|
1028 |
பாடல் வண்டறை கொன்றை பால்மதி பாய்புனற் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமுஞ் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந் தோல்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக் கிடம்அர சிலியே. | 01 |
1029 | ஏறு பேணிய தேறி யிளமதக் களிற்றினை யெற்றி
வேறு செய்ததன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
ஊறு தேனவன் உம்பர்க் கொருவன்நல் லொளிகொளொண் சுடராம்
ஆறு சேர்தரு சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. | 02
|
1030 | கங்கை நீர்சடை மேலே கதம்மிகக் கதிரிள வனமென்
கொங்கை யாளொரு பாக மருவிய கொல்லை வெள்ளேற்றன்
சங்கை யாய்த்திரி யாமே தன்னடி யார்க் கருள்செய்து
அங்கை யாலன லேந்தும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 03
|
1031 | மிக்க காலனை வீட்டி மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க ஊரிடு பிச்சை யுண்பது பொன்றிகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவளவெண் ணீறணிந் தாமை
அக்கின் ஆரமும் பூண்ட அடிகளுக் கிடம்அர சிலியே. | 04
|
1032 | மானஞ் சும்மட நோக்கி மலைமகள் பாகமு மருவித்
தானஞ் சாவரண் மூன்றுந் தழலெழச் சரமது துரந்து
வானஞ் சும்பெரு விடத்தை யுண்டவன் மாமறை யோதி
ஆனஞ் சாடிய சென்னி யடிகளுக் கிடம்அர சிலியே. | 05
|
1033 | பரிய மாசுணங் கயிறாப் பருப்பத மதற்கு மத்தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய ஆரமு தாக்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 06
|
| இப்பதிகத்தில் 7-ம்செய்யுள் சிதைந்துபோயிற்று. | 07
|
1034 | வண்ண மால்வரை தன்னை மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும் நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற் பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த அடிகளுக் கிடம்அர சிலியே. | 08
|
1035 | குறிய மாணுரு வாகிக் குவலயம் அளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த்த வத்தோனுஞ்
செறிவொ ணாவகை யெங்குந் தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம் அடிகளுக் கிடம்அர சிலியே. | 09
|
1036 | குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே. | 10
|
1037 | அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி யடிகளைக் காழி
நல்ல ஞானசம் பந்தன் நற்றமிழ் பத்திவை நாளுஞ்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தம ரர்தொழு தேத்த
வல்ல வானுல கெய்தி வைகலும் மகிழ்ந்திருப் பாரே. | 11
|
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரைசிலிநாதர்,
தேவியார் - பெரியம்மை.