திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருஆலவாய் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 66வது திருப்பதிகம்)

2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்

இசை கேட்க:-

Get the Flash Player to see this player.

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு	
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு	
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு	
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.	2.66.1
	
வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு	
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு	
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு	
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.	2.66.2
	
முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு	
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு	
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு	
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.	2.66.3
	
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு	
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு	
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு	
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.	2.66.4
	
பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு	
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்	
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு	
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.	2.66.5
	
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு	
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு	
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு	
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.	2.66.6
	
எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு	
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு	
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு	
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே.	2.66.7
	
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு	
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு	
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு	
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே.	2.66.8
	
மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு	
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு	
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு	
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே.	2.66.9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட	
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு	
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு	
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே.	2.66.10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்	
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்	
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்	
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.	2.66.11

	        - திருச்சிற்றம்பலம் -


Back to Thirugnanasambandar Thevaram Page
Back to Thirumurai Main Page
Back to Thamizh Shaivite Literature Page
Back to Shaiva Siddhanta Home Page
Back to Shaivam Home Page