|
4057. |
அருளே பழுத்த சிவதருவில்அளிந்த பழந்தந் தடியேனைத்
தெருளே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடைஎல்லாம்தீர்ந்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொருளே இனிநின் தனைப்பாடிஆடும் வண்ணம் புகலுகவே. | 1 |
4058 |
ஒருவா தடியேன் எண்ணியவா றெல்லாம் அருளி உளங்களித்தே
திருவார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெருவாழ் வடைந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
உருவார் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் உரைத்தருளே. | 2
|
4059 |
அவமே புரிந்தேன் தனைமீட்டுன் அருளார் அமுதம் மிகப்புகட்டிச்
சிவமே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெருங்களிப்பால் பதியே நின்பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 3
|
4060 |
பல்வா தனையும் தவிர்த்தெனக்கே பரமா னந்த அமுதளித்துச்
செல்வா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல்வா தனைசெய் மனச்செருக்கை மாற்றி நின்பால் வளர்கின்றேன்
நல்வாழ் வளித்தாய் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 4
|
4061 |
ஓவா இன்ப மயமாகி ஓங்கும் அமுதம் உதவிஎனைத்
தேவா சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூவார் மணம்போல் சுகந்தருமெய்ப் பொருளே நின்பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப்பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே. | 5
|
4062 |
இளிவே தவிர்த்துச் சிறியேன்தன் எண்ணம் முழுதும் அளித்தருளித்
தெளிவே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளிவேய் வடிவு பெற்றோங்கி உடையாய் உன்பால் வளர்கின்றேன்
தளிவேய் நினது புகழ்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. | 6
|
4063 |
மறப்பே தவிர்த்திங் கெனைஎன்றும் மாளா நிலையில் தனியமர்த்திச்
சிறப்பே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெருங்களிப்பால் பெருமான் நின்பால் வளர்கின்றேன்
திறப்பேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் செப்புகவே. | 7
|
4064 |
ஊனே புகுந்தென் உளங்கனிவித் துயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வுடையேன் நானே நின்பால் வளர்கின்றேன்
தானேர் உலகில் உனைப்பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே. | 8
|
4065 |
ஆரா அமுதம் அளித்தருளி அன்பால் இன்ப நிலைக்கேற்றிச்
சீரார் சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏரார் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச்சிறியேன் செய்யும் பணியைத் தெரித்தருளே. | 9
|
4066 |
மெய்வைப் பழியா நிலைக்கேற்றி விளங்கும் அமுதம் மிகஅளித்தே
தெய்வப் பதியே சிவமேநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐவைப் பறிந்தேன் துரிசெல்லாம் அறுத்தேன் நின்பால் வளர்கின்றேன்
பொய்வைப் படையேன் இவ்வுலகில் புரியும் பணியைப் புகன்றருளே. | 10
|
4067 |
. ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
நாரா யணனு நான்முகனு நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை இயம்புகவே. | 11
|
4068 |
பிறந்தேற் கென்றும் இறவாது பிறவா தோங்கும் பெருமைதந்து
சிறந்தே சிற்றம் பலவாநின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறந்தேர் முனிவர் தேவரெலாந் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறந்தேர் உலகில் இனிஅடியேன் செய்யும் பணியை அருளுகவே.278 | 12
|
4067, 4068. |
இவ்வொன்றரைப் பாட்டும் பெருமான் கையெழுத்தில்
இருப்பதாகக் கூறி ஆ. பா. இவற்றைத் தனிப்பாசுரப் பகுதியில் சேர்த்துள்ளார்.
பொருளமைதி கருதி இவை ஈண்டு இப்பதிகத்துடன் சேர்க்கப்பெற்றன. | 13
|