வீரவநல்லூர் அ/மி ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ பூமிநாத சுவாமி
திருக்கோயில் திருப்பணி
- - - - - - - - -

vIravanallUr srI marakathAmbikai uDanuRai SrI bhUminAtha swAmy
temple (Renovation) thiruppaNi
* * * * *


அமைவிடம்:

அ/மி. ஸ்ரீ பூமிநாத சுவாமித் திருக்கோயில், வீரவநல்லூர் & (அஞ்சல்), அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.

தல வரலாறு:

இயமன், மார்க்கண்டேயரை சிவனடியார் என்று கொள்ளாமல் மற்ற ஆத்மாக்களாக எண்ணி நடந்துகொண்டபோது சிவனின் கோபத்திற்கு ஆளாகி அழிந்தான். அதனால் பூமியின் பாரம் கூடியது; இப்பாரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாய் பூமாதேவி இறைவனை பாற்சோறும், சுரைக்கறியும் படைத்து காத்தருளுமாறு வழிபட்டாள். மகிழ்ந்த இறைவர் எமனுக்கு உயிர் கொடுத்து "சிவகணங்கள் அழைக்கும் உயிருக்கு தடையாக கூடாது" என கூறி அருள் செய்தார். எமதர்மனுக்கு உயிர் தந்ததால் இவ்வூர் தருமநல்லூர் என்றும், சிவனின் வீரம் வெளிப்பட்டதால் வீரவநல்லூர் என்றும் வழங்கலாயிற்று. பூமகள் வழிபட்டதால் இவ்விறைவர் பூமிநாதர் என வழங்கப்பெற்றார் என்கின்றது வீரை தல புராணம்.

சிறப்புகள்:

சுமார் 1000 வருடங்கள் பழமையானது. அதிவீரமன்னனும் வீரகண்டனும் திருப்பணித் தொடங்கிட, அவன் வழிவந்த வீரமாறன் எனும் மன்னன் ஆலயப்பணியை தொடர்ந்து நிறைவு செய்தான். பின்னர் அரசாண்ட மன்னர்கள் பலரும் திருப்பணி செய்துள்ளனர். கி.பி.1551ம் ஆண்டு கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் கிடைத்துள்ளன. தவ வனமாகிய இங்கு வேதங்கள் புன்னை மரங்களாகி வழிபட்டுள்ளன. பூமிதேவி, எமதருமன், திருமால், பிரமன், கங்கை, இந்திரன், அகஸ்தியர் போன்றோர் வழிபட்டுள்ளனர். "சிவபக்தர்களைத் துன்புறுத்துவதில்லை" என்ற எமனின் ஒப்புதலால் இங்கு வழிபடுவோர் எம வாதனையிலிருந்து விடுபடுவர். இஃது மிருத்யுஞ்சய தலங்களில் ஒன்றாகும். இத்தல தீர்த்தங்களாவன ஞானதீர்த்தம் (கோயில் எதிரில் உள்ளது), சிவகங்கை, தாமிரபரணி ஆகும். தலவிருட்சம் புன்னை மரமாகும்; இஃது கோயிலின் பின்புறம் உள்ளது. இத்தலத்தில் வழிபாடு செய்வதால் பூமி சம்பந்தமான லாபம் கூடும்; நீதிமன்ற வழக்கில் நியாயம் கிட்டும்; இரத்த சம்பந்தமான நோய்கள் தீரும், செவ்வாய் தோஷ நிவர்த்தி, திருமண தடை நீங்கும், புத்திர பேறு கிட்டும் என்பது இத்தலத்தின் சிறப்பியல்புகளாகும்.

திருப்பணி விபரம்:

மங்களகரமான 1185ம் கொல்லம் ஆண்டு விரோதி வருஷம் மாசி மாதம் 20ம் தேதி (04-03-2010) வியாழக்கிழமை சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் கூடிய நன்னாளில் கடையம் அ/மி ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ பூமிநாத சுவாமித் திருக்கோயில் திருப்பணித் துவங்கப்பட்டுள்ளது. அன்பர் பெருமக்கள் தங்களால் இயன்ற உதவி செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

குறிப்பு:

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளாகவோ / பணமாகவோ நன்கொடை செய்ய விரும்புவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

	திருப்பணிக் குழு
	தொடர்புக்கு : 09442908504 / 09443554307

Back to thirupaNi page
Back to Shaiva Siddhantha Home Page
Back to Shaivam Home Page