திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகம்

(முதல் திருமுறை 44வது திருப்பதிகம்)
முயலகன் தீர்த்தது

1.44 திருப்பாச்சிலாச்சிராமம்

பண் - தக்கராகம்

470

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ வாரிடமும் பலி தேர்வர்
அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோயிவர் மாண்பே.

1.44.1
471

கலைபுனை மானுரி தோலுடை யாடை கனல்சுட ராலிவர் கண்கள்
தலையணி சென்னியர் தாரணி மார்பர் தம்மடி கள்ளிவ ரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட இடர்செய்வ தோயிவ ரீடே.

1.44.2
472

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை வேண்டுவர் பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் சிதைசெய்வ தோவிவர் சீரே.

1.44.3
473

கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக் கனல்தரு தூமதிக் கண்ணி
புனமலர் மாலை யணிந் தழகாய புனிதர் கொலாமிவ ரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட மயல்செய்வ தோவிவர் மாண்பே.

1.44.4
474

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து
மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
சாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே.

1.44.5
475

நீறுமெய்பூசி நிறைசடை தாழ நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி
ஆறது சூடி ஆடர வாட்டி யைவிரற் கோவண ஆடை
பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
ஏறது ஏறியர் ஏழையை வாட இடர்செய்வ தோவிவ ரீடே.

1.44.6
476

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ டாமைவெண் ணூல்புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந் தழகாய குழகர்கொ லாமிவ ரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்

சதிர்செய்வ தோவிவர் சார்வே.
1.44.7
477

ஏவலத் தால்விச யற்கருள் செய்து இராவண னையீ டழித்து
மூவரி லும்முத லாய்நடு வாய மூர்த்தியை யன்றி மொழியாள்
யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதைசெய்வ தோவிவர் சேர்வே.

1.44.8
478

மேலது நான்முக னெய்திய தில்லை கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனு மெய்திய தில்லை எனவிவர் நின்றது மல்லால்
ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
பாலது வண்ணரோ பைந்தொடி வாடப் பழிசெய்வ தோவிவர் பண்பே.

1.44.9
479

நாணொடு கூடிய சாயின ரேனும் நகுவ ரவரிரு போதும்
ஊணொடு கூடிய உட்குந் தகையார் உரைக ளவைகொள வேண்டா
ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற
பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப் புனைசெய்வ தோவிவர் பொற்பே.

1.44.10
480

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிரா மத்துறை கின்ற
புகைமலி மாலை புனைந் தழகாய புனிதர்கொ லாமிவ ரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச் சாரகி லாவினை தானே.

1.44.11

முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்
மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

Back to Complete First thirumuRai Index

Back to ThirumuRai Main Page
Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page
Back to Home Page