logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்

Palaivana padhirrupathu andhadhi - tiricirapuram minatchi sundharam pillai avarkal iyarriyathu.


கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

காப்பு.

விநாயகர் துதி.

மாவார் நிறத்துத் துழாய்மாலு மணத்தா மரையா ளியுந்துதிக்கும், 
பாவார் பாலை வனப்பதிற்றுப் பத்தந் தாதி யுரைசெய்யப்,
பூவார்கடுக்கை புனைந்துமுத லெழுத்தின் பொருள்யா மெனத்தெரிக்குங்,
காவார் கொடைக்கைக் களிற்றுமுகக் கடவுட் பெருமான் பதம்பணிவாம்.

1

நூல்.

பூவும் பழுத்த செழுங்கனியும் புனலும் விரையு மற்றுமுள
யாவுங் கொடுநின் னடிப்பூசை யியற்றா துழலு மிழுதையே
னாவுந் துதிக்கப் பணித்தபணி நன்று பாலை வனத்தமர்வோய்
சேவுந் தனிமா மறைமாவுஞ் செலுத்தா நிற்குந் திறலோயே.

1

திறலார் சூலப் படையுடையாய் செந்தா மரைக்கண் விடையுடையா, 
யறலார் கூந்தற் கருநெடுங்க ணருட்பார்ப் பதியோர் பங்குடையா, 
யுறலார் பாலை வனமுடையா யுன்னைத் துதியா வெனைக்குறித்து, 
மறலார் கூற்றங் கடாமேலால் வருமுன் விடைமேல் வருவாயே.

2

வருவாய் குறித்துப் பற்பலகா வதம்போ யுழலு மென்பாதம், 
பொருவாய் தரினு மில்லாநீ பொலியா லயஞ்சூழ் தரமுடமாம்,
வெருவா யெனவந் தருளுவதென் றுரையாய் விண்ணோர் தொழுதேத்த, 
வருவா யுருவா யருவுருவா யமர்ந்தாய் பாலை வனத்தரசே.

3

அரசே கருணைப் பெருங்கடலே யறிவே யறிவி னுள்ளொளியே, 
புரசே மலர்ந்து பொலிவனம்போற் பொலியு மேனிப்பெருந்தகையே, 
பரசே மலியும் பாலைவனப் பரமா பாத பங்கயத்து,
விரசே யெனப்பே ரருள்புரியா விதந்தா னிதுவென் றுரையாயே.

4

உரையே னினது பெருங்கீர்த்தி யுரைப்பார் கூட்டத் துற்றுமனங், 
கரையே னினது பாலைவனங் கண்டுவழிபா டியற்றுதற்கு, 
விரையேன் சிறிது பொழுதேனும் வெய்ய மனமவெவ் விடயமுறல, 
வரையேன் பயனென் பெறவுதித்தேன் வண்டார் கடுக்கை மலைவோயே.

5

மலையா நிற்கும் வினையொருபால் வருத்தா நிற்கு மலமாயை, 
யுலையா நிற்கு முடற்சுமையேற் றொன்றா நிற்கு மனமல்லே,
னலையா நிற்கும் புனல்வளங்கூர்ந் தமையா நிற்கும் பணையுடுத்துத்,
தலையா நிற்கும் பாலைவனத் தனியா நிற்கும் பெருமானே.

6

மானேபொருவு மதர்விழிக்கோ மளப்பார்ப் பதியார் மணவாளா, 
தேனே யமுதே செங்கரும்பே தெவிட்டாக் கனியே தேவர்கடங், 
கோனே பாலை வனத்தரசே குணங்கூ ருன்னைப் பரவாமல்
யானே கழித னன்றாமோ யாரும பரவி யின்புறவே.

7

இன்பார் பொதுவுஞ் சிறப்புமென விசைத்த விருநூல்வழியிருநான், 
கன்பார் மனத்த னாகாம லடியேன் பிறவிக் கடல்வீழ்ந்து, 
துன்பார் தரநிற் கயலே‍னோ துதிக்கும் பாலை வனத்திறைவா,
நன்பார் முதலெட் டுருவுடையாய் நல்லா யெனக்கு நவிலாயே.

8

ஆயே யனைய பெருங்கருணை யரசே நின்னைப் புகழாம,
லேயே மலடு கறந்துகறந் திளைத்தே னிளைத்தே னென்செய்கேன்,
பாயே யரவாக் கொள்பவற்கும் பங்கே ருகற்கு மளப்பரியாய், 
வேயேயனதோ ளுமைபங்கா வினையேற் கழித்த லறனன்றே.

9

அன்றே மலத்து மறைப்புண்டு கிடந்தேற் றருளாற் றனுவாதி, 
நன்றே யருளி யுபகரித்தாய நானோ வந்த நலனறிவே, 
னென்றே புரையு மணிமாட மிலங்கும் பாலை வனச்செம்பொற், 
குன்றேகுன்றாப் பெருங்கருணைக் கோவே யாவா கொடியேனே.

10

வேறு
கொடியவ னெனினுங் குணமில னெனினுங் கோதறு நின் றிருவடிக்கே, 
யடியவ னிவனென் றெடுத்துரை செய்வா ரகலிடத் தவர்பொது நோக்கா, 
னெடியவன் றுதிக்கும் பாலையூர்ப் பரமா நீங்கரு மும்மலத் தோடு, 
கடியவன் பிறப்புங் களைந்துநீ சிறப்பிற்கரையுமா கடைக்கணித் தருளே.

11

அருளெனப் படுவ தெவற்றினுஞ் சிறந்த ததுபெறுந்தகுதிய ரன்றி, 
யிருளெனப் படுவ திரிதராக் கொடிய விழுதையோ பெருந்தகு தியன்சொன், 
மருளெனப் படுவ தடைதராப் பாலை வனத்தமர் மாசிலா-மணியே, 
பொருளெனப் படுவ கிரியை ஞானமுமாய்ப் பொலியுநின் பூங்கழற் றுணையே.

12

துணையெனப் படுவ வுயிர்க்கள வரிய தொல்லைவெவ் வினைவரை துளைக்குங், 
கணையெனப் படுவ நீந்தரும் பிறவிக் கருங்கடல் கடப்பதற் கமைந்த, 
புணையெனப் படுவ கட்டுவீ டென்று புகன்றிடப் படுவவே றில்லை, 
யிணையெனப் படுவ பாலையூர்ப் பெருமா னிருபதத் தாமரை மலரே.

13

மலர்தலை யுலகிற் பொற்கொழுக் கொண்டு வரகினுக் குழுவது செய்வேன், 
பலர்புகழ் தருகற் றாவொரீஇக் கருங்கற் பசுவினைக் கறந்திடத் துணிவே, 
னலர்மதுப் பொழியும் பாலைமா வனத்தி லற்புத மெய்ப்பரஞ்சுடரே, 
கலர்கருத் தமையா நின்னரு ளென்றோ கடையனேன் கைக்கொணா ளுரையே.

14

உரைபல செறித்துக் கவிபல புனைந்து முன்னடிக் கன்பிலை யென்னின், 
விரைபடு தகையின் மலரெனப் படுமே மேதகுமருளமை யாத, 
புரையில்செய் தவமு மொப்பெனப் படுமே புண்ணியப் பாலையூர் விளங்க, 
வரைமக ளொடுநன் கமருவா யதனால் வயங்குமன் படியனேற் கருளே.

15

அருந்தவர் புகழும் பாலையா ரணியத் தடைதரா ரடங்கலர் நடுங்கப், 
பெருந்தவர் சிலையாக் கொண்டநம் பெருமான் பேணிவாழ் பெருந்தளி புகுதா, 
ரிருந்தவர் பூமேற் கிடந்தவர் கடன்மே லெய்தரு மெய்யெழி னோக்கார், 
வருந்தவர் கலக்க வவரொடுங் கலந்து மறுகுவார் பிறப்பென்ன பிறப்பே.

16

பிறந்தவர் தமக்குப் பெருந்திரு வாரூர் பேகரும் பத்திமை யியற்றச், 
சிறந்தவர் தமக்குச் சிறந்தகா ளத்தி திகழ்தரி சனஞ்செய்து பவஞ்ச, 
மறந்தவர் தமக்குச் சிதம்பர நினைக்கு மாண்பினர் தமக்கண்ணா மலையே, 
யிறந்தவர் தமக்குச் காசியே யெம்மா னிருந்தருள் பாலைமா வனமே.

17

வனம்பயின் மார்பிற் கவுத்துவம் புனைவார் மாமலர்த் தவிசின்மே லிருப்பா, 
ரினம்பயி லமரர் குழாந்தலை வணங்க விருந்தரு நீழலில் வாழ்வா, 
ரனம்பயில் கழனி புடையுடுத் தோங்க வளப்பிலா வளமமைந் தறவோர், 
மனம்பயில் பாலை வனச்சிவ பரனை வழிபடு தொண்டுபூண் டவரே.

18

பூணுத லமைந்த பத்திய ருடலம் பொருளுயிர் மூன்றையு நல்கிப், 
பேணுத லமைந்த வுறுதியர் சலியாப் பெருநிலை யாளருக் கல்லான், 
மாணுத லமைந்த வயறொறுங் கயல்பாய் வளமலிபாலையூ ரமர்ந்த, 
கோணுத லமைந்த பிறைமுடிக் கணிந்த குருமணி வெளிப்படா தன்றே.

19

அன்றுமுப் புரமு நீறெழ நகைத்தா னாலடி யமர்ந்தொரு நால்வர், 
நன்றுமெய்ப் பொருளைத் தெளிதர வளித்தா னடுங்கவெங்கூற்றினை யுதைத்தான், 
றுன்றுமெய் யன்பிற் பணிபவர் முடித்தாள் சூட்டினான் பாலைமா வனமு, 
மன்றுமெம் முளமும் வதிபவன் றன்மை வகுக்கினோர் தன்மைய தன்றே.

20

வேறு.
அன்றினார் புரங்கண் மூன்று மழலெழச் செற்ற செம்பொன்
மன்றினார் வளங்கூர் பாலை வனத்தினார் வயங்கு வெள்ளிக்
குன்றினா ரொருவெள் ளேற்றுக் கொடியினா ரடிகள் போற்றி
யொன்றினா ரன்றி மற்றோ ருடலெடுத் ததிற்பே றென்னே.

21

என்னரும் வணங்கி யேத்த வெழிற்பெரும் பாலை யூர்வாழ்
பன்னரும் புகழார் தெய்வப் பார்ப்பதி மணாளர் பாத
முன்னரு மனத்த ரெல்லா முன்னரு மனைய நீரார்
பின்னரு மனைய ராகிற் பிழைப்பதெக் காலத் தேயோ.

22

ஓதரு முலக மெல்லா முறுமுறை யுதவ வல்ல
நாதரு மவற்றை யெல்லா நலமுறப் புரக்க வல்ல
நீதரு மவற்றை யெல்லா நிலையறத் துடைக்க வல்ல
போதரும் பாலை யூர்வாழ் புண்ணியப் புராண னாரே.

23

ஆரணி சடையான் பாலை வனத்தம ரண்ண லன்று
காரணி கொடிய நஞ்சங் கண்டத்துக் கொண்டி லானேற்
றாரணி படைப்பா ரெங்கே தகவது புரப்பா ரெங்கே
போரணி வயிர வாட்கைப் புலவரெங் கேசெல் வாரே.

24

வாரியே கருணைக் கென்றும் வான்றருக் குலமே வள்ளற்
பாரியே யென்று லோபர் பாற்கவி புனைவீர் வெற்பு
நாரியே யிடப்பால் வைத்த பாலையூர் நம்மான் சீர்த்தி
மூரியே யன்பிற் பாடின் முற்றுறா தொன்றுண் டாமோ.

25

மோகமாஞ் சலதி மூழ்கி முழுவினைச் சுறாவாய்ப் பட்டுப்
பாகமாம் பத்தி யின்றிப் பாவியாய் வருந்த லாமோ
வேகமே யொருபான் மேவு மின்பமே பல்லு யிர்க்கும்
போகமே பொருளே பாலை நிழலமர் புனித வாழ்வே.

26

வாழ்வினைக் கருதி மோக வலையகப் பட்டு முட்டாத்
தாழ்வினை யியற்றி யோவாப் பழிதலை சுமக்க லுற்ற
வூழ்வினை யொழிந்து நின்பே ரருளெனு மொப்பில் வாரி
யாழ்வினை யுறுத லென்று பாலையூ ரமர்ந்த தேவே.

27

தேவரு மகத்து வேந்துந் திருமல ரவனு மாலும்
யாவருங் காணா வொண்ணா வெந்தையே யெனினு மன்பிற்
பூவரும் பிலையே தேனும் புரிந்திட்டுப் போற்றி னப்போழ்
தேவரும் வெளிப்பட் டம்மா பாலையூ ரிருக்குங் கோவே.

28

கோவண மறையாக் கொண்ட குழகனைக் கொழும்ப லாசப்
பூவண மேனி யானைப் பூவண நகரி னானைத்
தீவண மாக மூன்றூர் செற்றசே வகனை நாளுங்
காவணப் பாலை யானைக் காண்பவர் கடவு ளாரே.

29

கடல்விளிம் புடுத்த ஞாலங் காவல்செய் சிறப்பும் வேண்டார்
மடல்கெழு கற்ப தாரு வானுல கிருப்பும் வேண்டார்
விடலரு மயன்மால் போக வெள்ளத்துந் துளைய வேண்டா
ரடல்கெழு பாலை யண்ண லடியவர்க் கடிமை யாரே.

30

வேறு.
ஆரேறு முடிப்பாலை யடிப்பிரான் கழல்பரசுஞ்
சீரேறு பெருஞ்சிறப்பிற் செம்மையர்கள் யாரெனினுங்
காரேறு மகவானுங் கடிக்கமலத் தனுந்துளவத்
தாரேறு புயத்தானுந் தொழத்தக்க தன்மையரே.

31

மையாரு மிடற்றிறைவர் வண்பாலை வனத்துறைவார்
பொய்யாருஞ் சிறுமருங்குற் புண்ணியப்பார்ப் பதிபாகர்
மெய்யாரு மடிக்கன்பு மேவாதார் யாரெனினுங்
கையாரும் பலனாகக் கொள்வர்கருங் கடுநரகே.

32

நரகத்தே புகவிரும்பி நானிலமங் கையராசை
விரகத்தே மாழாந்து விழுமனமே யிதுகேட்டி
யுரகத்தே சவிர்முடியா ரூழியிறு தியுமுடியார்
கரகத்தே மலர்க்கையார் பாலைவனங் கருதுவையே.

33

கருந்தாது நிகராமென் கடைப்பட்ட மனங்குழையா
தருந்தாது நலஞ்சிறிது மந்தோவித் திறத்துளது
திருந்தாது போமென்னிற் செய்வதெவன் பாலைவனத்
திருந்தாது மலர்க்கொன்றைச் சடாமோலி யிறையோனே.

34

இறையானும் பிறர்க்குரிமை யில்லாதெல் லாம்படைக்கு
மறையானும் புரவுபுரி மாண்பானு முழுதழிக்குந்
துறையானு மயக்கமிகத் துறுப்பானு மறுப்பானும்
பொறையானு நிறையானும் பொலிபாலை வனத்தானே.

35

வனத்தானை யூர்தருமை வனத்தானை யாடரங்காம்
வனத்தானை யன்பருட்ப வனத்தானை முடிக்கணிந்த
வனத்தானை யூழியும்யௌ வனத்தானைப் பணிசெயும்பு
வனத்தானை நெடும்பாலை வனத்தானைத் தொழனலமே.

36

நலமென்னா நயமென்னா நாப்பயின்ற கலையென்னாங்
குலமென்னாங் குடியென்னாங் கோத்திரசூத் திரமென்னா
மலமென்னா மருளென்னா மன்பென்னா மமைந்தபெரும்
புலமென்னாம் பாலைவனப் புண்ணியனை வணங்கார்க்கே.

37

வணங்காது நின்னடியை மறவாது பயில்பவரோ
டிணங்காது பாலைவனத் தெய்தாது நின்விரதத்
துணங்காது சற்றுமன முருகாது திரிகின்ற
குணங்காது மூடருமென் பெறுவரோ குணக்குன்றே.

38

குன்றாத வனமுலையோர் கூறுடையா யூழியினும்
பொன்றாத பெருஞ்சிறப்பிற் பொலிபாலை வனத்தரசே
யொன்றாத மனங்கொடுனை யொன்றியதொத் தேத்திடினுங்
கன்றாத பேரருளிற் கலக்குமா றெண்ணுகவே.

39

எண்ணுதலிற் குறையில்லை யெண்ணியவா றொன்றானும்
பண்ணுதறா னிலையிந்தப் பாவிசெய லிதுவானா
லொண்ணுதலோர் பான்மருவ வொண்பாலை வனத்தமருங்
கண்ணுதலே நின்னருளிற் கலப்பதுமெவ் வாறுரையே.

40

வேறு.
உரைசெ யுந்திற மொன்றுள தன்னதை யுரைத்திடக்கேணெஞ்சே, 
வரைசெ யுஞ்சிலை யாளனைப் பாலையூர் வள்ளலை வழுத்தாதே, 
விரைசெ யுங்குழன் மின்னனார் மயற்குழி வீழ்ந்துதாழ்ந்துழல்வாயேற், 
புரைசெ யும்பவத் துயரநிற் கழியுமோ புணருத லிலையின்பே.

41

இன்ப மேயெனப் பலஞ்சவாழ்க் கையிற்சுழன் றெய்த்திளைத் திடுநெஞ்சே, 
துன்ப மேயலாற் கண்டது வேறெவன் சொற்றியா லதுதீர்ந்து, 
நன்ப தாம்புய மாலவற் கரியவ னம்மனோர்க் கெளியன்கா, 
ணன்ப வாவுபூம் பாலையூ ரண்ணலை யவாய்த்தொழு தமர்வாயே.

42

வாயி னாற்பல வுரைப்பரப் படிநிலை வாய்த்துமன் னுதலில்லை, 
யாயி னாற்பல னென்னைநன் னெஞ்சமே யஃதொரீஇ யன்புற்று, 
வேயி னாற்பெற லரும்பசுந் தோட்கயன் மிளிரரி மதர்ச்செங்கட், 
டாயி னாற்பொலி பாகனைப் பாலையூர் சார்ந்துபோற் றுதனன்றே.

43

நன்று சற்றுநீ ரெண்ணிலீர் மனைமுத னவில்பெருங் குடும்பத்தே, 
சென்று மற்றதி லழுந்துவீ ரென்செய்வீர் திருகுவெஞ் சினங்கொண்டு, 
கொன்று செற்றிடக் கூற்றுவன் குறுகிடிற் குவலயத் துள்ளீர்கா, 
ளென்று சென்றுநம் பாலையூ ரிறைவனை யேத்துபு தொழுவீரே.

44

வீரம் வேண்டினு மனைமக வேண்டினும் விளைநில முதலாய, 
சாரம் வேண்டினு முலகெலாம் படைத்திடு தலைமைவேண்டினுங் 
காவற், பாரம் வேண்டினும் பற்றறுத் துயர்கதி படர்தரு மதற்காய, 
வீரம் வேண்டினும் பாலையூ ரிறைவனை யேத்துபு தொழினாமே.

45

தொழுதெ ழுந்துகை தலைமிசைக் குவித்திலை சொற்பதங் கடந்தாயென், 
றழுது நெஞ்சநெக் குருகிலை யடியரை யஞ்சலித் தடைகில்லை, 
பழுது தீர்வதெப் படிமன மேபெரும் பாலைமா வனமேய, 
முழுது மாகிய தம்பிரான் றிருவருண் முயங்குத லெவ்வாறே.

46

எவ்வ மேபடு மலமுதன் மூன்றுமற் றின்பவீ டுறுபாக்குப், 
பவ்வ நீர்விட முண்டகண் டனைப்பெரும் பாலைமா வனத்தானைச், 
செவ்வ னேபணிந் திறைஞ்சிலை யென்செய்தாய் தீயவெங் கொடுநெஞ்சே, 
கவ்வ நோயுடற் பரஞ்சுமந் தலைதலிற் கதிவழி பெறலாமே

47

மேவ லார்புரத் தழலெழ நகைத்தவன் விடையுடைப்பெருமான்பொன், 
காவ லாற்கொரு தோழமை யுற்றவன்காமத கனஞ்செய்தோன், 
பாவ லார்புகழ் பாலைமா வனத்தவன் பணிபவர் தமக்கென்று, 
மேவ லார்மக வானயன் மாலென விசைத்திடு மிதுமெய்யே.

48

மெய்யை மெய்யெனக் காணல ருண்மையா மெய்யையே யுறக்காண்பார், 
பொய்யை யாதரிப் பார்முக நோக்குறார் பொலிவுமே தகப்பூண்பார், 
பையை மேவராப் பாயலான் முதலிய பலர்திருக் குறிக்கொள்ளார், 
செய்யை மேவுநம் பாலைவ னேசனைச் சிந்திக்கு மடியாரே.

49

அடிய ராதலே நன்றுநன் றுள்ளமே யரவஞ்சு மிடியேற்றுக், 
கொடிய ராதலிற் றாமரை மலரணைக் கோளரா தலிற்செங்க,
ணெடிய ராதலி னிவ்வுரை கடைப்பிடி நிலவிய வெண்ணீற்றுப்,
பொடிய ராவலிற் சூழ்பெரும் பாலையூர்ப் புண்ணிய னடியார்க்கே.

50

வேறு.
அடியர் காணமன் றாடிடு மழகர்வெண் ணீற்றுப்
பொடியர் வாளராக் குலந்தபு புட்கொடி பொறுக்குங்
கொடியர் பாலைமா வனத்தவர் திருவருள் குறியாக்
கடிய ரெவ்வலி கொடுகடப் பார்பவக் கடலே.

51

கடல கத்தெழுந் தெங்கணும் பரந்தவெங் கடுவின்
மிடல டக்கிய கண்டரைத் தொண்டரை வெருட்டு
மடல் படைத்தவெங் கூற்றினைப் பாற்றிய வவரை
யுடல் படைத்தபே றுறத்துதி பாலையூ ருற்றே.

52

உற்ற செஞ்சடை யொருபுற மொருபுறங் கருமை
செற்ற பூங்குழ லொருபுறங் கழன்மணிச் சிலம்பு
பொற்ற வோர்புறம் புலியத ளொருபுறம் பட்டு
மற்ற வோர்புறம் பாலையூர் மருவுமெம் மாற்கே.

53

மாலு நான்முகத் தொருவனும் விலங்குரு வாய்த்துங்
கோலும் வார்சிறைப் புள்ளுரு வாகியுங் குணங்கள்
சாலுந் தாண்முடி கண்டில ராயினுந் தனித்தோர்க்
காலும் பாலையா னெத்திறத் தினுமெளி யவனே.

54

எளிய னன்பருக் கெங்கணு மாய்நிறைந் தியலு 
மொளியன் மாமறை முடியம ரொப்பிலா னந்தக்
களியன் பாலையூர்க் கருத்தன்மா நடம்பயில் பரமா
வெளிய னென்பவ ரிம்மையே யடைவது வீடே.

55

வீடு வேண்டினு மெய்துவர் விண்ணகம் புரக்கும்
பீடு வேண்டினு மெய்துவர் தனதனிற் பிறங்கு
மாடு வேண்டினு மெய்துவ ரயனரி வாழ்க்கைப்
பாடு வேண்டினு மெய்துவர் பாலையாற் பணிந்தே.

56

பணியுந் திங்களும் பயின்றமர் செஞ்சடைப் பரமா
வணியும் பாலையூ ரண்ணலே யன்றொரு துரும்பாற்
றணிய வானவர் வலிதனை யளந்தநா ணின்னைத்
துணிய வோர்ந்திலர் யாங்களோ வுணர்பவர் சொல்லே.

57

சொல்லத் தக்கது நின்புக ழடிமையிற் றுனைந்து
புல்லத் தக்கது நின்கழல் புண்ணிய மிகையால்
வெல்லத் தக்கது மலந்திருப் பாலையூர் விமலா 
கொல்லத் தக்கது கூற்றினை நலங்குறிப் பவரே.

58

குறிகு ணங்கடந் தவனிரா மயன்குணக் குன்ற
னறிவன் ஞாதுரு ஞானஞே யங்களற் றறாத
மறிவி னன்னிலை யாளருக் கொளிமய மானோன்
பொறிவி ளங்கிய பாலையூர் மருவுமற் புதனே.

59

அற்ப வாழ்வினை மதியன்மி னலரகத் தமர்வான்
கற்ப மெண்ணில கண்டமர் பாலையூர்க் கடவுள்
சொற்ப தங்கடந் தவன் றுணை யடிமலர் பற்றி
நிற்ப வுண்டுகா ணிகரினின் மலப்பெரு வாழ்வே.

60

வேறு.
வாழ வேண்டிய வையகத் தீர்வினை
போழ வேண்டினும் புந்திகொள் ளீரின்பத்
தாழ வேண்டினு மையன்பொற் பாலையூர்
சூழ வேண்டித் துனைந்து நடமினே.

61

நடலை வாழ்வினை நம்புத லோவுமின்
சுடலை சேர்ந்து சுமந்த வுடற்பொறை
யடலை யாமுனம் பாலை யடுத்துவேல்
விடலை தாதையைப் போற்றி விழைமினே.

62

விழையு மால்வரை மெல்லிய லாளொடுந்
தழையு மால்விடை மேல்வரு தம்பிரான்
குழையும் பூவுங்கொள் பாலையைக் கூடிலோ
ருழையு மொண்மழு வுந்தரு முண்மையே.

63

உண்மை யோதி யுளங்குளிர் வித்தியால்
வெண்மை மேய வினையுடை யேனுக்குப்
பெண்மை மேவிய பாகப் பெருந்தகாய்
வண்மை மேவிய பாலை வனத்தனே.

64

வனத்தை மேவி வளிமுத லுண்டுடற்
கனத்தை வாட்டுத லாற்பயன் காண்பதெ
னனத்தை யார்வயற் பாலையூ ரண்ணல்பான்
மனத்தை வைத்துண் டுடுப்பினு மாட்சியே.

65

மாட்சி மேவிய பாலை வனம்பர
னாட்சி யென்ப தறிந்தன மாங்குறீஇக்
காட்சி யெய்திக் கலந்து களிப்புறப்
பூட்சி வீழுமுன் போதுவம் வாநெஞ்சே.

66

நெஞ்ச மேயிது கேணி னினைப்பெலாம்
வஞ்ச மேயது மாற்றி வயறொறு
மஞ்ச மேபொலி பாலை யரனகழ
றஞ்ச மேகொள் சமானநிற் கில்லையே.

67

இல்லை யுண்டென் றிசைக்கு மமணர்முற்
றொல்லை வல்வினை யாளர்தஞ் சொல்லொரீஇ
யல்லை நேர்களத் தண்ணறன் பாலையூர்
நல்லை மேவினெஞ் சேநலம் வாய்க்குமே.

68

வாயுங் கையு மனமும் படைத்தனை
தாயுந் தந்தையு மாய சதாசிவ
னேயும் பாலை யிடந்துதி செய்பணி
தோயு மாறெண் ணுயிரே துலங்கவே.

69

வேத நான்கும் விரித்துரை செய்யவும்
போதம் வேறு படுநர் புலைமதஞ்
சாத மென்றடை யோந்தழை பாலையூர்
நாத னாரடித் தொண்டு நயப்பமே.

70

வேறு.
நயமலி பாலையூர் நங்கள் கோன்மறை
வயமலி பரிமிசை வருபி ரானடிக்
குயமலி பத்திசெ யுண்மை யாளரே
சயமலி முத்தியிற் சார்ந்து வாழ்வரே.

71

வரைவரு பார்ப்பதி மணாளன் பாலையூர்
விரைவரு கொன்றையான் விழையும் பாதமே
திரைவரு பவக்கடற் செறிந்து வீழ்ந்தவர்
கரைவரு தகைமரக் கலமென் பாரரோ.

72

அரவணி சடையனை யாழி யேந்துபு
புரவணி விடையனைப் புகுந்து பாலையூ
ருரவணி மதியினன் குவப்பப் போற்றுவா
ரிரவணி கருமல மெமக்கு மாற்றுவார்.

73

வாரணி வனமுலை மங்கை பங்கனை
நீரணி பாலையூர் நிமல னைக்கடற்
காரணி கண்டனைக் கைதொ ழாதவ
ரேரணி யுடல்பொறை யிந்தப் பூமிக்கே.

74

மிக்கவர் பாலையூர் விமலர் மார்பணி
யக்கவர் புகழ்விரும் பாத மூடர்துன்
பக்கவர் குழிவிழாப் பதைப்ப ரின்பத்துப்
புக்கவ ருயவதெப் போது தேரினே.

75

தேர்வரு கதிர்மதி செய்ய தீயெனப்
பேர்தரு கண்ணினார் பிறங்கும் பாலையூ
ரேர்தரு மாபணிந் திறைஞ்சி னென்செய்வான்
கார்தரு கடாமிசைக் கடுகுங் காலனே.

76

காலனைக் காய்ந்தசெங் காலனைத்திரி
சூலனைப் பாலைமா வனத்துத் தோன்றலைச்
சீலனை யன்றறந் தெரிப்ப வைகிய
வாலனை யறிதரா ரறிவென் னாவதே.

77

ஆவது மழிவது மவன தாணையென்
றேவருங் கொள்ளநீ யிகலி யென்செய்தாய்
மாவது மலர்செறி பாலை வள்ளறா
ளோவரு மன்புபூண் டுறத்தொ ழாய்நெஞ்சே.

78

சேவுறத் திகழ்பவன் றிகழும் பாலையூர்
மேவுறத் திருவரும் விஞ்சை மேவிடும்
பாவுறச் செறிமல பந்த நீங்கிடுந்
தேவுறற் கருங்கதிச் செல்வ மெய்துமே.

79

எய்த்தனம் பாலையூ ரிறைவற் கன்புளம்
வைத்தன மும்மல வாழ்க்கை யார்தமைப்
புய்த்தனம் வேறொரு புந்தி செய்கிலோ
முய்த்தன மனமவ னொளிசெய் தாள்கட்கே.

80

வேறு.
தாளா தாமரை ததையும் பாலையூர்க்
காள கண்டனார் கரும லந்தவிர்த்
தாள வல்லர்நா மங்கு மேவியே
நீள வின்பமார் தருவ நெஞ்சமே.

81

மேலை நாள்வினை முழுதும் வீதரு
மாலை வார்குழன் மடந்தை பாகனைச்
சோலை சூழ்குயிற் றுழனி யோங்கிடும்
பாலை யூரிடைப் படர்ந்து போற்றினே.

82

போற்றி வானவர் துதிக்கும் புண்ணிய
னாற்றி யைந்தொழி லருண டாத்துவோன்
பாற்றி வெவ்வினை பாலை வாழ்பவ
னீற்றி நம்வினை நிரப்பு மின்பமே.

83

இன்பம் வேண்டுமே வீது செய்ம்மினோ
துன்ப மேவிமா ழாந்து சோர்தரீ
ரென்ப றாதபூ ணிறைவன் பாலையூ
ரன்ப ரோடினி தடைந்து வாழுமே.

84

வாழி பாலையூர் வைகு மெம்பிரான்
சூழி யானைத்தோல் போர்த்த சுந்தரன்
வீழி வாயுமை பங்கன் மென்கழற்
றாழி னல்லதை யின்பஞ் சாருமே.

85

சாரு வாகமே யாதி சார்ந்துளீர்
தேரு மாறிலா தலைதல் செவ்வியே
யோரும் பாலையூ ரொருவன் றாளிணை
கூரு மன்பராய்க் குறிக்கொண் டுய்ம்மினே.

86

மின்னை நேர்தரத் தோன்றி வீந்திடு
மென்னை யிவ்வுட லெண்ணி லீர்கொலோ
பொன்னை நேர்சடைப் புனிதன் பாலையூ
ரன்னை பாகனை யடைத னன்மையே.

87

ஏல வார்குழ லிறைவி பாகனைக்
கால காலனைக் காள கண்டனைப்
பால வாள்விழிப் பாலை யூரனை
யேல வேத்துவார்க் கில்லை துன்பமே.

88

துன்ன லார்புரஞ் சுட்ட வெம்பிரான்
பன்ன லாருளம் பதித ராதவ
னன்ன மார்வயற் பாலை யண்ணலைச்
சொன்ன பேரெலாந் தூய முத்தரே.

89

முத்த ராகுவர் மூட ராயவுன்
மத்த ரோடளாம் வாஞ்சை நீத்தெழீஇப்
பத்தர் தம்பிரான் பாலை யூர்புகுஞ்
சித்த ராவரேற் றேவர் போற்றவே.

90

வேறு.

போற்றுநெடு மாலயனுக் கரியானைப் பெரியானைப் புவனமெல்லாஞ்,
சாற்றுபவன் முதலாய வரியபெய ருடையானைத் தரணிவேத,
மாற்றுநெடுந் தேர்பரியாக் கொண்டானைப் பாலைவனத் தமர்ந்துபல்பூ,
வேற்றுமவர்க் கருள்சுரக்கு மவனையெண்ணா தித்தனைநா ளிரித் தோம் வீணே.

வீணாக நாள்பலவுங் கழித்தனம்பொற் பாலையூர் விரும்பிச்சார்ந்து,
நீணாகம் பூண்டானைக் கண்டிறைஞ்சி யவனடியார்நேயத் தாழ்ந்து,
கோணாக மொழிதரத்தீர்ந் தேன்றுபணி விடைபுரிந்து குலவப் போற்றா,
தாணாகப் பிறந்ததனுக் கிவ்வுலகி லெப்பயனை யடைந் தாம் யாமே.

அடையானை யுரிபோர்த்த பெருமானை யொருமானை யங்கை யேந்துஞ்,
சடையானை வெஞ்சூலப் படையானை யுலகமெனத்தக்க யாவு,
முடையானை நெடும்பாலை வனத்தானை யெழுவிடையு மொருங்கு சாய்த்த,
விடையானைப் பூசிக்கப் பெற்றவரே நற்றவர் மேன் மேலுந் தானே.

மேலாய பொன்னுலகிற் சுதன்மையடைந் தைந்தருவின் விழையு நீழற்,
பாலாய வரியணைமே லிருநிதிய முதலனைத்தும் பணியின் மேவ,
மாலாய வரமகளிர் போகநுகர்ந் திருப்பதினும் வளமை மேய,
தாலாய பாலைவனத் தழகனடி தொழுதைய மருந்தும் பேறே.

அருந்தவம்பன் னாளும்வன மாதியதேத் திருந்துநனியமைந்தா ரேனும்,
பெருந்தவமா மறைபலகற் றாரெனினு மகம்புரிந்த பெரிய ரேனு,
மிருந்தவர்சூழ் பாலைவனத் தெம்மானுக் கன்பினராயெழில் விபூதி,
பொருந்தவவிர் கண்மணிபூ ணாதவரே லவரெமக்கோர் பொருளா காரே.

பொருளாகக் கொலைகளவு முதலியபா தகம்புரியும் புலைய ரேனும்,
வெருளாகத் தொழுமுதலாப் பலநோயு மீடழிக்கும் வீண ரேனு,
மிருளாகத் திலர்பரவு பாலைவனப் பெருமானுக் கென்றுந்தீராத்,
தெருளாகப் புரியன்ப ரெனினவரே நமையாளுந் தேவ ரன்றே

அன்றுமதி லொருமூன்று மழலாட நகைத்தநினக் கரிதோ நாயேற்,
றுண்டுகொடு மலமூன்றுந் துகளாக நகைத்திடுதல்சொல்லாய் வஞ்சக்,
கன்றுகொடு கனியுகுத்தோன் காணாத பாலைவனக் கடவுளேறே,
மன்றுமறை முடியுநிறை வளரொளியே பெருங்கருணை வாழ்க்கைக் கோவே.

கோவேநின் புகழ்பாடேன் பாடுவார் கூட்டத்துங் குறுகேனெங்க,
டேவேயென் றுனைத்துதித்துன் றிருவடிசேர்ந் தவரடியுஞ் சேவித் தேத்தே,
னேவேபோன் றொளிர்விழியார் மயலலையின் மூழ்கிடுவ தென்று மென்றாற்,
பூவேசெய் பாலைவனப் புண்ணியா வுய்யு நெறி புகலு வாயே.

வாயினாற் பலபுகல்வோம் புகன்றவழி யேநடக்கை மறந்தோ மிவ்வா,
றாயினா லினிச்செயலென் னஞ்சேலென் றிரங்கியினி தருள வேண்டும்,
வேயினாற் புரிபசுந்தோ ளுமைபாகா விடைப்பாகா விண்ணந் தோய்ந்து,
காயினாற் பொலிபாலை வனத்திறைவா கடவுளர்தங் கடவு ளானே.

ஆனேறு கொடியுயர்த்தாய் திருப்பாலை வனத்தரசே யடியார் வாழ,
மீனேறு கடலுலகி னெடுங்கருணை மழைபொழியு மேகமானாய்,
மானேறு கரதலத்தா யெனக்கடங்காப் பெருவாழ்வும் வானஞ்சூழுங்,
கானேறு பெருங்கதியு நெடியமால் காணாநின் கமலப் பூவே.

Related Content

திருக்கற்குடிமாமலை மாலை

திருஞானசம்பந்தசுவாமிகள் ஆனந்தக்களிப்பு

திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்

திருவிடைமருதூர்த் திரிபந்தாதி