logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 3 Tiruvarutpa of ramalinga atikal - part-III (verses 1959 - 2570)


திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
மூன்றாம் அருட்பா 

tiruvarutpA of rAmalinga aTikaL
part -III (verses 1959 - 2570)
(in tamil script, TSCII format)

1. திருவடிப் புகழ்ச்சி ( 1959 - 1960 ) 

 காப்பு  
 நேரிசை வெண்பா 
1959இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
...1
 நூற்றுத்தொண்ணூற்றிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் (46) 
1960பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்

பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்
பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்

பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்

பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம் ..... (1/4) 
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்

தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்

சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்

சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம் .....(1/2)
மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்

மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்
மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்

மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்
வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்

மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம் ....(3/4)
இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்

ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்

என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்

என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
(1)
 ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே. 

திருச்சிற்றம்பலம்
-------


2. விண்ணப்பக் கலிவெண்பா ( 1961 - 1962) 

 காப்பு 
.நேரிசை வெண்பா 
1961அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் விடையூறும் எய்தலிலம் தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து.
... 1
 கலிவெண்பா 
1962சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச் (47)
சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே - நற்சிவையாந் ...1
தாயி னுலகனைத்துந் தாங்குந் திருப்புலியூர்க்
கோயி லமர்ந்தகுணக் குன்றமே - மாயமிகும் ...2
வாட்களமுற் றாங்குவிழி மாதர்மய லற்றவர்சூழ்
வேட்களமுற் றோங்கும் விழுப்பொருளே - வாழ்க்கைமனை ...3
நல்வாயி லெங்கு நவமணிக்குன் றோங்குதிரு
நெல்வாயி னின்றொளிரு நீளொளியே - செல்வாய்த் ...4
தெழிப்பாலை வேலைத் திரையொலிபோ லார்க்குங் 
கழிப்பாலை யின்பக் களிப்பே விழிப்பாலன் ...5

கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக்கச் சோதிதரு
நல்லூர்ப் பெருமணம்வாழ் நன்னிலையே - சொல்லுந் . ..6
தயேந்திர ருள்ளத் தடம்போ லிலங்கும்
மயேந்திரப் பள்ளியின்ப வாழ்வே - கயேந்திரனைக் ...7
காயலுறா தன்றுவந்து காத்தோன் புகழ்முல்லை
வாயிலி னோங்கு மணிவிளக்கே - மேய ...8
பலிக்காவூர் தோறும் பதஞ்சேப்பச் சென்று
கலிக்காமூர் மேவுங் கரும்பே - வலிக்காலில் ...9
பாய்(48)க்காடு கின்றவொரு பச்சை முகில்பரவுஞ் 
சாய்க்காடு மேவுந் தடங்கடலே - வாய்க்கமையச் ... 10

சொல்லவ னீச்சரங்கு தோயவும்ப ராம்பெருமைப்
பல்லவ னீச்சரத்தெம் பாவனமே -நல்லவர்கள் ...11
கண்காட்டு நெற்றிக் கடவுளே யென்றுதொழ
வெண்காட்டின் மேவுகின்ற மெய்ப்பொருளே - தண்காட்டிக் ..12
கார்காட்டித் தையலர்தங் கண்காட்டிச் சோலைகள்சூழ்
சீர்காட்டுப் பள்ளிச் சிவக்கொழுந்தே - பார்காட் ..13
டுருகாவூ ரெல்லா மொளிநயக்க வோங்குங்
குருகாவூர் வெள்ளடையெங் கோவே - அருகாத ...14
கார்(49)காழி னெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே - ஓர்காழிப் ...15

பாலற்கா வன்று பசும்பொற்றா ளங்கொடுத்த
கோலக்கா மேவுங் கொடையாளா - கோலக்கா ...16
உள்ளிருக்கும் புள்ளிருக்கு மோதும் புகழ்வாய்ந்த
புள்ளிருக்கும் வேளூர்ப் புரிசடையாய் - கள்ளிருக்கும் ...17
காவின் மருவுங் கனமுந் திசைமணக்கும்
கோவின் மருவுகண்ணார் கோயிலாய் - மாவின் ...18
இடைமுடியின் றீங்கனியென் றெல்லின் முசுத்தாவும்
கடைமுடியின் மேவுங் கருத்தா - கொடைமுடியா ...19
நன்றியூ ரென்றிந்த ஞாலமெலாம் வாழ்த்துகின்ற
நின்றியூர் மேவு நிலைமையனே - ஒன்றிக் ...20

கருப்புன்கூ ருள்ளக் கயவர் நயவாத்
திருப்புன்கூர் மேவுஞ் சிவனே - உருப்பொலிந்தே ...21
ஈடூரி லாதுயர்ந்த ஏதுவினா லோங்குதிரு
நீடூ ரிலங்கு நிழற்றருவே - பீடுகொண்டு ...22
மன்னியூ ரெல்லாம் வணங்க வளங்கொண்ட
அன்னியூர் மேவு மதிபதியே - மன்னர்சுக ...23
வாழ்விக் குடிகளடி மண்பூச லாலென்னும்
வேழ்விக் குடியமர்ந்த வித்தகனே - சூழ்வுற்றோர் ...24
விண்ணெதிர்கொண் டிந்திரன்போன் மேவிநெடு நாள்வாழப்
பண்ணெதிர்கொள் பாடிப் பரம்பொருளே - நண்ணும் ...25

வணஞ்சே ரிறைவன் மகிழ்ந்து வணங்கும்
மணஞ்சேரி நீங்கா மகிழ்வே - மணஞ்சேர்ந்துன் ...26
வாரட்ட கொங்கை மலையா ளொடுங்கொறுக்கை
வீரட்ட மேவும் வியனிறைவே - ஓரட்ட ...27
திக்குங் கதிநாட்டிச் சீர்கொள்திருத் தொண்டருளம்
ஒக்குங் கருப்பறிய லூரரசே - மிக்கதிரு ...28
மாவளருஞ் செந்தா மரைவளருஞ் செய்குரக்குக்
காவளரு மின்பக் கனசுகமே - தாவுமயல் ...29
காழ்கொ ளிருமனத்துக் காரிருணீத் தோர்மருவும்
வாழ்கொளி புத்தூர்(50) மணிச்சுடரே - தாழ்வகற்ற ...30

நண்ணிப் படிக்கரையர் நாடோ றும் வாழ்த்துகின்ற
மண்ணிப் படிக்கரைவாழ் மங்கலமே - விண்ணினிடை ...31
வாமாம் புலியூர் மலர்ச்சோலை சூழ்ந்திலங்கும்
ஓமாம் புலியூர்வாழ் உத்தமமே - நேமார்ந்த ...32
வானாட்டு முள்ளூர் மருவுகின்றோர் போற்றுதிருக்
கானாட்டு முள்ளூர்க் கலைக்கடலே - மேனாட்டும் ...33
தேரையூர்ச் செங்கதிர்போற் செம்மணிக ணின்றிலங்கும்
நாரையூர் மேவு நடுநிலையே - பாரில் ...34
உடம்பூர் பவத்தை யொழித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்னிரண்டு கண்ணே - தடம்பொழிலில் ...35

கொந்தணவுங் கார்க்குழலார் கோலமயிற் போலுலவும்
பந்தண நல்லூர்ப் பசுபதியே - கந்தமலர் ...36
அஞ்சனூர்(51) செய்ததவத் தாலப் பெயர்கொண்ட
கஞ்சனூர் வாழுமென்றன் கண்மணியே - அஞ்சுகங்கள் ...37
நாடிக்கா வுள்ளே நமச்சிவா யம்புகலும்.
கோடிக்கா மேவுங் குளிர்மதியே - ஓடிக் ...38
கருமங்க லக்குடியிற் காண்டுமென வோதும்
திருமங்க லக்குடியில் தேனே - தரும ...39
மனந்தாள் மலரை மருவுவிப்போர் வாழும்
பனந்தாளிற் பாலுகந்த பாகே - தினந்தாளிற் ..40

சூழ்திருவாய்ப் பாடியங்கு சூழ்கினுமா மென்றுலகர்
வாழ்திருவாய்ப் பாடிஇன்ப வாரிதியே - ஏழ்புவிக்குள் ...41
வாய்ஞ்ஞலூ ரீதே மருவவென வானவர்சேர்
சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே - வாஞ்சையுறும் ...42
சீவன் குடியுறவிச் சீர்நகரொன் றேயெனுஞ்சீர்த்
தேவன் குடிமகிழ்ந்த தெள்ளமுதே - ஓவில் ...43
மயலூர் மனம்போல் வயலிற் கயலூர்
வியலூர் சிவானந்த வெற்பே - அயலாம்பல் ...44
மட்டையூர் வண்டினங்கள் வாய்ந்து விருந்துகொளும்
கொட்டையூ ருட்கிளருங் கோமளமே - இட்டமுடன் ...45

என்னம்ப ரென்னம்ப ரென்றயன்மால் வாதுகொள
இன்னம்பர் மேவிநின்ற என்னுறவே - முன்னம்பு ...46
மாற்கும் புறம்பியலா வாய்மையருள் செய்யவுளம்
ஏற்கும் புறம்பியம்வாழ் என்னுயிரே -மாற்கருவின் ...47
கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத்தொண்டர்
எண்விசைய மங்கையில்வாழ் என்குருவே - மண்ணுலகில் ...48
வைகாவூர் நம்பொருட்டான் வைகியதென் றன்பர்தொழும்
வைகாவூர் மேவியவென் வாழ்முதலே - உய்யும்வகைக் ...49
காத்தும் படைத்துங் கலைத்துநிற்போர் நாடோ றும்
ஏத்துங் குரங்காட்டின்(52) என்னட்பே - மாத்தழைத்த ...50

வண்பழனத் தின்குவிவெண் வாயிற்றேன் வாக்கியிட
உண்பழனத் தென்றன் உயிர்க்குயிரே -பண்பகன்ற ... 51
வெய்யாற்றி னின்றவரை மெய்யாற்றி னேற்றுதிரு
ஐயாற்றின் மேவியஎன் னாதரவே - பொய்யாற்றி ...52
மெய்த்தான நின்றோர் வெளித்தான மேவுதிரு
நெய்த்தானத் துள்ளமர்ந்த நித்தியமே - மைத்த ...53
கரும்புலியூர்க் காளையொடுங் கண்ணோட்டங் கொள்ளும்
பெரும்புலியூர் வாழ்கருணைப் பேறே - விரும்பிநிதம் ...54
பொன்னுங்(53) கௌத்துவமும் பூண்டோ ன் புகழ்ந்தருளை
மன்னு மழபாடி வச்சிரமே - துன்னுகின்ற ...55

நாய்க்குங் கடையேன் நவைதீர நற்கருணை
வாய்க்கும் பழுவூர் மரகதமே - தேய்க்களங்கில்(54) ...56
வானூர் மதிபோன் மணியாற் குமுதமலர்
கானூ ருயர்தங்கக் கட்டியே - நானூறு ...57
கோலந் துறை(55) கொண்ட கோவையருள் கோவைமகிழ் 
ஆலந் துறை(56)யின் அணிமுத்தே - நீலங்கொள் ...58
தேந்துறையி லன்னமகிழ் சேக்கை பலநிலவு
மாந்துறைவாழ் மாணிக்க மாமலையே - ஏந்தறிவாம் ...59
நூற்றுறையில் நின்றவர்கள் நோக்கிமகிழ் வெய்துதிருப்
பாற்றுறையில் நின்ற பரஞ்சுடரே - நாற்றிசையுந் ... 60

தேனைக்கா வுள்மலர்கள் தேங்கடலென் றாக்குவிக்கும்
ஆனைக்கா மேவியமர் அற்புதமே - மானைப்போல் ...61
மைஞ்ஞீல வாட்கண் மலராள் மருவுதிருப்
பைஞ்ஞீலி மேவும் பரம்பரமே - எஞ்ஞான்றும் ...62
ஏச்சிரா மங்கலத்தோ டின்பந் தரும்பாச்சி
லாச்சிரா மஞ்சேர் அருள்நிலையே - நீச்சறியா ...63
தாங்கோய் மலைப்பிறவி யார்கலிக்கோர் வார்கலமாம்
ஈங்கோய் மலைவாழ் இலஞ்சியமே - ஓங்காது ...64
நாட்போக்கி நிற்கு நவையுடையார் நாடரிதாம்(57)
வாட்போக்கி மேவுகின்ற வள்ளலே - கோட்போக்கி ...65

நில்லுங் கடம்ப நெறிபோ லெனப்பூவை
சொல்லுங் கடம்பந் துறைநிறைவே - மல்லலொடு ...66
வாழும் பராய்த்துறைவான் மன்னவரு மன்னவருஞ்
சூழும் பராய்த்துறைவாழ் தோன்றலே - கூழும்பல் ...67
நற்குடியு மோங்கி நலம்பெருகு மேன்மைதிருக்
கற்குடியிற் சந்தான கற்பகமே - சிற்சுகத்தார் ...68
பிற்சநந மில்லாப் பெருமை தருமுறையூர்ச்
சற்சனர்சேர் மூக்கீச் சரத்தணியே - மற்செய் ...69
அராப்பள்ளி மேவு மவனின்று வாழ்த்தும்
சிராப்பள்ளி ஞானத் தெளிவே - இராப்பள்ளி ...70

நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற
நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற் ...71
கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ்
தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார் ...72
தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோ ர் சூழுந்
திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு ...73
நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும்
ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை ...74
வாந்துருத்தி கொண்டுள் ளனலெழுப்பு வோர்புகழும்
பூந்துருத்தி மேவுசிவ புண்ணியமே - காந்தருவத் ...75

தண்டியூர் போற்றுந் தகைகாசிக் கட்செய்து
கண்டியூர் வாழுங் களைகண்ணே - கொண்டியல்பின் ...76
வேற்றுத் துறையுள் விரவா தவர்புகழும்
சோற்றுத் துறையுட் சுகவளமே - ஆற்றலிலாத் ...77
தீதிக் குடியென்று செப்பப் படார்மருவும்
வேதிக் குடி(58) யின்ப வெள்ளமே - கோதியலும் ...78
வன்குடித் திட்டை மருவார் மருவுதிருத்
தென்குடித் திட்டைச் சிவபதமே - நன்குடைய ...79
உள்ளமங்கை மார்மே லுறுத்தா தவர்புகழும்
புள்ளமங்கை வாழ்பரம போகமே - கள்ளமிலஞ் ...80

சக்கரப் பள்ளிதனிற் றாம்பயின்ற மைந்தர்கள்சூழ்
சக்கரப் பள்ளிதனில் தண்ணளியே-மிக்க ...81
அருகாவூர் சூழ்ந்தே அழகுபெற வோங்கும்
கருகாவூர் இன்பக் கதியே-முருகார்ந்த ...82
சோலைத் துறையிற் சுகஞ்சிவநூல் வாசிக்கும்
பாலைத் துறையிற் பரிமளமே-சீலத்தர் ...83
சொல்நூ ரடியப்பர் தூயமுடி மேல்வைத்த
நல்லூ ரமர்ந்தநடு நாயகமே-மல்லார்ந்த ...84
மாவூ ரிரவியின்பொன் வையமள வுஞ்சிகரி
ஆவூரி லுற்றவெங்கள் ஆண்தகையே-ஓவாது ...85

சித்திமுற்ற யோகஞ் செழும்பொழிலிற் பூவைசெயும்
சத்திமுற்ற மேவுஞ் சதாசிவமே-பத்தியுற்றோர் ...86
முட்டீச் சுரத்தின் முயலா வகையருளும்
பட்டீச் சரத்தெம் பராபரமே-துட்டமயல் ...87
தீங்குவிழை யார்தமைவான் சென்றமரச் செய்விக்க
ஓங்குபழை யாறையிலென் னுள்ளுவப்பே-பாங்குபெற ...88
ஆர்ந்த வடவிலையான் அன்னத்தான் போற்றிநிதம்
சார்ந்த வடதளிவாழ் தற்பரமே-சேர்ந்த ...89
மலஞ்சுழி கின்ற மனத்தர்க் கரிதாம்
வலஞ்சுழி வாழ்பொன் மலையே-நிலஞ்சுழியா ...90

தோணத்தில் வந்தோ னுடன்றுதித்து வாழ்கும்ப
கோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே-மாணுற்றோர் ...91
காழ்க்கோட்ட நீங்கக் கருதுங் குடமூக்கிற்
கீழ்க்கோட்ட மேவுமன்பர் கேண்மையே-வாழ்க்கோட்டத் ...92
தேரோண மட்டுந் திகழ்குடந்தை மட்டுமின்றிக்
காரோண மட்டுங் கமழ்மலரே-சீரோங்கும் ...93
யோகீச் சுரர்நின் றுவந்து வணங்குதிரு
நாகீச் சுரமோங்கு நங்கனிவே-ஓகையுளம் ...94
தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண் சூழ்பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே-நீக்கமிலா ...95

நன்குரங் காணு நடையோ ரடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே-புன்குரம்பை ...96
ஏலக் குடிபுகுந்த எம்மனோர்க் குண்மைதரு
நீலக் குடியிலங்கு நிட்களமே-ஞாலத்து ...97
நீடக்கோர் நாளும் நினைந்தேத் திடும்வைகல்
மாடக்கோ யிற்குண் மதுரமே-பாடச்சீர் ...98
வல்ல தமிழ்ப்புலவர் மன்னி வணங்குதிரு
நல்லமகிழ் இன்ப நவவடிவே-இல்லமயல் . ...99
ஆழம்பங் கென்ன வறிந்தோர் செறிந்தேத்தும்
கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே-வீழும்பொய் ...100

தீரா வடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
சீரா வடுதுறையெஞ் செல்வமே-பேராக் ..101
கருத்திருத்தி யேத்துங் கருத்தர்க் கருள்செய்
திருத்துருத்தி இன்பச் செழிப்பே-வருத்துமயல் ...102
நாளு மெழுந்தூர் நவையறுக்கு மன்பருள்ளம்
நீளும் அழுந்தூர் நிறைதடமே-வேளிமையோர் ...103
வாயூரத் தேமா மலர்(59) சொரிந்து வாழ்த்துகின்ற 
மாயூரத் தன்பர் மனோரதமே- தேயா ...104
வளநகரென் றெவ்வுலகும் வாழ்த்தப் படுஞ்சீர்
விளநகர்வா ழெங்கண் விருந்தே- இளமைச் ...105

செறியலூர் கூந்தல் திருவனையா ராடும்
பறியலூர் வாழ்மெய்ப் பரமே- நெறிகொண்டே ...106
அன்பள்ளி யோங்கு மறிவுடையோர் வாழ்த்துஞ்செம்
பொன்பள்ளி வாழ்ஞான போதமே- இன்புள்ளித் ...107
தெள்ளியார் போற்றித் திகழுந் திருநன்னிப்
பள்ளியார்ந் தோங்கும் பரசிவமே - எள்ளுறுநோய் ...108
ஏய வலம்புரத்தை யெண்ணாம லெண்ணுகின்றோர்
மேய வலம்புரத்து மேதகவே - தூயகொடி ...109
அங்காடு கோபுரம்வா னாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவுஞ் சயம்புவே - பொங்குமிருட் ...110

கூறுதிரு வாக்கூர் கொடுப்பனபோற் சூழ்ந்துமதில்
வீறுதிரு வாக்கூர் விளக்கமே - மாறகற்றி ...111
நன்கடையூர் பற்பலவு நன்றிமற வாதேத்தும்
தென்கடையூர்(60) ஆனந்தத் தேறலே - வன்மையிலாச் ...112
சொற்கடவி மேலோர் துதித்தலொழி யாதோங்கு
நற்கடவூர் வீரட்ட நாயகனே - வற்கடத்தும் ...113
வாட்டக் குடிசற்றும் வாய்ப்பதே யில்லையெனும்
வேட்டக் குடிமேவு மேலவனே - நாட்டமுற்ற ...114
வாக்குந் தெளிச்சேரி மாதவத்தர்க் கின்பநலம்
ஆக்குந் தெளிச்சேரி அங்கணனே - நீக்கும் ...115

கரும புரத்திற் கலவா தருள்செய்
தரும புரஞ்செய் தவமே - இருமையினும் ...116
எள்ளாற்றின் மேவாத ஏற்புடையோர் சூழ்ந்திறைஞ்சு
நள்ளாற்றின் மேவியஎன் நற்றுணையே - தெள்ளாற்றின் ...117
நீட்டாறு கொண்டரம்பை நின்று கவின்காட்டும்
கோட்டாறு மேவுங் குளிர்துறையே - கூட்டாக் ...118
கருவம்பர் தம்மைக் கலவாத மேன்மைத்
திருவம்பர் ஞானத் திரட்டே - ஒருவந்தர் ...119
மாகாளங் கொள்ள மதனைத் துரத்துகின்ற
மாகாளாத் தன்பர் மனோலயமே - யோகாளக் ...120

காயச்சூர் விட்டுக் கதிசேர வேட்டவர்சூழ்
மீயச்சூர் தண்ணென்னும் வெண்ணெருப்பே - மாயக் ...121
களங்கோயில் நெஞ்சக் கயவர் மருவா
இளங்கோயின் ஞான இனிப்பே - வளங்கோள ...122
நாடுந் திலத நயப்புலவர் நாடோ றும்
பாடுந் திலதைப் பதிநிதியே - ஆடுமயில் ...123
காம்புரங்கொள் தோளியர்பொற் காவிற் பயில்கின்ற
பாம்புரங்கொள் உண்மைப் பரம்பொருளே - ஆம்புவனம் ...124
துன்னும் பெருங்குடிகள் சூழ்ந்துவலஞ் செய்துவகை
மன்னுஞ் சிறுகுடிஆன் மார்த்தமே - முன்னரசும் ...125

காழி மிழலையருங் கண்டுதொழக் காசளித்த
வீழி மிழலை விராட்டுருவே - ஊழிதொறும் ...126
மன்னியூர் மால்விடையாய் வானவா வென்றுதொழ
வன்னியூர் வாழு மணிகண்டா - இந்நிமிடம் ...127
சிந்துங் கருவலியின் திண்மையென்று தேர்ந்தவர்கள்
முந்துங் கருவிலிவாழ் முக்கண்ணா - மந்தணத்தைக் ...128
காணு மருந்துறையிக் காமர்தல மென்றெவரும்
பேணு பெருந்துறையிற் பெம்மானே - ஏணுடன்கா ...129
ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
நாட்டும் பெருநறையூர் நம்பனே - காட்டும் ...130

பரிசிற் கரைப்புற்றோர் பாங்குபெற வோங்கும்
அரிசிற் கரைப்புத்தூ(61) ரானே - தரிசனத்தெக் ...131
காலுஞ் சிவபுரத்தைக் காதலித்தோர் தங்கள்துதி
ஏலுஞ் சிவபுரத்தி லெம்மானே - மாலுங்கொள் ...132
வெப்புங் கலையநல்லோர் மென்மதுரச் சொன்மாலை
செப்புங் கலயநல்லூர்ச் சின்மயனே - செப்பமுடன் ...133
ஓங்குந் திருத்தொண்டர் உள்குளிர நல்லருளால்
தாங்குங் கருக்குடிவாழ் சங்கரனே - ஆங்ககனந் ...134
தாஞ்சியத்தை(62) வேங்கைத் தலையாற் றடுக்கின்ற
வாஞ்சியத்தின் மேவு மறையோனே - ஆஞ்சியிலா ...135

திந்நிலத்தும் வானாதி யெந்நிலத்து மோங்குபெரு
நன்னிலத்து வாழ்ஞான நாடகனே - மன்னுமலர் ...136
வண்டீச் சுரம்பாடி வார்மதுவுண் டுள்களிக்குங்
கொண்டீச் சுரத்தமர்ந்த கோமானே - கண்டீச ...137
நண்பனையூ ரன்புகழும் நம்பவென உம்பர்தொழத்
தண்பனையூர் மேவுஞ் சடாதரனே - பண்புடனே ...138
எற்குடியா னங்கொண் டிருக்க மகிழ்ந்தளித்த
விற்குடியின் வீரட்ட மேயவனே - சொற்கொடிய ...139
வன்புகலா நெஞ்சின் மருவும் ஒருதகைமைத்
தென்புகலூர் வாழ்மகா தேவனே - இன்பமறை ...140

அர்த்தமா நீக்கரிய வாதார மாகிநின்ற
வர்த்தமா நேச்சரத்து வாய்ந்தவனே - மித்தையுற்ற ...141
காமனதீ சங்கெடவே கண்பார்த் தருள்செய்த
ராமனதீ சம்பெறுநி ராமயனே - தோமுண் ...142
மயற்றூர் பறித்த மனத்தில் விளைந்த
பயற்றூர் திசையம் பரனே - இயற்றுஞ்சீர் ...143
ஆச்சிரமே வுஞ்செங்காட் டங்குடியி னங்கணப
தீச்சரம்வா ழுஞ்சந்த்ர சேகரனே - ஏச்சகல ...144
விண்மருவி னோனை விடநீக்க நல்லருள்செய்
வண்மருகல் மாணிக்க வண்ணனே - திண்மைகொண்ட ...145

மாத்தமங்கை யுள்ளம் மருவிப் பிரியாத
சாத்தமங்கைக் கங்கைச் சடாமுடியோய் - தூத்தகைய ...146
பாகைக்கா ரென்னும் பணிமொழியார் வாழ்த்தோவா
நாகைக்கா ரோணம் நயந்தோனே - ஓகையற ...147
விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே - மிக்கமினார் ...148
வாளூர் தடங்கண் வயல்காட்டி யோங்குங்கீழ்
வேளூரிற் செங்கண் விடையோனே - நீளுவகைப் ...149
பாவூ ரிசையிற் பயன்சுவையிற் பாங்குடைய
தேவூர் வளர்தேவ தேவனே - பூவினிடை ...150

இக்கூடன் மைந்த வினிக்கூட லென்றுபள்ளி
முக்கூடன் மேவியமர் முன்னவனே - தக்கநெடுந் ...151
தேரூ ரணிவீதிச் சீரூர் மணிமாட
ஆரூரி லெங்கள் அருமருந்தே - நீரூர்ந்த ...152
காரூர் பொழிலுங் கனியீந் திளைப்பகற்றும்
ஆரூ ரரனெறிவே ளாண்மையே - ஏரார்ந்த ...153
மண்மண் டலிகர் மருவுமா ரூர்ப்பரவை
உண்மண் டலி(63) எம் உடைமையே - திண்மைக் ...154
களமர் மகிழக் கடைசியர் பாடும் 
விளமர் கொளுமெம் விருப்பே - வளமை ...155

எருக்கரவீ ரஞ்சே ரெழில்வேணி கொண்டு
திருக்கரவீ ரஞ்சேர் சிறப்பே - உருக்க ...156
வருவேளூர் மாவெல்லா மாவேறுஞ் சோலைப்
பெருவேளூர் இன்பப் பெருக்கே - கருமை ...157
மிலையாலங் காட்டு மிடற்றாயென் றேத்தும்
தலையாலங் காட்டுத் தகவே - நிலைகொள் ...158
தடவாயில் வெண்மணிகள் சங்கங்க ளீனும்
குடவாயில் அன்பர் குறிப்பே - மடவாட்கோர் ...159
கூறை(64) யுவந்தளித்த கோவேயென் றன்பர்தொழச்
சேறை யுவந்திருந்த சிற்பரமே - வேறுபடாப் ...160

பாலூர் நிலவிற் பணிலங்கள் தண்கதிர்செய்
நாலூரில் அன்பர்பெறு நன்னயமே - மேலூரும் ...161
நோய்க்கரையுட் செய்யாத நோன்மையோர் சூழ்ந்தகடு
வாய்க்கரையுண் மேவுகின்ற வண்மையே - வாய்த்த ...162
பெரும்பூகந் தெங்கிற் பிறங்க வளங்கொள்ளும்
இரும்பூளை மேவி யிருந்தோய் - விரும்பும் ...163
விரதப் பெரும்பாழி விண்ணவர்க ளேத்தும்
அரதைப் பெரும்பாழி ஆர்ந்தோய் - சரதத்தால் ...164
ஏதும் அவணிவணென் றெண்ணா தவரிறைஞ்சி
ஓதும் அவளிவணல் லூருடையோய் - கோதகன்ற ...165

நீட்டுஞ் சுருதி நியமத்தோர்க் கின்னருளை
நீட்டும் பரிதி நியமத்தோய் - காட்டியநந் ...166
தேவனூ ரென்று திசைமுகன்மால் வாழ்த்துகின்ற
பூவனூர் மேவும் புகழுடையோய் - பூவலகாம் ...167
ஈங்கும்பா தாளமுத லெவ்வுலகு மெஞ்ஞான்றுந்
தாங்கும்பா தாளேச் சரத்தமர்ந்தோய் - ஓங்குபுத்தி ...168
மான்களரி லோட்டி மகிழ்வோ டிருந்தேத்தும்
வான்களரில் வாழு மறைமுடிபே - மேன்மைதரும் ...169
முற்றேமம் வாய்ந்த முனிவர் தினம்பரவும்
சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே - கற்றவர்கள் ...170

எங்குமுசாத் தான மிருங்கழக மன்றமுதல்
தங்குமுசாத் தானத் தனிமுதலே - பொங்குபவ ...171
வல்லலிடும் பாவநத்த மட்டொளிசெய் கின்றதிரு
மல்லலிடும் பாவனத்து மாட்சிமையே - தொல்லைப் ...172
படிக்குள் நோவாத பண்புடையோர் வாழ்த்தும்
கடிக்குளத் தன்பர் களிப்பே - கடிக்குளத்தின் ...173
வண்டலைக்கத் தேனலரின் வார்ந்தோர் தடமாக்கும்
தண்டலைக்குள் நீணெறிச்சிந் தாமணியே - கொண்டலென ...174
மன்கோட்டூர் சோலை வளர்கோட்டூர் தண்பழனத்
தென்கோட்டூர் தேவ சிகாமணியே - தென்கூட்டிப் ...175

போய்வண் டுறைதடமும் பூம்பொழிலுஞ் சூழ்ந்தமரர்
ஆய்வெண் டுமறைமாசி லாமணியே - தோய்வுண்ட ...176
கள்ளம்பூ தாதிநிலை கண்டுணர்வு கொண்டவர்சூழ்
கொள்ளம்பூ தூர்வான் குலமணியே - வெள்ளிடைவான் ...177
வாம்பே ரெயிற்சூழ்ந்த மாண்பாற் றிருநாமம்
ஆம்பே ரெயிலொப்பி லாமணியே - தாம்பேரா ...178
வீட்டிலன்ப ரானந்தம் மேவச் செயுங்கொள்ளிக்
காட்டி லமர்ந்தஎன்கண் காட்சியே - நீட்டுமொளி ...179
ஆங்கூ ரிலைவே லவனா தியர்சூழத்
தேங்கூரில் வாழ்தேவ சிங்கமே - ஓங்குமலை ...180

வல்லிக்கா தார மணிப்புயவென் றன்பர்தொழ
நெல்லிக்கா வாழ்மெய்ந் நியமமே - எல்அல்கண் ...181
சேட்டியத் தானே தெரிந்துசுரர் வந்தேத்து
நாட்டியத் தான்குடிவாழ் நல்லினமே - நாட்டுமொரு ...182
நூறாயி லன்பர்தமை நோக்கி யருள்செய்திருக்
காறாயின் மேலோர் கடைப்பிடியே - வீறாகும் ...183
இன்றாப்பூர் வந்தொட் டிருந்ததிவ்வூ ரென்னவுயர்
கன்றாப்பூர் பஞ்சாக் கரப்பொருளே - துன்றாசை ...184
வெய்ய வலிவலத்தை வீட்டியன்பர்க் கின்னருள்செய்
துய்ய வலிவலத்துச் சொன்முடிபே - நையுமன ...185

மைச்சினத்தை விட்டோ ர் மனத்திற் சுவைகொடுத்துக்
கைச்சினத்தி னுட்கரையாக் கற்கண்டே - நெற்சுமக்க ...186
ஆளிலையென் றாரூர னார்துதிக்கத் தந்தருளும்
கோளிலியின் அன்பர்குலங் கொள்ளுவப்பே - நீளுலகம் ...187
காய்மூர்க்க ரேனுங் கருதிற் கதிகொடுக்கும்
வாய்ழூர்க் கமைந்த மறைக்கொழுந்தே - நேயமுணத் ...188
தேடெலியை மூவுலகுந் தேர்ந்துதொழச் செய்தருளும்
ஈடின்மறைக் காட்டிலென்றன் எய்ப்பில்வைப்பே - நாடுமெனை ...189
நின்னகத்தி யான்பள்ளி நேர்ந்தேனென் றாட்கொண்ட
தென்னகத்தி யான்பள்ளிச் செம்பொன்னே - தொன்னெறியோர் ...190

நாடிக் குழக நலமருளென் றேத்துகின்ற
கோடிக் குழகரருட் கோலமே - நீடுலகில் ...191
நாட்டும் புகழீழ நாட்டிற் பவவிருளை(65)
வாட்டுந் திருக்கோண மாமலையாய் - வேட்டுலகின் ...192
மூதீச் சரமென்று முன்னோர் வணங்குதிருக்
கேதீச் சரத்திற் கிளர்கின்றோய் - ஓதுகின்றோர் ...193
பாலவாய் நிற்கும் பரையோடு வாழ்மதுரை(66)
ஆலவாய்ச் சொக்கழகா னந்தமே - சீலர்தமைக் ...194
காப்பனூ ரில்லாக் கருணையா லென்றுபுகும்
ஆப்பநூர் மேவுசதா னந்தமே - மாப்புலவர் ...195

ஞானபரங் குன்றமென நண்ணிமகிழ் கூர்ந்தேத்த
வானபரங் குன்றலின்பா னந்தமே - வானவர்கோன் ...196
தேமே டகத்தனொடு சீதரனும் வாழ்த்துஞ்சீ
ராமே டகத்தறிவா னந்தமே - பூமீதில் ...197
நற்றவருங் கற்ற நவசித்த ரும்வாழ்த்தி
உற்றகொடுங் குன்றத்தெம் ஊதியமே - முற்றுகதிர் ...198
இத்தூர மன்றி யினித்தூர மில்லையெனப்
புத்தூர் வருமடியார் பூரிப்பே - சித்தாய்ந்து ...199
நாமீச ராகும் நலந்தருமென் றும்பர்தொழும்
ராமீசம்(67) வாழ்சீவ ரத்தினமே - பூமீது ...200

நீடானை சூழும் நிலமன்னர் வாழ்த்துதிரு 
வாடானை மேவுகரு ணாகரமே - சேடான ...201
வானப்பே ராற்றை மதியை முடிசூடுங்
கானப்பேர் ஆனந்தக் காளையே - மோனருளே ...202
பூவணமும் பூமணமும் போலவ மர்ந்ததிருப்
பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே - தீவணத்தில் ...203
கண்சுழிய லென்று கருணையளித் தென்னுளஞ்சேர்
தண்சுழியல் வாழ்சீவ சாக்ஷியே - பண்செழிப்பக் ...204
கற்றாலங் குண்மைக் கதிதருமென் றற்றவர்சூழ்
குற்றாலத் தன்பர் குதுகலிப்பே - பொற்றாம ...205

நல்வேலி சூழ்ந்து நயன்பெறுமொண் செஞ்சாலி
நெல்வேலி உண்மை நிலயமே - வல்வேலை ...206
நஞ்சைக் களத்துவைத்த நாதவெனத் தொண்டர்தொழ(68)
அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே - நெஞ்சடக்கி ...207
ஆன்று நிறைந்தோர்க் கருளளிக்கும் புக்கொளியூர்த்(69)
தோன்றுமவி நாசிச் சுயம்புவே - சான்றவர்கள் ...208
தம்முருகன் பூணுட் டலம்போல வாழ்கின்ற
எம்முருகன் பூண்டி இருநிதியே - செம்மையுடன் ...209
அங்குன்றா தோங்கு மணிகொள் கொடிமாடச்
செங்குன்றூர் வாழுஞ்சஞ் சீவியே - தங்குமன ...210

வஞ்சமாக் கூடல் வரையா தவர்சூழும்
வெஞ்சமாக் கூடல் விரிசுடரே - துஞ்சலெனும் ...211
இன்ன லகற்ற இலங்குபவா னிக்கூடல்
என்னு நணாவினிடை இன்னிசையே - துன்னியருள் ...212
வேண்டிக் கொடுமுடியா மேன்மைபெறு மாதவர்சூழ்
பாண்டிக் கொடுமுடியிற் பண்மயமே - தீண்டரிய ...213
வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த் தவர்சூழ்ந்த
நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே - தங்களற்றின் ...214
தீங்கார் பிறதெய்வத் தீங்குழியில்(70) வீழ்ந்தவரைத்(71)
தாங்கா வரத்துறையில் தாணுவே - பூங்குழலார் ...215

வீங்கானை மாடஞ்சேர் விண்ணென் றகல்கடந்தைத்
தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே - நீங்காது ...216
நீடலை யாற்றூர் நிழன்மணிக்குன் றோங்குதிருக்
கூடலை யாற்றூர்க் குணநிதியே - நாடியவான் ...217
அம்புலியூர் சோலை யணிவயல்க ளோங்கெருக்கத்
தம்புலியூர் வேத சமரசமே - நம்புவிடை ...218
ஆங்குந் தினையூர்ந் தருளாயென் றன்பர்தொழு
தோங்குந் தினையூர் உமாபதியே - தீங்குறுமொன் ...219
(72)னார்புரத்தை வெண்ணகைத்தீ யாலழித்தா யென்றுதொழச்
(73)சோபுரத்தின் வாழ்ஞான தீவகமே - வார்கெடிலச் ...220

சென்னதிகை யோங்கித்(74) திலதவதி யார்பரவும்
மன்னதிகை வீரட்ட மாதவமே - பன்னரிதாம் ...221
ஆவலூ ரெங்களுடை ஆரூர னாரூரா
நாவலூர் ஞானியருண் ஞாபகமே - தேவகமாம் ...222
மன்ற மமர்ந்த வளம்போற் றிகழ்ந்தமுது
குன்ற மமர்ந்தஅருட் கொள்கையே - அன்றகத்தின் ...223
நல்வெண்ணெ யுண்டொளித்த நாரணன்வந் தேத்துகின்ற
நெல்வெண்ணெய் மேவுசிவ நிட்டையே - சொல்வண்ணம் ...224
நாவலர் போற்றி நலம்பெறவே யோங்குதிருக்
கோவலூர் வீரட்டங் கொள்பரிசே - ஆவலர்மா ...225

தேவா இறைவா சிவனே யெனுமுழக்கம்
ஓவா அறையணிநல் லூருயர்வே - தாவாக் ...226
கடையாற்றி னன்பர்தமைக் கல்லாற்றி னீக்கும்
இடையாற்றின் வாழ்நல் இயல்பே - இடையாது ...227
சொல்லூரன் றன்னைத் தொழும்புகொளுஞ் சீர்வெண்ணெய்
நல்லூ ரருட்டுறையின் நற்பயனே - மல்லார்ந்து ...228
மாசுந் துறையூர் மகிபன்முதல் மூவருஞ்சீர்
பேசுந் துறையூர்ப் பிறைசூடீ - நேசமுற ...229
வேற்றா வடுகூ ரிதயத்தி னார்க்கென்றுந்
தோற்றா வடுகூர்ச் சுயஞ்சுடரே - ஆற்றமயல் ...230

காணிக் குழிவீழ் கடையர்க்குக் காண்பரிய
மாணிக் குழிவாழ் மகத்துவமே - மாணுற்ற ...231
பூப்பா திரிகொன்றை புன்னைமுதற் சூழ்ந்திலங்கும்
(75)ஏர்ப்பா திரிப்புலியூர் ஏந்தலே - சீர்ப்பொலியப் ...232
பண்டீச் சுரனிப் பதியே விழைந்ததெனும்
முண்டீச் சுரத்தின் முழுமுதலே - பெண்தகையார் ...233
ஏர்ப்பனங்காட் டூரென் றிருநிலத்தோர் வாழ்த்துகின்ற
சீர்ப்பனங்காட் டூர்மகிழ்நி க்ஷேபமே - சூர்ப்புடைத்த ...234
தாமாத்தூர் வீழத் தடிந்தோன் கணேசனொடும்
ஆமாத்தூர் வாழ்மெய் அருட்பிழம்பே - யாமேத்தும் ...235

உண்ணா முலையாள் உமையோடு மேவுதிரு
அண்ணா மலைவாழ் அருட்சுடரே - கண்ணார்ந்த ...236
நாகம்ப ராந்தொண்ட நாட்டி லுயர்காஞ்சி(76)
ஏகம்ப மேவும்பே ரின்பமே - ஆகுந்தென் ..237
காற்றளிவண் பூமணத்தைக் காட்டும் பொழிற்கச்சி
மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே - நாற்றமலர்ப் ...238
பூந்தண் டளிவிரித்துப் புக்கிசைக்குஞ் சீரோண
காந்தன் றளிஅருட்ப்ர காசமே - சேர்ந்தவர்க்கே ...239
இங்கா பதஞ்சற்று மில்லா தவனேக
தங்கா பதஞ்சேர் தயாநிதியே - மங்காது ...240

மெச்சி நெறிக்கார்வ மேவிநின்றோர் சூழ்ந்ததிருக்
கச்சி நெறிக்காரைக் காட்டிறையே - முச்சகமும் ...241
ஆயுங் குரங்கணின்முட் டப்பெயர்கொண் டோ ங்குபுகழ்
ஏயுந் தலம்வா ழியன்மொழியே - தோயுமன ...242
(77)யோகறலி லாத்தவத்தோ ருன்ன விளங்குதிரு
மாகறலில் அன்பரபி மானமே - ஓகையிலா ...243
(78)வீத்தூர மாவோட மெய்த்தவர்கள் சூழ்ந்ததிரு
ஓத்தூரில் வேதாந்த உண்மையே - பூத்தவிசின் ...244
ஆர்த்தான் பனகத் தவனிந் திரன்புகழ்வன்
பார்த்தான் பனங்காட்டூர் பாக்கியமே - பார்த்துலகில் ...245

இல்ல மெனச்சென் றிரவா தவர்வாழும்
வல்லமகி ழன்பர் வசித்துவமே - சொல்லரிக்குக் ...246
காற்பேறு கச்சியின்முக் காற்பே றிவணென்னும்
மாற்பேற்றி னன்பர் மனோபலமே - ஏற்புடைவாய் ...247
ஊற லடியா ருறத்தொழுது மேவுதிரு
ஊற லழியா உவகையே - மாறுபடு ...248
தீது மிலம்பயங்கோட் டீரென் றடியர்புகழ்
ஓது மிலம்பயங்கோட் டூர்நலமே - தீதுடைய ...249
பொற்கோலம் ஆமெயிற்குப் போர்க்கோலம் கொண்டதிரு
விற்கோலம் மேவுபர மேட்டிமையே - சொற்போரில் ...250

ஓலங்காட் டும்பழைய னூர்நீலி வாதடக்கும்
ஆலங்காட் டிற்சூழ் அருள்மயமே - ஞாலம்சேர் ...251
மாசூர் அகற்றும் மதியுடையோர் சூழ்ந்ததிருப்
பாசூரில் உண்மைப் பரத்துவமே - தேசூரன் ...252
கண்பார்க்க வேண்டுமெனக் கண்டூன்று கோற்கொடுத்த
வெண்பாக்கத் தன்பர்பெறும் வீறாப்பே - பண்பார்க்கு ...253
நள்ளிப் பதியே நலந்தருமென் றன்பர்புகுங்
கள்ளிற் பதிநங் கடப்பாடே - எள்ளலுறுங் ...254
கோளத்தி நீக்குங் குணத்தோர்க் கருள்செய்திருக்
காளத்தி ஞானக் களஞ்சியமே - ஆள்அத்தா ...255

வெற்றியூ ரென்ன வினையேன் வினைதவிர்த்த
ஒற்றியூர் மேவியஎன் உள்ளன்பே - தெற்றிகளில் ...256
பொங்குமணிக் கால்கள் பொலஞ்செய்திரு வொற்றிநகர்
தங்குஞ் சிவபோக சாரமே - புங்கவர்கள் ...257
சேர்ந்துவலங் கொள்ளுந் திருவொற்றி யூர்க்கோயிற்
சார்ந்து மகிழ்அமுத சாரமே - தேர்ந்துலகர் ...258
போற்றுந் திருவொற்றிப் பூங்கோயிற் குட்பெரியோர்
சாற்றும் புகழ்வேத சாரமே - ஊற்றுறுமெய் ...259
அன்புமிகுந் தொண்டர்குழு ஆயும்வலி தாயத்தில்
இன்பமிகு ஞான இலக்கணமே - துன்பமற ...260

எல்லைவாயற் குள்மட்டும் ஏகில்வினை யேகுமெனும்
முல்லைவாயிற் குள்வைத்த முத்திவித்தே - மல்லல்பெறு ...261
வேற்காட்ட ரேத்துதிரு வேற்காட்டின் மேவியமுன்
நூற்காட் டுயர்வேத நுட்பமே - பாற்காட்டும் ...262
ஆர்த்திபெற்ற மாதுமயி லாய்ப்பூசித் தார்மயிலைக்
கீர்த்திபெற்ற நல்வேத கீதமே - கார்த்திரண்டு ...263
வாவுகின்ற சோலை வளர்வான்மி யூர்த்தலத்தில்
மேவுகின்ற ஞான விதரணமே - தூவிமயில் ...264
ஆடும் பொழிற்கச்சூ ராலக்கோ யிற்குளன்பர்
நீடுங் கனதூய நேயமே - ஈடில்லை ...265

என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
மன்னுஞ் சிவானந்த வண்ணமே - நன்னெறியோர் ...266
துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
முன்னுமறி வானந்த மூர்த்தமே - துன்னுபொழில் ...267
அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே - எம்மதமும் ...268
சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே - தேர்ந்தவர்கள் ...269
தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே - பத்தியுள்ளோர் ...270

எண்ணும் புகழ்கொள் இரும்பைமா காளத்து
நண்ணுஞ் சிவயோக நாட்டமே - மண்ணகத்துள் ...271
கோபலத்திற் காண்பரிய கோகரணங் கோயில்கொண்ட(97)
மாபலத்து மாபலமா மாபலமே - தாபமிலாப் ...272
பாகியற்சொல் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில்(80)
யோகியர்க ளேத்திடவாழ் ஒப்புரவே - போகிமுதல் ...273
பாடியுற்ற நீலப் பருப்பதத்தில் நல்லோர்கள்
தேடிவைத்த தெய்வத் திலகமே - நீடுபவம் ...274
தங்கா தவனேக தங்கா பதஞ்சேர்ந்த
நங்கா தலான நயப்புணர்வே - சிங்காது(81) ...275

தண்ணிறைந்து நின்றவர்தாஞ் சார்திருக்கே தாரத்திற்
பண்ணிறைந்த கீதப் பனுவலே - எண்ணிறைந்த ...276
சான்றோர் வணங்குநொடித் தான்மலையில் வாழ்கின்ற
தேன்றோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த ...277
இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும்
வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல் ...278
தாய்க்குங் கிடையாத தண்ணருள்கொண் டன்பருளம்
வாய்க்குங் கயிலை மலையானே - தூய்க்குமரன் ...279
தந்தையே என்னருமைத் தந்தையே தாயேயென்
சிந்தையே கோயில்கொண்ட தீர்த்தனே - சந்தமிகும் ...280

எண்டோ ளுடையாய் எனையுடையாய் மார்பகத்தில்
வண்டோ லிடுங்கொன்றை மாலையாய் - தொண்டர்விழி ...281
உண்ணற் கெளியாய் உருத்திரன்மா லாதியர்தங்
கண்ணிற் கனவினிலுங் காண்பரியாய் - மண்ணுலகில் ...282
என்போன் றவர்க்கும் இருள்நீக்கி இன்புதவும்
பொன்போன்ற மேனிப் புராதனனே - மின்போன்ற ...283
செஞ்சடையாய் மூவருக்கும் தேவருக்கு மியாவருக்கும்
அஞ்சடையா வண்ணம் அளிப்போனே - விஞ்சுலகில் ...284
எல்லார்க்கு நல்லவனே எல்லாஞ்செய் வல்லவனே
எல்லார்க்கும் ஒன்றா யிருப்போனே - தொல்லூழி ...285

ஆர்ந்த சராசரங்க ளெல்லா மடிநிழலில்
சேர்ந்தொடுங்க மாநடனஞ் செய்வோனே - சார்ந்துலகில் ...286
எத்தேவர் மெய்த்தேவ ரென்றுரைக்கப் பட்டவர்கள்
அத்தேவர்க் கெல்லாமுன் னானோனே - சத்தான ...287
வெண்மைமுதல் ஐவணமு மேவிஐந்து தேவர்களாய்த்
திண்மைபெறும் ஐந்தொழிலுஞ் செய்வோனே - மண்முதலாம் ...288
ஐந்தா யிருசுடரா யான்மாவாய் நாதமுடன்
விந்தா கியெங்கும் விரிந்தோனே - அந்தணவெண் ...289
நீறுடையா யாறுடைய நீண்முடியாய் நேடரிய
வீறுடையாய் நின்றனக்கோர் விண்ணப்பம் - மாறுபட ...290

எள்ள லடியேன் எனக்குள் ஒளியாமல்
உள்ள படியே யுரைக்கின்றேன் - விள்ளுறுமியான் ...291
வன்சொ லுடன்அன்றி வள்ளலுன தன்பர்தமக்
கின்சொ லுடன்பணிந்தொன் றீந்ததிலை - புன்சொலெனும் ...292
பொய்யுரைக்க வென்றாற் புடையெழுவேன் அன்றியொரு
மெய்யுரைக்க வென்றும் விழைந்ததிலை - வையகத்தில் ...293
பொல்லா விரதத்தைப் போற்றியுவந் துண்பதல்லால்
கொல்லா விரதத்தைக் கொண்டதிலை - அல்லாதார் ...294
வன்புகழைக் கேட்க மனங்கொண்ட தல்லாமல்
நின்புகழைக் கேட்க நினைந்ததிலை - வன்புகொண்டே ...295

இன்னடிக்கு நுண்ணிடையார்க் கேவல்புரிந் தேனலதுன்
பொன்னடிக்குத் தொண்டு புரிந்ததிலை - பன்னுகின்ற ...296
செக்குற்ற எள்ளெனவே சிந்தைநசிந் தேனலது
முக்குற்றந் தன்னை முறித்ததிலை - துக்கமிகுந் ...297
தாவில் வலங்கொண்டு சஞ்சரித்தேன் அல்லதுநின்
கோவில்வலங் கொள்ளக் குறித்தநிலை - பூவுலகில் ...298
வன்னிதியோர் முன்கூப்பி வாழ்த்தினேன் அன்றியுன்றன்
சன்னிதியிற் கைகூப்பித் தாழ்ந்ததிலை - புன்னெறிசேர் ...299
மிண்டரொடு கூடி வியந்ததல்லா லையாநின்
தொண்ட ரொடுங்கூடிச் சூழ்ந்ததிலை - கண்டவரைக் ...300

கன்றுமுகங் கொண்டு கடுகடுத்துப் பார்ப்பதல்லால்
என்று முகமலர்ச்சி யேற்றதிலை - நன்றுபெறு ...301
நன்னெஞ்ச ருன்சீர் நவில வதுகேட்டுக்
கன்னெஞ்சைச் சற்றுங் கரைத்ததிலை - பின்னெஞ்சாப் ...302
பண்ணீர்மை கொண்டதமிழ்ப் பாமாலை யாற்றுதித்துக்
கண்ணீர்கொண் டுன்பாற் கனிந்ததிலை - தண்ணீர்போல் ...303
நெஞ்சம் உருகி நினைக்குமன்பர் போலெனைநீ
அஞ்சலென நின்றாள் அடுத்தநிலை - விஞ்சுலகர் ...304
மெய்யடிய னென்றுரைக்க வித்தகநின் பொன்னடிக்குப்
பொய்யடிமை வேடங்கள் பூண்டதுண்டு - நையமிகு ...305

மையல் வினைக்குவந்த மாதர் புணர்ச்சியெனும்
வெய்ய வினைக்குழியில் வீழ்ந்ததுண்டு - துய்யர்தமை ...306
என்னொன்று மில்லா தியல்பாகப் பின்னொன்று
முன்னொன்று மாக மொழிந்ததுண்டு - மன்னுகின்ற ...307
மானஞ் செயாது மனநொந் திரப்போர்க்குத்
தானஞ்செய் வாரைத் தடுத்ததுண்டு - ஈனமிலா ...308
வாரமுரை யாது வழக்கி னிடையோர
வார முரைத்தே மலைந்ததுண்டு - ஈரமிலா ...309
நெஞ்ச ருடன்கூடி நேசஞ்செய் தும்மடியே
தஞ்சமெனத் தாழாது தாழ்ந்ததுண்டு - எஞ்சலிலாத் ...310

தாயனையா யுன்றனது சந்நிதிநேர் வந்துமொரு
நேயமுமில் லாதொதி(82) போல் நின்றதுண்டு - தீயவினை ...311
மாளாக் கொடிய மனச்செல்வர் வாயிலிற்போய்க்
கேளாச் சிவநிந்தை கேட்டதுண்டு - மீளாத ...312
பொல்லாப் புலையரைப்போற் புண்ணியரை வன்மதத்தால்
சொல்லா வசையெல்லாஞ் சொன்னதுண்டு - நல்லோரைப் ...313
போற்றாது பொய்யுடம்பைப் போற்றிச் சிவபூசை
ஆற்றாது சோற்றுக் கலைந்ததுண்டு - தேற்றாமல் ...314
ஈபத்தா என்றிங் கிரப்போர் தமைக்கண்டு
கோபத்தால் நாய்போற் குரைத்ததுண்டு - பாபத்தால் ...315

சிந்தையொன்று வாக்கொன்று செய்கையொன்றாய்ப் போகவிட்டே
எந்தைநினை யேத்தா திருந்ததுண்டு - புந்தியிந்த ...316
சொல்லைக்கல் லென்றுநல்லோர் சொன்னபுத்தி கேளாமல்
எல்லைக்கல் லொத்தே யிருந்ததுண்டு - தொல்லைவினை ...317
ஆழ்த்தா மயவுலகி லற்ப மகிழ்ச்சியினால்
வாழ்த்தாம லுன்னை மறந்ததுண்டு - தாழ்த்தாமற் ...318
பூணா வெலும்பணியாய்ப் பூண்டோ ய்நின் பொன்வடிவங்
காணாது வீழ்நாள் கழித்ததுண்டு - மாணாத ...319
காடுபோன் ஞாலக் கடுநடையி லேயிருகான்
மாடுபோல் நின்றுழைத்து வாழ்ந்ததுண்டு - நாடகன்ற ...320

கள்ளிவா யோங்குபெருங் காமக் கடுங்காட்டிற்
கொள்ளிவாய்ப் பேய்போற் குதித்ததுண்டு - ஒள்ளியரால் ...321
எள்ளுண்ட மாயா இயல்புறுபுன் கல்வியெலாங்
கள்ளுண்ட பித்தனைப்போற் கற்றதுண்டு - நள்ளுலகில் ...322
சீராசை யெங்குஞ்சொற் சென்றிடவே வேண்டுமெனும்
பேராசைப் பேய்தான் பிடித்ததுண்டு - தீராவென் ...323
சாதகமோ தீவினையின் சாதனையோ நானறியேன்
பாதகமென் றாலெனக்குப் பாற்சோறு - தீதகன்ற ...324
தூய்மைநன்றா மென்கின்ற தொன்மையினார் வாய்க்கினிய
வாய்மையென்றால் என்னுடைய வாய்குமட்டுங் - காய்மைதரும் ...325

கற்கு நிகராங் கடுஞ்சொலன்றி நன்மதுரச்
சொற்கும் எனக்கும்வெகு தூரங்காண் - பொற்புமிக ...326
நண்ணியுனைப் போற்றுகின்ற நல்லோர்க் கினியசிவ
புண்ணியமென் றாலெனக்குப் போராட்டம் - அண்ணலுனை ...327
நாளுரையா தேத்துகின்ற நல்லோர்மேல் இல்லாத
கோளுரையென் றாலெனக்குக் கொண்டாட்டம் - நீளநினை ...328
நேசிக்கு நல்ல நெறியாஞ் சிவாகமநூல்
வாசிக்க வென்றாலென் வாய்நோகுங் - காசிக்கு ...329
நீடிக்கி லானாலு நேர்ந்தறிவ தல்லதுவீண்
வேடிக்கை யென்றால் விடுவதிலை - நாடயலில் ...330

வீறா முனது விழாச்செயினும் அவ்விடந்தான்
ஆறா யிரங்காத மாங்கண்டாய் - மாறான ...331
போகமென்றா லுள்ளமிகப் பூரிக்கும் அன்றிசிவ
யோகமென்றா லென்னுடைய உண்ணடுங்கும் - சோகமுடன் ...332
துள்ளலொழிந் தென்னெஞ்சஞ் சோர்ந்தழியுங் காலத்திற்
கள்ளமென்றா லுள்ளே களித்தெழும்பும் - அள்ளனெறி ...333
செல்லென்றால் அன்றிச் சிவசிவா வென்றொருகால்
சொல்லென்றால் என்றனக்குத் துக்கம்வரும் - நல்லநெறி ...334
வாம்பலன்கொண் டோ ர்கள் மறந்தும் பெறாக்கொடிய
சோம்பலென்ப தென்னுடைய சொந்தங்காண் - ஏம்பலுடன் ...335

எற்றோ இரக்கமென்ப தென்றனைக்கண் டஞ்சியெனை
உற்றோ ரையுமுடன்விட் டோ டுங்காண் - சற்றேனும் ...336
ஆக்கமே சேரா தறத்துரத்து கின்றவெறுந்
தூக்கமே யென்றனக்குச் சோபனங்காண் - ஊக்கமிகும் ...337
ஏறுடையாய் நீறணியா ஈனர்மனை யாயினும்வெண்
சோறுகிடைத் தாலதுவே சொர்க்கங்காண் - வீறுகின்ற ...338
வாழ்வுரைக்கு நல்ல மனத்தர்தமை யெஞ்ஞான்றுந்
தாழ்வுரைத்தல் என்னுடைய சாதகங்காண் - வேள்விசெயுந் ...339
தொண்டர் தமைத்துதியாத் துட்டரைப்போ லெப்பொழுதுஞ்
சண்டையென்ப தென்றனக்குத் தாய்தந்தை - கொண்டஎழு ...340

தாதாட ஓங்கித் தலையாட வஞ்சரொடு
வாதாட என்றாலென் வாய்துடிக்குங் - கோதாடச் ...341
சிந்தை திரிந்துழலுந் தீயரைப்போல் நற்றரும
நிந்தையென்ப தென்பழைய நேசங்காண் - முந்தநினை ...342
எண்ணென்றால் அன்றி யிடர்செய் திடுங்கொடிய
பெண்ணென்றால் தூக்கம் பிடியாது - பெண்களுடன் ...343
புல்லென்றால் தேகம் புளகிக்கும் அன்றிவிட்டு
நில்லென்றால் என்கண்ணி னீரரும்பும் - புல்லரென்ற ...344
பேர்க்கும்விருப் பெய்தாத பெண்பேய்கள் வெய்யசிறு
நீர்க்குழியே யான்குளிக்கு நீர்ப்பொய்கை - சீர்க்கரையின் ...345

ஏறாப்பெண் மாத ரிடைக்கு ளளிந்தென்றும்
ஆறாப்புண் ணுக்கே யடிமைநான் - தேறாத ...346
வெஞ்சலஞ்செய் மாயா விகாரத்தி னால்வரும்வீண்
சஞ்சலமெல்லா மெனது சம்பந்தம் - அஞ்செழுத்தை ...347
நேர்ந்தார்க் கருள்புரியு நின்னடியர் தாமேயுஞ்
சார்ந்தா லதுபெரிய சங்கட்டம் - ஆர்ந்திடுமான் ...348
காந்தும் விழிப்புலியைக் கண்டதுபோல் நல்லகுண
சாந்த மெனைக் கண்டால் தலைசாய்க்கும் - ஆந்தகையோர் ...349
சேர மனத்திற் செறிவித் திடும்புருட
தீரமெனைக் கண்டாற் சிரிக்குங்காண் - கோரமதைக் ...350

காணி லுலகிற் கருத்துடையோர் கொள்ளுகின்ற
நாண மெனைக்கண்டு நாணுங்காண் - ஏணுலகில் ...351
ஞானங் கொளாவெனது நாமமுரைத் தாலுமபி
மானம் பயங்கொண்டு மாய்ந்துவிடும் - ஆனவுன்றன் ...352
கேண்மைக் குலத்தொண்டர் கீர்த்தி பெறக்கொண்ட
ஆண்மைக்கு நானென்றா லாகாது - வாண்மைபெறும் ...353
ஐயநின்றாட் பூசிக்கு மன்பருள்ளத் தன்பிற்கும்
பொய்ய னெனக்கும் பொருத்தமிலை - வையகத்தோர் ...354
இல்லெனினுஞ் சும்மாநீ யீகின்றே னென்றொருசொல்
சொல்லெனினுஞ் சொல்லத் துணிவுகொளேன் - நல்லையெமக் ...355

கீயென்பா ரன்றியன்னை யென்பயத்தா னின்சோற்றில்
ஈயென்ப தற்கு மிசையாள்காண் - ஈயென்பார்க் ...356
கெண்ணுஞ் சிலர்மண் ணிடுவா ரெனக்கந்த
மண்ணுங் கொடுக்கமனம் வாராது - அண்ணுறுமென் ...357
இல்லை யடைந்தே யிரப்பவருக் கெப்போதும்
இல்லையென்ப தென்வாய்க் கியல்புகாண் - தொல்லுலகை ...358
ஆண்டாலு மன்றி அயலார்புன் கீரைமணிப்
பூண்டாலு மென்கண் பொறுக்காது - நீண்டஎழு ...359
தீப முறுவோர் திசையோர்மற் றியாவர்க்குங்
கோப மதுநான் கொடுக்கிலுண்டு - ஆபத்தில் ...360

வீசங் கொடுத்தெட்டு வீச மெனப்பிறரை
மோசஞ் செயநான் முதற்பாதம் - பாசமுளோர் ...361
கைக்குடைய வேயெழுதிக் கட்டிவைத்த இவ்வுலகப்
பொய்க்கதையே யான்படிக்கும் புத்தகங்கள் - மெய்ப்படுநின் ...362
மந்திரத்தை உச்சரியா வாயுடையேன் என்போலத்
தந்திரத்தில் கைதேர்ந் தவரில்லை - எந்தைஇனி ...363
ஏதென் றுரைப்பே னிருங்கடல்சூழ் வையகத்தில்
சூதென்ப தெல்லாமென் சுற்றங்காண் - ஓதுகின்ற ...364
நஞ்சமெலாங் கூட்டி நவின்றிடினும் ஒவ்வாத
வஞ்சமெலா மென்கை வசங்கண்டாய் - அஞ்சவரும் ...365

வீணவமாம் வஞ்ச வினைக்குமுத லாகிநின்ற
ஆணவமே என்காணி ஆட்சியதாம் - மாணிறைந்த ...366
நல்லறிவே என்னைநெடு நாட்பகைத்த தன்றிமற்றைப்
புல்லறிவே என்னுட் பொருள்கண்டாய் - சொல்லவொணா ...367
வேடருக்குங் கிட்டாத வெங்குணத்தா லிங்குழலும்
மூடருக்குள் யானே முதல்வன்காண் - வீடடுத்த ...368
மேதையர்கள் வேண்டா விலங்காய்த் திரிகின்ற
பேதையென்ப தென்னுரிமைப் பேர்கண்டாய் - பேதமுற ...369

ஓதுவதென் பற்பலவாய் உற்றதவத் தோர்நீத்த
தீதுகளெல் லாமெனது செல்வங்காண் - ஆதலினால் ...370
பேயினையொத் திவ்வுலகில் பித்தாகி நின்றவிந்த
நாயினைநீ ஆண்டிடுதல் நன்கன்றே - ஆயினுமுன் ...371
மண்ணா ருயிர்களுக்கும் வானவர்க்குந் தானிரங்கி
உண்ணாக் கொடுவிடமும் உண்டனையே - எண்ணாமல் ...372
வேய்த்தவள வெற்பெடுத்த வெய்யஅரக் கன்தனக்கும்
வாய்த்தவர மெல்லாம் வழங்கினையே - சாய்த்தமன ...373
வீம்புடைய வன்முனிவர் வேள்விசெய்து விட்டகொடும்
பாம்பையெல் லாந்தோளிற் பரித்தனையே - நாம்பெரியர் ...374
எஞ்சேமென் றாணவத்தா லேற்ற இருவரையும்
அஞ்சேலென் றாட்கொண் டருளினையே - துஞ்சுபன்றித் ...375

தோயாக் குருளைகளின் துன்பம் பொறாதன்று
தாயாய் முலைப்பாலுந் தந்தனையே - வாயிசைக்குப் ...376
பாண்டியன்முன் சொல்லிவந்த பாணன் பொருட்டடிமை
வேண்டி விறகெடுத்து விற்றனையே - ஆண்டொருநாள் ...377
வாய்முடியாத் துன்புகொண்ட வந்திக்கோ ராளாகித்
தூய்முடிமேல் மண்ணுஞ் சுமந்தனையே - ஆய்துயர ...378
மாவகஞ்சேர் மாணிக்க வாசகருக் காய்க்குதிரைச்
சேவகன்போல் வீதிதனில் சென்றனையே - மாவிசயன் ...379
வில்லடிக்கு நெஞ்சம் விரும்பியதல் லால்எறிந்த
கல்லடிக்கும் உள்ளங் களித்தனையே - மல்லலுறும் ...380

வில்வக் கிளையுதிர்த்த வெய்ய முசுக்கலையைச்
செல்வத் துரைமகனாய்ச் செய்தனையே - சொல்லகலின் ...381
நீளுகின்ற நெய்யருந்த நேரெலியை மூவுலகும்
ஆளுகின்ற மன்னவனாய் ஆக்கினையே - கோளகல ...382
வாய்ச்சங்கு நூலிழைத்த வாய்ச்சிலம்பி தன்னைஉயர்
கோச்செங்கட் சோழனெனக் கூட்டினையே - ஏச்சறுநல் ...383
ஆறடுத்த(83) வாகீசர்க் காம்பசியைக் கண்டுகட்டுச்
சோறெடுத்துப் பின்னே சுமந்தனையே - கூறுகின்ற ...384
தொன்மைபெருஞ் சுந்தரர்க்குத் தோழனென்று பெண்பரவை
நன்மனைக்குத் தூது நடந்தனையே - நன்மைபெற ...385

இற்றென்ற இற்றென்னா எத்தனையோ பேர்கள்செய்த
குற்றங் குணமாகக் கொண்டனையே - பற்றுலகில் ...386
அன்புடைய தாயர்களோ ராயிரம்பே ரானாலும்
அன்புடையாய் நின்னைப்போ லாவாரோ - இன்பமுடன் ...387
ஈண்டவரும் தந்தையர்கள் எண்ணிலரே ஆயினுமென்
ஆண்டவனே நின்னைப்போ லாவாரோ - பூண்டகைகொள் ...388
ஏணுடைய நின்னையன்றி எந்தை பிரானேஉன்
ஆணைஎனக் குற்றதுணை யாருமில்லை - நாணமுளன் ...389
ஆனேன் பிழைக ளனைத்தினையு மையாநீ
தானே பொறுக்கத் தகுங்கண்டாய் - மேல்நோற்ற ...390

மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக்
கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க - பாற்றவள ...391
நந்தக் கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப்
பந்தக் கடலழுந்தப் பண்ணற்க - முந்தைநெறி ...392
நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில்
சென்றே உடலோம்பச் செய்யற்க - நன்றேநின் ...393
றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத்
தீங்கு நெறியில் செலுத்தற்க - வீங்கடங்கி ...394
வாழி யெனத்தான் வழுத்தினுமென் சொற்கடங்கா
ஏழை மனத்தா லிளைக்கின்றேன் - வாழுமரக் ...395

கோடேறும் பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக்
காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன் - பாடேறும் ...396
உள்ளறியா மாயையெனு முட்பகையார் காமமெனுங்
கள்ளறியா துண்டு கவல்கின்றேன் - தெள்ளுறுமென் ...397
கண்ணனையாய் நின்தாள் கமலங் களைவழுத்தா
மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன் - திண்ணமிலாக் ...398
காதரவாந் துன்பக் கவலைக் கடல்வீழ்ந்தே
ஆதரவொன் றின்றி அலைகின்றேன் - ஓதுமறை ...399
ஆத்த ரெனுமுன் அடியார் தமைக்கண்டு
நாத்திகஞ்சொல் வார்க்கு நடுங்குகின்றேன் - பாத்துண்டே ...400

உய்வ தறியா உளத்தினே னுய்யும்வகை
செய்வ தறியேன் திகைக்கின்றேன் - சைவநெறி ...401
உண்ணிரம்பு நின்கருணை உண்டோ இலையோஎன்
றெண்ணியெண்ணி உள்ளம் இளைக்கின்றேன் - மண்ணினிடைக் ...402
கொன்செய்கை கொண்டகொடுங் கூற்றன் குறுகிலதற்
கென்செய்வோ மென்றெண்ணி எய்க்கின்றேன் - முன்செய்வினை ...403
ஆமறையா நோயா லகமெலிவுற் றையோநான்
தாமரையி னீர்போல் தயங்குகின்றேன் - தாமமுடி ...404
வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னுமென
உள்ளமது நீரா யுருகுகின்றேன் - எள்ளலுறு ...405

மாலைபாய்ந் தின்னுமென்ன வந்திடுமோ என்றுநெஞ்சம்
ஆலைபாய்ந் துள்ளம் அழிகின்றேன் - ஞாலமிசைக் ...406
கோட்பார வாழ்க்கைக் கொடுஞ்சிறையி னின்றென்னை
மீட்பா ரிலாது விழிக்கின்றேன் - மீட்பாகும் ...407
ஆற்றி லொருகாலும் அடங்காச் சமுசாரச்
சேற்றிலொரு காலும்வைத்துத் தேய்கின்றேன் - தோற்றுமயற் ...408
பாகமுறு வாழ்க்கையெனும் பாலைவனத் துன்னருள்நீர்த்
தாகமது கொண்டே தவிக்கின்றேன் - மோகமதில் ...409
போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின்
வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன் - மாய்ப்பவரு ...410

மீன்போலு மாதர் விழியால் வலைப்பட்ட
மான்போலுஞ் சோர்ந்து மடங்குகின்றேன் - கான்போல ...411
வீற்று முலக விகாரப் பிரளயத்தில்
தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன் - ஆற்றவுநான் ...412
இப்பாரில் உன்மேலன் பில்லெனினும் அன்பனென
ஒப்பாரி யேனும் உடையேன்காண் - தப்பாய்ந்த ...413
மட்டுவிடேன் உன்தாள் மறக்கினும்வெண் ணீற்றுநெறி
விட்டுவிடேன் என்றனைக்கை விட்டுவிடேல் - துட்டனென ...414
மாலுந் திசைமுகனும் வானவரும் வந்துதடுத்
தாலுஞ் சிறியேனைத் தள்ளிவிடேல் - சாலுலக ...415

வாதனைகொண் டோ னென்று மற்றெவரா னாலும்வந்து
போதனைசெய் தாலுமெனைப் போக்கிவிடேல் - நீதயவு ...416
சூழ்ந்திடுக என்னையுநின் தொண்டருடன் சேர்த்தருள்க
வாழ்ந்திடுக நின்தாள் மலர். ...417
 
 

திருச்சிற்றம்பலம்
-----
47. இது முதல் 64 கண்ணிகள் சோழ நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள்.
48. காலில்பாய் - சேஷசயநம். தொ. வே.
49. காழ் - இல் - நெஞ்சம் என்று பிரித்துப் பொருள்கொள்க. தொ.வே.
50. வானொளிப் புற்றூர், வாழ்கொளி புத்தூரென மருவியது தொ.வே.2.
51. ஹம்சன், அஞ்சன் எனத் திரிந்தது. அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் எனப் பொருள்.
தொ.வே.
52. குரங்காடு - வடகுரங்காடுதுறை. குரங்காட்டின் என நின்றது. வேற்றுமைச் சந்தியாகலான்.
தொ.வே.
53. பொன் - இலக்குமி. தொ.வே.
54. தே என்பது ஈண்டு விகுதி குன்றிய முதனிலைத் தொழிற்பெயர். தொ.வே.
55. கோலத்துறை என்பது கோலந்துறை என விகாரமாயிற்று. தொ.வே.
56. அன்பிலாந்துறை யென்னுமோர் திருப்பதி. தொ.வே.
57. 65 முதல் 191 வரை 127 கண்ணிகள் சோழநாட்டில் காவிரி தென்கரைத் தலங்கள்.
58. வேதிகுடி என்பது வேதிக்குடியென விரித்தல் விகாரமாயிற்று. தொ.வே.
59. தேமாமலர் - சிறந்த கற்பகமலர். தொ.வே.
60. கடவூர் - கடையூரென மரீஇயது. தொ.வே.
61. அரிசொன்னதிக்கரை, அரிசிற்கரை யென மரீஇயது. தொ.வே.
62. சீயத்தை என்பது செய்யுள் விகாரத்தாற் குறுக்கும் வழி குறுக்கப்பட்டு சியத்தையென நின்றது. தொ.வே.
63. மண்டளி என்பது மண்டலி என ளகர லகர ஒற்றுமைத் திரிபு. தொ.வே.
64. மடவாட் கோர் கூற்றை யெனற்பாலது கூறையென இரண்டாவதன் முடிபேற்று நின்றது.
தொ.வே.
65. 192, 193-ஆம் கண்ணிகள் ஈழநாட்டுத் தலங்கள்இ
66. 194 முதல் 206 வரை 13 கண்ணிகள் பாண்டி நாட்டுத் தலங்கள்.
67. தொழும் ராமீசம் என்பது வடநூன் முடிபு. தொ.வே. 1. வடசொன் முடிபில் வந்தது க்ஷ 2.
68. இஃது மலைநாட்டுத் தலம்.
69. 208 முதல் 214 வரை 7 கண்ணிகள் கொங்கு நாட்டுத் தலங்கள்.
70. தீக்குழி என்பது தீங்குழி யென்றாயது. தொ.வே.
71. 215 முதல் 236 வரை 22 கண்ணிகள் நடு நாட்டுத்தலங்கள்
72. ஆசிடை யெதுகை. தொ.வே.
73. செந்தொடை. தொ.வே.
74. ஓங்கி - பரவெனும் வேறு சினை வினைக் குறைகள் மன்னென்னு முதல் வினையோடு முடிந்தன. தொ.வே.
75. ஆசிடை யெதுகை. தொ.வே.
76. 237 முதல் 271 வரை 35 கண்ணிகள் தொண்டநாட்டுத்தலங்கள்.
77. யோகம் என்பது யோகென விகாரமாயிற்று. தொ.வே.
78. வீ - மரணம். தொ.வே.
79. இது துளுநாட்டுத்தலம்.
80. 273 முதல் 279 வரை 7 கண்ணிகள் வடநாட்டுத்தலங்கள்.
81. சிங்குதல் - குறைதல். தொ.வே.
82. உதி - ஒதியென மரீஇயது. தொ.வே.
83. ஆறு - வழி. தொ.வே.
-----------------------


3. நெஞ்சறிவுறுத்தல் ( 1964 - 1965 )

 காப்பு
.குறள்வெண்பா
1963சீர்சான்ற முக்கட் சிவகளிற்றைச் சேர்ந்திடிலாம்
பேர்சான்ற இன்பம் பெரிது. ...1
1964ஆறு முகத்தான் அருளடையின் ஆம்எல்லாப்
பேறு மிகத்தான் பெரிது. ... 2

கலிவெண்பா
1965பொன்னார் மலைபோல் பொலிவுற் றசையாமல்
எந்நாளும் வாழியநீ என்னெஞ்சே - பின்னான ...1
இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை
எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே - செப்பமுடன் ...2
செவ்வொருசார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இவ்வொருசொல் கேட்டிடுக என்னெஞ்சே - எவ்வெவ் ... 3
உலகும் பரவும் ஒருமுதலாய் எங்கும்
இலகும் சிவமாய் இறையாய் - விலகும் ... 4
உருவாய் உருவில் உருவாய் உருவுள்
அருவாய் அருவில் அருவாய் - உருஅருவாய் ...5

நித்தியமாய் நிர்க்குணமாய் நிற்சலமாய் நின்மலமாய்ச்
சத்தியமாய்ச் சத்துவமாய்த் தத்துவமாய் - முத்தியருள் ... 6
ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய்
நன்றாய் நவமாய் நடுநிலையாய் - நின்றோங்கும் ...7
வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர
நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஓதும் ...8
செறிவாய்த் திரமாய்ச் சிதாகாச மாய்ச்சொல்
அறிவாய் அறிவுள் அறிவாய் - நெறிமேவு ...9
காலமாய்க் காலம் கடந்த கருத்தாய்நற்
சீலமாய்ச் சிற்பரமாய்ச் சின்மயமாய் - ஞாலம் ...10

பொருந்தாப் பொருளாய்ப் பொருந்தும் பொருளாய்ப்
பெருந்தா ரகம்சூழ்ந்த பேறாய்த் - திருந்தாத ...11
போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் - நீக்கமிலா ...12
ஆதியாய் ஆதிநடு அந்தமாய் ஆங்ககன்ற
சோதியாய்ச் சோதியாச் சொற்பயனாய் - நீதியாய் ...13
ஆங்கார நீக்கும் அகார உகாரமதாய்
ஓங்கார மாய்அவற்றின் உட்பொருளாய்ப் - பாங்கான ...14
சித்தமாய்ச் சித்தாந்த தேசாய்த் திகம்பரமாய்ச்
சத்தமாய்ச் சுத்த சதாநிலையாய் - வித்தமாய் ...15

அண்டமாய் அண்டத் தணுவாய் அருளகண்டா
கண்டமாய் ஆனந்தா காரமதாய் - அண்டத்தின் ...16
அப்பாலாய் இப்பாலாய் அண்மையாய்ச் சேய்மையதாய்
எப்பாலாய் எப்பாலும் இல்லதுமாய்ச் - செப்பாலும் ...17
நெஞ்சாலும் காய நிலையாலும் அந்நிலைக்குள்
அஞ்சாலுங் காண்டற் கரும்பதமாய் - எஞ்சாப் ...18
பரமாய்ப் பகாப்பொருளாய்ப் பாலாய்ச் சுவையின்
தரமாய்ப் பரப்பிரமம் தானாய்வெரமாய ...19
ஒன்பான் வடிவாய் ஒளியெண் குணக்கடலாய்
அன்பாய் அகநிலையாய் அற்புதமாய் - இன்பாய் ...20

அகமாய்ப் புறமாய் அகம்புறமாய் நீங்கும்
சகமாய்ச் சகமாயை தானாய் - சகமாயை ...21
இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும்
கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும் ...22
நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய்
எண்ணுவதாய் எண்ணின் இயலாதாய் - எண்ணுகின்ற ...23
வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர்
தானாய் வழிபடுநான் தான்தானாய் - வானாதி ...24
ஒன்றிடத்தும் ஒன்றாதாய் ஒன்றுவதாய் ஆனந்தம்
மன்றிடத்தில் என்றும் வதிவதாய் - ஒன்றியதோர் ...25

ஐந்நிறமாய் அந்நிறத்தின் ஆமொளியாய் அவ்வொளிக்குள்
எந்நிறமும் வேண்டா இயனிறமாய் - முந்நிறத்தில் ...26
பூப்பதுவாய்க் காப்பதுவாய்ப் போக்குவதாய்த் தேக்குவதாய்
நீப்பதுவாய்த் தன்னுள் நிறுத்துவதாய்ப் - பூப்பதின்றி ...27
வாளா திருப்பதுவாய் வாதனா தீதமாய்
நீளாது நீண்ட நிலையினதாய் - மீளாப் ...28
பெரிதாய்ச் சிறிதாய்ப் பெரிதும் சிறிதும்
அரிதாய் அரிதில் அரிதாய்த் - துரிய ...29
வெளியாய்ப் பரவெளியாய் மேவுபர விந்தின்
ஒளியாய்ச் சிவானந்த ஊற்றாய்த் - தெளியாதி ...30

கற்பகமாய்க் காணுஞ்சங் கற்ப விகற்பமாய்
நிற்பதா கார நிருவிகற்பாய்ப் - பொற்புடைய ...31
முச்சுடராய் முச்சுடர்க்கும் முன்னொளியாய்ப் பின்னொளியாய்
எச்சுடரும் போதா இயற்சுடராய் - அச்சில் ...32
நிறைவாய்க் குறைவாய் நிறைகுறை வில்லாதாய்
மறைவாய் வெளியாய் மனுவாய் - மறையாத ...33
சச்சிதா னந்தமதாய்த் தன்னிகரொன் றில்லாதாய்
விச்சையால் எல்லாம் விரிப்பதுவாய் - மெச்சுகின்ற ...34
யோகமாய் யோகியர் யோகத் தெழுந்தசிவ
போகமாய்ப் போகியாய்ப் போகமருள் - ஏகமாய்க் ...35

கேவலமாய்ச் சுத்த சகலமாய்க் கீழ்ச்சகல
கேவலங்கள் சற்றும் கிடையாதாய் - மாவலத்தில் ...36
காட்சியாய்க் காண்பானாய்க் காணப் படுபொருளாய்ச்
சூட்சியாய்ச் சூட்சியால் தோய்வரிதாய் - மாட்சிபெறச் ...37
செய்பவனாய்ச் செய்தொழிலாய்ச் செய்பொருளாய்ச் செய்தொழிலால்
உய்பவனாய் உய்விக்கும் உத்தமனாய் - மொய்கொள் ...38
அதுவாய் அவளாய் அவனாய் அவையும்
கதுவாது நின்ற கணிப்பாய்க் - கதுவாமல் ...39
ஐயம் திரிபோ டறியாமை விட்டகற்றிப்
பொய்யென்ப தொன்றும் பொருந்தாராய்ச் - செய்யென்ற ...40

ஓர்வினையில் இன்பமுமற் றோர்வினையில் துன்பமுமாம்
சார்வினைவிட் டோ ங்கும் தகையினராய்ப் - பார்வினையில் ...41
ஓர்பால் வெறுப்புமற்றை ஓர்பால் விருப்புமுறும்
சார்பால் மயங்காத் தகையினராய்ச் - சார்பாய ...42
ஓரிடத்தில் தண்மையுமற் றோரிடத்தில் வெஞ்சினமும்
பாரிடத்தில் கொள்ளாப் பரிசினராய் - நீரிடத்தில் ...43
தண்மைநிக ராதென்றும் சாந்தம் பழுத்துயர்ந்த
ஒண்மையுடன் ஒன்றை உணர்ந்தவராய் - வெண்மையிலா ...44
ஒன்றும் அறிவின் உதயாதி ஈறளவும்
என்றும் இரண்டென்ப தில்லவராய் - மன்றவொளிர் ...45

அம்மூன்றி னுள்ளே அடுக்கிவரும் ஒன்றகன்ற
மும்மூன்றின் மூன்றும் முனிந்தவராய்த் - தம்மூன்றி ...46
வீடாது நின்றும் விரிந்தும் விகற்பநடை
நாடாது நான்கும் நசித்தவராய் - ஊடாக ...47
எஞ்சாமல் அஞ்சின் இடமாய் நடமாடும்
அஞ்சாதி அஞ்சும் அறுத்தவராய் - எஞ்சாமல் ...48
ஈண்டாண் டருளும் இறையோர் தமையாறில்
ஆண்டாண்டு கண்டா றகன்றவராய் - ஈண்டாது ...49
வாழியுற்ற வானோரும் வந்து தமக்கிரண்டோ 
டேழியற்ற ஏழும் இகந்தவராய் - ஊழியற்றக் ...50

கட்டிநின்றுட் சோதியொன்று காணத் தொடங்குகின்றோர்
எட்டுகின்ற எட்டின்மேல் எய்தினராய்க் கட்டுகின்ற ...51
தேன்தோய் கருணைச் சிவங்கலந்து தேக்குகின்ற
சான்றோர்தம் உள்ளம் தணவாதாய் - மான்றமலத்(84) ...52
தாக்கொழிந்து தத்துவத்தின் சார்பாம் - தனுவொழிந்து
வாக்கொழிந்து மாணா மனமொழிந்து - ஏக்கமுற ...53
வாய்க்கும் சுகமொழிந்து மண்ணொழிந்து விண்ணொழிந்து
சாய்க்கும் இராப்பகலும் தானொழிந்து - நீக்கொழிந்து ...54
நானுமொழி யாதொழிந்து ஞானமொழி யாதொழிந்து
தானும் ஒழியாமற் றானொழிந்து - மோனநிலை ...55

நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய்
நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய் ...56
நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து
சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை ...57
இல்லான் எவன்யார்க்கும் ஈசன் எவன்யாவும்
வல்லான் எவனந்தி வண்ணனெவன் - கல்லாலில் ...58
சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும்
விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற ...59
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித்
திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - பண்டங்கு ...60

வீயாச் சிறுபெண் விளையாட்டுள் அண்டமெலாம்
தேயாது கூட்டுவிக்கும் சித்தனெவன் - யாயாதும் ...61
வேண்டாமை வேண்டுவது மேவாத சித்தர்தமைத்
தீண்டாது தீண்டுகின்ற சித்தனெவன் - ஈண்டோ து ...62
பற்றுருவாய்ப் பற்றாப் பரவணுவின் உள்விளங்கும்
சிற்றுருவாய் உள்ளொளிக்கும் சித்தனெவன் - மற்றுருவின் ...63
வையாது வைத்துலகை மாவிந் திரசாலம்
செய்யாது செய்விக்கும் சித்தனெவன் - நையாமல் ...64
அப்பிடைவைப் பாமுலகில் ஆருயிரை மாயையெனும்
செப்பிடைவைத் தாட்டுகின்ற சித்தனெவன் - ஒப்புறவே ...65

நில்லாத காற்றை நிலையாக் கடத்தடைத்துச்
செல்லாது வைக்கின்ற சித்தனெவன் - பொல்லாத ...66
வெம்பாம்பை மேலணிந்தோர் வெம்புற்றின் உள்ளிருந்தே
செம்பாம்பை ஆட்டுகின்ற சித்தனெவன் - தம்பாங்கர் ...67
ஒண்கயிற்றான் ஒன்றின்றி உண்ணின் றுயிர்களையூழ்த்
திண்கயிற்றான் ஆட்டுகின்ற சித்தனெவன் - வண்கையுடைத் ...68
தானசைந்தால் மற்றைச் சகமசையும் என்றுமறை
தேனசையச் சொல்லுகின்ற சித்தனெவன் - ஊனமின்றிப் ...69
பேர்த்துயிர்க ளெல்லாம்ஓர் பெண்பிள்ளை யின்வசமாய்ச்
சேர்த்து வருவிக்கும் சித்தனெவன் - போர்த்துமிக ...70

அல்விரவுங் காலை அகிலமெலாம் தன்பதத்தோர்
சில்விரலில் சேர்க்கின்ற சித்தனெவன் - பல்வகையாய்க் ...71
கைகலந்த வண்மைக் கருப்பா சயப்பையுள்
செய்கருவுக் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்கருவை ...72
மெய்வைத்த வேர்வையினும் வீழ்நிலத்தும் அண்டத்தும்
செய்வித்தங் கூட்டுவிக்கும் சித்தனெவன் - உய்விக்கும் ...73
வித்தொன்றும் இன்றி விளைவித் தருளளிக்கும்
சித்தென்றும் வல்லவொரு சித்தனெவன் - சத்துடனே ...74
உற்பத்தி யாயுலகில் ஒன்பதுவாய்ப் பாவைகள்செய்
சிற்பத் தொழில்வல்ல சித்தனெவன் - பற்பலவாம் ...75

காரா ழிகளைக் கரையின்றி எல்லையிலாச்
சேரூழி நிற்கவைத்த சித்தனெவன் - பேராத ...76
நீர்மேல் நெருப்பை நிலையுறவைத் தெவ்வுலகும்
சீர்மே வுறச்செய்யும் சித்தனெவன் - பாராதி ...77
ஐந்திலைந்து நான்கொருமூன் றாமிரண்டொன் றாய்முறையே
சிந்தையுற நின்றருளும் சித்தனெவன் - பந்தமுற ...78
ஆண்பெண்ணாய்ப் பெண்ணாணாய் அண்மை தனைவானின்
சேண்பண்ண வல்லவொரு சித்தனெவன் - மாண்பண்ணாப் ...79
பேடாணாய்ப் பெண்ணாயப் பெண்ணாண் பெரும்பேடாய்ச்
சேடாகச் செய்யவல்ல சித்தனெவன் - சேடாய ...80

வெண்மை கிழமாய் விருத்தமந்த வெண்மையதாய்த்
திண்மை பெறச்செய்யும் சித்தனெவன் - ஒண்மையிலா ...81
ஓட்டினைச்செம் பொன்னா யுயர்செம்பொன் ஓடாகச்
சேட்டையறச் செய்கின்ற சித்தனெவன் - காட்டிலுறு ...82
காஞ்சிரத்தைக் கற்பகமாய்க் கற்பகத்தைக் காஞ்சிரமாய்த்
தேஞ்சிவணச் செய்கின்ற சித்தனெவன் - வாஞ்சையுற ...83
நாரணன்சேய் நான்முகனாய் நான்முகன்சேய் நாரணனாய்ச்
சீரணவச் செய்யவல்ல சித்தனெவன் - பேரணவக் ...84
கொம்மை பெறுங்கோடா கோடியண்டம் எல்லாமோர்
செம்மயிர்க்கால் உட்புகுத்தும் சித்தனெவன் - செம்மையிலா ...85

வெம்புலியை வெண்பால் விளைபசுவாய் அப்பசுவைச்
செம்புலியாச் செய்யவல்ல சித்தனெவன் - அம்புலியை ...86
அங்கதிரொண் செங்கதிராய் அம்புலியாய்ப் பம்புகின்ற
செங்கதிரைச் செய்யவல்ல சித்தனெவன் - துங்கமுறா ...87
ஓரணுவோர் மாமலையாய் ஓர்மா மலையதுவோர்
சீரணுவாய்ச் செய்யவல்ல சித்தனெவன் - வீரமுடன் ...88
முன்னகையா நின்றதொரு முப்புரத்தை அன்றொருகால்
சின்னகையால் தீமடுத்த சித்தனெவன் - முன்னயன்மால் ...89
மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு
சிற்றுரும்பை(85) நாட்டிநின்ற சித்தனெவன் - மற்றவர்போல் ...90

அல்லா அயனும் அரியும் உருத்திரனும்
செல்லா நெறிநின்ற சித்தனெவன் - ஒல்லாத ...91
கல்லிற் சுவையாய்க் கனியிற் சுவையிலதாய்ச்
செல்லப் பணிக்கவல்ல சித்தனெவன் - அல்லலறப் ...92
பார்க்கின்ற யாவர்கட்கும் பாவனா தீதனெனச்
சீர்க்கின்ற மெய்ஞ்ஞானச் சித்தனெவன் - மார்க்கங்கள் ...93
ஒன்றென்ற மேலவரை ஒன்றென் றுரைத்தவர்பால்
சென்றொன்றி நிற்கின்ற சித்தனெவன் - அன்றொருநாள் ...94
கல்லானை தின்னக் கரும்பளித்துப் பாண்டியன்வீண்
செல்லா தளித்தமகா சித்தனெவன் - சொல்லாத ...95

ஒன்றே இரண்டேமேல் ஒன்றிரண்டே என்பவற்றுள்
சென்றே நடுநின்ற சித்தனெவன் - சென்றேறும் ...96
அத்திரத்தை மென்மலராய் அம்மலரை அத்திரமாய்ச்
சித்திரத்தைப் பேசுவிக்கும் சித்தனெவன் - எத்தலத்தும் ...97
சங்கமதே(86) தாபரமாய்த் தாபரமே சங்கமதாய்ச்
செங்கையிடா தாற்றவல்ல சித்தனெவன் - தங்குகின்ற ...98
சத்தெல்லாம் ஆகிச் சயம்புவாய் ஆனந்தச்
சித்தெல்லாம் வல்லசிவ சித்தனெவன் - தத்தெல்லாம் ...99
நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை
காட்டாது காட்டிநிற்கும் கள்வனெவன் - பாட்டோ டு ...100

வண்டாலுங் கொன்றை மலரோய் எனமறைகள்
கண்டாலும் காணாத கள்வனெவன் - தொண்டாக ...101
அள்ளம் செறியார்க்கே அன்றி அறிவார்க்குக்
கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக் ...102
கொண்டவெலாந் தன்பால் கொடுக்குமவர் தம்மிடத்தில்
கண்டவெலாம் கொள்ளைகொளுங் கள்வனெவன் - கொண்டுளத்தில் ...103
தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம்
கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச் ...104
சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால்
கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித் ...105

தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம்
கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - விண்டகலா ...106
மண்மயக்கும் பொன்மயக்கும் மாதர் மயக்குமெனும்
கண்மயக்கம் காட்டிநிற்கும் கள்வனெவன் - உண்மயக்கு ...107
மாசு பறிக்கும் மதியுடையோர் தம்முடைய
காசு பறிக்கின்ற கள்வனெவன் - ஆசகன்ற ...108
பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றைநுதற்
கண்ணால் அழிக்கின்ற கள்வனெவன் - எண்ணாது ...109
நானென்று நிற்கின் நடுவேயந் நானாணத்
தானென்று நிற்கும் சதுரனெவன் - மானென்ற ...110

மாயைதனைக் காட்டி மறைப்பித்தம் மாயையிற்றன்
சாயைதனைக் காட்டும் சதுரனெவன் - நேயமுடன் ...111
நான்மறையும் நான்முகனும் நாரணனும் நாடுதொறும்
தான்மறையும் மேன்மைச் சதுரனெவன் - வான்மறையாம் ...112
முன்னை மறைக்கும் முடிப்பொருளென் றாய்பவர்க்கும்
தன்னை மறைக்கும் சதுரனெவன் - உன்னுகின்றோர் ...113
சித்தத்திற் சுத்த சிதாகாசம் என்றொருசிற்
சத்தத்திற் காட்டும் சதுரனெவன் - முத்தரென ...114
யாவர் இருந்தார் அவர்காண வீற்றிருக்கும்
தேவர் புகழ்தலைமைத் தேவனெவன் - யாவர்களும் ...115

இவ்வணத்தன் இவ்விடத்தன் இவ்வியலன் என்றறியாச்
செவ்வணத்தன் ஆம்தலைமைத் தேவனெவன் - மெய்வணத்தோர் ...116
தாம்வாழ அண்ட சராசரங்கள் தாம்வாழ
நாம்வாழத் தன்னுரையாம் நான்மறைகள் - தாம்வாழச் ...117
சாருருவின் நல்லருளே சத்தியாய் மெய்யறிவின்
சீருருவே ஓருருவாம் தேவனெவன் - ஈருருவும் ...118
ஒன்றென் றுணர உணர்த்தி அடியருளம்
சென்றங் கமர்ந்தருளும் தேவனெவன் - என்றென்றும் ...119
தற்சகசம் என்றே சமயம் சமரசமாம்
சிற்சபையில் வாழ்கின்ற தேவனெவன் - பிற்படுமோர் ...120

பொய்விட்டு மெய்ந்நெறியைப் போற்றித்தற் போதத்தைக்
கைவிட் டுணர்வே கடைப்பிடித்து - நெய்விட்ட ...121
தீப்போற் கனலும் செருக்கறவே செங்கமலப்
பூப்போலும் தன்தாள் புணைபற்றிக் - காப்பாய ...122
வெண்ணீ றணிந்து விதிர்விதிர்த்து மெய்பொடிப்பக்
கண்ணீர் அருவி கலந்தாடி - உண்ணீர்மை ...123
என்புருகி உள்ளுருகி இன்பார் உயிருருகி
அன்புருகி அன்புருவம் ஆகிப்பின் - வன்பகன்று ...124
புண்ணியா திங்கட் புரிசடையாய் பொன்னிதழிக்
கண்ணியா எங்கள் களைகண்ணே - எண்ணியாங் ...125

கன்பர்க் கருளும் அரசே அமுதேபே
ரின்பக் கடலே எமதுறவே - மன்பெற்று ...126
மாற்றுரையாப் பொன்னே மணியேஎம் கண்மணியே
ஏற்றுவந்த மெய்ப்பொருளே என்றுநிதம் - போற்றிநின்றால் ...127
உள்ளூறி உள்ளத் துணர்வூறி அவ்வுணர்வின்
அள்ளூறி அண்ணித் தமுதூறித் - தெள்ளூறும் ...128
வான்போல் பரவி மதிபோல் குளிர்ந்துயர்கோல்
தேன்போல் மதுரிக்கும் தேவனெவன் - வான்போனார் ...129
மாண்கொடுக்கும் தெய்வ மடந்தையர்க்கு மங்கலப்பொன்
நாண்கொடுக்க நஞ்சுவந்த நாதனெவன் - நாண்மலர்பெய் ...130

தார்த்தியாய்த் தேவர் அரகரவென் றேத்தஅட்ட
மூர்த்தியாய் நின்ற முதல்வனெவன் - சீர்த்திபெற ...131
ஈண்டற் புதவடிவாய் எத்தேவ ரேனுநின்று
காண்டற் கரிதாம் கணேசனெவன் - வேண்டுற்றுப் ...132
பூமியெங்கும் வாழ்த்திப் புகழ்வார் விரும்புமிட்ட
காமியங்கள் ஈயும் கணேசனெவன் - நாமியங்க ...133
ஏண வருமிடையூ றெல்லாம் அகற்றியருள்
காண எமக்கீயும் கணேசனெவன் - மாணவரு ...134
முந்த மறையின் முழுப்பொருளை நான்முகற்குத்
தந்த அருட்கடலாம் சாமியெவன் - தந்தமக்காம் ...135

வாதகற்றி உண்மை மரபளித்து வஞ்சமலக்
கோதகற்றும் நெஞ்சக் குகேசனெவன் - தீதகற்றித் ...136
தங்கும் உலகங்கள் சாயாமற் செஞ்சடைமேல்
கங்கைதனைச் சேர்த்த கடவுளெவன் - எங்குறினும் ...137
கூம்பா நிலைமைக் குணத்தோர் தொழுகின்ற
பாம்பா பரணப் பரமனெவன் - கூம்பாது ...138
போற்றுரைத்து நிற்கும் புனிதன்மேல் வந்தகொடுங்
கூற்றுதைத்த செந்தாள் குழகனெவன் - ஆற்றலுறு ...139
வையம் துதிக்கும் மகாலிங்க மூர்த்திமுதல்
ஐயைந்து மூர்த்தியெனும் ஐயனெவன் - ஐயந்தீர் ...140

வல்லார்சொல் வண்ணமெந்த வண்ணமந்த வண்ணங்கள்
எல்லாம் உடைய விதத்தனெவன் - எல்லார்க்கும் ...141
தாம்தலைவ ராகத்தம் தாள்தொழுமெத் தேவர்க்கும்
ஆந்தலைமை ஈந்தபர மார்த்தனெவன் - போந்துயிர்கள் ...142
எங்கெங் கிருந்துமனத் தியாது விழைந்தாலும்
அங்கங் கிருந்தளிக்கும் அண்ணலெவன் - புங்கமிகும் ...143
அண்ணல் திருமலர்க்கை ஆழிபெறக் கண்ணிடந்த
கண்ணற் கருளியமுக் கண்ணனெவன் - மண்ணிடத்தில் ...144
ஓயாது சூல்முதிர்ந்த ஓர்பெண் தனக்காகத்
தாயாகி வந்த தயாளனெவன் - சேயாக ...145

வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் - பாற்குடத்தைத் ...146
தான்தந்தை என்றெறிந்தோன் தாளெறிந்த தண்டிக்குத்
தான்தந்தை ஆன தயாளனெவன் - தான்கொண்டு ...147
சம்பு நறுங்கனியின் தன்விதையைத் தாள்பணிந்த
சம்பு முனிக்கீயும் தயாளனெவன் - அம்புவியில் ...148
ஆண்டவனென் றேத்தப்பொன் னம்பலத்தில் ஆனந்தத்
தாண்டவம்செய் கின்ற தயாளனெவன் - காண்தகைய ...149
முத்துச் சிவிகையின்மேல் முன்காழி ஓங்குமுழு
முத்தைத் தனிவைத்த முத்தனெவன் - பத்திபெறு ...150

நாவொன் றரசர்க்கு நாம்தருவேம் நல்லூரில்
வாஎன்று வாய்மலர்ந்த வள்ளலெவன் - பூவொன்று ...151
நன்றொண்டர் சுந்தரரை நாம்தடுக்க வந்தமையால்
வன்றொண்டன் நீஎன்ற வள்ளலெவன் - நன்றொண்டின் ...152
காணிக்கை யாகக் கருத்தளித்தார் தம்மொழியை
மாணிக்கம் என்றுரைத்த வள்ளலெவன் - தாணிற்கும் ...153
தன்னன்பர் தாம்வருந்தில் சற்றுந் தரியாது
மன்னன் பருளளிக்கும் வள்ளலெவன் - முன்னன்பில் ...154
சால்புடைய நல்லோர்க்குத் தண்ணருள்தந் தாட்கொளவோர்
மால்விடைமேல் வந்தருளும் வள்ளலெவன் - மான்முதலோர் ...155

தாமலையா வண்ணம் தகையருளி ஓங்குவெள்ளி
மாமலைவாழ் கின்றஅருள் வள்ளலெவன் - ஆமவனே ...156
நம்மைப் பணிகொண்டு நாரணனும் நாடரிதாம்
செம்மைக் கதியருள்நம் தெய்வங்காண் - எம்மையினும் ...157
நாடக் கிடைத்தல் நமக்கன்றி நான்முகற்கும்
தேடக் கிடையாநம் தெய்வங்காண் - நீடச்சீர் ...158
நல்வந் தனைசெய்யும் நம்போல்வார்க் கோர்ஞானச்
செல்வந் தருநமது தெய்வம்காண் - சொல்வந்த ...159
எண்மைபெறும் நாமுலகில் என்றும் பிறந்திறவாத்
திண்மை அளித்தருள்நம் தெய்வம்காண் - வண்மையுற ...160

முப்பாழ் கடந்த முழுப்பாழுக் கப்பாலைச்
செப்பாது செப்புறுநம் தேசிகன்காண் - தப்பாது ...161
தீரா இடும்பைத் திரிபென்பதி யாதொன்றும்
சேரா நெறியருள்நம் தேசிகன்காண் - ஆராது ...162
நித்தம் தெரியா நிலைமே வியநமது
சித்தம் தெளிவிக்கும் தேசிகன்காண் - வித்தரென ...163
யாதொன்றும் தேரா திருந்தநமக் கிவ்வுலகம்
தீதென் றறிவித்த தேசிகன்காண் - கோதின்றி ...164
ஓசை பெறுகடல்சூ ழுற்ற வுலகினம்மை
ஆசை யுடனீன்ற அப்பன்காண் - மாசுறவே ...165

வன்பாய் வளர்க்கின்ற மற்றையர்போ லல்லாமல்
அன்பாய் நமைவளர்க்கும் அப்பன்காண் - இன்பாக ...166
இப்பாரில் சேயார் இதயம் மலர்ந்தம்மை
அப்பா எனும்நங்கள் அப்பன்காண் - செப்பாமல் ...167
எள்ளித் திரிந்தாலும் இந்தா(87)என் றின்னமுதம்
அள்ளிக் கொடுக்குநம தப்பன்காண் - உள்ளிக்கொண் ...168
டின்றே அருள்வாய் எனத்துதிக்கில் ஆங்குநமக்
கன்றே அருளுநம தப்பன்காண் - நன்றேமுன் ...169
காதரவு செய்து(88) நலம் கற்பித்துப் பின்பெரிய
ஆதரவு செய்யுநங்கள் அப்பன்காண் - கோதுறுமா ...170

வஞ்சமலத் தால்வருந்தி வாடுகின்ற நந்தமையே
அஞ்சலஞ்ச லென்றருளும் அப்பன்காண் - துஞ்சலெனும் ...171
நச்சென்ற வாதனையை நாளுமெண்ணி நாமஞ்சும்
அச்சம் கெடுத்தாண்ட அப்பன்காண் - நிச்சலுமிங்(89) ...172
கேயிரவும் எல்லும் எளியேம் பிழைத்தபிழை
ஆயிரமும் தான்பொறுக்கும் அப்பன்காண் - சேயிரங்கா ...173
முன்னம் எடுத்தணைத்து முத்தமிட்டுப் பாலருத்தும்
அன்னையினும் அன்புடைய அப்பன்காண் - மன்னுலகில் ...174
வன்மை யறப்பத்து மாதம் சுமந்துநமை
நன்மை தரப்பெற்ற நற்றாய்காண் - இம்மைதனில் ...175

அன்றொருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது
நன்றிரவில் சோறளித்த நற்றாய்காண் - என்றுமருட் ...176
செம்மை இலாச்சிறிய தேவர்கள்பால் சேர்க்காது
நம்மை வளர்க்கின்ற நற்றாய்காண் - சும்மையென ...177
மூளும் பெருங்குற்றம் முன்னிமேல் மேற்செயினும்
நாளும் பொறுத்தருளும் நற்றாய்காண் - மூளுகின்ற ...178
வன்னெறியிற் சென்றாலும் வாவென் றழைத்துநமை
நன்னெறியிற் சேர்க்கின்ற நற்றாய்காண் - செந்நெறியின் ...179
நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் - ஆம்தோறும் ...180

காலம் அறிந்தே கனிவோடு நல்லருட்பால்
ஞாலம் மிசையளிக்கும் நற்றாய்காண் - சாலவுறு ...181
வெம்பிணியும் வேதனையும் வேசறிக்கை யும்துயரும்
நம்பசியும் தீர்த்தருளும் நற்றாய்காண் - அம்புவியில் ...182
வெந்நீரில் ஆட்டிடிலெம் மெய்நோகும் என்றருளாம்
நன்னீரில் ஆட்டுகின்ற நற்றாய்காண் - எந்நீரின் ...183
மேலாய் நமக்கு வியனுலகில் அன்புடைய
நாலா யிரம்தாயில் நற்றாய்காண் - ஏலாது ...184
வாடியழு தாலெம் வருத்தம் தரியாது
நாடிஎடுத் தணைக்கும் நற்றாய்காண் - நீடுலகில் ...185

தான்பாடக்கேட்டுத் தமியேன் களிக்குமுன்னம்
நான்பாடக் கேட்டுவக்கும் நற்றாய்காண் - வான்பாடும் ...186
ஞானமணம் செய்யருளாம் நங்கைதனைத் தந்துநமக்
கானமணம் செய்விக்கும் அம்மான்காண் - தேனினொடும் ...187
இன்பால் அமுதாதி ஏக்கமுற இன்னருள்கொண்
டன்பால் விருந்தளிக்கும் அம்மான்காண் - வன்பாவ ...188
ஆழ்கடல்வீழ்ந் துள்ளம் அழுந்தும் நமையெடுத்துச்
சூழ்கரையில் ஏற்றும் துணைவன்காண் - வீழ்குணத்தால் ...189
இன்பம் எனைத்தும் இதுவென் றறியாநம்
துன்பம் துடைக்கும் துணைவன்காண் - வன்பவமாம் ...190

தீநெறியிற் சென்று தியங்குகின்ற நந்தமக்குத்
தூநெறியைக் காட்டும் துணைவன்காண் - மாநிலத்தில் ...191
இன்றுதொட்ட தன்றி யியற்கையாய் நந்தமக்குத்
தொன்றுதொட்டு வந்தவருட் சுற்றங்காண் - தொன்றுதொட்டே ...192
ஆயுமுடற் கன்புடைத்தாம் ஆருயிரிற் றான்சிறந்த
நேயம்வைத்த நம்முடைய நேசன்காண் - பேயரென ...193
வாங்காது நாமே மறந்தாலும் நம்மைவிட்டு
நீங்காத நம்முடைய நேசன்காண் - தீங்காக ...194
ஈட்டுகின்ற ஆபத்தில் இந்தா எனஅருளை
நீட்டுகின்ற நம்முடைய நேசன்காண் - கூட்டுலகில் ...195

புல்லென்ற மாயையிடைப் போந்தோறும் நம்மையிங்கு
நில்லென் றிருத்துகின்ற நேசன்காண் - சில்லென்றென் ...196
உட்டூவும் தன்னைமறந் துண்டாலும் மற்றதற்கு
நிட்டூரம் செய்யாத நேசன்காண் - நட்டூர்ந்து(90) ...197
வஞ்சமது நாமெண்ணி வாழ்ந்தாலும் தான்சிறிதும்
நெஞ்சிலது வையாத நேசன்காண் - எஞ்சலிலாப் ...198
பார்நின்ற நாம்கிடையாப் பண்டமெது வேண்டிடினும்
நேர்நின் றளித்துவரு நேசன்காண் - ஆர்வமுடன் ...199
ஆர்ந்தநமக் கிவ்விடத்தும் அவ்விடத்தும் எவ்விடத்தும்
நேர்ந்தஉயிர் போற்கிடைத்த நேசன்காண் - சேர்ந்துமிகத் ...200

தாபஞ்செய் குற்றம் தரினும் பொறுப்பதன்றிக்
கோபஞ் செயாநமது கோமான்காண் - பாபமற ...201
விள்ளுமிறை நாமன்பு மேவலன்றி வேற்றரசர்
கொள்ளுமிறை வாங்காநம் கோமான்காண் - உள்ளமுற ...202
உண்டளிக்கும் ஊணுடைபூண் ஊரா திகள்தானே
கொண்டுநமக் கிங்களிக்கும் கோமான்காண் - மண்டலத்தில் ...203
ஒன்றாலும் நீங்கா துகங்கள் பலபலவாய்ச்
சென்றாலும் செல்லாநம் செல்வம்காண் - முன்தாவி ...204
நாடிவைக்கும் நல்லறிவோர் நாளும் தவம்புரிந்து
தேடிவைத்த நம்முடைய செல்வம்காண் - மாடிருந்து ...205

நாமெத் தனைநாளும் நல்கிடினும் தானுலவாச்
சேமித்த வைப்பின் திரவியம்காண் - பூமிக்கண் ...206
ஈங்குறினும் வானாதி யாங்குறினும் விட்டகலா
தோங்கருளால் நம்மை உடையவன்காண் - ஆங்கவன்தன் ...207
கங்கைச் சடையழகும் காதன்மிகும் அச்சடைமேல்
திங்கட் கொழுந்தின் திருவழகும் - திங்கள்தன்மேல் ...208
சார்ந்திலங்கும் கொன்றைமலர்த் தாரழகும் அத்தார்மேல்
ஆர்ந்திலங்கும் வண்டின் அணியழகும் - தேர்ந்தவர்க்கும் ...209
நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும்
போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி ...210

புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் தன்னெழிலைக்
கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம் ...211
நேசித்த நெஞ்சமலர் நீடு மணமுகந்த
நாசித் திருக்குமிழின் நல்லழகும் - தேசுற்ற ...212
முல்லை முகையாம் முறுவலழ கும்பவள
எல்லை வளர்செவ் விதழழகும் - நல்லவரைத் ...213
தேவென்ற தீம்பாலில் தேன்கலந்தாற் போலினிக்க
வாவென் றருளுமலர் வாயழகும் - பூவொன்றும் ...214
கோன்பரவும் சங்கக் குழையழகும் அன்பர்மொழித்
தேன்பரவும் வள்ளைச் செவியழகும் - நான்பரவி ...215

வேட்டவையை நின்றாங்கு விண்ணப்பம் செய்யவது
கேட்டருளும் வார்செவியின் கேழழகும் - நாட்டிலுயர் ...216
சைவம் முதலாய்த் தழைக்க அருள்சுரக்கும்
தெய்வ முகத்தின் திருவழகும் - தெய்வமுகத் ...217
துள்ளம் குளிர உயிர்குளிர மெய்குளிரக்
கொள்ளும் கருணைக் குறிப்பழகும் - உள்ளறிவின் ...218
எள்ளாத மேன்மையுல கெல்லாம் தழைப்பவொளிர்
தெள்ளார் அமுதச் சிரிப்பழகும் - உள்ளோங்கும் ...219
சீல அருளின் திறத்துக் கிலச்சினையாம்
நீல மணிமிடற்றின் நீடழகும் - மாலகற்றி ...220

வாழ்ந்தொளிரும் அன்பர் மனம்போலும் வெண்ணீறு
சூழ்ந்தொளிகொண் டோ ங்குதிருத் தோளழகும் - தாழ்ந்திலவாய்த் ...221
தானோங்கும் அண்டமெலாம் சத்தமுறக் கூவுமொரு
மானோங்கும் செங்கை மலரழகும் - ஊனோங்கும் ...222
ஆணவத்தின் கூற்றை அழிக்க ஒளிர்மழுவைக்
காணவைத்த செங்கமலக் கையழகும் - நாணமுற்றே ...223
ஏங்கும் பரிசுடைய எம்போல்வார் அச்சமெலாம்
வாங்கும் அபய மலரழகும் - தீங்கடையாச் ..224
சீர்வரவும் எல்லாச் சிறப்பும் பெறவுமருள்
சார்வரத வொண்கைத் தலத்தழகும் - பேரரவப் ...225

பூணிலங்க வெண்பொற் பொடியிலங்க என்பணித்தார்
மாணிலங்க மேவுதிரு மார்பழகும் - சேணிலத்தர் ...226
மேலுடுத்த ஆடையெலாம் வெஃக வியாக்கிரமத்
தோலுடுத்த ஒண்மருங்கில் துன்னழகும் - பாலடுத்த ...227
கேழ்க்கோல மேவுதிருக் கீளழகும் அக்கீளின்
கீழ்க்கோ வணத்தின் கிளரழகும் - கீட்கோலம் ...228
ஒட்டிநின்ற மெய்யன்பர் உள்ள மெலாஞ்சேர்த்துக்
கட்டிநின்ற வீரக் கழலழகும் - எட்டிரண்டும் ...229
சித்திக்கும் யோகியர்தம் சிந்தைதனில் தேன்போன்று
தித்திக்கும் சேவடியின் சீரழகும் - சத்தித்து ...230

மல்வைத்த மாமறையும் மாலயனும் காண்பரிய
செல்வத் திருவடியின் சீரழகும் - சொல்வைத்த ...231
செம்மை மணிமலையைச் சேர்ந்த - மரகதம்போல்
அம்மையொரு பால்வாழ்ந் தருளழகும் - அம்மமிகச் ...232
சீர்த்திநிகழ் செம்பவளச் செம்மே னியினழகும்
பார்த்திருந்தால் நம்முட் பசிபோங்காண் - தீர்த்தருளம் ...233
கொண்டிருந்தான் பொன்மேனிக் கோலமதை நாம்தினமுங்
கண்டிருந்தால் அல்லலெலாம் கட்டறுங்காண் - தொண்டடைந்து ...234
பாட்டால் அவன்புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று
கேட்டால் வினைகள்விடை கேட்கும்காண் - நீட்டாமல் ...235

ஒன்னார் புரம்பொடித்த உத்தமனே என்றொருகால்
சொன்னா லுலகத் துயரறுங்காண் - எந்நாளும் ...236
பன்னுமுள்ளத் துள்ளாம் பரசிவமே என்றொருகால்
உன்னுமுன்னம் தீமையெலாம் ஓடிடுங்காண் - அன்னவன்றன் ...237
ஆட்டியல்காற் பூமாட் டடையென்றால் அந்தோமுன்
நீட்டியகால் பின்வாங்கி நிற்கின்றாய் - ஊட்டுமவன் ...238
மாற்கடவு ளாமோர் மகவலறக் கண்டுதிருப்
பாற்கடலை யீந்தவருட் பான்மைதனை - நூற்கடலின் ...239
மத்தியில்நீ கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
புத்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முத்திநெறி ...240

மாணா அரக்கன் மலைக்கீழ் இருந்தேத்த
வாணாள்(91) வழங்கியதோர் வண்மைதனை - நாணாளும் ...241
நண்ணி உரைத்தும் நயந்திலைநீ அன்புகொளப்
புண்ணியருக் கீதொன்றும் போதாதோ - புண்ணியராம் ...242
சுந்தரர்க்குக் கச்சூரில் தோழமையைத் தான்தெரிக்க
வந்திரப்புச் சோறளித்த வண்மைதனை - முந்தகத்தில் ...243
பேதமறக் கேட்டும் பிறழ்ந்தனையே அன்படையப்
போதமுளோர்க் கீதொன்றும் போதாதோ - போதவும்நெய் ...244
அங்கோர் எலிதான் அருந்தவகல் தூண்டவதைச்
செங்கோலன் ஆக்கியவச் சீர்த்திதனை - இங்கோதச் ...245

சந்ததம்நீ கேட்டுமவன் தாள்நினையாய் அன்படையப்
புந்தியுளோர்க் கீதொன்றும் போதாதோ - முந்தவரும் ...246
நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற்
கற்றுணை(92)யோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ ...247
மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப்
பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ - தாவுநுதல் ...248
கண்சுமந்தான் அன்பன் கலங்கா வகைவைகை
மண்சுமந்தான் என்றுரைக்கும் வாய்மைதனைப் - பண்புடையோர் ...249
மாணவுரைப் பக்கேட்டும் வாய்ந்தேத்தாய் மெய்யன்பு
பூணவென்றால் ஈதொன்றும் போதாதோ - நீணரகத் ...250

தீங்குறுமா பாதகத்தைத் தீர்த்தோர் மறையவனைப்
பாங்கடையச் செய்தஅருட் பண்பதனை - ஈங்குலகர் ...251
துங்கம் உறஉரைத்துஞ் சூழ்கின் றிலையன்பு
பொங்கவென்றால் ஈதொன்றும் போதாதோ - தங்கியஇப் ...252
பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு
ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் - சீரறிவோர் ...253
சொல்லிநின்றார் கேட்டும் துதிக்கின் றிலையன்பு
புல்லஎன்றால் ஈதொன்றும் போதாதோ - நல்லதிருப் ...254
பாத மலர்வருந்தப் பாணன் தனக்காளாய்க்
கோதில்விற கேற்றுவிலை கூறியதை - நீதியுளோர் ...255

சாற்றிநின்றார் கேட்டுமவன் தாள்நினையாய் மெய்யன்பில்
போற்றவென்றால் ஈதொன்றும் போதாதோ - போற்றுகின்ற ...256
ஆடும் கரியும் அணிலும் குரங்குமன்பு
தேடுஞ் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற ...257
பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றால்பூசை
ஓம்புவதற் கியார்தா முவவாதார் - சோம்புறுநீ ...258
வன்பென்ப தெல்லாம் மறுத்தவன்தாள் பூசிக்கும்
அன்பென்பதி யாதோ அறியாயே - அன்புடனே ...259
செஞ்சடைகொள் நம்பெருமான் சீர்கேட் டிரையருந்தா
தஞ்சடக்கி யோகம் அமர்ந்துலகின் - வஞ்சமற ...260

நாரையே முத்தியின்பம் நாடியதென் றால்மற்றை
யாரையே நாடாதார் என்றுரைப்பேன் - ஈரமிலாய் ...261 
நீயோ சிறிதும் நினைந்திலைஅவ் வின்பமென்னை
யேயோநின் தன்மை இருந்தவிதம் - ஓயாத ...262
அன்புடையார் யாரினும்பேர் அன்புடையான் நம்பெருமான்
நின்புடையான் நித்தம் நிகழ்த்துகின்றேன் - உன்புடையோர் ...263
அன்பவன்மேல் கொண்ட தறியேன் புறச்சமயத்
தின்புடையா ரேனும் இணங்குவரே - அன்புடனே ...264
தாவென்றால் நல்லருள்இந் தாவென்பான் நம்பெருமான்
ஆஉன்பால் ஓதி அலுக்கின்றேன் - நீவன்பால் ...265

நின்றாய் அலதவனை நேர்ந்துநினை யாய்பித்தர்
என்றாலும் என்சொற் கிணங்குவரே - குன்றாது ...266
பித்தா எனினும் பிறப்பறுப்பான் நம்முடையான்
அத்தோ(93)உனக்கீ தறைகின்றேன் - சற்றேனும் ...267
கேள்வியிலார் போலதனைக் கேளாய் கெடுகின்றாய்
வேள்வியிலார் கூட்டம் விழைகின்றாய் - வேள்வியென்ற ...268
வேலைவருங் காலொளித்து மேவுகின்றாய் நின்தலைக்கங்
கோலைவருங் காலிங் கொளிப்பாயே - மாலையுறும் ...269
இப்பார் வெறும்பூ இதுநயவேல் என்றுனக்குச்
செப்பா முனம்விரைந்து செல்கின்றாய் - அப்பாழில் ...270

செல்லாதே சைவநெறி செல்லென்றால் என்னுடனும்
சொல்லாது போய்மயக்கம் தோய்கின்றாய் - பொல்லாத ...271
அஞ்ச(94)ருந்தென் றாலமுதி னார்கின்றாய் விட்டிடென்றால்
நஞ்சருந்தென் றாற்போல் நலிகின்றாய் - வஞ்சகத்தில் ...272
ஓடுகின்றாய் மீளாமல் உன்னிச்சை யின்வழியே
ஆடுகின்றாய் மற்றங் கயர்கின்றாய் - நீடுலகைச் ...273
சூழ்கின்றாய் வேறொன்றில் சுற்றுகின்றாய் மற்றொன்றில்
வீழ்கின்றாய் மேலொன்றில் மீள்கின்றாய் - தாழ்வொன்றே ...274
ஈகின்றாய் வன்னெறியில் என்னை வலதழிக்கப்
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் - யோகின்றி ...275

ஒன்றைமறைக் கின்றாய்மற் றொன்றைநினைக் கின்றாயென்
நன்றைமறைக் கின்றாய் நலிகின்றாய் - வென்றிபெறும் ...276
சேவிற் பரமன்தாள் சேரென்றால் மற்றொருசார்
மேவிப் பலவாய் விரிகின்றாய் - பாவித்துக் ...277
குன்றும் உனக்கனந்தம் கோடிதெண்ட னிட்டாலும்
ஒன்றும் இரங்காய் உழல்கின்றாய் - நன்றுருகாக் ...278
கல்லென்பேன் உன்னைக் கரணம் கலந்தறியாக்
கல்லென்றால் என்சொல் கடவாதே - புல்லநினை ...279
வல்லிரும்பென் பேன்அந்த வல்லிரும்பேல் கூடத்தில்
கொல்லன்குறிப் பைவிட்டுக் கோணாதே - அல்லலெலாம் ...280

கூட்டுகின்ற வன்மைக் குரங்கென்பேன் அக்குரங்கேல்
ஆட்டுகின்றோன் சொல்வழிவிட் டாடாதே - நீட்டுலகர் ...281
ஏசுகின்ற பேயென்பேன் எப்பேயும் அஞ்செழுத்தைப்
பேசுகின்றோர் தம்மைப் பிடியாதே - கூசுகிற்பக் ...282
கண்டோ ரைக் கவ்வுங் கடுஞ்சுணங்கன் என்பனது
கொண்டோ ரைக் கண்டால் குலையாதே - அண்டார்க்கும் ...283
பூவில் அடங்காப் புலியென்பேன் எப்புலியும்
மேவில் வயப்பட்டால் எதிராதே - நோவியற்றி ...284
வீறுகின்ற மும்மதமால் வெற்பென்பேன் ஆங்கதுவும்
ஏறுகின்றோன்(95) சொல்வழிவிட் டேறாதே - சீறுகின்ற ...285

வென்னடைசேர்(96) மற்றை விலங்கென்பேன் எவ்விலங்கும்
மன்னவன்சேர் நாட்டில் வழங்காதே - நின்னையினி ...286
என்னென்பேன் என்மொழியை ஏற்றனையேல் மாற்றுயர்ந்த
பொன்னென்பேன் என்வழியில் போந்திலையே - கொன்னுறநீ ...287
போம்வழியும் பொய்நீ புரிவதுவும் பொய்அதனால்
ஆம்விளைவும் பொய்நின் னறிவும்பொய் - தோம்விளைக்கும் ...288
நின்னுடலும் பொய்யிங்கு நின்தவமும் பொய்நிலையா
நின்னிலையும் பொய்யன்றி நீயும்பொய் - என்னிலிவண் ...289
ஏதும் உணர்ந்திலையே இம்மாய வாழ்க்கையெனும்
வாதிலிழுத் தென்னை மயக்கினையே - தீதுறுநீ ...290

வன்னேர் விடங்காணின் வன்பெயரின் முன்பொருகீற்(97)
றென்னே அறியாமல் இட்டழைத்தேன் - கொன்னேநீ ...291
நோவ தொழியா நொறிற்(98) காம வெப்பினிடை
ஆவ தறியா தழுந்தினையே - மேவுமதில் ...292
உள்ளெரிய மேலாம் உணர்வும் கருகவுடல்
நள்ளெரிய நட்பின் நலம்வெதும்ப - விள்வதின்றி ...293
வாடிப் பிலஞ்சென்று வான்சென் றொளித்தாலும்
தேடிச் சுடுங்கொடிய தீக்கண்டாய் - ஓடிஅங்கு ...294
பேர்ந்தால் அலது பெருங்காமத் தீநின்னைச்
சேர்ந்தா ரையுஞ்சுடும்செந் தீக்கண்டாய் - சார்ந்தாங்கு ...295

சந்தீ யெனவருவார் தம்மைச் சுடுங்காமஞ்
செந்தீ யையுஞ் சுடுமோர் தீக்கண்டாய் - வந்தீங்கு ...296
மண்ணில் தனைக்காணா வண்ணம் நினைத்தாலும்
நண்ணித் தலைக்கேறு நஞ்சங்காண் - எண்ணற்ற ...297
போருறுமுட் காமப் புதுமயக்கம் நின்னுடைய
பேரறிவைக் கொள்ளைகொளும் பித்தங்காண் - சோரறிவில் ...298
கள்ளடைக்கும் காமக் கடுமயக்கம் மெய்ந்நெறிக்கோர்
முள்ளடைக்கும் பொல்லா முரண்கண்டாய் - அள்ளலுற ...299
ஏதமெலாம் தன்னுள் இடுங்காமம் பாதகத்தின்
பேதமெலாம் ஒன்றிப் பிறப்பிடங்காண் - ஆதலினால் ...300

வெம்மால் மடந்தையரை மேவவொணா தாங்கவர்கள்
தம்மாசை இன்னும் தவிர்ந்திலையே - இம்மாய ...301
மன்ற வணங்கினர்செவ் வாய்மடவார் பேதையர்கள்
என்றகொடுஞ் சொற்பொருளை எண்ணிலையே - தொன்றுலகில் ...302
பெண்ணென் றுரைப்பிற் பிறப்பேழும் ஆந்துயரம்
எண்ணென்ற நல்லோர்சொல் எண்ணிலையே - பெண்ணிங்கு ...303
மாமாத் திரையின் வருத்தனமென் றெண்ணினைஅந்(99)
நாமார்த்தம் ஆசையென நாடிலையே - யாமார்த்தம் ...304
மந்திரத்தும் பூசை மரபினுமற் றெவ்விதமாம்
தந்திரத்தும் சாயாச் சழக்கன்றோ - மந்திரத்தில் ...305

பேய்பிடித்தால் தீர்ந்திடுமிப் பெண்பேய் விடாதேசெந்
நாய்பிடித்தால் போலுமென்று நாடிலையே - ஆய்விலுன்றன் ...306
ஏழைமைஎன் னென்பேன் இவர்மயக்கம் வல்நரகின்
தோழைமையென் றந்தோ துணிந்திலையே - ஊழமைந்த ...307
காரிருளில் செல்லக் கலங்குகின்றாய் மாதர்சூழல்
பேரிருளில் செல்வதனைப் பேர்த்திலையே - பாரிடையோர் ...308
எண்வாள் எனிலஞ்சி ஏகுகின்றாய் ஏந்திழையார்
கண்வாள் அறுப்பக் கனிந்தனையே - மண்வாழும் ...309
ஓரானை யைக்கண்டால் ஓடுகின்றாய் மாதர்முலை
ஈரானை யைக்கண் டிசைந்தனையே - சீரான ...310

வெற்பென்றால் ஏற விரைந்தறியாய் மாதர்முலை
வெற்பென்றால் ஏற விரைந்தனையே - பொற்பொன்றும் ...311
சிங்கமென்றால் வாடித் தியங்குகின்றாய் மாதரிடைச்
சிங்கமெனில் காணத் திரும்பினையே - இங்குசிறு ...312
பாம்பென்றால் ஓடிப் பதுங்குகின்றாய் மாதரல்குல்
பாம்பென்றால் சற்றும் பயந்திலையே - ஆம்பண்டைக் ...313
கீழ்க்கடலில் ஆடென்றால் கேட்கிலைநீ மாதரல்குல்
பாழ்க்கடலில் கேளாது பாய்ந்தனையே - கீழ்க்கதுவும் ...314
கல்லென்றால் பின்னிடுவாய் காரிகையார் காற்சிலம்பு
கல்லென்றால் மேலெழும்பக் கற்றனையே - அல்அளகம் ...315

மையோ கருமென் மணலோஎன் பாய்மாறி
ஐயோ நரைப்ப தறிந்திலையோ - பொய்யோதி ...316
ஒண்பிறையே ஒண்ணுதலென் றுன்னுகின்றாய் உள்ளெலும்பாம்
வெண்பிறையன் றேயதனை விண்டிலையே - கண்புருவம் ...317
வில்லென்றாய் வெண்மயிராய் மேவி உதிர்ந்திடுங்கால்
சொல்லென்றால் சொல்லத் துணியாயே - வல்லம்பில் ...318
கட்கு வளைஎன்றாய்க் கண்ணீர் உலர்ந்துமிக
உட்குழியும் போதில் உரைப்பாயே - கட்குலவு ...319
மெய்க்குமிழே நாசியென வெஃகினையால் வெண்மலத்தால்
உய்க்குமிழுஞ் சீந்த லுளதேயோ - எய்த்தலிலா ...320

வள்ளையென்றாய் வார்காது வள்ளைதனக் குட்புழையோ
டுள்ளுநரம் பின்புனைவும் உண்டேயோ - வெள்ளைநகை ...321
முல்லையென்றாய் முல்லை முறித்தொருகோல் கொண்டுநிதம்
ஒல்லை அழுக்கெடுப்ப துண்டேயோ - நல்லதொரு ...322
கொவ்வை யெனஇதழைக் கொள்கின்றாய் மேல்குழம்பும்
செவ்வை இரத்தமெனத் தேர்ந்திலையே - செவ்வியகண் ...323
ணாடி யெனக்கவுட்கே ஆசைவைத்தாய் மேல்செழுந்தோல்
வாடியக்கால் என்னுரைக்க மாட்டுவையே - கூடியதோர் ...324
அந்த மதிமுகமென் றாடுகின்றாய் ஏழ்துளைகள்
எந்தமதிக் குண்டதனை எண்ணிலையே - நந்தெனவே ...325

கண்டமட்டும் கூறினைஅக் கண்டமட்டும் அன்றியுடல்
கொண்டமட்டும் மற்றதன்மெய்க் கூறன்றோ - விண்டவற்றைத் ...326
தோளென் றுரைத்துத் துடிக்கின்றாய் அவ்வேய்க்கு
மூளொன்று வெள்ளெலும்பின் மூட்டுண்டே - நாளொன்றும் ...327
செங்காந்தள் அங்கையெனச் செப்புகின்றாய் அம்மலர்க்குப்
பொங்காப் பலவிரலின் பூட்டுண்டே - மங்காத ...328
செவ்விளநீர் கொங்கையெனச் செப்பினைவல் ஊன்றடிப்பிங்
கெவ்விளநீர்க் குண்டதனை எண்ணிலையே - செவ்வைபெறும் ...329
செப்பென் றனைமுலையைச் சீசீ சிலந்தி(100)யது
துப்பென் றவர்க்கியாது சொல்லுதியே - வப்பிறுகச்(101) ...330

சூழ்ந்தமுலை மொட்டென்றே துள்ளுகின்றாய் கீழ்த்துவண்டு
வீழ்ந்தமுலைக் கென்ன விளம்புதியே - தாழ்ந்தஅவை ...331
மண்கட்டும் பந்தெனவே வாழ்ந்தாய் முதிர்ந்துடையாப்
புண்கட்டி என்பவர்வாய்ப் பொத்துவையே(102) - திண்கட்டும் ...332
அந்நீர்க் குரும்பை அவையென்றாய் மேலெழும்பும்
செந்நீர்ப் புடைப்பென்பார் தேர்ந்திலையே - அந்நீரார் ...333
கண்ணீர் தரும்பருவாய்க் கட்டுரைப்பார் சான்றாக
வெண்ணீர் வரல்கண்டும் வெட்கிலையே - தண்ணீர்மைச் ...334
சாடியென்பாய் நீஅயலோர் தாதுக் கடத்திடுமேன்
மூடியென்பார் மற்றவர்வாய் மூடுதியோ - மேடதனை(103) ...335

ஆலிலையே என்பாய் அடர்குடரோ டீருளொடும்(104)
தோலிலையே ஆலிலைக்கென் சொல்லுதியே - நூலிடைதான் ...336
உண்டோ இலையோஎன் றுட்புகழ்வாய் கைதொட்டுக்
கண்டோ ர்பூட்(105) டுண்டென்பார் கண்டிலையே - விண்டோ ங்கும் ...337
ஆழ்ங்கடலென் பாய்மடவார் அல்குலினைச் சிற்சிலர்கள்
பாழ்ங்கிணறென் பாரதனைப் பார்த்திலையே - தாழ்ங்கொடிஞ்சித் ...338
தேராழி என்பாயச் சீக்குழியை அன்றுசிறு
நீராழி யென்பவர்க்கென் நேருதியே(106) - ஆராப்புன் ...339
நீர்வீழியை ஆசை நிலையென்றாய் வன்மலம்தான்
சோர்வழியை என்னென்று சொல்லுதியே - சார்முடைதான் ...340

ஆறாச் சிலைநீர்கான் ஆறாய் ஒழுக்கிடவும்
வீறாப்புண் என்று விடுத்திலையே - ஊறாக்கி ...341
மூலை எறும்புடன்ஈ மொய்ப்பதஞ்சி மற்றதன்மேல்
சீலையிடக் கண்டும் தெரிந்திலையே - மேலையுறு ...342
மேநரகம் என்றால் விதிர்ப்புறுநீ மாதரல்குல்
கோநரகம் என்றால் குலைந்திலையே - ஊனமிதைக் ...343
கண்டால் நமதாசை கைவிடுவார் என்றதனைத்
தண்டா தொளித்திடவும் சார்ந்தனையே - அண்டாது ...344
போதவிடா யாகிப் புலம்புகின்றாய் மற்றதன்பால்
மாதவிடாய் உண்டால் மதித்திலையே - மாதரவர் ...345

தங்குறங்கை மெல்லரம்பைத் தண்டென்றாய் தண்டூன்றி
வெங்குரங்கின் மேவுங்கால் விள்ளுதியே - நன்கிலவாய் ...346
ஏய்ந்த முழந்தாளைவரால் என்றாய் புலாற்சிறிதே
வாய்ந்து வராற்றோற்கு மதித்திலையே - சேந்தவடி ...347
தண்டா மரையென்றாய் தன்மை விளர்ப்படைந்தால்
வெண்டா மரையென்று மேவுதியோ - வண்டாரா ...348
மேனாட்டுஞ் சண்பகமே மேனியென்றாய் தீயிடுங்கால்
தீநாற்றம் சண்பகத்தில் தேர்ந்தனையோ - வானாட்டும் ...349
மின்றேர் வடிவென்றாய் மேல்நீ உரைத்தவுளீ
தொன்றே ஒருபுடையாய் ஒத்ததுகாண்(107) - ஒன்றாச்சொல் ...350

வேள்வா கனமென்றாய் வெய்யநமன் விட்டிடுந்தூ
தாள்வா கனமென்றால் ஆகாதோ - வேளானோன் ...351
காகளமாய்(108) இன்குரலைக் கட்டுரைத்தாய் காலனென்போன்
காகளமென் பார்க்கென் கழறுதியே - நாகளவும் ...352
சாயைமயில் என்றே தருக்குகின்றாய் சார்பிரம
சாயை(109)யஃ தென்பார்க்கென் சாற்றுதியே - சேயமலர் ...353
அன்ன நடைஎன்பாய் அஃதன் றருந்துகின்ற
அன்னநடை என்பார்க்கென் ஆற்றுதியே - அன்னவரை ...354
ஓரோ வியமென்பாய் ஓவியமேல் ஆங்கெழுபத்
தீரா யிரநாடி யாண்டுடைத்தே - பாரார்ந்த ...355

முன்னுமலர்க் கொம்பென்பாய் மூன்றொடரைக் கோடியெனத்
துன்னு முரோமத் துவாரமுண்டே - இன்னமுதால் ...356
செய்தவடி வென்பாயச் செய்கைமெய்யேல் நீயவர்கள்
வைதிடினும் மற்றதனை வையாயே - பொய்தவிராய் ...357
ஒள்ளிழையார் தம்முருவோர் உண்கரும்பென் றாய்சிறிது
கிள்ளியெடுத் தால்இரத்தங் கீழ்வருமே - கொள்ளுமவர் ...358
ஈடில்பெயர் நல்லார் எனநயந்தாய் நாய்ப்பெயர்தான்
கேடில்பெருஞ் சூரனென்பர் கேட்டிலையோ - நாடிலவர் ...359
மெல்லியலார் என்பாய் மிகுகருப்ப வேதனையை
வல்லியலார் யார்பொறுக்க வல்லார்காண் - வில்லியல்பூண் ...360

வேய்ந்தால் அவர்மேல் விழுகின்றாய் வெந்தீயில்
பாய்ந்தாலும் அங்கோர் பலனுண்டே - வேய்ந்தாங்கு ...361
சென்றால் அவர்பின்னர்ச் செல்கின்றாய் வெம்புலிப்பின்
சென்றாலும் அங்கோர் திறனுண்டே - சென்றாங்கு ...362
நின்றால் அவர்பின்னர் நிற்கின்றாய் கண்மூடி
நின்றாலும் அங்கோர் நிலையுண்டே - ஒன்றாது ...363
கண்டால் அவருடம்பைக் கட்டுகின்றாய்(110)கல்லணைத்துக்
கொண்டாலும் அங்கோர் குணமுண்டே - பெண்டானார் ...364
வைதாலும் தொண்டு வலித்தாய் பிணத்தொண்டு
செய்தாலும் அங்கோர் சிறப்புளதே - கைதாவி ...365

மெய்த்தாவும் செந்தோல் மினுக்கால் மயங்கினைநீ
செத்தாலும் அங்கோர் சிறப்புளதே - வைத்தாடும் ...366
மஞ்சள் மினுக்கால் மயங்கினைநீ மற்றொழிந்து
துஞ்சுகினும் அங்கோர் சுகமுளதே - வஞ்சியரைப் ...367
பார்த்தாடி ஓடிப் படர்கின்றாய் வெந்நரகைப்
பார்த்தாலும் அங்கோர் பலனுண்டே - சேர்த்தார்கைத் ...368
தொட்டால் களித்துச் சுகிக்கின்றாய் வன்பூதம்
தொட்டாலும் அங்கோர் துணையுண்டே - நட்டாலும் ...369
தெவ்வின்மட வாரைத் திளைக்கின்றாய் தீவிடத்தை
வவ்வுகினும் அங்கோர் மதியுண்டே - செவ்விதழ்நீர் ...370

உண்டால் மகிழ்வாய்நீ ஒண்சிறுவர் தம்சிறுநீர்
உண்டாலும் அங்கோ ருரனுண்டே - கண்டாகக் ...371
கவ்வுகின்றாய் அவ்விதழைக் கார்மதுகம் வேம்பிவற்றைக்
கவ்வுகினும் அங்கோர் கதியுண்டே - அவ்விளையர் ...372
மென்றீயும் மிச்சில் விழைகின்றாய் நீவெறும்வாய்
மென்றாலும் அங்கோர் விளைவுண்டே - முன்றானை ...373
பட்டால் மகிழ்வு பதிந்தாய் பதைக்கவம்பு
பட்டாலும் அங்கோர் பலனுண்டே - கிட்டாமெய்த் ...374
தீண்டிடிலுள் ளோங்கிச் சிரிக்கின்றாய் செந்தேள்முன்
தீண்டிடினும் அங்கோர் திறனுண்டே - வேண்டியவர் ...375

வாய்க்கிடயா தானுமொன்று வாங்குகின்றாய் மற்றதையோர்
நாய்க்கிடினும் அங்கோர் நலனுண்டே - தாக்கவர்க்காய்த் ...376
தேட்டாண்மை செய்வாயத் தேட்டாண்மை யைத்தெருவில்
போட்டாலும் அங்கோர் புகழுண்டே - வாட்டாரைக் ...377
கொண்டா ருடனுணவு கொள்கின்றாய் குக்கலுடன்
உண்டாலும் அங்கோர் உறவுண்டே - மிண்டாகும் ...378
இங்கிவர்வாய்ப் பாகிலையை ஏற்கின்றாய் புன்மலத்தை
நுங்கினுமங் கோர்நல் நொறிலுண்டே(111) - மங்கையர்தம் ...379
ஏத்தா மனைகாத் திருக்கின்றாய் ஈமமது
காத்தாலும் அங்கோர் கனமுண்டே - பூத்தாழ்வோர் ...380

காட்டாக் குரல்கேட்பாய் கர்த்தபத்தின் பாழ்ங்குரலைக்
கேட்டாலும் அங்கோர் கிளருண்டே - கோட்டாவி ...381
ஆழ்ந்தா ருடன்வாழ ஆதரித்தாய் ஆழ்ங்கடலில்
வீழ்ந்தாலும் அங்கோர் விரகுண்டே - வீழ்ந்தாருள் ...382
வீட்டால் முலையுமெதிர் வீட்டால் முகமுமுறக்
காட்டாநின் றார்கண்டும் காய்ந்திலையே - கூட்டாட்குச் ...383
செய்கை யிடும்படிதன் சீமான் தனதுபணப்
பைகையிடல் கண்டும் பயந்திலையே - சைகையது ...384
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும்
செய்யா மயக்குகின்றார் தேர்ந்திலையே - எய்யாமல் ...385

ஈறிகந்த இவ்வகையாய் இம்மடவார் செய்கையெலாம்
கூறுவனேல் அம்ம குடர்குழம்பும் - கூறுமிவர் ...386
வாயொருபால் பேச மனமொருபால் செல்லவுடல்
ஆயொருபால் செய்ய அழிவார்காண் - ஆயஇவர் ...387
நன்றறியார் தீதே நயப்பார் சிவதலத்தில்
சென்றறியார் பேய்க்கே சிறப்பெடுப்பார் - இன்றிவரை ...388
வஞ்சமென்கோ வெவ்வினையாம் வல்லியமென் கோபவத்தின்
புஞ்சமென்கோ மாநரக பூமியென்கோ - அஞ்சுறுமீர் ...389
வாளென்கோ வாய்க்கடங்கா மாயமென்கோ மண்முடிவு
நாளென்கோ வெய்ய நமனென்கோ - கோளென்கோ ...390

சாலமென்கோ வானிந்த்ர சாலமென்கோ வீறால
காலமென்கோ நின்பொல்லாக் காலமென்கோ - ஞாலமதில் ...391
பெண்என்றால் யோகப் பெரியோர் நடுங்குவரேல்
மண்நின்றார் யார்நடுங்க மாட்டார்காண் - பெண்என்றால் ...392
பேயும் இரங்குமென்பார் பேய்ஒன்றோ தாம்பயந்த
சேயும் இரங்குமவர் தீமைக்கே - ஆயுஞ்செம் ...393
பொன்னால் துகிலால் புனையா விடிலவர்மெய்
என்னாகும் மற்றிதைநீ எண்ணிலையே - இன்னாமைக் ...394
கொத்தென்ற அம்மடவார் கூட்டம் எழுமைக்கும்
வித்தென் றறிந்துமதை விட்டிலையே - தொத்தென்று ...395

பாச வினைக்குட் படுத்துறும்அப் பாவையர்மேல்
ஆசையுனக் கெவ்வா றடைந்ததுவே - நேசமிலாய் ...396
நின்னாசை என்னென்பேன் நெய்வீழ் நெருப்பெனவே
பொன்னாசை மேன்மேலும் பொங்கினையே - பொன்னாசை ...397
வைத்திழந்து வீணே வயிறெரிந்து மண்ணுலகில்
எத்தனைபேர் நின்கண் எதிர்நின்றார் - தத்துகின்ற ...398
பொன்னுடையார் துன்பப் புணரியொன்றே அல்லதுமற்
றென்னுடையார் கண்டிங் கிருந்தனையே - பொன்னிருந்தால் ...399
ஆற்றன்மிகு தாயுமறி யாவகையால் வைத்திடவோர்
ஏற்றவிடம் வேண்டுமதற் கென்செய்வாய் - ஏற்றவிடம் ...400

வாய்த்தாலும் அங்கதனை வைத்தவிடம் காட்டாமல்
ஏய்த்தால் சிவசிவமற் றென்செய்வாய் - ஏய்க்காது ...401
நின்றாலும் பின்னதுதான் நீடும் கரியான
தென்றால் அரகரமற் றென்செய்வாய் - நன்றாக ...402
ஒன்றொருசார் நில்லென்றால் ஓடுகின்ற நீஅதனை
என்றும் புரப்பதனுக் கென்செய்வாய் - வென்றியொடு ...403
பேர்த்துப் புரட்டிப் பெருஞ்சினத்தால் மாற்றலர்கள்
ஈர்த்துப் பறிக்கிலதற் கென்செய்வாய் - பேர்த்தெடுக்கக் ...404
கைபுகுத்தும் காலுட் கருங்குளவி செங்குளவி
எய்புகுத்தக் கொட்டிடின்மற் றென்செய்வாய் - பொய்புகுத்தும் ...405

பொன்காவல் பூதமது போயெடுக்கும் போதுமறித்
தென்காவல் என்றால்மற் றென்செய்வாய் - பொன்காவல் ...406
வீறுங்கால் ஆணவமாம் வெங்கூளி நின்தலைமேல்
ஏறுங்கால் மற்றதனுக் கென்செய்வாய் - மாறும்சீர் ...407
உன்நேயம் வேண்டி உலோபம் எனும்குறும்பன்
இன்னே வருவனதற் கென்செய்வாய் - முன்னேதும் ...408
இல்லா நமக்குண்டோ இல்லையோ என்னுநலம்
எல்லாம் அழியுமதற் கென்செய்வாய் - நில்லாமல் ...409
ஆய்ந்தோர் சிலநாளில் ஆயிரம்பேர் பக்கலது
பாய்ந்தோடிப் போவதுநீ பார்த்திலையே - ஆய்ந்தோர்சொல் ...410

கூத்தாட் டவைசேர் குழாம்விளிந்தாற் போலுமென்ற
சீர்த்தாட் குறள்மொழியும் தேர்ந்திலையே112஦ பேர்த்தோடும் ...411
நாட்கொல்லி என்றால் நடுங்குகின்றாய் நாளறியா
ஆட்கொல்லி என்பரிதை ஆய்ந்திலையே - கீழ்க்கொல்லைப் ...412
பச்சிலையால் பொன்னைப் படைப்பாரேல் மற்றதன்மேல்
இச்சையுனக் கெவ்வா றிருந்ததுவே - இச்சையிலார் ...413
இட்டமலம் பட்டவிடம் எல்லாம்பொன் னாம்என்றால்
இட்டமதை விட்டற்(113) கிசைந்திலையே - முட்டகற்றப் ...414
பொன்னடப்ப தன்றியது போனகமே யாதியவாய்
என்னடுத்த தொன்றுமிஃ தெண்ணிலையே - இந்நிலத்தில் ...415

நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் உலகியலாம்
வீண்மயக்கம் என்றதனை விட்டிலையே -நீண்வலயத் ...416
திச்செல்வ மின்றி இயலாதேல் சிற்றுயிர்கள்
எச்செல்வம் கொண்டிங் கிருந்தனவே - வெச்சென்ற ...417
மண்ணாசை கொண்டனைநீ மண்ணாளும் மன்னரெலாம்
மண்ணால் அழிதல் மதித்திலையே - எண்ணாது ...418
மண்கொண்டார் மாண்டார்தம் மாய்ந்தவுடல் வைக்கவயல்
மண்கொண்டார் தம்மிருப்பில் வைத்திலரே - திண்கொண்ட ...419
விண்ணேகுங் காலங்கு வேண்டுமென ஈண்டுபிடி
மண்ணேனுங் கொண்டேக வல்லாரோ - மண்நேயம் ...420

என்னதென்றான் முன்னொருவன் என்னதென்றான் பின்னொருவன்
இன்னதுநீ கேட்டிங் கிருந்திலையோ - மன்னுலகில் ...421
கண்காணி யாய்நீயே காணியல்லாய் நீயிருந்த
மண்காணி என்று மதித்தனையே - கண்காண ...422
மண்காணி வேண்டி வருந்துகின்றாய் நீமேலை
விண்காணி வேண்டல் வியப்பன்றே - எண்காண ...423
அந்தரத்தில் நின்றாய்நீ அந்தோ நினைவிடமண்
அந்தரத்தில் நின்ற தறிந்திலையே - தந்திரத்தில் ...424
மண்கொடுப்பேன் என்றுரைக்கில் வைவார் சிறுவர்களும்
மண்கொடுக்கில் நீதான் மகிழ்ந்தனையே - வண்கொடுக்கும் ...425

வீடென்றேன் மற்றதைமண் வீடென்றே நீநினைந்தாய்
வீடென்ற சொற்பொருளை விண்டிலையே - நாடொன்றும் ...426
மண்ணால் மரத்தால் வனைகின்ற வீடனைத்தும்
கண்ணாரக் கட்டழிதல் கண்டிலையோ - மண்ணான ...427
மேல்வீடும் அங்குடைய வேந்தர்களும் மேல்வீட்டப்
பால்வீடும் பாழாதல் பார்த்திலையோ - மேல்வீட்டில் ...428
ஏறுவனே என்பாய் இயமன் கடாமிசைவந்
தேறுவனேல் உன்னாசை என்னாமோ - கூறிடும்இம் ...429
மண்ணளித்த வேதியனும் மண்விருப்பம் கொள்ளானேல்
எண்ணமுனக் கெவ்வா றிருந்ததுவே - மண்ணிடத்தில் ...430

ஆகாத் துரும்பிடத்தும் ஆசைவைத்தாய் என்னிலுன்றன்
ஏகாப் பெருங்காமம் என்சொல்கேன் - போகாத ...431
பாபக் கடற்கோர் படுகடலாம் பாழ்வெகுளிக்
கோபக் கடலில் குளித்தனையே - தாபமுறச் ...432
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனில் தீயதென்ற தெண்ணிலையே(114) - மல்லல்பெறத் ...433
தன்னைத்தான் காக்கில் சினங்காக்க என்றதனைப்
பொன்னைப்போல்போற்றிப் புகழ்ந்திலையே(115) - துன்னி ...434
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல என்னுந்
திகழ்வாய் மையும்நீ தெளியாய்(116) - இகழ்வாரை ...435

எவ்வண்ணம் நம்மை இகழ்வார் அறிவோமென்
றிவ்வண்ணம் என்னைவெளி யிட்டனையே - தெவ்வென்ன ...436
ஓரா வெகுளி யுடையான் தவமடையான்
தீராயென் பாரதுவும் தேர்ந்திலையே - பேராநின் ...437
வெவ்வினைக்கீ டாகஅரன் வெம்மைபுரி வானென்றால்
இவ்வெகுளி யார்மாட் டிருத்துவதே - செவ்வையிலாய் ...438
ஏய்ந்தனையன் போரிடத்தில் இன்னாமை செய்தவரைக்
காய்ந்தனைமற் றென்னபலன் கண்டனையே - வாய்ந்தறிவோர் ...439
எல்லா நலமும் இஃதேயென் றேத்துகின்ற
கொல்லா நலம்சிறிதுங் கொண்டிலையே - பொல்லாத ...440

வன்போ டிருக்கு மதியிலிநீ மன்னுயிர்க்கண்
அன்போ டிரக்கம் அடைந்திலையே - இன்போங்கு ...441
தூய்மையென்ப தெல்லாம் துணையாய் அணைவதுதான்
வாய்மையென்ப தொன்றே மதித்திலையே - தூய்மையிலாய் ...442
மானொருகை ஏந்திநின்ற வள்ளலன்பர் தங்களுளே
நானொருவன் என்று நடித்தனையே - ஆனமற்றைப் ...443
பாதகங்க ளெல்லாம் பழகிப் பழகியதில்
சாதகஞ்செய் வோரில் தலைநின்றாய் - பாதகத்தில் ...444
ஓயா விகார உணர்ச்சியினால் இவ்வுலக
மாயா விகாரம் மகிழ்ந்தனையே - சாயாது ...445

நீஇளமை மெய்யாய் நினைந்தாய் நினைப்பெற்ற
தாயிளமை எத்தனைநாள் தங்கியதே - ஆயிளமை ...446
மெய்கொடுத்த தென்பாய் விருத்தர்கட்கு நின்போல்வார்
கைகொடுத்துப் போவதனைக் கண்டிலையோ - மெய்கொடுத்த ...447
கூனொடும்கைக் கோலூன்றிக் குந்தி நடைதளர்ந்து
கானடுங்க நிற்பவரைக் கண்டிலையோ - ஊனொடுங்க ...448
ஐயநட வென்றே அரும்புதல்வர் முன்செலப்பின்
பைய நடப்பவரைப் பார்த்திலையோ - வெய்யநமன் ...449
நாடழைக்கச் சேனநரி நாயழைக்க நாறுசுடு
காடழைக்க மூத்துநின்றார் கண்டிலையோ - பீடடைந்த ...450

மெய்யுலர்ந்து நீரின் விழியுலர்ந்து வாயுலர்ந்து
கையுலர்ந்து நிற்பவரைக் கண்டிலையோ - மெய்யுலர்ந்தும் ...451
சாகான் கிழவன் தளர்கின்றான் என்றிவண்நீ
ஓகாளம் செய்வதனை ஓர்ந்திலையோ - ஆகாத ...452
கண்டமிது பொல்லாக் கடுநோய் எனுங்குமர
கண்டமிஃ தென்பவரைக் கண்டிலையோ - கொண்டவுடல் ...453
குட்டமுறக் கைகால் குறுக்குமிது பொல்லாத
குட்டமென நோவார் குறித்திலையோ - துட்டவினை ..454
மாலையினும் காலையினும் மத்தியினும் குத்துமிது
சூலையென நோவாரைச் சூழ்ந்திலையோ - சாலவுமித் ...455

தேக மதுநலியச் செய்யுங்காண் உய்வரிதாம்
மேகமிஃ தென்பாரை மேவிலையோ - தாகமுறச் ...456
சித்தநோய் செய்கின்ற சீதநோய் வாதமொடு
பித்தநோய் கொண்டவர்பால் பேர்ந்திலையோ - மெத்தரிய ...457
கைப்பிணியும் காற்பிணியும் கட்பிணியோ டெண்ணரிய
மெய்ப்பிணியும் கொண்டவரை விண்டிலையோ - எய்ப்புடைய ...458
முட்டூறும் கைகால் முடங்கூன் முதலாய
எட்டூறுங் கொண்டவரை எண்ணிலையோ - தட்டூறிங் ...459
கெண்ணற்ற துண்டேல் இளமை ஒருபொருளாய்
எண்ணப் படுமோவென் றெண்ணிலையோ - எண்ணத்தில் ...460

பொய்யென் றறவோர் புலம்புறவும் இவ்வுடம்பை
மெய்யென்று பொய்ம்மயக்கம் மேவினையே - கைநின்று ..461
கூகா எனமடவார் கூடி அழல்கண்டும்
நீகாதல் வைத்து நிகழ்ந்தனையே - மாகாதல் ...462
பெண்டிருந்து மாழ்கப் பிணங்கொண்டு செல்வாரைக்
கண்டிருந்தும் அந்தோ கலங்கிலையே - பண்டிருந்த ...463
ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு
நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக ...464
இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்றறவோர்
நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே - ஒன்றி ...465

உறங்குவது போலுமென்ற ஒண்குறளின் வாய்மை
மறங்கருதி அந்தோ மறந்தாய்(117) - கறங்கின் ...466
நெருநல் உளனொருவன் என்னும் நெடுஞ்சொல்
மருவும் குறட்பா மறந்தாய்(118) - தெருவில் ...467
இறந்தார் பிறந்தா ரிறந்தா ரெனுஞ்சொல்
மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார் ...468
பறையோசை அண்டம் படீரென் றொலிக்க
மறையோசை யன்றே மறந்தாய் - இறையோன் ...469
புலனைந்தும் என்றருளும் பொன்மொழியை மாயா
மலமொன்றி அந்தோ மறந்தாய்(119) - நிலனொன்றி ...470

விக்குள் எழநீர் விடுமி னெனஅயலோர்
நெக்குருகல் அந்தோ நினைந்திலையே - மிக்கனலில் ...471
நெய்விடல்போல் உற்றவர்கண் ணீர்விட் டழவுயிர்பல்
மெய்விடலும் கண்டனைநீ விண்டிலையே - செய்வினையின் ...472
வாள்கழியச் செங்கதிரோன் வான்கழிய நம்முடைய
நாள்கழிதற் கந்தோ நடுங்கிலையே - கோள்கழியும் ...473
நாழிகையோர் நாளாக நாடினையே நாளைஒரு
நாழிகையாய் எண்ணி நலிந்திலையே - நாழிகைமுன் ...474
நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்
சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது ...475

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்
விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே - தட்டாமல் ...476
உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்
கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார் ...477
நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று
சாற்றுவது கேட்டும் தணந்திலையே - வீற்றுறுதேர் ...478
ஊர்ந்தார் தெருவில் உலாப்போந்தார் வானுலகம்
சேர்ந்தார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - சேர்ந்தாங்கு ...479
என்னே இருந்தார் இருமினார் ஈண்டிறந்தார்
அன்னே எனக்கேட்டும் ஆய்ந்திலையே - கொன்னே ...480

மருவும் கருப்பைக்குள் வாய்ந்தே முதிராக்
கருவும் பிதிர்ந்துதிரக் கண்டாய் - கருவொன் ...481
றொடுதிங்கள் ஐயைந்தில்(120) ஒவ்வொன்றில் அந்தோ
கெடுகின்ற தென்றதுவும் கேட்டாய் - படுமிந் ...482
நிலைமுற்ற யோனி நெருக்கில் உயிர்போய்ப்
பலனற்று வீழ்ந்ததுவும் பார்த்தாய் - பலனுற்றே ...483
காவென்று வீழ்ந்தக் கணமே பிணமாகக்
கோவென் றழுவார் குறித்திலையோ - நோவின்றிப் ...484
பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே
காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து ...485

பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்
அற்றாவி போவ தறிந்திலையோ - கற்றாயப் ...486
பள்ளியிடுங் காலவனைப் பார நமன்வாயில்
அள்ளியிடுந் தீமை அறிந்திலையோ - பள்ளிவிடும் ...487
காளைப் பருவமதில் கண்டார் இரங்கிடஅவ்
ஆளைச் சமன்கொள்வ தாய்ந்திலையோ - வேளைமண ...488
மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே
சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை ...489
மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்
பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ - வீடலிஃ ...490

திக்கணமோ மேல்வந் திடுங்கணமோ அன்றிமற்றை
எக்கணமோ என்றார்நீ எண்ணிலையே - தொக்குறுதோல் ...491
கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட
ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ ...492
பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி
ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ - தாழ்மண்ணின் ...493
பாண்டமென்கோ வெஞ்சரக்குப் பையென்கோ பாழ்ங்கரும
காண்டமென்கோ ஆணவத்தின் கட்டென்கோ - கோண்தகையார் ...494
மெய்யென்கோ மாய விளைவென்கோ மின்னென்கோ
பொய்யென்கோ மாயப் பொடியென்கோ - மெய்யென்ற ...495

மங்கலத்தை மங்கலத்தால் வாஞ்சித் தனருலகர்
அங்கவற்றை எண்ணா தலைந்தனையே - தங்குலகில் ...496
மற்றிதனை ஓம்பி வளர்க்க உழன்றனைநீ
கற்றதனை எங்கே கவிழ்த்தனையே - அற்றவரை ...497
இக்கட் டவிழ்த்திங் கெரிமூட் டெனக்கேட்டும்
முக்கட்டும் தேட முயன்றனையே - இக்கட்டு ...498
மண்பட்டு வெந்தீ மரம்பட் டிடக்கண்டும்
வெண்பட் டுடுக்க விரைந்தனையே - பண்ப ட்ட ...499
ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும்
மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல் ...500

காதிற் கடுக்கன் கழற்றுமெனக் கேட்டுநின்றும்
ஏதிற் பணியினிடத் தெய்தினையே - தாதிற்குத் ...501
துற்கந்த மாகச் சுடுங்கால் முகர்ந்திருந்தும்
நற்கந்தத் தின்பால் நடந்தனையே - புற்கென்ற ...502
வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்
இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப் ...503
பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்
சோறுண் டிருக்கத் துணிந்தனையே - மாறுண்டு ...504
கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்டுமிகு
சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலனோர் ...505

நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத
இல்வாழ்வை மெய்யென் றிருந்தனையே - சொல்லாவி ...506
ஈன்றோன் தனைநாளும் எண்ணாமல் இவ்வுடம்பை
ஈன்றோரை ஈன்றோரென் றெண்ணினையே - ஈன்றோர்கள் ...507
நொந்தால் உடனின்று நோவார் வினைப்பகைதான்
வந்தால் அதுநீக்க வல்லாரோ - வந்தாடல் ...508
உற்றசிறார் நம்மடையா தோட்டுகிற்பார் தென்றிசைவாழ்
மற்றவன்வந் தால்தடுக்க வல்லாரோ - சிற்றுணவை ...509
ஈங்கென்றால் வாங்கி யிடுவார் அருளமுதம்
வாங்கென்றால் வாங்கியிட வல்லாரோ - தீங்ககற்றத் ...510

தூண்டா மனையாதிச் சுற்றமெலாம் சுற்றியிட
நீண்டாய் அவர்நன் னெறித்துணையோ - மாண்டார்பின் ...511
கூடி அழத்துணையாய்க் கூடுவார் வன்னரகில்
வாடியழும் போது வருவாரோ - நீடியநீ ...512
இச்சீவர் தன்துணையோ ஈங்கிவர்கள் நின்துணையோ
சீச்சீ இதென்ன திறங்கண்டாய் - இச்சீவர் ...513
நின்னைவைத்து முன்சென்றால் நீசெய்வ தென்னவர்முன்
இந்நிலத்தில் நீசென்றால் என்செய்வர் - நின்னியல்பின் ...514
எத்தனைதாய் எத்தனைபேர் எத்தனையூர் எத்தனைவாழ்
வெத்தனையோ தேகம் எடுத்தனையே - அத்தனைக்கும் ...515

அவ்வவ் விடங்கடொறும் அவ்வவரை ஆண்டாண்டிங்
கெவ்வெவ் விதத்தால் இழந்தனையோ - அவ்விதத்தில் ...516
ஒன்றேனும் நன்றாய் உணர்ந்திருத்தி யேலிவரை
இன்றே துறத்தற் கிசையாயோ - நின்றோரில் ...517
தாயார் மனையார் தனயரார் தம்மவரார்
நீயார் இதனை நினைந்திலையே - சேயேகில் ...518
ஏங்குவரே என்றாய் இயமன்வரின் நின்னுயிரை
வாங்கிமுடி யிட்டகத்தில் வைப்பாரோ - நீங்கியிவண் ...519
உன்தந்தை தன்றனக்கிங் கோர்தந்தை நாடுவனீ
என்தந்தை என்றுரைப்ப தெவ்வாறே - சென்றுபின்னின் ...520

தன்மனையாள் மற்றொருவன் தன்மனையாள் ஆவளெனில்
என்மனையாள் என்பதுநீ எவ்வணமே - நன்மைபெறும் ...521
நட்பமைந்த நன்னெறிநீ நாடா வகைதடுக்கும்
உட்பகைவர் என்றிவரை ஓர்ந்திலையே - நட்புடையாய் ...522
எம்மான் படைத்தஉயிர் இத்தனைக்குட் சில்லுயிர்பால்
இம்மால் அடைந்ததுநீ என்னினைந்தோ - வம்மாறில் ...523
எம்பந்த மேநினக்கிங் கில்லையென்றால் மற்றையவர்
தம்பந்தம் எவ்வாறு தங்கியதே - சம்பந்தர் ...524
அற்றவருக் கற்றசிவனாமெனுமப் பொன்மொழியை(121)
மற்றைமொழி போன்று மறந்தனையே - சிற்றுயிர்க்குக் ...525

கற்பனையில் காய்ப்புளதாய்க் காட்டும் பிரபஞ்சக்
கற்பனையை மெய்யென்று கண்டனையே - பற்பலவாம் ...526
தூரியத்தில்(122) தோன்றொலிபோல் தோன்றிக் கெடுமாயா
காரியத்தை மெய்யெனநீ கண்டனையே - சீரியற்றும் ...527
ஆடகத்தில் பித்தளையை ஆலித் திடுங்கபட
நாடகத்தை மெய்யென்று நம்பினையே - நீடகத்தில் ...528
காயவித்தை யாலக் கடவுள் இயற்றுமிந்த
மாயவித்தை மெய்யெனநீ வாழ்ந்தனையே - வாயவித்தை ...529
இப்படக மாயை யிருள்தமமே என்னுமொரு
முப்படகத் துள்ளே முயங்கினையே - ஒப்பிறைவன் ...530

ஆனவொளி யிற்பரையாம் ஆதபத்தி னால்தோன்றும்
கானலினை நீராய்க் களித்தனையே - ஆனகிரி ...531
யாசத்தி யென்றிடுமோர் அம்மைவிளை யாட்டெனுமிப்
பாசத்தி னுள்ளே படர்ந்தனையே - நேசத்தின் ...532
பொய்யொன்றுண் மெய்யிற் புகும்பால லீலைதனை
மெய்யென்று வீணில் விரிந்தனையே - பொய்யென்று ...533
மீட்டுநின்ற லீலா வினோத மெனுங்கதையைக்
கேட்டுநின்றும் அந்தோ கிளர்ந்தனையே - ஈட்டிநின்ற ...534
காலத்தை வீணில் கழிக்கும் படிமேக
சாலத்தை மெய்யாய்த் தருக்கினையே - சாலத்தில் ...535

கண்மையகன் றோங்குமந்த காரத்தில் செம்மாப்புற்
றுண்மையொன்றுங் காணா துழன்றனையே - வண்மையிலாய் ...536
இங்கு நினைப்பெரியோர் என்னினைப்பார் ஏமாப்பில்
கங்கு லினைப்பகலாய்க் கண்டனையே - தங்குறுமித் ...537
தேகாதி பொய்யெனவே தேர்ந்தார் உரைக்கவும்நீ
மோகாதிக் குள்ளே முயல்கின்றாய் - ஓகோநும் ...538
கோமுடிக்கண் தீப்பற்றிக் கொண்டதென்றால் மற்றதற்குப்
பூமுடிக்கத் தேடுகின்றோர் போன்றனையே - மாமுடிக்கும் ...539
வாழ்வுநிலை யன்றிமைப்பில் மாறுகின்ற தென்றுரைத்தும்
வீழ்வுகொடு(123)வாளா விழுகின்றாய் - தாழ்வுறநும் ...540

விண்டுறுங்கை வீடனலால் வேகின்ற தென்னவுட்போய்
உண்டுறங்கு கின்றோரை ஒத்தனையே - தொண்டுலகங் ...541
கானமுயற் கொம்பாய்க் கழிகின்ற தென்கின்றேன்
நீநயமுற் றந்தோ நிகழ்கின்றாய் - ஆனநும்மூர் ...542
வெள்ளத்தி னால்முழுகி விட்டதென்றால் சென்றுகடை
கொள்ளத் திரிபவர்போல் கூடினையே - கொள்ளவிங்கு ...543
கண்டனவெல் லாம்நிலையாக் கைதவமென் கின்றேன்நீ
கொண்டவைமுற் சேரக் குறிக்கின்றாய் - உண்டழிக்க ...544
ஊழிவெள்ளம் வந்ததென்றால் உண்பதற்கும் ஆடுதற்கும்
ஊழிநன்னீ(124)ரோவென்பார் ஒத்தனையே - ஏழியற்றும் ...545

தற்புவனம் போகம் தனுகரணம் என்கின்ற
சொற்பனத்தில் அந்தோ துவன்றினையே - பற்பகலும் ...546
உண்டனவே உண்கின்றாய் ஓர்ந்தனவே ஓர்கின்றாய்
கண்டனவே கண்டு களிக்கின்றாய் - கொண்டனவே ...547
கொண்டியங்கு கின்றாய் குறித்தனவே பிற்குறித்துப்
பண்டறியார் போலப் படர்கின்றாய் - பண்டறிந்து ...548
சொல்லாடி நின்றனவே சொல்கின்றாய் மற்றிதனை
நல்லோர்கள் கண்டால் நகையாரோ - செல்லான ...549
காலம்போல் இங்குநிகழ் காலமும்காண் கின்றியெதிர்
காலமற்றும் அத்திறம்மேற் காண்குவையேல் - சாலவுமுன் ...550

போதுசெலா முன்னமனு பூதியைநீ நாடாமல்
யாதுபயன் எண்ணி இனைகின்றாய் - தீதுசெயும் ...551
வீணவத்தை யெல்லாம் விளைக்கும் திறல்மூல
ஆணவத்தி னாலே அழிந்தனையே - ஆணவத்தில் ...552
நீயார் எனஅறியாய் நின்னெதிரில் நின்றவரை
நீயார் எனவினவி நீண்டனையே - ஓயாமல் ...553
ஊனின்ற ஒன்றின் உளவறியாய் அந்தோநீ
நானென்று சொல்லி நலிந்தனையே - நானென்று ...554
சொல்லுதியோ சொல்லாயோ துவ்வாமை பெற்றொருநீ
அல்லலுறுங் காலத் தறைகண்டாய் - அல்லவெலாம் ...555

நீஇங்கே நான்அங்கே நிற்கநடு வேகுதித்தால்
நீஎங்கே நான்எங்கே நின்றறிகாண் - நீஇங்கு ...556
ஒன்றெடுக்கச் சென்றுமற்றை ஒன்றெடுக்கக் காண்கின்றேன்
இன்றடுத்த நீஎங் கிருந்தனையே - மன்றடுத்த ...557
தாளா தரித்தேநின் றன்னைமறந் துய்யாது
வாளா மதத்தின் மலிகின்றாய் - கேளாயிச் ...558
சார்பிலொன்று விட்டொழிந்தால் சாலமகிழ் கிற்பேனான்
சோர்புகொண்டு நீதான் துயர்கின்றாய் - சார்புபெருந் ...559
தூவென்று நானிவணஞ் சும்மா இருந்தாலும்
வாவென் றெனையும் வலிக்கின்றாய் - ஓவுன்றன் ...560

சூழ்ச்சியறி யேன்நீ சுழல்கின்ற போதெல்லாம்
சூழ்ச்சியிலே நானும் சுழல்கின்றேன் - நீட்சியில்நீ ...561
காலசைத்தால் யானும் கடிதில் தலையசைப்பேன்
மாலசைத்த நின்புணர்ப்பின் வாறெதுவோ - வாலுமண்டக் ...562
கூவத்தில் யானோர் குடநீ கயிற்றோடும்
ஏவல்கொ ளுமேழை என்கேனோ - பாவத்தில் ...563
சுற்றுண்ட நீகடலில் தோன்றுசுழி யாகஅதில்
எற்றுண்ட நான்திரணம் என்கேனோ - பற்றிடுநீ ...564
சங்கற்ப மாஞ்சூறை தானாக நானாடும்
அங்கட் சருகென் றறைகேனோ - பொங்குற்ற ...565

சேலைவிரா யோர்தறியில் செல்குழைநீ பின்தொடரும்
நூலிழைநான் என்று நுவல்கேனோ - மாலிடுநீ ...566
துள்ளுறுப்பின் மட்பகைஞன் சுற்றாழி யாகவதின்
உள்ளுறுப்பே நானென் றுரைக்கேனோ - எள்ளுறுநீ ...567
பாழலைவா னேகும் பருந்தாக அப்பருந்தின்
நீழலைநான் என்று நினைகேனோ - நீழலுறா ...568
நின்வசம்நான் என்றுலகு நிந்தைமொழி கின்றதலால்
என்வசம்நீ என்ப திலைகண்டாய் - என்வசம்நீ ...569
ஆனால் எளியேனுக் காகாப் பொருளுளவோ
வானாடர் வந்து வணங்காரோ - ஆனாமல்(125) ...570

எண்ணுதற்கும் பேசுதற்கும் எட்டாப் பரஞ்சோதிக்
கண்ணுதலும் அங்கைக் கனியன்றோ - எண்ணுமிடத் ...571
தென்செய்வே னோர்கணமும் என்சொல்வழி நில்லாமல்
கொன்செய்வேன் என்று குதிக்கின்றாய் - வன்செய்யும் ...572
சிந்தோடும்(126) ஓர்வடவைத் தீயும் கரத்தடைப்பர்
அந்தோ உனையார் அடக்குவரே - வந்தோடும் ...573
கச்சோதம்(127) என்னக் கதிரோன் தனையெடுப்பர்
அச்சோ உனையார் அடக்குவரே - வைச்சோங்கு ...574
மூவுலகும் சேர்த்தொருதம் முன்றானை யின்முடிவர்
ஆவுனையும் இங்கார் அடக்குவரே - மேவுபல ...575

தேசமென்றும் காலமென்றும் திக்கென்றும் பற்பலவாம்
வாசமென்றும் அவ்வவ் வழக்கென்றும் - மாசுடைய ...576
போகமென்றும் மற்றைப் புலனென்றும் பொய்அகலா
யோகமென்றும் பற்பலவாம் யூகமென்றும் - மேகமென்றும் ...577
வானென்றும் முந்நீர் மலையென்றும் மண்ணென்றும்
ஊனென்றும் மற்றை உறவென்றும் - மேல்நின்ற ...578
சாதியென்றும் வாழ்வென்றும் தாழ்வென்றும் இவ்வுலக
நீதியென்றும் கன்ம நெறியென்றும் - ஓதரிய ...579
அண்டமென்றும் அண்டத் தசைவும் அசைவுமலாப்
பண்டமென்றும் சொல்பவெலாம் பன்முகங்கள் - கொண்டிருந்த ...580

உன்நினைவி னுள்ளே உதித்திட் டுலவிநிற்ப
எந்நினைவு கொண்டோ மற் றிவ்வுலகர் - எந்நவையும் ...581
தந்தோன் எவனோ சதுமுகனுண் டென்பார்கள்
அந்தோநின் செய்கை அறியாரே - அந்தோநான் ...582
ஆமென்றால் மற்றதனை அல்லவென்பாய் அல்லவென்றால்
ஆமென்பாய் என்னை அலைக்கின்றாய் - நாம்அன்பாய் ...583
என்றும் பிறந்திறவா இன்பம் அடைதுமென்றால்
நன்றென் றொருப்படுவாய் நண்ணுங்கால் - தொன்றெனவே(128) ...584
செல்கிற்பாய் செல்லாச் சிறுநடையில் தீமையெலாம்
நல்கிற்பாய் என்னேநின் நட்புடைமை - சொல்கிற்பில் ...585

ஆவதுவும் நின்னால் அழிவதுவும்நின் னாலெனயான்
நோவதுவும் கண்டயலில் நோக்கினையே - தாவுமெனக் ...586
காணவலம் பெண்ணவலம் ஆகும் பொருளவலம்
ஊணவலம் உற்றாரோ டூரவலம் - பூணவலம் ...587
ஊன்அவலம் அன்றியும்என் உற்றதுணை யாம்நீயும்
தான்அவலம் என்றாலென் சாற்றுவதே - நான்இவணம் ...588
இன்பமெது கண்டேமால் இச்சையெலாம் துன்பமதில்
துன்பம் பிறப்பென்றே சோர்கின்றேன் - வன்புடைய ...589
இப்பிறவித் துன்பத்தி னும்திதியில் துன்பமது
செப்பரிதாம் என்றே திகைக்கின்றேன் - செப்பிறப்பின் ...590

ஓயாத துன்பம் உரைக்க உடம்பெல்லாம்
வாயாகி னும்போத மாட்டாதேல் - ஏஏநாம் ...591
செய்வதென்னோ என்று தியங்குகின்றேன் இவ்வணம்நான்
நைவதெல்லாம் கண்டு நடந்தனையே - கைவருமிவ் ...592
இல்லிக் குடமுடைந்தால் யாதாமென் றுன்னுடன்யான்
சொல்லித் திரிந்துமெனைச் சூழ்ந்திலையே - வல்இயமன் ...593
நாளையோ இன்றோ நடக்கின்ற நாட்களிலெவ்
வேளையோ தூது விடில்அவர்கள் - கேளையோ ...594
நல்லோம் எனினும் நடவார் நடவார்நாம்
செல்லோம் எனினுமது செல்லாதே - வல்லீர்யாம் ...595

இன்சொலினோம் இன்றிங் கிருந்துவரு வோம்எனயாம்
என்சொலினும் அச்சொலெலாம் ஏலாதே - மன்சொலுடைத் ...596
தாமரையோன் மான்முதலோர் தாம்அறையா ராயிலன்று
நாமறைவோம் என்றல் நடவாதே - நாமிவணம் ...597
அந்நாள் வருமுன்னர் ஆதி அருளடையும்
நன்னாள் அடைதற்கு நாடுதுங்காண் - என்னாநின் ...598
றோதுகின்றேன் கேட்டும் உறார்போன் றுலகியலில்
போதுகின்றாய் யாது புரிகிற்பேன் - தீதுநன்றோ ...599
டேற்றவடி நாள்உறவாம் என்னைவிட்டுத் தாமதமா
நேற்றையுற வோடுறவு நேர்ந்தனையே - சாற்றுமந்த ...600

தாமதமே ஓரவித்தை தாமதமே ஆவரணம்
தாமதமே மோக சமுத்திரம்காண் - தாமதமென் ...601
றையோ ஒருநீ அதனோடு கூடினையால்
பொய்யோநாம் என்று புகன்றதுவே - கையாமல் ...602
ஒன்னலர்போல் கூடுவா ரோடொருநீ கூடுங்கால்
என்னைநினை யாயென்சொ லெண்ணுதியோ - பன்னுறுநின் ...603
தீதெல்லாம் நானாதி சேடர்பல ராய்ப்பிரமன்
போதெல்லாம் சொல்லிடினும் போதாதே - ஆதலினால் ...604
வைகின்றேன் வாழ்த்தாய் மதித்தொருநீ செய்வதெல்லாம்
செய்கின்றாய் ஈதோர் திறமன்றே - உய்கிற்பான் ...605

வாடுகின்றேன் நின்னை மதித்தொருநான் நீமலத்தை
நாடுகின்றாய் ஈதோர் நலமன்றே - கூடுகின்ற ...606
ஈண்டோ ர் அணுவாய் இருந்தநீ எண்டிசைபோல்
நீண்டாய் இஃதோர் நெறியன்றே - வேண்டாநீ ...607
மற்றவர்போல் அன்றே மனனேநின் வண்புகழை
முற்றுமிவண் ஆர்தான் மொழிவாரே - சுற்றிமனம் ...608
தானடங்கின் எல்லாச் சகமும் அடங்குமொரு
மானடங்கொள் பாத மலர்வாய்க்கும் - வானடங்க ...609
எல்லா நலமும் இதனால் எனமறைகள்
எல்லாம் நின்சீரே எடுத்தியம்பும் - எல்லார்க்கும் ...610

மாகமங்கொண் டுற்ற மனோலயமே வான்கதியென்
றாமகங்கள் நின்சீர் அறைந்திடுங்காண் - ஆகுமிந்த ...611
நன்மை பெறுமேன்மை நண்ணியநீ நின்னுடைய
தன்மைவிடல் அந்தோ சதுரலஇப் - புன்மையெலாம் ...612
விட்டொழித்து நான்மொழியும் மெய்ச்சுகத்தை நண்ணுதிநீ
இட்டிழைத்த அச்சுகந்தான் யாதென்னில் - கட்டழித்த ...613
வேடம் சுகமென்றும் மெய்யுணர்வை யின்றிநின்ற
மூடம் சுகமென்றும் முன்பலவாம் - தோடம்செய் ...614
போகம் சுகமென்றும் போகம் தரும்கரும
யோகம் சுகமென்றும் உண்டிலையென் - றாகஞ்செய் ...615

போதம் சுகமென்றும் பொன்றல்சுகம் என்றும்விந்து
நாதம் சுகமென்றும் நாம்பொருளென் - றோதலஃ ...616
தொன்றே சுகமென்றும் உட்கண் டிருக்குமந்த
நன்றே சுகமென்றும் நாம்புறத்தில் - சென்றேகண் ...617
டாற்றல் சுகமென்றும் அன்பறியாச் சூனியமே
ஏற்ற சுகமென்றும் இவ்வண்ணம் - ஏற்றபடி ...618
வெல்லுகின்றோர் போன்று விரிநீர் உலகிடையே
சொல்லுகின்றோர் சொல்லும் சுகமன்று - சொல்லுகின்ற ...619
வானாதி தத்துவங்கள் மாய்த்தாண் டுறுகின்ற
நானாதி மூன்றிலொன்று நாடாமல் - ஆனாமை ...620

எள்ளும் பகலும் இரவுமிலா ஓரிடத்தில்
உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் - வள்ளலென ...621
வாழும் பரசிவத்தின் வன்னிவெப்பம் போலமுற்றும்
சூழும் சுகமே சுகம்கண்டாய் - சூழ்வதனுக் ...622
கெவ்வா றிருந்தால் இயலும் எனிலம்ம
இவ்வா றிருந்தால் இயலாதால் - செவ்வாற்றில் ...623
பற்றற்றான் பற்றினையே பற்றியிடல் வேண்டுமது
பற்றற்றால் அன்றிப் பலியாதால் - பற்றற்றல் ...624
வேதனையால் ஈங்கு விரியும் சகப்பழக்க
வாதனைபோய் நீங்கிலன்றி வாராதால் - வாதனையும் ...625

ஈனமந்தோ இவ்வுலகம் என்றருளை நாடுகின்ற
ஞானம்வந்தால் அன்றி நலியாதால் - ஞானமது ...626
போகமுற்றும் பொய்யெனவே போதும் அனித்தியவி
வேகமுற்றால் அன்றி விளங்காதால் - ஆகவஃ ...627
துண்ணவந்தால் போலுமிவண் உற்றுவிசா ரித்திடுமோர்
எண்ணம்வந்தால் அன்றி இசையாதால் - எண்ணமது ...628
பங்கமடைந் தார்அவையைப் பாராது சாதுக்கள்
சங்கமடைந் தாலன்றிச் சாராதால் - இங்கதனால் ...629
வீழ்முகத்த ராகிநிதம் வெண்ணீ றணிந்தறியாப்
பாழ்முகத்தோர் தம்பால் படர்ந்துறையேல் - பாழ்முகத்தில் ...630

பேயாட உள்ளறியாப் பித்தாட நின்னுடனே
வாயாடு வோர்பால் மருவிநில்லேல் - நீயாடிப் ...631
பேதித் திடவும் பிறழ்ந்திடவும் நின்னுடனே
வாதித் திடுவோர்பால் வாய்ந்துறையேல் - சாதித்துச் ...632
சைவமெங்கே வெண்ணீற்றின் சார்பெங்கே மெய்யான
தெய்வமெங்கே என்பவரைச் சேர்ந்துறையேல் - உய்வதெங்கே ...633
தீராச் சிவநிந்தை செய்துசிறு தேவர்களை
நேராய்ப் பிதற்றுவர்பால் நேர்ந்துறையேல் - ஓராமல் ...634
எள்ளென்றும் தெய்வமென்ப தில்லை இதுதெளிந்து
கொள்ளென்றும் துள்ளுகின்றோர் கூட்டமுறேல் - நள்ளொன்று ...635

நாமென்றும் நம்மையன்றி நண்ணும் பிரமமில்லை
ஆமென்றும் சொல்பவர்பால் ஆர்ந்துறையேல் - தாமொன்ற ...636
எல்லா அறிவும் எமதறிவே என்றுரைக்கும்
பொல்லா வலக்காரர் பொய்உகவேல் - புல்லாக ...637
அற்பமே மற்றவெலாம் ஆயிலழி(129) யாக்காய
கற்பமே வத்துவென்பார் கண்ணடையேல் - சிற்சிலவாம் ...638
சித்திகளே வத்துவென்போர்ச் சேர்ந்துறையேல் பன்மாயா
சத்திகளே வத்துவென்போர் சார்படையேல் - பொத்தியஇச் ...639
சன்மமே தோற்றும் தரமாம் திரமனித்த
கன்மமே வத்துவென்போர் கண்ணுறையேல் - கன்மமிகு ...640

மாகம் கதியென்பார் மாட்டுறையேல் பல்போக
யோகம் பொருளென்பா ரூடுறையேல் - ஏகம்கொள் ...641
மண்ணென்பார் வானென்பார் வாய்முச் சுடரென்பார்
பெண்ணென்பார் மற்றவர்தம் பேருரையேல் - மண்ணின்பால் ...642
மன்னுரையாச் சில்லோர் மரந்தெய்வம் என்பார்மற்
றென்னுரையார் ஈண்டவர்பால் எய்தியிடேல் - மன்நலங்கள் . ..643
பூத்தால் சிறுவர்களும் பூசா பலம்என்பார்
தேற்றார் சிவபூசை செய்யாராய்ப் - பூத்தாவி . ..644
வீறுகின்ற பூசையிலென் வீண்என்று வீண்பாழ்வாய்க்
கூறுகின்ற பேயர்கள்பால் கூடியுறேல் - மாறுகின்ற . ..645

நீட்கோல வாழ்க்கையெலாம் நீத்திடுவோன் பொன்அறைக்குத்
தாட்கோல் இடுவாரைச் சார்ந்துறையேல் - நீட்கோல . .. 646
மெய்யொழுக்கத் தார்போல் வெளிநின் றகத்தொழியாப்
பொய்யொழுக்கத் தார்பால் பொருந்தியுறேல் - பொய்யொழுக்கில் ...647
பொய்ந்நூல் பதறிப் புலம்புகின்ற பித்தர்கள்பால்
அந்நூல் விரும்பி அடைந்தலையேல் - கைந்நேர்ந்து ...648
கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி
நாடா தவரவையை நண்ணியிடேல் - கோடாது ... ...649
கொல்லா விரதமது கொள்ளாரைக் காணிலொரு
புல்லாக எண்ணிப் புறம்பொழிக - எல்லாமும் ... ...650

ஆகநவில் கின்றதென்நம் ஐயனுக்கன் பில்லாரை
நீகனவி லேனும் நினையற்க - ஏகனடிக் ... ...651
கன்பே வடிவாய் அருளே உயிராய்ப்பே
ரின்பே உணர்வாய் இசைந்தாரும் - அன்பாகிக் ... ...652
கண்டிகையே பூணிற் கலவையே வெண்ணீறாய்க்
கொண்டிகவாச் சார்பு குறித்தாரும் - தொண்டுடனே ... ...653
வாய்மலரால் மாலை வகுத்தலொடு நம்மிறைக்குத்
தூய்மலரால் மாலை தொடுப்பாரும் - சார்மலரோன் ... ...654
ஏர்நந்த னப்பணிகண் டிச்சையுற நம்மிறைக்குச்
சீர்நந்த னப்பணிகள் செய்வோரும் - நார்நந்தாத் ... ...655

தீயின்மெழு காச்சிந்தை சேர்ந்துருகி நம்மிறைவாழ்
கோயில்மெழு காநின்ற கொள்கையரும் - மேயினரைத் ... ...656
தாயில் வளர்க்கும் தயவுடைய நம்பெருமான்
கோயில் விளக்கும் குணத்தோரும் - தூயஅருள் ... ..657
இன்புடனே தீபமுதல் எல்லாச் சரியைகளும்
அன்புடனே செய்தங் கமர்வாரும் - அன்புடனே ... ..658
அண்ணியமேல் அன்பர்க் கமுதீத லாதிசிவ
புண்ணியமே நாளும் புரிவோரும் - புண்ணியமாம் ... ..659
தேனே அமுதே சிவமே சிவமேஎம்
மானேஎன் றேத்தி மகிழ்வாரும் - வானான ... .. 660

மன்னே அருட்கடலே மாணிக்க மேஎங்கள்
அன்னேஎன் றுன்னி அமர்வோரும் - நன்னேயப் ... ...661
பண்ணீர் மொழியால் பரிந்தேத்தி ஆனந்தக்
கண்ணீர்கொண் டுள்ளம் களிப்போரும் - உண்ணீரில் ... ...662
பண்டுகண்டும் காணாப் பரிசினராய்ப் பொன்மேனி
கண்டுகண்டு நாளும் களிப்போரும் - தொண்டடையும் ... ...663
பொற்பதிகம் என்றெண்ணிப் போற்றிஒரு மூவர்களின்
சொற்பதிகம் கொண்டு துதிப்போரும் - சொற்பனத்தும் ... ...664
மாசகத்தில் சேர்க்காத மாணிக்கம் என்றதிரு
வாசகத்தை வாயால் மலர்வோரும் - வாசகத்தின் ... ...665

மன்னிசைப்பால் மேலோர் வகுத்தேத்தி நின்றதிரு
இன்னிசைப்பா ஆதி இசைப்போரும் - மன்னிசைப்பின் ... ...666
நல்வாழ் வருளுகின்ற நம்பெருமான் மான்மியங்கள்
சொல்வோரும் கேட்டுத் தொழுவோரும் - சொல்வாய்ந்த ... ...667
தாதாவென் றன்புடனே சாமகீ தங்கள்முதல்
வேதாக மங்கள் விரிப்போரும் - வேதாந்தம் ... ....668
சேர்ந்தோர்க் கருளும் சிவமே பொருளென்று
தேர்ந்தே சிவபூசை செய்வோரும் - ஆர்ந்தேத்தி ... ...669
நன்னெஞ்சே கோயிலென நம்பெருமான் தன்னைவைத்து
மன்னும் சிவநேயம் வாய்ந்தோரும் - முன்அயன்றன் ... ...670

அஞ்செழுத்தெல் லாம்கேட்கில் அஞ்செழுத்தாம் எம்பெருமான்
அஞ்செழுத்தால் அர்ச்சித் தமர்வோரும் - அஞ்செனவே ... ..671
விஞ்சும் பொறியின் விடயமெலாம் நம்பெருமான்
செஞ்சுந் தரப்பதத்தில் சேர்த்தோரும் - வஞ்சம்செய் ... ..672
பொய்வே தனைநீக்கும் புண்ணியன்பால் தம்முயிரை
நைவே தனமாக்கும் நல்லோரும் - செய்வேலை ... ..673
நீட நடத்தலொடு நிற்றல்முதல் நம்பெருமான்
ஆடல் அடித்தியானம் ஆர்ந்தோரும் - வாடலறத் ... .. 674
தூய நனவிற் சுழுத்தியொடு நம்பெருமான்
நேயம் நிகழ்த்தும் நெறியோரும் - மாயமுறு ... ...675

மானதுவாய் நின்ற வயம்நீக்கித் தானற்றுத்
தானதுவாய் நிற்கும் தகையோரும் - வானமதில் ... ...676
வானங்கண் டாடும் மயில்போன்று நம்பெருமான்
தானங்கண் டாடும் தவத்தோரும் - மோனமொடு ... ...677
தாழ்சடையும் நீறும் சரிகோவ ணக்கீளும்
வாழ்சிவமும் கொண்டு வதிவோரும் - ஆழ்நிலைய ... ...678
வாரியலை போன்றசுத்த மாயையினால் ஆம்பூத
காரியங்க ளாதியெலாம் கண்டொழித்து - ஊர்இயங்கத் ... ...679
தஞ்சம் தருமலரோன் தத்துவமாம் பூதங்கள்
ஐஞ்சும் பொறியஞ்சும் அஞ்சறிவும் - அஞ்செனுமோர் ... ...680

வாக்குமுதல் ஐஞ்சுமற்று மாலோன்தன் தத்துவமாம்
ஊக்கும் கலைமுதலாம் ஓரேழும் - நீக்கிஅப்பால் ... ...681
மேவி விளங்குசுத்த வித்தைமுதல் நாதமட்டும்
தாவி வயங்குசுத்த தத்துவத்தில் - மேவிஅகன் ... ...682
றப்பால் அருள்கண் டருளால் தமைத்தாம்கண்
டப்பால் பரவெளிகண் டப்பாலுக் - கப்பாலும் ... ...683
தீராச் சுயமாய்ச் சிதானந்த மாம்ஒளியைப்
பாரா இருந்த படியிருந்து - பேராது .....684
கண்டதுவென் றொன்றும் கலவாது தாம்கலந்து
கொண்டசிவ யோகியராம் கொற்றவரும் - அண்டரிய ... ...685

சத்துவத்தில் சத்துவமே தம்முருவாய்க் கொண்டுபர
தத்துவத்தின் நிற்கும் தகவோரும் - அத்துவத்தில் ... ...686
தீதும் சுகமும் சிவன்செயலென் றெண்ணிவந்த
யாதும் சமமா இருப்போரும் - கோதுபடக் ... ...687
கூறும் குறியும் குணமும் குலமுமடி
ஈறும் கடையும் இகந்தோரும் - வீறுகின்ற ... ...688
சேந்தி னடைந்தவெலாஞ் சீரணிக்கச் சேர்சித்த
சாந்தி யுடனே சரிப்போரும் - சாந்திபெறத் ... ...689
தம்மையுறும் சித்தெவையும் தாமுவத்தல் செய்யாமல்
செம்மையுடன் வாழும் திறலோரும் - எம்மையினும் ... ...690

ஆராமை ஓங்கும் அவாக்கடல்நீர் மான்குளம்பின்
நீராக நீந்தி நிலைத்தோரும் - சேராது ... ...691
தம்பொருளைக் கண்டே சதானந்த வீட்டினிடைச்
செம்பொருளைச் சார்ந்த திறத்தோரும் - மண்பொருள்போய்த் ... ...692
தாயர் எனமாதர் தம்மையெண்ணிப் பாலர்பித்தர்
பேயரென நண்ணும் பெரியோரு - மீயதனின் ... ...693
எய்ப்பரிசாம் ஓர்திரணம் எவ்வுலகும் செய்தளிக்க
மெய்ப்பரிசஞ் செய்யவல்ல வித்தகரும் - மெய்ப்படவே ... ...694
யாவும் அறிந்தும் அறியார்போன் றெப்பொழுதும்
சாவும் பிறப்பும் தவிர்ந்தோரும் - ஓவலின்றி ... ...695

வைதிடினும் வாழ்கஎன வாழ்த்தி உபசாரம்
செய்திடினும் தன்மை திறம்பாரும் - மெய்வகையில் ... ...696
தேறா வுலகம் சிவமயமாய்க் கண்டெங்கும்
ஏறா திழியா திருப்போரும் - மாறாது ...697
மோனந்தான் கொண்டு முடிந்தவிடத் தோங்குபர
மானந்தா தீதத் தமர்ந்தோரும் - தாம்நந்தாச் ... ...698
சாதுக்கள் ஆமவர்தம் சங்க மகத்துவத்தைச்
சாதுக்க ளன்றியெவர் தாமறிவார் - நீதுக்கம் ... ...699
நீங்கிஅன்னோர் சங்கத்தில் நின்றுமகிழ்ந் தேத்திநிதம்
ஆங்கவர்தாட் குற்றேவல் ஆய்ந்தியற்றி - ஓங்குசிவ ... ...700

பஞ்சாட் சரத்தைப் பகரருளே நாவாக
எஞ்சாப் பரிவுடனே எண்ணியருள் - செஞ்சோதித் ... ...701
தாதொன்று தும்பைமுடித் தாணுஅடி யொன்றிமற்றை
யாதொன்றும் நோக்கா தமைந்திடுக - தீதென்ற ... ...702
பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும்
வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து. ......703

திருச்சிற்றம்பலம்...
--------
84. மான்ற மலத்தாக்கு என்பது மயக்குதலைச் செய்கின்ற மலத்தினெதிரீடு எனக்கொள்க. தொ.வே.
85. சில் துரும்பு - அற்பமாகிய துரும்பு. தொ.வே...
86. சங்கமம், சங்கமென விகாரமாயிற்று. தொ.வே....
87. இந்தா என்பது மரூஉச் சொல். 'இதனைத் தரப்பெற்றுக்கொள்' என்னும் பொருட்டு. அல்லதூஉம் 'இங்கு வா' என்னும் எளிமை கண்ணிய ஏவலுமாம். தொ.வே.
88. காதரவு செய்தல் - அச்சுறுத்தல். தொ.வே.
89. நிச்சல் - நாடோ றும். தொ.வே.
90. நட்டு ஊர்ந்து எனப்பிரித்து நேசித்துச் சென்று எனப் பொருள் கொள்க. தொ.வே.
91. வாழ்நாள், வாணாள் என மரீஇயது. தொ.வே.
92. கற்றூணை, சற்றுணை எனக் குறுகி நின்றது. தொ.வே.
93. அந்தோ, அத்தோ என வலிக்கும் வழி வலித்தது. தொ.வே.
94. ஐந்து, அஞ்சு என மருவிற்று. அஃது ஈண்டு ஆகுபெயராய்ச் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தாசைகளைக் குறித்து நின்றது. தொ.வே.
95. ஏறுதல் என்பது ஈண்டொழுக்கத்தின் மேனின்றது. தொ.வே.
96. வெல் நடை எனப் பிரித்துக் கொள்க. அற்றேல் கொடு நடை எனப் பொருள் கொள்ளின் வெந்நடை எனப் பொது நகரமாக்கிக்கொள்க. தொ.வே.
97. நெஞ்சு எனும் மொழிக்கு முன்னுள்ள கீற்று(-) நீங்கின் நஞ்சு என்றாகும். ச.மு.க.
98. நொறில் - விரைவு. தொ.வே.
99. பெண்ணிங்கு மாமாத்திரையின் வருத்தனமென் றெண்ணினை - என்பதற்குப் பேண் என்று பொருள்கொண்டனை என்பது பொருள். தொ.வே.
100. சிலந்தி - புண்கட்டி. ச.மு.க.
101. வம்பு, வப்பென விகாரமாயிற்று. தொ.வே.
102. பொத்துதல் - மூடுதல். தொ.வே.
103. மேடு - வயிறு. தொ.வே.
104. ஈரல், ஈருள் என மரீஇ வழங்கியது. தொ.வே.
105. பூட்டு - உடற்பொருத்து. தொ.வே.
106. நேர்தல் - விடை கொடுத்தல் என்னும் பொருட்டு. தொ.வே.
107. ஈண் டொருபுடைஒத்தமை தோற்றியாங் கழியு நிலையின்மையான் என்று கொள்க. தொ.வே.
108. வேளானோன்காகளம் - குயில். தொ.வே.
109. பிரமசாயை - பிரமகத்தி. தொ.வே.
110. கட்டுதல், ஈண்டுத் தழுவுதல் என்னும்பொருட்டு. தொ.வே.
111. நொறில் - அடக்கம். தொ.வே.
112. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. திருக்குறள்332. ( 34 நிலையாமை 2 )
113. விடற்கு, விட்டற்கென விகாரமாயிற்று. தொ.வே.
114. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. திருக்குறள் 302 ( 31 வெகுளாமை 2 )
115. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். திருக்குறள் 305 ( 31 வெகுளாமை 5 )
116.அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. திருக்குறள் 151 (16 பொறையுடைமை 1 )
117. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் 339 ( 34 நிலையாமை 9 )
118. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. திருக்குறள் 336 ( 34 நிலையாமை 6 )
119. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழித்திட்(டு) ஐம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள் செய்வான் அமரும்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறிமுகில் பார்க்கும் திருவையாறே. ஞானசம்பந்தர் தேவாரம் 1394 ( 1 - 130 - 1 )
120. ஐயைந்து - ஐந்தும் ஐந்தும், உம்மைத்தொகை. தொ.வே.
121. வெற்றவே அடியார் அடிமிசை வீழும் விருப்பினன் வெள்ளைநீ றணியும் கொற்றவன் தனக்கு மந்திரி யாய குலச்சிறை குலாவிநின் றேத்தும் ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன் உலகினில் இயற்கையை ஒழித்திட்(டு) அற்றவர்க்கு அற்ற சிவன்உறை கின்ற ஆலவாய் ஆவதும் இதுவே. ஞானசம்பந்தர் தேவாரம் - 4091 ( 3 - 120 - 2 )
122. தூரியம் - பறை. தொ.வே.
123. வீழ்வு - விருப்பம். தொ.வே.
124. ஊழி - கடல். தொ.வே.
125. ஆனாமை - விட்டு நீங்காமை. தொ.வே.
126. சிந்து - கடல். தொ.வே.
127. கச்சோதம் - மின்மினிப்பூச்சி. தொ.வே.
128. தொன்று - பழமை. தொ.வே.
129. ஆயில்-ஆராயுங்கால். தொ.வே
------------------------------


4.சிவநேச வெண்பா (1966 - 2069)

 

 காப்பு
.நேரிசை வெண்பா
1966முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம்
சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே - என்னவனே(130)
சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே
தற்பரனே நின்தாள் சரண். ...1
1967வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய்
நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு
முதல்வாஓர் ஆறு முகவா முக்கண்ணன்
புதல்வாநின் தாளென் புகல். ...2
1968சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொருபப்
பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர்
நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால்
நீடும் படிநீ நிகழ்த்து. ...1
1969நினைப்பித்தா நித்தா நிமலா எனநீ
நினைப்பித்தால் ஏழை நினைப்பேன் - நினைப்பின்
மறப்பித்தாலி யானும் மறப்பேன் எவையும்
பிறப்பித்தாய் என்னாலென் பேசு. ...2
1970உருவாய் உருவில் உருவாகி ஓங்கி
அருவாய் அருவில் அருவாய் - ஒருவாமல்
நின்றாயே நின்ற நினைக்காண்ப தெவ்வாறோ
என்தாயே என்தந்தை யே. ...3
1971வெஞ்சஞ் சலமா விகாரம் எனும்பேய்க்கு
நெஞ்சம் பறிகொடுத்து நிற்கின்றேன் - அஞ்சலென
எண்தோள் இறையே எனையடிமை கொள்ளமனம்
உண்டோ இலையோ உரை. ...4
1972அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை
அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்
சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம்
சோதிஉரு வாக்குந் துணை. ...5
1973பேரறிவால் கண்டும் பெரியோர் அறியாரேல்
யாரறிவார் யானோ அறிகிற்பேன் சீர்கொள்
வெளியாய் வெளிக்குள் வெளியாய் ஒளிக்குள்
ஒளியாகி நின்ற உனை. ...6
1974வந்தித்தேன்(131) பிட்டுகந்த வள்ளலே நின்னடியான்
சிந்தித்தேன் என்றல் சிரிப்பன்றோ - பந்தத்தாஞ்
சிந்துசிந்திப் பித்தெனது சிந்தையுணின் பொன்னருளே
வந்துசிந்திப் பித்தல் மறந்து. ...7
1975தேனென்ற இன்சொல் தெரிந்துநினைப் பாடுகின்றேன்
நானென் றுரைத்தல் நகைஅன்றோ - வான்நின்ற
ஒண்பொருணீ உள்ளம் உவந்தருளால் இன்சொல்லும்
வண்பொருளும் ஈதல் மறந்து. ...8
1976அண்டங்க ளோஅவற்றின் அப்பாலோ இப்பாலோ
பண்டங்க ளோசிற் பரவெளியோ - கண்தங்க
வெம்பெருமால் நீத்தவர்தம் மெய்யுளமோ தையலொடும்
எம்பெருமான் நீவாழ் இடம். ...9
1977பூதமெங்கே மற்றைப் புலனெங்கே பல்லுயிரின்
பேதமெங்கே அண்டமெனும் பேரெங்கே - நாதமெங்கே
மன்வடிவ மெங்கே மறையெங்கே வான்பொருணீ
பொன்வடிவம் கொள்ளாத போது. ...10
1978பேருருவோ சோதிப் பிழம்பாகும் சின்மயத்தின்
சீருருவோ தேவர் திருவுருவம் - நேருருவில்
சால்புறச்சேர் அண்ட சராசரங்கள் எல்லாம்நும்
கால்விரற்பால் நின்றொடுங்குங் கால். ...11
1979இன்றோ பகலோ இரவோ வருநாளில்
என்றோ அறியேன் எளியேனே - மன்றோங்கும்
தாயனையாய் நின்னருளாம் தண்ணமுதம் உண்டுவந்து
நாயனையேன் வாழ்கின்ற நாள். ...12
1980மண்ணாசை வெற்பே மறிகடலே பொன்னாசை
பெண்ணாசை ஒன்றேஎன் பேராசை - நண்ணாசை
விட்டார் புகழும் விடையாய்நான் பொய்யாசைப்
பட்டால் வருமே பதம். ...13
1981தந்தையாய் என்னுடைய தாயாய்த் தகைசான்ற
சிந்தையாய் என்னருமைத் தேசிகனாய் - முந்தையாய்
நீடு மறைமுதலாய் நின்றாயென் னேநெஞ்சம்
வாடுமெனை ஆட்கொள்ளா வாறு. ...14
1982ஊட்டுகின்ற வல்வினையாம் உட்கயிற்றால் உள்ளிருந்தே
ஆட்டுகின்ற நீதான் அறிந்திலையோ - வாட்டுகின்ற
அஞ்சுபுல வேடர்க் கறிவைப் பறிகொடுத்தென்
நெஞ்சுபுலர்ந் தேங்கு நிலை. ...15
1983ஆமோ அலவோ அறியேன் சிறியேனான்
தாமோ தரனும் சதுமுகனும் - தாமே
அடியா தரிக்கும் அரசேநின் ஏவல்
அடியார்குற் றேவலடி யன். ...16
1984உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
எந்தாயிங் கொன்றுமறி யேன். ...17
1985சென்றுரைப்பார் சொல்லில் சிறியான் பயமறியான்
என்றுரைப்பார் ஆங்கதுமற் றென்னளவே - மன்றகத்தோய்
அஞ்சேல் விழியாரை அந்தகனென் பார்மொழியை
அஞ்சேன் சிறிதும் அறிந்து. ...18
1986எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச்
சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச்
சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில்
எவருண் டெனைப்போல் இயம்பு. ...19
1987உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
துண்ணப் பருக்கும் உடம்பு. ...20
1988ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங்
காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித்
தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில்
கண்டே வலம்செய்யாக் கால். . ..21
1989ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக்
காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த
விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக்
கண்டுஞ் சிரங்குவியாக் கை. ...22
1990வெங்கோடை ஆதபத்தின் வீழ்நீர் வறந்துலர்ந்து
மங்கோடை யாதல் வழக்கன்றோ - எங்கோநின்
சீர்சிந்தாச் சேவடியின் சீர்கேட்டும் ஆனந்த
நீர்சிந்தா வன்கண் நிலை. ...23
1991வாயன்றேல் வெம்மலஞ்செல் வாய்அன்றேல் மாநரக
வாயன்றேல் வல்வெறிநாய் வாயென்பாம் - தாயென்றே
ஊழ்த்தாதா ஏத்தும் உடையாய் சிவஎன்றே
வாழ்த்தாதார் நாற்றப்பாழ் வாய். ...24
1992வீட்டார் இறைநீ விடைமேல் வரும்பவனி
காட்டா தடைத்த கதவன்றோ - நாட்டாதி
நல்லத் துளையா நதிச்சடையாய் என்னுஞ்சீர்ச்
செல்லத் துளையாச் செவி. ...25
1993புல்லங் கணநீர்ப் புழையென்கோ புற்றென்கோ
சொல்லும் பசுமட் டுளையென்கோ - சொல்லுஞ்சீர்
வீயாத பிஞ்ஞகப்பேர் மெல்லினத்தின் நல்லிசைதான்
தோயாத நாசித் துளை. ...26
1994தோற்றமிலாக் கண்ணுஞ் சுவையுணரா நாவுதிகழ்
நாற்றம் அறியாத நாசியுமோர் - மாற்றமுந்தான்
கேளாச் செவியுங்கொள் கீழ்முகமே நீற்றணிதான்
மூளாது பாழ்த்த முகம். ...27
1995மான்றாம் உலக வழக்கின் படிமதித்து
மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா
மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால்
தலக்கூடல் தாழாத் தலை. ...28
1996கல்லென்கோ நீரடைக்குங் கல்லென்கோ கான்கொள்கருங்
கல்லென்கோ காழ்வயிரக் கல்லென்கோ - சொல்லென்கோ
இன்றா லெனிலோ எடுத்தாளெம் மீன்றாணேர்
நின்தாள் நினையாத நெஞ்சு. ...29
1997சொல்லுகின்ற உள்ளுயிரைச் சோர்வுற் றிடக்குளிர்ந்து
கொல்லுகின்ற நஞ்சில் கொடிதன்றோ - ஒல்லுமன்றத்
தெம்மானின் தாட்கமல மெண்ணாது பாழ்வயிற்றில்
சும்மா அடைக்கின்ற சோறு. ...30
1998சோர்படைத்துச் சோறென்றால் தொண்டைவிக்கிக் கொண்டுநடு
மார்படைத்துச் சாவுகினும் மாநன்றே - சீர்படைக்க
எண்ணுவார் எண்ணும் இறைவாநின் தாளேத்தா
துண்ணுவார் உண்ணும் இடத்து. ...31
1999ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
பாழ்மனையில் சென்றுண் பது. ...32
2000வீயுமிடு காட்டகத்துள் வேம்பிணத்தின் வெந்தசையைப்
பேயுமுடன் உண்ணஉண்ணும் பேறன்றோ - தோயுமயல்
நீங்கஅருள் செய்வோய்வெண் ணீறணியார் தீமனையில்
ஆங்கவரோ டுண்ணு மது. ...33
2001கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில்
ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய
பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை
வேண்டாதார் வீழ்ந்து விரைந்து. ...34
2002கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க
எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனேல் - மண்ணுலகில்
ஆமிடத்து நின்னடியார்க் காசையுரைத் தில்லையென்பார்
போமிடத்திற் போவேன் புலர்ந்து. ...35
2003அங்கணனே நின்னடிக்கோர் அன்பிலரைச் சார்ந்தோர்தம்
வங்கணமே(132) வைப்பதினான் வைத்தேனேல் - அங்கணத்தில்
நீர்போல் எனது நிலைகெடுக நிற்பழிசொற்
றார்போ லழிக தளர்ந்து. ...36
2004பூவைவிட்டுப் புல்லெடுப்பார் போலுன் திருப்பாதத்
தேவைவிட்டு வெம்பிறவித் தேவர்களைக் - கோவையிட்டுக்
கூவுவார் மற்றவரைக் கூடியிடேன் கூடுவனேல்
ஓவுவா ராவ(133) லுனை. ...37
2005யாதோ கனற்கண் யமதுதெர் காய்ச்சுகருந்
தாதோ தழற்பிழம்போ தானறியேன் - மீதோங்கு
நாட்டார்தார்க் கொன்றை நதிச்சடையோய் அஞ்செழுத்தை
நாட்டாதார் வாய்க்கு நலம். ...38
2006என்னெஞ்சோர் கோயில் எனக்கொண்டோ ய் நின்நினையார்
தன்னெஞ்சோ கல்லாமச் சாம்பிணத்தார் - வன்நெஞ்சில்
சார்ந்தவர்க்கும் மற்றவரைத் தானோக்கி வார்த்தைசொல
நேர்ந்தவர்க்கும் கல்லாகும் நெஞ்சு. ...39
2007வெள்ளமுதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின்
உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் கள்ளமிலா
நின்னன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னைஇனி
என்னென்ப தையா இயம்பு. ...40
2008பண்ணாலுன் சீரினைச்சம் பந்தர்சொல வெள்ளெலும்பு
பெண்ணான தென்பார் பெரிதன்றே - அண்ணாஅச்
சைவவடி வாஞான சம்பந்தர் சீருரைக்கில்
தெய்வவடி வாஞ்சாம்பர் சேர்ந்து. ...41
2009எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில்
அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின்
தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன் ஆதலினிந்
நாள்வருந்த வேண்டுகின்றேன் நான். ...42
2010பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு
நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற
தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ
தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல். ...43
2011எம்பரவை(134) யோமண் ணிடந்தலைந்தான் சுந்தரனார்
தம்பரவை வீட்டுத் தலைக்கடையாய் - வெம்பணையாய்
வாயிற் படியாய் வடிவெடுக்க நேர்ந்திலனே
மாயப்பெயர் நீண்ட மால். ...44
2012நண்ணித் தலையால் நடக்கின்றோம் என்பதெங்கள்
மண்ணில் பழைய வழக்கங்காண் - பண்ணிற்சொல்
அம்மையார் வாமத்தோய் ஆயினுமுன் காரைக்கால்
அம்மையார் போனடந்தார் ஆர். ...45
2013வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு. ...46
2014ஆர்கொண்டார் சேய்க்கறியிட் டாரே சிறுத்தொண்டப்
பேர்கொண்டார் ஆயிடிலெம் பெம்மானே - ஓர்தொண்டே
நாய்க்குங் கடைப்பட்ட நாங்களென்பேம் எங்கள்முடை
வாய்க்கிங் கிஃதோர் வழக்கு. ...47
2015கோள்கொண்ட நஞ்சங் குடியேனோ கூர்கொண்ட
வாள்கொண்டு வீசி மடியேனோ - கீள்கொண்ட
அங்கோவ ணத்தழகா அம்பலவா நின்புகழை
இங்கோதி வாழ்த்தாத யான். ...48
2016ஆயாக் கொடியேனுக் கன்புடையாய் நீஅருளிங்
கீயாக் குறையே இலைகண்டாய் - மாயாற்கும்(135)
விள்ளாத் திருவடிக்கீழ் விண்ணப்பம் யான்செய்து
கொள்ளாக் குறையே குறை. ...49
2017பெற்றிடுதாய் போல்வதுநின் பெற்றியென்பேன் பிள்ளையது
மற்றழுதால் கேட்டும் வராதங்கே - சற்றிருக்கப்
பெற்றாள் பொறுப்பள் பிரானீ பொறுக்கினுநின்
பொற்றாள் பொறாஎம் புலம்பு. ...50
2018பொன்போல் பொறுமையுளார் புந்திவிடாய் நீஎன்பார்
என்போல் பொறுமையுளார் யார்கண்டாய் - புன்போக
அல்லாம் படிசினங்கொண் டாணவஞ்செய் இன்னாமை
எல்லாம் பொறுக்கின்றேன் யான். ...51
2019முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல்
என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில்
ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி
இன்றும் ஒருமணஞ்செய் வேன். ...52
2020செய்யார் அழலேநின் செம்மேனி என்னினும்என்
அய்யாநின் கால்பிடித்தற் கஞ்சேன்காண் - மெய்யாஇஞ்
ஞான்றுகண்டு நான்மகிழ நந்தொண்டன் என்றெனையும்
ஏன்றுகொண் டால்போதும் எனக்கு. ...53
2021என்பாலோ என்பால் இராதோடு கின்றமனத்
தின்பாலோ அம்மனத்தைச் சேர்மாயை - தன்பாலோ
யார்பால் பிழையுளதோ யானறியேன் என்னம்மை
ஓர்பால் கொளநின்றோய் ஓது. ...54
2022நாணவத்தி னேன்றனையோ நாயேனை மூடிநின்ற
ஆணவத்தை யோநான் அறியேனே - வீணவத்தில்
தீங்குடையாய் என்னஇவண் செய்பிழையை நோக்கிஅருட்
பாங்குடையாய் தண்டிப் பது. ...55
2023எச்சம் பெறுமுலகோர் எட்டிமர மானாலும்
பச்சென் றிருக்கப் பகர்வார்காண் - வெச்சென்ற
நஞ்சனையேன் குற்றமெலாம் நாடாது நாதஎனை
அஞ்சனையேல் என்பாய் அமர்ந்து. ...56
2024கற்றறியேன் நின்னடிச்சீர் கற்றார் கழகத்தில்
உற்றறியேன் உண்மை உணர்ந்தறியேன் - சிற்றறிவேன்
வன்செய்வேல் நேர்விழியார் மையலினேன் மாதேவா
என்செய்வேன் நின்னருளின் றேல். ...57
2025மெய்தான் உடையோர் விரும்புகின்ற நின்அருளென்
செய்தால் வருமோ தெரியேனே - பொய்தாவு
நெஞ்சினேன் மன்றுள் நிருத்தா நினைக்கேட்க
அஞ்சினேன் அன்பின்மை யால். ...58
2026மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
போனாலென் செய்வேன் புகல். . ..59
2027கொன்செய்தாற் கேற்றிடுமென் குற்றமெலாம் ஐயஎனை
என்செய்தால் தீர்ந்திடுமோ யானறியேன் - முன்செய்தோய்
நின்பால் எனைக்கொடுத்தேன் நீசெய்க அன்றிஇனி
என்பால் செயலொன் றிலை. ...60
2028எண்ணிலெளி யேன்தவிர எல்லா உயிர்களுநின்
தண்ணிலகுந் தாணீழல் சார்ந்திடுங்காண் - மண்ணில்வருந்
தீங்கென்ற எல்லாமென் சிந்தையிசைந் துற்றனமற்
றாங்கொன்றும் இல்லாமை யால். ...61
2029தாரம்விற்றுஞ் சேய்விற்றுந் தன்னைவிற்றும் பொய்யாத
வாரம்வைத்தான் முன்னிங்கோர் மன்னனென்பர் - நாரம்வைத்த
வேணிப் பிரானதுதான் மெய்யாமேல் அன்றெனைநீ
ஏணிற் பிறப்பித்த தில். ...62 
2030உள்ளொன்ற நின்னடிக்கன் புற்றறியேன் என்னுளத்தின்
வெள்ளென்ற வன்மை விளங்காதோ - நள்ளொன்ற
அச்சங்கொண் டேனைநினக் கன்பனென்பர் வேழத்தின்
எச்சங்கண் டாற்போல வே. ...63
2031நீத்தாடுஞ்(136) செஞ்சடையாய் நீள்வேடங் கட்டிவஞ்சக்
கூத்தாடு கின்றேனைக் கொண்டுசிலர் - கூத்தாநின்
பத்தனென்பர் என்னோ பகல்வேடத் தார்க்குமிங்கு
வித்தமிலா(137) நாயேற்கும் வேறு. ...64
2032அன்புடையார் இன்சொல் அமுதேறு நின்செவிக்கே
இன்புடையாய் என்பொய்யும் ஏற்குங்கொல் - துன்புடையேன்
பொய்யுடையேன் ஆயினுநின் பொன்னருளை வேண்டுமொரு
மெய்யுடையேன் என்கோ விரைந்து. ...65
2033என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
உன்னார் உயிர்க்குறுதி உண்டோ தான் - பொன்னாகத்
தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த(138)வர்க்குமற்றை
யார்க்கும் புகலுன் அருள். ...66
2034வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான்
பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ளப்
பொறுத்தாள்அத் தாயில் பொறுப்புடையோய் நீதான்
வெறுத்தால் இனிஎன்செய் வேன். ...67
2035ஆயிரமன்றே நூறும் அன்றேஈ ரைந்தன்றே
ஆயிரம்பேர் எந்தைஎழுத் தைந்தேகாண் - நீஇரவும்
எல்லு நினைத்தியென ஏத்துகினும் எந்தாய்வீண்
சல்லுமனம் என்செய்கேன் செப்பு. ...68
2036வஞ்சந் தருங்காம வாழ்க்கையிடைச் சிக்கியஎன்
நெஞ்சந் திருத்தி நிலைத்திலையே - எஞ்சங்
கரனே மழுக்கொள் கரனே அரனே
வரனே சிதம்பரனே வந்து. . ..69
2037தாழ்விக்கும் வஞ்சச் சகமால் ஒழித்தென்னை
வாழ்விக்கும் நல்ல மருந்தென்கோ - வீழ்விக்கும்
ஈங்கான மாயை இகந்தோர்க் கருள்வோய்நின்
பாங்கான செம்பொற் பதம். ...70
2038ஏசொலிக்கு மானிடனாய் ஏன்பிறந்தேன் தொண்டர்கடந்
தூசொலிப்பான் கல்லாகத் தோன்றிலனே - தூசொலிப்பான்
கல்லாகத் தோன்றுவனேல் காளகண்டா நாயேனுக்
கெல்லா நலமுமுள தே. ...71
2039குற்றம் பலசெயினுங் கோபஞ் செயாதவருள்
சிற்றம் பலமுறையுஞ் சிற்பரனே - வெற்றம்பல்
பொய்விட்டால் அன்றிப் புரந்தருளேன் என்றெனைநீ
கைவிட்டால் என்செய்கேன் காண். ...72
2040தீக்குணத்தார் யாவருமென் சீடரெனில் என்னுடைய
தீக்குணத்தின் எல்லைஎவர் தேர்கிற்பார் - ஊக்கமிகு
நல்லோர்க் களிக்கு நதிச்சடையோய் எற்கருளில்
எல்லோர்க்கும் ஐயுறவா மே. ...73
2041இன்படையான் றன்புடையான் என்றேழை யேன்தலைமேல்
அன்புடையாய் நீயமைப்பித் தாயிதற்கு - வன்படையா
தெவ்வண்ணம் நின்னெஞ் சிசைந்ததோ அந்நாளில்
இவ்வண்ணம் என்றறிகி லேன். ...74
2042ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர்
பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம்
வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல்
அஞ்சிநின்னோ டாடும் அது. ...75
2043கோடும் பிறைச்சடையோய் கோளுங் குறும்புஞ்சாக்
காடும் பிணிமூப்புங் காணார்காண் - நீடுநினைக்
கண்டார் அடிப்பொடியைக் கண்டார் திருவடியைக்
கண்டார் வடிவுகண்டார் கள். ...76 
2044மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
கண்டமங்கே நீலமுறாக் கால். ...77 
2045எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற
அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை
மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும்
எக்களித்து வாழ்கின்றேன் யான். ...78 
2046துற்சங்கத் தோர்கணமுந் தோயாது நின்னடியர்
சற்சங்கத் தென்றனைநீ தான்கூட்டி - நற்சங்கக்
காப்பான் புகழுன் கழற்புகழைக் கேட்பித்துக்
காப்பாய் இஃதென் கருத்து. ...79 
2047என்னமுதே முக்கண் இறையே நிறைஞான
இன்னமுதே நின்னடியை ஏத்துகின்றோர் - பொன்னடிக்கே
காதலுற்றுத் தொண்டுசெயக் காதல்கொண்டேன் எற்கருணீ
காதலுற்றுச் செய்தல் கடன். ...80 
2048ஆரா அமுதே அருட்கடலே நாயேன்றன்
பேராத வஞ்சப் பிழைநோக்கி - யாரேனு
நின்போல்வார் இல்லாதோய் நீயே புறம்பழித்தால்
என்போல்வார் என்சொல்லார் ஈங்கு. ...81 
2049மெய்யாக நின்னைவிட வேறோர் துணையில்லேன்
ஐயா அதுநீ அறிந்ததுகாண் - பொய்யான
தீதுசெய்வேன் தன்பிழையைச் சித்தங் குறித்திடில்யான்
யாதுசெய்வேன் அந்தோ இனி. ...82
2050திண்ணம் அறியாச் சிறியேன் உளத்திருக்கும்
எண்ணம் அறிந்தாய் இரங்குகிலாய் - அண்ணலுன்பால்
நித்தம் இரங்காஎன் நெஞ்சமர்ந்த தாலோநின்
சித்தம் இரங்காச் செயல். ...83
2051கொன்னஞ்சேன் தன்பிழையைக் கூர்ந்துற்று நானினைக்கில்
என்நெஞ்சே என்னை எரிக்குங்காண் - மன்னுஞ்சீர்
எந்தாய்நின் சித்தத்திற் கேதாமோ நானறியேன்
சிந்தா குலனென்செய் வேன். ...84
2052நின்னன்பர் தம்பால் நிறுத்துதியோ அன்றிஎனைப்
பொன்னன்பர் தம்பால் புணர்த்துதியோ - பொன்னன்பர்
வைவமே என்னும் வறியேன் அறியேனென்
தெய்வமே நின்றன் செயல். ...85
2053என்சிறுமை நோக்கா தெனக்கருளல் வேண்டுமென்றே
நின்பெருமை நோக்கிஇங்கு நிற்கின்றேன் - என்பெரும
யாதோநின் சித்தம் அறியேன் அடியேற்கெப்
போதோ அருள்வாய் புகல். ...86
2054எந்தாயென் குற்றமெலாம் எண்ணுங்கால் உள்நடுங்கி
நொந்தா குலத்தின் நுழைகின்றேன் - சிந்தாத
காள மகிழ்நின் களக்கருணை எண்ணுதொறும்
மீளமகிழ் கின்றேன் விரைந்து. ...87
2055எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம்
வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே
வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர்
காண்டுமெனச் சூழ்வார் களித்து. ...88
2056வேணிக்க மேவைத்த வெற்பே விலையில்லா
மாணிக்க மேகருணை மாகடலே - மாணிக்கு
முன்பொற் கிழியளித்த முத்தேஎன் ஆருயிர்க்கு
நின்பொற் கழலே நிலை. ...89
2057முத்தேவர் போற்று முதற்றேவ நின்னையன்றி
எத்தேவர் சற்றே எடுத்துரைநீ - பித்தேன்செய்
குற்றமெலாம் இங்கோர் குணமாகக் கொண்டென்னை
அற்றமிலா தாள்கின் றவர். ...90
2058கங்கைச் சடையாய்முக் கண்ணுடையாய் கட்செவியாம்
அங்கச் சுடையாய் அருளுடையாய் - மங்கைக்
கொருகூ றளித்தாய் உனைத்தொழுமிந் நாயேன்
இருகூ றளித்தேன் இடர்க்கு. ...91
2059பேசத் தெரியேன் பிழையறியேன் பேதுறினும்
கூசத் தெரியேன் குணமறியேன் - நேசத்தில்
கொள்ளுவார் உன்னடிமைக் கூட்டத்தார் அல்லாதார்
எள்ளுவார் கண்டாய் எனை. ...92
2060ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
நம்பாத நாயடியேன் நான். ...93
2061சிவமே சிவஞானச் செல்வமே அன்பர்
நவமே தவமே நலமே நவமாம்
வடிவுற்ற தேவேநின் மாக்கருணை யன்றோ
படிவுற்ற என்னுட் பயன். ...94
2062கோளாக்கிக் கொள்ளுங் கொடியே னையுநினக்கோர்
ஆளாக்கிக் கொள்ளற் கமைவாயேல் - நீளாக்குஞ்
செங்கேச வேணிச் சிவனேஎன் ஆணவத்திற்
கெங்கே இடங்காண் இயம்பு. ...95
2063திண்ணஞ்சற் றீந்திடநின் சித்தம் இரங்காத
வண்ணஞ்சற் றேதெரிய வந்ததுகாண் - எண்ணெஞ்சில்
இத்தனையு மென்வினைகள் நீங்கில் இருக்கஅண்டம்
எத்தனையும் போதாமை என்று. ...96
2064இண்டைச் சடையோய் எனக்கருள எண்ணுதியேல்
தொண்டைப் பெறுமென் துயரெல்லாம் - சண்டைக்கிங்
குய்ஞ்சே(139 )மனஓடும் ஓட்டத்திற் கென்னுடைய
நெஞ்சே பிறகிடுங்காண் நின்று. ...97
2065கண்ணா ணிழுதைகள்பாற் காட்டிக் கொடுக்கிலெனை
அண்ணா அருளுக் கழகன்றே - உண்ணாடு
நின்னடியார் கூட்டத்தில் நீரிவனைச் சேர்த்திடுமின்
என்னடியான் என்பாய் எடுத்து. ...98
2066கண்ணப்பன் ஏத்துநுதற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் - மண்ணிற்சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல் நாட்டு. ...99
2067பொன்னின் றொளிரும் புரிசடையோய் நின்னையன்றிப்
பின்னொன் றறியேன் பிழைநோக்கி - என்னை
அடித்தாலு நீயே அணைத்தாலு நீயே
பிடித்தேனுன் பொற்பாதப் பேறு. ...100
2068துற்குணத்தில் வேறு தொடர்வேன் எனினுமற்றை
நற்குணத்தில் உன்சீர் நயப்பேன்காண் - சிற்குணத்தோய்
கூற்றுதைத்த நின்பொற் குரைகழற்பூந் தாளறிக
வேற்றுரைத்தே னில்லை விரித்து. ...101
2069இப்பாரில் என்பிழைகள் எல்லாம் பொறுத்தருளென்
அப்பாநின் தாட்கே அடைக்கலங்காண் - இப்பாரில்
நானினது தாணீழல் நண்ணுமட்டும் நின்னடியர்
பானினது சீர்கேட்கப் பண். ...102

திருச்சிற்றம்பலம்
-----------
130. மன்னவனே - தொ.வே.1; 2. பொ. சு., பி. இரா., ச. மு. க., சென்னைப் பதிப்புகள்.
131. வந்தி தேன் எனற்பாலது வந்தித்தேன் என விரித்தல் விகாரமாயிற்று. ஈண்டு தேன் என்பது இனிமை. தொ.வே.
132. வங்கணம் - நட்பு. தொ.வே.
133. ஆவலென்பதனை எதிர்காலத் தன்மை ஒருமை வினைமுற்றாகக் கொள்க. தொ. வே.
134. எம்பர - அண்மை விளி, இறை முன்னிலை. தொ. வே.
135. மாயற்கு, மாயாற்கென நீட்டல் விகாரமாயிற்று. தொ.வே.
136. நீத்தம், நீத்தெனக் குறைந்து நின்றது. தொ.வே.
137. வித்தம் - அறிவு. தொ.வே.
138. தானம் - சுவர்க்கம். தொ.வே.
139. உய்ந்தேம், உய்ஞ்சேம் எனத் திரிந்தது. தொ.வே.
-----------------


5. மகாதேவ மாலை (2070 - 2170)

 காப்பு
.அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2070

கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்

துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்
தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற

கண்ணுடையோய் சிதையா ஞானப்
பொருள்நிறைந்த மறையமுதம் -பாழிகின்ற

மலர்வாயோய் பொய்ய னேன்றன்
மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்

கசிந்துருக்கும் வடிவத் தோயே. ... 1

 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2071

உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள

உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக்

கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச

இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி

தானந்த மயமாகி அமர்ந்த தேவே. ...1

2072

உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி

யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும்
கலகமுறா உபசாந்த நிலைய தாகிக்

களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி
விலகலுறா நிபிடஆ னந்த மாகி

மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி
இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர்

இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே. ...2<7tr>

2073

வித்தாகி முளையாகி விளைவ தாகி

விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்

குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்

சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ

முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே. ...3

2074

வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்

மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்

நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற

முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்

மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே. ...4

2075

தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத்

துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச்
சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த

சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி
ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும்

உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம்
ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி

எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே. ...5

2076

பரமாகிச் சூக்குமமாய்த் துலெ மாகிப்

பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம

சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்

சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
அரமாகி ஆனந்த போத மாகி

ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே. ...6

2077

இந்தியமாய்க் கரணாதி அனைத்து மாகி

இயல்புருட னாய்க்கால பரமு மாகிப்
பந்தமற்ற வியோமமாய்ப் பரமாய் அப்பால்

பரம்பரமாய் விசுவமுண்ட பான்மை யாகி
வந்தஉப சாந்தமதாய் மவுன மாகி

மகாமவுன நிலையாகி வயங்கா நின்ற
அந்தமில்தொம் பதமாய்த்தற் பதமாய் ஒன்றும்

அசிபதமாய் அதீதமாய் அமர்ந்த தேவே. ...7

2078

நின்மயமாய் என்மயமாய் ஒன்றுங் காட்டா

நிராமயமாய் நிருவிகற்ப நிலையாய் மேலாம்
தன்மயமாய்த் தற்பரமாய் விமல மாகித்

தடத்தமாய்ச் சொரூபமாய்ச் சகச மாகிச்
சின்மயமாய்ச் சிற்பரமாய் அசல மாகிச்

சிற்சொலித மாய்அகண்ட சிவமாய் எங்கும்
மன்மயமாய் வாசகா தீத மாகி

மனாதீத மாய்அமர்ந்த மவுனத் தேவே. ...8

2079

அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்

அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்

கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே

ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்

பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே. ...9

2080

வாயாகி வாயிறந்த மவுன மாகி

மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்

கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்

தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி

ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே. ...10

2081

அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்

அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்

பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்

பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்

கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே. . ..11

2082

பொன்னாகி மணியாகிப் போக மாகிப்

புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி

மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி

முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க

வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே. ...12

2083

அரிதாகி அரியதினும் அரிய தாகி

அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்

பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்

கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்

செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே. ...13

2084

உருவாகி உருவினில்உள் உருவ மாகி

உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி

அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்

குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி

மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே. ...14

2085

சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்

சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி

அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி

எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்

ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே. ...15

2086

வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த

வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்

சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்

பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி

நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே. ...16

2087

சகமாகிச் சீவனாய் ஈச னாகிச்

சதுமுகனாய்த் திருமாலாய் அரன்றா னாகி
மகமாயை முதலாய்க்கூ டத்த னாகி

வான்பிரம மாகிஅல்லா வழக்கு மாகி
இகமாகிப் பதமாகிச் சமய கோடி

எத்தனையு மாகிஅவை எட்டா வான்கற்
பகமாகிப் பரமாகிப் பரம மாகிப்

பராபரமாய்ப் பரம்பரமாய்ப் பதியும் தேவே. ...17

2088

விதியாகி அரியாகிக் கிரீச னாகி

விளங்குமகேச் சுரனாகி விமல மான
நிதியாகுஞ் சதாசிவனாய் விந்து வாகி

நிகழ்நாத மாய்ப்பரையாய் நிமலா னந்தப்
பதியாகும் பரசிவமாய்ப் பரமாய் மேலாய்ப்

பக்கமிரண் டாயிரண்டும் பகரா தாகிக்
கதியாகி அளவிறந்த கதிக ளெல்லாம்

கடந்துநின்று நிறைந்தபெருங் கருணைத் தேவே. ...18

2089

மானாகி மோகினியாய் விந்து மாகி

மற்றவையால் காணாத வான மாகி
நானாகி நானல்ல னாகி நானே

நானாகும் பதமாகி நான்றான் கண்ட
தானாகித் தானல்ல னாகித் தானே

தானாகும் பதமாகிச் சகச ஞான
வானாகி வான்நடுவில் வயங்கு கின்ற

மவுனநிலை யாகியெங்கும் வளருந் தேவே. . ..19

2090

மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி

வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்

தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்

தானாகித் தனதாகித் தானான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்

அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே. ...20

2091

மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்

வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற

நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்

கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்

தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே. . ..21

2092

பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற

பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான

கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்

தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்

நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே. ...22

2093

தேசுவிரித் திருளகற்றி என்றும் ஓங்கித்

திகழ்கின்ற செழுங்கதிரே செறிந்த வாழ்க்கை
மாசுவிரித் திடுமனத்தில் பயிலாத் தெய்வ

மணிவிளக்கே ஆனந்த வாழ்வே எங்கும்
காசுவிரித் திடுமொளிபோல் கலந்து நின்ற

காரணமே சாந்தமெனக் கருதா நின்ற
தூசுவிரித் துடுக்கின்றோர் தம்மை நீங்காச்

சுகமயமே அருட்கருணை துலங்கும் தேவே. ...23

2094

கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்

கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
காவேமெய் அறிவின்ப மயமே என்றன்

கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்

தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்

பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே. ...24

2095

வானேஅவ் வானுலவும் காற்றே காற்றின்

வருநெருப்பே நெருப்புறுநீர் வடிவே நீரில்
தானேயும் புவியேஅப் புவியில் தங்கும்

தாபரமே சங்கமமே சாற்று கின்ற
ஊனேநல் உயிரேஉள் ஒளியே உள்ளத்

துணர்வேஅவ் வுணர்வுகலந் தூறு கின்ற
தேனேமுக் கனியேசெங் கரும்பே பாகின்

தீஞ்சுவையே சுவையனைத்தும் திரண்ட தேவே. ...25

2096

விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்

வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்

கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த

தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்

பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே. ...26

2097

மாணேயத் தவருளத்தே மலர்ந்த செந்தா

மரைமலரின் வயங்குகின்ற மணியே ஞானப்
பூணேமெய்ப் பொருளேஅற் புதமே மோனப்

புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே
ஆணேபெண் உருவமே அலியே ஒன்றும்

அல்லாத பேரொளியே அனைத்துந் தாங்குந்
தூணேசிற் சுகமேஅச் சுகமேல் பொங்குஞ்

சொரூபானந் தக்கடலே சோதித் தேவே. ...27

2098

பூதமே அவைதோன்றிப் புகுந்தொ டுங்கும்

புகலிடமே இடம்புரிந்த பொருளே போற்றும்
வேதமே வேதத்தின் விளைவே வேத

வியன்முடிவே அம்முடிவின் விளங்கும் கோவே
நாதமே நாதாந்த நடமே அந்த

நடத்தினையுள் நடத்துகின்ற நலமே ஞான
போதமே போதமெலாம் கடந்து நின்ற

பூரணமே யோகியருள் பொலிந்த தேவே. ...28

2099

ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த

நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
காலமே காலமெலாம் கடந்த ஞானக்

கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
கோலமே குணமேஉட் குறியே கோலங்

குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
சீலமே மாலறியா மனத்திற் கண்ட

செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே. ...29

2100

தத்துவமே தத்துவா தீத மேசிற்

சயம்புவே எங்குநிறை சாட்சி யேமெய்ச்
சத்துவமே சத்துவத்தின் பயனாம் இன்பம்

தந்தருளும் பெருவாழ்வாம் சாமி யேஎம்
சித்தநிலை தெளிவிக்கும் ஒளியே சற்றும்

தெவிட்டாத தெள்ளமுதே தேனே என்றும்
சுத்தநெறி திறம்பாதார் அறிவில் தோய்ந்த

சுகப்பொருளே மெய்ஞ்ஞானம் துலங்கும் தேவே. ...30

2101

யோகமே யோகத்தின் பயனே யோகத்

தொருமுதலே யோகத்தின் ஓங்குந் தூய
போகமே போகத்தின் பொலிவே போகம்

புரிந்தருளும் புண்ணியமே புனித ஞான
யாகமே யாகத்தின் விளைவே யாகத்

திறையேஅவ் விறைபுரியும் இன்பே அன்பர்
மோகமே மோகமெலாம் அழித்து வீறு

மோனமே மோனத்தின் முளைத்த தேவே. ...31

2102

காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்

கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன

வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த

அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
சூட்சியே(140) சூட்சியெலாம் கடந்து நின்ற

துரியமே துரியமுடிச் சோதித் தேவே. ...32

2103

மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான

வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற
குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக்

கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப்
பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப்

பெம்மானே செங்கமலப் பிரானே இந்த
இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற

இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே. ...33

2104

கோதகன்ற யோகர்மனக் குகையில் வாழும்

குருவேசண் முகங்கொண்ட கோவே வஞ்ச
வாதகன்ற ஞானியர்தம் மதியில் ஊறும்

வானமுதே ஆனந்த மழையே மாயை
வேதகன்ற முத்தர்களை விழுங்கு ஞான

வேழமே மெய்யின்ப விருந்தே நெஞ்சில்
தீதகன்ற மெய்யடியர் தமக்கு வாய்த்த

செல்வமே எல்லையிலாச் சீர்மைத் தேவே. ...34

2105

அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும்

ஆனந்தத் தனிமலையே அமல வேதப்
பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப்

பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி
இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த

ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு

தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே. ...35

2106

அளவையெலாங் கடந்துமனங் கடந்து மற்றை

அறிவையெலாங் கடந்துகடந் தமல யோகர்
உளவையெலாங் கடந்துபதங் கடந்து மேலை

ஒன்றுகடந் திரண்டுகடந் துணரச் சூழ்ந்த
களவையெலாங் கடந்தண்ட பிண்ட மெல்லாம்

கடந்துநிறை வானசுகக் கடலே அன்பர்
வளவையெலாம் இருளகற்றும் ஒளியே மோன

வாழ்வேஎன் உயிர்க்குயிராய் வதியும் தேவே. ...36

2107

வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்

மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற
என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும்

இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற
அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்

ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி

எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே. ...37

2108

தண்ணமுத மதிகுளிர்ந்த கிரணம் வீசத்

தடம்பொழிற்பூ மணம்வீசத் தென்றல் வீச
எண்ணமுதப் பளிக்குநிலா முற்றத் தேஇன்

இசைவீசத் தண்பனிநீர் எடுத்து வீசப்
பெண்ணமுதம் அனையவர்விண் ணமுதம் ஊட்டப்

பெறுகின்ற சுகமனைத்தும் பிற்பட் டோ டக்
கண்ணமுதத் துடம்புயிர்மற் றனைத்தும் இன்பங்

கலந்துகொளத் தருங்கருணைக் கடவுள் தேவே. ...38

2109

சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்

தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்

கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்

விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த

மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே. ...39

2110

சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்

சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற

ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப

நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்

கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே. ...40

2111

அலைகடலும் புவிவரையும் அனல்கால் நீரும்

அந்தரமும் மற்றைஅகி லாண்டம் யாவும்
நிலைகுலையா வண்ணம்அருள் வெளியி னூடு

நிரைநிரையா நிறுத்திஉயிர் நிகழும் வண்ணம்
தலைகுலையாத் தத்துவஞ்செய் திரோதை யென்னும்

தனியாணை நடத்திஅருள் தலத்தில் என்றும்
மலைவறவீற் றிருந்தருளும் அரசே முத்தி

வழித்துணையே விழித்துணையுள் மணியாம் தேவே. ...41

2112

வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப

வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்

சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்

பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே

தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே. ...42

2113

அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற்

கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம்
விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன

வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே
கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும்

கலந்துநின்ற பெருங்கருணைக் கடவு ளேஎம்
சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும்

சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே. ...43

2114

பேதமுறா மெய்ப்போத வடிவ மாகிப்

பெருங்கருணை நிறம்பழுத்துச் சாந்தம் பொங்கிச்
சீதமிகுந் தருள்கனிந்து கனிந்து மாறச்

சின்மயமாய் நின்மலமே மணந்து நீங்கா
ஆதரவோ டியன்மவுனச் சுவைமேன் மேற்கொண்

டானந்த ரசமொழுக்கி அன்பால் என்றும்
சேதமுறா தறிஞருளந் தித்தித் தோங்கும்

செழும்புனிதக் கொழுங்கனியே தேவ தேவே. ...44

2115

உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்

கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்

வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்

சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே. ...45

2116

கிரியைநெறி அகற்றிமறை முடிவில் நின்று

கேளாமல் கேட்கின்ற கேள்வி யேசொற்
கரியவறை விடுத்துநவ நிலைக்கு மேலே

காணாமற் காண்கின்ற காட்சியே உள்
அரியநிலை ஒன்றிரண்டின் நடுவே சற்றும்

அறியாமல் அறிகின்ற அறிவே என்றும்
உரியசதா நிலைநின்ற உணர்ச்சி மேலோர்

உன்னாமல் உன்னுகின்ற ஒளியாம் தேவே. ...46

2117

சொற்போதற் கரும்பெரிய மறைகள் நாடித்

தொடர்ந்துதொடர்ந் தயர்ந்திளைத்துத் துளங்கி ஏங்கிப்
பிற்போத விரைந்தன்பர் உளத்தே சென்ற

பெருங்கருணைப் பெருவாழ்வே பெயரா தென்றும்
தற்போத ஒழிவினிடை நிறைந்து பொங்கித்

ததும்பிவழிந் தோங்கியெல்லாந் தானே யாகிச்
சிற்போதத் தகம்புறமும் கோத்து நின்ற

சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத் தேவே. ...47

2118

பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்

புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்

கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்

தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்

செய்யவல்ல கடவுளே தேவ தேவே. ...48

2119

வான்காணா மறைகாணா மலரோன் காணான்

மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று

நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற

வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்

அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே. ...49

2120

மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி

மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை

அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்

கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்

என்கின்ற அநுபவமே இன்பத் தேவே. ...50

2121

பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்

பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்

பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்

ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்

கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே. ...51

2122

மெய்யுணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த

வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய்யுணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்

புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே அன்பர்
கையுறைந்து வளர்நெல்லிக் கனியே உள்ளம்

கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
உய்யுநெறி ஒளிகாட்டி வெளியும் உள்ளும்

ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே. ...52

2123

ஒலிவடிவு நிறஞ்சுவைகள் நாற்றம் ஊற்றம்

உறுதொழில்கள் பயன்பலவே றுளவாய் எங்கும்
மலிவகையாய் எவ்வகையும் ஒன்றாய் ஒன்றும்

மாட்டாதாய் எல்லாமும் வல்ல தாகிச்
சலிவகையில் லாதமுதற் பொருளே எல்லாம்

தன்மயமாய் விளங்குகின்ற தனியே ஆண்பெண்
அலிவகையல் லாதவகை கடந்து நின்ற

அருட்சிவமே சிவபோகத் தமைந்த தேவே. ...53

2124

பேராய அண்டங்கள் பலவும் பிண்ட

பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
வாராய பலபொருளும் கடலும் மண்ணும்

மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
ஊராத வான்மீனும் அணுவும் மற்றை

உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்

அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே. ...54

2125

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக

நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்

திருவாளர் உட்கலந்த தேவ தேவே. ...55

2126

மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்

மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்

கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்

விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்

சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே. ...56

2127

உருநான்கும் அருநான்கும் நடுவே நின்ற

உருஅருவ மொன்றும்இவை உடன்மேல் உற்ற
ஒருநான்கும் இவைகடந்த ஒன்று மாய்அவ்

வொன்றினடு வாய்நடுவுள் ஒன்றாய் நின்றே
இருநான்கும் அமைந்தவரை நான்கி னோடும்

எண்ணான்கின் மேலிருத்தும் இறையே மாயைக்
கருநான்கும் பொருணான்கும் காட்டு முக்கட்

கடவுளே கடவுளர்கள் கருதுந் தேவே. ...57

2128

பாங்குளநாம் தெரிதுமெனத் துணிந்து கோடிப்

பழமறைகள் தனித்தனியே பாடிப் பாடி
ஈங்குளதென் றாங்குளதென் றோடி யோடி

இளைத்திளைத்துத் தொடர்ந்துதொடர்ந் தெட்டுந் தோறும்
வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு

மறைந்துமறைந் தொளிக்கின்ற மணியே எங்கும்
தேங்குபர மானந்த வெள்ள மேசச்

சிதானந்த அருட்சிவமே தேவே தேவே. ...58

2129

எழுத்தறிந்து தமையுணர்ந்த யோகர் உள்ளத்

தியலறிவாம் தருவினில்அன் பெனுமோர் உச்சி
பழுத்தளிந்து மவுனநறுஞ் சுவைமேற் பொங்கிப்

பதம்பொருந்த அநுபவிக்கும் பழமே மாயைக்
கழுத்தரிந்து கருமமலத் தலையை வீசும்

கடுந்தொழிலோர் தமக்கேநற் கருணை காட்டி
விழுத்துணையாய் அமர்ந்தருளும் பொருளே மோன

வெளியினிறை ஆனந்த விளைவாந் தேவே. ...59

2130

உருத்திரர்நா ரணர்பிரமர் விண்ணோர் வேந்தர்

உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர்யோ கியர்சித்தர் முனிவர் மற்றை

வானவர்கள் முதலோர்தம் மனத்தால் தேடிக்
கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங்

களைவினவ மற்றவையுங் காணேம் என்று
வருத்தமுற்றாங் கவரோடு புலம்ப நின்ற

வஞ்சவெளி யேஇன்ப மயமாம் தேவே. ...60

2131

பாயிரமா மறைஅனந்தம் அனந்தம் இன்னும்

பார்த்தளந்து காண்டும்எனப் பல்கான் மேவி
ஆயிரமா யிரமுகங்க ளாலும் பன்னாள்

அளந்தளந்தோர் அணுத்துணையும் அளவு காணா
தேயிரங்கி அழுதுசிவ சிவவென் றேங்கித்

திரும்பஅருட் பரவெளிவாழ் சிவமே ஈன்ற
தாயிரங்கி வளர்ப்பதுபோல் எம்போல் வாரைத்

தண்ணருளால் வளர்த்தென்றும் தாங்குந் தேவே. ...61

2132

அந்தரமிங் கறிவோமற் றதனில் அண்டம்

அடுக்கடுக்காய் அமைந்தஉள வறிவோம் ஆங்கே
உந்துறும்பல் பிண்டநிலை அறிவோஞ் சீவன்

உற்றநிலை அறிவோமற் றனைத்து நாட்டும்
எந்தைநின தருள்விளையாட் டந்தோ அந்தோ

எள்ளளவும் அறிந்திலோம் என்னே என்று
முந்தனந்த மறைகளெலாம் வழுத்த நின்ற

முழுமுதலே அன்பர்குறை முடிக்கும் தேவே. ...62

2133

தோன்றுபர சாக்கிரமும் கண்டோ ம் அந்தச்

சொப்பனமும் கண்டோ ம்மேல் சுழுத்தி கண்டோ ம்
ஆன்றபர துரியநிலை கண்டோ ம் அப்பால்

அதுகண்டோ ம் அப்பாலாம் அதுவும் கண்டோ ம்
ஏன்றஉப சாந்தநிலை கண்டோ ம் அப்பால்

இருந்தநினைக் காண்கிலோம் என்னே என்று
சான்றவுப நிடங்களெலாம் வழுத்த நின்ற

தன்மயமே சின்மயமே சகசத் தேவே. ...63

2134

பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோம் மேலைப்

பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம்
எரிக்கும்இயற் பரநாத நிலைக்கண் மெல்ல

எய்தினோம் அப்பாலும் எட்டிப் போனோம்
தெரிக்கரிய வெளிமூன்றும் தெரிந்தோம் எங்கும்

சிவமேநின் சின்மயம்ஓர் சிறிதும் தேறோம்
தரிக்கரிதென் றாகமங்க ளெல்லாம் போற்றத்

தனிநின்ற பரம்பொருளே சாந்தத் தேவே. ...64

2135

மணக்குமலர்த் தேனுண்ட வண்டே போல

வளர்பரமா னந்தமுண்டு மகிழ்ந்தோர் எல்லாம்
இணக்கமுறக் கலந்துகலந் ததீத மாதற்

கியற்கைநிலை யாததுதான் எம்மாற் கூறும்
கணக்குவழக் கனைத்தினையும் கடந்த தந்தோ

காண்பரிதிங் கெவர்க்கும்எனக் கலைக ளெல்லாம்
பிணக்கறநின் றோலமிடத் தனித்து நின்ற

பெரும்பதமே மதாதீதப் பெரிய தேவே. ...65

2136

பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற

பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்

வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா

இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
விதுவென்ற(141) தண்ணளியால் கலந்து கொண்டு

விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே. ...66

2137

அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம்

அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக்
கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக்

கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத்
திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும்

திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப்
பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட்

பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே. ...67

2138

என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்

இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்

அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்

நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்

தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே. . ..68

2139

தானாகித் தானல்ல தொன்று மில்லாத்

தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
வானாகி வளியனலாய் நீரு மாகி

மலர் தலைய உலகாகி மற்று மாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்

தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை

நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே. ...69

2140

ஆனேறும் பெருமானே அரசே என்றன்

ஆருயிருக் கொருதுணையே அமுதே கொன்றைத்
தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச்

செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன்
ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம்

உடையானே நின்னடிச்சீர் உன்னி அன்பர்
வானேறு கின்றார்நான் ஒருவன் பாவி

மண்ணேறி மயக்கேறி வருந்துற் றேனே. ...70

2141

செஞ்சடைஎம் பெருமானே சிறுமான் ஏற்ற

செழுங்கமலக் கரத்தவனே சிவனே சூழ்ந்து
மஞ்சடையும் மதிற்றில்லை மணியே ஒற்றி

வளர்மருந்தே என்னுடைய வாழ்வே வேட்கை
அஞ்சடைய வஞ்சியர்மால் அடைய வஞ்சம்

அடையநெடுந் துயரடைய அகன்ற பாவி
நெஞ்சடைய நினைதியோ நினைதி யேல்மெய்ந்

நெறியுடையார் நெஞ்சமர்ந்த நீத னன்றே. ...71

2142

அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்

ஆரமுதே என்னுறவே அரசே இந்த
மன்னுலகில் அடியேனை என்னே துன்ப

வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து

போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ

என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே. ...72

2143

படித்தேன்பொய் உலகியனூல் எந்தாய் நீயே

படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்

உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்

பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேன்எம் பெருமான்ஈ தொன்றும் நானே

நடித்தேனோ அல்லதுநீ நடிப்பித் தாயோ. ...73

2144

மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை

மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ

பேயேறி நலிகின்ற பேதை யானேன்
வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்

மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்

உடையானே இதுதகுமோ உணர்கி லேனே. ...74

2145

மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்

வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்

கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்

பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ 

இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே. ...75

2146

என்னரசே என்னுயிரே என்னை ஈன்ற

என்தாயே என்குருவே எளியேன் இங்கே
தன்னரசே செலுத்திஎங்கும் உழலா நின்ற

சஞ்சலநெஞ் சகத்தாலே தயங்கி அந்தோ
மின்னரசே பெண்ணமுதே என்று மாதர்

வெய்யசிறு நீர்க்குழிக்கண் விழவே எண்ணி
கொன்னரைசேர் கிழக்குருடன் கோல்போல் வீணே

குப்புறுகின் றேன்மயலில் கொடிய னேனே. ...76

2147

அல்விலங்கு செழுஞ்சுடராய் அடியார் உள்ளத்

தமர்ந்தருளும் சிவகுருவே அடியேன் இங்கே
இல்விலங்கு மடந்தையென்றே எந்தாய் அந்த

இருப்புவிலங் கினைஒழித்தும் என்னே பின்னும்
மல்விலங்கு பரத்தையர்தம் ஆசை என்னும்

வல்விலங்கு பூண்டந்தோ மயங்கி நின்றேன்
புல்விலங்கும் இதுசெய்யா ஓகோ இந்தப்

புலைநாயேன் பிழைபொறுக்கில் புதிதே அன்றோ. ...77

2148

வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை

வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த

மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
பின்கொடுசென் றலைத்திழுக்கு(142) தந்தோ நாயேன்

பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்

என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே. ...78

2149

உய்குவித்து(143) மெய்யடியார் தம்மை எல்லாம்

உண்மைநிலை பெறஅருளும் உடையாய் இங்கே
மைகுவித்த நெடுங்கண்ணார் மயக்கில் ஆழ்ந்து

வருந்துகின்றேன் அல்லால்உன் மலர்த்தாள் எண்ணிக்
கைகுவித்துக் கண்களில்நீர் பொழிந்து நானோர்

கணமேனும் கருதிநினைக் கலந்த துண்டோ 
செய்குவித்துக் கொள்ளுதியோ கொள்கி லாயோ

திருவுளத்தை அறியேன்என் செய்கு வேனே. ...79

2150

அருள்வெளியில் ஆனந்த வடிவி னால்நின்

றாடுகின்ற பெருவாழ்வே அரசே இந்த
மருள்வலையில் அகப்பட்ட மனத்தால் அந்தோ

மதிகலங்கி மெய்ந்நிலைக்கோர் வழிகா ணாதே
இருள்நெறியில் கோலிழந்த குருட்டூ மன்போல்

எண்ணாதெல் லாம்எண்ணி ஏங்கி ஏங்கி
உருள்சகடக் கால்போலுஞ் சுழலா நின்றேன்

உய்யும்வகை அறியேனிவ் வொதிய னேனே. ...80

2151

கற்றவளை தனக்கும்உண வளிக்கும் உன்றன்

கருணைநிலை தனைஅறியேன் கடையேன் இங்கே
எற்றவளை எறும்பேபோல் திரிந்து நாளும்

இளைத்துநின தருள்காணா தெந்தாய் அந்தோ
பெற்றவளைக் காணாத பிள்ளை போலப்

பேதுறுகின் றேன்செய்யும் பிழையை நோக்கி
இற்றவளைக்(144) கேள்விடல்போல் விடுதி யேல்யான்

என்செய்வேன் எங்குறுவேன் என்சொல் வேனே. ...81

2152

அடிமைசெயப் புகுந்திடும்எம் போல்வார் குற்றம்

ஆயிரமும் பொறுத்தருளும் அரசே நாயேன்
கொடுமைசெயு மனத்தாலே வருந்தி அந்தோ

குரங்கின்கை மாலையெனக் குலையா நின்றேன்
கடுமைசெயப் பிறர்துணிந்தால் அடிமை தன்னைக்

கண்டிருத்தல் அழகன்றே கருணைக் கெந்தாய்
செடிமையுளப் பாதகனேன் என்செய் வேன்நின்

திருவுளத்தை அறிந்திலேன் திகைக்கின் றேனே. ...82

2153

கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்

குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்

தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்

உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்

தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே. ...83

2154

வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி

விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக்
கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம்

கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே
உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர்

உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும்
பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம்

பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே. ...84

2155

எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட

என்னரசே என்குருவே இறையே இன்று
மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல

மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்

தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே

அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ. ...85

2156

தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்

சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்

இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற

நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்

அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே. ...86

2157

எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்

ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்

சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்

கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்

மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய். ...87

2158

அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும்

ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன்
இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ

இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே
பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப்

பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை
கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக்

குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ. ...88

2159

கண்ணுடைய நுதற்கரும்பே மன்றில் ஆடும்

காரணகா ரியங்கடந்த கடவு ளேநின்
தண்ணுடைய மலரடிக்கோர் சிறிதும் அன்பு

சார்ந்தேனோ செம்மரம்போல் தணிந்த நெஞ்சேன்
பெண்ணுடைய மயலாலே சுழல்கின் றேன்என்

பேதைமையை என்புகல்வேன் பேய னேனைப்
புண்ணுடைய புழுவிரும்பும் புள்ளென் கேனோ

புலைவிழைந்து நிலைவெறுத்தேன் புலைய னேனே. ...89

2160

பொன்னுடையார் இடம்புகவோ அவர்கட் கேற்கப் 

பொய்ம்மொழிகள் புகன்றிடவோ பொதிபோல் இந்தக்
கொன்னுடையா உடல்பருக்கப் பசிக்குச் சோறு

கொடுக்கவோ குளிர்க்காடை கொளவோ வஞ்ச
மின்னிடையார் முடைச்சிறுநீர்க் குழிக்கண் அந்தோ

வீழ்ந்திடவோ தாழ்ந்திளைத்து விழிக்க வோதான்
என்னுடையாய் என்னுடையாய் என்னை இங்கே

எடுத்துவளர்த் தனைஅறியேன் என்சொல் வேனே. ...90

2161

வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த

மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்

கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான

இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை

உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே ...91

2162

பொன்மலையோ சிறிதெனப்பே ராசை பொங்கிப்

புவிநடையில் பற்பலகால் போந்து போந்து
நென்மலையோ நிதிமலையோ என்று தேடி

நிலைகுலைந்த தன்றிஉனை நினைந்து நேடி
மன்மலையோ மாமணியோ மருந்தோ என்று

வழுத்தியதே இல்லைஇந்த வஞ்ச நெஞ்சம்
கன்மலையோ இரும்போசெம் மரமோ பாறைக்

கருங்கல்லோ பராய்முருட்டுக் கட்டை யேயோ. ...92

2163

தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்

தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி

விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு

செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த

இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே. ...93

2164

அடியனேன் பிழையனைத்தும் பொறுத்தாட் கொண்ட

அருட்கடலே மன்றோங்கும் அரசே இந்நாள்
கொடியனேன் செய்பிழையைத் திருவுள் ளத்தே

கொள்ளுதியோ கொண்டுகுலங் குறிப்ப துண்டோ 
நெடியனே முதற்கடவுட் சமுகத் தோர்தம்

நெடும்பிழைகள் ஆயிரமும் பொறுத்து மாயை
ஒடியநேர் நின்றபெருங் கருணை வள்ளல்

எனமறைகள் ஓதுவதிங் குனைத்தா னன்றே. ...94

2165

கண்மயக்கும் பேரிருட்டுக் கங்குற் போதில்

கருத்தறியாச் சிறுவனைஓர் கடுங்கா னத்தே
உண்மயக்கம் கொளவிடுத்தே ஒருவன் பின்போம்

ஒருதாய்போல் மாயைஇருள் ஓங்கும் போதின்
மண்மயக்கம் பெறும்விடயக் காட்டில் அந்தோ

மதியிலேன் மாழாந்து மயங்க நீதான்
வண்மையுற்ற நியதியின்பின் என்னை விட்டே

மறைந்தனையே பரமேநின் வண்மை என்னே. ...95

2166

நற்றாயும் பிழைகுறிக்கக் கண்டோ ம் இந்த

நானிலத்தே மற்றவர்யார் நாடார் வீணே
பற்றாயும் அவர்தமைநாம் பற்றோம் பற்றில்

பற்றாத பற்றுடையார் பற்றி உள்ளே
உற்றாயுஞ் சிவபெருமான் கருணை ஒன்றே

உறுபிழைகள் எத்துணையும் பொறுப்ப தென்றுன்
பொற்றாளை விரும்பியது மன்று ளாடும்

பொருளேஎன் பிழையனைத்தும் பொறுக்க வன்றே. ...96

2167

எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்

எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி

நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்

தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்

பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ. ...97

2168

அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே

அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து

மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்

துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ

என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே. ...98

2169

புற்றோங்கும் அரவமெல்லாம் பணியாக் கொண்டு

பொன்மேனி தனில்அணிந்த பொருளே மாயை
உற்றோங்கு வஞ்சமனக் கள்வ னேனை

உளங்கொண்டு பணிகொள்வ துனக்கே ஒக்கும்
மற்றோங்கும் அவரெல்லாம் பெருமை வேண்டும்

வன்மனத்தர் எனைவேண்டார் வள்ள லேநான்
கற்றோங்கும் அறிவறியேன் பலவாச் சொல்லும்

கருத்தறியேன் எனக்கருளக் கருது வாயே. ...99

2170

அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்

ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட

சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்

வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை

ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே. ...100

திருச்சிற்றம்பலம்
--------
140. எதுகை நயம்பற்றி நின்றது. தொ.வே.
141. விது - சந்திரன். ஈண்டு இரண்டன் உருபுவிரிக்க. தொ.வே.
142. இழுக்குது என்பது மரூஉ வழக்கு. அல்லதூஉம், ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய 'கடிசொல்லில்லை' என்பதனால் கோடலுமாம். இங்ஙனமாதல், ''இனியே தெமக்குனருள் வருமோ எனக்கருதி ஏங்குதே நெஞ்சம்'' எனத் தாயுமானார் முதலிய பிற சான்றோர் செய்யுட்களாலும் உணர்க என்க. தொ. வே.
143. உய்குவித்து என்பதனுள் '' கு '' சாரியை. தொ. வே.
144. இற்றவள் - மனையறங் காப்போள். தொ. வே.

---------------------------


6. திருவருண் முறையீடு (2171 - 2402)

.கட்டளைக் கலித்துறை
2171துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே. ...1
2172என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே. ...2
2173தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே. ...3
2174பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே. ...4
2175விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத்
திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின்
நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர்
இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே. ...5
2176விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே. ...6
2177விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே. ...7
2178கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே. ...8
2179நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே. ...9
2180பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே. ...10
2181தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே. ...11
2182வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே. ...12
2183கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே. ...13
2184வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே. ...14
2185நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே. ...15
2186மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே. ...16
2187அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ 
என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே. ...17
2188என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே. ...18
2189பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே. ...19
2190சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ 
தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே. ...20
2191.அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே. ...21
2192அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே. ...22
2193சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே. ...23
2194கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே. ...24
2195சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே. ..25
2196வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே. ...26
2197அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே. ...27
2198நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே. ...28
2199தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே. ...29
2200நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே. ...30
2201ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே. ...31
2202சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே. ...32
2203நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே. ...33
2204தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ 
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே. ...34
2205பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே. ...35
2206நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே. ...36
2207மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே. ...37
2208கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே. ...38
2209ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே. ...39
2210பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்(145)முடித்த
நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே. ...40
2211நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே. ...41
2213விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்(146)அருளக் குறித்திலையேல்
பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே. ...42
2213சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே. ...43
2214ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே. ...44
2215முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே. ...45
2216வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்(147)
ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே. ...46
2217நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே. ...47
2218உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே. ...48
2219மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே. ...49
2220வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே. ...50
2221சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே. ...51
2222வருஞ்செல்லுள்(148) நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே. ...52
2223கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
உருமுக(149) வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே. ...53
2224மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே. ...54
2225பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
மாழையைப்(150) போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே. ...55
2226கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்
உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்
திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்
எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே. ...56
2227வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே. ...57
2228பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே. ....58
2229மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே. ...59
2230எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே. ...60
2231பொன்கின்று(151) பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே. ...61
2232வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே. ...62
2233கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே. ...63
2234விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே. ...64
2235நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே. ...65
2236சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே. ....66
2237புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
கல்லள(152) வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே. ...67
2238பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே. ...68
2239கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே. ...69
2240மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே. ...70
2241அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே. ....71
2242அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே. ...72
2243தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே. ...73
2244போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே. . ...74
2245இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம்
ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல்
மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக்
கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே. ...75
2246படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே. ...76
2247உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்
தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான்
நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால்
அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே. ...77
2248தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே. ...78
2249பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே. ...79
2250சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே. ...80
2251வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே. ...81
2252நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே. ...82
2253கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே. ...83
2254விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே. ...84
2255எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே. ...85
2256வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே. ...86
2257பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே. ...87
2258அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே. ...88
2259பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே. ...89
2260நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோ தப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே. ...90
2261உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற
நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை
விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்
சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே. ... 91
2262வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே. ...92
2263அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே. ...93
2264மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே. ...94
2265வேணிக்கு மேலொரு வேணி(153) வைத் தோய்முன் விரும்பிஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
பாணிக்குமோ(154) தரும் பாணி(155) வந் தேற்றவர் பான்மைகண்டே. ...95
2266மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே. ...96
2267முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே. ...97
2268நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே. ...98
2269வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே. ..99
2270காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே. ...100
2271அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே. ...101
2272பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ
மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ
தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம்
என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே. ...102
2273நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே. ...103
2274பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
` தாம்பா யினும்(156) ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே. ...104
2275நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே. ...105
2276எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே. ...106
2277கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே. ...107
2278தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே. . ..108
2279கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே. ...109
2280அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே. ...110
2281ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே. ...111
2282மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே. ... 112
2283ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே. ...113
2284அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோ ர்
கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
சொல்லுண்ட(157) வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே. ...114
2285காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே. ....115
2286வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே. ...116
2287குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே. ...117
2288பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே. ...118
2289அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே. ...119
2290ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே. ...120
2291கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே. ...121
2292வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள்
தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த
நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர்
வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே. ...122
2293காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே. ...123
2294வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே. ...124
2295மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே. ...125
2296ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே. ...126
2297பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோ ன்
திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே. ...127
2298மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே. ...128
2299என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே. ...129
2300மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே. ...130
2301நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே. ...131
2302சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே. ...132
2303சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே. ...133
2304திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே. ...134
2305சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே. . ..135
2306தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே. ...136
2307பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே. ...137
2308கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே. ...138
2309வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே. ...139
2310வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே. ...140
2311தெண்ணீர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
கண்ணீர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
புண்ணீர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
மண்ணீர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே. ...141
2312கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே. ...142
2313மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே. ...143
2314சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம்
சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே
அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே
இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே. ...144
2315பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே. ...145
2316வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோ ய்வன்தொண்டர் விரும்புறச்செங்
கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே. ...146
2317கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே. ...147
2318வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுளல்பவர்மேல் 
தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே. ...148
2319எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே. ...149
2320நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே. ...150
2321துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே. ...151
2322ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே. ...152
2323வேல்கொண்ட கையுமுந் நூல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே. ...153
2324விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே. ...154
2325தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திருணீத்
துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே. ...155
2326பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே. ...156
2327மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே. ...157
2328தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ 
உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே. ...158
2329மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே. ...159
2330ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே. ...160
2331ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
உப்பற்ற புன்கறி உண்டோ ர்தந் நாவுக் குவப்புளதே. ...161
2332சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே. ...162
2333கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே. ...163
2334வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே. ...164
2335அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே. ...165
2336சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே. ...166
2337சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே. ...167
2338சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே. ..168
2339இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்(158)
கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே. ...169
2340நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே. ...170
2341விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே. ...171
2342நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே. ...172
2343சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே. ...173
2344எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே. ...174
2345பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே. . ..175
2346மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே. ...176
2347ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே. ...177
2348தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே. ...178
2349வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே. ..179
2350மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே. ...180
2351மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே. ...181
2352உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே. ...182
2353மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே. ...183
2354வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே. ...184
2355ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே. ...185
2356சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே. ...186
2357கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே. ...187
2358களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே. ...188
2359மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே. ...189
2360ஏற்றிலிட் டார்கொடி கொண்டோ ய் விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே. ...190
2361தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே. . ..191
2362வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே. ...192
2363இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே. ...193
2364களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே. . ..194
2365காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே. ...195
2366கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே. ...196
2367வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே. ..197
2368சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே. ...198
2369பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே. ...199
2370என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே. ...200
2371கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
மான்போல் குதித்துக்கொண் டோ டேல் அமுத மதிவிளங்கும்
வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே. ...201
2372வேதனென் கோதற வேண்டுமென் கோஎன விண்ணப்பஞ்செய்
பாதனென் கோகடற் பள்ளிகொண் டான்தொழும் பண்பன்என்கோ
நாதனென் கோபர நாதனென் கோஎங்கள் நம்பிக்குநல்
தூதனென் கோஅவன் தோழனென் கோநினைத் து஦ய்மணியே. . ..202
2373இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே. ...203
2374சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே. ...204
2375மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே. . ..205
2376கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே. . ..206
2377இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே. ...207
2378உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே. ...208
2379என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே. ..209
2380போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே. . ..210
2381கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே. ...211
2382நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே. ..212
2383இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே. ...213
2384ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே. ..214
2385தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே. ...215
2386மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே. ...216
2387இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே. ...217
2388உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடையென்று மாலறங் கொண்டோ யென் துன்பம் விலக்குகவே. ...218
2389அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே. ...219
2390நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே. ...220
2391மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே. ...221
2392முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே. ...222
2393புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே. ...223
2394மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே. ...224
2395மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே. ...225
2396கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே. ...226
2397புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே. ...227
2398கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
அல்லென்று வெல்களங் கொண்டோ ய்என் செய்வ தறிந்திலனே. ...228
2399கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே. ...229
2400மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே. . ..230
2401மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே. ...231
2402இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே
திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே. ...232

திருச்சிற்றம்பலம்

------------
145. ஓர்பிள்ளைப்பேர் - மதலை - சரக்கொன்றை. ச. மூ. க.
146. மயங்குகின்றேன், மயங்கின்றேன் என விகாரமாயிற்று. தொ. வே.
147. கொண்டிடேல் என முன்னிலை எதிர்மறை ஏவன்முற்றாகக் கொள்க. தொ. வே.
148. செல் - மேகம். தொ. வே.
149. உரும் - இடி. தொ. வே.
150. மாழை - பொன். தொ. வே.
151. பொன்கின்று பூத்த சடை - கொன்றை பூத்த சடை. தொ. வே.
152. கல் - மலை. தொ. வே.
153. வேணி - நதி. தொ. வே.
154. பாணிக்குமோ - தாமதிக்குமோ. ச. மு. க.
155. பாணி - கை, நீர். ச. மு. க.
156. கடா, தாம், பாயினும் - பாய்ந்தாலும் ; தாம்பு - கயிறு. ச. மு. க.
157. சொல் - நெல், தொ. வே.
158. கனல் - அக்கினி. இனன் - சூரியன். இந்து - சந்திரன். ச. மு. க.

-------------------


7. சிகாமணி மாலை (2403 - 2417)

 புள்ளிருக்குவேளூர்
.கட்டளைக் கலித்துறை
2403வல்வினை யேனைஇவ் வாழ்க்கைக் கடல்நின்றும் வள்ளல்உன்தன்
நல்வினை வாழ்க்கைக் கரைஏற்றி மெய்அருள் நல்குகண்டாய்
கொல்வினை யானை உரித்தோய் வயித்திய நாதகுன்றாச்
செல்வினை மேலவர் வாழ்வே அமரர் சிகாமணியே. ...1
2404பொய்யே புலம்பிப் புழுத்தலை நாயின் புறத்திலுற்றேன்
மெய்யே உரைக்கும்நின் அன்பர்தம் சார்பை விரும்புகிலேன்
பையேல் அரவனை யேன்பிழை நோக்கிப் பராமுகம்நீ
செய்யேல் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...2
2405கல்லேன் மனக்கருங் கல்லேன் சிறிதும் கருத்தறியாப்
பொல்லேன்பொய் வாஞ்சித்த புல்லேன் இரக்கம் பொறைசிறிதும்
இல்லேன் எனினும்நின் பால்அன்றி மற்றை இடத்தில்சற்றும்
செல்லேன் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...3
2406ஆர்ப்பார் கடல்நஞ் சமுதுசெய் தாய்நின் அடிக்கன்பின்றி
வேர்ப்பார் தமக்கும் விருந்தளித் தாய்வெள்ளி வெற்பெடுத்த
கார்ப்பாள னுக்கும் கருணைசெய் தாய்கடை யேன்துயரும்
தீர்ப்பாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...4
2407நானே நினக்குப் பணிசெயல் வேண்டும்நின் நாண்மலர்த்தாள்
தானே எனக்குத் துணைசெயல் வேண்டும் தயாநிதியே
கோனே கரும்பின் சுவையேசெம் பாலொடு கூட்டுநறுந்
தேனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...5
2408மருவார் குழலியர் மையல் கடல்விழும் வஞ்சநெஞ்சால்
வெருவா உயங்கும் அடியேன் பிணியை விலக்குகண்டாய்
உருவாய் அருவும் ஒளியும் வெளியும்என் றோதநின்ற
திருவார் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...6
2409தவநேய மாகும்நின் தாள்நேய மின்றித் தடமுலையார்
அவநேய மேற்கொண் டலைகின்ற பேதைக் கருள்புரிவாய்
நவநேய மாகி மனவாக் கிறந்த நடுஒளியாம்
சிவனே வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...7
2410ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள்
கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே
பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ
செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...8
2411புல்வாயின் முன்னர்ப் புலிப்போத் தெனஎன்முன் போந்துநின்ற
கல்வாய் மனத்தரைக் கண்டஞ்சி னேனைக் கடைக்கணிப்பாய்
அல்வாய் மணிமிடற் றாரமு தேஅருள் ஆன்றபெரும்
செல்வா வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...9
2412ஆர்த்தார் கடல்நஞ் சமுதுசெய் தாய்என்னை அன்பர்கள்பால்
சேர்த்தாய்என் துன்பம் அனைத்தையும் தீர்த்துத் திருஅருட்கண்
பார்த்தாய் பரம குருவாகி என்னுள் பரிந்தமர்ந்த
தீர்த்தா வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...10
2413அறத்தாயை ஓர்புடை கொண்டோ ர் புடைமண் அளந்தமுகில்
நிறத்தாயை வைத்துல கெல்லாம் நடத்தும் நிருத்தஅண்டப்
புறத்தாய்என் துன்பம் துடைத்தாண்டு மெய்அருட் போதந்தந்த
திறத்தாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...11
2414அலைஓய் கடலில் சிவயோகம் மேவிய அந்தணர்தம்
நிலைஓர் சிறிதும் அறியேன் எனக்குன் நிமலஅருள்
மலைஓங்கு வாழ்க்கையும் வாய்க்குங் கொலோபொன் மலைஎன்கின்ற
சிலையோய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே. ...12
2415ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால்
நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே
வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன்
தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே. ...13
2416களிவே தனும்அந்தக் காலனும் என்னைக் கருதஒட்டா
ஒளிவே தரத்திரு வுள்ளஞ்செய் வாய்அன்பர் உள்ளம்என்னும்
தளிவே தனத்துறும் தற்பர மேஅருள் தண்ணமுதத்
தெளிவே வயித்திய நாதா அமரர் சிகாமணியே. . ..14
2417மால்விடை மேற்கொண்டு வந்தெளி யேனுடை வல்வினைக்கு
மேல்விடை ஈந்திட வேண்டுங்கண் டாய்இது வேசமயம்
நீல்விட முண்ட மிடற்றாய் வயித்திய நாதநின்பால்
சேல்விடு வாட்கண் உமையொடும் தேவர் சிகாமணியே. . ..15

திருச்சிற்றம்பலம்

----------------


8. வைத்தியநாதர் பதிகம் (2418 - 2429)

>

 புள்ளிருக்குவேளூர்
 பன்னிருசீர்க்(159) கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2418

ஓகைமட வார்அல்கு லேபிரம பதம்அவர்கள் உந்தியே வைகுந்தம்மேல்

ஓங்குமுலை யேகைலை அவர்குமுத வாயின்இதழ் ஊறலே அமுதம்அவர்தம் 
பாகனைய மொழியேநல் வேதவாக் கியம்அவர்கள் பார்வையே கருணைநோக்கம்

பாங்கின்அவ ரோடுவிளை யாடவரு சுகமதே பரமசுக மாகும்இந்த
யூகமறி யாமலே தேகம்மிக வாடினீர் உறுசுவைப் பழம்எறிந்தே

உற்றவெறு வாய்மெல்லும் வீணர்நீர் என்றுநல் லோரைநிந் திப்பர்அவர்தம்
வாகைவாய் மதமற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...1

2419

உண்டதே உணவுதான் கண்டதே காட்சிஇதை உற்றறிய மாட்டார்களாய்

உயிருண்டு பாவபுண் ணியமுண்டு வினைகளுண் டுறுபிறவி உண்டுதுன்பத்
தொண்டதே செயுநரக வாதைஉண் டின்பமுறு சொர்க்கமுண் டிவையும்அன்றித்

தொழுகடவுள் உண்டுகதி உண்டென்று சிலர்சொலும் துர்ப்புத்தி யால்உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்துமட மாதர்தம் கொங்கையும் வெறுத்துக்கையில்

கொண்டதீங் கனியைவிட் டந்தரத் தொருபழம் கொள்ளுவீர் என்பர்அந்த
வண்டர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...2

2420

உம்பர்வான் அமுதனைய சொற்களாற் பெரியோர் உரைத்தவாய் மைகளைநாடி

ஓதுகின் றார்தமைக் கண்டவ மதித்தெதிரில் ஒதிபோல நிற்பதுமலால்
கம்பர்வாய் இவர்வாய்க் கதைப்பென்பர் சிறுகருங் காக்கைவாய்க் கத்தல்இவர்வாய்க்

கத்தலில் சிறிதென்பர் சூடேறு நெய்ஒரு கலங்கொள்ள வேண்டும்என்பர்
இம்பர்நாம் கேட்டகதை இதுவெண்பர் அன்றியும் இவர்க்கேது தெரியும்என்பர்

இவைஎலாம் எவனோஓர் வம்பனாம் வீணன்முன் இட்டகட் டென்பர்அந்த
வம்பர்வா யறஒரு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...3

2421

கல்லையும் உருக்கலாம் நார்உரித் திடலாம் கனிந்தகனி யாச்செய்யலாம்

கடுவிடமும் உண்ணலாம் அமுதாக்க லாம்கொடுங் கரடிபுலி சிங்கமுதலா
வெல்லுமிரு கங்களையும் வசமாக்க லாம்அன்றி வித்தையும் கற்பிக்கலாம்

மிக்கவா ழைத்தண்டை விறகாக்க லாம்மணலை மேவுதேர் வடமாக்கலாம்
இல்லையொரு தெய்வம்வே றில்லைஎம் பால்இன்பம் ஈகின்ற பெண்கள்குறியே

எங்கள்குல தெய்வம்எனும் மூடரைத் தேற்றஎனில் எத்துணையும் அரிதரிதுகாண்
வல்லையவர் உணர்வற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...4

2422

படிஅளவு சாம்பலைப் பூசியே சைவம் பழுத்தபழ மோபூசுணைப்

பழமோ எனக்கருங் கல்போலும் அசையாது பாழாகு கின்றார்களோர்
பிடிஅளவு சாதமும் கொள்ளார்கள் அல்லதொரு பெண்ணைஎனி னுங்கொள்கிலார்

பேய்கொண்ட தோஅன்றி நோய்கொண்ட தோபெரும் பித்தேற்ற தோஅறிகிலேன்
செடிஅளவு ஊத்தைவாய்ப் பல்லழுக் கெல்லாம் தெரிந்திடக் காட்டிநகைதான்

செய்துவளை யாப்பெரும் செம்மரத் துண்டுபோல் செம்மாப்பர் அவர்வாய்மதம்
மடிஅளவ தாஒரு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ள 

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...5

2423

பெண்கொண்ட சுகமதே கண்கண்ட பலன்இது பிடிக்கஅறி யாதுசிலர்தாம்

பேர்ஊர் இலாதஒரு வெறுவெளியி லேசுகம் பெறவே விரும்பிவீணில்
பண்கொண்ட உடல்வெளுத் துள்ளே நரம்பெலாம் பசைஅற்று மேல்எழும்பப்

பட்டினி கிடந்துசா கின்றார்கள் ஈதென்ன பாவம்இவர் உண்மைஅறியார்
கண்கொண்ட குருடரே என்றுவாய்ப் பல்எலாங் காட்டிச் சிரித்துநீண்ட

கழுமரக் கட்டைபோல் நிற்பார்கள் ஐயஇக் கயவர்வாய் மதமுழுதுமே
மண்கொண்டு போகஓர் மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...6

2424

திருத்தம்உடை யோர்கருணை யால்இந்த உலகில் தியங்குவீர் அழியாச்சுகம்

சேருலக மாம்பரம பதம்அதனை அடையும்நெறி சேரவா ருங்கள்என்றால்
இருத்தினிய சுவைஉணவு வேண்டும்அணி ஆடைதரும் இடம்வேண்டும் இவைகள் எல்லாம்

இல்லையா யினும்இரவு பகல்என்ப தறியாமல் இறுகப்பி டித்தணைக்கப்
பெருத்தமுலை யோடிளம் பருவமுடன் அழகுடைய பெண்ணகப் படுமாகிலோ

பேசிடீர் அப்பரம பதநாட்டி னுக்குநும் பிறகிதோ வருவம்என்பார்
வருத்தும்அவர் உறவற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரி அன்பர்பவ ரோகமற< ௅ே௷ந௅௲ ா஢ூி஡ா஧௉. ...7

2425

பேதைஉல கீர்விரதம் ஏதுதவம் ஏதுவீண் பேச்சிவை எலாம்வேதனாம்

பித்தன்வாய்ப் பித்தேறு கத்துநூல் கத்திய பெரும்புரட் டாகும்அல்லால்
ஓதைஉறும் உலகா யதத்தினுள உண்மைபோல் ஒருசிறிதும் இல்லைஇல்லை

உள்ளதறி யாதிலவு காத்தகிளி போல்உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதைஉண வாதிவேண் டுவஎலாம் உண்டுநீர் விரைமலர்த் தொடைஆதியா

வேண்டுவ எலாங்கொண்டு மேடைமேல் பெண்களொடு விளையாடு வீர்கள்என்பார்
வாதைஅவர் சார்பற மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...8

2426

ஈனம் பழுத்தமன வாதைஅற நின்னருளை< ற௱஽஢ி௸ ஧௄஡௷ஸ௻ழ௕ீ஡௸

இறைவநின் தோத்திரம் இயம்பிஇரு கண்ணீர் இறைப்பஅது கண்டுநின்று
ஞானம் பழுத்துவிழி யால்ஒழுகு கின்றநீர் நம்உலகில் ஒருவர்அலவே

ஞானிஇவர் யோனிவழி தோன்றியவ ரோஎன நகைப்பர்சும் மாஅழுகிலோ
ஊனம் குழுத்தகண் ணாம்என்பர் உலகத்தில் உயர்பெண்டு சாக்கொடுத்த

ஒருவன்முகம் என்னஇவர் முகம்வாடு கின்றதென உளறுவார் வாய்அடங்க
மானம் பழுத்திடு மருந்தருள்க தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...9

2427

கற்பவை எலாம்கற் றுணர்ந்தபெரி யோர்தமைக் காண்பதே அருமைஅருமை

கற்பதரு மிடியன்இவன் இடைஅடைந் தால்எனக் கருணையால் அவர்வலியவந்
திற்புறன் இருப்பஅது கண்டும்அந் தோகடி தெழுந்துபோய்த் தொழுதுதங்கட்

கியல்உறுதி வேண்டாது கண்கெட்ட குருடர்போல் ஏமாந்தி ருப்பர்இவர்தாம்
பொற்பினறு சுவைஅறியும் அறிவுடையர் அன்றுமேற் புல்லாதி உணும்உயிர்களும்

போன்றிடார் இவர்களைக் கூரைபோய்ப் பாழாம் புறச்சுவர் எனப்புகலலாம்
வற்புறும் படிதரும வழிஓங்கு தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...10

2428

மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை விளம்பஎனில் இவ்வுலகிலோ

மேலுலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு மேவுமண் ணெனினும்உதவக்
கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை களவுகட் காமம்முதலாக்

கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு கனவிலும் கண்டறிகிலார்
ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி அங்கைதாங் கங்கைஎன்னும்

ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ் வசுத்தநீங் காதுகண்டாய்
மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...11

2429

இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர் இலஞ்சிபூம் பொய்கைஅருகாய்

ஏற்றசந் திரகாந்த மேடையாய் அதன்மேல் இலங்குமர மியஅணையுமாய்த்
தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால்போல் தழைத்திடு நிலாக்காலமாய்த்

தனிஇளந் தென்றலாய் நிறைநரம் புளவீணை தன்னிசைப் பாடல்இடமாய்
களவேக லந்தகற் புடையமட வரல்புடை கலந்தநய வார்த்தைஉடனாய்க்

களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடிக் கழல்நிழற் சுகநிகருமே
வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிகா மணிஉலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற வளர்வைத் தியநாதனே. ...12

திருச்சிற்றம்பலம்
-----------------
159. பதினான்கு சீர். ச.மு.க. பதிப்பு.

-----------------


9. நல்ல மருந்து (2430 - 2459)

 புள்ளிருக்குவேளூர் சிந்து
.பல்லவி
2430நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து. ...1
 கண்ணிகள்
2431

அருள்வடி வான மருந்து - நம்முள்

அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்

கின்புரு வாக இருந்த மருந்து. நல்ல ...1

2432

சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்

தானோதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி

தானந்த மாக அமர்ந்த மருந்து. நல்ல ...2

2433

வித்தக மான மருந்து - சதுர்

வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்

தானாக்கிக் கொண்ட தயாள மருந்து. நல்ல . ..3

2434

பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்

பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்

என்று மதுரித் தினிக்கு மருந்து. நல்ல . ..4

2435

நானது வாகு மருந்து - பர

ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோந வடிவா மருந்து - சீவன்

முத்த ருளத்தே முடிக்கு மருந்து. நல்ல ...5

2436

புத்தமு தாகு மருந்து - பார்த்த

போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு

பானமுந் தானாம் பரம மருந்து. நல்ல ...6

2437

மாலயன் தேடு மருந்து - முன்ன

மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
காலனைச் சாய்த்த மருந்து - தேவர்

காணுங் கனவினுங் காணா மருந்து. நல்ல ...7

2438

தற்பர யோக மருந்து - உப

சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்

தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து. நல்ல ...8

2439

அம்பலத் தாடு மருந்து - பர

மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
எம்பல மாகு மருந்து - வேளூர்

என்னுந் தலத்தி லிருக்கு மருந்து. நல்ல ...9

2440

சேதப்ப டாத மருந்து - உண்டால்

தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
பேதப்ப டாத மருந்து - மலைப்

பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து. நல்ல ...10

2441

ஆர்க்கு மரிதா மருந்து - தானே

ஆதி யநாதியு மான மருந்து
சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்

தேடுவோர் தங்களை நாடு மருந்து. நல்ல ...11

2442

புண்ணியர்க் கான மருந்து - பரி

பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம

தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து. நல்ல ...12

2443

பால்வண்ண மாகு மருந்து - அதில்

பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே

நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து. நல்ல ...13

2444

பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்

பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு

கூல மருந்தென்று கொண்ட மருந்து. நல்ல ...14

2445

கோதிலா தோங்கு மருந்து - அன்பர்

கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
மாதொரு பாக மருந்து - என்னை

வாழ்வித்த என்கண் மணியா மருந்து. நல்ல ...15

2446

ஏக வுருவா மருந்து - மிக்க

ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்

சோதியென் றன்பர் துதிக்கு மருந்து. நல்ல ...16

2447

கோமளங் கூடு மருந்து - நலங்

கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை

நாமறி யும்படி நண்ணு மருந்து. நல்ல . ..17

2448

செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்

தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர

நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து. நல்ல ...18

2449

வாய்பிடி யாத மருந்து - மத

வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்

நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து. நல்ல ...19

2450

பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்

பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்

வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து. நல்ல ...20

2451

என்றுங் கெடாத மருந்து - வரும்

எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்

சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து. நல்ல ...21

2452

கண்ணொளி காட்டு மருந்து - அம்மை

கண்டு கலந்து களிக்கு மருந்து
விண்ணொளி யாரு மருந்து - பர

வீடு தருங்கங்கை வேணி மருந்து. நல்ல ...22

2453

காயாம்பூ வண்ண மருந்து - ஒரு

கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
தாயாங் கருணை மருந்து - சிற்

சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து. நல்ல ...23

2454

அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்

அருமை யருமை யருமை மருந்து
உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்

ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து. நல்ல ...24

2455

தன்மய மாகு மருந்து - சிவ

சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
சின்மய ஜோதி மருந்து - அட்ட

சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து. நல்ல ...25

2456

மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை

மறவா தவருள் வழங்கு மருந்து
இறந்தா லெழுப்பு மருந்து - எனக்

கென்றுந் துணையா யிருக்கு மருந்து. நல்ல ...26

2457

கரும்பி லினிக்கு மருந்து - கடுங்

கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
இரும்பைக் குழைக்கு மருந்து - பே

ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து. நல்ல ...27

2458

அணிமணி கண்ட மருந்து - அருள்

ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்

பேசா மருந்தென்று பேசு மருந்து. நல்ல ...28

2459

மூவர்க் கரிய மருந்து - செல்வ

முத்துக் குமாரனை யீன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து - தையல்

நாயகி கண்டு தழுவு மருந்து. ...29

 நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து.

திருச்சிற்றம்பலம்

--------------


10. திருவாரூர்ப் பதிகம் (2460 - 2469)

.அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2460தண்ணார் மதிபோல் சீதளவெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க்
கண்ணார் செல்வச் செருக்கினர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன்
பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருணைக் குரியம்என்றே
எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே. ...1
2461இரங்கா திருந்தால் சிறியேனை யாரே மதிப்பார் இழிந்தமனக்
குரங்கால் அலைப்புண் டலைகின்ற கொடிய பாவி இவன்என்றே
உரங்கா தலித்தோர் சிரிப்பார்நான் உலகத் துயரம் நடிக்கின்ற
அரங்காக் கிடப்பேன் என்செய்வேன் ஆரூர் அமர்ந்த அருமணியே. ...2
2462மணியார் கண்டத் தெண்டோ ள்செவ் வண்ணப் பவள மாமலையே
அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன்
தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன்
திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே. ...3
2463தெரியத் தெரியும் தெரிவுடையார் சிவாநு பவத்தில் சிறக்கின்றார்
பிரியப் பிரியும் பெரும்பாவி அடியேன் பிழையில் பிழைக்கின்றேன்
துரியப் பொருளே அணிஆரூர்ச் சோதி மணிநீ துயெஅருள்
புரியப் பெறுவேன் எனில்அவர்போல் யானும் சுகத்திற் பொலிவேனே. ...4
2464பொலிவேன் கருணை புரிந்தாயேல் போதா னந்தக் கடல்ஆடி
மலிவேன் இன்ப மயமாவேன் ஆரூர் மணிநீ வழங்காயேல்
மெலிவேன் துன்பக் கடல்மூழ்கி மேவி எடுப்பார் இல்லாமல்
நலிவேன் அந்தோ அந்தோநின் நல்ல கருணைக் கழகன்றே. ...5
2465கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய
அருணக் கமல மலரடிக்கே அடிமை விழைந்தேன் அருளாயேல்
வருணக் கொலைமா பாதகனாம் மறையோன் தனக்கு மகிழ்ந்தன்று
தருணக் கருணை அளித்தபுகழ் என்னாம் இந்நாள் சாற்றுகவே. ...6
2466இந்நாள் அடியேன் பிழைத்தபிழை எண்ணி இரங்காய் எனில்அந்தோ
அந்நாள் அடிமை கொண்டனையே பிழையா தொன்றும் அறிந்திலையோ
பொன்னார் கருணைக் கடல்இன்று புதிதோ பிறர்பால் போயிற்றோ
என்நா யகனே திருஆரூர் எந்தாய் உள்ளம் இரங்கிலையே. ...7
2467உள்ளக் கவலை ஒருசிறிதும் ஒருநா ளேனும் ஒழிந்திடவும்
வெள்ளக் கருணை இறையேனும் மேவி யிடவும் பெற்றறியேன்
கள்ளக் குரங்காய் உழல்கின்ற மனத்தேன் எனினும் கடையேனைத்
தள்ளத் தகுமோ திருஆரூர் எந்தாய் எந்தாய் தமியேனே. ...8
2468எந்தாய் ஒருநாள் அருள்வடிவின் எளியேன் கண்டு களிப்படைய
வந்தாய் அந்தோ கடைநாயேன் மறந்து விடுத்தேன் மதிகெட்டேன்
செந்தா மரைத்தாள் இணைஅன்றே சிக்கென் றிறுகப் பிடித்தேனேல்
இந்தார் சடையாய் திருஆரூர்இறைவா துயரற் றிருப்பேனே. ...9
2469இருப்பு மனத்துக் கடைநாயேன் என்செய் வேன்நின் திருவருளாம்
பொருப்பில் அமர்ந்தார் அடியர்எலாம் அந்தோ உலகப் புலைஒழுக்காம்
திருப்பில் சுழன்று நான்ஒருவன் திகைக்கின் றேன்ஓர் துணைகாணேன்
விருப்பில் கருணை புரிவாயோ ஆரூர் தண்ணார் வியன்அமுதே. ...10

திருச்சிற்றம்பலம்

-----------------


11. கண்ணமங்கைத் தாயார் துதி (2470)

 திருக்கண்ணமங்கை
 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2470

உலகம் புரக்கும் பெருமான்தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி

உவகை அளிக்கும் பேரின்ப உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறிவாள் நுதற்கரும்பே தேனே கனிந்த செழுங்கனியே

தெவிட்டா தன்பர் உளத்துள்ளே தித்தித் தெழும்ஓர் தெள்ளமுதே
மலகஞ் சுகத்தேற் கருளளித்த வாழ்வே என்கண் மணியேஎன்

வருத்தந் தவிர்க்க வரும்குருவாம் வடிவே ஞான மணிவிளக்கே
சலகந் தரம்போற் கருணைபொழி தடங்கண் திருவே கணமங்கைத்

தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே. ...1

திருச்சிற்றம்பலம்
-------------------


12. கலைமகள் வாழ்த்து (2471- 2473)

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2471தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே. ...1
2472சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம். ...2
2473கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே. ...3

திருச்சிற்றம்பலம்

----------------


13. பழமலைப் பதிகம் (2474 - 2483)

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2474திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக்
கருமா லகற்றுந் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை
அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக்
குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே. . ..1
2475வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத்
தேனை அளிந்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை
ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே. ...2
2476தவள நிறத்துத் திருநீறு தாங்கு மணித்தோள் தாணுவைநம்
குவளை விழித்தாய் ஒருபுறத்தே குலவ விளங்கும் குருமணியைக்
கவள மதமா கரியுரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
பவள மலையைப் பழமலையிற் பரவி ஏத்திக் கண்டேனே. ...3
2477இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை
வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத்
திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழுந் துரியா தீதமட்டுங்
கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே. ...4
2478மடந்தை மலையாண் மனமகிழ மருவும் பதியைப் பசுபதியை
அடர்ந்த வினையின் தொடக்கைஅறுத் தருளும் அரசை அலைகடன்மேல்
கிடந்த பச்சைப் பெருமலைக்குக் கேடில் அருள்தந் தகம்புறமும்
கடந்த மலையைப் பழமலைமேற் கண்கள் களிக்கக் கண்டேனே. ...5
2479துனியும் பிறவித் தொடுவழக்குஞ் சோர்ந்து விடவுந் துரியவெளிக்
கினியும் பருக்குங் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
பனியுந் திமய மலைப்பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
கனியுஞ் சிலையுங் கலந்தஇடம்(160) எங்கே அங்கே கண்டேனே. ...6
2480கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத்
தருணச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை
வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால்
பொருணச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே. ...7
2481என்னார் உயிரிற் கலந்துகலந் தினிக்கும் கரும்பின் கட்டிதனைப்
பொன்னார் வேணிக் கொழுங்கனியைப் புனிதர்உளத்தில் புகுங் களிப்பைக்
கன்னார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத்தெளிவைப்
பன்னா கப்பூண் அணிமலையைப் பழைய மலையிற் கண்டேனே. ...8
2482நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென்
அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச்
சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே. ...9
2483ஆதி நடுவு முடிவுமிலா அருளா னந்தப் பெருங்கடலை
ஓதி உணர்தற் கரியசிவ யோகத் தெழுந்த ஒருசுகத்தைப்
பாதி யாகி ஒன்றாகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
சோதி மலையைப் பழமலையிற் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே. ...10

திருச்சிற்றம்பலம்
------
160 கனியும் சிலையும் கலந்த இடம் - பழமலை (கனி - பழம். சிலை - மலை)

-----------------------------


14. பழமலையோ கிழமலையோ (2484- 2486)

 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2484

ஆதிமலை அனாதிமலை அன்புமலை எங்கும்

ஆனமலை ஞானமலை ஆனந்த மலைவான்
ஜோதிமலை துரியமலை துரியமுடிக் கப்பால்

தோன்றுமலை தோன்றாத சூதான மலைவெண்
பூதிமலை சுத்த அனு பூதிமலை எல்லாம்

பூத்தமலை வல்லியெனப் புகழுமலை தனையோர்
பாதிமலை முத்தரெலாம் பற்றுமலை என்னும்

பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே. ...1

2485

சாக்கியனார் எறிந்தசிலை சகித்தமலை சித்த

சாந்தர் உளஞ் சார்ந்தோங்கித் தனித்தமலை சபையில்
தூக்கியகா லொடுவிளங்கும் தூயமலை வேதம்

சொன்னமலை சொல்லிறந்த துரியநடு மலைவான்
ஆக்கியளித் தழிக்குமலை அழியாத மலைநல்

அன்பருக்கின் பந்தருமோர் அற்புதப்பொன் மலைநற்
பாக்கியங்க ளெல்லாமும் பழுத்தமலை என்னும்

பழமலையைக் கிழமலையாய்ப் பகருவதென் னுலகே. ...2

 நேரிசை வெண்பா
2486ஆறு விளங்க அணிகிளர்தேர் ஊர்ந்தஉலாப்
பேறு விளங்கஉளம் பெற்றதுமன் - கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறுபுடை ஓங்கும் பழமலையார்
மின்திரண்டு நின்றசடை மேல். ...3

திருச்சிற்றம்பலம்

---------------------------------


15. பெரியநாயகியார் தோத்திரம் (2487- 2489)

 திருவதிகை வீரட்டானம்
 கலிவிருத்தம்
2487உரிய நாயகி யோங்கதி கைப்பதித்
துரிய நாயகி தூயவீ ரட்டற்கே
பிரிய நாயகி பேரருள் நாயகி
பெரிய நாயகி பெற்றியைப் பேசுவாம். ...1
 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2488

உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க

உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே
திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே

சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு
வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன

வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே
அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே

அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே. ...2

2489

தன்னேர் அறியாப் பரவெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்

சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித்தாயே
மின்னே மின்னேர் இடைப்பிடியே விளங்கும் இதய மலர்அனமே

வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இளமயிலே
பொன்னே எல்லாம் வல்லதிரி புரையே பரையே பூரணமே

புனித மான புண்ணியமே பொற்பே கற்ப கப்பூவே
அன்னே முன்னே என்னேயத் தமர்ந்த அதிகை அருட்சிவையே

அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே. ...3

திருச்சிற்றம்பலம்
---------------------------------


16. திருவண்ணாமலைப் பதிகம் (2490 - 2499)

 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2490வளங்கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால்அயன் வழுத்தும்
குளங்கிளர் நுதலும் களங்கிளர் மணியும் குலவுதிண் புயமும்அம் புயத்தின்
தளங்கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்கநீ இருத்தல்கண் டுவத்தல்
உளங்கிளர் அமுதே துளங்குநெஞ் சகனேன் உற்றரு ணையில்பெற அருளே. ...1
2491அன்பர்தம் மனத்தே இன்பமுற் றவைகள் அளித்தவர் களித்திடப் புரியும்
பொன்பொலி மேனிக் கருணையங் கடலே பொய்யனேன் பொய்மைகண் டின்னும்
துன்பமுற் றலையச் செய்திடேல் அருணைத் தொல்நக ரிடத்துன தெழில்கண்
டென்புளம் உருகத் துதித்திடல் வேண்டும் இவ்வரம் எனக்கிவண் அருளே. ...2
2492பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி
ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும்
கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள்
சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே. ...3
2493அருள்பழுத் தோங்கும் ஆனந்தத் தருவே அற்புத அமலநித் தியமே
தெருள்பழுத் தோங்கும் சித்தர்தம் உரிமைச் செல்வமே அருணையந் தேவே
இருள்பழுத் தோங்கும் நெஞ்சினேன் எனினும் என்பிழை பொறுத்துநின் கோயில்
பொருள்பழுத்தோங்கும் சந்நிதி முன்னர்ப்போந்துனைப் போற்றுமாறருளே. ...4
2494மறையும் அம் மறையின் வாய்மையும் ஆகி மன்னிய வள்ளலே மலர்மேல்
இறையும்மா தவனும் இறையும்இன் னவன்என் றெய்திடா இறைவனே அடியேன்
பொறையும்நன் னிறையும் அறிவும்நற் செறிவும் பொருந்திடாப் பொய்யனேன் எனினும்
அறையும்நற் புகழ்சேர் அருணையை விழைந்தேன் அங்கெனை அடைகுவித் தருளே. ...5
2495தேடுவார் தேடும் செல்வமே சிவமே திருஅரு ணாபுரித் தேவே
ஏடுவார் இதழிக் கண்ணிஎங் கோவே எந்தையே எம்பெரு மானே
பாடுவார்க் களிக்கும் பரம்பரப் பொருளே பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
நாடுவார் புகழும் நின்திருக் கோயில் நண்ணுமா எனக்கிவண் அருளே. ...6
2496உலகுயிர் தொறும்நின் றூட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின்
இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண் ணீற்றணி எழிலும்
திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன்
கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே. ...7
2497அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே. ...8
2498கருணையங் கடலே கண்கள்மூன் றுடைய கடவுளே கமலன்மால் அறியா
அருணைஎங் கோவே பரசிவா னந்த அமுதமே அற்புத நிலையே
இருள்நிலம் புகுதா தெனைஎடுத் தாண்ட இன்பமே அன்பர்தம் அன்பே
பொருள்நலம் பெறநின் சந்நிதிக் கெளியேன் போந்துனைப் போற்றும்வா றருளே. ...9
2499ஏதுசெய் திடினும் பொறுத்தருள் புரியும் என்உயிர்க் கொருபெருந் துணையே
தீதுசெய் மனத்தார் தம்முடன் சேராச் செயல்எனக் களித்தஎன் தேவே
வாதுசெய் புலனால் வருந்தல்செய் கின்றேன் வருந்துறா வண்ணம்எற் கருளித்
தாதுசெய் பவன்ஏத் தருணையங் கோயில் சந்நிதிக் கியான்வர அருளே. ...10

திருச்சிற்றம்பலம்
--------------------------


17. அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து

 திருவண்ணாமலை
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2500

திருவிளங்கச் சிவயோக சித்தியெலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவாநுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்கஅரு ளுதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்கருண கிரிவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே. ...1

திருச்சிற்றம்பலம்
------------------------------


18. திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்

 நாற்பத்தெண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்(161)
2501

உலகியலின் உறுமயலின் அடைவுபெறும் எனதிதயம்

ஒளிபெற விளங்குசுடரே
உதயநிறை மதிஅமுத உணவுபெற நிலவுசிவ

யோகநிலை அருளுமலையே
உனதுசெயல் எனதுசெயல் உனதுடைமை எனதுடைமை

உணர்என உணர்த்துநிறைவே
உளஎனவும் இலஎனவும் உரைஉபய வசனம்அற

ஒருமொழியை உதவுநிதியே
ஒன்றுடன் இரண்டெனவி தண்டைஇடும் மிண்டரொடும்

ஒன்றல்அற நின்றநிலையே
உன்னல்அற உன்னுநிலை இன்னதென என்னுடைய

உள்உணர உள்ளுமதியே
உன்நிலையும் என்நிலையும் அன்னியம்இ லைச்சிறிதும்

உற்றறிதி என்றபொருளே
உண்மைநெறி அண்மைதனில் உண்டுளம்ஒ ருங்கில்என

ஓதுமெய்ப் போதநெறியே ...1/4

அலகின்மறை மொழியும்ஒரு பொருளின்முடி பெனஎன

தகந்தெளிய அருள்செய்தெருளே
ஐம்பூதம் ஆதிநீ அல்லைஅத் தத்துவ

அதீதஅறி வென்றஒன்றே
அத்துவா ஆறையும் அகன்றநிலை யாதஃது

அதீதநிலை என்றநன்றே
ஆணைஎம தாணைஎமை அன்றிஒன் றில்லைநீ

அறிதிஎன அருளுமுதலே
அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு

அறிவித்த சுத்தஅறிவே
அத்துவித நிலைதுவித நிலைநின்ற பின்னலது

அடைந்திடா தென்றஇறையே
ஆனந்த மதுசச்சி தானந்த மேஇஃது

அறிந்தடைதி என்றநலமே
அட்டசித் திகளும்நின தேவல்செயும் நீஅவை

அவாவிஇடல் என்றமணியே ....1/2

இலகுபரி பூரண விலாசம்அல திலைஅண்டம்

எங்கணும் எனச்சொல்பதியே
இரவுபகல் அற்றஇடம்அதுசகல கேவலம்

இரண்டின்நடு என்றபரமே
இச்சைமன மாயையே கண்டன எலாம்அவை

இருந்துகாண் என்றதவமே
யான்பிறர் எனும்பேத நடைவிடுத் தென்னோடு

இருத்திஎன உரைசெய்அரைசே
என்களைக ணேஎனது கண்ணேஎன் இருகண்

இலங்குமணி யேஎன்உயிரே
என்உயிர்க் குயிரேஎன் அறிவேஎன் அறிவூடு

இருந்தசிவ மேஎன் அன்பே
என்தெய்வ மேஎனது தந்தையே எனைஈன்று

எடுத்ததா யேஎன்உறவே
என்செல்வ மேஎனது வாழ்வேஎன் இன்பமே

என்அருட் குருவடிவமே 3/4

கலகமனம் உடையஎன் பிழைபொறுத் தாட்கொண்ட

கருணையங் கடல்அமுதமே
காழிதனில் அன்றுசுரர் முனிவர்சித் தர்கள்யோகர்

கருதுசம யாதிபர்களும்
கைகுவித் தருகில்நின் றேத்தமூ வாண்டில்

களித்துமெய்ப் போதம்உண்டு
கனிமதுரம் ஒழுகுசெம் பதிகச்செ ழும்சொன்மழை

கண்ணுதல் பவளமலையில்
கண்டுபொழி அருள்முகில் சம்பந்த வள்ளலாங்

கடவுளே ஓத்தூரினில்
கவினுற விளங்குநற் பணிகள்சிவ புண்ணியக்

கதிஉல கறிந்துய்யவே
கரைஅற்ற மகிழ்வினொடு செய்தருள் புரிந்திடும்

காட்சியே சிவஞானியாம்
கருதவரும் ஒருதிருப் பெயர்கொள்மணியேஎமைக்

காப்பதுன் கடன்என்றுமே. ...1

திருச்சிற்றம்பலம்

----------
161. முற்பதிப்புகள் அனைத்திலும் முப்பத்திரண்டடித் தனி ஆசிரிய விருத்தம் எனக்குறித்திருப்பது பிழை.

--------------------------


19. திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம் (2502- 2505)

 பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2502

அணிவா யுலகத் தம்புயனும் அளிக்குந் தொழிற்பொன் அம்புயனும்

அறியா அருமைத் திருவடியை அடியேந் தரிசித் தகங்குளிர
மணிவாய் மலர்ந்தெம் போல்வார்க்கு மறையுண் முடிபை வகுத்தருள

வயங்குங் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச்சுடரே
பிணிவாய் பிறவிக் கொருமருந்தே பேரா னந்தப் பெருவிருந்தே

பிறங்கு கதியின் அருளாறே பெரியோர் மகிழ்விற் பெரும்பேறே
திணிவாய் எயிற்சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே

தேவர் புகழுஞ் சிவஞானத்தேவே ஞான சிகாமணியே. ...1

2503

நின்பால் அறிவும் நின்செயலும் நீயும் பிறிதன் றெமதருளே

நெடிய விகற்ப உணர்ச்சிகொடு நின்றாய் அதனால் நேர்ந்திலைகாண்
அன்பால் உன்பால் ஒருமொழிதந் தனம்இம் மொழியால் அறிந்தொருங்கி

அளவா அறிவே உருவாக அமரென் றுணர்த்தும் அரும்பொருளே
இன்பால் என்பால் தருதாயில் இனிய கருணை இருங்கடலே

இகத்தும் பரத்தும் துணையாகி என்னுள் இருந்த வியனிறைவே
தென்பால் விளங்குந் திருவோத்தூர் திகழும் மதுரச் செழுங்கனியே

தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே. ...2

2504

அசையும் பரிசாந் தத்துவமன் றவத்தைஅகன்ற அறிவேநீ

ஆகும் அதனை எமதருளால் அலவாம் என்றே உலவாமல்
இசையும் விகற்ப நிலையைஒழித் திருந்த படியே இருந்தறிகாண்

என்றென் உணர்வைத் தெளித்தநினக் கென்னே கைம்மா றறியேனே
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்பால் நண்ணும் துணையே நன்னெறியே

நான்தான் என்னல் அறத்திகழ்ந்து நாளும் ஓங்கு நடுநிலையே
திசையும் புவியும் புகழோத்தூர்ச் சீர்கொள் மதுரச் செழும்பாகே

தேவர் புகழுஞ் சிவஞானத் தேவே ஞான சிகாமணியே. ...3

2505

கண்மூன் றுடையான் எவன்அவனே கடவுள் அவன்தன் கருணைஒன்றே

கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக்கருத்தை
மண்மூன் றறக்கொண் டிருந்தவரே வானோர் வணங்கும் அருந்தவராம் ...4

 

... ... ... ... ... ... ... ...

... ... ... ... ... ... (162)

திருச்சிற்றம்பலம்
----------
162. நான்காம் பாவின் பிற்பாதியும் 5,6,7,8 ஆம் பாக்களும் கிடைக்கவில்லை.

-------------------------------


20. திருமுகப் பாசுரம் (2506)

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2506திருத்தகுசீர்த் தமிழ்மறைக்கே முதலாய வாக்கதனால் திருப்பேர் கொண்டு
கருத்தர்நம தேகம்பக் கடவுளையுட் புறங்கண்டு களிக்கின் றோய்நின்
உருத்தகுசே வடிக்கடியேன் ஒருகோடிதெண்டனிட்டே உரைக்கின்றேன்உன்
கருத்தறியேன் எனினு(முனைக்) கொடு(முயல்வேன் றனை)யன்பால் காக்க அன்றே.(163)

திருச்சிற்றம்பலம்
-------------
163. அடைப்புக்குள் உள்ளவை மூலத்தில் எழுத்து விளங்கா இடங்களில் ஆ. பா. ஊகித்து அமைத்த சொற்கள்.

------------------------------


21. சிங்கபுரிக் கந்தர் பதிகம்(164) (2507 - 2517)

 காப்பு
 நேரிசை வெண்பா
2507பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்அறு மாமுகன்மேல்
நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின்
மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள்
பொய்யகலப் போற்றுவம்இப் போது. ...1
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2508சீராரு மறையொழுக்கந் தவிராது நான்மரபு சிறக்க வாழும்
ஏராரு நிதிபதிஇந் திரன்புரமும் மிகநாணும் எழிலின் மிக்க
வாராருங் கொங்கையர்கள் மணவாளர் உடன்கூடி வாழ்த்த நாளும்
தேராரு நெடுவீதிச் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...1
2509உம்பர்துயர் கயிலைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
தம்பொருவில் முகமாறு கொண்டுநுதல் ஈன்றபொறி சரவ ணத்தில்
நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய்
திங்கள்தவழ் மதில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...2
2510பொல்லாத சூர்க்கிளையைத் தடிந்தமரர் படுந்துயரப் புன்மை நீக்கும்
வல்லானே எனதுபிணி நீநினைந்தால் ஒருகணத்தில் மாறி டாதோ
கல்லாதேன் எனினும்எனை இகழாதே நினதடியார் கழகங் கூட்டாய்
செல்லாதார் வலிஅடக்கும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...3
2511பண்டுறுசங் கப்புலவர் அருஞ்சிறையைத் தவிர்த்தருளும் பகவ னேஎன்
புண்தருஇந் நோய்தணிக்கப் புரையிலியோய் யான்செய்யும் புன்மை தானோ
தண்டைஎழில் கிண்கிணிசேர் சரணமலர்க் கனுதினமும் தமியேன் அன்பாய்த்
தெண்டனிடச் செய்தருள்வாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...4
2512தாவாத வசியர்குலப் பெண்ணினுக்கோர் கரமளித்த சதுரன் அன்றே
மூவாத மறைபுகலும் மொழிகேட்டுன் முண்டகத்தாள் முறையில் தாழ்ந்து
தேவாதி தேவன்எனப் பலராலும் துதிபுரிந்து சிறப்பின் மிக்க
தீவாய்இப் பிணிதொலைப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...5
2513வானவர்கோன் மேனாளில் தரமறியா திகழ்ந்துவிட விரைவில் சென்று
மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள்
தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத்
தேனவிழும் பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...6
2514மட்டாரும் பொழில்சேரும் பரங்கிரிசெந் தூர்பழனி மருவு சாமி
நட்டாரும் பணிபுரியும் ஆறுதலை மலைமுதலாய் நணுகி எங்கள்
ஒட்டாதார் வலிஅடக்கி அன்பர்துதி ஏற்றருளும் ஒருவ காவாய்
தெட்டாதார்க் கருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. . ..7
2515முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும்
புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
என்செயலில் இரவுபகல் ஒழியாமல் போற்றியிட இரங்கா தென்னே
தென்திசைசேர்ந் தருள்புரியும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...8
2516விண்ணவர்கோன் அருந்துயர நீங்கிடவும் மாதுதவ விளைவு நல்கும்
கண்ணகன்ற பேரருளின் கருணையினால் குஞ்சரியைக் காத லோடு
மண்ணுலகோர் முதல்உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம்புரிந்த வள்ள லேஎன்
திண்ணியதீ வினைஒழிப்பாய் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...9
2517மாசகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
ஆசில்தவப் பேறளிக்க வள்ளிமலை தனைச்சார்ந்தே அங்குக் கூடி
நேசமிகு மணம்புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
தேசுலவு பொழில்சூழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. ...10

திருச்சிற்றம்பலம்

164. இப்பதிக வரலாறு பின்குறித்தபடி ஓர் நோட்டு பிரதியில் காணப்படுகிறது: "இஃது ரக்தாக்ஷி ளூ சித்திரை மாதம் 26 * சுக்கிரவாரம் கார்த்திகை நக்ஷத்திரம் சோதரர் சபாபதி பிள்ளையின் ரோக நிவாரணார்த்தம் சி . இராமலிங்க பிள்ளையவர் களாலியற்றியது." * 6 - 5 1864 _ ஆ. பா.

---------


22. சித்தி விநாயகர் பதிகம் (2518 - 2529)

 காப்பு
 நேரிசை வெண்பா
2518அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் - அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை. ...1
2519வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
நாதாகா வண்ண நலங்கொள்வான் - போதார்
வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
இனங்காத் தருளாய் எனை. ...2
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2520உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...3
2521உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச்சுரனே. ...4
2522நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...5
2523சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...6
2524ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...7
2525சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...8
2526மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...9
2527கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...10
2528கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...11
2529பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே. ...12

திருச்சிற்றம்பலம்

-------------------------


23. வல்லபை கணேசர் பிரசாத மாலை (2530 - 2540)

>

 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2530திருநெடு மால்அன் றால்இடை நினது சேவடித் துணைமலர்த் துகளான்
பெருநெடு மேனி தனிற்படப்(165) பாம்பின் பேருரு அகன்றமை மறவேன்
கருநெடுங் கடலைக் கடத்து(166) நற் றுணையே கண்கள்மூன் றுடையசெங் கரும்பே
வருநெடு மருப்பொன் றிலகுவா ரணமே வல்லபைக் கணேசமா மணியே. ...1
2531நளினமா மலர்வாழ் நான்முகத் தொருவன் நண்ணிநின் துணையடிவழுத்திக்
களிநலன் உடன் இவ்வுலகெலாம்படைக்கக்கடைக்கணித்ததைஉளம்மறவேன்
அளிநலன் உறுபே ரானந்தக் கடலே அருமருந் தேஅருள் அமுதே
வளிநிறை உலகுக் கொருபெருந் துணையே வல்லபைக் கணேசமா மணியே. ...2
2532சீர்உருத் திரமூர்த் திகட்குமுத் தொழிலும் செய்தருள் இறைமைதந் தருளில்
பேர்உருத் திரங்கொண் டிடச்செயும் நினது பெருமையை நாள்தொறும் மறவேன்
ஆர்உருத் திடினும் அஞ்சுதல் செய்யா ஆண்மைஎற் கருளிய அரசே
வார்உருத் திடுபூண் மணிமுகக் கொங்கை வல்லபைக் கணேசமா மணியே. ...3
2533விண்ணவர் புகழும் மெய்கண்ட நாதன் வித்தகக் கபிலன்ஆ தியர்க்கே
கண்அருள் செயும்நின் பெருமையை அடியேன் கனவிலும் நனவிலும் மறவேன்
தண்அருட் கடலே அருட்சிவ போக சாரமே சராசர நிறைவே
வண்ணமா மேனிப் பரசிவ களிறே வல்லபைக் கணேசமா மணியே. ...4
2534நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே. ...5
2535கும்பமா முனியின் கரகநீர் கவிழ்த்துக் குளிர்மலர் நந்தனம் காத்துச்
செம்பொன்நாட் டிறைவற் கருளிய நினது திருவருட் பெருமையை மறவேன்
நம்பனார்க் கினிய அருள்மகப் பேறே நற்குணத் தோர்பெரு வாழ்வே
வம்பறா மலர்த்தார் மழைமுகில் கூந்தல் வல்லபைக் கணேசமா மணியே. ...6
2536அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே
இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன்
பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே
வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே. ...7
2537முன்அருந் தவத்தோன் முற்கலன் முதலா முனிவர்கள் இனிதுவீ டடைய
இன்னருள் புரியும் நின்அருட் பெருமை இரவினும் பகலினும் மறவேன்
என்அரும் பொருளே என்உயிர்க் குயிரே என்அர சேஎன துறவே
மன்அரு நெறியில் மன்னிய அறிவே வல்லபைக் கணேசமா மணியே. ...8
2538துதிபெறும் காசி நகரிடத் தனந்தம் தூயநல் உருவுகொண் டாங்கண்
விதிபெறும் மனைகள் தொறும்விருந் தினனாய் மேவிய கருணையை மறவேன்
நதிபெறும் சடிலப் பவளநற் குன்றே நான்மறை நாடரு நலமே
மதிபெறும் உளத்தில் பதிபெறும் சிவமே வல்லபைக் கணேசமா மணியே. ...9
2539தடக்கைமா முகமும் முக்கணும் பவளச் சடிலமும் சதுர்ப்புயங் களும்கை
இடக்கைஅங் குசமும் பாசமும் பதமும் இறைப்பொழு தேனும்யான் மறவேன்
விடக்களம் உடைய வித்தகப் பெருமான் மிகமகிழ்ந் திடஅருட் பேறே
மடக்கொடி நங்கை மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே. ...10
2540பெருவயல் ஆறு முகன்நகல் அமர்ந்துன் பெருமைகள் பேசிடத் தினமும்
திருவளர் மேன்மைத் திறமுறச் சூழும் திருவருட் பெருமையை மறவேன்
மருவளர் தெய்வக் கற்பக மலரே மனமொழி கடந்தவான் பொருளே
வருமலை வல்லிக் கொருமுதற் பேறே வல்லபைக் கணேசமா மணியே. ...11

திருச்சிற்றம்பலம்

165. தளிர்பட - தொ. வே.
166. கடற்று - தொ. வே.
--------------


24. கணேசத் திருஅருள் மாலை

 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 திருச்சிற்றம்பலம்
2541திருவும் கல்வியும் சீரும்சி றப்பும்உன் திருவ டிப்புகழ் பாடுந்தி றமும்நல்
உருவும் சீலமும் ஊக்கமும் தாழ்வுறா உணர்வும் தந்தென துள்ளத்த மர்ந்தவா
குருவும்தெய்வமும் ஆகிஅன் பாளர்தம் குறைதவிர்க்கும்குணப்பெருங்குன்றமே
வெருவும் சிந்தைவி லகக்க ஜானனம் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...1
2542சீத நாள்மலர்ச் செல்வனும் மாமலர்ச் செல்வி மார்பகச் செல்வனும் காண்கிலாப்
பாதம் நாடொறும் பற்றறப் பற்றுவோர் பாதம் நாடப் பரிந்தருள் பாலிப்பாய்
நாதம் நாடிய அந்தத்தில் ஓங்கும்மெய்ஞ் ஞான நாடக நாயக நான்கெனும்
வேதம் நாடிய மெய்பொரு ளேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...2
2543என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத் தாங்கிக் கொள்ளும்சரன்பிறி தில்லைகாண்
அன்னைவேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன் அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...3
2544நீண்ட மால்அர வாகிக்கி டந்துநின் நேயத் தால்கலி நீங்கிய வாறுகேட்
டாண்ட வாநின்அ டைக்கலம் ஆயினேன் அடியனேன்பிழை ஆயிர மும்பொறுத்
தீண்ட வாவின்ப டிகொடுத்தென்னைநீஏன்றுகொள்வதற்கெண்ணு தியாவரும்
வேண்டு வாழ்வுத ரும்பெருந் தெய்வமே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...4
2545தஞ்சம் என்றுனைச் சார்ந்தனன் எந்தைநீ தானும் இந்தச்ச கத்தவர் போலவே
வஞ்சம் எண்ணி இருந்திடில் என் செய்வேன் வஞ்சம் அற்றம னத்துறை அண்ணலே
பஞ்ச பாதகம் தீர்த்தனை என்றுநின் பாத பங்கயம் பற்றினன் பாவியேன்
விஞ்ச நல்லருள் வேண்டித்த ருதியோ விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...5
2546கள்ள நெஞ்சகன் ஆயினும் ஐயநான் கள்ளம் இன்றிக்க ழறுகின் றேன்என
துள்ளம் நின்திரு வுள்ளம்அ றியுமே ஓது கின்றதென் போதுக ழித்திடேல்
வள்ள மாமலர்ப் பாதப்பெ ரும்புகழ் வாழ்த்தி நாத்தழும் பேறவ ழங்குவாய்
வெள்ள வேணிப்பெ ருந்தகை யேஅருள் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...6
2547மண்ணில் ஆசைம யக்கற வேண்டிய மாத வர்க்கும்ம திப்பரி யாய்உனை
எண்ணி லாச்சிறி யேனையும் முன்நின்றே ஏன்று கொண்டனை இன்றுவி டுத்தியோ
உண்ணி லாவிய நின்திரு வுள்ளமும் உவகை(167) யோடுவர்ப் பும்கொள ஒண்ணுமோ
வெண்ணி லாமுடிப் புண்ணியமூர்த்தியே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...7
2548ஆணி லேஅன்றி ஆருயிர்ப் பெண்ணிலே அலியி லேஇவ்வ டியனைப் போலவே
காணி லேன்ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்க டையனை மாயையாம்(168)
ஏணி லேஇடர் எய்தவி டுத்தியேல் என்செய் கேன்இனி இவ்வுல கத்திலே
வீணி லே உழைப் பேன்அருள் ஐயனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...8
2549வாளி லேவிழி மங்கையர் கொங்கையாம் மலையி லேமுக மாயத்தி லேஅவர்
தோளி லே இடைச் சூழலி லேஉந்திச் சுழியி லேநிதம் சுற்றும்என் நெஞ்சம்நின்
தாளி லேநின்த னித்தபு கழிலே தங்கும் வண்ணம் தரஉளம் செய்தியோ
வேளி லேஅழ கானசெவ் வேளின்முன் விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...9
2550நாவி னால்உனை நாள்தொறும் பாடுவார் நாடு வார் தமை நண்ணிப்பு கழவும்
ஓவி லாதுனைப் பாடவும் துன்பெலாம் ஓடவும்மகிழ் ஓங்கவும் செய்குவாய்
காவி நேர்களத் தான்மகிழ் ஐங்கரக் கடவுளேநற்க ருங்குழி என்னும்ஊர்
மேவி அன்பர்க்க ருள்கண நாதனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே. ...10

திருச்சிற்றம்பலம்

167. ஆசை - தொ. வே. பதிப்பு
168. ஆளையா - தொ. வே.பதிப்பு
-----------


25. கணேசத் தனித் திருமாலை

 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2551திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கைவல் லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி. ...1
 கலிவண்ணத் துறை
2552உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே. ...2
2553அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ
அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே. ...3
 எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2554கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்
நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையைஅருள் புரியும்அதிபதியாம்
விமலபிர ணவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயஎனும் எமதுகண பதியே. ...4
 கட்டளைக் கலித்துறை
2555அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக்
கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபை யோடு வயங்கியவெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே. ...5
2556திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இருமா தவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குருமா மலர்ப்பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே. ...6

திருச்சிற்றம்பலம்

--------------------------


26.தெய்வத் தனித் திருமாலை (2557 - 2563)

 வஞ்சித்துறை
2557ஐங்கரன் அடிமலர்
இங்குற நினைதிநின்
பொங்குறு துயரறும்
மங்கலின் மனனனே. ...1
 குறள் வெண்செந்துறை
2558திருமால் அறியாச் சேவடி யாலென்
கருமால் அறுக்குங் கணபதி சரணம். ...2
 கலிவிருத்தம்
2559துதிபெறு கணபதி இணையடி மலரும்
பதிதரு சரவண பவன்மல ரடியுங்
கதிதரு பரசிவன்இயலணி கழலும்
மதியுற மனனிடை மருவுது மிகவே. ...3
2560அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும்
பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும்
தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும்
மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம். ...4
2561அற்புதக் கணபதி அமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவமகா தேவ போற்றியே
பொற்பமர் கௌரிநிற் போற்றி போற்றியே. ...5
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2562மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி
ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி
தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி
சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி. ...6
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2563

கலைநிறை கணபதி சரணஞ் சரணம்

கஜமுக குணபதி சரணஞ் சரணம்
தலைவநின் இணையடி சரணஞ் சரணம்

சரவண பவகுக சரணஞ் சரணம்
சிலைமலை யுடையவ சரணஞ் சரணம்

சிவசிவ சிவசிவ சரணஞ் சரணம்
உலைவறும் ஒருபரை சரணஞ் சரணம்

உமைசிவை அம்பிகை சரணஞ் சரணம். ... 7

திருச்சிற்றம்பலம் 
---------------


27.மங்களம்

 சிந்து
2564புங்கவர் புகழுமாதங்கமு கந்திகழ்
எங்கள் கணேசராந் துங்கற்கு-மங்களம். ...1
2565போதந் திகழ்பர நாதந் தனில்நின்ற
நீதராஞ் சண்முக நாதற்கு -மங்களம். ...2
2566பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை
ஈசர் எமதுநட ராஜற்கு -மங்களம். ...3
2567பூமி புகழ்குரு சாமி தனைஈன்ற
வாமி எனுஞ்சிவ காமிக்கு - மங்களம். ...4
2568புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும்
செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம். ...5
2569பூணி லங்குந்தன வாணி பரம்பர
வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம். ...6
2570புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம்
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம். ...7

மூன்றாம் அருட்பா முற்றிற்று.

Related Content

Ramalingam Swamigal

Thiruvarutpa of ramalinga adikal (aka vallalar) - Part-II (v

Thiruvarutpayan of Umapathisivam - G U Pope

Thiruvarutpayan Of Umapathisivam - English Explanation By Mr

Thiruvasagam Part-1 - Romanized version