கச்சிக் கலம்பகம்

(Kachik Kalambagam)

ஆசிரியர் : பூண்டி அரங்கநாத முதலியார்

 

காப்பு

நேரிசை வெண்பா

தங்கச் சிலையேடுந் தந்தவெழுத் தாணியுங்கொள் துங்கக் கரிமுகத்துத் தூயவனென் - சங்கையொழித் தேடெழுத் தாணி யெடுத்தறியேன் இந்நூலைப் பாடஅளிப் பான்நற் பதம். 1

நால்வர் துதி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தறையின்மிசைத் தமிழ்பெருகச் சைவநெறி தழைப்பஅவ தரித்த சால்பின் மறையுறைவாம் ஒருநால்வர் பதமலரைச் சிரங்கொண்டு, மடத்தைப் போக்கிக், குறைவறுநால் தோற்றத்தின் உளதாய துயரகலக் குறிப்பன்; அன்னோர் பிறைசுமந்த சடையாரென் பிழைசுமந்த கலம்பகத்தைப் பெறச்செய் வாரே. 2

நூல்

(ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

இது தரவு. பூமேவு நான்முகனும் புயங்கவணை மாதவனு மாமேவு நினதுமுடி மலரடிகா ணாத்திறத்தை ஆராயும் அறிவினரே? அம்பலக்கூத் தாட்டினையும், வாரார்ந்த தனத்துமையாள் மகிழ்ந்துறையு மாட்டினையும், கழையிழைத்த வில்லானின் கண்ணினுறு கேட்டினையும், பிழையிழைத்த முப்புரத்தார் பீடழிந்த பாட்டினையும், அறமேய மால்விடையா யம்புதமா யம்பாகித் திறமேய தேவியுமாய்ச் சேர்ந்தவருங் கூட்டினையும், கல்லடித்தார் சிலையடித்தார் கண்பறித்தார் முதலடியர் தொல்லைநிலம் பிறவாமே துயரறுத்த பீட்டினையும், பாற்கடலி னமுதெழுமுன் பகைத்தெழுந்த ஆலத்திற் கேற்கவிடம் அமைத்தமரர்க் கின்புறச்செ யூட்டினையும், கிழக்குவடக் கறியாத கீழ்மையருஞ் சிறப்பெய்தி வழக்குமிடப் புரியுணர்வு வாய்ப்பளித்த தீட்டினையும், அறிபவராம் அன்றியெம்போல் அறிவற்ற சிறியவர்வீ டுறுவகைமற் றில்லையென உணர்ந்தெளிது காட்சிதரீஇ மாகம்பத் தொடுமிறைஞ்சி வழிபாடு செயவுமையோ டேகம்பத் தொருமாவின் இனிதுவீற் றிருந்தருள்வோய்! (3)

ஈரடித் தாழிசைகள் - 8

இடங்கர்வாய்ப் பட்டகளிற் றின்னுயிரைப் புரந்தசெயல் கடல்வீழ்த்த நாவரையன் கன்மிதத்தற் கொப்பாமோ. 1 கைகைக்குக் கானடந்த காகுத்தன் பொறையினுநீ வைகைக்கு மண்சுமந்த வண்மைமிகப் பெரிதன்றோ. 2 கம்பத்தன் உயிர்மாயக் கடுஞ்சமர்செய் கைவலியென் கம்பத்தன் சிலையெடுக்கத் தலைநெரித்த கால்வலிக்கே. 3 கொம்பனையாள் கல்லுருவிட் டின்னுருவங் கொண்டதினும் சம்பந்தன் என்பைப்பெண் ணாக்கியது சால்புடைத்தே. 4 அம்பொன்றாற் புணரிநீர் சுவறச்செய் ஆற்றலினும் நம்பொன்றாப் புரமூன்றை நகைத்தழித்தல் மேன்மையதே. 5 எழுவிடையைத் தழுவிமணம் எய்துமொரு செயலினுஞ்சீர் மொழியரையன் அமணர்கரி முனிவொழித்த தற்புதமே. 6 அண்டரிள மடவாரை அணைந்தவபி ராமமெனோ பண்டிருடி மனைவியர்கள் பாடழிந்த வனப்பினுக்கே. 7 பற்குனற்கு மாயன்சு பத்திரையைத் தந்தவகை சற்குணற்குப் பரவைதரு தண்ணளிக்குநேராமோ. 8

அராகம் - 4.

உரையிட அரியதொர் அனலுரு ஒளிதர வரைமகள் இடமுறு வகைபுரி அளியினை. 1 நிழலிடு தருவடி நிலைபெறு கருணையை வழிபடு மவர்பெற அருள்பர வெளியினை. 2 பகலவன் அனலவன் நிறைமதி பரிவுறு தகவமை உரைமிகு தமனிய ஒளியினை. 3 பழமறை ஒலிகெழு பலதலம் அருள்பயன் அழகுற அருளிவண் அமர்தரு களியினை. 4

பெயர்த்தும் வந்த ஈரடித்தாழிசைகள் - 8

நறைபூத்த மலர்க்கொன்றை நளினத்தின் மாண்டதுவே பிறைபூத்த செஞ்சடையாய்! பிறங்குபுயம் உற்றபினே. 1 பணியணிந்தாய் மற்றதைவிற் பற்றியிசைத் தாய்கயிறாத் திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சுணவும் சிறப்பாமோ. 2 மாலுலகங் காக்கநர மடங்கலுருக் கொளஅம்மா லாலுலகுக் கானதுயர் அகற்றவலார் வேறுளரோ. 3 மகிழிருந்தாய் மனையென்றோ மாசுண துயின்றானுக் ககங்கனியச் சங்காழி ஆண்டகைமுன் அருளியதே. 4 கவுணியருக் கணிமுத்தங் காதலினீந் தருள்செயலக் கவுணியருக் கணிமுத்தங் கனிந்திட்ட பரிசன்றோ. 5 மதிவேணி மிசைமேவ மலர்விழியு மதியான விதிசாற்ற அறியேமுன் மேனியழ கியம்புவதே. 6 முலைக்குறியும் வளைக்குறியும் கொண்டதற்பின் முதலவனே! இலைக்குறியும் குணமுமெனல் எவ்வண்ணம் இயைந்திடுமே. 7 மாவடிக்கீழ் உற்றாயுன் மலரடிக்கே மங்கலச்சொற் பாவடுக்க நாவளிப்பாய் பழமறைசொல் பரமேட்டி! 8

நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் - 2

கரந்தயங் கனன்மழு வேந்தி நெற்றியிற் புரந்தெறு சுடர்க்கணும் பூண்ட மேன்மையை 1 கூற்றினைக் குமைத்திடு கோலத் தாளினை யாற்றினை அருள்நடம் ஆடும் பான்மையை 2

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

ஈரேழ் புவனம் பரிந்து ணேற்றினை. 1 காரூர் சடையிற் கரக்கு மாற்றினை 2 பாரார் பெரியோர் பணியுஞ் சாற்றினை. 3 தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை. 4

முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - 8

புரமெரி படநகை கொண்டனை 1 புரிதவ றழிவகை கண்டனை 2 புரையறு தசைமிகை உண்டனை 3 புணர்வுற வருமறை விண்டனை 4 மணிமிட றார்தரும் இருளினை 5 மலைவளர் காதலி மருளினை 6 மறையொளிர் தோமறு பொருளினை 7 மகிழொடு மாவமர் அருளினை 8

இருசீர் ஓரடி அம்போதரங்கம் - 16

சடையுறு செல்லினை 1 விடையுறு மெல்லினை 2 கலையளை சொல்லினை 3 சிலைவளை வில்லினை 4 மலைவலி புல்லினை 5 வழிபெறு மல்லினை 6 களமில கல்லினை 7 பரவெளி இல்லினை 8 அமுதுகு பாவினை 9 அனலுறு கோவினை 10 சிலையில வாவினை 11 தலைநதி மேவினை 12 மறைபடு நாவினை 13 உலகுணு மேவினை 14 கரிவளர் காவினை 15 கதிதரு மாவினை 16.

நேரிசை ஆசிரியச் சுரிதகம்.

ஆரண, அகில காரண, பூரண, நாரணன் அறியா நாயக, வேயக முத்தே, அறத்தின் வித்தே, முக்கட் சித்தே, சத்தே, எத்தே வரும்பணி அத்தா, அன்னாய், அளிக்கொரு வைப்பே, கத்தா எனக்கூய்க் கண்ணீர் ததும்ப உள்ளநெக் குருக உரோமம் சிலிர்ப்ப விள்ளற் கருநின் மேன்மையைப் புகழும் பாவலர் தமக்குப் பழவநு கூல, மேவலர் வேரற வீறிய சீல, மாதுமை பங்குறு மாண்புடைச் சீரிய, தீதெமை அணுகாத் திறமருள் ஆரிய, நால்வர் இசைத்தமிழ் நலனறி நாத, மால்வரை மங்கை மணாள, நீத, கொன்றைத் தொடையணி கோனே, பசுபதி, குன்றைக் குழைத்த கோதறு குணநிதி! கல்லாப் புல்லேன் கனிவறு மனத்தேன் எல்லாப் பிழையும் இயற்றும் ஏழையாற் சொல்லப் படுமோ சொலற்கரு நின்புகழ்; புல்லப் படுமோ புரையறு நின்பதம்; உன்னப் படுமோ உத்தம! நின்எழில்; பன்னப் படுமோ பகவ! நின் அருள்; பாடப் படுமோ பண்ணவ! நின்சீர்; தேடப் படுமோ சேவடி; எனினும் அல்லுறு நஞ்சர வக்கு மத்தமும் புல்லும் உவப்புடன் புனைந்தெனக் கனிந்து சிற்றறி வினனுரை செய்யுளை முற்றும் நயப்பாய் மூவர்க் கையனே!

நேரிசை வெண்பா

ஐயம் உறுமனமே! அண்ணறிருக் கச்சியரன் செய்ய மலரடியைச் சிந்தித்தி - நையாமே இன்மையறி யாவீகை எச்சமறி யாவாய்மை புன்மையறி யாப்பொறையைப் பூண். (2)

கட்டளைக் கலித்துறை.

பூண்ட அரவ மதியை உணாது புரந்தருளும் ஆண்ட வரவம் புரிவார் செயலை அழித்துவக்கும் தாண்ட வரவர் இணையடித் தாமரை தஞ்சமென வேண்ட வரமளிப் பார்கச்சி அன்பர்க்கு மெய்யரணே. (3)

புய வகுப்பு.

இரட்டை ஆசிரியச் சந்த விருத்தம்.

(முப்பத்திரண்டு சீர்கொண்டது) தனதனன தந்தனத் தனதனன தந்தனத் தனதனன தந்தனத் தனதான தந்தன. அரணெரிய அந்தரத் தமரர்துயர் சிந்தவெற் பினையொருது ரும்பெனச் சிலைகோலி விஞ்சின அரவமரி கந்துசெக் கரினிலகு செஞ்சடைப் பனிமதிய நண்புறப் புரியாம கிழ்ந்தன, அகிலபுவ னங்களுக் கமுதிடுநி ரந்தரிக் கிடமமர்வ ரங்கொடுத் தகலாத ணைந்தன, அழலுருவ மன்றுபெற் றொருபுறவ மைந்தனுக் கொளிவடிவு தந்தருட் பொலிவானி மிர்ந்தன, கரடமத கும்பமத் தககபட தந்தியைச் சமர்பொருது வென்றுரித் ததளாடை கொண்டன, கடலமுதை உம்பருக் குதவஎழில் கந்தரத் திலகுகறை கொண்டுதிக் கிருநால ளந்தன, களபமணி அம்பிகைக் கனகதன மின்புறத் தழுவிவரு மங்கலச் சுவடால்வி ளங்கின, கதிர்மதிய மங்கிமுக் கணினொளித யங்கிடக் கடுவுடைய திண்சினத் தகவாட நின்றன, சரமழைபொ ழிந்தபற் குனனருள்பொ ருந்திடப் பகைவர்கெடு வன்படைக் கொடையாலு வந்தன, சமரபுரி கந்தனைப் புலவருய மண்டமர்த் திறலவுணர் பங்கமுற் றிடுமாறு தந்தன, சததளம லர்ந்தபொற் றவசினிலி ருந்தவச் சதுமுகன்ம றங்கெடத் தலையோட ணிந்தன, சலமிசைது யின்றசக் கரதரன லம்பெறத் தருமவிடை யம்புறப் பரிவோ டிணங்கின, இரவினவிர் திங்களிற் செலுமொளிபெ றுங்குழைக் கவுரியிட மன்பினுற் றிடவாசை மிஞ்சின, இரணியனு ரந்தொலைத் தெழுநரம டங்கலைச் சரபவுரு வந்தரித் தமராடி வென்றன, இடபமிசை வந்துபொற் பதநசைகொ ளன்பருக் குயர்பதவி தந்திசைப் பருமோகை கொண்டன, இனிமைதரு கம்பமுற் றருளநக எந்தைநித் தியநிமல சுந்தரப் பரனார்பு யங்களே. (4) இடும்பை போம் வழி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

புயங்கப் பணியார், புவியுண்ட புனித விடையார், புரையின்மதி தயங்கப் பணியார் சடையாளர், தயையின் சாலை தனைநிகர்வார் இயங்கப் பணியார் புரமெரித்த ஈசர், கச்சி யிடையமர்ந்தார்; மயங்கப் பணியார் அவர்திருத்தாள் வணங்கீர் இடும்பை வற்றிடவே. (5)

அம்மானை கலித்தாழிசை.

வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே காம்பரனார் செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை. செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின் கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை. (6) நலம் வரும் வழி

நேரிசை வெண்பா.

அம்மானைக் கையமைத்தான் அக்காளை ஓடவைத்தான் சும்மா விருந்துமதற் சுட்டெரித்தான் - பெம்மான் பதிக்கச்சி மேய பரமன் பணிந்து துதிக்கத் தருவன் சுகம். (7) பாதகந்தரு துன்பொழி வகை.

கட்டளைக் கலித்துறை.

சுகந்தரு கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர் நகந்தரு மெல்லியற் காம விழியிரு நாழிநெல்லால் உகந்தரு முப்பத் திரண்டறம் ஓம்பச்செய் உத்தமர்பா தகந்தரு துன்பொழிப் பார்பணி வீரவர் தாண்மலரே. (8) நிமல வாழ்வினைப் புகழ்ந்தடைதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

மலர்க்கஞ்சன் சிரமிழந்தான்; கோப்புரக்க மலையெடுத்தான், வன்றி யானான்; சிலைக்கரும்பன் உருவழிந்தான; சேணியங்கும் இருகதிருஞ் சிதைந்து நொந்த; கலக்கரிய பகைப்புரங்கள் நீறுபட்ட கச்சியே கம்பர் மேன்மை நிலைப்படவா யாமையினன் றோமனமே புகழ்ந்தடைதி நிமல வாழ்வே. (9) வலைச்சியார்

ஆசிரிய விருத்தம்.

(பன்னிரு சீர்கொண்டது) வாளைக் கயலை நிகர்த்தவெங்கண் வலைச்சி யீர்! நும் வனப்பெவரான் மதிக்க அமையும்; அரன்கச்சி வந்தீர்; அளவா மயறந்தீர்; தோளைத் தழுவிற் சுகம்பெறலாம்; ஊடல் ஒழிவீர்; நீர்க்குமிழி சுழிதேம் புளினந் தோன்றிடுமால்; துயரம் உறுவேன் நடைகிழங்கான் நாளைக் கழியா திறாலிதழின் நறவைப் பருக நச்சுறக்கொள் நானக் கருப்பஞ் சிலைவேளை நாணச் செய்வேன் மலங்குறேன் கோளைப் போக்கற் குறவைமட வைப்பாம் அகத்தைக் குழைத்தென்மேற் கொள்வீர் இரதத் தென்காலான் கொடிய பகழிக் குடையேனே. (10)

கலிநிலைத்துறை

ஏனங் கொன்றார்; ஏனக் குருளைகள் இடர்தீர்த்தார், மானங் கொன்றை வலன்வைத் துமைமா னிடம்வைத்தார், தானங் குறைவார் தானத் துறையார், தமிழ்வல்லார் கானத் துறவார் கம்பத் திடையே மகிழ்வாரே. (11)

எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை.

மகிழார மாவாரை மணமேவ விழைவாய் மணியார மரவேயின் மலைபச்சை உடையே, இகழீம மிசைபாடி நடமாடும் இடமாம், இகவாத தொழிலையம், இல்வாழ்வார் மலையின் மகவாய ஒருநீலி, மறைவுற்ற சலத்தாள், வரமைந்தன் ஒருமாதின் வழிநின்ற திருடன், தகவீது தெரிகாதல் ஒழிவாயென் உரைகேள் தரைமீதெந் நலமெய்தி மகிழ்வாய்மின் னரசே. (12)

எண்சீர் ஆசிரிய விருத்தம் மடக்கு

அரசுக விதையாரும் பரசுக விதையாரும் அடையமை மானாரும் புடையமை மானாரும் வரமா சடையாரும் உரமா சடையாரும் வயமா திரத்தாரும் புயமா திரத்தாரும் கரமணி வடத்தாரும் சிரமணி வடத்தாரும் களிமறைப் பரியாரும் ஒளிமறைப் பரியாரும் அரிபதி யானாரும் கிரிபதி யானாரும் அடியார் மாவாரும் கடியார் மாவாரே. (13) கல்மனத்தைக் குழைவித்தல் கம்பற்குக் கூடும்

இரட்டை ஆசிரிய விருத்தம்.

மாதுமையாள் பனிமலையில் வளர்ந்தாள்நின் மதலையரிற் கயமு கத்தோன் வரமுனிவன் வேண்டவட வரையேட்டிற் பாரதப்போர் வரைந்தான்; நீபப் போதலங்கல் அணிகுமரன் குன்றுதொறும் பேருவகை பூப்ப மேவிப் புனிதவிளை யாட்டயர்ந்தான்; கச்சியமர் புண்ணியநீ கயிலை மேரு மாதிரத்தே வதிந்தனை; யென் கல்லனைய மனத்தூடுன் குடும்பத் தோடு மருவவொரு தடையுமிலை மலைசிலையா வளைத்த நினக் கெளிதே, என்றன் கோதுடைய மனச்சிலையைக் குழைத்தன்பின் நெகிழ்வித்தல் ஐய முன்னாட் குருகுய்ய உபதேசங் கூறியநீ எனக்குரைத்தாற் குறைமட் டாமே. (14)

கட்டளைக் கலித்துறை

மட்டிக்குட் டங்கும் கணுநிகர் கஞ்ச மலரனைய தட்டிக்குட் டங்கை முருகனத் தாகச்சிச் சங்கரனே பெட்டிக்குட் டம்பணம் இட்டுவப் பார்குணம் பெட்டுவினை கட்டிக்குட் டன் றுயர் எல்லாம் அகன்றிடக் கண்டருளே. (15)

நேரிசை வெண்பா

கண்டவளை மேவிக் கலந்துண்ட கள்வனொலி கொண்டவளை நீர்க்கச்சிக் கோமானே! - பண்டுனது தாளை மருவுந் தகைமையிலான் உற்றதெவன் தோளை மருவுஞ் சுகம். (16) தூது (கிளி)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

சுகமே! மறைமா வடிமே வியவென் துணைவற் கெளியேன் துயரைப் பகர்வாய் மகமே ருசிலைக் குனிவா னலனென் மதனன் கழையே வையம் புகைக்குஞ் சகமேழ் அயின்றோன் பெயர்கொள் எளியேன் சரணா கதிசேர் தலைவேண் டினனென் றகமே குழையப் புரிவா யெனில்யான் அயர்தீ தகலத் தருவாய் சுகமே. (17)

கலிநிலைத் துறை

தீதறு நூலுணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே காதலின் வாழே காம்பரர் முடியைக் காணவயன் ஏத முறக்கோ எகினம் எனப்போய் முடிகாணா வேதனை பெற்றோ வேதனை யுற்றாள் வெளியானாள். (18)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

வெளிவீட் டாரைக் காட்டாரை வியன்மா வாரைச் சேவாரை ஒளிவிட் டோங்குங் கச்சியரை உயர்மா மறையின் உச்சியரைக் களியுற் றாடுங் கூத்தாரை அகிலம் அனைத்துங் காத்தாரை அளியுற் றினிது புணர்ந்திடுதற் கநங்கன் செயலொன் றிலைமானே. (19) இரங்கல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

மாமையை அடைந்தாய் வானக முற்றாய் மழைக்கணீர் உகுத்திடப் பெற்றாய் காமுற வணஞ்சேர் வில்வளை விட்டாய் கலைமதி ஒளித்தலைப் பெட்டாய் நாமுற விடிக்க மின்னிடை யானாய் நள்ளிருள் அம்பரம் போனாய் ஏமுறு மென்போற் கொண்டலே கச்சி ஈசனை விழைந்தனை சிறப்பே. (20) மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

சிறுகாலின் மணமளவுந் திருக்காஞ்சி யுள்ளீர் சேயிழையாட் ககலுமிடைத் திருக்காஞ்சி யுள்ளீர் மறியோடு மழுவிடமார் மாசுணந்துன் புடையீர் மங்கையணிந் திடுமுத்தம் மாசுணந்துன் புடையீர் வெறிதாசை கூடன் மணத் துறவாலங் காட்டீர் விதிவிழைவு கண்டவிடத் துறவாலங் காட்டீர் அறிவேனுஞ் செயலிட்டீர் அம்பரங்கா வணமே அளிப்பீரங் கொன்றைமல ரம்பரங்கா வணமே. (21)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

காரானைத் தோலுரித்த கறுப்பி னானைக் களித்துடல நீறணிந்த வெண்மை யானை வாரானை யூர்ந்திலங்கு செம்மை யானை வலத்தானை இடப்பாகப் பச்சை யானை நீரானைச் செஞ்சடையின் நெற்றி யுற்ற நெருப்பானைப் பொருப்பானைச் சகத்தி ரச்சீர்ப் பேரானைப் பெரியானைக் கம்பத் தானைப் பெம்மானை எம்மானைப் பேசு மாறே. (22)

கலி விருத்தம்

மாறி யாடு மலரடி மாமறை கூற வாடுங் குவலயத் தின்னறந் தேற வாடுந் தெளிதமிழ்க் கச்சியின் பூற வாடும் உளமகிழ் பொங்கவே (23) கைக்கிளை

மருட்பா

பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும் இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ் மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான் குறையா வளக்கழுக் குன்றில் உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே.(24) மறம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

தூதுவந்த தொழிலிலாத வாவழக்கை அறிதியோ தொல்லைநந்த மரபினோர்கொ டுந்தரக்கு வாரணம் பூதலத்தி னிலையெனக்க லைவிழைத்த சிலையரே பொன்றிணிந்த கொங்கைமான்ம கட்குறத்தி வள்ளிமுன் போதகத்தை யேவியந்த மாதகத்தை யச்சுறப் புரிந்தசெய்கை சாலுநுங்கு லம்புலப்ப டுத்திடச் சூதவாழ்க்கை யார்துடிப்பி னாகம்வைத்த ஆண்மையார் சொன்மறைக்க வாயதாங்கொ றோற்புணர்ந்தி சைத்ததே. (25)

கட்டளைக் கலித்துறை

இசையா ரணத்தின் முடியார் திருக்கச்சி யீசரன்பிற் பசையா ரணங்கொரு பங்குடை யாரரி பங்கயத்தன் மிசையா ரணங்கொழித் தோருள மேவிய மெய்யருத்தி நசையா ரணங்குறு நானவர் நற்பத நாடுவதே. (26) பாட்டால் பழையவினை துடைத்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

நாடுந் தொண்டர் மகிழ்வெய்த நறுமா நீழ லமர்ந்தானைப் பாடும் பணியே பணியாகப் படைத்தேன் பழைய வினை துடைத்தேன் ஓடுந் துடியுங் கரத்தமைத் தோன் ஓங்கா ரத்தின் உட்பொருளைத் தேடுந் திறத்தோர்க் கறிவித்தோன் தேவி உமையாள் காதலனே. (27)

ஒரு பொருள் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை.

1. காதங் கமழுங் கடியாரு மாந்தருக்கீழ் நாதன் அருளாளன் நண்ணியசீர்ச் செவ்வி காதிற் பண்ணாருங் கவியின்ப மானுமே. 2. பூவின் மணமார் புனிதநறு மாந்தருக்கீழ்ச் சேவின் மிசைத்திகழுந் தேசனமை செவ்வி நாவின் னமுதூறு நற்சுவையை மானுமே. 3. மண்ணிற் சிறந்த வளமளிக்கு மாந்தருக்கீழ் விண்ணிற் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி கண்ணிணையிற் காண்பரிய காட்சியினை மானுமே (28)

வெளி விருத்தம்

மாக்கைக் குருகின் தழும்புற் றாரு மாவாரே ஆக்கைக் கயனை அமைத்திட் டாரு மாவாரே காக்கைக் கரியைக் கனிவித் தாரு மாவாரே போக்கைக் கனலைப் பொலிவித் தாரு மாவாரே. (29) களி

கட்டளைக் கலிப்பா

மாவின் நீழல் வதிந்தருள் வார்கச்சி வாழும் இன்ப மருவு களியரே தேவர் அன்று; சிதைந்தவ ரே; மது வாவி சீதரன் உண்ண மயங்குறின் நாவ லர்ந்துமெய் பேசுவர; இன்னறை யுண்ட நன்மையர்; நற்பனை தெங்குசேர் காவி டைப்பாடி ஆடுவர் மண்டரு கண்ணி றைந்த அமுதை அருந்தவே. (30) களி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அரவிந்த மலரின்கட் குடியனயன் அமரர்சுரா பானத் தாரே, வரமுறுகா விரிநதிக்கட் குடியனே திருமருவு மார்பி னானும், தரணியின்கட் குடியர்பெருந் தவமுனிவர் சித்தரும்விண் ணவர்க டாமும், கரவடமேன் திருக்கச்சிக் கண்ணுதலார் பனையின்கட் குடியர் தாமே. (31)

கட்டளைக் கலிப்பா

கட்ட தும்புமி தழித்தெ ரியலைக் கச்சி நாதர் தருவ திலையெனில் துட்ட மன்மதன் ஐங்கணை யாமணச் சூத முல்லைய சோகம ரவிந்தம் கெட்ட உற்பலம் அஞ்செரி போல்வருங் கிளிய னீர்மட நாணமச் சம்பயிர்ப் புட்ட யங்குயி ரைந்தும வைக்கிரை யோவென் றோதிரச் செம்மழு வாளர்க்கே. (32)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

மழுவேந்து வலக்கரத்தர், மழை யேந்து சடைச்சிரத்தர், வான்பு ரத்தர், விழவாங்கு பூதரத்தர், வேளெரித்த மாவுரத்தர், ஆத ரத்தர், தொழவாழு மாதிரத்தர், நடமாடும் எரிசுரத்தர், தூவ ரத்தர், குழையாடு செவியரத்தர் கச்சியெனு மாகரத்தர் குணக்குன் றாரே. (33) சித்து

அறுசீர் ஆசிரிய விருத்தம்

குன்றைக்கு னித்தகச்சிக் கோமானார் சித்தவுருக் கொண்ட நாள்யாம் என்றைக்கும் சிறப்பெய்த விச்சையுடன் கற்றவித்தை இற்றென் றாமோ மின்றைக்கு முடிவேந்தர் விரும்பவொரு தினத்திரும்பு தனைப்பொன் செய்வேம் இன்றைக்குப் பொன்னளித்து நாளைவெள்ளி இயற்றினும் பின் சனிய தாமே. (34)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

சனியாகும் ஊழ்வலியாற் சகலகலை யறிவுணர்ச்சி தகைபெ றாதால் தனியாகும் எங்களுத வியைப்பெற்றுச் சாற்றும்பர் அடைந்தார் பொன்னில் கனியாரும் பொழிற்கச்சிக் கண்ணுதலார் கைச்சி லம்பைக் கனக மாக்கிப் பனியாருங் கடல்வண்ணன் மார்பினைப்பொன் னிருப்பா கப் பண்ணி னோமே. (35)

கலிநிலைத்துறை

இருப்புக்கு வெண்பொன் பசும்பொன் னகங்கொண்ட இறைவா! எனைக் கருப்புக் குழன்றெய்க்க வையாமல் அருள்கூர்ந்து காப்பாய்கொலோ பொருப்புக்கு வீழப் புவிக்காடை பொங்கப் புரஞ்செற்றசெந் நெருப்புக்கு வதனத் திடந்தந்த ஒருமா நிழற்சோ தியே! (36)

நேரிசை வெண்பா

சோதிப் பரம்பொருள்வாழ் தூயவிடந் தொண்டர்நெஞ்சோ வேதத் தனிமுடியோ வேள்விபுரி - மாதவர்வாழ் தில்லையோ கூடலோ சீர்க்கயிலை மாமலையோ தொல்லையே கம்பமோ சொல். (37) இளவேனில்

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

பனிக்கால மேகப்ப லம்பூவி றைக்கும் பருவத்த ருட்கச்சி இறையிங்கு வாரான் குனிக்கோல நம்பன்ற ணிப்பென்ன சொல்வான் குன்றத்தி ருத்தானை மன்றத்து வைத்தே தனிப்பாக என்னைப்ப சப்பிக்க லந்த சமயத்து ரைச்சத்தி யங்கூறி யரவை இனிப்பாரு மொழியாளன் இதுசெய்தல் அழகோ என்றேயு டன்கேட்பன் இனியென்ன குணமே. (38) மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

குணதிசைவெய் யோற்கலரும் அரவிந்தம் பானலமே குலைந்திடுந்தென் பொதியில்வரும் அரவிந்தம் பானலமே கணமிகுவெண் முத்துயிர்க்கு நந்தனந்தங் கயலாமே கச்சியிறை தணத்தலின்வார் நந்தனந்தங் கயலாமே அணங்குறவின் மதன்முளரி முலையெய்திடு மாசுகமே ஆசற்றா ரிதழ்பருக முலையெய்திடு மாசுகமே வணமணியின் பரஞ்சுமந்த வாழிதயங் கருங்கலமே வஞ்சருக்கென் நெஞ்சரங்க வாழிதயங் கருங்கலமே. (39) பாண்

நேரிசை ஆசிரியப்பா

கலன்பணி உடைதோல் கலம்பலி ஓடுகொண் டிலந்தொறும் இரந்து ணிறைதரும் ஒற்ற! மலைவளர் காதலி மங்கள வல்லி சிலைவேட் களித்த சிற்சுக மங்களை 5 இழைவகிர் நுண்ணிடை யேந்திழை பங்கன் பழைய கள்வன் பண்பினை ஓர்ந்தேன் பாணனே! நின்னைப் பண்ணிசை கூட்டி வீணையிற் பாடி விழைவை ஊட்டித் தன்வயப் படுத்தத் தந்திரம் கற்பித் 10 தென்வயிற் செலுத்தும் இங்கிதம் தோன்றப் பாடினை; இன்புறப் பாடல்கேட் டாங்குக் கூடிய கொற்றவன் குணமறி வாயோ? மலைப்பெணந் தரியை மகிழ்வாய் மணந்தும் அலைப்பெணைச் சடையில் அமைத்த தேன்உரை 15 கம்பை நதியயல் காம நயனியாம் அம்பை அருச்சனை ஆற்றல்கண் டவளை உள்ளங் கலங்க ஓங்குநீர் அழைத்துக் கள்ளப் புணர்ச்சி கலந்து வடுப்பட் டின்னமும் மாறா தேய்ந்த தன்மை 20 என்னவென் றுரைப்பன் இதுவலா தொருநாள் தாரு வனஞ்செலீஇத் தாபதப் பன்னியர் தெருமரல் உற்றுப் பருவரல் எய்தக் கோவண நீத்துத் தீவணம் பூத்தம் மின்னிடை யாருடன் விருப்புறப் பேசித் 25 துன்னிய தன்மை சொல்லுந் தகைத்தோ! வனிதையர் மயங்க வளைகொணர்ந் தன்று மதுரையில் வந்த வசையே சாலும் சாலும் பாண! சாலும் பாண! யாதும் கேளேன் யான்இனி மயங்கேன் 30 போகென உரைத்தும் போகாய் அந்தோ! அன்னை யறியா தணைந்தேன் அவனைப் பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன்; அகலுதி பாணா! அனையறி வாளேல் தகரும் நின்சிரம்; தமரும் வெகுளுவர் 35 நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை வஞ்சகன் அறிய வழுத்துவை பாணா! மறந்தேன் அன்னையை; மன்னனைப் புணர்ந்து சிறந்தனம் என்றே திகைத்தேன்; இத்துணை பட்டது சாலும் பாணனே! மடவார்க் 40 கிட்டது தானே இயலும் பரமனை வெறுத்தலும் வீணே; விழைவு பொறுத்தலும் இலன்; இனிப் புரிவனற் றொண்டே. (40)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தொண்டர்க் குறவே யானாரைத் தூய மறைமா நிழலாரை அண்டர்க் கிறையா மடலாரை அக்கும் எலும்பும் அணிவாரைக் கொண்டல் வண்ணன் எண்கண்ணன் கூறற் கருஞ்சீர் கொண்டாரைக் கண்டத் துறையு மாறுகடற் கடுவுண் டாரைத் துதிப்பாமே. (41) தூது (மேகம்)

நேரிசை வெண்பா

கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யான் நடுக்கை யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச் செல்லே! சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால் வல்லே தொடையிரந்து வா. (42)

கட்டளைக் கலித்துறை

இரந்துயிர் ஓம்பிட ஏழை மனங்கொதித் தின்னலுற உரந்தொலைந் தோயப் பலநோய் உடற்ற உறுபசியால் வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்தொழிவீர்! திரந்தரும் ஏகம்ப வாணரை நீரென்கொல் சேர்கிலிரே. (43) தூது (நெஞ்சு)

நேரிசை வெண்பா

என்னெஞ் சினுமினியார் இல்லையென எண்ணியதைத் துன்னற் கருங்கச்சித் தூயவர்பால் - இன்னலறப் பூங்கொன்றைத் தாரிரக்கப் போதி யெனவிடுத்தேன் தீங்கொன்றைச் சூழ்ந்திலா தேன். (44)

கலிநிலைத்துறை

ஒன்று சூழின்வே றொன்றுமுந் துறவுணர் வுலைந்து பின்றை எய்திடும் பெற்றியுய்த் துணர்கிலாப் பேயேன் என்று நின்னரு ளிருங்கடல் குளிப்பதென் அரசே! மன்றி லாடிய குழகமா நீழல்வாழ் மணியே! (45)

வஞ்சித்துறை

மாநீழல் நல்லார் ஆனேறு தொல்லார் தேனேறு சொல்லார் வானேறு கல்லார். (46)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கல்லாலின் கீழிருந்து கலைவிரித்துப் புணர்வளித்த கள்வ னார்க்குச் சொல்லாலா யிரமுகமன் கூறுவையக் கச்சியர்க்குச் சுகுணம் உண்டேல் வில்லாரும் புயவிதழி விரும்புவையின் றேலின்றே விழையப் பெற்றாள் அல்லோடக் கண்டவிட மாயும்வகை அறிவளென அறைதி மாதே. (47)

நேரிசைச் சிந்தியல் வெண்பா

மாவுடையான் வெள்ளி மலையுடையான் எண்டிசையாம் தூவுடையான் நால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச் சேவுடையான் எங்கள் குலத் தே. (48) ஊசல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

தேவார முதலியவைந் துறுப்பும் வாழச் சிறந்தமறை ஆகமங்கள் செழித்து வாழத் தாவாத சித்தாந்த சைவம் வாழச் சந்தவரைச் செந்தமிழ்நூல் தழைத்து வாழ நாவாரும் புகழ்க்கச்சி நகரிற் காம நயனியொடு முறையிறைசீர் நன்கு பாடிப் பூவாரு மலர்விழியீர்! ஆடீர் ஊசல் புத்தமுத நிகர்மொழியீர்! ஆடீர் ஊசல். (49) மதங்கி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆடரவம் அரைக்கசைத்த அமலர் திருக் கச்சிமறு காடி மைந்தர் ஊடுருவு பிணைவிழியோ டிணைவாளும் ஓச்சிவரும் ஒரும தங்கீர்! நாடவரும் இவைக்கிலக்கம் யாதோநும் மொழியமுத நல்கீர் விண்ணோர் பாடமையப் பயவாரி கடைந்துகரம் வருந்தியதென் பண்டு தானே. (50) இடைச்சியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

பண்டுமலை கொண்டுபயோ தரத்திகலை வென்றிடுமைம் படையா னுக்கு மண்டுபயோ தரகிரியைக் காணிக்கை இட்டீரால் வள்ளல் கச்சிக் கண்டயங்கும் இடைச்சியீர்! ஆடைநீக் காதுருசி காண்பின் என்பீர் கொண்டவளை உருக்காமே கொளஇணங்கீர் ததியெண்ணீர் நயமோர் விற்றே. (51) தூது (வண்டு)

நேரிசை வெண்பா

ஓர்காற் செலினறுகால் உற்றனையென் பார்வளமை ஆர்காஞ்சி மேய அமலர்திரு - மார்பாருந் தாராய கொன்றை தரச்சேறி வண்டே! யான் பேராத இன்பம் பெற. (52)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

பெரியானைப் பேரின்ப நிறைவீட் டானைப் பிறைமதியம் பிறங்குசடா தரனை யார்க்கும் அரியானை அடலவுணர் புரநீ றாக்க அழலூற்று நகையானை அரனை வேழ வுரியானைத் திருக்கச்சி யுடையான் றன்னை உன்னரிய குணநிதியை ஒப்பில் வேதப் பரியானை அகநிறுவித் துதிப்பார் அன்றே பவத்துவக்கைப் பாற்றுறுமா டவர்க ளாவார். (53) வெறி விலக்கு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆடவரும் பெண்மைவிரும் பபிராமர்க் கணங்குற்ற அறிவி லேனைச் சாடவருஞ் சிறுகாலுந் தழன்மதியுஞ் சாகரத்தின் ஒலியு நெஞ்சம் வாடவரு மலர்க்கணையும் மறிவீய இரிந்திடுமோ! வனசத் தானுந் தேடவரும் ஏகம்பர் தாமத்தைக் கொணர்வீரேல் தேறு வேனே. (54)

கட்டளைக் கலித்துறை

தேறா மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்னர் ஆறாத மும்மை மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர் மாறா வளக்கச்சி மாநிழ லாரு வணன்றனக்குப் பாறா தரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே. (55)

கட்டளைக் கலிப்பா

பயன்றரு கச்சிவாழ் பண்ண வன்னடிப் பத்தியில் பாவிகாள்! கூடு விட்டுயிர் தொன்றையுங் கொண்டு லாமையை உன்னிலீர்; வீடு கட்டுவீர்; வெள்ளிபொன் ஈட்டுவீர்; வேண்டு நன்மணி ஆடையும் பூணுவீர்; ஏடு கட்டிய பால்தயிர் உண்ணுவீர்; எப்ப டிப்பெறு வீர்பொற்ப தத்தையே. (56)

கட்டளைக் கலித்துறை

பதஞ்சேர்த்துப் பாடியென்? பாசத் தொடர்ப்பட்டுப் பாவையரிங் கிதஞ்சேர்த்துக் கொஞ்ச மயங்கி இடர்ப்பட் டிரங்குவனங் கதஞ்சேர்த் தரைக்கசைத் தாய்கச்சி வாண! கடையனெந்த விதஞ்சேர்தல் நின்பதம் தாயனை யாய்கதி வேறிலையே. (57)

கலி விருத்தம்

அனைத்திடமும் ஒளிமருவ அமைந்ததொரு விழியே மனத்துயரை மாய்க்கவருண் மலர்ந்ததொரு விழியே சினத்துலகைச் சிதைக்கவழல் சிறந்ததொரு விழியே நினைத்துலகந் தொழுகச்சி நின் மலர்மூ விழியே. (58)

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

விழியால், விழியுறு பிறழ்வால், விதுநிகர் நுதலால், நுதலுறு சிலையான், மென் மொழியான், மொழியுறு சுவையான், முழுநல முலையான், முலையுறு பொலிவாற், பல் வழியாற் கணிகைய ருறவால் வலிகெட அயர்வேன் இனிமருண் மரு வாமே ஒழியா நலனுற ஒருமா நிழலுடை ஒளியார் சடையவர் அருள் வாரே. (59)

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

சடைகரந்த அரவமிந்து பகைமைமாறு தகைமையார், தரமறிந்து கருணைநல்கு தனையிறந்த மகிமையார் மடைதிறந்த கடலையொத்த மருளகற்றும் அருளினார் மகிழ்சிறந்த முதல்வர் தங்க மலைகுழைத்தென்? விறல்மதன் படைதுரந்து நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலர்? பகரொணாத பண்பமர்ந்த பரமரின்னும் அருகுறா திடைமறந்த தென்கொலோ? வென் இளமைநன் னலம் பெறற் கெனையணைந்த கச்சிமேவும் இணையிகந்த போதரே. (60)

கட்டளைக் கலித்துறை

போதவித் தேபுக லேயற வோர்க்குநம் புந்தகையார் தீதவித் தேற்குநற் செவ்விய னேபுலத் தெவ்வடர வேதவித் தேமிக வேசறு வேற்கு விரைந்தருணீங் காதவித் தேன்சுர ருண்கச்சி வாழன்பர்க் கண்ணியனே. (61)

நேரிசை வெண்பா

அண்ணியரா னார் அறவோர்க் கத்தர் அலரிதழிக் கண்ணியர்பூங் கச்சிநகர்க் கத்தரடி - மண்ணியமுத் தந்தம்பற் பந்தாந் தனந்தந் தனவிடையார் தொந்தங்கொள் என்றன் துணை. (62)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

துன்னிமித்தங் கண்டுமஞ்சா தொருதுணையும் பிணையாது துனைந்து சென்று பொன்னிமித்தஞ் சிலைசுமந்து முறுவலித்துப் புரமெரித்த புரைதீர் எந்தாய்! என்னிமித்தம் என்னகத்தே குடிபுகுந்தாய் திருக்கச்சி இறைவா! ஏழை தன்னிமித்தந் திருவுள்ளங் கனிந்ததன்றித் தகுதிமற்றென் தருக்கி னேற்கே. (63)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தருக்குறு தெரிவையர் செருக்கிலே தளையிடு மவர்மொழி யுருக்கிலே மருக்கமழ் குழலணி சொருக்கிலே மனமிவ ரிளமுலை நெருக்கிலே பெருக்குறு விழைவமர் திருக்கினேன் பிசிதரு மறைமுதல் பிறையினோ டெருக்கணி கச்சியின் இறைவனார் இரங்குறு வகையெது புகல்வனே. (64) (மடக்கு) தலைவி யிரங்கல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கற்றரு மாதின் பங்குடையார் கச்சியர் எனதின் பங்குடையார் சிற்றளை யுள்ளுறை வாயலவா! தென்வளி காதுறை வாயலவா? சுற்றுமு டைந்து வருந்திடரே! தோற்றுமி டைந்து வருந்திடரே பெற்றிடு முத்தம ருங்கழையே! பேசரி யாரைம ருங்கழையே. (65) பனிக்காலம்

எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை

அழைக்காமல் அணுகார்வெவ் வலர்கூர மாய்வேன் ஐயோஎன் ஐயர்க்கு ரைப்பாரும் இல்லை கழைக்காமன் எய்யுஞ்ச ரந்தைக்க நொந்தேன் கண்ணாளர் இந்தப்ப னிக்காலம் ஓரார் குழைத்தார்பொ ழிற்கச்சி வாழண்ண லாரைக் கும்பிட்ட ழைப்பீர்கு ழைப்பீர்ம னத்தைப் பிழைத்தேன லேனென்று பிச்சர்க்கி யம்பீர் பெண்பேதை உய்யுந்தி றம்பாங்கி மாரே. (66) மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

மாதரையிற் றருநறும்பூ விரைவிடுக்குங் காலம் மதன்சினந்து மங்கையரை விரைவிடுக்குங் காலம் காதமணங் கமழ்சோலை பண்புணருங் காலம் கணவரிளங் கோதையர் தம் பண்புணருங் காலம் சீதமுறு கழைக்கரும்பின் கண்டழைக்குங் காலம் சிற்றிடையார் தந்தலைவர்க் கண்டழைக்குங் காலம் கோதறுசங் கினம்பழனப் பங்கமுறுங் காலம் குலவுகச்சி யார்பிரியப் பங்கமுறுங் காலம். (67)

வஞ்சி விருத்தம்

உறுமன் கச்சி யுத்தம! யான் துறவுங் கொள்ளேன்; தூய்மையிலேன்; அறமும் புரியேன்; அமைவில்லேன்; பெறவுந் தகுமோ பேரின்பே. (68)

இன்னிசை வெண்பா

இன்படைய வேண்டின் இகலற்க - வன்பிறவித் துன்பொழிய வேண்டினவந் துன்னற்க - அன்புருவாம் போதனருள் வேண்டுமெனிற் பொய்யற்க - சூதகலச் சூதநிழ லான்கழலைச் சூழ். (69)

நேரிசை வெண்பா

சூழுந் தளையாய தொல்லைப் பிறவியினைப் போழு நவியமாம் புத்தேளிர் - தாழுநலம் பொன்றா வளக்கச்சிப் பூங்கொன்றைக் கண்ணியர் தம் இன்றாட் கிடும்பச் சிலை. (70)

கலிநிலைத்துறை

பச்சைநி றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள் நச்சின ரொன்றினும் எச்சமு றாதருள் நனிகூர்வான் கச்சியு றைந்தருள் கண்ணுதன் மறலிக் கண்டகனால் அச்சமு றாதடி யவர்முனம் அந்தத் தணுகுவனே. (71) மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

அணங்காறு தலையுள்ளார் அழகர் என்மான் அணங்காறு தலையுள்ளா ரானார் அந்தோ வணங்கூடு தலனலைப்பற் றுற்று மின்னாள் வணங்கூடு தலனலைப்பற் றறுத்தல் ஓரார் கணம்புரத்தைச் சாம்பருவந் திழைத்தார் கன்னற் கணம்புரத்தைச் சாம்பருவங் குலைப்ப துன்னார் பணமொளிக்கும் பணிதரித்தார் கச்சி யீசர் பணமொளிக்கும் பணிபரித்தார் பான்மை யுற்றே. (72)

கட்டளைக் கலிப்பா

உற்றுப் பார்க்கிலுன் வாழ்க்கையென் ஐயமே ஊரும் வெட்ட வெளியுடை தோலுனைப் பெற்றுப் பார்க்குள் உறுஞ்சுகம் இல்லையாற் பேதை நின்னையென் பெற்றிடப் பற்றினள் கற்றுத் தேர்ந்த பெரியவர் வாழ்திருக் கச்சி மாநகர்க் கத்த! வென் அத்தனே! பற்றி லாருளம் பற்றுறு பங்கயப் பாத னே! படப் பாம்பணி காதனே! (73)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

படவரவம் அரைக்கசைத்த பரமர் வாழும் பதிக்கச்சி மேயவிளம் பாவை கொங்கை தடவரையே கரிக்கொம்பே சகோர மேமாந் தளிர்மேனி தமனியத்தின் ஒளியே கண்கள் விடவடிவே ஆசுகமே வேலே சேலே மென்மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சஞ் சுடவகைதேர் புருவமதன் சிலையே துண்டஞ் சுடர்க்குடையே சுந்தரிகந் தருவ மானே. (74) தவம் மான்கொண்ட கண்ணியர் மையலற் றேதவ வன்மைமரீஇ ஊன்கொண்ட துன்பை யொழிக்கத் தலைப்படும் உத்தமர்காள! வான்கொண்ட வுச்சி வரைமுழை யுற்று மயர்வதெவன் கான்கொண்ட கொன்றையர் கச்சியை யெய்திற் கலியறுமே. (75) இரங்கல்

பதினான்கு சீர்கொண்ட ஆசிரியச் சந்த விருத்தம்.

எய்த வம்பு தைக்கு முன்ன மற்றொர் பகழி தொட்டுவேள் ஏழை யங்க நைந்து தேய அப்பு மாரி பொழிகிறான் செய்த வம்பு ரிந்தி லாதெ னுய்யு மாறு முண்டுகொல்? திகழு மாட மதியு ரிஞ்சு கச்சி மேய செம்மலார் கைத வங்க ணங்கி யான்மன் மதனை வென்ற காதையென் காத னோக்கி யின்ப ளிக்க நேர்வ ரல்ல ரேலனை வைத வம்பு நோக்கி யேனு மனமு வக்க வந்திலர் மாதர் நோவ வெய்து செல்வ மென்ன வர்க்கு மங்கையே. (76)

நேரிசை வெண்பா

என்னபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கு மன்னுபுகழ்க் கச்சியுறை வள்ளறான் - துன்னுமயன் கம்மாள னீசன் கடையன் பொதுவனென்பேன் கைம்மாறென் செய்வனோ காண். (77) சம்பிரதம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

காற்றைப் பிடித்தொர்சிறு கரகத்துண் மூடுவேம் கனலைவா னோங்கவிடுவேம் சேற்றைப் பிசைந்துசில தேவரையும் ஆக்குவேம் சீதரனை மாலாக்குவேம் ஆற்றைச் செலுத்தியரி யேறவைப் பேமமுதை ஆவலுடன் வாரியுண்பேம் நீற்றைப் புனைந்தவர் திருக்கச்சி போன்றதல நேர்தருஞ் சத்தியெமதே. (78)

கட்டளைக் கலிப்பா

சட்டப் பட்டவு ளம்பெற்ற சால்பினோர் தங்கப் பெற்றகச் சிப்பதிச் செல்வவேள் குட்டப் பட்ட தலைவிதி யென்றலை கொடுமை கூரெழுத் திட்டனன் மாதர்வார் கட்டப் பட்டத னம்பிறை வாணுதல் கடுவ டங்கிய கண்ணின்ம மயங்குவேற் கிட்டப் பட்டமட் டின்பமும் வாய்க்குமோ ஈச னேயரு ணேசவி லாசனே. (79)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அருணைப் பதியின் அழலுருக்கொண் டமைந்த கச்சி அங்கணர்முன் பெருமைப் புரத்தை அழிவெப்பும் பிழைத்த மதற்கொல் விழிவெப்பும் கருமைப் பகடூர் காலனைக்காய் வெப்புந் தணியப் பழவடியார் அருமைத் தமிழின் னமுதூறு மழையைச் சொரிந்தார் தெரிந்தாரே. (80)

தரவு கொச்சகக் கலிப்பா

மழைகொண்ட வுச்சியினார் வளங்கொண்ட கச்சியினார் உழைகொண்ட கரத்தொழிலும் உமைகொண்ட விடத் தெழிலும் கழைகொண்ட மதனழியுங் கனல்கொண்ட நுதல்விழியும் இழைகொண்ட உரத்தழகும் எமக்கினிய அமுதாமே. (81) கொற்றியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆமைமீன் கோலமுறு மங்கமரீஇ அரவிடையால் அகடு மேவி மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும் வகையாற் குல்லைத் தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர் நீக்கியருள் தந்து காப்பீர் கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு துளவமணக் கொற்றி யாரே. (82)

தரவுகொச்சகக் கலிப்பா

மணக்கோலஞ் செய்ய மதனன் முடுகிநின்றான் கணக்கோலங் கொங்கைக் கிடவந்தீர்! கட்செவிமால் குணக்கோலன் கச்சிக் குழகன் றிருவுலா வணக்கோலங் காண வருவீர் மனமகிழ்ந்தே. (83)

கட்டளைக் கலித்துறை

மதுவிருந் தேயளி பாடுந் தொடைபுனை மன்னருமிங் கெதுவிருந் தேனும் பெறுமின்ப மென்கச்சி ஈசனை வான் புதுவிருந் தேபுண்ட ரீகன் முராரி புரந்தரனைப் பொதுவிருந் தேவல் கொளும்பெரு மாவெனப் போற்றுவனே. (84) நெஞ்சொடு கிளத்தல்

கட்டளைக் கலித்துறை

போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துத் தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள் ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே. (85)

தரவுகொச்சகக் கலிப்பா

எனக்கே துன தருளை யெண்ணுமியல் என்துயரம் உனக்கே தெரியுமகக் குற்ற துயரமெலாம் அனைக்கே தெரியுமக வாயுங்கொல் அன்னைசெயல் கனக்கேதந் தீர்த்தருள்பூங் கச்சிநகர்க் கண்ணுதலே! (86)

கட்டளைக் கலித்துறை

கணங்கொண்ட பாசத் தொடரறுத் துய்யுங் கருத்துடையீர்! மணங்கொண்ட தண்டலை சூழுந் திருக்கச்சி மாநகர்வாழ் நிணங்கொண்ட சூற்படை நின்மலன் தாளை நிதந்தொழுவீர் பணங்கொண்ட பாம்பின் விடங்கொண்ட கண்ணியர் பற்றஞ்சியே. (87) மடக்கு

கட்டளைக் கலிப்பா

பரவை யாலம் பருகிய அண்ணல்விண் பரவை யாலம் பயின்றொரு நால்வர்தந் தெரிவை யங்கடி செய்யர்ப ரவையாந் தெரிவை யங்கடி யர்க்கருள் செம்மலார் சிரமந் தாகினிச் செஞ்சடை யார்தொண்டர் சிரமந் தாக்கு திருக்கச்சி நாதர்தீ யரவ மாலை அழித்தெனைக் காப்பரால் அரவ மாலை அணிந்தருள் கத்தரே. (88) தழை

எழுசீர் ஆசிரிய விருத்தம்

கத்தனார் மகிழ்ந்த கச்சிவெற் புடையாய்! காமனு மயங்குறு கவினார் அத்தநீ அளித்த மாந்தழை அரிவைக் காருயிர் அளித்தகா ரணத்தால் சுத்தனாம் அநுமன் சானகிக் களித்த துணையமை ஆழியோ? இந்த்ர சித்தனான் மடிந்த கவிக்குலம் பிழைப்பச் செய்தசஞ் சீவியோ தானே. (89) குறம்

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

தாளமிரண் டென்னுமுலைத் திருவனையாய்! தளரேல் தரணிபுகழ் கச்சிநகர்த் தலைவனைநீ புணரும் வேளையறிந் துரைத்திடுவன் விரைந்தொர்படி நெல்லும் வேறுந்தலைக்கெண் ணெயும்பழைய கந்தையையுங் காளவுருக் காமவிழிக் கன்னிதனக் கந்நாட் கருதியொரு குணங்குறியும் அரியவர்க்கோர் குணமுங்கொடுவா கோளகலக் குறியிரண்டுங் கொடுப்பையென மொழிந்தோள் குடியுதித்த குறமகள்யான் குறிக்கொளென்றன் மொழியே. (90) பிச்சியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

என்னதவஞ் செய்தேனோ உமைக்கம்பர் திருக்கச்சி யிடையே காணத் துன்னவரும் உடனீறுங் கஞ்சுளியி னொடுசெங்கைச் சூல முஞ்செம் பொன்னனைய திருமேனிப் பொலிவுமே எனைமயங்கப் புரியுங் கண்டீர்! அன்னநடைக் கன்னன்மொழிப் பிச்சியீர்! அணிமுறுவல் அதிகம் அன்றோ? (91)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அதிக மன்றெளி யேந்துயர் புரிந்திடும் அறக்கடை ஆயுங்கால் துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர் இதயவா லயத்தூடு குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு கூறுடைக் கோமானார் நதிகொள் வேணியர் நாடுவோர் தமக்கமை நலத்தினைத் தெரிந்தாரே. (92) ஊர்

நேரிசை வெண்பா

தெரிந்தார் மலர்த்தடத்தின் தெண்ணீர் துலைக்கோல் பரந்தாழுங் கச்சிப் பதியே - கரந்தாழ்வெண் மாதங்கத் தானத்தன் வாரிசத்த னேடரிய மாதங்கத் தானத்தன் வாழ்வு. (93)

ஓரொலி வெண்டுறை

வாழ்வளிக்குந் திருவிழியார் மறையளிக்கும் அருமொழியார் வணங்கி னோர் தந் தாழ்வகற்று மலர்ப்பதத்தார் தளர்வகற்றும் ஐம்பதத்தார் தண்ணந் திங்கட் போழ்வதியும் புரிசடையார் புகழ்க்கச்சி மேய ஆழ்கருணை மாகடலை அடிபணிமின் கண்டீர்! (94)

பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்.

கரத்தின் வளையுஞ் சுழிவளையுங் கனிந்த மொழியாற் புனைவளையுங் காலையு மணியு மேகலையுங் கல்வி பயின்ற கலையறிவும் புரத்தின் வனப்பு நூபுரமும் புரைதீ ரகத்தின் வற்புரமும் பொலன்றோ டணையும் பூவணையும் புரியும் பணியும் பொற்பணியும் வரத்தி னுதித்தா ளொழித்தாளம் மடமா னுடலம் ஒழித்தாறும் வளமா வடியீர்! உமைச்சரணா மருவப் பெற்றா ளாதலினாற் சிரத்தி னலைமான் வைத்தீர்! நுஞ் செந்தா மரைத்தாட் கீழேனுஞ் சேருந் திறத்தை யறிவாளே சிறியாண் மதனை வென்றிடவே. (95) இரங்கல் (மடக்கு)

பதினான்கு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

மதனை வென்றவர் நஞ்ச மார்ந்தவர் வலியர் முண்டக முள்ளியே மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர் துயர்வ துண்டக முள்ளியே கதமி குந்தெழு மத்தி நீர்த்துறைப் பெடை பிரிந்தில கம்புளே கவலை கூரவு ஞற்றி மேவுறு நறைசொ ரிந்தில கம்புளே மதியி னெற்றரு முத்த மேயவர் தருவ தென்றரு முத்தமே மணியு யிர்த்திரை சங்க மேயிர வொன்று பற்பல சங்கமே நிதித ருந்தவ வங்க மேயினி அடைவ துந்தவ வங்கமே நெடிய னுந்தொழு கம்ப மேயுறை நிமலர் தீர்ப்பர்கொல் கம்பமே. (96)

செவியறிவுறூஉம் மருட்பா

கம்பத் திருந்துதவுங் கண்மணியைச் சிந்தித்து நம்பத் திருந்துவீர் நானிலத்தீர் - வெம்பும் பிணியு மூப்பும் பீடழி பழியுந் தணியா வறுமைத் தாழ்வுந் தீரும் திருவருள் நமக்குச் சிவணத் திருவன் அன்னோன் சற்குரு வாயே. (97) இரங்கல்

பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

குருகு நெகிழுந் திறநவில்வாய் கழிசேர் குருகே குருகழியக் கொங்கை திதலை பூப்ப வுளங் குலைந்தே யுடைய வுடைசோரப் பருகும் பாலு மருந்தனமும் பகைக்கு மருந்தென் றறையனமே பழுவ மனைய குழல்பூவைப் பரியா மையைச்சொல் பூவையே அருகு பயின்ற கிளையே யென். கிளையால் வந்த தத்தனையும் அளந்த படியே அளந்தாலும் அதுவே சாலும் அளியினமே முருகு விரிபூம் பொழிற்கச்சி மூவா முதல்வர் அளியினமு முறையோ அளியேற் களியாமை கேளீர் இதனைக் கேளீரே. (98)

பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

கேளோ டுற்ற கிளையொ றுப்பீர் கேதம் உறுவீர் கெடுமதியாற் கிளிவாய் வரைவின் மகளிர்பாற் கிட்டி மயங்கித் தியங்குவீர் வாளா கழிப்பீர் வாழ்நாளை வசையே பெறுவீர் வல்வினையீர்! வளமாந் தருவாய் உலகுய்ய வந்த கருணை ஆர்கலியைத் தோளா மணியைப் பசும்பொன்னைத் தூண்டா விளக்கைத் தொழுவார் தந் துயரக் கடற்கோர் பெரும்புணையைத் துருவக் கிடையா நவநிதியை வேளா டலைமுன் தீர்த்தானை வேழ வுரியைப் போர்த்தானை வெள்ளம் பாய்ந்த சடையானை வேண்டிப் புரிமின் தொண்டினையே. (99)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தொண்டர் சிரத்தின் முடிக்கும்பூ தொழுவார் இதய நடிக்கும்பூ அண்டர் முடியிற் றுலங்கும்பூ அருமா மறையின் இலங்கும்பூ பண்டை வினைப்பற் றழிக்கும்பூ பணிவார் அல்லல் ஒழிக்கும்பூ தெண்டன் இடுவோர்க் கருள்கச்சித் திருவே கம்பர் பதப்பூவே. (100) கச்சிக் கலம்பகம் முற்றுப்பெற்றது.

Back to thamizh shaivite literature Page
Back to Shaiva Sidhdhantha Home Page