logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

தண்டலையார் சதகம்

ThandalaiyAr Sadhakam

ஆசிரியர்: படிக்காசுப் புலவர்

தண்டலை நீணெறி இறைவர் மீது பாடப்பெற்றது.

விநாயகர் 


சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத்

     தில்லை வாழும்

கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்

     கருத்துள் வைப்பாம்

பேர்கொண்ட ஞானநாயகி பாகன் தண்டலை எம்

     பெருமான் மீதில்

ஏர்கொண்ட நவகண்டம் இசைந்த பழமொழி விளக்கம்

     இயம்பத் தானே.

 

            காப்பு - 2

 

வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல்

        விளம்பியசொல் மிகு புராணம்

ஏதுவினில் காட்டிய சொல் இலக்கணச்சொல்

        இசைந்த பொருள் எல்லாம் நாடி,

ஆதிமுதல் உலகு அதனில் விளங்கு பழமொழி

        விளக்கம் அறிந்து பாடச்

சோதிபெறும் மதவேழ முகத்து ஒருவன்

        அகத்து எனக்குத் துணை செய்வானே.

 

 அவை அடக்கம்

 

வள்ளுவர் நூல் ஆதி பல நூலில் உள

         அரும்பொருளை வண்மையாக

உள்ளபடி தெரிந்து உணர்ந்த பெரியவர்கள்

         முன் நானும் ஒருவன் போலப்

பள்ள முதுநீர் உலகில் பரவு பழமொழி

         விளக்கம் பரிந்து கூறல்

வெள்ளை மதியினன் கொல்லத் தெரு அதனில்

         ஊசி விற்கும் வினையது ஆமே.

 

நூல்

 

1.  திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும்

 

வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்

   உள்புகுந்து வலமாய் வந்தே

ஒரு விளக்கு ஆயினும் பசுவின் நெய்யுடன் தாமரை

   நூலின் ஒளிர வைத்தால்

கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!

   கைலாசம் காணி ஆகும்!

திரு விளக்கிட்டார் தமையே தெய்வம் அளித்திடும்!

   வினையும் தீரும் தானே!

 

               

2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

 

கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்

   கருணைசெய்து, கோடி கோடி

யான்செய்த வினை அகற்றி நன்மைசெய்தால்

   உபகாரம் என்னால் உண்டோ?

ஊன்செய்த உயிர் வளரத் தவம்தானம்

   நடந்தேற உதவியாக

வான்செய்த நன்றிக்கு வையகம்என்

   செய்யும்? அதை மறந்திடாதே.

               

3.      இட்டபடியே

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்

   பாதாளம் அதில் சென்றாலும்

பட்டம் என வான் ஊடு பறந்தாலும்

   என்ன? அதில் பயன் உண்டாமோ?

பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரே!

   முன்னாள் பெரியோர் கையில்

இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்

   படின் வருவது இல்லை தானே.

 

               

4.  நன்மை செய்தால் நலம் பெறுவர்

 

தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்

   நெறியாரே தயவு செய்வார்!

வன்ம வினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்

   பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம்;

கன்ம நெறி வரல்வேண்டாம் : வேண்டுவது

   பலர்க்கும் உபகாரம் ஆகும் :

நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்

   தீமை பெற்று நலிவர் தாமே.

               

5.    இல்லறமும் துறவறமும்

 

புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார்

   வளம் தழைத்த பொன்னி நாட்டில்,

சொல் அற மாதவம் புரியும் சௌபரியும்

   துறவறத்தைத் துறந்து மீண்டான்!

நல் அறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை

   மனைவியுடன் நடத்தி நின்றான்!

இல்லறமே பெரிதாகும்! துறவறமும்

   பழிப்பு இன்றேல் எழில் அது ஆமே!

               

6.   கொக்கு எனவே நினைத்தனையோ?

 

முக்கணர் தண்டலை நாட்டில் கற்புடை மங்கையர்

   மகிமை மொழியப் போமோ!

ஒக்கும் எரி குளிர வைத்தாள் ஒருத்தி! வில்வேடனை

   எரித்தாள் ஒருத்தி! மூவர்

பக்கம்உற அமுது அளித்தாள் ஒருத்தி! எழு

   பரி தடுத்தாள் ஒருத்தி! பண்டு

‘கொக்கு எனவே நினைத்தனையோ? கொங்கணவா!'

   என்று ஒருத்தி கூறினாளே!

               

7.   பன்றி பல ஈன்றும் என்ன?

 

நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்

   குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றி அறிவு இல்லாத பிள்ளை ஒரு

   நூறு பெற்றும் ஆவது உண்டோ?

மன்றில் நடம் புரிவாரே! தண்டலையாரே!

   சொன்னேன்! வருடம் தோறும்

பன்றி பல ஈன்றும் என்ன ? குஞ்சரம் ஒன்று

   ஈன்றதனால் பயன் உண்டாமே;

               

8.  நல்லது நாயகனுக்கு

 

அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர்

   அன்பால் ஈந்தார்!

கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன்அமுதைக்

   கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!

சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும்

   ஒரு தொண்டர் ஈந்தார்!

நல்லது கண்டால் பெரியோர் நாயகனுக்கு

   என்று அதனை நல்கு வாரே.

               

9.   விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

 

திரு இருந்த தண்டலையார் வளநாட்டில்

   இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்

ஒரு விருந்தாயினும் இன்றி உண்ட பகல்

   பகலாமோ? உறவாய் வந்த

பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி

   இன்னும் எங்கே பெரியோர் என்று

வரு விருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது

   உணும் சோறு மருந்து தானே.

               

10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

 

பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும்

   கொடுப்பது என்ன பொருளோ? என்று

நன் கமல முகம் மலர்ந்தே உபசாரம்

   மிக்க இன்சொல் நடத்தல் நன்றே;

கல் கரையும் மொழிபாகர் தண்டலையார்

   வளநாட்டில் கரும்பின் வேய்ந்த

சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி

   பொழிந்துவிடும் தன்மை தானே!

 

11.    எறும்பு எண்ணாயிரம்

 

குறும்பு எண்ணாது உயர்ந்த நல்லோர் ஆயிரம் சொன்னாலும்

   அதைக் குறிக்கொளாமல்

வெறும் பெண்ணாசையில் சுழல்வேன் மெய்ஞ்ஞானம்

   பொருந்தி உனை வேண்டேன்! அந்தோ!

உறும் பெண்ணார் அமுது இடம்சேர் தண்டலைநீள்

   நெறியே! என் உண்மை தேரில்

‘எறும்பு எண்ணாயிரம் அப்பா! கழுதையும் கை

   கடந்தது எனும்' எண்ணம் தானே!

 

               

12. தினை அளவு பனை அளவாகும்!

 

துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்

   பெரிது ஆகும் தோற்றம் போலச்

செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி

   பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்!

கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்

   வளநாட்டில் கொஞ்ச மேனும்

உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்

   நினைக்கும் இந்த உலகம் தானே!

               

13.    காட்டுக்கே எறித்த நிலா!

 

மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே

   செய்த நன்றி, மேயும் பட்டி

மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே

   தேடிஇட்ட வண்மை எல்லாம்

பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்

   வீதிதொறும் பரப்பி டாமல்

காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே

   பெய்த மழை கடுக்கும் தானே!

               

14.   கங்கையிலே படர்ந்தாலும்....

 

சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும்

   பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும்

அங்கண் உலகினில் சிறியோர் தாம் அடங்கி

   நடந்து கதி அடைய மாட்டார்!

திங்கள் அணி சடையாரே! தண்டலையாரே!

   சொன்னேன் சிறிது காலம்

கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய்

   நல்ல சுரைக்காய் ஆகாதே!

               

15. மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லை

 

உழை இட்ட விழிமடவார் உறவு விட்டும்

   வெகுளி விட்டும் உலக வாழ்வில்

பிழைவிட்டும் இன்னம்இன்னம் ஆசைவிடாது

   அலக்கு அழியப் பெற்றேன்! அந்தோ!

தழை இட்ட கொன்றைபுனை தண்டலைநீள்

   நெறியே! என் தன்மை எல்லாம்

மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்

   இருந்த வண்மை தானே.

               

16.    துர்ச்சனப் பிள்ளைக்கு...

 

கொச்சையில் பிள்ளைக்கு உதவும் தண்டலையார்

   வளநாட்டில் கொடிதாய் வந்த

வச்சிரப் பிள்ளைக்கு முனம் மாதவனே

   புத்தி சொன்னான்! வகையும் சொன்னான்!

அச்சுதப் பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே

   புத்தி சொன்னார்! ஆதலாலே

துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்

   என்றே சொல்லுவாரே!

               

17.   பொறுத்தவரே அரசு ஆள்வார்

 

கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார்

   வளநாட்டில் கடிய தீயோர்

குறித்து மனையாள் அரையில் துகில் உரிந்தும்

   ஐவர் மனம் கோபித்தாரோ!

பறித்து உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்

   அடித்தாலும் பழி செய்தாலும்

பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்

   காடாளப் போவார் தாமே.

               

18.   பிள்ளை பெற்றார்தமைப் பார்த்து...

 

அள்ளித் தெள் நீறு அணியும் தண்டலையார்

   வளநாட்டில் ஆண்மை உள்ளோர்,

விள் உற்ற கல்வி உள்ளோர், செல்வம் உள்ளோர்,

   அழகு உடையோர் மேன்மை நோக்கி

உள்ளத்தில் அழன்று அழன்று நமக் கு இல்லை

   என உரைத்து இங் கு உழல்வார் எல்லாம்

பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து இருந்து

   பெருமூச்சு எறியும் பெற்றியாரே.

               

19.    எண்ணம் எல்லாம் பொய் ஆகும்

 

மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்

   ஆசை வைப்பார், வலிமை செய்வார்,

புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்

   அலக்கு அழிந்து புரண்டே போவார்;

பண் உலவு மொழிபாகர் தண்டலையார்

   வகுத்த விதிப்படி அல்லாமல்

எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே

   மெய் ஆகும் இயற்கை தானே!

               

20.   சொன்னதைச் சொல்லும் இளங் கிள்ளை

 

சொன்னத்தைச் சொல்லும் இளங் கிள்ளை என்பார்

   தண்டலையார் தொண்டு பேணி

இன்னத்துக்கு இன்னது என்னும் பகுத்தறிவு ஒன்று

   இல்லாத ஈனர் எல்லாம்

தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்

   முறைபேசிச் சாடை பேசி

முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய்

   நடந்து மொழிவர் தாமே.

 

21.    விடியல்மட்டும் மழைபெயினும்

 

கொடியருக்கு நல்ல புத்தி சொன்னாலும்

   தெரியாது! கொடை இல்லாத

மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்

   அவர் கொடுக்க மாட்டார் கண்டீர்!

படிஅளக்கும் தண்டலைநீள் நெறியாரே!

   உலகம் எலாம் பரவி மூடி

விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்

   குச்சில் முளை வீசிடாதே!

 

               

22.    தன்பாவம் தன்னோடு

 

செங்காவி மலர்த்தடம் சூழ் தண்டலைநீள்

   நெறியே! நின் செயல் உண்டாகில்

எங்காகில் என்ன? அவர் எண்ணியது எல்லாம்

   முடியும்! இல்லை யாகில்,

பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்

   வெள் எலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

   தன்னுடனே ஆகும் தானே.

 

               

23.    நாய் அறியாது...

 

தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்

   நெறிநாதர் தாமே தந்தை

யாய் அறிவார் எமது அருமை! பரவையிடம்

   தூது சென்றது அறிந்திடாரோ?

பேய் அறிவார் முழுமூடர்! தமிழ் அருமை

   அறிவாரோ? பேசுவாரோ?

நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்

   அந்த நியாயம் தானே!

 

               

24. எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்?

 

கட்டு மாங்கனி வாழைக்கனி பலவின்

   கனிகள் உபகாரம் ஆகும்;

சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளை எல்லாம்

   இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்

மட்டுலவும் சடையாரே! தண்டலையாரே!

   சொன்னேன்! வனங்கள் தோறும்

எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்

   வாழ்ந்தாலும் என் உண்டாமே?

 

               

25.   காதவழி பேரில்லான்......

 

ஓது அரிய தண்டலையார் அடிபணிந்து

   நல்லவன் என்று உலகம் எல்லாம்

போதம் மிகும் பேருடனே புகழ்படைத்து

   வாழ்பவனே புருடன் அல்லால்

ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த

   பூதம் என இருந்தால் என்ன?

காதவழி பேர் இல்லான் கழுதையோடு

   ஒக்கும் எனக் காணலாமே!

 

               

26.   செவிடன் காதினில் சங்கு குறித்தல்

 

பரியாமல் இடும்சோறும் ஊமைகண்ட

   கனவும் ஒன்றும் பரிசில் ஈயான்

அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்

   இல்லாதான் அறிவுமேதான்

கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்

   நெறியாரே! கதித்த ஓசை

தெரியாத செவிடன் காதினில் சங்கு

   குறித்தது எனச் செப்பலாமே.

 

               

27.    மன்னுயிர்க்கு இரங்குவது

 

முன் அரிய மறை வழங்கும் தண்டலையார்

   ஆகமத்தின் மொழி கேளாமல்

பின் உயிரை வதைத்தவனும், கொன்றவனும்

   குறைத்தவனும், பேருளோனும்,

அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்

   நரகு உறுவர்; ஆதலாலே

தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு

   இரங்குவது தக்க தாமே.

 

 

               

28.    குளிர் காய நேரம் இல்லை!

 

உரு எடுத்த நாள்முதலா ஒருசாணும்

   வளர்க்க உடல் உழல்வது அல்லால்

மரு இருக்கும் நின்பாத மலர்தேடித்

   தினம் பணிய மாட்டேன்! அந்தோ!

திரு இருக்கும் மணி மாடத் தண்டலைநீள்

   நெறியே! என் செய்தி எல்லாம்

சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய

   நேரம் இல்லாத் தன்மை தானே!

 

               

29.   உருத்திராக்கப் பூனை!

 

காதிலே திருவேடம்! கையிலே

   செபமாலை! கழுத்தின் மார்பின்

மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே

   கரவடம்ஆம் வேடம் ஆமோ?

வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்

   நெறியாரே! மனிதர் காணும்

போதிலே மௌனம்! இராப் போதிலே

   ருத்திராக்கப் பூனை தானே!

 

31.  பொய் சொல்லி வாழ்வது இல்லை

 

கைசொல்லும் பனைகாட்டும் களிற்று உரியார்

   தண்டலையைக் காணார் போலப்

பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்

   கிடையாது! பொருள் நில்லாது!

மைசொல்லும் காரி அளிசூழ் தாழைமலர்

   பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?

மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி

   வாழ்வது இல்லை! மெய்ம்மை தானே!

 

               

32. சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன?

 

அந்தணரை நல்லவரைப் பரமசிவன்

   அடியவரை அகந்தையால் ஓர்

நிந்தனை சொன்னாலும் என்ன? வைதாலும்

   என்ன? அதில் நிடேதம் உண்டோ?

சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்

   நெறியாரே! துலங்கும் பூர்ண

சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த

   போதில்என்ன? தாழ்ச்சி தானே?

 

               

33.     கோடரிக் காம்பு?

 

கோடாமல் பெரியவர்பால் நடப்பது அன்றிக்

   குற்றமுடன் குறைசெய்தோர்கள்

ஆடு ஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும்

   கிடவாமல் அழிந்து போவார்!

வீடா நற்கதி உதவும் தண்டலையாரே!

   சொன்னேன் மெய்யோ? பொய்யோ?

கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக்

   கோடான கொள்கை தானே!

 

               

34. சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?

 

சின்னம் எங்கே? கொம்பு எங்கே? சிவிகை எங்கே?

   பரி எங்கே? சிவியார் எங்கே?

பின்னை ஒரு பாழும்இல்லை! நடக்கை குலைந்தால்

   உடனே பேயே அன்றோ?

சொல் நவிலும் தண்டலையார் வளநாட்டில்

   குங்கிலியத் தூபம் காட்டும்

சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?

   வம்பர் இது தனை எண்ணாரே!

 

               

35.  துறவிக்கு வேந்தன் துரும்பு

 

சிறுபிறை துன்னிய சடையார் தண்டலைசூழ்

   பொன்னி வளம் செழித்த நாட்டில்,

குறைஅகலும் பெருவாழ்வும் மனைவியும்

   மக்களும் பொருளாக் குறித்திடாமல்,

மறை பயில் பத்திரகிரியும் பட்டினத்துப்

   பிள்ளையும் சேர் மகிமையாலே,

துறவறமே பெரிதாகும்! துறவிக்கு

   வேந்தன் ஒரு துரும்பு தானே.

 

               

36.  ஆரியக் கூத்தாடுகினும்

 

பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்

   மாதரும் சூழப் பிரபஞ்சத்தே

பாரியை உற்றிருந்தாலும் திருநீற்றில்

   கழற்காய்போல் பற்று இல்லாமல்,

சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை

   நினைக்கின் முத்தி சேரல் ஆகும்;

ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்

   கண்ணாவது அறிவு தானே.

 

               

37.  மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.

 

இரந்தனை இத்தனை நாளும் பரந்தனை நான்

   என்று அலைந்தாய்! இனிமேலேனும்

கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள்

   நெறியாரே காப்பார் என்னும்

உரம்தனை வைத்து இருந்தபடி இருந்தனையேல்1

   உள்ள எலாம் உண்டாம்! உண்மை!

மரம்தனை வைத்தவர் நாளும் வாடாமல்

   தண்ணீரும் வார்ப்பர் தாமே.

 

               

38.  செங்கோல் அரசனே தெய்வம்

 

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

   வளநாட்டில் நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்

   புவி ஆளும் வண்மை செய்த

தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் :

   கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்

   ஆழ்நரகில் மூழ்குவாரே!

 

               

39.  காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு!

 

ஓது அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு

   அழகு ஆகும்; உலகில் யார்க்கும்

ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்

   களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ?

நீதிபெறு தண்டலையார் திருநீறு

   மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும்;

காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே

   அழகு ஆகிக் காணும் தானே.

 

               

40.   கவி சொல்லார்!

 

‘பாரதியார்' ‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்

   கல்வியினில் பழக்கம் இல்லார்!

சீர் அறியார் தளை அறியார் பல்லக்கு

   ஏறுவர்! புலமை செலுத்திக் கொள்வார்!

ஆர் அணியும் தண்டலைநீள் நெறியாரே!

   இலக்கண நூல் அறியாரேனும்

காரிகையாகிலும் கற்றுக் கவி சொல்லார்

   பேரி கொட்டக் கடவர் தாமே.

               

30. ‘தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்'

 

மான் ஒன்று வடிவு எடுத்து மாரீசன்

   போய்மடிந்தான்! மானே என்று

தேன் என்று மொழிபேசிச் சீதைதனைச்

   சிறை இருக்கத் திருடிச் சென்றோன்

வான் ஒன்றும் அரசு இழந்தான்! தண்டலையார்

   திரு உளத்தின் மகிமை காணீர்!

தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று

   நினைப்பதுவும் சகசம் தானே.

 

41.  குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்

 

அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!

   கேள்வியையும் அறியார்! முன்னே

இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே

   உபதேசம் எவர்க்கும் செய்வார்!

வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!

   அவர் கிருபா மார்க்கம் எல்லாம்

குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி

   காட்டிவரும் கொள்கை தானே.

 

 

               

42. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்'

 

நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?

   ஆதலினால், நினைந்த போதே

ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி

   வைப்பது அறிவு உடைமை அன்றோ?

கூற்று உள்ளம் மலைய வரும் தண்டலையா

   ரே! சொன்னேன்! குடபால் வீசும்

காற்று உள்ள போது எவரும் தூற்றிக் கொள்வது

   நல்ல கருமம் தானே?

 

 

               

43.    சொர்க்கத்தே போம்போதும் .....

 

வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய்

   மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்

கல் கட்டாகிய மடமும் காணியும் செம்பொனும்

   தேடும் கருமம் எல்லாம்

பொன் கொத்தாம் செந்நெல் வயல் தண்டலையாரே!

   சொன்னேன் பொன் நாடு ஆகும்

சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே

   ராட்டினத்தைச் சுமந்த வாறே.

 

 

               

44.    ‘ஏன் கருடா! சுகமா?'

 

ஆம்பிள்ளாய்! எனக் கொடுக்கும் பெரியோரை

   அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்

நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்

   ஏவல் செய நாளும் வாழ்வார்

வான்பிள்ளாய்! எனும் மேனித் தண்டலையார்

   பூடணமாய் வளர்த்த நாகம்

ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ? என்று

   உரைத்த விதம் என்னலாமே!

 

 

               

45.     புல்லரை அடுக்காதே

 

வடி இட்ட புல்லர்தமை அடுத்தாலும்

   விடுவது உண்டோ? மலிநீர்க் கங்கை

முடி இட்ட தண்டலை நாதரைப் புகழில்

   பெருவாழ்வு முழுதும் உண்டாம்!

மிடி இட்ட வினை தீரும்! தெய்வம் இட்டும்

   விடியாமல் வீணர் வாயில்

படி இட்டு விடிவது உண்டோ? அவர் அருளே

   கண்ணாகப் பற்றுவீரே!

 

 

               

46.   பூனை பிடித்தது விடுமோ?

 

பொலிய வளம் பல தழைத்த தண்டலைநீள்

   நெறி பாதம் போற்றி நாளும்

வலிய வலம் செய்து அறியீர்? மறம் செய்வீர்!

   நமன் தூதர் வந்து கூடி

மெலிய வரைந்திடுபொழுது கலக் கண்ணீர்

   உகுத்தாலும் விடுவது உண்டோ?

எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது

   விடுமோ? என்செய் வீரே?

 

 

               

47.   ‘நெற்றி விழி காட்டுகினும் குற்றமே'

 

மற்றவரோ தமிழ்பாடி நாட்ட வல்லார்?

   நக்கீரர் வலியர் ஆகி

வெற்றிபுனை மீனாட்சி சுந்தர நாயகர்

   அடுத்து விளம்பும் போதில்,

பற்று உள தண்டலை வாழும் கடவுள் என்றும்

   பாராமல் பயப்படாமல்

நெற்றி விழி காட்டுகினும் குற்றமே

   குற்றம் என நிறுத்தினாரே.

 

 

               

48.  மாரி பதின்கல நீரில் கோடையில்

     ஒரு குடம் நீர் வண்மை

 

சீர் இலகும் தண்டலையார் திருவருளால்

   அகம் ஏறிச் செழித்த நாளில்,

பாரி என ஆயிரம் பேர்க்கு அன்ன தானம்

   கொடுக்கும் பலனைப் பார்க்க,

நேரிடும் பஞ்சம் தனிலே எவ்வளவு

   ஆகிலும் கொடுத்தால் நீதி ஆகும்

மாரிபதின் கலநீரில் கோடைதனில்

   ஒருகுடம்நீர் வண்மை தானே.

 

 

               

49.   தண்டலையை வணங்கு

 

பிறக்கும்போது ஒரு பொருளும் கொடுவந்தது

   இல்லை! உயிர் பிரிந்து மண்மேல்

இறக்கும் போதிலும் கொண்டு போவதிலை!

   என்று சும்மா இருந்து வீணே

சிறக்கும் தாயினும் அருள்வார் தண்டலையில்

   சேராமல் தேசம் எல்லாம்

பறக்கும் காகம் அது இருக்கும் கொம்பு அறியாது

   எனத் திரிந்து பயன் பெறாரே!

 

 

               

50.   எய்தவர் இருக்க அம்பை நோவதேன்?

 

வைதிடினும் வாழ்த்திடினும் இன்ப துன்பம்

   வந்திடினும் வம்பு கோடி

செய்திடினும் தண்டலை நீள் நெறியார்தம்

   செயல் என்றே தெளிவது அல்லால்

மெய் தவிர அவர் செய்தார் இவர் செய்தார்

   என நாடி வெறுக்க லாமோ!

எய்தவர்தம் அருகு இருக்க அம்பை நொந்த

   கருமம் என்ன? இயம்புவீரே!

 

51. சாம் காலம் சங்கரா!

 

வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார்

   அடிபோற்றி வணங்கி நாடிப்

போம் காலம் வருமுன்னே புண்ணியம் செய்து

   அரிய கதி பொருந்து உறாமல்

ஆம் காலம் உள்ளது எல்லாம் விபசாரம்

   ஆகி அறிவு அழிந்து வீணே

சாம் காலம் சங்கரா! சங்கரா!

   எனின் வருமோ தருமம் தானே!

 

 

               

52. பெற்ற தாய் பசித்து இருக்க,,,

 

சுற்றமாய் நெருங்கி உள்ளார் தனை அடைந்தார்

   கற்று அறிந்தார் துணைவேறு இல்லார்

உற்ற வேதியர் பெரியோர்க்கு உதவி அன்றிப்

   பிறர்க்கு உதவும் உதவி எல்லாம்

சொற்ற நான்மறை பரவும் தண்டலையாரே!

   சொன்னேன்! சுமந்தே நொந்து

பெற்ற தாய் பசித்து இருக்கப் பிராமண

   போசனம் நடத்தும் பெருமை தானே.

 

 

               

53. ‘நல்ல மாட்டுக்கு ஓர் அடி!'

 

துன்மார்க்கர்க்கு ஆயிரம் தான் சொன்னாலும்

   மறந்துவிட்டுத் துடுக்கே செய்வார்!

சன்மார்க்கர்க்கு ஒரு வார்த்தை சொலும் அளவே

   மெய் அதனில் தழும்பாக் கொள்வார்

பன்மார்க்க மறை புகழும் தண்டலையாரே!

   சொன்னேன்! பதமே ஆன

நன்மாட்டுக்கு ஓர் அடியாம்! நற்பெண்டிர்க்கு

   ஒரு வார்த்தை நடத்தை ஆமே.

 

 

               

54. இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சமோ?

 

கரப்பார்க்கு நல்ல கதி வருவது இல்லை!

   செங்கோலின் கடல்சூழ் வையம்

புரப்பார்க்கு முடிவிலே சுவர்க்கம் அல்லால்

   நரகம் இல்லை! பொய் இது அன்றால்!

உரப்பார்க்கு நலம் புரியும் தண்டலையாரே!

   சொன்னேன்! ஒருமை ஆக

இரப்பார்க்கு வெண்சோறு பஞ்சம் உண்டோ?

   ஒருக்காலும் இல்லை தானே!

 

 

               

55. கொடுங்கோல் மன்னவன் நாட்டின் ......

 

படும் கோலம் அறியாமல் தண்டலையார்

   திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!

நெடும் கோளும் தண்டமுமாய் வீணார

   வீணனைப்போல் நீதி செய்வார்!

கெடும் கோபம் அல்லாமல் விளைவு உண்டோ?

   மழை உண்டோ? கேள்வி உண்டோ?

கொடுங்கோல் மன்னவன் நாட்டின் கடும்புலி

   வாழும் காடு குணம் என்பாரே!

 

 

               

56. கெடுபவர்; கெடாதார்!

 

உள்ளவரைக் கெடுத்தோரும் உதவி அற்று

   வாழ்ந்தோரும் உறை பெற்றோரும்

தள்ளி வழக்கு உரைத்தோரும் சற்குருவைப்

   பழித்தோரும் சாய்ந்தே போவார்!

பள்ள வயல் தண்டலையார் பத்தர் அடி

   பணிந்தோரும் பாடினோரும்

பிள்ளைகளைப் பெற்றோரும் பிச்சையிட்ட

   நல்லோரும் பெருகுவாரே.

 

 

               

57. அற்பருக்கு வாழ்வு வந்தால் ......

 

விற்பனர்க்கு வாழ்வு வந்தால் மிக வணங்கிக்

   கண்ணோட்டம் மிகவும் செய்வார்!

சொற்பருக்கு வாழ்வு வந்தால் கண் தெரியாது

   இறுமாந்து துன்பம் செய்வார்!

பற்பலர்க்கு வாழ்வு தரும் தண்டலையாரே!

   சொன்னேன்! பண்பு இல்லாத

அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரி

   குடைமேல் ஆகும்தானே!

 

 

               

58. பசுவினையே வதை செய்து ...

 

விசையம் மிகும் தண்டலையார் வள நாட்டில்

   ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி

வசை பெருக அநியாயம் செய்து பிறர்

   பொருளை எலாம் வலிய வாங்கித்

திசை பெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும்

   தானம் என்றும் செய்வது எல்லாம்

பசுவினையே வதை செய்து செருப்பினைத் தானம்

   கொடுக்கும் பண்பு தானே!

 

 

               

59. சிறியோர் பெரியோர் ஆகார்

 

சிறியவராம் முழு மூடர் துரைத்தனமாய்

   உலகு ஆளத் திறம் பெற்றாலும்

அறிவு உடையார் தங்களைப்போல் சற்குணமும்

   உடையோர்கள் ஆக மாட்டார்;

மறிதரு மான் மழு ஏந்தும் தண்டலையாரே!

   சொன்னேன்! வாரி வாரிக்

குறுணி மை தான் இட்டாலும் குறி வடிவம்

   கண் ஆகிக் குணம் கொடாதே!

 

 

               

60. பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சு இல்லை

 

கற்றவர்க்குக் கோபம் இல்லை! கடந்தவர்க்குச்

   சாதி இல்லை! கருணை கூர்ந்த

நற்றவர்க்கு விருப்பம் இல்லை! நல்லவருக்கு

   ஒருகாலும் நரகம் இல்லை!

கொற்றவருக்கு அடிமை இல்லை! தண்டலையார்

   மலர்ப் பாதம் கும்பிட்டு ஏத்தப்,

பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை! பிச்சைச் சோற்றினுக்கு

   இல்லை பேச்சுத் தானே.

 

61.   குரங்கின் கையில் நறும் பூமாலை

 

பரம் கருணை வடிவு ஆகும் தண்டலையார்

   வள நாட்டில் பருவம் சேர்ந்த

சரம் குலவு காம கலைதனை அறிந்த

   அதி ரூபத் தையலாரை

வரம்பு உறு தாளாண்மை இல்லா மட்டிகளுக்கே

   கொடுத்தால் வாய்க்குமோ தான்?

குரங்கினது கையில் நறும் பூமாலை

   தனைக் கொடுத்த கொள்கை தானே!

 

 

               

62. அரிசி உண்டேல் வரிசை உண்டாம்!

 

பிரசம் உண்டு வரி பாடும் தண்டலையார்

   வளநாட்டில் பெண்களோடு

சரசம் உண்டு! போகம் உண்டு! சங்கீதம்

   உண்டு! சுகம் தானே உண்டு இங்கு

உரை சிறந்த அடிமை உண்டோ? இடுக்கண் உண்டோ?

   ஒன்றும் இல்லை! உலகுக்கு எல்லாம்

அரிசி உண்டேல் வரிசை உண்டாம்!அக்காள் உண்டு

   ஆகில் மச்சான் அன்பு உண்டாமே!

 

 

               

63.   முழுப் பூசணிக்காய் மறைத்தல்

 

தத்தை மொழி உமை சேரும் தண்டலையார்

   பொன்னி வளம் தழைத்த நாட்டில்

வித்தக மந்திரி இல்லாச் சபைதனிலே

   நீதி இல்லை! வேந்தர்க்கு எல்லாம்

புத்தி நெறி நீதி சொல்லு மந்திரி அல்லாது

   ஒருவர் போதிப்பாரோ!

நித்தலும் உண் சோற்றில் முழுப் பூசணிக்காய்

   மறைத்ததுவும் நிசம் அது ஆமே!

 

 

               

64.  ‘பூசை வேளையிலே கரடி'

 

நேசமுடன் சபையில்வந்தால் வேளை அறிந்து

   இங்கிதமா நிருபர் முன்னே

பேசுவதே உசிதம் அல்லால் நடுவில் ஒரு

   வன்குழறிப் பேசல் எல்லாம்

வாசம் மிகும் தண்டலை நீள் நெறியாரே!

   அபிடேக மலி நீராட்டிப்

பூசை பண்ணும் வேளையிலே கரடியை விட்டு

   ஓட்டுவது போலும் தானே.

 

 

               

65.   தன்வினை தன்னைச் சுடும்

 

மண் உலகில் பிறர் குடியை வஞ்சனையில்

   கெடுப்பதற்கு மனத்தினாலே

உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே

   கெடுவன் என்பது உண்மை அன்றோ?

தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீள்

   நெறியாரே! தெரிந்து செய்யும்

தன்வினை தன்னைச் சுட ஓட்டு அப்பம் வீட்டைச்

   சுடவும் தான் கண்டோமே.

 

 

               

66.  தாயைப் பழித்து மகள் .....

 

முன் பெரியோர் தொண்டுபட்டு நடந்தவழி

   தனைப் பழித்து, முரணே பேசிப்

பின் பலரை உடன்கூட்டி நூதனமா

   நடத்துவது பிழைபாடு எய்தில்

துன்பு அறியாக் கதி அருளும் தண்டலைநீள்

   நெறியாரே! தூயள் ஆகி

அன்புள தாயைப் பழித்து மகள்ஏதோ

   செயத் தொடங்கும் அறிவு தானே.

 

 

               

67.   வெண்ணெய் இருக்க நெய் தேடல்!

 

தண் அமரும் மலர்ச் சோலைத் தண்டலைநீள்

   நெறியே! நின் தன்னைப் பாடில்

எண்ணமிக இம்மையினும் மறுமையினும்

   வேண்டியது உண்டு இதை ஓராமல்,

மண்ணின்மிசை நரத் துதிகள் பண்ணி அலைந்தே

   திரி பாவாணர் எல்லாம்

வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய் தேடிக்

   கொண்டு அலையும் வீணர் தாமே.

 

 

               

68.   ஏழைக்குத் தெய்வமே துணை

 

அந்தணர்க்குத் துணை வேதம், அரசருக்குத்

   துணை வயவாள், அவனி மீது

மைந்தர்க்குத் துணை தாயார், தூதருக்குத்

   துணை, மதுர வார்த்தை அன்றோ?

நந்தமக்குத் துணையான தண்டலைநீள்

   நெறியாரே நண்பர் ஆன

சுந்தரர்க்குத் துணை, நாளும் ஏழையர்க்குத்

   தெய்வமே துணை என்பாரே.

 

 

               

69.      அஞ்சாதவர்!

 

போர் அஞ்சார் அதிவீரர்! பொருள் அஞ்சார்

   விதரணம்சேர் புருடர்! தோயும்

நீர் அஞ்சார் மறைமுனிவர்! நெருப்பு அஞ்சார்

   கற்பு உடைய நிறைசேர் மின்னார்!

வார் அஞ்சா முலை இடம் சேர் தண்டலையாரே!

   சொன்னேன் மதமா என்னும்

கார் அஞ்சாது இளஞ்சிங்கம் கனத்த வலியாம்

   தூதன் கால் அஞ்சானே.

 

 

               

70.     ஒழியாதவை

 

உபசாரம் செய்பவரை விலக்கிடினும்

   அவர் செய்கை ஒழிந்து போகா

தபசாரம் செய்வாரை அடித்தாலும்

   வைதாலும் அது நில்லாது!

சுபசாரத் தண்டலையார் வள நாட்டில்

   திருடருக்குத் தொழில் நில்லாது!

விபசாரம் செய்வாரை மேனி எல்லாம்

   சுட்டாலும் விட்டிடாரே.

 

71. பகடிக்கோ பணம் பத்து! திருப்பாட்டுக்கு ஒரு காசு.

 

சக மிக்க தண்டலையார் அடிபோற்றும்

   மகராசர் சபையில் வந்தால்,

சுக மிக்க வேசையர்க்குப் பொன் நூறு

   கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ

அக மிக்க சோறு இடுவார்! அந்தணருக்கு

   எனின் நாழி அரிசி ஈவார்!

பகடிக்கோ பணம் பத்துத் திருப்பாட்டுக்கு

   ஒருகாசு பாலிப்பாரே.

 

 

               

72.    பணம் தானே பந்தியிலே

 

பணம் தானே அறிவு ஆகும்! பணம் தானே

   வித்தையும் ஆம்! பரிந்து தேடும்

பணம் தானே குணம் ஆகும்! பணம் இல்லாதவர்

   பிணமாம் பான்மை சேர்வர்!

பணம் தானே பேசுவிக்கும்! தண்டலைநீள்

   நெறியாரே! பார்மீது இற்றான்

பணம் தானே பந்தியிலே! குலம் தானே

   குப்பையிலே படுக்கும் தானே.

 

 

               

73.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு .....

 

புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்ச வரும்

   காலனையும் போடா என்றே

இனம் காட்டும் மார்க்கண்டன் கடிந்து பதினாறு

   வயது என்றும் பெற்றான்

அனம் காட்டும் தண்டலையார் அடியார் எல்லாம்

   ஒருவர்க்கு அஞ்சுவாரோ!

பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு

   ஒருநாளும் பயப்படாதே.

 

 

               

74.    ஊரில் ஒருவன் தோழன் ....

 

சீர் இலகும் தண்டலையார் வள நாட்டில்

   ஒரு தோழன் தீமை தீர

வார மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான்

   ஒரு வேந்தன் மணந்து கொண்ட

ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி

   வடிவு கொண்டாள்! ஆகையாலே

ஊரில் ஒருவன்தோழன்! ஆரும்அற்றதே

   தாரம்! உண்மை தானே?

 

 

               

75.  சுகம் படுக்கை அறியாது

 

தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார்

   மாதர் முலை தழுவினாலும்

ஆன தொழில் வகை வகையாச் செய்தாலும்

   அனுபோகம் அவர்பால் உண்டோ?

கான உறையும் தண்டலையார் அடிபோற்றும்

   சுந்தரனார் காமி போலாய்

மேல் நவிலும் சுகம் படுக்கை மெத்தை அறியாது

   எனவே விளம்பினாரே.

 

 

               

76. சோறு சொன்ன வண்ணம் செய்யும்

 

சோறு என்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே

   செய்யும்! அருள் சுரந்து காக்கும்!

சோறு என்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே

   செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?

சோறு என்ன, எளிதேயோ? தண்டலையார்

   தம் பூசை துலங்கச் செய்யும்

சோறு என்ன செய்யும் எனில், சொன்ன வண்ணம்

   செயும்! பழமை தோற்றும் தானே.

 

 

               

77.    பித்தருக்குத் தம் குணமே ...

 

எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்

   மூடருக்கும் இரக்கம் பாரா

மத்தருக்கும் கொடிதாம் அவ் அக்குணமே

   நற்குணமா வாழ்ந்து போவார்!

பத்தருக்கு நலம் காட்டும் தண்டலையாரே

   அறிவார்! பழிப்பாரேனும்

பித்தருக்குத் தம் குணமே நூலினும்

   செம்மையது ஆன பெற்றி ஆமே.

 

 

               

78.   அன்ன நடை நடக்கப் போய் ...

 

பன்னக வேணிப் பரமர் தண்டலையார்

   நாட்டில் உள பலரும் கேளீர்!

தன் அறிவு தன் நினைவு தன்மகிமைக்கு

   ஏற்ற நடை தகுமே அல்லால்,

சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்

   உள்ளது போம்! சிறிய காகம்

அன்ன நடை நடக்கப்போய்த் தன் நடையும்

   கெட்ட வகை ஆகும் தானே.

 

 

               

79.   மகாதேவர் ஆடும் இடத்திலே

    பேய்களும் ஆடும்

 

பேரான கவிராசருடன் சிறிய

   கவிகளும் ஒர் ப்ரபந்தம் செய்வார்!

வீராதி வீரருடன் கோழைகளும்

   வாள் பிடித்து விருது சொல்வார்!

பார் ஆளும் தண்டலை நீள் நெறியாரே!

   இருவரையும் பகுத்துக் காணில்,

ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப்

   பேய்களும் நின்று ஆடுமாறே.

 

 

               

80.    பொல்லாத கள்ளர்

 

செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்

   நெறியாரே! திருடிக் கொண்டே

எழும் கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத

   கள்ளர் இனி யாரோ என்றால்,

கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்

   திருநீறு குழைக்கும் கள்ளர்

அழும் கள்ளர் தொழும் கள்ளர் ஆசாரக்

   கள்ளர் இவர் ஐவர் தாமே.

 

 

81.   மனத்திலே பகை ஆகி ...

 

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்

   பொன்னி வளம் தழைத்த நாட்டில்,

இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்

   ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;

சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ

   சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!

மனத்திலே பகை ஆகி உதட்டிலே

   உறவாகி மடிவர் தாமே.

 

 

               

82. ‘ஊரோட உடனோட்

 

தேர் ஓடும் மணி வீதித் தண்டலையார்

   வளம் காணும் தேசம் எல்லாம்

போர் ஓடும் விறல் படைத்து வீராதி

   வீரர் என்னும் புகழே பெற்றார்

நேர் ஓடும் உலகத்தோடு ஒன்றுபட்டு

   நடப்பதுவே நீதி ஆகும்!

ஊர் ஓட உடன் ஓட நாடு ஓட

   நடு ஓடல் உணர்வு தானே.

 

 

               

83.   ‘வழுவழுத்த வுறவதனின் ...'

 

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்

   வள நாட்டில் எடுத்த ராகம்

தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்

   இருப்பதுவே தக்கது ஆகும்!

குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்

   கல்லாமை குணமே! நாளும்

வழுவழுத்த உறவு அதனின் வயிரம்பற்றிய

   பகையே வண்மையாமே.

 

 

               

84. நெருப்பினைச் சிறிது என்று முன்றானையில் ...

 

அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்

   எக்குலத்தார் ஆனால் என்ன?

உருப் பயிலும் திருநீறும் சாதனமும்

   கண்டவுடன் உகந்து போற்றி,

இருப்பதுவே முறைமை அல்லால் ஏழை என்றும்

   சிறியர் என்றும் இகழ்ந்து கூறின்

நெருப்பினையே சிறிது என்று முன்றானை

   தனில் முடிய நினைந்தவாறே.

 

 

               

85.  ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்'

 

உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும்!

   பெண் புத்தி உதவாது ஆகும்!

திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும்!

   பெண் சென்மம் சென்மம் ஆமோ?

வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே!

   பெண்ணிடத்தின் மயக்கத் தாலே

இரங்காத பேரும் உண்டோ? பெண் என்ற

   உடன் பேயும் இரங்கும் தானே.

 

 

               

86. கையிலே புண் இருக்கக் கண்ணாடி

       பார்ப்பது என்ன?

 

மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச்

   சேர்ந்தவர்க்கு மறுமை இல்லை!

மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும்

   கேடு ஆகி விழலர் ஆவார்!

செய்யிலே வளம் தழைத்த தண்டலையார்

   வள நாட்டில் தெளிந்தது அன்றோ?

கையிலே புண்இருக்கக் கண்ணாடி

   பார்ப்பது என்ன கருமம் தானே?

 

 

               

87.  பனை அடியிலே பால் குடித்தால்?

 

காலம் அறி தண்டலையார் வள நாட்டில்

   கொலை களவு கள்ளே காமம்

சாலவரும் குரு நிந்தை செய்பவர்பால்

   மேவி அறம்தனைச் செய்தற்கும்

சீலம் உடையோர் நினையார்! பனை அடியிலே

   இருந்து தெளிந்த ஆவின்

பாலினையே குடித்தாலும் கள் என்பார்!

   தள் என்பார்! பள் என்பாரே.

 

 

               

88.      பொல்லாச் சூது

 

கைக்கு எட்டாது ஒரு பொருளும்! கண்டவர்க்கு

   நகை ஆகும்! கனமே! இல்லை!

இக்கட்டாம் வருவது எல்லாம்! லாபம் உண்டோ?

   கவறு கையில் எடுக்கலாமோ?

திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார்

   வள நாட்டில் சீச்சீ என்னச்

சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்

   சூது பொல்லாச் சூது தானே.

 

 

               

89. புற்று அடிமண் முதலியவற்றின் பயன்

 

தன மேவும் புற்று அடிமண் குருந்து அடிமண்

   பிரம குண்டம் தன்னில் ஏய்மண்

மன மேவும் மணியுடனே மந்திரமும்

   தந்திரமும் மருந்தும் ஆகி,

இன மேவும் தண்டலையார் தொண்டருக்கு

   வந்த பிணி எல்லாம் தீர்க்கும்!

அனு போகம் தொலைந்தவுடன் சித்தியாம்

   வேறும் உள அவிழ்தம் தானே.

 

               

90. அரைக் காசுக்குப் போன அபிமானம் ...

 

கான் அமரும் கவரி ஒரு மயிர்படினும்

   இறக்கும்! அது கழுதைக்கு உண்டோ?

மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!

   சுயோதனனை மறந்தார் உண்டோ?

ஆனகம் சேர் ஒலிமுழங்கும் தண்டலையாரே!

   சொன்னேன்! அரைக் காசுக்குப்

போன அபிமானம் இனி ஆயிரம் பொன்

   கொடுத்தாலும் பொருந்திடாதே.

 

91. மலைமீதில் இருப்பவரைப் பன்றி பாயாது

 

நிலைசேரும் அதிக விதரண சுமுக

   துரைகளுடன் நேசம் ஆகிப்

பலநாளுமே அவரை அடுத்தவர்க்குப்

   பலன் உண்டாம்! பயமும் இல்லை!

கலைசேரும் திங்கள்அணி தண்டலையாரே!

   சொன்னேன்! கண்ணில் காண

மலைமீதில் இருப்பவரை வந்து பன்றி

   பாய்வது எந்த வண்ணம் தானே?

 

 

               

92.   ‘நிறை குடமோ தளும்பாது'

 

பொறுமையுடன் அறிவு உடையார் இருந்த இடம்

   விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும்!

கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து

   நடந்து தலைகீழாய் வீழ்வார்!

வறுமையினும் மறுமையினும் காணலாம்

   தண்டலையார் வாழும் நாட்டில்

நிறை குடமோ தளும்பாது! குறை குடமே

   கூத்தாடி நிற்பதாமே!

 

 

               

93.    ஆலமரம் பழுத்தவுடன் ...

 

ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்

   எல்லவர்க்கும் நாவலோர்க்கும்

காலம்அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து

   உதவிசெய்து கனமே செய்வார்;

மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே!

   அவர் இடத்தே வருவார் யாரும்!

ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்

   சீட்டு எவரே அனுப்புவாரே?

 

 

               

94.    நாணம் அற்றார் நிலை

 

சேண் இலகு மதிச் சடையார் தண்டலையார்

   வள நாட்டி சிறந்த பூணின்

காணவரும் நாண் உடையார் கனம் உடையார்

   அல்லாதார் கருமம் எல்லாம்

ஆண் அவலம்! பெண் அவலம்! ஆடிய கூத்து

   அவலம்! என அலைந்து கேடாம்!

நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும்

   வாயில் எனும் நடத்தை ஆமே.

 

 

               

95.   பிடாரிதனைப் பெண்டு

     வைத்துக்கொண்டது

 

அடுத்த மனைதொறும் புகுவாள்! கணவன் உணும்

   முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!

கடுத்த மொழி பேசிடுவாள்! சிறுதனம்

   தேடுவள்! இவளைக் கலந்து வாழ்தல்

எடுத்த விடைக் கொடியாரே! தண்டலையாரே!

   எவர்க்கும் இன்பம் ஆமோ?

குடித்தனமே கெட வேண்டிப் பிடாரிதனைப்

   பெண்டு வைத்துக் கொண்டது ஆமே.

 

 

               

96.  இளைத்தவன் பெண்டிர் என்றால் .....

 

களித்து வரும் செல்வருக்கு வலிமை உண்டு!

   மிடியருக்குக் கனம் தான் உண்டோ?

வளைத்த மலை எனும் சிலையார் தண்டலைசூழ்

   தரும் உலக வழக்கம் பாரீர்!

ஒளித்திடுவம் தம்மனையில் பெண்டீரைக்

   கண்டவரும் ஒன்றும் பேசார்!

இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லார்க்கும்

   மச்சினியாய் இயம்புவாரே.

 

 

               

97.    பிறர் வருத்தம் அறியார்

 

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்

   விரகினரும் நோய் உள்ளோரும்

தந்தமது வருத்தம் அல்லால் பிறர் உடைய

   வருத்தம் அது சற்றும் எண்ணார்!

இந்து உலவும் சடையாரே! தண்டலையாரே!

   சொன்னேன் ஈன்ற தாயின்

அந்த முலைக் குத்து வலி சவலை மகவோ

   சிறிதும் அறிந்திடாதே.

 

 

               

98.  நாழி நெல்லுக்கு ஒரு புடைவை

 

ஆழி எல்லாம் பால் ஆகி அவனி எல்லாம்

   அன்ன மயம் ஆனால் என்ன?

சூழ வரும் இரவலர்க்குப் பசி தீர

   உண்டு இருக்கும் சுகம் தான் உண்டோ!

ஏழ் உலகும் பணிய வரும் தண்டலையாரே!

   சொன்னேன்! எந்த நாளும்

நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும்

   நிருவாணம் நாய்க்குத் தானே.

 

 

               

99.   அச்சியிலே போனாலும் ...

 

கொச்சையிலே பாலும் உண்டோ? கூத்தியர்கள்

   தம்மிடத்தில் குணம்தான் உண்டோ?

துச்சரிடத்து அறிவு உண்டோ? துச்சர் எங்கே

   போனாலும் துரை ஆவாரோ?

நச்சு அரவத் தொடையாரே! தண்டலையாரே!

   இந்த நாடு அல்லாமல்

அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்

   காசு அதன்மேல் ஆர் கொள்வாரே?

 

 

               

100.  பித்தளைக்கு நாற்றம் இயற்கை

 

நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும்

   ஒரு தீது நேர வந்தால்,

அத்தனையும் தீது என்பார்! பழி கருமக்

   கயவர் குணம் அகற்றல் ஆமோ?

வித்தகம் சேர் தண்டலையார் வள நாட்டில்

   சாம்பர்இட்டு விளக்கி னாலும்

எத்தனை செய்தாலும் என்ன? பித்தளைக்குத்

   தன்நாற்றம் இயற்கை ஆமே.

 

பிற பாடல்கள்

 

1.    வம்பருக்குத் தலைமை

 

வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்து இருந்தால்

   என்ன? அதுமாறி ஓய்ந்த

பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால்

   என்ன? அதில் பலன் உண்டாமோ?

சம்பு உலவும் தண்டலையார் வள நாட்டில்

   வருந்து பல கழுதை தாமும்

அம்புவியில் கிடந்து என்ன? பாதாளம்

   தனில் கிடந்து என் ஆகும் தானே?

 

 

               

2. கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 

தண்டலையார் அடிபணிந்து தவம் தானம்

   உபகாரம் தருமம் செய்து

கொண்டபொருள் விலைவாசி காணி தேடிக்

   கோடி கொடுப்பது அல்லால்

வண்டருமாய் ஒன்று பத்து விலை கூறி

   அநியாய வட்டி வாங்கிக்

கண்டவர்தம் கடும்தேட்டுக் கண்ணை அறக்

   கெடுக்கும் இது கருமம் தானே.

 

 

               

3.       புரட்டுச் செயல்

 

‘இது கருமம் : இதனாலே இதை முடிப்பாய்!'

   எனத் தொழிலை எண்ணிச் செய்தால்

அது கருமம் பாராமல் திருடியும் அள்ளியும்

   புரட்டாய் அலைவது எல்லாம்

மதி அணியும் தண்டலையார் வள நாட்டில்

   நீராடும் மாதர் தங்கள்

முதுகினைத் தேய் எனச் சொன்னால் முலைமீது

   கையிட்ட முறைமை தானே.

 

 

               

4.  ஊர்க் குருவிதான் உயரப் பறந்தாலும்

 

பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்

   கேட்டாலும் பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்

   பெரியவர் தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும் அருங் கதி உதவும் தண்டலையாரே!

   சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க் குருவி தான் உயரப் பறந்தாலும்

   பருந்து ஆகாது உண்மை தானே.

 

 

               

5. இல்லது வாராது; நமக்கு உள்ளது போகாது

 

வல்லமையால் முடிவது உண்டோ? தலைகீழாய்

   நின்றாலும் வருவது உண்டோ?

அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்

   தன் செயலால் ஆவது உண்டோ?

புல் அறிவால் மயங்காமல், தண்டலையார்

   அடிபணிந்து, புத்தி உண்டாய்,

இல்லது வாராது! நமக்கு உள்ளது போகாது

   எனவே இருக்கலாமே.

 

 

               

6.     குங்குமம் சுமந்த கழுதை

 

பேர் உரை கண்டு அறியாது தலைச்சுமை

   ஏடுகள் சுமந்து பிதற்றுவோனும்,

போரில் நடந்து அறியாது பதினெட்டு

   ஆயுதம் சுமந்த புல்லியோனும்

ஆர் அணி தண்டலைநாதர் அகமகிழாப்

   பொருள் சுமந்த அறிவிலோனும்

காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த

   கழுதைக்கு ஒப்பு ஆவர் தாமே.

 

 

               

7.    பொன் பூவில் வாசனை

 

கற்பூர வல்லி ஒரு பாகர் செழுந்

   தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த

நற்பூமி தனில் பிறந்தோர் எல்லோரும்

   மக்கள் என நாட்டலாமோ?

அற்பூரும் பண்பு உடையார் நற்குணமும்

   பண்பு இலார் அழகும் காணின்

பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்

   பூவும் எனப் புகலல் ஆமே.

 

 

               

8.  கலியாணப் பஞ்சம் இல்லை

 

சலியாமல் தண்டலையில் தாயகனார்

   அருள்கொண்டு தருமம் செய்யப்

பொலிவு ஆகிக் கொழுமீதில் வந்த பொருள்

   ஈந்தவைதாம் போக மீந்தால்

மலிவு ஆகிச் செல்வம் உண்டாம்! வயல் முழுதும்

   விளைந்திடும் நன்மாரி ஆகும்!

கலியாணப் பஞ்சம் இல்லை! களப் பஞ்சம்

   இல்லை ஒரு காலும் தானே.

 

 

               

9.     இரக்கப் போனாலும் .....

 

இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே!

   சிவனே! எந்த நாளும்

இரக்கத்தான் புறப்பட்டீர்! என் தனையும்

   இரக்க வைத்தீர்! இதனால் என்ன?

இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீது

   என்றாலும், இன்மையாலே

இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது

   கருமம் என்னல் ஆமே.

 

Related Content