|
143 |
ஆரிடம் பாடிலர் அடிகள் காடலால்
ஓரிடங் குறைவிலர் உடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே. | 01 |
144. | மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத்
திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே. | 02
|
145. | அஞ்சுரும் பணிமலர் அமுதம் மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்றுபைஞ் ஞீலி மேவலான்
வெஞ்சுரந் தனிலுமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே. | 03
|
146. | கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல்வண் டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை யுகந்தஎம் அடிகள் அல்லரே. | 04
|
147. | விழியிலா நகுதலை விளங்கி ளம்பிறை
சுழியிலார் வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே. | 05
|
148. | விடையுடைக் கொடிவல னேந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவலான்
துடியிடைக் கலையல்கு லாளோர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே. | 06
|
149. | தூயவன் தூயவெண் ணீறு மேனிமேற்
பாயவன் பாயபைஞ் ஞீலி கோயிலா
மேயவன் வேய்புரை தோளி பாகமா
ஏயவன் எனைச்செயுந் தன்மை யென்கொலோ. | 07
|
150. | தொத்தின தோள்முடி யுடைய வன்றலை
பத்தினை நெரித்தபைஞ் ஞீலி மேவலான்
முத்தினை முறுவல்செய் தாளோர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே. | 08
|
151. | நீருடைப் போதுறை வானும் மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள்பைஞ் ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந் தலைவர் தன்மையே. | 09
|
152. | பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையுஞ்
சாலியா தவர்களைச் சாதி யாததோர்
கோலியா வருவரை கூட்டி யெய்தபைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே. | 10
|
153. | கண்புனல் விளைவயற் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவுபைஞ் ஞீலி பாடுவார்
உண்பின வுலகினி லோங்கி வாழ்வரே. | 11
|
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர், தேவியார் - விசாலாட்சியம்மை.