logo

|

Home >

shaiva-vina-vidai >

sivalinga-iyal

சிவலிங்க இயல்

 

  1. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படும் சதாசிவ வடிவம் எது?

     

    பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடம் சிவசக்தி, இலிங்கம் சிவம்.

     

  2. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்ன?

     

    இதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர்.

     

  3. இலிங்கம் எவ்வாறு தோன்றியது?

     

    பிரமனும், திருமாலும் தம்மிடையே பெரியவர் யார் எனச் சச்சரவிட அவர்கள் முன் சிவபெருமான் சோதி வடிவாகத் தோன்றினார். அவ்விருவரும் அச்சோதியின் முதலும் முடிவும் காணாது வருந்த, அச்சோதி வழிபாட்டிற்கு ஏற்ற சிவலிங்கமாகத் திடமானது. அச்சிவலிங்கத்தை வழிபட்டு அவர்கள் பேறு பெற்றனர். தன்னிலையில் அருவமான பரசிவம் உயிர்களுக்கு இரங்கித் தன் கருணையால் அருவுருவத் திருமேனி கொண்டதே சிவலிங்கத் திருமேனி என்பதை உய்த்துணர்க.

     

  4. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?

     

    சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும், குருவும் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும்.

     

  5. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?

     

    மாறுபடாது. சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர். மற்றை இடங்களில் எல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.

     

  6. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?

     

    பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் என இருவகைப்படும்.

     

  7. பரார்த்த லிங்கமாவது யாது?

     

    சிவபெருமான் சங்கார காலம் வரையும் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் போது இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம் - அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல். தாவரம் எனினும், ஸ்திரம் எனினும் நிலையியல் பொருள் எனினும் பொருந்தும்.

     

  8. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?

     

    சுயம்பு லிங்கயம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கம் தானே தோன்றியது. காண லிங்கம் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவித லிங்கம் விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கம் இருடிகளால் தாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினரால் தாபிக்கப்பட்டதும், அது மானுட லிங்கம் மனிதரால் தாபிக்கப்பட்டது.

     

  9. ஆனால் தரிசனத்தினா லுண்டாகும் பலன் சமமா யிருக்குமா?

     

    ஒன்றுக்கொன்று அதிகமாயிருக்கும். மனிதர்களால் ஸ்தாபிக்கப்படும் சிவலிங்கத்தையும் மற்றச் சிவலிங்கங்களுடன் சேர்த்துச் சொல்லியிருப்பதனால் அவர்களைச் சாமானியமாக நினைக்கப்படாது. சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் முதலானோர், சிவநேசமும் ராஜநீதி முதலான தருமமும் விசேஷமாயிருந்ததனால் இவர்களுக்குப் பரமசிவனுடைய திருவருள் பூரணமாகக் கிடைத்திருந்தது. இவர்களுக்கும் சாபானுக்கிரகமுண்டு.

     

  10. மற்றமனிதர்களால் ஸ்தாபிக்கப்படாதோ?

     

    சிவதரிசனத்துக்குச் சமீபத்தில் ஆலயமில்லாத கிராமங்களாயிருந்தால் சிவப்பிரதிஷ்டை செய்ய வேண்டியதுதான். கிலமாக ஆலயங்களிருக்குமானால் அதைத் தள்ளிப் புதிதாகப் பிரதிஷ்டை செய்விக்கலாகாது. நூதனமாக ஆலயமேற்படுத்தி சிவலிங்கம் ஸ்தாபிப்பவர்கள் பக்கத்தில் ஒருலிங்கம் பூசையில்லாமலிருந்தால் அதைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். கிரியா லிங்கமாயிருந்தால் ஸ்தாபிக்கலாகாது. சுயம்பு லிங்கமானதாயிருந்தால் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம்.

     

  11. சுயம்பு லிங்கம் பூமியில் தானேயுண்டான தாயிருந்தால் அதையெப்படிக் கொண்டுவரலாம்?

     

    இவ்விடத்தில் சுயம்புலிங்கமென்றது கிரியா லிங்கம்போற் செய்யப்டாமல் உண்டாயிருக்கும். அது நர்மதா லிங்கமென்றும் பாணலிங்கமென்றுஞ் சொல்லப்படும்.

     

  12. திருக்கோயிலுள் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லோராலும் வழிபடற் பாலனவா?

     

    ஆம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்தாராலும் வழிபடற்பாலனவே ஆகும். ஆயினும் அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும். படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.

     

  13. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வார்?

     

    சரியையாளர்கள் பகுத்தறிதல் இல்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வார்.

     

  14. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள்செய்வர்?

     

    கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினி போல, அவ்வம்மந்திரங்களினாலும், அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

     

  15. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்?

     

    யோகிகள், தம் இருதயமெங்கும் இருக்கும் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்.. அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம்மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.

     

  16. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?

     

    ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக் கருணை மிகுதியால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.

     

  17. இட்டலிங்கமாவது யாது?

     

    ஆசாரியார் விசேட தீக்கை செய்து, சீடனைப் பார்த்து, “நீ உள்ள அளவும் கைவிடாது இவரை நாள்தோறும் பூசி" என்று அனுமதி செய்து, “அடியேன் இவ்வுடல் உள்ளவரையும் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளே" என்று ஆணை செய்வித்துக் கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம் இது. ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் பெயர் பெறும்.

     

  18. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?

     

    வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம், சணிக லிங்கம் எனப் பலவகைப்படும்.

     

  19. சணிக லிங்கமாவது யாது?

     

    பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாகும்.

     

  20. சணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?

     

    மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், பூ மாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.

     

  21. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?

     

    பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்கும் சமம். அப்படிப் புசித்தவனைத் தீண்டலோ காண்டலோ பாவம். ஆதலால் ஓரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவர், ஆசாரியாரை அடைந்து அதற்குப் பிராயசித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.

     

  22. வியாதியினாலே தம் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?

     

    தம்முடைய ஆசாரியாரைக் கொண்டாயினும், தம்மோடொத்தாரைக் கொண்டாயினும், தம் பூசையைச் செய்வித்துத் தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.

     

  23. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?

     

    மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர குளித்து விட்டு, அந்தரியாகம் செய்தல் வேண்டும். நான்காம் நாள் குளித்து விட்டு, ஆனைந்தேனும், பாலேனும் உட்கொண்டு, மீண்டும் குளித்துவிட்டு, சிவபூசை செய்தல் வேண்டும். அம்மூன்று நாளும் அந்தர் யாகம் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.

     

  24. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசௌசம், வியாதி இவைகள்வரின், யாது செய்தல் வேண்டும்?

     

    தீக்கையால் தம்மோடு ஒத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.

     

  25. ஆசௌசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தர் யாவரும், அசௌச முதலியவை நீங்கியபின் யாது செய்தல் வேண்டும்?

     

    பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறு உருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.

     

  26. சிவலிங்கம் காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?

     

    அந்தரிகயாக பூசை செய்து, பால், பழம் முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும். அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொரு இலிங்கத்தை ஆசாரியார் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.

     

  27. சிவலிங்கப் பெருமானுக்கு விசேட பூசை செய்யத்தக்க காலங்கள் எவை?

     

    திருவைந்தெழுத்து இயலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களும், சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாள்தோறும், நித்திய பூசையேயன்றி அதற்குமுன் உசத் கால (விடியற்காலை) பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி, இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும். ( சென்மத் திரயங்கள் - பிறந்த நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமுமாம் ).

     

  28. இத்தனை முயற்சி செய்து சிவலிங்க வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

     

    இந்த உடல் எடுத்ததின் பயனே முற்றிலும் இன்ப மயமான சிவபெருமானை வணங்கி அவர் திருவருளால் கிடைக்கும் முடிவே இல்லாத அளவில்லாத இன்பத்தை அடைவது தான். அதனால் சிவ வழிபாடு செய்யாமல் இருப்பது உடலை வீணே வளர்த்துக் காக்கைக்கும் மண்ணிற்கும் பலியாக்குவதற்கே ஆகும். கல்வி கற்றவர் அக்கல்வியைத் தொழிற்படுத்தாது, தொழில் செய்யின் கட்டுப்பாடுகள் உண்டே என வீணே இருப்பராகின் அவர் எத்தகு மூடரோ அவர் போன்றவரே சிவ வழிபாடு செய்யாதவர்.

     

  29. சிவபூஜை செய்யத்தக்க மூர்த்தங்ளெவை?

     

    மானதம், மண்டலம், பலகையிலும் படத்திலும் சுவரிலுமெழுதிய சித்திரங்கள், விக்கிரக சொரூபங்கள், படிகலிங்கம், பாணலிங்கம், க்ஷணிகலிங்கம் இவை முதலியவும் பூசிக்கத் தக்க மூர்த்தங்களாம்.

     

  30. மானத பூசையாவ தென்ன?

     

    மனதினாலே அபிஷேகமுதலிய பூசையைப் பாவனையாகச் செய்தலாம்.

     

  31. மண்டல பூசையாவ தென்ன?

     

    மண்டலேசுரரைப் பூசித்தலாம்.

     

  32. க்ஷணிகலிங்க பூசையாவதென்ன?

     

    பார்த்திபலிங்க பூசையாம்.

     

  33. மேற்கூறிய பூசைகளிற் சிறந்தது எது?

     

    படிகலிங்க பூசையும் பாணலிங்க பூசையும் சிறந்தது.

     

  34. பாணலிங்கங்களென்பன யாவை?

     

    பாணனென்னு மொரு அன்பனாலே பூசிக்கப்பட்டவையாம்.

     

  35. இவ்விலிங்கங்கள் எவ்விடத்தில் இருக்கின்றன?

     

    நர்மதை என்னும் நதியில் இருக்கின்றன.

     

  36. இந்தப் பூசைகளால் அடையும் பலன் என்ன?

     

    சோடச தானபலனும், இருபத்தொரு யாகபலனும், மகா பாதகவிமோசனமும், ஸ்தலங்கள்தோறுஞ் சென்று தரிசிக்கும் பலனும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் ஸ்நானஞ் செய்த பலனும் கிடைக்கும்.

     

  37. சோடச தானம் என்பன எவை?

     

    அன்னதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம், பூதானம், இரணியதானம், கோதானம், உபயமுகி தானம், மகிஷதானம், அஸ்வதானம், சுவேதாஸ்வதானம், காலதானம், காளமுகி தானம், மகமேருதானம், கற்பகவிருக்ஷ தானம், வித்தியாதானம், மகாதானம் என்னும் பதினாறுமாம்.

     

  38. யாகம் இருபத்தொன்றாவது யாது?

     

    அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசம், வாசபேயம், அத்திசாத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிதோத்திரம், தரிசுபூரணமாசம், சாதூர்மாசியம், நிரூடபசுபந்தம், ஆக்கிரணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிரார்த்தம், சிரவேணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆசுவயசு என்னும் இருபத்தொன்றுமாம்.

     

  39. மகாபாதகஙகள் என்பன எவை?

     

    கொலை, களவு, பொய், கள்ளருந்தல், குருநிந்தை என்னும் ஐந்துமாம். இந்தப் பாதகங்களால் நரகவேதனை உண்டாகும். பிறர் மாதரை இச்சித்தல், பிறர் செய்வதைக் கண்டு பொறாமை கொள்ளுதல், அப்பொருளை அபகரிக்க எண்ணுதல், கோபம், கொடுஞ்சொல், மூர்க்கம், வஞ்சகம், ஒருவர் தனக்குச்செய்த உபகாரத்தை மறத்தல், சிநேகத்தைப் பரித்தல், இரக்கமில்லாமை இவைகளாலும் நரகவேதனை உண்டாகும்.

     

Related Content

Shaivam - An Introduction

கடவுள் இயல்

நாட்கடன் இயல்

திருநீற்று இயல்

உருத்திராக்க இயல்