பலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய

தேவையுலா

(ராமேஸ்வரம் தல மகிமை)
thEvai ulA of
palapaTTaTai cokkanAtakkavirAyar




    Acknowledgements:
    Our Sincere thanks go to the Digital Library of India
    for providing us with scanned images version of the work online.
    Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. We thank the following persons
    in the preparation and proof-reading of the etext:
    S Karthikeyan, R. Navaneethakrishnan, V Ramasami, V. Devarajan and Thamizhagazhvan
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2010.
    Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    Details of Project Madurai are available at the website
    http://www.projectmadurai.org/
    You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பலபட்டடை சொக்கநாதக்கவிராயர்
இயற்றிய
"தேவையுலா"


    இஃது உத்தமதானபுரம்
    வே.சாமிநாதையரால்
    பல பிரதிரூபங்களைக்கொண்டு பரிசோதித்துத்
    தாம் நூதனமாக எழுதிய அரும்பதவுரையுடன்
    பதிப்பிக்கப்பட்டது.

    மதுரைத்தமிழ்ச்சங்கம்
    THE MADURA TAMIL SANGAM
    ===================
    "செந்தமிழ்"ப்பிரசுரம்-19
    ===================
    மதுரை:
    தமிழ்ச்சங்க முத்திராசாலைப் பதிப்பு.
    1911
    விலை அணா-4




    கணபதி துணை.

    முகவுரை.

    தேவாரம்
    திருநாவுக்கரசுநாயனார்.
    திருநேரிசை.
    திருச்சிற்றம்பலம்.

    கடலிடை மலைக டம்மா யடைத்துமால் கரும முற்றித்
    திடலிடைச் செய்த கோயி றிருவிரா மேச்சு ரத்தைத்
    தொடலிடை வைத்து நாவிற் சுழல்கின்றேன் றூய்மையின்றி
    யுடலிடை நின்றும் பேரா வைவராட் டுண்டுநானே.

    தேவையுலா என்பது, இராமேசுவரத்துத் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ: இராமநாதர்மீது பலபட்டடைச் சொக்கநாத பிள்ளையால் இயற்றப்பெற்றது; தேவை இராமேசுவரம்; இது பாண்டிநாட்டிலுள்ள பாடல் பெற்ற பதினான்கு சிவஸ்தலங்களுள் ஒன்று.

    உலாவென்பது தமிழ்ப்பாஷைக்குரிய தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று; பேதை முதலிய எழுவகைப்பருவ மகளிர்களும் தன்னைக்கண்டு காதல் கூரும்படி ஒருதலைவன் வீதியிற்பவனி போந்தானென்று அவனுடைய அரிய செயல்களைப் பலவசையாகப் புலப்படுத்திக் கலிவெண்பாவாற் பாடவேண்டுமென்பது அந்நூலுக்குரியவிதி; வீதியென்றது இங்கே உருத்திர கணிகையருடைய தெருக்களை.

    இந்நூலால்,ஸ்ரீ இராமநாதருடைய பெருங்கருணைத்திறமும் இராமேசுவரத்தல விசேடஙேகளும் தீர்த்த விசேடங்கள் முதலியனவும் வேறுதல புராண கதைகளும் பழைய சிவபுராணங்களிற் காணப்படும் அரிய சரித்திரங்களும் நாயன்மார்களுடைய அருமைச் செயல்களும் பலமுகமாக அவ்வவ்விடத்து அறியலாகும். இன்னும்,பொருளை எளிதில் விளக்கும் மடக்கு, சிலேடை முதலிய சொல்லணிகளும், முக்கியமான பொருளணிகளும் கேட்டோர்களை விரைவில் வியப்பிக்கும் தொனிகளும் இதில் பரக்கக்காணலாம். அன்றியும் இத்தலத்தில் உள்ள ஆரியர் ஐந்நூற்றுப்பன்னிருவர் எனபது 94-ம் கண்ணியாலும், பண்டைக்காலத்தில் இத்தலத்தில் இன்ன இன்ன திருப்பணிகள் இன்னாரின்னாராற் செய்விக்கப் பெற்றனவென்பது 97-ம் கண்ணி முதலியவற்றாலும், இரகுநாத ஸேதுபதி கட்டுவித்த மண்டபம் ஒன்றில் உத்ஸவ காலத்தில் இராமநாதரெழுந்தருளினரென்பது 63-ம் கண்ணியாலும், திருத்தேர் சேதுபதிகளாற் செய்விக்கப் பெற்றதென்பது 108-ம் கண்ணியாலும், இராமநாதருக்குச் சாத்திய திருவாடை விஜயரகுநாத ஸேதுபதியால் அளிக்கப் பெற்றதென்பது 67-ம் கண்ணியாலும், அவர் திருத்தேர்வட முகூர்த்தம் செய்தனரென்பது 138-ம் கண்ணியாலும் விளங்குகின்றன. இன்னும் இங்ஙனம் விளங்குவன பல.

    இந்நூலாசிரியர், கவிராயரென்றும் புலவரென்றும் வழங்கப்பெறுவர். இவருடைய வாக்கின் பெருமை இத்தமிழ்நாட்டில் யாவருக்குந் தெரிந்ததாதலால், அதைப்பற்றி இங்கே ஒன்றும் எழுதத்துணிந்திலேன்.

    திருத்தேர்வட முகூர்த்தம் செய்தவர் விசயரகுநாதஸேதுபதி என்று கூறியிருத்தலால் அவர் காலமும் இந்நூலாசிரியர் காலமும் ஒன்றென்பதும் இந்நூலை இயற்றுவித்தவர் அவரென்பதும் விளங்குகின்றன.

    பண்டைத்தமிழ்நூல்களிற் காணப்படாத ஒருவகைச் சொற்கள் இந்நூலில் சிலவிடத்து வந்துள்ளன; இடத்துக்கேற்ற சிறப்புள்ளன வென்று கருதி அவை பெரியவர்களால் அக்காலத்து அங்கீகரிக்கப் பெற்றன போலும்.

    இற்றைக்குச் சற்றேறக்குறைய 32-வருடங்களுக்கு முன்பு அன்பர்களுடன் நான் சேதுபுராணத்திற் பாலோடைச் சருக்கத்திற்குப் பொருள் கேட்டுக்கொண்டிருந்தபொழுது திருவாவடுதுறை ஆதீனத்து மஹா வித்துவான் ஸ்ரீ: மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள், "மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப், பாலாவியாகிய பாலோடையும்" (கண்ணி-31) என்பதைக்கூறி, அதிலுள்ள 'சல தோடம்,' 'பாலாவி' என்பவற்றைப் பலபடப் பாராட்டி, "இது தேவையுலா" என்றும் "இதில் 24-தீர்த்தங்களும் இப்படியே ஒவ்வொரு நயம்படக் கூறப்பெற்றுள்ளன" என்றும் சொன்னார்கள். அதுவே இந்நூலைத்தேடி ஆராய்ச்சிசெய்யும்படி பண்ணுவித்தது.
    கிடைத்த இந்நூற்கையெழுத்துப் பிரதிகள்:

    திருவாவடுதுறையாதீனத் தலைவர்களாகிய ஸ்ரீமத்-அம்பல} வாணதேசிகரவர்கள் அளித்த பிரதி ... ... } 1.

    ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரதி ... 1.

    திருநெல்வேலி, தெற்குப்புதுத்தெரு, வக்கீல் சுப்பையா } பிள்ளையவர்கள் வீட்டிலிருந்து, மேலகரம் ம-௱-௱-ஸ்ரீ திரி}
    கூடராசப்பக்கவிராயரவர்கள் வாங்கித்தந்த பிரதி } 1.

    ஆகப்பிரதி 3
    ----

    மதுரைத்தமிழ்ச்சங்கத்து அக்கிராஸனாதிபதியும், பால*தம் ஜமீந்தாருமாகிய இராமநாதபுரம் மகா- ஸ்ரீ பொ.பாண்.* துரைஸாமித் தேவரவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில் மாதந்தோறும் வெளிப்படுத்தும்படி ஏதாவது தமிழ் நூலொன்றை அனுப்பி வர வேண்டுமென்று வற்புறுத்திக் கூறினமையால் அவ்வண்ணம் செய்யத்துணிந்து இம்முறை இதனை வெளிப்படுத்தலானேன்.

    எண்ணியதை நிறைவேற்றும்படி திருவருளைச் சிந்திக்கின்றனன்.

    இங்ஙனம்.
    சென்னபட்டணம்}
    24-2-07. }         வே.சாமிநாதையன்.
    ---------



    கணபதி துணை

    பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயரியற்றிய
    தேவையுலா.


    காப்பு.

    ஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற்
    சோதியுலாந் தேவையுலாச் சொல்லவே-காதலாம்
    தந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய்
    தந்தத்தொந் தித்தந்தித் தாள்.

    நூல்.

    நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்
    போர்கொண்ட கண்மலராற் பூசித்தும்-சீர்கொண்
    1
    டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்
    செபமன் னியபூசை செய்தும்-இபமென்ன
    2
    வந்து பிறந்த மதலையைச் சாம்பனென
    இந்துகுலத் தொன்றுபெய ரிட்டழைத்தும்-வெந்துயரை
    3
    மேன்மாற்றும் வில்வோத கேச்சுர லிங்கத்தை
    ஆன்மார்த்த பூசையா வர்ச்சித்தும்-நான்மறையின்
    4
    வேர்பெற்ற வீதி விடங்கரைப் பாற்கடலின்
    மார்பிற் சுமந்து வணங்கியும்- நேர்பெற்ற
    5
    தொண்டு புரியுந் தொழும்பெல்லா நாணாளுங்
    கண்டு புரியுங் கருணையால்-அண்டருல
    6
    கின்னு நடுங்கு மிராவணனைக் கொன்றபழி
    தன்னை யகற்ற றலைக்கீடா-என்னையோர்
    7
    பல்லா யிரவர் படைத்த மலமாதி
    யெல்லா விருளு மினிதகற்றத்- தொல்லைநாட்
    8

    24-தீர்த்தங்கள்.

    காலவரையடைந்துங் காலவரையடையாச்
    சீலமுடையசக்ர தீர்த்தமும்-கோலவரைப்
    9
    பேதையொரு பாகன்போற் பேயுட னேயாடும்
    வேதாள தீர்த்தமெனு மென்புனலும்-பூதலத்து
    10
    வாவுந் திடமதிக்கு வந்த மறுத்துடைத்த
    பாவ விநாசப் பசுந்தடமும்-ஆவலாற்
    11
    சீதைதரும் பட்டத்தாற் றேவேந் திரப்பட்டங்
    கோதகன்ற தாஞ்சீதா குண்டமும்-நீதிபோய்த்
    12
    தேயமிழந் தோனிழந்த தேர் பரியெல் லாங்கவந்த
    வாயி லுதிப்பித்த மங்கலமும்-நேயத்தால்
    13
    ஏந்திய நல்லோரை யேகாந்த ராமன்பாற்
    சேர்த்து விடுமமுத தீர்த்தமும்-பூத்தமலர்
    14
    வீட்டிலுறை வேதாவை மிக்கமக வானாகக்
    கூட்டி யருள்பிரம குண்டமும்-வாட்டமுறு
    15
    நொய்யமனத் தன்மசக னூறுமக வானாகச்
    செய்யு மனுமகுண்ட தீர்த்தமும்-ஐயமற
    16
    மானத வாவிவடி வாய்த்தெய்வ யானைதனை
    யீனு மகத்தியனா ரேல்வையும்-மேனாளில்
    17
    மெய்கழுவ வந்த விசயன் றமையனுக்குப்
    பொய்கழுவி ராமர்திருப் பொய்கையும்-தெய்வதங்கள்
    18
    வாழு மொருதேவை வந்து பலதேவர்
    தாழு மிலக்குமணர் தண்புனலும்-சூழுலகிற்
    19
    காந்திவருங் கூட்டைக் கழுவச் சுகமழுக்குத்
    தீர்த்து விடுசடா தீர்த்தமுஞ்-சாந்தமலர்
    20
    கூற்றன் மகனைக் குபேரன் மகனாகத்
    தேற்று மிலக்குமி தீர்த்தமும்-நாற்றிசையும்
    21
    போய்மூளைக்குஞ் சீதைபழி போக்குதற்காத் தண்ணீரிற்
    றீமுளைக்கு மக்கினி தீர்த்தமும்-பூமியிலே
    22
    தங்குமறை யான்றாளுந் தந்துவிசும் பின்மறையான்
    செங்கையு நல்குசக்ர தீர்த்தமும்-பங்கயத்தோன்
    23
    மாலை முடியறுக்க வந்த பிரமகத்திக்
    காலை யறுத்தசிவ கங்கையும்-வேலையெனப்
    24
    பொங்குநீர்க் குள்ளே புழுங்கினோன் வெம்மையொரு
    சங்கநீர் தீர்த்தசங்க தீர்த்தமும்-பங்கொருவன்
    25
    ஒப்பரிய வையத்தி லோடிவந்து முந்நீரைச்
    செப்பமுற நீந்தியமுத் தீர்த்தமும்-இப்புவியின்
    26
    மாமிக்காய் மாமன்போய் மாமனைக் கொன்றபழி
    சேமித் திடாக்கோடி தீர்த்தமும்-காமத்தால்
    27
    ஓசைநீர் தோய்ந்தோற் குருப்பசியின் வேதனைகள்
    மோசனமாஞ் சாத்யா முதநீரும்-பேசொருவன்
    28
    வெண்மை யிரைக்கழுவ மிக்க கருமயிராந்
    திண்மை பெறுஞ்சருவ தீர்த்தமும்- வண்மையினாற்
    29
    றானே யரியையுஞ் சம்புவையும் விண்ணவர்தங்
    கோனாகச் செயததனுக் கோடியும்-மாநிலத்தின்
    30
    மேலான கத்துருவின் வீழ்சலதோ டந்தணிக்கப்
    பாலாவி யாகியபா லோடையும் - மேலான
    31
    நாணுருவா மம்புருவ நங்கை சிலையுருவின்
    கோண லொழித்தகவி குண்டமும் - காண
    32
    அரிதலை தன்னை யயனுடலிற் சேர்க்குஞ்
    சரசுவதி காயத்ரி தாமும் - பிரச
    33
    மொழுகுஞ் சுளைகளா வோங்குபுகழ்த் தேவை
    முழுது மொருபழமா முன்னோர் - தொழுதிறைஞ்சுஞ்
    34
    சேதுப் பலாமரமாச் சேதுப் பலாமரத்தின்
    மீதிற் பழுத்த வியன்கனியின் - கோதற்ற
    35
    வான்பே ரமுதென்றால் வாய்கசக்கத் தித்திக்குந்
    தேன்போ னிறைந்த சிவக்கொழுந்து - மான்போர்வாள்
    36
    மச்சமயில் போற்கண் மலைவளருங் காதலியாம்
    பச்சைமயில் வாழ்செம் பவளமலை - நிச்சயமாய்க்
    37
    காவையு மிந்த்ர புரத்தையுங் கானனமுந்
    தேவையு மாகத் திருத்தினோன் - மேவுந்
    38
    திருக்கந்த மாதனத்திற் சென்றேறு நாடொட்
    டிருக்கந்த மாதனமா வேறான் - வெருக்கொள்ளு
    39
    முங்கார கால வயிரவனா மோங்கார
    சங்கார காலனையுந் தாபித்தோன் - பொங்குபெயர்க்
    40
    காவலுறுஞ் சேதுவந்த மாகாளி யம்மையருட்
    காவல் புரியுங் கடிநகரான் - தேவர்கோன்
    41
    வேதனைசெய் கால்விலங்கை விட்டோட்டு வோன்சேது
    மாதவன் கால்விலங்கை மாற்றாதான் - மோதி
    42
    எறிகடலைத் தாண்ட வெழுந்தவனு மானை
    மறிகடலை யென்றெதிரே வைத்தோன் - உறுபுலியாற்
    43
    கோலு கலிங்கமன்றிக் கொட்டுணையும் பட்டுடான்
    வாலுக லிங்க வடிவினான் - மேலா
    44
    மவனசை யாம லணுவசை யாமை
    பவனனு மாருதியும் பார்த்தோன் - அவனையுமை
    45
    தானாளத் தான்வந் தெமையாள நாமெல்லாம்
    வானோரை யாளவந்த வானோரும் - ஏனோரைப்
    46
    பூதலமீ தாளப் புரியுங் கருணையான்
    பாதலமே யாபரணப் பையானோன் - வேதனார்
    47
    சென்னி தனக்குந் திருக்கை மலர்வீடும்
    அன்னமு நல்கு மருளாளன் - சென்னி
    48
    மதியார்க்குந் தாள்பணியும் மார்க்கண்டே யர்க்கு
    முதயாத் தமன மொழித்தோன் - கதிரவற்கும்
    49
    சண்டைப் படுமிருட்குந் தக்கன் செயுமோம
    குண்டத்தின் முன்னுறவு கூட்டினோன் - புண்டரிகக்
    50
    கண்ணினான் கண்களுக்குக் காட்டாத பொற்பாதங்
    கண்ணிலா வந்தகற்குங் காட்டினோன் - கண்ணின்
    51
    கடைக்கு விடயமன்றிக் கார்முதலை யென்று
    விடைக்கு விடைகொடுத்த வேந்தன் - இடைக்குலத்து
    52
    பூவையர் தாள்பணியப் போகாமல் விண்ணவர்க்குச்
    சேவை கொடுத்தருளச் செல்கொடியான் - றாவிலா
    53
    மாரூப வில்வேண் மலர்தூவக் கண்பார்த்துச்
    சாரூபந் தந்தருளுந் தம்பிரான் - வீரப்
    54
    புலிபோல வாட்டைப் புசிக்குமரா வுக்குஞ்
    சலியா நடம்புரிந்த தாணு - வலியாரை
    55
    மோது மிருமழுவன் முக்கால னாற்கண்ணன்
    வேதமைந்த னாறுதலை மேவினோன் - காத
    56
    லெழுசமைய னெட்டுலகு மொன்பது திக்கும்
    பழுதகலின் பத்து நிதியும் - தொழவருள்வோன்
    57
    தன்புய வெற்பிடத்துந் தாட்டா மரையிடத்து
    மென்பணி கொள்ளு மிராமேசன் - அன்பர்
    58
    திகைத்த வினையுமயன் சென்னியுஞ்சே திக்கு
    நகத்தன் வரராம நாதன் - சகற்பதியைப்
    59
    பூசித் திருநாளு நம்மையென்று போதித்தோன்
    மாசித் திருநாள் வருநாளிற் - பாசத்தாற்
    60
    பொற்பொடி மார்பிற் பொருந்தும் விடைக்கொடியா
    நற்கொடி யேறு நலங்கண்டு - சொற்கொடிபோல்
    61
    வாழும் பருவத வர்த்தினியுந் தானுமுல
    கேழும் பரவ வெழுந்தருளி - ஆழியருள்
    62
    காபாலிக் கென்றுகட்டு வித்த ரகுநாத
    பூபாலன் மண்டபத்திற் போந்திருந்து - மாபாரச்
    63
    செஞ்சடை யன்றித் திருப்புயஞ்சே ராளென்னு
    நஞ்சடை வார்த்தைமிக நாணடைய - மஞ்சுதவழ்ந்
    64
    தேறுகுழற் கங்கையா ளெந்தைபுயஞ் சேர்வதுபோற்
    கூறு மபிடேகங் கொண்டருளி - வீறு
    65
    புரியாடை யோரெட்டும் புல்லாடை யொன்றுங்
    கரியாடை யொன்றுங் களைந்து - துரைராசன்
    66
    தென்னன் விசய ரகுநாத சேதுபதி
    கன்ன னருள்பொற் கலைபுனைந்து - பின்னை
    67
    இறைப்பொழுதுங் கங்கைதனை யீசைகா ணாமன்
    மறைப்பதெனப் பொன்மகுடம் வைத்துக் - கறைக்கண்டன்
    68
    காதி லிருவரிசை காத்திருந்து கேட்பனபோற்
    கோதி லரவக் குழைசாத்திச் - சாதலற
    69
    அண்டர்க்கா வுண்டநஞ்சி லாரமுத மூறுதல்போற் 70
    கண்டத்தின் முத்துவடங் கட்டுறீஇச் - சண்டன்போய்
    70
    எட்டித் தொடுமுன் னிறுகச் சிவக்கொழுந்தைக்
    கட்டிப் பிடித்தோன் கரம்போல - வட்டத்
    71
    தினமணிக்கே காந்திதருஞ் செம்மல் புயத்தி
    லினமணிக் கேயூர மிட்டுக் - கனல்விழியைத்
    72
    தோண்டும் விரலைத் தொழவந்த சூரியன்போற்
    காண்டகுமா ணிக்கக் கடகமிட்டு - வேண்டிவளர்
    73
    மெய்யாண் முலைத்தழும்பை வேணியாள் காணாமற்
    கையாள் பதக்கங் கவினுவித்துப் - பொய்யுலகில்
    74
    தாயுதர பந்தனத்தைத் தள்ளுந் தனிமுதலுக்
    காயுதர பந்தனமு மாங்கமைத்துத் - தேயம்
    75
    பரித்தாளும் வாணன் பலசதங்கை யிட்ட
    திருத்தாளி னூபுரமுஞ் சேர்த்தித் - தரித்த
    76
    திருமா லொருபாலுந் தேவியொரு பாலும்
    இருபாலுங் கைக்கொண்ட தென்னத் - திருமேனி
    77
    ஆகாய மென்ன வகிலாண்ட மாந்தருவிற்
    சேகாய வண்ணந் தெரிப்பதெனப் - பாகாய
    78
    சானகி செங்கைத் தளிரும் பொறாதுதிரு
    மேனி நிறங்கன்றி விட்டதெனக் - கானகத்தின்
    79
    மண்டிப் பொருவிசயன் மன்னைப் பிடிபிடிக்கக்
    கண்டத்தி னஞ்சு கலந்ததெனக் - கொண்டலார்
    80
    தெள்ளுஞ் சிவத்தியானஞ் செய்போ திரண்டுருவு
    முள்ளும் புறமு மொளிர்வதெனக் - கிள்ளைவளர்
    81
    கையிற் கரும்பணிவாள் காத லெனுநீலப்
    பையுட் பொதிந்த பவளமென - ஐயமாத்
    82
    தூய சிவஞானந் தோன்றா தெவரெவர்க்கு
    மாயை நிழலின் மறைந்ததென - நேய
    83
    மருக்கூந்தன் மங்கைநிறம் வாஞ்சித்தா ரென்னத்
    திருச்சாந் திலேபனமுஞ் செய்து - விரைச்சாந்தாற்
    85
    சந்திரனில் வாழுந் தடந்தா மரைக்கண்ணன்
    வந்தெதிர் நிற்கும் வடிவென்ன - முந்தியே
    85
    விம்பப் பிரதிபிம்ப வேதாந்த நீதியெனப்
    பைம்பொனிலைக் கண்ணாடி பார்த்தருளி - வெம்போரில்
    86
    வானிற் பறக்கு மதின்மூன் றையுமெய்ய
    மேனிற்கும் பொன்மேரு வில்லென்ன - வானத்து
    87
    முந்திய விந்திரவின் மூன்றி லுமைநிறமும்
    எந்தைநிற முங்கண் டிரண்டொளிக்க - நிந்தையிலா
    88
    மற்றொருபொன் வில்லை வளைத்துத் தரித்ததெனப்
    பொற்றிரு வாசி பொலிந்தோங்கக் - குற்றமறு
    89
    சீரா தனமான சிங்கா தனத்திலிருந்
    தாரா தனைகொண் டருளியபின் - யாரும்
    90
    மடங்கலெனு நந்தியான் மாயோ னடக்கு
    நெடுங்கடல் போலடங்கி நிற்கச் - சடங்கஞ்சேர்
    91
    நான்மறையு முத்தமிழு கற்பே ரிரண்டுடையோ
    னூன்முறையு முன்னே நுவன்றதற்பின் - மேன்முறையே
    92
    வாட்டிவிடுஞ் சென்மம் வரும்வழியைத் தாளிட்டுப்
    பூட்டிவிடுஞ் சேதுப் புராணமுங் - கேட்டருளி
    93
    மெய்ந்நூற் றுறையின் விதிவழியே பூசிக்கும்
    ஐந்நூற்றுப் பன்னிருவ ராரியரும் - இந்திலத்திற்
    94
    றேற்றுமலை யத்தனையுஞ் சேதுபந்த மீதுகுடி
    யேற்றுலக நாதமுனி யென்போனுங் - கூற்றதிர
    95
    ஆர்க்குங் கடறூர்த் தழிவி றிருநகரஞ்
    சேர்க்கு மிராவாடு தேசிகனும் - நீர்க்கடலில்
    96
    ஆராமங் கோயில்குள மற்புதமாக் கற்பித்த
    மாராம நாத வரமுனியும் - சீராமர்
    97
    மெய்யம் பலமாக வீற்றிருப்பார்க் கேற்றபணி
    செய்யம் பலவாண தேசிகனும் -ஐயன்
    98
    சிவராச தானியுடன் தேவையையொப் பாக்குந்
    தவராம நாதமுனி தானும் - புவனேசற்
    99
    காதவன்வாழ் கோபுரங்க ளட்டபந்த னாதிகள்செய்
    மாதவனாம் வேதவன மாமுனியும் - சீதைபுணர்
    100
    மேகஞ் சொரிந்ததிலு மிக்காக நித்தமபி
    டேகஞ் சொரிந்து தினம்பூசை - ஆகத்தின்
    101
    மைவார் விழியும் வனமுலையும் பெற்றோர்க்குத்
    திவ்யா கமப்படியே செய்விக்கும் - சைவ
    102
    சிகாமணி யான சிதம்பர நாத
    மகாமுனியு மாமெழுவர் வந்து - நகாதிகளைக்
    103
    கண்ணன் முதலோர் கனசேது வைச்சேரப்
    பண்ணுதல்போற் செய்யும் பணிவிடையும் - மண்ணுலகங்
    104
    காத்தருளுஞ் சேதுபதி கட்டளையைச் சட்டமிட
    வாய்த்தசொக்க நாத வரமுனிவன் - கீர்த்தியுடன்
    105
    நம்பர் திருப்பணிக ணாடோறுஞ் செய்தனவுஞ்
    சம்பு திருச்செவியிற் சாத்தியபின் - அம்பொற்
    106
    றிருவாழி தாங்கலாற் சேரும் வடத்தாற்
    பரிவான பீதாம் பரத்தாற் - றிருவென்னு
    107
    மாது பதியுமவன் மாமகுட மும்பொலுஞ்
    சேதுபதி வைத்ததிருத் தேரேறிக் - காதலிதேர்
    108
    பின்னூரச் சண்டன்றேர் பின்னூர மைந்தர்தேர்
    முன்னூர நீரூரு மூதூரில் - என்னிறையோன்
    109
    ஆதித்தேர் தானு மழகுக்குத் தோற்றிந்தச்
    சோதித்தேர் தன்னைச் சுமப்பதென - வீதிக்
    110
    கெழுந்தருளும் போதி லிமையோர்கள் வெள்ளங்
    கொழுந்து படர்ந்துவருங் கூட்டம் - தொழுந்தகைய
    111
    வள்ளலுடன் முன்வந்த வானரங்க ளோரொரு
    வெள்ள மெனக்கலித்து மீண்டதென - ஒள்ளிழையார்
    112
    அன்று தனிப்போ யான்விழிக்குத் தோற்றமத
    னின்று படைக்கூட்ட மிட்டதெனச் - சென்றோடிப்
    113
    பேதைமையால் வாலி பிதாமிதித்த பூமிதனை
    மேதினியோ ரெல்லா மிதித்ததெனக் - காதலுமை
    114
    ஏடலர் தாரா னிளனுக் கிடுஞ்சாப
    மாடவர்க் கெல்லாமுண் டானதென - நீடுசடா
    115
    தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட்
    டார்த்தசுக மெல்லா மடைந்ததெனப் - பார்த்திருந்து
    116
    சானகியை யீன்ற தலத்தைவெல்லப் பூவையரை 7
    யேனை யிடமெல்லா மீன்றதென - மானெல்லாங்
    117
    கோவங்க மானகா குத்தனை வஞ்சித்த
    பாவங் கழுவப் படர்ந்ததெனக் - கோவங்கொள்
    118
    தென்கடனீ ருண்ணச் செலும்போது சீமூத
    மின்களையெல் லாங்கரையில் விட்டதெனத் - தன்கிளைபோற்
    119
    கொச்சை மயிலெல்லாங் கூட்டமிட்டு வெற்பீன்ற
    பச்சை மயிலைவந்து பார்ப்பதென - அச்சுதனார்
    120
    மூவர் பணிந்த முதற்றலமென் றாங்கவர் தம்
    பூவையரெல் லாம்பணியப் போந்ததெனத் - தேவைதனில்
    121
    பிந்தாது சூழவனப் பேடவர்கைத் தாமரையில்
    வந்தாடல் போற்சா மரையாடத் - துந்துபி
    122
    சல்லரி தக்கை தடாரிமுர சம்பேரி
    கல்லவடங் காகளங் கல்லென்னச் - சொல்லரிய
    123
    வெண்கவிகை யான்மறைந்து விண்ணிறம் வெண்ணிறமாய்
    வண்கவிசொ னீலநிற மாறாடக் - கண்களெனும்
    124
    பொங்கலர் பூத்ததடம் போன்றமட வார்களட்ட
    மங்கல மேந்தி மகிழ்வேந்தப் - பங்கயனும்
    125
    மாலும் பறவைகளில் வந்தேற வாசையிரு
    நாலும் புரப்போர் நரர்விலங்கு - மேலேற
    126
    எட்டிய கோள்க ளெழுபத் தொருகுதிரை
    கட்டிய தேர்கள் கடிதேறக் - கிட்டுவினை
    127
    பாறுமிரு நால்வசுவும் பன்னோ ருருத்திரரு
    மேறு விமான மினிதேறச் - சீறயிலை
    128
    எள்ளு மிருகண் ணெழுமடவார் நான்மூன்று
    புள்ளும் விலங்கும் பொலிந்தேறக் - கிள்ளைமொழி
    129
    நேயத் திருமா னிலமா னிளம்பிடிமான்
    காயத் திரிமான் கலைமானும் - தூயோர்
    130
    எழுவர்நதி மாத ரெழுமுனிவர் மாதர்
    வழுவி லெழுவரர மாதர் - பழிதீர்
    131
    வசுமாத ரெண்மர் மகிதல மாதி
    யசமான மாதரோ ரெண்மர் - இசைகதிரோன்
    132
    கன்னியர் நால்வர் கடவுட் கலாநாதன்
    பன்னியர் மூவொன் பதுமாதர் - சென்னியச
    133
    மானவர் பெற்ற வறுபது மாதருட
    னேனையரு மொய்த்தீண்ட வெம்மருங்கும் - மேனாளிற்
    134
    கோவ மொடுங்கரா வுண்ட குலமைந்தர்
    மூவரையும் வாழ்வித்த மூவர்களுந் - தேவருக்கும்
    135
    பேருலகத் தோர்க்கும் பிரம்படி யுண்டாக்கும்
    ஓரிருவர் தாமு முடன்போத - நீரோடப்
    136
    பண்ணியங் கொள்ளாது பார்முழுதுங் கொண்டாடப்
    புண்ணியங் கொள்ளும் புகழாளன் - விண்ணோர்
    137
    தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத்
    திருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்யப் - பெருத்த
    138
    மறுகு கடலாக மன்பதை வெள்ள
    முறுகு கரைபுரண்டு மோத - நிறைவயிரக்
    139

    குழாங்கள்

    கன்னிலத்து மின்னுசந்த்ர காந்த மணிநிலத்தும்
    பொன்னிலத்தும் வைசயந்திப் பொன்னிலத்தும் - அன்னம்
    140
    உலாநிலத்து மேனிலத்து மோர்நிலத்து மில்லா
    நிலாநிலத்தும் வெள்ளி நிலத்தும் - கலாநிதியும்
    141
    தாரா தரமுதவுந் தாவில்லா மின்களுவந்
    தோரா யிரங்கோடி யுற்றவென - நேரிழையார்
    142
    காதலுட னேறிடுவார் கைக்கடகந் தம்மையே
    பாத கடகமெனப் பார்த்தணிவார் - கீதாதி
    143
    பாடகத்தின் மீதே பரிந்தணியுங் கண்டசரம்
    பாடகத்தின் மீதே பரிந்தணிவார் - நாடி
    144
    இதங்கொண் மலர்க்கை யிருகை யிடத்தே
    சதங்கை தெரியத் தரிப்பார் - விதங்கொண்ட
    145
    காலாழி கையாழி யாகக் கடிதணிவார்
    மாலாழி நீந்த மறுகுவார் - நாலிடமும்
    146
    மொய்த்திடுவார் மார்பு முறுகு முலைதாங்கி
    யெய்த்திடுவார் வேர்வை யிறைத்திடுவார் - தத்தம்
    147
    இடைகளையுந் தேடுவா ரெல்லோர் மடியும்
    உடைகளையுஞ் சோதித் துடைவார் - விடையோன்
    148
    கனிவாயுந் தம்மிதழுங் கைவிரலாற் கூட்டத்
    தனியாமை யாலே தவிப்பார் - இனியிந்தப்
    149
    பெண்களையு மாண்களையும் பேசுந் திரைக்கரத்தாற்
    கண்களைமூ டாதோ கடலென்பார் - எண்கொள்ளும்
    150
    எம்முடைய கொங்கை யிணைகளுக்கு மீசரே
    உம்முடைய வில்லங்க மோயாதோ - எம்ம
    151
    திரவியமா நாணையழித் தீருமது நாணை
    வரையறை யாப்பதுக்கி வைத்தீர் - நிரைவளையார்
    152
    கைவளையை நீக்கினீர் கண்ணுதலீ ரும்முடைய
    பெய்வளையை நீங்கப் பெறுவீரே - ஐயரே
    153
    கொள்ளை விடமமுதாக் கொண்டீரே நீரெமக்குத்
    தெள்ளமுத நஞ்சமெனச் செய்தீரே - துள்ளி
    154
    விழமதனை வென்றீரே விண்பழுத்த வெள்ளைப்
    பழமதனை வெல்லப் படாதோ - முழுமுதலீர்
    155
    என்றெவ் றிரங்க விளநீ ரையுமுலையு
    மொன்றென் றிருக்கு மொருபேதை - என்றும்
    156

    பேதை.

    திருமகளார் சிந்தை தெளிய விளைய
    மருமகளார் பெற்றெடுத்த வஞ்சி - விரக
    157
    வசப்படுவோர்க் கெல்லா மதன்கரும்பு போலக்
    கசப்பு விளையாக் கரும்பு - பசப்புவிளை
    158
    தன்போல் விளங்கச் சரக்காமன் றேரிழுத்துத்
    துன்ப முறாத சுகப்பிள்ளை - பின்பொற்றை
    159
    மாவிற் றனித்திருந்து மால்கொண்டோர் பேய்கொள்ளக்
    கூவத் தெரியாக் குயிற்பேடு - தாவிப்
    160
    படியேழு மோடிப் படரச் சிறிதே
    கொடியோடுங் காமக் கொழுந்து - துடியோடிப்
    161
    போரம்பஞ் செய்யும் புகழ்க்காம வேடிருநாட்
    காரம்பஞ் செய்யுமங்கு ரார்ப்பணம் - சேருங்
    162
    களவுங் கொலையுங் கவுரியமுஞ் சூதும்
    விளையுந் தமோகுண வித்து - வெளியதிரு
    163
    நீற்றொளி பொங்குதிரு நீலகண்ட யாழ்ப்பாணர்
    எற்றினு மேறாத வின்னிசை - ஆற்றலால்
    164
    என்முடியென் றெண்ணி யிருப்பினு முன்முடியாப்
    பொன்முடிபோற் கூடாத பூமுடியாள் - முன்னோன்
    165
    தலந்துதிக்கு மப்பருக்குச் சாக்கியர் பாலிற்
    கலந்தளித்த நஞ்சனைய கண்ணான் - நிலந்துதிக்கும்
    166
    பைநாகம் போய்மறைத்த பைம்பொற் சிகரம்போன்
    மைநாக நீரின் மறைந்ததுபோற் - கைநாக
    167
    பங்கன் சடைமுடிமேற் பண்டா யிரமுகத்துக்
    கங்கை யொளித்திருந்த காட்சிபோற் - செங்கனியின்
    168
    சார்பி லொளித்திருந்த தக்ககன்போன் மிக்கமணி
    மார்பி லொளித்த வனமுலையாள் - ஊரனுக்குப்
    169
    பைம்பொன் றிருமுருகன் பூண்டியி லேபறிபோஞ்
    செம்பொனெனப் போய்மீண்ட சீறெயிற்றாள் - கொம்பனையாள்
    170
    செய்யதொரு சித்திரத்திற் றீட்டுஞ் செழுங்கிளியைக்
    கையி லழைத்தழைத்துக் கன்றுவாள் - மெய்யுறுகண்
    171
    ணாடி நிழலுக் கமுதூட்டு வாளதுவுங்
    கூடவமு தூட்டக் குனிந்துண்பாள் - நீடுதிரை
    172
    மட்டித் தெடுத்த மணற்சோற்றைத் தானெடுக்க
    எட்டிக் கடலை யிறைத்திடுவாள் - கிட்டிய
    173
    மாதவிப் பந்தர் மணப்பந்த ராவாவிச்
    சீதளச்செந் தாமரையே தீயாகப் - பேதுறாக்
    174
    கிஞ்சுக பத்திரமே கிட்டுஞ் சிருக்காக
    வஞ்சுகங்கண் மந்திரஞ்சொ லந்தணரா - நெஞ்சுகந்த
    175
    புன்னை யரும்பே பொரியாகப் பூந்தேற
    னன்னர்ச் சொரியு நறுநெய்யா - முன்னரிள
    176
    வண்ட லயர்ந்த மணற்சோறு கள்விருந்தாக்
    கொண்ட முரசங் குரைகடலாத் - தண்டலையில்
    177
    தன்பாவை யான தமனியப் பாவைதனக்
    கன்பர் மணஞ்செ யமையத்துத் - தென்பூமி
    178
    வாழ வருங்கந்த மாதனத்தைப் பொன்மேருத்
    தாழவரல் போலுந் தடந்தேர்மேற் - சூழத்
    179
    தனுக்கோடி நீங்குதனுக் கோடியான் வந்தான்
    மனுக்கோடி யேழுடையான் வந்தான் - எனைக்காக்கும்
    180
    மூவர் முதல்வந்தான் முப்பத்து முக்கோடி
    தேவாதி போற்றுஞ் சிவன்வந்தான் - மேலவரும்
    181
    பாலாழி தூணியாக் கொண்ட பரன்வந்தான்
    நீலாழி யில்வாழ் நிதிவந்தான் - மேலோர்கள்
    182
    நந்தா வரராம நாத னெதிர்வந்தான்
    வந்தானென் றூதும் வலம்புரியும் - துந்துபியும்
    183
    பின்னத் தொனியான பேரிப் பெருந்தொனியுஞ்
    சின்னத் தொனியுஞ் செவிதூர்ப்ப-அன்னை
    184
    எழுவது கண்டெழுந்தா ளேழையர் பின்போய்த்
    தொழுவது கண்டு தொழுதாள்-முழுவதும்
    185
    பாதாதி கேசமெலாம் பாவை தரிசித்து
    வேதாதி கேசவனை மேம்பட்டாள்-பேதைமற்
    186
    றொன்றினையும் வேண்டாம லும்பர்கோ னங்கைமான்
    கன்றினை வேண்டிக் கரைந்தழுதாள்-நின்றினையு
    187
    மன்னே யுமைவிழியென் றம்மானு மம்மானைத்
    தன்னேயத் தாலே தரித்தது காண்-பின்னவனும்
    188
    தேற்றுமிள மான்கன்றைச் சென்னிப் பிறைக்கொழுந்தில்
    ஏற்றி விடுவதிலு மிச்சைகாண்-கூற்றுவன்வே
    189
    ராணி யறுகை யபேட்சித் தவர்சாத்தும்
    வேணி யறுகையது மேயுங்காண்-மாணிழையாய்
    190
    பெம்மா னமரர் பெருமானம் மான்கோமா
    னெம்மானம் மானையுனக் கீயுமோ-சும்மாது
    191
    கண்ணருவி யோடக் கரைந்தழுவ தேனெனுமுன்
    விண்ணருவி யொடுந்தேர் வேறகலப்-பெண்ணெதிரே
    192
    வந்த விசயமதன் வாளியின் வாய்க்குவிருந்
    திந்த விசையமையா தென்றகல-வந்த
    193
    குதம்பை ததும்புங் குழையா ளகன்றாள்
    பெதும்பை யொருத்திகிளிப் பிள்ளை-பதங்கண்டு
    194
    துச்ச மதனன் றொடுக்குங்காற் றோட்சரமுங்
    கைச்சரமு மாகாக் கடிமுல்லை - அச்சமற
    195
    நீளவரு நாளத்தி னேற்று முகந்தோற்றி
    நாளை மலரு நளினமலர் - வேளை
    196
    வெடிக்குமலர் மேற்றாயை விட்டு நடந்து
    படிக்கு மடவன்னப் பார்ப்புத் - துடித்தோடித்
    197
    தாவுமதன் றேர்முன்னே தாய்கூவத் தான்காவிற்
    கூவு மதுரக் குயிற்பிள்ளை - பூவுலகிற்
    198
    செல்லார் திருமறுகற் றிங்களூர் வெவ்விடம்போற்
    கொல்லாமன் மீண்டுவிடுங் கூர்விழியாள் - சொல்லும்
    199
    பெருந்தாளம் வேண்டாத பிள்ளையார்க் கீசன்
    றருந்தாளம் போலுந் தனத்தாள் - வருந்தியே
    200

    பேதமற வாகீசர் பெற்ற சிவபதம்போற்
    கோதையர் கூட்டுங் குழலினாள் - சோதிசேர்
    201
    பொற்கண்ட மான புதியமணி முற்றத்துக்
    கற்கண்டு கொண்டு கரைகண்டு - சர்க்கரையாற்
    202
    பாத்தி பரத்திப் பசுந்தேன் குடங்கொண்டு
    வார்த்து வளர்த்தசிறு மாதவிக்குப் - பூத்தறியாத்
    23
    தன்போ விளங்கரும்பு தன்னையொரு கொள்கொம்பாப்
    பொன்போலும் வஞ்சிநடும் போதத்தில் - இன்ப
    204
    நலஞ்செய்யுங் கங்கை நதிவந்து நித்தம்
    வலஞ்செய்யச் செய்யும் வழிபோல் - நிலம்பதிய
    205
    வண்டில் பதியு மணித்தேரி லெந்தைவரக்
    கண்டில் கடந்தாள் கடிதடைந்தாள் - கொண்டல்போய்
    206
    முன்னம் பணிந்த முளரித் திருப்பதத்தை
    மின்னும் பணிந்ததுபோன் மின்பணிந்தாள் - சென்னிமே
    207
    லாறுபிறை தோற்று மழகு மொருவேளை
    நூறுவிழி தோற்று நுதலழகும் - கூறரிய
    208
    வெண்டிசையுங் கொண்ட விடையழகு மேழுலகுங்
    கொண்ட சிலையின் குனிப்பழகும் - கொண்டுவரு
    209
    மம்புயத்தி லொன்றையொளித் தாயன் றனைவேடன்
    றம்பியெனச் செய்த சரணழகும் - கொம்பனையாள்
    210
    கண்டவளுங் காணா தவளுமாய்ப் பேராசை
    கொண்டுங் கொளாதுமெதிர் கும்பிட்டாள் - அண்டர்கோன்
    211
    வேற்றோர் மறுகடைந்தான் வில்வே டொடைமடக்கித்
    தோற்றா னெனும்பேர் துலக்கினான் - சாற்றும்
    212

    மங்கை.

    திருப்பிறந்த நாட்பிறந்த தெள்ளமுதத் தாலே
    யுருப்பிறந்த மங்கை யொருத்தி - தருப்பிறந்த
    213
    அண்ட மனையு மகிலமுமஞ் சுங்காள
    கண்ட மனைய கருங்குழலாள் - தொண்டருடை
    214
    அன்பிறை நீங்கா வடியான் முடிமேல்வாழ்
    வன்பிறை போல்விளங்கும் வாணுதலான் - என்பிறவிப்
    215
    பேரூசல் மாற்றும் பிரானோ டுமையாடுஞ்
    சீருசல் போலுஞ் செழுங்குழையாள் - ஆருரிற்
    216
    கோன்கன் றினையாளுங் கோமான் கரத்தேந்து
    மான்கன் றனைய வரிவிழியாள் - தான்கன்ற
    217
    மைபோற் றுங் கண்ணுமையாள் வாட்டந் திருத்துமான்
    கைபோற் சிவந்த கனிவாயாள் - வையமெலாம்
    218
    ஈன்றவரை யீன்றகுறி யீதென்னப் பச்சுடம்பு
    தோன்றிய வேய்போலுந் தோளினாள் - ஆன்றபுகழ்ச்
    219
    சேதுவிலுஞ் செம்பொன் வரையிலுஞ் சேர்கந்த
    மா தனங்கள் போலும் வனமுலையாள் - ஓதியபொன்
    220
    னாடமருங் கங்கை நதிமுடித்தார் கைப்பிடித்த
    மாடமரு கம்போன் மருங்குலாள் - நாடு
    221
    மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத்
    துதிக்கை யனைய துடையாள் - மதுக்கொன்றைப்
    222
    பைந்தா மரைவணங்கிப் பச்சைமா லர்ச்சித்த
    செந்தா மரையனைய சீறடியாள் - முந்தியதோர்
    223
    தென்னிலங்கை நாபியாச் சேதுவுரோ மாவலியாப்
    பொன்னிலங்கு நற்சிகரம் பூண்முலையாத் - தன்னையுணர்
    224
    மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த
    வேதவனத் தண்டலைமென் கூந்தலா - மோதாழிப்
    225
    பீடுறுகட் டேவையெனும் பெண்கொடியுந் தானுமா
    வாடுதல்போற் பொற்பந் தடிக்குங்கால் - நீடாழி
    226
    திண்கயி லாசமனஞ் செய்வோன் பணிந்தேத்தும்
    வண்கயி லாச மனமுவந்தோன் - கண்கள்
    227
    ககுபங் கடக்குமொரு காதற் கரும்பின்
    மிகுபங் கடக்குதிரு மெய்யான் - தகைதீர்
    228
    பரராம நாதரையும் பாலித் தருள்வோன்
    வரராம நாதன் மகிழ்ந்து - சுரர்சூழ
    229
    ஆதித்த னம்பொற் குடைமேற் குடையாகச்
    சோதித்தன் பொற்றேரிற் றோன்றுதலும் - மோதும்
    230
    பரவையிரச் சின்ன பரிசதிரா தென்ன
    வுரவை யிரச்சின்ன மூத - விரைவெழுந்து
    231
    தென்ன னடையாளஞ் சேருந் திருவிழியா
    ளன்ன நடையா ளமலன்றேர் - முன்னின்
    232
    றொளியன்னங் காணாத வொண்முடியை மற்றோர்
    களியன்னங் கண்டதுபோற் கண்டாள் - கிளிதான்
    233
    திடமான்முன் காணாத் திருவடியை மற்றோர்
    மடமா னெதிர்காணு மாபோல் - நடமாடும்
    234
    பொன்னடியுங் கண்டு புகழ்ந்தா டிருவழகை
    முன்னடியி னின்று முகந்துண்டாள் - பின்னை
    235
    மதனம் படாதோ வரிக்குயிலி னோசை
    விதனம் படாதோ விளம்பீர் - முதனம்பி
    236
    வந்தவளை முன்ன மதுரையினீர் போய்விற்ற
    தந்த வளையுமக்குத் தந்தவளை - நொந்தவளை
    237
    நாணுங் கலையு நலனுங் கலனுமருந்
    தூணுங் கவர்ந்தமக் கொண்ணுமோ - வேணுமால்
    238
    அந்தத் திருவணையி லன்பா விருக்கின்றீ
    ரிந்தத் திருவணையி லீனமோ - சிந்தை
    239
    திகைத்தகன்று போல்வாளைச் சேர்ந்தருளீ ரென்ன
    நகைத்தகன்று தேர்மே னடந்தான் - பகைத்திருந்த
    240
    சேக்கை யகன்ற செழுங்குயின் மீண்டுவரிற்
    காக்கையுங் காக்கை கருதுமோ - தாக்குங்
    241
    கணைமேற் கிடத்தக் கருதுவாள் போற்பூ
    வணைமேற் கிடத்தினா ளன்னை - கணையால்
    242

    மடந்தை.

    தொடர்ந்துபொருங் காமனுக்குத் தோட்டுணையாய் வந்த
    மடந்தை யொருத்திமலர் மங்கை - அடைந்தவருக்
    243
    கீவினி லைந்தருவா மேகாம் பரநாதர்
    மாவினில் வாழும் வரிக்குயில் - மூவா
    244
    திடைமருதூர் மேயார்க் கினிய நிழலாந்
    தடமருதில் வாளுமிழந் தத்தை - பொடியாடிப்
    245
    பால்வரையா மேனிப் பரமன் வரையான
    மால்வரையில் வாழு மடமஞ்ஞை - நால்வரையாள்
    246
    .கூடற் குருமணிதன் கூட முளைத்தெழுந்த
    வாடற் கடம்பி னமர்பூவை - நாடும்
    247
    இணையிலி தேவை யிராம னடைத்த
    வணையில் விளையாடு மன்னம் - பணியவெழில்
    248
    காட்டுஞ் செருத்தணியிற் காலத் தலர்குவளை
    யேட்டி லிருக்கு மிளஞ்சுரும்பு - நாட்டும்
    249
    மகோததி முத்த மணிப்பவளத் தோடு
    சகோதர வாஞ்சை தரித்து - முகோதய
    250
    மாமதியில் வந்து மணியித ழுக்கருகே
    தாமதியா நின்றனைய தந்தத்தாள் - காமனையாள்
    251
    அத்த னுமையவளுக் காக விரட்டைமுடி
    வைத்த தனைய வனமுலையாள் - மத்தகசம்
    252
    என்னப் படைத்த விளம்பிடி யானைநடை
    தன்னைப் பழித்த தனிநடையாள் - துன்னும்
    253
    அறல்போலுங் கூந்தற் கடர்சோலை நல்குந்
    திறைபோன் மலர்கொய்யச் சென்றாள் - நறைகள்
    254
    துடிபோலு மெல்லிடையாள் சொல்லுக்குத் தோற்றுக்
    குடிபோவ தென்னக் குதிக்கப் - பிடிபோல்வார்
    255
    பின்னின் றிரங்கப் பிணைமலர் கொய்யுங்காற்
    பொன்னின்ற வானுலகும் பூவுலகும் - முன்னின்
    256
    றொளிர்மணித் தேரேறி யும்பர் பெருமான்
    கிளர்மணி வீதிவரல் கேட்டாள் - தளரும்
    257
    இடையென்று மெண்ணா ளிறுக்கியுடுத் தாலு
    முடையென்று நில்லாதென் றோராள் - தடையொன்றும்
    258
    இல்லா தவர்போ லெழுந்தா ளிரண்டிருளும்
    வெல்லா தவர்போலு மெய்வடிவும் - சொல்லாத
    259
    சந்திர சேகரமுந் தானு முமையவளு
    மிந்திர சாப மெனுமழகும் - அந்தக்
    260
    கரும்புயல் வாழ்காள கண்டமுங் கங்கை
    விரும்பி வளர்சடில மின்னும் - இரும்புவனி
    261
    ஆதார மெய்யெல்லா மாகாய மென்பதனைக்
    காதா லறிந்தவள்கண் ணாலறிந்தாள் - சோதி
    262
    இழந்தா ளெழுகடலி னெண்மடங்கு காம
    முழந்தாள் சிலநின் றுரைத்தாள் - தழைந்தலர்ந்த
    263
    குற்றமறு கொன்றைக் குழகன் கடைக்கணித்து
    மற்றமறு கொன்றை மருவினான் - பொற்றபொறிக்
    264
    கோலத்து வண்டுதினங் கூட்டுண்ட பூமாலை
    போலத் துவண்டு பொருமினாள் - சோலை
    265
    வருகாக வன்புள் வளர்த்தகுயில் கூவச்
    சருகாக மெய்யுலர்ந்து சாய்ந்தாள் - அருகே
    266
    மிகுந்த வரைமுலையார் மேவ விழியுட்
    புகுந்தவரை யுட்கொண்டு போனாள் - தகுந்தவரைச்
    267

    அரிவை.

    சாதக ராக்கியந்தச் சாதகரைத் தான்வளர்த்த
    மாதக ராக்க வருமரிவை - தாதுநிறை
    268
    போது நறைக்கமலப் போதுபங்க முற்றதென்று
    சேதுவில் வாழுந் திருமடந்தை - வேதத்
    269
    திறைவன் மணிநாவை யெச்சிலிது வென்று
    மறைபயில் தேவையில்வாழ் வாணி - குறைதோன்ற
    270
    வாசவன் மேனி வடுப்பட்ட தென்றிரா
    மேசுரம் வாழவந்த விந்த்ராணி - மாசிலா
    271
    அத்தனுக் கோடி யருந்தனுவீந் தோனையகன்
    றித்தனுக் கோடிவந்த வின்பரதி - நெய்த்திருண்ட
    272
    கூந்தற் கருமணலுங் கோவா நகைமுத்துங்
    காந்தி மதிமுகமுங் கட்கயலும் - வாய்ந்தகனி
    273
    மூன்றையும் வென்ற மொழியமுத முங்காட்டித்
    தோன்று மலையைத் துலக்குவாள் - தோன்றாத்
    274
    திறலிக்கு வேளுக்குச் செங்கோல் கொடுப்பாள்
    விறலிக்கு நோக்கருளும் வேளை - மறலிக்குக்
    275
    கண்ணான் மகுடங் கவிக்குங் கனிமொழியைப்
    பண்ணார் விறலி பணிந்திருந்தாள் - எண்ணரிய
    276
    மூவேழ் நரம்பு முறையே குரன்முதலாப்
    பாவே ழிசையும் பயில்வித்துப் - பூவை
    277
    முகநீ றிலங்க முளரியோ னாதி
    சுகனீறாத் தெய்வந் தொழுது - மிகவும்
    278
    இறும்பூ தெனச்சங் கிசையாதி யாகக்
    குறும்பூ ழிசையிறுவாய்க் கூட்டிப் - பெறும்பாடல்
    279
    எண்ணூற் றுறையி னிசைவாணர் கொண்டாடப்
    பண்ணூற் றொருமூன்றும் பாடுங்காற் - கண்ணனவன்
    280
    எய்தறுபத் தாறா யிரந்தெய்வ யாண்டுதவஞ்
    செய்து வரம்பெற்ற சீர்பாடி - வையமுடன்
    281
    கால முழுதழியக் கண்ணுதலைத் தாடேடி
    ஞால முழுத நகைபாடி - மாலையாய்த்
    282
    தோளிற் கிடந்த தொகைபாடிக் கண்மலரைத்
    தாளிற் கிடந்த தகைபாடித் - தோளில்
    283
    உதித்தமை பாடி யொருசூல நாவிற்
    பதித்தமை வித்தமையும் பாடித் - துதித்துச்
    284
    சிறந்தமை பாடிநர சிங்கவெறி பஞ்சாப்
    பறந்தமை யெவ்வெவையும் பாடி - அறந்தான்
    285
    வழுவு மிராவணனை மாய்த்த கொலையைக்
    கழுவு மருள்பாடுங் காலைத் - தொழவந்தோர்
    286
    பாரேழும் வெற்பேழும் பாய்பரியே முஞ்சூழு
    நீரேழுங் காரேழு நேரார்ப்பப் - பேராப்
    287
    பெருகு கனைகடலும் பேரியு மார்ப்ப
    வருகுகனை யீன்றோன் வரலும் - கரியபிடிக்
    288
    கன்று நடந்தருகே காமரரி யைத்தொழல்போற்
    சென்று நடந்திருதாள் சேவித்தான் - நின்றிறைவன்
    289
    காயஞ் சிவந்த கவின்கண் டுருகினாள்
    தாயஞ் சிவந்தருகே தாங்கினாள் - மாயன்றன்
    290
    சின்ன மகன்றான் றிருந்திழைமுன் றோன்றினான்
    முன்ன மகன்றான் முழுமுதலோன் - பின்னொருத்தி
    291

    தெரிவை.

    பேர்திகழ் பேரிளம் பெண்ணையெல்லா மாடவருக்
    கூர்திக ளாக்குமொ ருதெரிவை - பேரிருட்கும்
    292
    நாடிய திங்களுக்கு நல்லறிவு வந்துறவு
    கூடிய தன்ன குளிர்முகத் தாள் - நீடாழி
    293
    பண்டு பிரிந்த பவளமு முத்துமெதிர்
    கண்டுகலந் தன்ன கனிவாயாள் - பண்டைமக
    294
    மேருவு மந்தரமும் வெண்கயிலை போலீசன்
    சேரு மிடமாய்ச் சிறந்திருக்கப் - பாரில்
    295
    நிவந்தமுனை யூசியொன்றி னின்றிரண்டு வெற்புந்
    தவஞ்செய் தனைய தனத்தாள் - சிவந்தவிரற்
    296
    பத்துப் பவழங் களையும் பழமென்று
    கொத்து கிளிபோலுங் கூருகிராள் - எத்திசையும்
    297
    கால னடத்துங் கருமேதி யின்கொம்பு
    போல் நெரித்த புருவத்தாள் - ஆலவட்டம்
    298
    கொப்பாக வேள்பிடித்துக் கொண்டாடும் பொன்னூச
    லொப்பாக நின்றாடு மொண்குழையாள் - மெய்ப்பாகுஞ்
    299
    செய்குன்றின் மேலிருந்த சேடியர் தற்சூழ
    மொய்குன்றம் வென்ற முகிண்முலைக்கும் - பெய்கின்ற
    300
    மஞ்சைப் பொருத மலர்க்குழற்கு மால்கொண்டார்
    நெஞ்சைப் பொருத்திரு நெற்றிக்குங் - கஞ்சந்
    301
    தகுமான நீங்கவென்ற தாளுக்கு மன்று
    வெகுமானஞ் செய்யும் விதம்போல் - நகையாய்த்
    302
    .துலங்காரஞ் சீதேவி சுட்டிசிலம் பாதி
    யலங்காரஞ் செய்யு மளவில் - இலங்கிய
    303
    கூவிரியால் விண்விரியக் கூரா ழிகள்பதிந்து
    பாவிரி சேடன் படம்விரியத் - தேவருல
    304
    கச்சாணி யந்தே ரணிகுடைக்கு மப்பாலே
    கைச்சா ணிருசாணே காணுமென - முச்சகமுங்
    305
    கோத்த மகமேருக் கூண்டனைய தேர்மீதில்
    வாய்த்தமக தேவன் வரல்கேட்டாள் - பூத்த
    306
    கமலங் கதிரோனைக் கண்டலரு மன்றே
    அமலன் வரல்கேட் டலர்ந்தாள் - உமைபாகன்
    307
    புந்தியில் வாழப் புறந்தேடு மாந்தரைப்போல்
    வந்தீயர் சூழு மறுகடைந்தாள் - சந்தித்தாள்
    308
    சங்கங் கடைந்தணியுந் தாழ்குழைப் பெம்மானை
    அங்கங் கடைந்தா ரயனிற்ப - வெங்கஞ்சன்
    309
    காட்டு மலரைவென்ற கண்ணன் கரமலர்
    சூட்டு மலரைத் தொழுதிரந்தாள் - ஏட்டையுறும்
    310
    அன்ன மறியாம லாகமெலா மென்பானீர்
    பின்னைமால் வேதனையும் பெற்றீரே - முன்னியபே
    311
    ராசை யுடையீரே யண்டருக்குத் தோற்றீரே
    மாசு மதியைவெல்ல மாட்டீரே - யீசரே
    312
    தென்றலோ வம்ம திருமேனி தீண்டிவிடு
    மென்றலோ வெம்பணியெ லாமணிந்தீர் - வென்றி
    313
    மதனை யெரித்தீரே மாதிடஞ்சேர் காம
    மதனை யெரித்திடவொண் ணாதோ - விதனஞ்சேர்
    314
    கொள்ளை விடமாங் குழலோசைக் காவேய்க்குப்
    பிள்ளை புகுந்து பிழைத்தீரே - வெள்ளை
    315
    அயில்வாயி லுங்கொடிதென் றல்லவோ கூவுங்
    குயில்வாய் தனைநெரித்தீர் கூறீர் - கயல்பாய்ந்
    316
    திமைக்குங் கடலேழி லேகாந்த ராமன்
    அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர் - உமைக்கொம்
    317
    பிசையு மொருபா லிராதுவிடை யேறீ
    ரசையுமணி யோசைக்கா வன்றோ - திசைதோறு
    318
    மாலைப் பொழுதடரும் வந்திப் பொழுதென்றே
    காலைப் பொழுதையொரு கண்வைத்தீர் - ஞாலத்தில்
    319
    நும்ம விரக நுமக்கிவ்வா றாமாகி
    லெம்ம விரகமெமை யென்செய்யா - திம்மெனவந்
    320
    தாளீர் புயத்தி லணையீர் படுந்துயரங்
    கேளீ ரெனநெருங்கிக் கிட்டுதலும் - வேள்போருந்
    321
    தேராமல் மாலையருள் செய்யாமற் றேரானுந்
    தாரானு நானென்றே தானகன்றான் - ஊரறிய
    322
    அன்றுந் தனித்தா ளிலம்புகுந்தா ளவ்வாறே
    யின்றுந் தனித்தா ளிலம்புகுந்தாள் - நன்றென்று
    323

    பேரிளம்பெண்

    கைத்தகாய் தின்று கனியை முனிவார்தம்
    பித்தகல வந்துதித்த பேரிளம்பெண் - பொய்த்த
    324
    வலரை விரும்பா தரும்பை விரும்புஞ்
    சிலரை மயறீர்க்குந் தெய்வம் - கலைமதியை
    325
    விண்கூடு பாம்பருந்தி வெண்பிறையைத் தீண்டாமை
    கண்கூடாத் தன்மேன்மை காட்டுவாள் - பண்கூட
    326
    மூவரும் பாடு முதுதமி ழின்பத்தால்
    மேவருந் தண்பருவ மேம்படுவாள் - காவிரிவாய்ச்
    327
    சென்று திருவானைக் காவிற் சிவனைமதக்
    குன்று வணங்கக் குனிந்ததோ - நின்றநிலை
    328
    விட்டுத் திசைக்களிற்றை வெல்லவென்று காஞ்சிபுர .
    மட்டு மொருபயணம் வந்ததோ - இட்டிடைதான்
    329
    என்று முறியா திருக்கத் தலைகீழா
    நின்று தவஞ்செய்யு நீர்மையோ - வொன்றோடொன்
    330
    றெய்யா வழக்கிட் டெதிரே மறிப்பிருந்து
    பொய்யா நடுநிலையிற் போவதோ - கையாற்
    331
    றகைந்த வடிக்கனத்தைத் தத்த முகங்கள்
    பருந்தெடுத்துக் கொண்ட படியோ - மிகுந்துவரும்
    332
    தொண்டருக்கா மூர்க்கர் துணிந்தாடுஞ் சூதுகள்போய்ப்
    பண்டு வயிற்றிற் படுப்பதோ - விண்டு
    333
    புகழ்ந்திடம் போதுநின்ற போர்மா ருசிபோல்
    முகங்கவிழ்ந்த கொம்மை முலையாள் - மகிழ்ந்துவரும்
    334
    வேட்டுணை யாடவரை வென்று சயங்கொள்ளத்
    தோட்டுணை தேடுந் துணைக்குழையாள் - நாட்டுறையும்
    335
    மாந்தரையுந் தேவரையும் வாளமர் செய்வதற்குக்
    கூந்தலரண் போய்ப்பார்க்குங் கூர்விழியாள் - வாய்ந்த
    336
    பளிக்கு நிலத்தும் பதித்திடுகண் ணாடி
    விளைக்கு மொளிப்பசும்பொன் வீட்டும் - ஒளித்தொளித்துப்
    337
    பூவைய ரன்பு பொருந்தவிளை யாடுங்கால்
    தேவை யரன்பவனி செப்பினார் - பாவை
    338
    பழுதாதல் கூறாத பண்டை மறைபோ
    லெழுதாத வேற்கண் ணிணையும் - எழுபிறவி
    339
    வேலை யகன்று விடுஞ்சைவர் போன்றுதிரு
    மாலை யகன்ற மலர்க்குழலும் - சீலமுறும்
    340
    முன்னவரை வெல்லு முனைப்படைவேள் போற்கரும்பு
    தன்னை வரையாத் தனதடமும் - மன்னினாள்
    341
    என்ன விருக ணெழுதாண் மலர்முடியாள்
    கன்ன லெழுதாள் கடிதெழுந்தாள் - அன்னங்கள்
    342
    பின்பதறி வானைவிட்டுப் பேர்ந்தோடச் சென்றாளுள்
    ளன்பதறி வானை யடிபணிந்தாள் - வன்பிலங்கை
    343
    ஏற்றமுறு வேந்து மிருவர் முயலகருங்
    கூற்றமு மஞ்சுங் குரைகழலும் - தோற்றுபுலி
    344
    தான்முக னஞ்சு தளரும் திருவரையு
    நான்முக னஞ்சு நகநுனியும் - கூன்முதுகுக்
    345
    கச்சபமும் வெள்ளைக் கருமாவும் பச்சைநிற
    மச்சமு மச்சமுறு மார்பிடமும் - உச்சமுறும்
    346
    முப்புர மஞ்சு முறுவலுங் காமவே
    ளப்புர மஞ்சு மணிநுதலு - மொப்புரையா
    347
    மோகப் பணியு முதிர்பணியும் பாரிருளு
    மாசுத் திருளு மடர்விழியும் - லோகம்
    348
    முடிச்சிட்ட நாளின் முகுந்தனயன் சென்னி
    முடிச்சிட்ட மாலைமுடியுந் - துடிச்சிட்ட
    349
    விண்ணவ ரஞ்சுமந்த வெண்பொடிப் பூச்சுமன்ப
    ரெண்ண வரஞ்சுமந்த வின்னருளுங் - கண்ணாரக்
    350
    காண்டோறுங் காண்டோறுங் காயங் களிப்பெய்திப்
    பூண்டோறும் பூண்டோறும் பூட்டவிழ்ந்தாள் - ஆண்டவரே
    351
    மாற னடித்த மதுரையிலே யஞ்சாமல்
    மாற னடித்த மதம்பாரீர் - நீறணியும்
    352
    வெட்ட வெளியாரா மேனியா ரோரிடையன்
    வெட்ட வெளியாராய் விட்டாரோ - முட்டவருள்
    353
    தங்கலா லேறு தணவார்க்குச் சாக்கியனார்
    தங்கலா லேறு சகித்ததோ - இங்கிவர்க்குக்
    354
    கண்ணிடந் தப்புமெனக் காலா லுதைத்தொருவன்
    கண்ணிடந் தப்புவதுங் காதலோ - பெண்ணமுதம்
    355
    அங்கிதஞ் செய்ததுபோ லங்கைவளை யால்முலையா
    லங்கிதஞ் செய்த தடுக்குமோ - இங்கிதந்தான்
    356
    என்னென் றுளைந்தா ளிறைவர் திருமேனி
    பொன்னென்றல் பூவென்றல் பொய்யென்றாள் - பின்னொன்றுங்
    357
    கூறத் தரமன் றெனக்குழைந்தாள் கொன்றையின்மே
    லாறத் தரமன்றென் னாசையென்றாள் - மாறற்ற
    358
    அம்புயத்தாள் போல்வா ளருளுமழ குங்கண்டு
    செம்புயத்தாள் மாலை சிறிதளித்து - நம்பெருமான்
    359
    பாரிறைவ னும்பர் பதியிறைவன் றென்றேவை
    யூரிறைவன் போந்தா னுலா.
    360

    வாழி.

    சேது நகர்வாழி தீர்த்தங்கள் வாழிகந்த
    மாதனம் வாழிபர மன்வாழி - காதலித்தாய்
    வாழி சிவசமயம் வாழிதலத் தார்வாழி
    வாழிமனு வேந்தன் வளம்.

    தேவையுலா முற்றிற்று.

    இராமநாதர் திருவடித் தாமரைகள் துணை.
    ~~~~~~~~~~~~~~~~

    அரும்பத உரைகள்

    காப்பு.
    ஆதியுலா-சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்தஉலா. தேவை-இராமேசுவரம்; நூலின் 19,121,226,248, 360-ம்
    கண்ணிகளில் காண்க. மூன்றாமடியில், 'தந்த' என்பது முதலியன தாளவொற்றுக்கள். சொல்லத்தாள் காதலாமென்க.

    நூல்.
    1. மால், எழுவாய்.
    2. உபதேசம் பெற்றதை கூர்மபுராணம்,பூர்வகாண்டம்,31-ம் அத்தியாயத்திற் காண்க. செபம்-ஜபம்.
    3. மதலையை-சாம்பவதியின் பிள்ளையை, ஸாம்பனென்பது சிவபெருமானுடைய திருநாமம்.
    4. வில்வோதகேச்சுரம் ஒரு சிவஸ்தலம். ஸ்ரீகண்ணபிரான், நரகாசுரனைக் கொன்று தேவலோகஞ் சென்று பாரிசாத விருக்ஷத்தை அபகரித்தபின்பு பாரியாத்திர மலையையடைந்து, அதற்கு வரங்கொடுத்துவிட்டுத் தாம் நினைத்தமாத்திரத்தில் வந்தகங்கையில் ஸ்நாநம் செய்து கங்காதீர்த்தமும் வில்வமும் வைத்து அவற்றிற் சிவபெருமானை ஆவாஹனஞ்செய்து, தாம்கொணர்ந்த பாரிசாத மலரகளால் அருச்சனைபுரிந்து துதித்தனர். இதனால் அவ்விடம் வில்வோதகேசுவரமென்று திருநாமம் பெற்றது. இது, பாரதம், ஹரிவம்சம், விஷ்ணு பர்வம், 75-ம் அத்தியாயத்திற்கண்டது.
    -----------------------------------------------------------
    5.வீதிவிடங்கர்-திருவாரூர்த்தியாகராசர்
    7.தலைக்கீடு-வியாஜம். என்னை-என்ன வியப்பு; ஓர், இடைச்சொல்.
    9.காலவரை-காலவமுனிவரை காலஎல்லை. சக்கரதீர்த்தமுதலிய 24-தீர்த்தங்களின் விசேடங்களையும், ஆடிப்பேறுபெற்றோர் இன்னார் என்பதையும் சேதுபுராணத்துள்ள சக்கர தீர்த்தச்சருக்க முதலியவற்றால் முறையே அறிந்து கொள்க. நூலாசிரியர் ஒவ்வொரு நயம் புலப்பட
    24-தீர்த்தங்களையும் முறையே கூறியிருக்கும் அழகு கூர்ந்துணர்ந்து இன்புறற்பாலது.
    10.பேதையொருபாகன் போல்-சிவபெருமான் பேயோடாடுதல்போ ல. பேய்-சுதர்சனனாகிய பேய்.
    11.திடமதி-ஒருவன் பெயர்; மறு-அவனடைந்த பாவம்; சந்திரற்குள்ள களங்கமென்பது மற்றொரு பொருள்.
    12.பட்டம்-குளம்,பதவி.கோது-இந்திரனைச் சார்ந்திருந்த பிரஹ்மஹத்திதோஷம்.
    13.தேயமிழந்தேன்-மனோசவனென்னும் அரசன். கவந்தம்-நீர்.
    14.'ஏகாந்தராமம்' என்பது இராமேசுவரத்திலுள்ள ஓரிடம்; இராமர் இராவண சங்காரத்திற்குரிய காரியங்களைப் பலருடன் ஆலோசித்துக்கொண்டிருக்கையிற் கடல்முழக்கம் ஒருவர் பேசியது ஒருவர்க்குக் கேளாமலிருக்கும்படி செய்தமையின், அவர் கோபிக்க, உடனே கடல் ஓசையின்றி அடங்கியதனால், அவ்விடத்திற்கு ஏகாந்தராமமென்றும் ஏகாந்தராமநகரம் என்றும் அங்கு எழுந்தருளியிருக்கும் இராமபிரானுக்கு ஏகாந்தராமனென்றும் பெயர்கள் உண்டாயின; "மாயோ னடக்கும், நெடுங்கடல் போலடங்கிநிற்க" என்றும், "இமைக்குங் கடலேழி லேகாந்த ராமன், அமைக்குங் கடல்பார்த் தமர்ந்தீர்" என்றும் பின்வருதல் காண்க; 91,317
    -----------------------------------------------------------
    15. வேதா-பிரமர்.மகவான்-யாகத்தையுடையவர்; பிரமதேவரை இந்திரனாகச் செய்ததென்பது மற்றொரு பொருள்.
    16. தன்மசகன்-தருமசகன்; இவன் ஓரரசன்.நூறுமகவான்-நூறு பிள்ளைகளையுடையவன்.தன்மசகனென்னு மொருவனை நூறு இந்திரர்களாகச் செய்ததென்பது மற்றொருபொருள்.
    17. மானதவாவி-கைலை அல்லது இமயமலையிலுள்ள ஒரு தெய்வப்பொய்கை. தெய்வயானை-கக்ஷுவானென்பவனைத் தாங்குதற் பொருட்டுச் சிவாஞ்ஞையால் தோன்றிய யானை. எல்லை-குளம்;"மதிக்கு மகத்தியனார் வாவிவந்த வேழத், துதிக்கையனைய துடையாள்" என்பர் பின்னும்;222.
    18.மெய்-உடம்பு. விசயன் தமையன்- தருமபுத்திரர். பொய்-துரோணாச்சாரியார் இரக்கும்படி கூறிய பொய்ம்மொழி. கழுவல்-நீக்கல்.மெய்கழுவ வந்தவனுக்குப் பொய்யைக் கழுவியதென்பது குறிப்புப்பொருள்.
    19. தேவை-இராமேசுவரம். பலதேவர்-பலராமர். ஒருதேவைப்பல தேவர்கள் வணங்கினார்களென்பது ஒன்று.
    20. கூடு-உடம்பு.சுகம்-சுகமுனிவர். அழுக்கு-மனமாசு. கூட்டைக்கழுவக் கிளி அழுக்குத் தீர்ந்ததென்பது மற்றொரு பொருள்; "நீடுசடா, தீர்த்த மொருசுகத்தின் சென்மந் துடைத்தமைகேட், டார்ததசுகமெல்லா மடைந்ததென" என்பர் பின்னும்; 115,116
    21. கூற்றன்மகன்-தருமபுத்திரர். குபேரன் மகனாக-பெருஞ்செல்வ முடையவனாக. யமன் பிள்ளையைக் குபேரன் பிள்ளையாக்கியதென்பது மற்றொன்று.
    -----------------------------------------------------------
    22. தீயில்தண்ணீர் தோன்றுவது முறையாக இருப்பத் தண்ணீரில் தீ முளத்ததென்றது வியப்பு.
    22-23. பூமியிலே தங்கு மறையான் - ஹரிஹரனென்னும் அந்தணன். விசும்பில் மறையான் - சூரியன். முன்னர்க்கூறிய சக்கர தீர்த்தம் வேறு, இது வேறு.
    24. மாலைமுடி - மாலையையணிந்த தலை, அறுக்க - அறுத்தலால், பிரமஹத்தியனது அடியை.
    25. நீர்க்குள்ளே புழுங்கினோன் - வற்சாபமுனிவர். புழுக்கம் - நன்றி மறந்தேமேயென்னு மனவெப்பம். பெருவெள்ளத்தினுள்ளே முழுகியும் தீராத வெப்பம் ஒரு சங்குநீராலே தீர்ந்ததென்பது மற்றொரு பொருள்.
    26. பங்கு ஒருவன் - முடவனாகிய இரயிக்குவ முனிவன். வையம் - வண்டி. முந்நீர் - கங்கை யமுனை கயையென்னு மூன்று தீர்த்தங்கள்; காலில்லாதவன் பூமியில் ஓடிவந்து கடலை நீந்தினானென்பது மற்றொரு பொருள்.
    27. மா மிக்காய் - பெருமை மிகுந்து. மா மன் - திருமகள் கணவராகிய கண்ணபிரான்; மாமனைக் கொன்ற - தம்முடைய அம்மானாகிய கஞ்சனைக் கொன்ற. சேமித்திடா - பாதுகாவாது தொலைத்த.
    28. நீர் தோய்ந்தோன் - புரூரவா. உருப்பசி - ஊர்வசி, நீராடியவனுக்கு அச்சத்தைத்தரும் பெரும்பசி தீர்ந்ததென்பது குறிப்புப் பொருள். ஒருவன் - சுதரிசனனென்பவன்.
    29. அரி - குரங்கு. சம்பு - நரி. மேற்படி புராணம், கவிசம்புச்சருக்கம் பார்க்க. திருமாலையும் உருத்திரரையும் இந்திரனாகச் செய்ததென்பது குறிப்புப்பொருள்
    -----------------------------------------------------------
    31. சலதோடம்-வஞ்சனையாலுளதாகியபாவம்; அது வினதையை அடிமையாக்கியது-பாலாவி- பால்வேது.ஜலதோஷத்தைத் தணித்ததற்ரு இது பாலாவியாயிற்றென்பது மற்றொரு பொருள்.
    32. நாண்-நாணம். அம் புருவம்-அழகிய புருவம். நங்கை-அரம்பை. சிலையுருவம்-கல்வடிவம், கவிகுண்டம்-கவிதீர்த்தம். நாணி, அம்பு, வில் இவற்றின் வடிவங்களென்பது மற்றொன்று.
    33. அரிதலை-அரிந்ததலை. திருமாவின்தலையைப்பிரமருடைய உடலிற் சேர்த்ததென்பது ஒன்று.
    34. பழம்-பலாப்பழம்.
    36.'தேன்போலிழைந்த' என்றும்பாடம்
    35-36 கனியின் தேன்போல் நிறைந்தவென்க.மானும்போருக்குரிய வாளும்.
    37. மச்சம் அயில்-மீனும் வேலும். மலைவளர் காதலி-அம்பிகையின் திருநாமம்; காதலியென்றும் வழங்கும்;"காதலிதேர்" என்பர் பின்; 108.மலைக்கு மயில் உரியது.
    38. நிறனிறை
    39. திருக்கந்தமாதனம்-ஒருமலை அஃது இராமநாதர் எழுந்தருளியிருக்குமிடம்;
    "கந்தமாதனத்திலருச்சி தேத்து,
    மேந்துபுனற் சடிலமுடி யிராமநாதன்"
    என்பதனாலுணர்க (சேதுபு,கடவுள்.2) இருக்கு அந்தம்-வேதத்தின் உச்சி.
    -----------------------------------------------------------
    40. உங்காரகாலவைரவரென்பது ஸ்தல வைரவர் திருநாமம். பெயர்க்கு - புகழ்க்கு.
    41. சேதுவந்த மாகாளி - சேதுபந்த மாகாளி; ஸ்தலதேவதை.
    42. சேதுமாதவருடைய கால் விலங்கை மாற்றாமை, மேற்படி புராணம், சேதுமாதவச் சருக்கத்தால் அறியலாகும்.
    43. கடலை மறி.
    44. கோலு கலிங்கம் - சுற்றப்பட்ட ஆடை. கொட்டுள் கையும் வாலுக லிங்கம் - மணலாலாகிய சிவலிங்கப் பெருமான்; என்றது, இராமநாதருடைய திருமேனியை; ”மாதவர் வகுத்தவேலை வந்தது நிறுப்பாய் வல்லை, சீதைவா லுலகத்தாற் செய்த, சிவனருட் குறியையென்றார்” என்பதனாலுமுணர்க; (சேதுபு. இராமனருச்சனை. 85.)
    45. அகங்காரமுற்றிருந்த பல தேவர்களுக்குமுன்பு இயக்கவடிவம் கொண்டு சென்ற சிவபெருமான் நாட்டிய துரும்பை அசைத்தற்கு வாயுதேவன் வலியில்லானானமையும், எடுத்து விடுவதற்காக இராமலிங்கத்தை அனுமார் பலமுறை அசைத்துப்பார்க்கவும் அஃது அசையாதிருந்தமையும் இங்கே அறியற்பாலன; முறையே கந்தபுராணம், காமதகனச்சருக்கம், 41-ம் பாடலையும், சேதுபுராணம், இராமனருச்சனைச் சருக்கம், 151 - ம்பாடல் முதலியவற்றையும் பார்க்க.
    46. ஆபரணம் பாம்புகளானமையின், பாதலம் ஆபரணப் பையாயிற்று.
    47-48. அன்னம் - பிக்ஷான்னம். பிரமருக்குக் கொடுத்ததன்றி அவர் தலைக்கும் பதுமாஸனம், அன்ன வாகனம் கொடுத்தருளினரென்பது மற்றொரு பொருள்.
    -----------------------------------------------------------
    49. மதியார்-சந்திரன். உதயாத்தமனமொழித்தது, ஒரேவிதமாக இருக்கும்படி செய்தது.;
    "கருமுடிவைத் தருகால தற்பமெலாங் கடப்பவுநின்,
    திருமுடியிற் பிறைசிறிதுந் தேயாது வளராதே"
    என்றார்; (அருணைக் கலம்பகம்,1)
    50. உறவு கூட்டல்- சூரியன் இருளை அறியும்படி செய்தல்; கண் போனமையின், அவன் இருளை அறிந்தான்.
    50-51. புண்டரிகக் கண்ணினான் - திருமால். கண்ணிலா அந்தகன்- கண்ணோட்டமில்லாத யமன். காட்டியது - மார்பிலுதைத்தது. நல்லகண்ணுடையானுக்குத் தோற்றாத பாதம் குருடனுக்குத் தோற்றியதென்பது மற்றொன்று.
    52. விடயமன்று இக்கார்முதலை. விடை - திருமால், விடுத்தல்.
    54. சாரூபம் - செத்த உருவம். பூசித்தவனைக் கடைக்கணித்துச் சாரூபங் கொடுத்தருளின ரென்பது ஒன்று.
    55. புலி - வியாக்கிரபாதர், ஆட்டை-ஆட்டினை, நடனத்தை அரா -பதஞ்சலி.
    56-57.ஒரு மழு, இருகால், முக்கண், நால்வேதம், ஐந்துதலை, ஆறு சமயம், ஏழுலகம், எட்டுத்திக்கு, ஒன்பது நிதியெனவே இருத்தற்குரியவைகள் மற்றொருதொகைப்பொருள்களாகத் தொனிக்கும்படி இக்கண்ணிகளில் கூறியிருத்தல் வியக்கற்பாலது; இருமழு - பெரிய மழு. முக்காலன் - மூன்று காலங்களையுடையவர். ஆற்கண்ணன் - ஆலமரத்தின்கீழே எழுந்தருளியிருப்பவர். வேதமைந்தன் - வேதத்தை அருளிச்செய்த வலியையுடையவர். மைந்து - வலி. ஆறு - ஆகாய கங்கை. எழு - எழுகின்ற, நெட்டுலகம் - நீண்ட உலகங்களையும், ஒன்பது உதிக்கும் - ஒன்பதாக உதிக்கப்பெற்ற. பழுது அகல் இன்பத்து நிதி - பழுதகன்ற இன்பத்தைச் செய்யுநிதி.
    -----------------------------------------------------------
    58. என்பணி - என்னுடைய பணிவிடை, என்பு அணி.
    59. நகம் - மலை, உகிர். சகற்பதி - திருமால்.
    60. பூசித்திரு, ஏவல். பாசம் - அன்பு.
    61. பொற்கொடி - திருமகள், பொன்னாண். சொல் - புகழ்.
    62. பருவதவர்த்தினி - அம்பிகை திருநாமம். ஆழி - சக்கரம்.
    62-63. ரகுநாத பூபாலன் - ரகுநாதசேதுபதியார். இவரைத் திருமாலாக உட்கொண்டு, 'ஆழியருள்' என்றார்.
    66. ஓர் எட்டு - எட்டுத்திசைகள். புல் ஆடை - புலித்தோலாகிய ஆடை.
    67. விசயரகுநாத சேதுபதி - இந்நூலாசிரியர் காலத்திருந்த அரசர்; "தருத்தேர் விசய ரகுநாதன் றங்கத் திருத்தேர் வடமுகுர்த்தஞ் செய்ய" என்பர் பின்னும்; 138.
    68. இறைப்பொழுதும் - சிறிதளவும். ஈசை - உமாதேவியார்.
    69. இருவர் - கம்பனர், அசுவதர ரென்பவர்கள். கேட்பனபோல் - கேட்பனவாகிய பாம்புகள் போல். பாம்பு இசையை அறிதற்குரியது.
    -----------------------------------------------------------
    70. சண்டன் - யமன்.
    71. கட்டிப்பிடித்தோன் - மார்க்கண்டேயர்.
    72. தினமணி - சூரியன். கனல் விழியை - கனலுகின்றகண்ணை.
    74. மெய்யாள் - உமாதேவியார். வேணியான் - கங்கை. கை - அலங்காரம்
    76. வாணன் - வாணாசுரன். பல சதம் கை - பலநூறாகிய கைகள்; ஆயிரம் கைகளையுடையவனாகிய வாணன் சிவார்ச்சனை செய்துவந்தவன். வாணன் சதங்கையணிகள் பலவற்றையணிந்த திருவடியென்பதும் ஒன்று.
    77. இதுமுதல், திருச்சாந்தணிதல் கூறப்படும்.
    78. சேகு - வயிரம்.
    79. இராமநாதரது திருமேனி, சீதையால் அமைக்கப் பெற்றது; (சேதுபு - இராமனருச்சனை.85.106)
    80. மன்னை - கழுத்து. கொண்டலார் - மேகம்போல்வாராகிய இராமர்.
    -----------------------------------------------------------
    82. கையிற் கரும்பு அணிவாள் - உமாதேவியார்.
    84. இலேபணம் - பூச்சு. சாந்தால் - திருச்சாந்து அணிந்தமையால்; அது கருமையுடையது.
    85. சந்திரமண்டலத்தில் திருமால் எழுந்தருளியிருக்கின்றனர்; இதனை,
    "ஆற்குழை, யோவர வோவாயர் பாடி யருமனையோ,
    பாற்கடலோதிங்க ளோதங்கு மாவம் பலபலவா,
    மாற்கமு மாகிநின் றார்மாதை காதர் வலங்கொள்பம்பை,
    மேற்கரைக் கோயில்கொண்டார் புரஞ் சீறிய வெங்கணைக்கே"
    என்பதனா லுணர்க; (திருவாமாத்தூர்க் கலம்பகம் - 81)
    88. இரண்டு- பச்சைநிறமும் சிவப்புநிறமும்.
    91. மாயோன் - இராமர்; இவர் கடலோசையை யடக்கினமை; இந்நூல், 14-ம் கண்ணிக்குறிபாலுணரலாகும்.
    -----------------------------------------------------------
    95. சேது, சேதுபந்தமெனவும் சேதுவந்தமெனவும் வழங்கும்.
    97. ஆராமம் - சோலை.
    99. சிவராசதானி - ச்ரீ காசி.
    100. 'ஆதிகள்' என்றதனால், வேதவனமுனிவனால் வைப்பிக்கப்பெற்ற வேதவனச் சோலையும் கொள்ளப்படும்; பின் "மாதவனாம் வேதவன மாமுனிவனால் வைப்பிக்கப்பெற்ற வேதவனச் சோலையும் கொள்ளப்படும்; பின் "மாதவனாம் வேதவன மாமுனிவன் வைப்பித்த, வேதவனத் தண்டலைமென் கூந்தலான்" என்பதனாலுணர்க; 225.
    107-108. திருமாலுக்கும் திருத்தேர்க்கும் சிலேடை; ஆழி - சக்கரம், உருளை, வடம் - ஆவிலை, தேர்வடம், திருவென்னு மாதுபதி - திருமால் போலும் தேர்.
    -----------------------------------------------------------
    110. ஆதித்தேர் - பூமி
    114. வாலிபிதா-'ரிக்ஷரஜஸ்' என்பவன்; மிதித்த ஆடவர்கள் உடனே மகளிர் வடிவமடையும் இடமொன்றை மிதித்து அவன் பெண்வடிவமடைந்தான்; கூர்மபுராணம், அகத்தியர் இராவணன் மாபுரைத்தவத்தியாயம்.
    116 - ம் செய்யுளைப்பார்க்க.
    115. சாபம் - பெண்வடிவமடைகவென்றது.
    116. சுகம் - கிளி, சுகமுனிவர்.
    117. ஈன்றதலம் - பூமியின் ஒரு பகுதி; ஏனையிடம் - பூமியிலுள்ள மற்றையிடங்கள்.
    118. கோ - அரசன்.
    119. சீமுதம் - மேகங்கள்.
    -----------------------------------------------------------
    121. மூவர் - இராமர்,பலராமர்,கண்ணபிரான்
    124. ஆகாயம் நீலநிறமுடையதென்பது கவிகளின் மதம்
    126. ஆசை - திசைகள். நரவாகனமுடையோர், நிருதியும் குபேரனும்.
    127. சூரியன் முதலிய ஒன்பது கோள்களின் தேர்களிற்கட்டிய குதிரைகள், முறையே, '7,10,8,8,8,10,8,6,4' ஆதலின், 'எழுபத்தொருகுதிரை' என்றார்; (கூர்மபு-ஆதவர்கதிர்ச்சிறப்புரைத்த, 11,12,13.)
    129. எழுமடவார் - சத்தமாதர்கள்; நால்விலங்கும் மூன்றுபுள்ளுமென்க; எதிர்நிரனிறை.
    130. இளம்பிடிமான் - இந்திராணி.
    131. எழுவர் அரமாதர் - அரம்பை முதலிய எழுவர்; 'எழுவாரமாதர்' என்றும் படித்தற்கிடமுண்டு.
    -----------------------------------------------------------
    133. சூரியன் மனைவியர் நால்வர், சஞ்சை, இராக்கினி, பிரபை, சாயையென்பார்; (கூர்மபு. சூரியன் மரபுரைத்த. 3-6)
    133-134. சென்னி அசமானவர் - தக்கன்
    135. கோலம் ஒடுங்கு அரா, கோலமொடும் கராவெனப் பிரித்துப்பொருள் கொள்க; கரா - முதலை. வாழ்வித்த மூவர் - திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய மூவர்.
    136. ஓரிருவர் - திருவாதவூரடிகள், அரிமர்த்தனபாண்டியர்.
    138. தருதேர் - கற்பகமும் ஆராயப் பெற்ற
    140. வைசயந்தி - பெரியகொடி கட்டப்பெற்றதும் வீட்டின் முன்புறத்துள்ளதுமான மாளிகை.
    141. கலாநிதி - சந்திரன்
    142. தா - கேடு. 'தாமின்மினிகளும் வந்து' என்றும் பாடம்.
    -----------------------------------------------------------
    144. பாடகம் - பாடுகின்ற இடமாகிய கழுத்து, ஒருகாலணி.
    145. சதங்கை - ஓரணி. இரண்டு கைகளில் நூறுகைகளைத் தரிப்பாரென்றும் ஒன்று தோற்றும்.
    151. வில்லங்கம் - வில்லின் அங்கம்; வில் - மேரு; வேறுபாட்டுக் குணமென்பதுமொன்று.
    152. 'உமது நாண்' என்றது பாம்பை.
    153. பெய்வளை - அம்பிகை.
    155. வெள்ளைப்பழம் - சந்திரன்
    -----------------------------------------------------------
    157. இளையமருமகளார் - இரதி.
    162. போர் அம்பு அஞ்சு எய்யும்.
    163. கௌரியம் - கிரௌரியம்; குரூரத்தன்மை
    166. சாக்கியர் - சைனர்; (திருவாலவாயுடையார் திருவிளை. 38,50)
    167. பைநாகம் - சேடன்
    167,168. கைநாகபங்கன் - சிவபெருமான்.
    168. செங்கனி - காசிபனென்பவன் பரிக்ஷுத்துவுக்குக் கொடுத்த இலந்தைக்கனி.
    169. ஊரன் - சுந்தரமூர்த்தி நாயனார்.
    -----------------------------------------------------------
    173. மட்டித்து - சுழன்று.
    175. கிஞ்சுக பத்திரம் - முள்ளு முருங்கைப் பூவின் மடல். சிருக்கு - ஓமஞ்செய்தற்குரிய ஒருகருவி
    180. தனுக்கோடி - கோடி உடம்புகள், ஒரு தீர்த்தம்.
    182. நீலாழி - கரியகடல்; சேதுவுள்ள கடல்.
    -----------------------------------------------------------
    184. சின்னம்- ஒருவாத்தியம். இதிற் பேரொலி சிறிய வொலி யென்பதுமொன்று.
    186. வேதாதி-பிரமர். இவன் மேம்பட்டமைக்குக் காரணம், அடிமுடியைத் தரிசித்தது.
    187. நின்று இனையும்
    188. உமை விழியென்று-உமைவிழி போல்வதென்று, அம்மானும்-சிவபெருமானும்.
    190. ஆணி அறுகை- ஆணிவேரறுதல்
    191. சும்மாது-சும்மா; "சும்மாது சிரந்தூக்கி" (திருவிளை. பரிநரி 41)
    192. அருவி-அரூபத்தையுடையார்; இராமநாதர்.
    193. இந்தவிசை-இந்தமுறை
    194. பதம்-மலரும் பருவம், விரும்பும் பருவம்.
    -----------------------------------------------------------
    195. துச்சம் - இழிவு
    196. வேளை - காலம்.
    200. பிள்ளையார் - திருஞான சம்பந்தர்
    201. வாகீசர், திலகவதியாராற் சைவ சமயத்தைச் சார்ந்து பேறுபெற்றமை இங்கே அறியற்பாலது.
    206. வண்டில் - உருளை. கொண்டல் - இராமர், மேகம்
    -----------------------------------------------------------
    208. ஆறு பிறை - ஆறும் பிறையும்.நூறு விழி - சுழித்த கண். ஆறு பிறை, நூறுகண்க ளென்பன இதில் வேறொரு பொருள்.
    210. ஆயன் - திருமால்; வேடன் - கண்ணப்பர். ஆயனை வேடனுடைய தம்பியாகச் செய்ததென்பது இதிற் குறிப்புப்பொருள்; கண் சாத்தியது இங்கே அறியத்தக்கது.
    212. தோற்றான் - தோல்வியுற்றான், கண்ணுக்குப் புலப்படான்.
    213. தரு பிறந்த - கற்பகம் தங்கப் பெற்ற
    214. அண்ட மனையும் - அண்டமாகிய மனையும்.
    215. அன்பு இறையளவும் நீங்காத
    217. கோன்கன்று - மனுநீதிச் சோழருடைய குமாரராகிய வீதிவிடங்கர்.
    -----------------------------------------------------------
    219. ஈன்றவர் - சிவபெருமான்; அவர் திருநெல்வேலியில் மூங்கிலடியில் முளைத்தருளினமை இங்கே அறிதற்பாலது.
    220. மேருவின் தென்பாலும் கந்தமாதனமென்று ஒருமலையுண்டு; (கந்த. அண்டகோச. 31.)
    221. நாடு அமரும். மா டமருகம் - பெரிய உடுக்கை.
    222. அகத்தியனார் வாவி - அகத்திய தீர்த்தம்; முன்புள்ள 17-ம் கண்ணிக்குறிப்பைப் பார்க்க.
    223. பைந்தாமரை - பசியமாலையையுடைய சிவபெருமானை.
    225. வேதவனத்தண்டலை - வேதவனமுனிவன் வைப்பித்த சோலை; 100 - ம் கண்ணிக்குறிப்பைப்பார்க்க.
    226. கண் தேவையெனும்.
    227. திண் கையில் ஆசமனஞ் செய்வோன் - அகத்தியமுனிவர்.
    228. சுகுபம் - திசை. காதற்கரும்பு - உமாதேவியார். மிகு பங்கு அடங்கும்.
    229. பரராம் அநாதரையும்.
    -----------------------------------------------------------
    231. பரவை இரைச்சு - கடல் முழக்கம். வயிரச்சின்னம் - வயிரமழுத்திய சின்னம்.
    232. பாண்டியனுடைய அடையாளம் - மீன்.
    233. ஒளியன்னம் - பிரமதேவராகிய அன்னப்புள்.
    234. திடமால்.
    235. முன்னடி - அடிமுன்
    236. மதன் அம்பு அடாதோ. விதனம் - வியஸனம்.
    237. 'வந்தவள்' என்றது, தன்னைப் படர்க்கையாக்கி. தந்த வளை-தந்தத்தாலாகிய வளையல்கள்.
    239. இந்தத்திருவானவன் அணைந்தால்.
    240. திகைத்த கன்று - திகைப்புற்ற மான்கன்று.
    241. காக்கை கருதுமோ - காத்தலை நிலையுமோ.
    -----------------------------------------------------------
    244-245 மாங்குயில்,மருதக்கிள்ளை யென்பன வழக்கு.
    246. பால வரையா-வெண்மை நீங்காத.மால்வரை-கைலை. மயில், குறிஞ்சிக்கருப்பொருள்.
    247. ஆடற் கடம்பு-வெற்றியையுடைய கடம்பமரம். பூவை-நா கணவாய்ப்புள்.
    249. செருத்தணி-திருத்தணிகைமலை. அம்மலையிலுள்ள ஒரு சுனையில், காலை உச்சி மாலை ஆகிய மூன்று காலங்களிலும் கருங்குவளை மலருமென்பர்; (கந்தபு. வள்ளியம்மை. 222.)
    251. தாமதித்தல்-தங்கல்
    -----------------------------------------------------------
    258. உடையானது என்றும் நில்லாது.
    259. இரண்டிருள் - அகவிருள், புறவிருள்.
    261. வாழ், உவம உருபு.
    259 - 262. ஸ்வாமியின் திருமேனியை ஆகாயமென்றதற்கேற்பச் சூரியன் முதலிய பொருள்கள் இவற்றிற் கூறப்பெற்றிருத்தல் காண்க.
    266. காக வன்புள் - காக்கை.
    -----------------------------------------------------------
    267. மிகுந்த வரை - மிக்க மலை. புகுந்தவர் - இராமநாதர். தகும் தவரை - தக்க தவமுடையோரை.
    268. சாதகர் - உதவி செய்பவர்கள். மா தகர் - பெரிய ஆட்டுக்கிடாய்.
    269. போதும் நறை - போதிய தேனையுடைய.
    270. இறைவர் - பிரமர்.
    272. அத்தனுக்கு - சிவபெருமானுக்கு. ஓடி அரிய உடம்பிழந்தோன் - மன்மதன்.
    274. 'தோன்றும் அலையைத் துலக்குவாள்' என்றதனால், அரிவையைத் திருமகளென்றபடி.
    273 - 274. இவற்றிற் கடலிலுள்ள பொருள்களையே உவமை கூறியிருத்தல் காண்க.
    275. திறல் இக்கு வேளுக்கு - மன்மதனுக்கு.
    277. மூவேழ் நரம்பு - இருபத்தொரு நரம்பில்; பேரியாழுக்கு நரம்பு, 21.
    -----------------------------------------------------------
    280. பண்கள் நூற்று மூன்று.
    282. ஞாலம் உழுது.
    283. தாளிற்குக் கண்மலரை இடந்த.
    284. சூல நா - சூலப்படையின் தலை.
    287. 'காரேழுநின்றார்ப்ப' என்றும் பாடம்.
    286 - 287. தொழவந்தோர் ஆர்ப்ப.
    288. வரு குகனை ஈன்றோர் - இராம நாதர்.
    289. காமர் அரி - அழகிய சிங்கம்.
    -----------------------------------------------------------
    290. தாய் அஞ்சி வந்து.
    291.சின்னமகன்-மன்மதன்.
    292. பேரிளம் பெண்ணையெல்லாம்-பெரிய இளைய பனைகளை யெல்லாம்; பேரிளம் பெண்களையெல்லாமென்பது மொன்று, ஊர்திகளாக்கல்-மடல்மாவாகச்செய்தல்; இவளைக்கண்ட ஆடவர் மடலேறுவரென்றபடி.
    294. முத்து பற்களுக்கு உவமை.
    294. ஊசி, உரோமாவலி.
    298-299 கொப்பு-ஒருவகைக் காதணி. கொப்பு ஆலவட்டமாக.
    -----------------------------------------------------------
    301-303. தகுமானம்-தக்கபெருமை. கஞ்சம் நீங்க, நகையாய்-பல்லையொத்து. ஆரம்-முத்த மாலை. சீதேவியென்பது தலையணிகளுள் ஒன்று.
    300-303. தனத்திற்கு ஆரம், கூந்தற்குச் சீதேவி, நெற்றிக்குச் சுட்டி.
    304. கூவிரி-தேர்க்கொடிஞ்சி. பாவிரி-பாக்களில் விரிந்த
    308-உந்தியர்-புகழ்ந்துபாடுவோர்.
    309. கஞ்சன்-கம்ஸன்.
    310. காட்டு மலரை-காட்டியமல்லர்களை. கரமலர்- எழுவாய். ஏட்டை-இளைப்பு.
    311. அன்னம்-அன்னப்பறவை, உணவிற்குரிய அன்னம். மால்வேதனை பெற்றீர் - திருமாலையும் பிரமதேவரையும் பெற்றீர்; உணவில்லாமையால் இளைத்தீர், மயக்கத்தையும் வேதனையையு மடைந்தீ ரென்பது மற்றொரு பொருள்.
    -----------------------------------------------------------
    312. ஆசையுடையீர் - திக்காகிய ஆசையுடையீர்; இச்சையுடையீர். அண்டருக்குத் தோற்றீர் - தேவருக்குப் புலப்பட்டீர்; பகைவருக்குத் தோல்வியுற்றீர்.
    313. என்றலோ - என்றன்றோ; அலோ - அன்றோவின் மரூஉ. பணி - பாம்பு; அது காற்றைப் புசிப்பது.
    314. 'மாது' எனத் தன்னைப் படர்க்கையாற் கூறினாள்.
    315. 'வேய்க்குப் பிள்ளை புகுந்து' என்றது, திருநெல்வேலியில் மூங்கிலடியில் முளைத்ததனை; இதனால், சிவபெருமான் வேயீன்றமுத்தென்று பாராட்டப்பெறுவர்.
    317. ஏகாந்தராமன் அமைக்கும் கடல் - இராமர் ஒலியை அடக்கிய கடல்; அது ஏகாந்தராமநகரத்தைச் சார்ந்தது;
    14-ம் கண்ணிக் குறிப்பைப் பார்க்க.
    317. அசையும் மணி - விடையின் கழுத்திற் கட்டிய மணி
    319. காலைப்பொழுது - சூரியன்.
    322. தேரான் - தேரை உடையான், அறியான். தாரான் - மாலையையுடையான், கொடான்.
    -----------------------------------------------------------
    325. கலைமதி-16- கலைகளையுடைய மதி; பூரணசந்திரன்.
    326. கண்கூடு-பிரத்தியக்ஷம்.
    327.முதுதமிழ்-தேவாரங்கள்.
    328. மதக்குன்று-யானை.
    329. காஞ்சிபுரம்-காஞ்சிநகரம், காஞ்சியென்னும் ஆபரணத்தையணிந்த இடை.
    331-எய்யா-இளையாத. மறிப்பு இருந்து-மறியலிலிருந்து, நடுநிலை-இடையுள்ள இடம்,நடுவு நிலைமை.
    332. பகுந்து-பங்கிட்டு.
    333. மூர்க்கர்-மூர்க்கநாயனார், விண்டு-இராமர்.
    -----------------------------------------------------------
    335. வேள் துணை- மன்மதனையொத்த.
    336. கூந்தல் அரண்-கூந்தலாகிய காட்டரண்.
    338. தேவை அரன்-இராம நாதர்.
    339.எழுதாத-மை எழுதப் படாத.
    340. திருமாலை-விஷ்ணுவை, அழகிய-பூமாலை.
    341.வரையா-எழுதாத, நீக்காத.
    342. கன்னல்-கரும்பு; தொய் யில்.

    336-338. கண்ணிணைகளில் மையெழுதாள், குழலில் மலர் முடியான், தனதடத்திற் கன்னலெழுதாளாய்.
    343. பின்பதறி. அன்பது அறிவானை.
    344. வேந்து-இராவணன். இருவர் முயலகர்-முயலகனென்னும் அசுரன், முயலை அகத்தேயுடைய சந்திரன்.
    345.முகன் நஞ்சு தளரும்-முகம்நைந்து, தளருதற்குக் காரணமான.
    -----------------------------------------------------------
    346. வெள்ளாக்கருமா-சுவே தவராகம்.
    347. அப்புரம்-அந்த உடம்பு; அழகிய உடம்பும், அம்பினது உரமுமாம்; புரம்-உடம்பு.
    348. மோகப்பணி-மோகமாகியபாம்பு. முதிர்பணி-முதிர்ந்த இராகுகேதுக்களாகிய பாமபுகள். பாரிருள்-புறவிருள். ஆகத்திருள் -அகவிருள். விழிகள் சோமசூரியாக் கிளிகளாதலின்,பணி முதலியவை அஞ்சுவனவாயின.
    349. முடிச்சிட்டநாள்=முடித்திட்டநாள்-அழித்தகாலம், முடிச்சிட்ட=முடித்திட்ட-கட்டிய. துடிச்சு - துடித்து. இட்டம்-இஷ்டம்.
    350. விண்ணவர் அஞ்சும். எண்ணவரம்சுமந்த.
    351. ஆண்டவர்-சோமசுந்தரக் கடவுள்.
    352. மாற நடித்த மதுரை. மாறன் அடித்த மதம்-பாண்டியன் அடித்த செருக்கு.
    353. வெட்டவெளியாராம் மேனியாரெனவும் வெட்டஎளியாரா யெனவும்பிரிக்க; "வேயீன்ற முத்தர்தமை வெட்டினா னேயிடையன்" என்பது இரட்டையர்பாடல். இடையன் வெட்டியது திருநெல்வேலியில் நிகழ்ந்த செய்தி.
    354. ஏறு தணவார்க்கு-இடபத்தை நீங்காதவர்க்கு. சாக்கியனார் தம் கல்லால் ஏறு.
    -----------------------------------------------------------
    355.கண் இடம் தப்புமென, ஒருவன்-கண்ணப்பநாயனார். கண் இடந்து அப்புவதும். பெண்ணமுதம்-உமாதேவியார்.
    356. அங்கு இதம் செய்தது போல். அங்கிதம் செய்தது - அடையாளஞ்செய்தது.
    357. 'என்னென்றுணைந்தாள்' என்றும் பாடம்.
    359 செம்புயத்து ஆள் மாலை

    -- இராமநாதர் துணை --


    See Also:
    1. ராமேஸ்வரம் தல வரலாறு