தலமர சிறப்புகள்

வாழை மரம்



வாழை Musa paradisiacal, Linn.; Musaceae. வீரளக் குரலும் விளிசங் கொளியும் வுழவின் னொலியோவா மூளைத் தலைகொண் டடியா ரேத்தப் பொடியா மதிளெய்தார் ஈளைப் படுகில் இலையார் தெங்கிற் குலையார் வாழையின் பாளைக் கமுகின் பழம்வீழ் சோலைப் பழன நகராரே. - திருஞானசம்பந்தர்.

திருப்பழனம், திருத்தேவூர், திருமருகல், திருத்தருமபுரம், திருக்குடவாயில், திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களில் தலமரமாக வாழை விளங்குகின்றது. இது மிகப்பெரிய இலைகளையும், குலையாக வளரும் காய்களையும், உண்ணக்கூடிய இனிய கனிகளையும் உடைய மரமாகும். இதில் பேயன், மொந்தன், பூவன், இரத்தாளி போன்ற பல இனங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் இலை, காய், கனிகளுக்காக பயிரிடப்படுகின்றன. திருப்பைஞ்ஞீலியில் ஞீலி எனும் ஒரு வகைக் கல்வாழையும், திருமருகலில் மலைவாழை இனத்தைச் சேர்ந்த வாழையும் தலமரங்களாக உள்ளன. ஞீலி வாழைக்கனி இறைவனுக்கு பூசனை செய்து நீரில் விடப்படுவது மரபு; யாரும் உண்பதில்லை.

வாழையின் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், பட்டை, தண்டு, சாறு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை குருதி, சீழ்க்கசிவை அடக்கும்; சாறு குருதி போக்கடக்கும். தண்டு சிறுநீர் பெருக்கி பித்தத்தைச் சமப்படுத்தும்; பழம் மலச் சிக்கல் அறுத்து உள்ளழலாற்றி உடலுரமாக்கும்.


< PREV <
வால்மிளகு
Table of Content > NEXT >
வில்வமரம்