நகர் கிராமம் அ/மி ஸ்ரீ அதுலசுந்தரி உடனுறை அ/மி ஸ்ரீ அப்ரதீஸ்வரர் சுவாமித் திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

nagar girAmam srI adhulasundari udanuRai srI aprathISwarar swAmy temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ அப்ரதீஸ்வரர் சுவாமித் திருக்கோயில், நகர் கிராமம், லால்குடி வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல வரலாறு:

அம்பிகை இத்தலத்திலே புவிஈர்ப்புக்கு அப்பாற்பட்ட "பீதாம்பர யோகம்" என்ற வகையில் பூமிக்கு மேலே குறித்த உயரத்தில் மிதந்தவாறு "அசலயோகம்" என்ற அசைவற்ற யோக நிலையில் ஸ்ரீசர்வேஸ்வரனை நோக்கி தவமிருந்தாள். யோக சக்திகளின் அற்புதத்தால் பிரபஞ்சத்தின் அனைத்து கோள்களும், நட்சத்திரங்களும், அம்பிகை தவமிருக்கும் தலத்தை வலமாகவும் (பிரதட்சணம்), இடமாகவும் (அப்பிரதட்சணம்) சுற்றி வரலாயின. அசலமான தவத்திலிருந்து ஒரு "நவமி திதி" நாளில் மீண்ட அம்பிகை சூரிய, சந்திர முதலான அனைத்துக் கோடானகோடி கோள்களும் அப்ரதீஸ்வர சுவாமியை வலமாகவும், இடமாகவும் வந்து வணங்குவதைக் கண்டு அதிசயித்தனள் அனைத்துக் கோள்களும் "சலனமாக நகரும்" இடமான அந்த இடத்தில் துலங்கும் இறைவனின் திருவருளை நினைந்து, உடனே அங்கேயே இறைவனை கோடானுகோடி ஸ்வர்ண வில்வ தளங்களால் அசல ரூபராகப் பூஜித்திட, அங்கே சுயம்பு லிங்க மூர்த்தியாக சர்வேஸ்வரன் தோன்றிக் காட்சியளித்து அம்பிகையின் சலனமற்ற யோக நிலையை வாழ்த்தி அருளினார். மேலும், சர்வ சலனங்களும் அற்ற அபூர்வமான முறையில் உலக அன்னை மானுட வடிவில் யோகம் பூண்டமையால் அம்பிகைக்கு "அசலசுந்தரி" என்ற திருநாமத்தையும் சூட்டி அருளினார்.

இத்திருக்கோயிலின் தல விருட்சம் வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய மகாவில்வ மரமாகும். மற்ற வில்வ மரங்களைப் போல் இம்மரத்தில் முட்கள் காணப்படுவதில்லை. காசியில் மட்டுமே இதுபோன்ற மரங்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த மகாவில்வ மரத்தினடியில் ஒரு பெரிய சகஸ்ரலிங்கம் அமையப்பெற்றுள்ளது. இத்தல மரமான மகாவில்வ மரத்திற்க்கு நாமே அரைத்த சந்தனம், பசுமஞ்சள் பூசி சகஸ்ரலிங்கத்துடன் வழிபடுவோரின் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், பித்ரு தோஷத்தால் ஏற்பட்டுள்ள சகல தோஷங்களும் நிவர்த்திக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

கோள்களே இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றதால் நட்சத்திர தோஷம், கிரகதோஷம், திருமண குழப்பங்கள் நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் "நவமி திதி"யில் இத்தலத்திற்கு வந்து இறைவனை வலமாகவும் (பிரதட்சணம்), இடமாகவும் (அப்பிரதட்சணம்) வந்து வழிபட்டால் நற்பேறு பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.

இத்திருக்கோயிலில் இரண்டாம் இராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மாறவர்மன், குலசேகர பாண்டியன் ஆகியோரது கல்வெட்டுக்கள் உள்ளன. குலசேகர பாண்டியனின் 29-ம் ஆட்சியாண்டுக் காலத்தில் கிராமத்துச் சபை இக்கோயில் மண்டபத்தில் கூடி சபை அலுவல்களை நடத்தியுள்ளது. கல்வெட்டில் இத்திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் பற்றி தெரிகிறது. நகர் கிராமத்திற்கு அருகிலுள்ள திருமங்கலம் திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் நகர் கிராமசபை, ஊர் அவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கட்டிட அமைப்பு முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளதாலும், மூலவர் விமானம் தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் விமானத்தைப் போன்று மிக உயரமாக உள்ளதாலும் அக்காலத்தில் இத்திருக்கோயில் மிகச் சிறப்புடன் பொலிவுற விளங்கியுள்ளது என்பது திண்ணம்.

திருப்பணி விபரம்:

திருவருளால் இக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது; திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்று திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அதுசமயம் அன்பர் பெருமக்கள் சீர்மிகும் இச்சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற நன்கொடைகள் செய்து உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.

இதைக் கண்ணுரும் அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உடல் உழைப்புடன் பணம் பொருள் உதவி செய்து எல்லாம் வல்ல இறைவனார் ஸ்ரீ அப்ரதீஸ்வரர் சுவாமித் திருவருளுக்குப் பாத்திரராகும்படி பிரார்த்திக்கிறார்கள்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்; அல்லது அதே முகவரிக்கு நன்கொடையை அனுப்பலாம்.


		திருப்பணிக் குழு, 
		அ/மி. ஸ்ரீ அப்ரதீஸ்வரர் திருக்கோயில்,
		நகர் கிராமம், 
		லால்குடி வட்டம், 
		திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

		Phone : +91 - 9840154624, +91 - 9443731496.

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page