|
520 |
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே. | 01 |
521. | நம்பு வாரவர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சி வாயவே. | 02
|
522. | நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந்
தக்கு மாலைகொ டங்கையில் எண்ணுவார்
தக்க வானவ ராத்தகு விப்பது
நக்கன் நாமம் நமச்சி வாயவே. | 03
|
523. | இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தான்நினை வார்க்கினி யான்நெற்றி
நயனன் நாமம் நமச்சி வாயவே. | 04
|
524. | கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவ ரென்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே. | 05
|
525. | மந்த ரம்மன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே. | 06
|
526. | நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே. | 07
|
527. | இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே. | 08
|
528. | போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சி வாயவே. | 09
|
529. | கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே. | 10
|
530. | நந்தி நாமம் நமச்சிவா யவெனுஞ்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்த பாசம் அறுக்கவல் லார்களே. | 11
|