ந்து குளமுலவி வயல்வாழுந்
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்றன் அருளொருநாள் பெறலாமே.

08
679.

நறப்பொலிபூங் கழிக்கானல் நவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் அலர்கோடல் அழகியதே
சிறப்புலவன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.

09

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

10
680.

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி அடிகளையே அடிபரவுஞ்
சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே.

11

திருச்சிற்றம்பலம்

Back to Complete Third thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page