logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பாசூர்ப் புராணம்

ஆசிரியர்: பூவை-கலியாணசுந்தர முதலியாரவர்கள்

திருப்பாசூர்ப் புராணம் 
ஆசிரியர்: பூவை-கலியாணசுந்தர முதலியாரவர்கள்

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

Source:
திருப்பாசூர்ப் புராணம் (கத்தியரூபம்)
இஃது அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தர முதலியாரவர்கள் இயற்றித்தர,
சென்னை - அள - சுப - பள சுப்பிரமணியஞ்செட்டியாரவர்கள் – 
ஏஜென்ட்டு தேவகோட்டை - பெரி - அள சொக்கலிங்கஞ்செட்டியாரால், 
சென்னை திரிபுரசுந்தரி விலாசம் பிரஸிற் பதிப்பிக்கப்பட்டது
சார்வரி வருடம் - ஐப்பசி மாதம் - 1900.
-----------------------------------------------------------

உ 
சிவமயம்.

சிறப்புக்கவி

திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனம் வித்துவான் - 
சேற்றூர் ஸ்ரீமத் - சுப்பிரமணியக் கவிராஜர் இயற்றிய
பதினான்குசீர் விருத்தம்.

சீர்மலியு நற்றொண்டை நாடதனி னாலெட்டாத
        திகழ்கின்ற தளிக டம்முள்
    செல்வமலி தென்பாசூர்த் தலமான்மி யந்தன்னைத்
        தேர்ந்தன்பர் நாளு மேத்த
வேர்மலியு நகர்தேவ கோட்டையினிற் றனபதியா
        மெழிற்சொக்க லிங்க பூப
    னினிதுவேண் டிடக்கனிதேன் பால்பழம்போற் சுவைமொழிக
        ளிலகியபு ராணஞ் சொற்றான்
தார்மலியு முயர்சைவ வேளாள குலதிலகன்
        தமிழ்மொழியை யேப்ப மிடுவோன்
    தன்னிகரில் மெய்கண்ட சித்தாந்த சாத்திரத்
        தனியெல்லை கண்ட தீரன்
கார்மலியும் பூவையூ ரட்டாவ தானியெனக்
        காசினிப்பா வலர்வி யக்குங்
    கவினார்ந்த வென்னண்பன் கலியாண சுந்தரநற்
        கவிராஜ சிங்க மாதோ!
------


சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருப்பாசூர்த் தேவாரம்
----------------------

பண் - காந்தாரம்.
திருச்சிற்றம்பலம்.

சிந்தையிடையார் தலயினமிசையார் செஞ்சொல்லார்
வந்துமாலை வைகும்பூழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளாவென்ன மகிழ்வாரூர்போலும்
பைந்தண் மாதவிசோலை சூழ்ந்தபாசூரே. (1)

பேரும்பொழுதும் பெயரும்பொழுதும் பெம்மானென்
றாருந்தனையு மடியாரேத்த வருள்செய்வார்
ரூருமரவ முடையர்வாழு மூர்போலும்
பாரின்மிசை யார்பாடலோ வாப்பாசூரே. (2)

கையாற் றொழுதுதலை சாய்த்துள்ளங் கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயரந்தீர்க்கும் விகிர்தனார்
நெய்யாடு தலஞ்சுடையார் நிலவுமூர்போலும்
பைவாய் நாகங்கோடலீனும் பாசூரே. (3)

பொங்காடரவும் புனலுஞ்சடைமேற் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றைசூடி யென்னுள்ளங் குளிர்விததார்
தஙகாதலியுந் தாமும்வாழு மூர்போலும்
பைங்கான்முல்லை பல்லரும்பீனும் பாசூரே. (4)

ஆடற்புரிமை வாயரகொன்றரைச் சாத்துஞ்
சேடச்செல்வர் சிந்தையுளென்றும் பிரியாதார்
வாடற்றலையிற் பலிதேர்கையா ரூர்போலும்
பாடற்குயில்கள் பயில்பூஞ்சோலைப் பாசூரே. (5)

கானின்ற திரக்கனல் வாய்நாகங் கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத்தொழுவார்கண்
மால்கொண் டோடமையறீர்ப் பாரூர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே. (6)

கண்ணினயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
யெண்ணுந்தனையு மடியாரேத்த வருள்செய்வா
ருண்ணின் றுருகவுவகை தருவாரூர்போலும்
பண்ணின்மொழியார் பாடலோவாப் பாசூரே. (7)

தேசுகுன்றாத் தெண்ணீரிலங்கைக் கோமானைக்
கூசவடர்த்துக் கூர்வாள்கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே (8)

நகுவாய் மலர்மே லயனு நாகத் தணையானும்
புகுவா யறியார் புறநின் றோரார் போற்றோவார்
செகுவா யுகுபற் றலைசேர் கையா ரூர்போலும்
பகுவாய் நாரை யாரல் வாரும் பாசூரே (9)

தூய வெயினின் றுழல்வார் துவர்தோ யாடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தா னூர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே (10)

ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன்
றேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லா
ரூன மிலரா யும்பர் வானத் துறைவாரே (11)

திருச்சிற்றம்பலம்.
--------

சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த
திருக்குறுந்தொகை 
--------
திருச்சிற்றம்பலம்.

முந்தி மூவெயி லெய்தமுதல்வனார்
சிந்திப்பார்வினை தீர்த்திடுஞ்செல்வனா
ரந்திக்கோன்றனக் கேயருள்செய்தவர்
பந்திச்செஞ்சடைப் பாசூரடிகளே (1)

மடந்தைபாக மகிழ்ந்தமணாளனார்
தொடர்ந்தவல்வினை போக்கிடுஞ்சோதியார்
கடந்தகாலனைக் கால்கொடுபாய்ந்தவர்
படர்ந்தநாகத்தர் பாசூரடிகளே (2)

நாறுகொன்றையு நாகமுந்திங்களு
மாறுஞ்செஞ்சடை வைத்தவமுதனார்
காறுகண்டத்தர் கையதோர்சூலத்தர்
பாறினோட்டினர் பாசூரடிகளே (3)

வெற்றியூருரை வேதியராவர்நல்
லொற்றியேறுகந் தேறுமொருவனார்
நெற்றிக்கண்ணினர் நீளரவந்தனைப்
பற்றியாட்டுவர் பாசூரடிகளே. (4)

மட்டவிழ்ந்தமலர் நெடுங்கண்ணிபா
லிட்டவேட்கைய ராகியிருப்பவர்
துட்டரேலறியே னிவர்சூழ்ச்சிமை
பட்டநெற்றியர் பாசூரடிகளே. (5)

பல்லிலோடுகை யேந்திப்பகலெலா
மெல்லிநின்றிடு பெய்பலியேற்பவர்
சொல்லிப்போய்ப்புகு மூரறியேன்சொலீர்
பல்குநீற்றினர் பாசூரடிகளே. (6)

கட்டிவிட்ட சடையர் கபாலிய
ரெட்டிநோக்கி வந்தில்புகுந்தவ்வவ
ரிட்டமாலறியே னிவர்செய்வன
பட்டநெற்றியர் பாசூரடிகளே. (7)

வேதமோதி வந்தில்புகுந்தாரவர்
காதில்வெண்குழை வைத்தகபாலியார்
நீதியொன்றறியார் நிறைகொண்டனர் 
பாதிவெண்பிறைப் பாசூரடிகளே. (8)

சாம்பல்பூசுவர் தாழ்சடைகட்டுவ
ரோம்பன்மூதெரு தேறுமொருவனார்
தேம்பல்வெண்மதி சூடுவர்தீயதோர்
பாம்புமாட்டுவர் பாசூரடிகளே. (9)

மாலி னோடு மறையவன்றானுமாய்
மேலுங்கீழு மளப்பரிதாயவ
ராலினீழலறம் பகர்ந்தார்மிகப்
பால்வெண்ணீற்றினர் பாசூரடிகளே. (10)

திரியுமூவெயில் செங்கணையொன்றினா
லெரியவெய்தன ரேனுமிலங்கைக்கோ
னெரியவூன்றி யிட்டார்விரலொன்றினாற்
பரியர்நுண்ணியர் பாசூரடிகளே. (11)

திருச்சிற்றம்பலம்.
--------

திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்.

விண்ணாகி நிலனாகி விசும்புமாகி
        வேலைசூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
வெண்ணாகி யெழுத்தாகி யியல்புமாகி
        யேழுலகுந் தொழுதேத்திக் காணநின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சியாகிக் 
        காதலித்தங் கடியார்கள் பரவநின்ற
பண்ணாகி யின்னமுதாம் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாரே. (1)

வேதமோர் நான்காயா றங்கமாகி
        விரிக்கின்ற பொருட்கெல்லாம் வித்துமாகிக்
கூதலாய்ப் பொழிகின்ற மாரியாகிக்
        குவலயங்கண் முழுதுமாய்க் கொண்டலாகிக்
காதலால் வானவர்கள் போற்றியென்றுங்
        கடிமலர்க ளவைதூவி யேத்தநின்ற
பாதியோர் மாதினனைப் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டியே னுய்ந்தவாறே. (2)

தடவுரைகளேழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
        தண்விசும்பாய்த் தண்விசும்பி னுச்சியாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததோர் ஞாலமாகிக்
        காண்கின்ற கதிரவனு மதியுமாகிக்
குடமுழவச் சரிவழியே யனல்கையேந்திக்
        கூத்தாட வல்லகுழகனாகிப்
படவரவொன் றதுவாட்டிப் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டபடியே னுய்ந்தவாறே. (3)

நீராருஞ் செஞ்சடைமே லரவங்கொன்றை
        நிறைமதிய முடன்சூடி நீதியாலே
சீராரு மறையோதி யுலகமுய்யச்
        செழுங்கடலைக் கடைந்தகட னஞ்சமுண்ட
காராருங்கண்டனைக் கச்சிமேய
        கண்ணூதலைக் கடலொற்றி கருதினானைப்
பாராரும் விண்ணோரும் பரசும்பாசூர்ப்
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே. (4)

வேடனாய் விசயன்றன் வியப்பைக்காண்பான்
        விற்பிடித்துக் கொம்புடைய வேனத்தின்பின்
கூடினா ருமையவளுங் கோலங்கொள்ளக்
        கொலைப்பகழி யுடன்கோத்துக் கோரப்பூச
லாடினார் பெருங்கூத்துக் காளிகாண
        வருமறையோ டாறங்க மாய்ந்துகொண்டு
பாடினார் நால்வேதம் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே. (5)

புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயினூலாற்
        பொதுப்பந்தரது விழைத்துச்சருகான்மேய்ந்த
சித்தியினா லரசாண்டு சிறப்புச்செய்ய
        சிவகணத்துப் புகப்பெய்தார் திரலான்மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளாவன்பு
        விரவியவா கண்டதற்கு வீடுகாட்டிப்
பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியெ னுய்ந்தவாறே. (6)

இணையொருவர் தாமல்லா லியாருமில்லா
        ரிடைமருதோடேகம் பத்தென்று நீங்கா
ரிணைவரியரி யாவர்க்கு மாதிதேவ
        ரருமருந்த நன்மையெலா மடியார்க்கீவர்
தணன்முழுகு பொடியாடுஞ் செக்கர்மேனித்
        தத்துவனைச் சாந்தகிலி னளறுதோய்ந்த
பணைமுலையாள் பாகனை யெம்பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே. (7)

அண்டவர்கள் கடல்கடைய வதனுட்டோன்றி
        யதிர்த்தெழுந்த வாலாலம் வேலைஞால
மெண்டிசையுஞ் சுடுகின்ற வாற்றைக்கண்டு
        மிமைப்பளவி லுண்டிருண்டகண்டர்தொண்டர்
வண்டுபடு மதுமலர்க டூவினின்று
        வானவர்க டானவர்கள் வணங்கியேத்தும்
பண்டரங்க வேடனையெம் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியேனுய்ந்தவாறே. (8)

ஞாலத்தை யுண்டதிரு மாலுமற்றை
        நான்முகனு மறியாத நெறியான்கையிற்
சூலத்தா லந்தகனைச் சுருளக்கோத்துத்
        தொல்லுலகிற்பல்லுயிரைக்கொல்லுங் கூற்றை
காலத்தா லுதைசெய்து காதல்செய்த
        வந்தணனைக் கைக்கொண்ட செவ்வான்வண்ணர்
பாலொத்த வெண்ணீற்றர் பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே. (9)

வேந்தனொடு முடியுடைய வரக்கர்கோமான்
        மெல்லியலா ளுமைவெருவவிரைந்திட்டோடிச்
சாந்தமென நீறணிந்தான் கயிலைவெற்பைத்
        தடக்கைகளா லெடுத்திடலுந் தாளாலூன்றி
யேந்துதிரண்டிண்டோளுந் தலைகள்பத்து
        மிறுத்தவன்ற னிசைகேட்டுவிரக்கங்கொண்ட
பாந்தளணி சடைமுடியெம்பாசூர்மேய
        பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே. (10)

திருச்சிற்றம்பலம்.
------

சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.

திருப்பாசூர்ப்புராணம்.


காப்பு. 
வலம்புரிவிநாயகர்.

நலம்புரி யருண்மெய்ஞ்ஞான நண்ணவுமண்ணினின்ற, 
மலம்புரி வினைகணீங்கி வாழவுந் தாழ்வொன்றில்லாப், 
புலம்புரி பாசூர்மேய புனிதனன் றினிதுநல்கும்,
வலம்புரிப் பிள்ளையார்பொன் மலரடி வணக்கஞ் செய்வாம். (1)

நடேசர்.

கார்மன்னுமேனிக் கவின்கண்ணனென் கண்ணன் மற்றைச், 
சீர்மன்னுந் தேவர்மறை யாவுந்தெரிசிக்க வொண்ணா, 
வேர்மன்னுஞ் சோதியருண்மேனி கொண்டென்றுமன்றுட், 
பார்மன்னு மாடல்பயில்பாதம் பணிந்துவாழ்வாம். (2)

பாசூர்நாதர்.

மருண்மேவு கின்றவினையின் பவமீதி லின்மைத்,
தெருண்மேவு மெய்மைத் திகழ்சேர் நெறிசொலாமிங்
கருண்மேவு பாசூரவைதன் னுளமர்ந்தவந்தப், 
பொருண்மேவுசெப் புயங்கப் பதம்போற்றிசெய்வாம். (3)

தங்காதலியம்மை.

துன்னுமுற்பவம் பாற்றிடவேண்டி மெய்ச்சுடரைப், 
பொன்னம்பலந் தன்னிடைப் பரிவொடும்போற்றி,
மன்னுமா நடங்கண்டிட வணங்கியேவாழு, 
மன்னைதன்னடி சென்னிவைத் துன்னுதுமன்பால். (4)

கணபதி.

ஈங்கியம்பு மிக்கதைக்கிடையூ றகன்றினிமை
நாங்களெய்தவு மேலதுநடக்கவு நல்க
வோங்கு மைங்கரனாலு வாய்மும்மதத்துவாவின
பாங்குசேர் கழலுன்னிநற் பரிவொடுபணிவாம். (5)

சுப்பிரமணியர்.

தீரவிண்ணவர்சேனையி னதிபதிசிறந்த
சூரன்மார்பொடு சுடர்க்கிரியெனதடுதுயர
மீரவேலெடுத்தெழி லிளமயின்மேல்வருமிளைய
வீரன்வீரமும்விளம்புது முளங்கொடுவியந்தே. (6)

சமயகுரவர்.

காழிநாடர் தங்கமலமாமலர்ப் பொனின்கழலு
மாழியிற் சிலைத்தூணுடன் மிதந்தவரடியுக்
தோழராயவன் றொண்டனார் சரணமுந்தொண்டின்
வாழும் வாதவூராளி பாதமுமுளம் வைப்பாம். (7)

திருத்தொண்டர்.

தண்டியாகிய சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையார் தலையாந்
தொண்டர் கூட்டங்கள் யாவையு மன்பினாற்றொழுது
மண்டலம்புரந்தரு ளனபாயர் செம்மலர்த்தாள்
பண்டுநாஞ்செய்த பாவங்கள் பற்றறப்பணிவாம். (8)

கடவுள் வாழ்த்து முற்றிற்று
----------

நைமிசாரணியச் சருக்கம் 
-------
முன்னர் ஒருகாலத்திலே பரதகண்டத்திலே நைமிசாரணியத்திலே ஞானத்திலும், கல்வியிலும், அறிவிலும், ஒழுக்கத்திலும், தவத்திலுஞ்சிறந்து, சன்மார்க்கமாகிய சைவசமயாசார நெறியினராய் விளங்கிய முனிவர்கள் பலர் ஒருங்குகூடிக் கருணைக்கடலாகிய கண்ணுதல் மூர்த்தியைத் தியானித்துக் கொண்டிருக்கையில், வைதிகசைவ சிகாமணியாகிய சூதமாமுனிவர் சிவ சிவ சிவ சிவ என்னும் மோட்சவிதாயகமான மகா மந்திரத்தினை யுச்சரித்துக் கொண்டே அவ்விடம் எழுந்தருளினர். அதுகண்ட நைமிசாரணிய முனிவர்கள் உடனே யெழுந்து உபசரித்து அழைத்துவந்து ஆசனத்திருத்திப் பலமுகமன்கூறி, சுவாமி! முனிவர் பெருமானே! கிருபாநிதியே! அனந்த கல்யாணசுந்தர குணசம்பன்னரான சிவபெருமானது திருவடிகளை யொருபோது மறவாத சிந்தையனே! முன்பு தேவரீர் திருவாய் மலர்ந்தருளிய திருவலிதாய மான்மியத் தெவிட்டாவமுதஞ் செவிமடுக்கவுண்டு புனிதரானோம், அதுபோல விப்போது திருப்பாசூரென்னுங் குடசாரண்ய மான்மியத்தினையும் போதித்தருளி யடியேங்களை யாட்கொள்ள வேண்டுமென்று பிரார்த்தித்தனர். 

அதுகேட்ட வருந்தவ முனிவராகிய சூதமுனிவர் மிகுந்த சந்தோஷமனத்தராய் அவர்கள் வேண்டுகோளுக்கிரங்கி அம்முனிவர்களை நோக்கி அந்தணர் மணிகளே! நானின்றுபெற்ற பெருமையே பெருமை,பாக்கியமே பாக்கியம், அகிலலோக நாயகியாகியாமெனது அன்னையாகிய பார்வதியாரே இக்குட சாரணியத்திலெழுந்தருளித் தனது நாயகனைப் பூசித்தனரெனின், இத்தலத்துப் பெருமையினை யெடுத்துக் கூறுவார்யார். தங்காதலியம்மை சமேதராகிய பாசூர்நாதரைத் திருமாலு மேத்தித் தனக்குண்டாகிய பிரமகத்தினையொழித்துக் கொண்டு இன்றும் வீரராகவனெனும் பெயருடன் திருவெவ்வளூரிலிருந்து பூசித்துவரும் பெருவாழ்வைப் பெற்று வாழ்கின்றனர். தேவர்கள், முனிவர்கள், யோகர், சித்தர், விஞ்சையர், இயக்கர் பலர் இப்பதியில் சம்புசப்த வாச்சியார்த்தனாகிய சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றனர். 
இத்தலத்தில் சந்திரனாலுண்டாக்கப் பெற்ற சோமதீர்த்தத்தில், மாக மாசத்திலாகிலும், பௌர்ணமை, அமாவாசை, சந்திர சூரிய கிரகண முதலிய புண்ணிய காலங்களிலாகிலும் நீராடுவாராயின், அவர்களது வரையிற் செய்த பாவமனைத்தும் நீங்கப்பெற்று விசேட புண்ணிய மடையப் பெறுவர். இத்தலத்திலொரு பிடியன்னமொரு சிவனடியாருக்க ளிக்கினும், ஒருபிடிபுல் ஒரு பசுவிற்களிக்கினும் அதனாலடையும் பலனிவ்வளவென என்னாற் சொல்லுந்தரமன்று. இத்திருப்பாசூரில் ஒருவருடஞ் சிவராத்திரிவிரத நோற்பின் மற்றைய தலங்களில் ஒருகோடி சிவராத்திரி விரதமனுட்டித்த பயன்பெறுவர். பாசூர்நாதனுக்கு அபிடேகஞ் செய்பவரும், நைவேதனஞ் சமர்ப்பிப்பவரும், கோபுரங்கள் மண்டபங்கள் கட்டுபவரும், ஆலயம் புதுக்குபவரும்,உற்சவகோலமுயர்வாகச் செய்பவரும், இம்மையிற் பலசெல்வங்களையு மனுபவித்து மறுமையிற் றிருக்கைலைமலையை விட்டு நீங்காத பெருவாழ்வு பெறுவர். இதுமட்டோ இன்னுமத்தல முத்தியையருளும்பத்தியை விளைவிக்கும், சித்தியையுதவும், அதன் பெருமைகளள விறந்தனவுள. யாவுமெடுத்துக்கூற நான்வலிமை பெற்றிலேன். ஆயினும் உமது விருப்பநிறைவுபெறவேதோ நான் பாசூர்நாதன் றிருவடிகளை என் மனதிற் சிந்தித்து அறிந்தவரையிற் சொல்லுகின்றேன், அன்பினுடன் கேட்பீராகவென்று மேலுங் கூறத்தொடங்கினர்.

நைமிசாரணியச்சருக்க முற்றிற்று.
--------

குடசாரணியச் சருக்கம்
--------

சிவபக்த சிரோமணிகளே! அநேகமாயிரமான கற்பங்கள்தோறுந் தேவர்கள்செய்த புண்ணியமனைத்துந் திரண்டு அருமறைமுடிவிலமரும் அம்பிகை சமேதன்றிருவடிகளிற்றங்க அப்பெருமா னெழுந்தருளி யிருக்குந்தலம் புண்ணியாவர்த்தமெனும் பெயர்பெற்றது,. இத்தலம் தெற்கில் பாலாற்றினாலும் , மேற்கில் கல்லாற்றினாலும். வடக்கில் குசஸ்தலையாற்றினாலும், கிழக்கில் சமுத்திரத்தினாலுஞ் சூழப்பெற்று விளங்குவது. சிலயுகங்களுக்கு முன்பு ஒரு காலத்திலித்தலம் பெருங்காடாயிருந்தது. இக்காட்டின் மத்தியில் ஒருயோசனை யுயரமும் ஒரு யோசனை பரவலுமாகக்குடசமென்னு * மொருவிருட்சம் வளர்ந்தோங்கியிருந்தது. 
-------------
*குடசம்-மலைமல்லிகை

இதனடியிலெழுந் தருளியிருந்த கருணையங்கடவுளாகிய கண்ணுதல் மூர்த்தியினைப் பூசித்து முத்தி பெற்றவர்கள் கணக்கில்லை. ஊழிக் காலத்தில் உலகங்களெல்லா மழித்தகாலத்தும், முனிவர் போற்றுமூவாமுதல்வன்றனது அருட்சத்தியாகிய வம்மையாருடன் எழுந்தருளப்பெற்ற இத்தலமும் இவ்விருட்சமுமழிவதில்லை. யுகமுடிவில் பிரசண்டமாருதம் அண்டரண்ட பகிரண்டங்களையு மதனுள்ளிருக்கு மேழுலகங்களையுங் கண்டதுண்டங்களாம்படி மோத இக்குடசவிருட்ச மசையாதுநிற்கும். இதனடியி லெழுந்தருளியிருக்கும் புண்ணியவடிவினனாகிய சிவபெருமான் அடிகளிலும் அரையிலும் மார்பிலும் கைகளிலும் புயங்களிலும், சடாபாரத்திலுந் தங்கியிருக்கும்பாம்புகள் அந்தச் சண்டமாருதத்தினையுண்டு பசிமாறி யெனதப்பன் சங்கரன்றிருவடிகளில் இரத்தினங்களாகிய புட்பங்களைப் பொழியும். அதனால் இத்தலத்திற்கு மாணிக்கபுரியெனவும் பெயருண்டு பின்பு எழுகலு மொருகடலாய்ப் பெரு வெள்ளமானபோது இம்மாணிக்கபுரி அவ்வெள்ளத்தின் மீது தோணிபோல் மிதக்கும். அதனால் இத்தலத்திற்குப் பிரளயாகலபுரியெனவும் பெயருண்டு. பின்னரக் கினியெழுந்து உலகங்களையெல்லாஞ் சுட்டெரிக்க அந்நெருப்பினீறான பிரமவிஷ்ணுக்களி னீற்றனைத்தன் மேனி முழுவதிலுந் தரித்துக்கொண்டு விளங்குமுக்கட்பரமன் சூலத்தினடுவிலையி னுனியிலொருபுட்பமாக இப்பிரளயாகலபுரி தங்கும். சங்காரகாலத்திலேயும் இத்தலம் சூக்குமமாகி யிருக்குந்தன்மையால் மாயாபுரியெனவும் பெயருண்டு. இத்தகையபதியின் பெருமையை யாரறியவல்லார். இத்தலத்தினைக் காட்டிலுஞ் சிறந்ததலமெங்கும் கிடையாது. இத்திருப்பதியின் கண்ணே எழுந்தருளியிருக்கும் பரமபதியின் பாங்கர் ஓங்கிவளருங் குடசத்தினை நெடுந்தூரத்திலே கண்டுவணங்கினும் அவரழியாத முத்தியின்ப மமையப்பெறுவார்.மேலும் அருமறைமூர்த்தி அடியாருய்யும் பொருட்டுஆடல்புரியாநின்ற அரும்பதியாமென்றும் அறிவீர்களாக. 

குடசாரணியச்சருக்க முற்றிற்று.
----------

தங்காதலிபுரச் சருக்கம்
----------------

சிவஞானத்த போதனர்களே! பரங்கருணைத் தடங்கடலாகிய பரமன் அன்புவத்துள்ள இக்குட சாரணியத்தின் மகிமையினையறிந்து உலகமுய்யும் பொருட்டுச் சர்வ லோகானுக்கிரகியாகிய சாம்பவி தனது நாயகனைப் பூசை செய்யக்கருதிக் குற்றமற்ற வில்வம், தாமரை, செந் நெய்தல், கருநெய்தல், மல்லிகை, வெட்சி, புன்னை, அரலி, செவ்வரத்தை, மாதுளை, மந்தாரை, கோங்கு, இலவு முதலிய மலர்களென்னு மிவைகளைக் கொய்துவந் து,பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந் தனம்,சுத்தோதக முதலியவற்றால் அபிஷேகம்புரிந்து பட்டுப்பரிவட்டமும், இரத்தினாபரணங்களு மணிந்து அலங்கரித்துத் தாம் முன்புகொண்டுவந்த அழகியமலர் களைப் புனைந்து பலவகைப்பட்ட பழவர்க்கங்களையும் சித்திரான்னங்களையும் பிறபொருள்களையு நிவேதித்து, தாம்பூலம், நீராஞ்சனம், சத்திரம், சாமரம், கிருத்தம், கீதமுதலாகிய சகலவுபசாரங்களுஞ் செய்து அருச்சித் துத் தோத்திரஞ்செய்து வணங்கினர். அம்மையார் செய்தவப் பூசையினைக்கண்டு கருணைபொங்கிக் கண்ணுதல் மூர்த்தியானவர் மணவாளக் கோலத்துடன் காட்சிதந்து எந்தங்காதலியே! என்றழைத்துத் தனது பாகத்தில் வைத்துக்கொண்டு சிவலிங்கத்துள் மறைந்தனர். இதனால் தங்காதலிபுரமெனவு மித்தலத்திற்கொருபெயர் வாய்ந்தது. 
பின்னம்மையார் விருப்பத்தின்படி இத்தலத்தினைத் தரிசிப்பார் தங்கள் துன்பநீங்கி நினைத்தவெலா- மடையவரங்கள் தந்தனர். இவ்வருங் காட்சியினைக் கண்ட வேதங்கள் பல்லாயிர முகங்களைக் கொண்டு தோத்திரஞ் செய்தன. தேவர்கள் கற்பகமலர்களை வாரிவாரி வீசினர். முனிவர் பலருமங்கு வந்து அப்பெருமான்றிருவருளை வியந்து வியந்து சென்றனர் என்று சொல்லிப்பின்னுஞ் சொல்லுகின்றார்.

தங்காதலிபுரச் சருக்க முற்றிற்று. 

---------------

அபயபுரச் சருக்கம்
----------

சிவாக்கிர யோகிகளே! முன்பொரு காலத்தில் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் நியமிக்கப்பட்ட மூன்று கோட்டைகளிருந்தன. அக்கோட்டைகளில் புஜபல பராக்கிரம சாலிகளாயிருந்த அசுரர்கள் செய்யுங் கொடுமைகளைச் சகியாத தேவர்கள் இந்திரனிடத்திற் சென்று முறையிட, அவ்விந்திரன் பிரமனிடத்தி லோடிக் கதற, அப்பிரமன் நாராயணனிடத்தற் சென்று கூற, அந்நாரணனானென்ன செய்வேனென் றேங்கிச் சொல்லுவார், இந்திரனே! தாரகனென்னு மசுரனுக்கு வித்துன் மாலி, தாரகாக்கன், கமலக் கண்ணான் என மூவர்மைந்தரிருந்தனர். இம்மூவர்களும் பிரமனை நோக்கித் தவஞ்செய்தனர். 
இவர்கள் தவத்தினுக்கு வியந்து பிரமனவர்கள்முன் தோன்றி யுங்கட்கென்ன வர வேண்டுமென்றனர். அவர்கள் ஆகாயத்திற் சஞ்சரிக்கு மூன்று கோட்டைகளும், அஷ்டமாசித்திகளும், குபேரனையொத்த செல்வமும், எங்கள் பட்டினங்களிற் பல சுனைகளும், காவிரியும், சேனைகளும், குடிகளும், பிராமணர்களும், பயிர்களும்.நந்தவனங்களும், வேள்விகளும் வீதிகளும் அமைய வேண்டும்; அன்றியும் வேதங்களும், ஆகமங்களும், புராணங்களும், சிவபூசைகளும், விபூதி வேடமும் இவை முதலிய வோங்கவேண்டும்; எத்தநை யாயிர மாண்டானாலு நாங்களழியா வரவேண்டுமென்றனர். அங்ஙனமே தந்தோமென்று பிரமன் கூறி நீங்கினர். ஆயிரங்கண்ணனே! அவ்வசுரர்கள் விபூதி, உருத்திராட் சம், பஞ்சாட்சரம் மூன்றிலு மிக விசுவாசமுடையவர்கள்; ஆகமங்களிற் கூறியபடி ஒழுக்கமாசார முடையவர்கள்; சிவபெருமானை பூசிக்குஞ் செயலை யுடையவர்கள்; சிவதரும சிந்தனை யுடையவர்கள்; சிவனடியாரைக்கண்டால் சிவமாகப் பாவிப்பவர்கள்; சிவபுராணங்களைக் கிரமமாய்க் கேட்பவர்கள்; சிவபணி செய்கின்றவர்கள்; சிவ நாமங்களையே யுச்சரிக்கின்றவர்கள் ஆதலால் இத்தகையாரை நாம் அழிக்குந் திறமில்லாதவர்களா யிருக்கின்றோம். நாமெல்லோருங் கூடிக் கருணை வள்ளளாகிய கண்ணுதற் பெருமானிட த்திற்கூறி நமது கவலைகளை யொழித்துக் கொள்வோம். கைலைமலைக்கு வம்மின் என்று, எல்லாரையுமழைத்துக் கொண்டு வெள்ளீயங்கிரியினை நோக்கிச் செல்லுகையில் எதிரில் திரிபுராதிகள் வரக்கண்டு பயந்து நடுங்கிவாயு லறி என்செய்வோம்! என்செய்வோம்! 
இனியோடித் தப்பித்துக் கொள்ளுவதற்கு வேறு வழியில்லையே அசுரர்கள் நெருங்கி விட்டனரே, நமது கூட்டத்தினைக் கண்டால் உடனே நாசமாக்கி விடுவரே, இப்போது நாமடைக்கலமாக அடையவேண்டிய இடமியாது என்றாலோசித்து நமது அன்னையாகிய சாம்பவியால் பூசிக்கப்பெற்ற தங் காதலிபுரமே உத்தமமெனவெண்ணி எல்லோருந் திரும்பியோடோடியும் வந்து குடாசரணியஞ் சேர்ந்து திவ்விய லிங்க வடிவத்தைத் தரிசித்து இறைஞ்சிக் கைகளைச் சிரமேற் கூப்பி யஞ்சலி செய்து கண்களில் ஆனந்தவருவி சொரிய நெஞ்ச நெக்குருக உரோமஞ்சலிர்ப்ப நாத்தழு தழும்ப, உரை தடுமாறப் பரமானந்த பரவசமாய் அவர து திருவடித் தாமரைகள் முடியுற வீழ்ந்து, அடியார்க் கடியனே! அன்பருக் கன்பனே! அமரர்தந் தலைவனே! அருட்பெருங்கடலே! அருமறைக்கொழுந்தே! அணு வினுக்கணுவே! அடிமைகளையாண்டருளும் ஆண்டருளும் ஐயனே! அடைக்கலம், முப்புரத்தவுணர்கட்குப் பயந்து அப்பணிவேணியாய்! அடைந்தனம்; என்றிவ்வாறு பலமுறை வணங்கித் துதி செய்வாராயினார். 

கருணாநிதியாகிய சிவபெருமான் இதனைக் கேட்டுத் தேவர்களே! அவ்வசுரர்கள் சிவ விரதங்களுட் சிறந்து விளங்குபவர்; அவர்கள் விரதங்கட்குப் பங்கம் வந்தாலன்றி அவரை வெல்ல நாம் துணியோம். அவ்வசுரர்களால் உங்களுக்கு யாதொரு தீங்கு முண்டாகாதபடி இத்தலத்தின் கண்ணே வாழ்வீர்களாக. அவர்கள் இவ்விடம் ஒருபோது மடையார் என்றனர். தேவர்கள் குதூகலித்துப்பெருமான் றிருவடிகளிற் பலமுறைவீழ்ந்து எழுந்து அசுரர் பயமின்றி யினிவாழ்ந்தோம். நமக்குப்பயத்தைநீக்கி அபயத்தைத் தந்த இத்தலம அபயபுரமேயாம் என்று கூறிச் சுகமேயிருந்தனர்.

அபயபுரச் சருக்க முற்றிற்று.
----------

மாயாபுரிச் சருக்கம்
-----------

சீவகாருணியமுடையவர்களே! அபய புரத்திலிருரந்த நாரணர் மற்றைய தேவர்கள் விருப்பத்தின்படி திரிபுராதிகளின் விரதங்களை பங்கஞ் செய்ய நினத்துப் புத்த வேடங்கொண்டு பிடக நூலைக் கையிலேந்தித் திரிபுரங்களிற் சென்று அக்கோட்டைகளில் வாழ்பவர்களையழைத்து அசுரர்களே! வேத விதியெல்லாம் பொய், மோட்ச மென்பது ஒன்றில்லை, எல்லப்பொருள்களும் ஒருகணத்தி லழிந்து விடுமென்று மாயாஜால போதனைசெய்ய அவர்கள் எல்லாரு மதிமயங்கி அப்புத்தருக்குச் சீடர்களாகி, அவரெடுத்துப் போதிக்கும் பிடக நூலை நம்பித் துன்மார்க்க வழியிற்சென்று சன்மார்க்கமாகிய சைவ சமயாசார நெறிதப்பி இழிவான சமயநெறியிற்றங்கி , விபூதி, உருத்திராட்சம், பஞ்சாட்சரம், ஆகமநெறிகளை விட்டனர். 
அவர்கள் பத்தினிமார்களும் கற்பிழந்து கண்ணாற் கண்டதே மெய்யென்றும், கதியுண்டென்பதே பொய்யென்றுங் கூறித் தங்களிஷ்டப்படி யுலவித் திரிந்தனர்; தேவர்கள் இவற்றையறிந்து தங்கள் எண்ணம் பழுத்தது என்று மன மகிழ்ந்து எல்லோருமொருங்கு கூடிச் சச்சிதாநந்த சொரூபியாகிய சிவபெருமானின் றிருவடிகளைத் தொழுது துதி செய்து செந்தாமரைபோலுந் தங்கள் கரங்களைக் குவித்துப் பரிந்து கருணைக்கடலே! கண்ணினுண் மணியே! கைலைப் புண்ணியமே! காக்க! காக்க! நாங்கள் இந்நாள்வரையிலிடர்ப் பட்டோம், புத்தனுடைய மாயா ஜாலத்தால் மருண்டு அசுரர் தேவரீரை மறந்தனர். அவர்களைக் கொன் று அடியேங்களைக் காத்தருள்க வென்ற சொற்கள் அடியாற்கெளியாராகிய சிவபெருமான் கேட்டுக் குஞ்சிரிப்புக் கொண்டு தேவர்களே! திரிபுரத்தை நாடிச் செல்வதற்கு நமக்கு இரத முதலியவில்லையே யென்செய்வது என்றனர். 

அத்திருவாய்மொழியைக் கேட்ட நாரணன் மற்றைய தேவர்களுடன் ஆலோசனை செய்து பூமியொருதேரும், சந்திர சூரியர்கள் இரு சக்கரங்களும், நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளும் பிரமதேவன் இரதகாரதியும், மேரு மலைவில்லும், ஆதிசேடன் அந்த வில்லிற்பூட்டும் நாணும், மாயவன் பாணமும் மற்றைய தேவர்கள் மற்றக் கருவிகளுமானார்கள். அப்போது சிவபெருமான் யுத்தகோலங்கொண்டு திருவிற்கோலத்திற்றங்கி அந்த இரதத்தின் மேலேறி மேருமலையினை வில்லாக வளைத்துத் திருவதி கைசேர்ந்து அம்புதொடுத்துப் புன்னகை செய்தனர். அப் புன்னகையால் முப்புரங்களும் வெந்து நீறாய்விட்டன. புத்தனதுமாய் கையிற் சிறிதுமயங்காது சிவபூசையினைக் கைவிடாது வாழ்ந்த அசுரர் தலைவர்களாகிய மூவர்கள் மாத்திரம் யாதொரு தீமையுமடையப் பெறாது சிவத் தியானத்துடனின்றனர். தேவர்கள் அர அர சிவ சிவ வென ஆரவாரித்தனர். அம்மூன்று அசுரர்களுக்கும் சிவபெருமான் தமது திருக்கோயிலின் வாயிலில் காத்திருக்கும் பதவி தந்து, தேவர்கட்கு வேண்டும் வரங்களைக் கொடுத்து அபயபுரமமர்ந்தனர். விண்ணவர் அவரவரிருப்பிடம் போய்ச் சேர்ந்தனர்.

மாயாபுரிச் சருக்க முற்றிற்று
---------

சோமபுரச் சருக்கம் 

சிவானுபூதிமான்களே! வைகுந்தத்திலெழுந்தருளியிருக்கும் நாராயணமூர்த்தியினிடம் அம்புயையென்னும் ஒரு விஞ்சைமாது சென்று அருமையான சில பாடல்களைப் பாடிப்பெற்றவொரு துளவ மாலையினையும், ஒரு தாமரை மாலையினையுங் கொண்டு வருகையில் எதிரில் முனிவர்கோமானாகிய துருவாசரைத் தரிசித்து அம்மாலைகளை அம்முனிவரிடங் கொடுக்க அவரதை வாங்கிக்கொண்டே குகையில்,எதிரில் ஐராவதயானையின் மீதாரோகணித்து வரும் இந்திரனுக்குக் கொடுத்து ஆசீர்வாதங்கூறினர். அத் தேவேந்திரன் அம்மலர்களைத் தனது வெள்ளையானையின் மத்தகத்தின்மீது அலட்சியமாக வைத்தனன். அவ்வியானை அம்மாலைகளைத் தன்னடியிலிட்டு மிதித்துவிட்டது. இதனைக் கண்ணுற்ற முனிவர்பிரான் கண்டு பதைபதைத்து இவ்விந்திரன் தனக்குண்டாயிருக்கும் செல்வச் செருக்கினாலிங்ஙனஞ் செய்தனன், இவனிறுமாப்பை நாமறிவோ மென்று கோபித்து இவன் தரித்திரமடையும்படி மூவுலகத்துச் செல்வங்களும் சமுத்திரத்தினிலடையக் கடவது என்று சபித்துச்சென்றனர். 

இதனால் மாதவருந் தேவரும் வருந்த இந்திரன் பல துன்பங்களை யடைந்து பழையபடி பல செல்வங்களுடன் மனமகிழ்ந்து வாழ்வதற்கு ஒ ரு உபாயங் கூறவேண்டுமென்று பிரமனிடஞ்சென்று வருந்திக் கேட்கையில், பிரமன் அவனுடனும், தேவர்களுடனும், வைகுண்டத்திற்குப்போய், முனிவர்கள் துதிக்க மாதர்கள் மலரடி வருடக் கருடன் முதலானோர் கைகூப்பித் தொழுதுநிற்கச் சேஷசயனத்தின்மேல் அறிதுயில் செய்கின்ற நாராயணமூர்த்தியைக் கண்டு நாத்தழும்பேறத் துதிசெய்து, திருப்பள்ளியிலிருந்து எழுந்தருளும் போது விநயமாகப் பணிந்து அடியேங்கள் பழையபடி செல்வங்களையெல்லாம் பெற உமது சரணமே சரணாக வந்தடைந்தோம். எங்கட்கு அனுகூலமான மார்க்கம் திருவாய் மலர்ந்தருளவேண்டுமென்று பிரார்த்திக்க அத்திருமால் நெடுநேரம் யோசித்து, தேவர்களே நீங்களினி அஞ்ச வேண்டாம், பழைய செலவங்களையெல்லாமடையும் பொருட்டுத் திருப்பாற்கடலைக் கடைந்து யாவற்றையும் பெருவோமென்றனர். 
யாவருங்கேட்டுக் களித்துச் சுவாமி! கடலைக்கடைந்து செல்வங்களைப்பெறுவது எப்படி? கருணை செய்யவேண்டுமெனத் திருமால் தனது திருவுளத்திலெண்ணி மந்தரகிரியை மத்தாக நாட்டி, வாசுகி யென்னும் பாம்பை வடமாகப்பூட்டித் திருப்பாற் கடலைக் கடைந்து செல்வம் பெறலாமென்றனர். அதற்கிசைந்து மந்தரமலையைத் தேவர்கள் அடியோடே யெடுத்துக் கருட ன் முதுகில் வைக்க அது கடலிற் கொண்டுவந்து வைத்தது பின்பு அந்த மலையினை விண்டுவாகிய ஆமை தாங்கமத்தாக நிறுத்தி வாசுகியென்னும் பாம்பை வடமாகப் பூட்டித் திடங்கொண்டு சுரர்களும் அசுரர்களும் கடையும்போது அதில் மூதேவி, சீதேவி, தாரை, சங்கநிதி, பதுமநிதி, பஞ்சதரு, வென்னையானையென்னு மைராவதம், உச்சைச் சிரவமென்னுங் குதிரை, கவுத்துவமணி, அமுதம், சந்திரன், சிந்தாமணி முதலிய பலவும் பிறந்தன 

அவைகளைக் கண்டு தேவரனைவரும் ஆனந்தங்கொண்டு, இன்னமுங்கடையின் இன்னமும் பல பண்டமுண்டாமென்று ஆசைகொண்டு, முன்னிலுமதிகமாக வலிவு கொண்டுகடைய, பாம்பு சகிக்க முடியாமல் வாடிவருந்தி வாய்நுரை தள்ளப் பெருமூச்சு விடுதலும், அக்கடலிலிருந்து கொடிய எமனைப்போலும் ஆலகால விஷம் புறப்பட்டு அண்டகடாக மெல்லாந்தகிக்க, வெள்ளை மேனியையுடைய விஷ்ணு உடல் கறுத்து அன்று தொட்டுக் கரியன் ஆயினார். பிரமதேவன் பொன்னிறமாறி புகைநிறம் பெற்றார். அஷ்டதிக்குப்ப பாலர்கள் உருவுமாறினர். அப்போது எல்லோருமொருங்கு சேர்ந்து வேறு புகலிடமின்மையால் அடுத்தவர்களைக் காத்த தெய்வம் ஆபத்துக் காலத்திலெங்கே யெங்கேயென்று நாடி கைலாச கிரியேயென்று ஓடிக் கால்கள் பின்னலிடும்படி தளர்ந்து நடந்து சுவாமிமலையைப் பணிந்து உள்ளத் துதிக்குமுயர் ஞானசோதியாகிய சிவபெருமானைக் கண்களாரக் கண்டு கைகூப்பித் தொழுது மனங்கரைந்து துதிசெய்ய அவர்களை நோக்கிப் புன்னகை செய்து நாரணனைப் பார்த்து நாராயணனே! நீங்களெல்லோரும் வடிவமாறி முகம்வாடிச் சரீர நடுங்கி இருக்கிற காரண மென்னவெனத் திருமால் அஞ்சலி செய்து பணிந்து விண்ணப்பஞ் செய்கின்றார். 

ஐயனே! அஞ்ஞானிகளாகிய நாங்கள் ஆண்டவன் கட்டளையன்றிக் கடலைக் கடைந்தோம் அதில் ஆலகால விஷம் தோன்றி எல்லாப் பொருள்களையும் சாம்பலாக்கி விட்டது. பிதாவே! அவ்விஷத்தினால் மாண்டவர்கள் போகப் பிழைத்தவர்கள் எல்லாந் தடுமாறி உருமாறி இங்கே வந்து சேர்ந்தனம்; பெருமானே! வேறு கதியில்லை. சிறிது நேரஞ்சென்றால் எல்லாரையும் பாழாக்கிவிடும், ஆண்டவனே! தாமதியாது கருணை வைத்துக் காத்தருள வேண்டும், நாங்கள் மாண்டு போவதின் முன்னம் கருணைக்கடலே தயைசெய்ய வேண்டும் அதோ! அந்த ஆலகால விஷம் வேகமாக வந்து கொண்டிருக்கிறது வருவதற்கு முன் கருணை புரிய வேண்டுமென்று பிரார்த்தித்தனர். முறையிடலும் பெருமான் மனமிரங்கி அஞ்ச வேண்டாமென்று அனுக்கிரகஞ் செய்து அருகிலிருந்த சிவகணத் தலைவரொருவரை யழைத்து அக்கொடிய விஷத்தினைத் திரட்டி வருவாயென்று கட்டளை யிட, அக்கணத் தலைவர் தனது கரத்தினை நீட்ட அவ்விஷம் கடுகளவாய் உருண்டு திரண்டு அக்கரத்திலடைந்தது. அதனைப் பெருமானுடைய பொன்மலர்க் கரத்தில் கொடுக்க அவர் வாங்கித் தேவர்கள் முகம் நோக்கி, தேவர்களே! இவ்விஷத்தினை நாமுண்ணலாமா? வீசியெறியலாமா? என்றவுடன் தேவர்கள் ஐயோ! ஐயோ! என்று கதறி மூர்ச்சையாகிவிட நகைத்து எல்லா உயிர்களையும் பெறாது பெற்றெடுத்த உலக மாதாவாகிய உமையவள் அருட்பார்வைக்குக் காட்டியமு தாக்கி அங்கு அலறிநின்ற எளிய பிரம விஷ்ணுக்கள்மேல் கடாட்சம் வைத்துச் சகல லோகமும் பிழைக்கும்படி திருவமுது செய்தருளினார், நாராயணன் முதலியோர் ஜயஜய போற்றியென்று ஆரவாரஞ் செய்து எங்கள் மனைவிமார்களின் மாங்கலியத்தைக் காத்த தெய்வமே! என்று மனக்கவலை தீர்ந்து மகிழ்வடைந்து அஞ்சலி செய்து நீலகண்டனே! நின்மலனே! நிரஞ்சனே! நிராமயனே! நிர்குணனே! சரணம்! சரணம்! என்று துதிசெய்யச் சிவபெருமான் திருவருள் சுரந்து உங்கட்கு வேண்டும் வலிவை யளித்தோம். இனித் திருப்பாற்கடலிலுண்டான செல்வங்களை யெல்லாமுங் களதாகக் கொண்டு அமுதுண்டு வாழ்ந்திருங்களென்றனர். 
அக்கட்டளையைச் சிரமேற்கொண்டு திரும்பிவந்து அமுதத்தினை யெடுத்து விஷ்ணுவானவர் தேவர்கட்கெல்லாம் பங்கிட வாரம்பித்த மாத்திரத்தில் அக்கடலிலுண்டான சந்திர்னானவன் தனது முழு குளிர்ச்சியினையும் வீசவாரம்பித்தனன். அக் குளிர்ச்சியினைச் சகிக்கமுடியாமல் தேவர்கள் தங்கள் கைகால்கள் கோணிவிட அதனைக் கண்ட அக்கினி தனது முழு சுவாலிப்புடன் வரலும் அவனும் அங்ஙனமே ஆயினன், தேவர்கள் பயந்து இதேது நமக்கு வருவதெல்லாம் இடையூறாக விருக்கிறது என்றெண்ணி அல்லற்பட்டு் அலுத்து வருவாரை யாதரிக்கும் அருந்தெயவம் அப்பனாகிய சிவபெருமானே யென்று அவர்பால் சென்று சந்திரன் செய்யும் தீமையைக் கூற, அம்பிகை சமேதன் அச்சந்திரனைப் பிடித்துத் தனது சடாபாரத்திலுள்ள ஒரு உரோமத்திலிழுத்துக் கட்டி யொருபக்கந் தொங்கவிட்டு வைத்தனர். 

இந்தப்படி பல்லாயிர மாண்டு தொங்கிக் கொண்டிருந்ததினால் உடனொந்து வருந்திய சந்திரன் கிருபா சமுத்திரமாகிய சிவபெருமானை நோக்கிச் சர்வலோக நாயகனே! என்பிழையைப் பொறுத்தாள வேண்டும், ஏழையெங்ஙன மித்தனை காலம் வருந்துவேன், சிறியேன் செய்த குற்றத்தைத் திருவுள்ளத்திற் குறியாது ஆண்டருள வேண்டும் எனது ஆண்டவனே! என்று பலவாறு கெஞ்சிப்புலம்ப, தேவதேவன் திருவுளமிறங்கி, சந்திரனே! நினது சகோதரர்களாகிய தேவர்கட்கு இடையூறு செய்த பெரும்பாவம் நின்னைப் பற்றியது அதனை யொழித்துக் கொள்ளுதற்குப் புண்ணிய பூமியாகிய பரத கண்டத்துத் தென்னாட்டிலே பல வளங்களையு மிருகரைகளிலுங் கொழித்துச் செல்வங்களைப் பெருக்கிச் சிவனடியார்கட்குதவும் பாலாற்றின் வடக்கிலே புண்ணியந் திரண்ட புண்ணியா வர்த்தமென்னும் பதியிலே தூரத்தே தரிசித்தவர்கட்கும் மோட்சத்தினைக் கொ டுக்கும் வேத ரூபமாகிய குடச விருட்சத்தினடியிலே நந்தங் காதலி சமேதராக வெழுந்தருளி-யிருக்கின்றோம் அங்கே சென்று பூசிக்கக் கடவாயென்று கட்டவிழ்த்து விட்டனர்.

சந்திரன் சந்தோஷங்கொண்டு பலதரம் பூமியில் விழுந்து எழுந்து பாடியாடிவிடைபெற்றுக் கங்காதரமூர்த்தி கட்டளையிட்டபடி புண்ணியா வர்த்தத்தினுக்குவந்து தனது பெயராலொரு தீர்த்தமுண்டாக்கியதிற் படிந்து எழுந்து விபூதி தரித்து உருத்திராட்சம் பூண்டு உலர்ந்த வஸதிரமுடுத்திப் பஞ்சாட்சர மகாமந்திரத்தினை யுச்சரித்துக் கொண்டே சென்று கோபுரத்தினை வணங்கி, ஆலயத்திற் பிரவேசித்து விநாயகரையும், சுப்பிரமணியரையுந் தரிசித்துக் கொண்டு அன்றலர்ந்த மல்லிகை, சாதி, குருந்தை, மகிழ், குவளை, சண்பகம், வில்வ முதலிய நறுமணங்கமழு மலர்களைக் கொய்துவந்து சிவலிங்கப் பெருமானை பூசித்துத் தேவியாரையும் வணங்கிப் பரிவார தேவர்களையும் அர்ச்சித்துச் சிவலிங்கப் பெருமானுக்கு வேதமந்திர உச்சாடனத்துடன் அபிடேகஞ் செய்து அன்புடன் இரு கரங்களையுஞ் சிரமேற் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் பொழிந்து நின்று சிவசம்போ! சிவ சம்போ! மகதேவா மகதேவா! கருணாநிதியே! கங்காதரா! சங்கரா! உமது திருவடிகளை ஒருபோது மறவாத வாழ்வு வேண்டும். தேவரீரே தமியேற்கு உற்ற துணையாம் என்று தோத்திரஞ்செய்து தண்டம் போற்கீழ் விழுந்து திருவடிகளைப் பற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக விருந்தான். 

அப்பொழுது அடியார்க்கெளியாராகிய சிவபிரான் உமா தேவியாருடன் தோன்றிச் சந்திரனே! நீ விரும்பிய வரத்தைக் கேட்குதியென்று திருவாய் மலர்ந்தருளினார். பரமபதியே! நான் தேவரீர் சடாபாரத்தினொரு பாங்கரில் வாழும் பெரும் பாக்கியத்தினைத் தந்தருள வேண்டுமென்றவுடன் கிருபைக் கடல் அக்கணமே கிருபை கூர்ந்து சந்திரனை முடியிற்கொண்டு சந்திரசேகரனாய் விளங்கினர்.

அந்தணர்மணிகாள்! சந்திரனாலுண்டாக்கப்பட்ட அத்தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்தால் பின் ஓர்காலத்தும் பிரேதத் தன்மை யுண்டாகாது. ஒரு வமிசத்தில் ஒருவனேனும் அத்தீர்த்தத்தில் ஸ்நாநஞ் செய்வானாயின் அவ்வமிசத்திற் பிறக்குமனைவரும் மோட்சத்தினை யடைவார் கள். இத்தீர்த்தக்கரையிலொரு சிவனடியாருக்கு அன்னதானஞ் செய்தால் கோடிபேருக்கு அன்னமளித்த பலனுண்டாகும். இத்தீர்த்தத்தில் ஏலம், இலவங்கம், விலா மிச்சு முதலிய வாசனா திரவியங்களைக் கலந்து மகாலிங்கப் பெருமானுக்கு அபிடேகம் செய்யும் நியதியுடையவர் அம்பலத்தாடு மாண்டவனடி நிழலைப் பெற்றுய்வாரென்பது சத்திய மொழியாம்.

சோமபுரச் சருக்க முற்றிற்று.
---------------

பரஞ்சுடர்ப்பதி சருக்கம்

சைவா சாரத்துல்யர்களே! முன்னொரு கிருதயுகத்தில் நான்முகக் கடவுளாகிய பிரம தேவனிடத்திருந்து முதித்த கறுத்த மேனியனாகிய விருத்திராசுர னென்பவன் பரமேஸ்வரனை வழிபட்டு, எத்தகைய வாயுதங்களுந்தன் மேற்படில் அவைகளியாவுந் தூசாப்போம்படி வரமடை ந்து முப்புவனங்களிலுள்ளவர்களும் பயங் கொள்ள அனேக யுத்தங்களைச் செய்து செயங்கொண்டு வாழ்ந்து வந்தனன். இவன் துன்பஞ் சகியாதவர்களாய்த் தேவர்கள் பலரிவனுடன் அனேக காலம் போர் செய்து மேற்கொள்ளாதவராகிப் பரமனருளிய வரத்தினாலிவன் மாயானெனத் தீர்மானித்துச் சகல சாஸ்திர சம்பூரணரான ததீசி முனிவரிடஞ் சென்று தங்கள் குறைகளையெல்லா மெடுத் துக் கூறி அவர் முதுகென்பினைக் கேட்க, அவரானந்தங் கொண்டு அங்ஙனமே கொள்ளுங்கள் நானடைந்த பேறு யாவர் பெறுவரிவ்வுலகிலென்று சந்தோஷித் திருந்தனர். 

தேவர்கள் முனிவரைக் கொண்டாடிக் காமதேனுவை யழைத்து அம்முனிபுங்கவருடைய உடலை நக்கும்படி செய்தனர். அங்ஙன நக்கவே அவரது தோலெல்லாம் ஒழிந் து என்பு மாத்திரந் தோன்றிற்று. அப்போது அவரது முதுகென்பினை வாங்கிச்சென்று விருத்திராசுரனைக் கொல்ல அவனிறந்து பிரமகத்தியுருவங் கொண்டு, இந்திரனை மேவி வருத்தவாரம்பித்தது. இதனைக் கண்ணுற்ற தேவர்கள் முறையமிடக் கேட்ட தேவகுருவாகிய பிரகஸ்பதி பகவான் அப்பிரமகத்தியாகிய பழியினை மண்ணினிலுப் பாகவும், மாதர்களிடத்தில் பூப்பாகவும், நீரில் நுரையாகவும், மரங்களிற் பிசினாகவு மிருக்கச்செய்து அவைகளுக்கு வேறு நன்மைகளும் புரிந்தனர். பின்னர் ஒருவேள்வி செய்யக் கருதி தேவர்கள், முனிவர், யோகர், சித்தர், விஞ்சையர், இயக்கரியாவரு மொருங்கு கூடியிருக்கையில், வேதாகம புராண விதிகாச முதலிய பலகலைகளிலுங் கொண்டாடப்பெற்ற மும்மூர்த்திகட்கு முதல்வனாமுழு முதற்கடவுளாகிய சிவபெருமான் றிருவுருவஞ் சோதி சொரூபமே யென்பதைத் தேறுவாராயினார். எங்ஙனமெனின் சிவபெருமான் அருவமுமல்லர், உருவமுமல்லர், அருவுருவமுமல்லர், அவர் எல்லாப் பொருளுங்கரைந்த விடத்திலே யுதிப்ப தொன்றாகையால், எல்லாப் பொருளுந் தானாயொன்றா யிருப்பவருமன்று, தன்னிடத்திலே சுட்டறவிளைகின்ற அர்த்த மாகையினாலே யிரண்டா யிருப்பவருமன்று, வாக்கு மனாதீதமா யிருப்பதொன்றா கையினாலே பிரத்தியட்சமா யிருப்பவருமன்று, ஞானவான்களுக்கு ஞான யோகத்தின் முதிர்ச்சியிலே பரமானந்தத்தை யளித்து நிற்கையினாலே யில்லாதவருமன்று, ஆன்மபோத மிறந்தாற் கூடும் பொருளாகையாலே ஆன்மாக்கணன்று தீதென்று கட்டப்படுபவருமன்று, அந்நீதியே தொடங்கியின்றளவு நிலையான பாச ஞானமுமவரன்று, நானே பிரமமென்று அகங்கரிக்கின்ற பசு ஞானமுமவரன்று, பாச ஞானத்தையும், பசு ஞானத்தையுமுடைய வான்மாவுமவரன்று, அறிவிற் கறிவாய் 
நிற்கின்ற ஞான முமவரன்று, ஆதியு மவரன்று, அந்தமு மவரன்று, இத்த *அநரீதிகையாகிய சச்சிதானந்த ரூபியை எங்ஙனநாம் பாவிப்பது? கருவிகளோடுங் கூடிநின்று பாவனை செய்வதெனிற் சகலமாய்ப் போகலானும், கருவிகளை நீங்கி நின்று பாவிப்ப தெனின் அப்பொழுது கேவலம் வந்து தலைப்படுமாகலானும், இரண்டுமின்றிப் பாவிப்பதெனின், அஃத நிர்வசனீயமெனப் பட்டுப் பாழாய் முடியுமாகலானும், அவ்வாறன்றிப் பாவனைக் கெய்தாத பொருளை யெய்தியதாக வைத்துப் பாவிக்கும் பொருள் யானென்று தன்மேல் வைத்துப் பாவிக்கும் பொருள்யானென்று தன்மேல் வைத்துப் பாவிப்பதென்னில் அதனானாவதோர் பயனில்லை யாகலானும், அப்பாவனை யனைத்தும் நாடக மாத்திரையே யாமாகலான் மேற்கூறியவாறு 
அநந் நியமாய் நின்று அப்பரம்பரன் அருளாற் காண்டலே பாவனையாகும். அவ்வருளோ சத்தியாகுமச் சத்தியைப் பூசிக்கின் அப்பெருமானினுண்மையாகிய சோதிசொருபத்தினைக் காணலாம். அச் சத்தியினைத் தவத் தாலன்றித் தரிசிக்க முடியாது, அத்தவர்ம் சீக்கிரத்திற் கைகூடி வரத்தக் கதலமெங்குளது எனநாடி அது புண்ணியமொன்று கோடியாய் விரிந்து கோடி பாதகங்களைப் போக்கும் சோமபுரமேயென வெண்ணி அவ்விடஞ் சேர்ந்து சோம தீர்த்தத்தில் மூழ்கிப் புண்ணியலிங்கத்தினைப் பணிந்து கிழக்கு எல்லையிலொரு ஆசீர்மஞ் செய்து அதிலிருந்து சாம்பவியாகிய சத்தியினை மனத்திலிருந்து நீரிடைமூழ்கி நெருப்பினிரும்பினை யொத்துக் கூர்மையான வொருவூசியின் மேலோர் விரலூன்றிக் கொண்டு நின்றும், பூமியிலொருகையினை யூன்றி ஒரு பாதத்தை யாகாயத்திற் றூக்கி உணவு சிறிதுமின்றி யருந்தவம் செய்து வந்தனர். 
பராசத்தியும், இச்சாசத்தியும், ஞானசத்தியும், திரோதான சத்தியுமான உலக மாதாவாகிய அன்னையார் அவர்கள் முன்தோன்றி யுங்கட்கு வேண்டிய தென்னவென்று கேட்டனர். தேவர்கள் அம்மையாரைப் பணிந்து சாம்பவியே! அனாதிமுத்த சித்தனாகிய சிவபெருமானுடைய வுண்மைகாண வாசை கொண்டன மென்றியம்பினர். பார்வதியார் குடச விருட்சத்தினடியிலிருக்கும் திவ்விய சிவலிங்க ரூபத்தினை வணங்கி எனது அருமை நாயகனே! இத்தவ முனிவர் தரிசிக்கும் பொருட்டுத் தேவரீருடைய உண்மை வடிவினைக் காட்டி யருள வேண்டுமென்றனர். அக்கணமே ஆனந்த சொரூபமாகிய அவ்விலிங்கத்தினின்றும் பலகோடி சூரிய ரேக காலத்திலுதித்தாலென்ன அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமயமான ஒரு பரஞ்சோதியாய்க் காட்சி தந்தருளினர். மாதவர்கள் கண்டு வெருண்டனர். அம்மையார் அவர்களைக் கூட்டி முனிவர்களே! இதோ நீங்கள் விரும்பிய பரஞ்சோதி யென்றனர். அவர்கள் தங்கள் கண்களாரத் தரிசித்துத் திருவருளைப் பெற்று அவனது சிவானந்தப் பெருவாரியில் இரண்டறக் கலந்து சிவசாயுச்சிய வீட்டின் பேறாகிய சிவ மாந்தன்மைப் பெருவாழ்வு பெறுதற்கு ஏதுவாகிய சிவ யோகத்தினை யினிதுசெய்து வாழ்ந்தார்கள். பரஞ்சோதி ரூபமாகத் தரிசனங் கொடுத்ததலம் ஈக்காடெனப் பெயர்பெறும். அச்சோதி சொரூபமானது தனது கோடிசூரியப் பிரகாச மொடுங்க மீண்டும் குடச விருட்ச நிழலிலே யிருக்கும் அருட்குறியாகிய சிவலிங்கத்தினுள் மறைந்தனர். அன்று முதலச் சிவலிங்கப்பெருமானுக்குப் பரஞ்சுடரெனப் பெயர் வழங்கியது. வேள்விக் கென்று வெதிரி காசிரம் நீங்கி யித்தலம் வந்து தவம் புரிந்து அம்மையப் பன்றரிசனங் கண்டு வாழ்ந்தவர்கள் யாவரெனில், சாலி கோத்திரன், பிருகு, பரத்துவாசன், சவுனகன், உரோ மசன், காசிபன், வசிட்டன், நாரதன், சுகன், மார்க்கண்டன், எழுகூன், ததீசி, கலைக்கோட்டு, உபமனியன், சனற் குமாரன், விசுவாமித்திரன், வியாசர் முதலியவர்களாம். இவரங்கங்கிருந்தவர்கள் பேரால் ஊர் விளங்குவது முண்டு. இத்தலத்திற்கு இதனால் பரஞ்சுடர்ப்பதியென வாய்த்தது என்றனர்.

பரஞ்சுடர்ப்பதி சருக்க முற்றிற்று.

---------------------

மங்கலாபுரச்சருக்கம்

சிவயோகிகளே! கற்றவர்களெல்லாரானும் பரவிப் புகழப்பெற்ற பெருமையுடன்கூடிய கடம்பமாவனத்தில் * வாழும் முனிவர்களுக்குத் தலைமை வாய்ந்தவரும், பல கலையாகமவேத புராணங்களையுணர்ந்தவரும், பிரமனிடத்துதித்தவருமாகிய கௌசிகமுனிவர் பழைமையாகிய வேதநெறியிற் சிறிதும் வழாது பன்னசாலையிற் சின்னாள் தங்கிக் கங்கையாதி புண்ணிய நதிகளிலாடு தற்கெண்ணிப் பிரயாணப்பட்டுப் பரஞ்சுடர் தோன்றிய ஈக்காட்டிற்குச் சமீபித்து வருகையில் பசியினாலேயும், தாகவேட்கையாலும், சூரிய வெப்பத்தினாலு மிகவாடிச் சகியாதவனாகி வருத்தமடைய சூரியன் அஸ்தமித்தனன். இருளெங்கும் வந்து சூழ்ந்து கொண்டது. பாம்புகள் தங்கள் மாணிக்கக் கற்களைக் கக்கியவைகளின் பிரகாசத்தில் இறை தேடவாரம்பித்தன. பேய்களும் படுத்து நித்திரை செய்யு நடுச்சாமமாயிற்று. அப்போது முனிவர் அவ்வனத்தின் செடிகளின்றழைகணெருங்கிய வொருகுகையிற் சென்று நொந் து உடல் வருந்தித் தூக்கமின்றி யெண்ணாதனவெல்லா மெண்ணிச் சிந்தை தளர்ந்து தங்கினர். 
------
* இவ்வனந் திருப்பாசூருக்குச் சமீபத்திலுள்ளது

அப்போது பஞ்சாட்சர சொரூபியாகிய பரஞ்சுடர் திருவருளால் ஒரு பூதம் புலையன் வடிவினைக்கொண்டு சமீபத்தில் வர முனிவர் தனைக்கண்டு நீயாரென்றனர். நானிந்தவனத்தில் வாழுப வனீயாரென்று பூதங்கேட்க, முனிவன்றனது வரலாற்றினைக்கூறி நானித்திரைசெய்யு மளவுமெனது உடலைப் பாதுகாத்து வரக் கடவையென்று தூங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பூதம் அம்முனிவரை யெடுத்துக் கொண்டுபோய் அவருணரா வண்ணம் ஒரு மாளிகையில் மலரமளியின்மீது வளர்த்திவிட்டுத் தான் நீர் கிழங்கு காய் பழமுதலிய கொண்டு வரப்போயினது, முநிவர் விழித்துக்கொண்டு பார்த்து இஃதென்ன! இத்தகைய மாளிகையும் மஞ்சமு நமக்கெவ்வாறு வந்தது நமது கிருபா சமுத்திரமாகிய சிவபெருமான் றிருவருட்செயலோ? நாங்கண்ட இருளன் காரியமோ? என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பூதம், பழமுதலிய கொண்டுவந்து முனிவர் முன்வைத்துப் பெரியோரே! இவற்றைப் புசித்து உமது வருத்த நீங்குமென்றது. இதுவும் பெருமானருளேயென்று முனிவரவைகளை யுண்டு இளைப்பாரி யிருந்து சற்று அவ்வமளியின் சுகத்தினைக் கண்டதன்மேனித்திரை செய்தனர். 

அப்போது அப்பூதம் அவ்விடம் விட்டுப்போய் ஒரு புலைச்சியை மிரட்டியுடன் கொண்டு சென்று முனிவருக்குப் பாதம் பிடிக்கும்படிப் பகர்ந்து போய்விட்டது. அப்புலைச்சி முனிவரது பாதங்களைத் தடவிக்கொண்டே பக்கத்திற் படுத்து நித்திரை செய்துவிட் டனள். முனிவரெழுந்து சமீபத்தினித்திரை செய்து கொண்டிருப்பவளைப் பார்த்து நீயாரென் றுகேட்க நான் புலைச்சியென்று நடந்தவற்றைக் கூற, முனிவர் கேட்டு அந்தோ! இதற்கென் செய்வது இவளுடன் சயனித்த பாவ மெவ்வாறு தொலையும் என்று விசனப்பட்டுக் கொண்டிருக்கையில் சூரியனுதயமாயினன்.

முனிவர் முக்காலத்து வருத்தமானங்களையுந் தனது ஞான திருஷ்டியாலாய்ந்து தேர்ந்து ஓ! ஓ! நமக்கு இத்தலத்தில் திருவருள் செய்யும் பொருட்டு முக்குணங்கடந்த முதல்வனாகிய சிவபெருமான் செய்த திருவிளையாட்டென எண்ணி யினியவனருள் வழி நின்றிடுதலே நன்று, இம்மையில் ஆகாமிய மேறாமலும், மறுமையின் பிராரத்துவத்திற் கேதுவா கிய சஞ்சித மொழியவும் சன்மார்க்க நெறியாகிய சிவ பூசையே தக்கது என்று சிந்தை கொண்டிருக்கையில், முன்னேயொரு தீர்த்தந் தோன்றியது. 
முனிவர் அத் தீர்த்தத்தினைக் கண்டு அதிசயித்துக் கொண்டிருக்கையில், முனிவ! நீ நினைத்திருந்த கங்கையாதி தீர்த்தங்களிலெல்லாம் ஆட வேண்டாம். இது மங்கலமா தீர்த்தம். இதில் நீ படிந்து மங்கலமாகி மங்கல முனியென்னும் பெயர் பெறுக, இவ்வனத்திலிருக்கும் பரஞ்சுடர் நாம் என்ற அசரீரி ஆகாயத்திலுண்டானது. முனிவர் அத்தடாகத்தில் முழுகியெழுந்து மங்கலமா முனியெனும் பெயர் பெற்றுத் தேவ தேவனைத் தேடப் பெருமான்றிரு விளையாட்டாக வருமை காட்டி வெளிப்படாதிருக்க, முனிவர் மெலிந்து பெருமானே இங்கிருப்போமென்று முன்னர் கூறி இப்போது வானில் மறைதனீதியோ? நாமின்று தவஞ்செய்து காண்போமென, அக்கினி வளர்த்தி, அதன் மத்தியிற் செப பூசிநாட்டி அதனுனியிற்றனது 
அடியினங்குட்ட விரலை யூன்றி நிமிர்ந்து மற்றொரு அடியைமேலே தூக்கி இரு கரங்களையும் முடியிற் குவித்து, வாயுவுடனே மூன்று குணங்களையும், நான்கு கரணங்களையும், ஐந்து புலன்களையும், அடக்கி யிச்சையாதிய வொழித்து உலகமேழுங் கொண்டாட வெண்மலர்கள் கொண்டறி விலருசித்துக் கொண்டிருந்தனர். பரம தயாநிதியாகிய பரசிவம் தனது பரசிவையுடனே வெளிவந்து முனிவ! நின்றவங் கண்டு வியந்தேம், விருப்பங் கொண்டேம், நினக்கு வேண்டிய வரங்களைக் கேட்கக் கடவா யென்றனர். முனிவர் பூமியில் விழுந்து தொழுதுபோற்றி மனமுருகி மறைமொழிகளால் வழுத்தி மெய்முகிழ்ப்ப உளங்கனிந்து சொல்லலுற்றனர். சந்திர சடாதாரியாகிய சிவபெருமானே! எளியேனுக்கு யாதொரு விருப்பமுமில்லை அன்புடனே சிவபூசை யொன்றே செய்து மகிழ வேண்டும், என்றனர். கண்ணு தன்மூர்த்தி கேட்டுக் கருணைகூர்ந்து அன்ப! இவ்வனத் திலொரு குடச விருட்சத்தின்கீழ் இலிங்க வடிவமாய் நாமெழுந்தருளி-யிருக்கின்றோம், பரிவுடன் அருச்சனை செய் என்று கூறி மறைந்தனர். 
முனிவர் அடியற்ற மரம்போல கீழ் விழுந்து உய்ந்தேன்! உய்ந்தேன்! என்று அங்குமிங்கு மோடிப் பாடிச் சிவலிங்கப் பெருமான்மீது ஒரு படம் விதானஞ் செய்து, மஞ்சனம், புதுமலர்கள் கொண்டுவந்து சைவாகமங்களிற் குறித்தபடியே சோட சோபசாரங்களுடன் ஒரு நாளுந் தவறாது நாளுக்கு நாலன் புதழைத் தோங்கப் பன்னெடு நாள் பூசை செய்து இப்பொய் வாழ்க்கைக்குரிய விவ்வுடலை மாற்றிடுவையென்று பல்காலு மிறைஞ்சிப் பூசித்து வேத தோத்திரங்கள் செய்து வந்தனர். அவர் முன்னொரு நாள் சிவபெருமான் சோதிப் பிழப்பாய்க் காட்சி தந்தனர். ஐம்புலனின் அவாவை யறுத்த கௌசிக முனிவர் அச்சோதியுண் மறைந்தனர். அமரர் முனிவரியாரும் மென்மலர் பெய்து விசும்பிலார்த்தனர். இம்மங்கலாமுனி பூசித்த காரணத்தால் இத்தலத்திற்கு மங்கலமாபுரியென வொரு பெயரும் வந்ததென வறியக்கடவீர் என்றனர்.

மங்கலாபுரிச் சருக்க முற்றிற்று.
-----------

மால்வினைநாசச் சருக்கம்

சைவவேதியர்களே! முன்னொரு காலத்தில் உலக ச ங்கார முடிந்தவுடன், பவத்தையொழிக்கும் பரம்பொருளாகிய சிவபெருமான் றிருவருளினால் அப்பெருமானது மாயா சத்தியினிடத்திலிருந்து மால் அவதரித்து யான் செய்ய வேண்டுவது யாதென்று வினவ, திருமாலே! இவ்வுலகத்தினைக் காக்குந் தொழிலை வகிக்கக் கடவை என் று கட்டளையிட்டு அவருக்கு மகாமந்திர மொன்றினையு ம் பெருமான் உபதேசித்தருளினர். அத்தெய்வீக மந்திரத்தினை யுச்சரித்துக் கொண்டே அந்நாரணர் திருப்பாற் கடலி னித்திரை செய்துகொண்டிருந்தனர். அவருந்தி யினின்று மொரு தாமரை முளைத்து அனேக வருடகால மலராது மொக்காகவே யிருந்து கொண்டிருந்தது. இங்ஙனமிருக்க உலக சங்கார கர்த்தாவாகிய யுருத்திரமூர்த்தியி னெற்றியில் விளங்கும் அக்கினி விழியினின்றும் விசுவகன்மனெனு மொருமுனிவன் பிறந்தான். அவர் யான் செய்வதேது என்று வினவ அவ்வுருத்திரர் அவருக்கு மந்திரங் கணான்கு உபதேசித்துச் செபஞ் செய்து கொண்டிருக்கக் கடவாயென்று கட்டளை யிட்டனர். 
அங்ஙனமவா செய்து வருகையில் அவரிடமிருந்து மனு, மயன், துவட்டா, விசுவகன்மாவென நால்வர்களுதித்தனர். அந்நால்வர்களுந் தமது தந்தையைநோக்கி, நாங்கள் செய்வது யாது நன்று கேட்க விசுவகன்மன் அந்நால்வர்கட்கு நான்கு மந்திரங்களை யுபதேசித்து விண்டுவின உந்தியின் முளைத்த தாமரையின் நான்கு பக்கங்களிலுமிருந்து செபிக்க வென்றனர். அங்ஙனமந் நால்வர்களுஞ் செபித்து வருகையில் அத்தாமரை மலர்ந்தது. அதினின்றும் கனக மயமான பிரமா பிறந்தனர். அப்பிரமன் நான்கு திக்கினும் பார்த்து நமக் கெதிராவார் யாராயினு மிங்குண்டோவெனச் செருக்கடைந்த மாத்திரத்தில், அப்பிரமனிரண்டு பக்கங்களினின்றும் இரண்டு அசுரர்கள் கறுத்த மேனியர்களாய், பெருந்திறலுடையவர்களாய் பிறை போலும் பற்களையுடையவர்களாய், கருங்கடலாழமுங் கணைக் காலளவினராய்த் தோன்றி மதுகயிடவனெனும் பெயர்களையுடைய அவர்கள் அந்தப் பிரமனைப் போருக் கழைக்க அவரஞ்சி அசுரர்களே!உங்களிடம் போர் செய்ய வல்லவர் திருப்பாற் கடலினித்திரை செய்கின்றார் அவ்விடம் போக வென்றனர். கேட்டவவர்கள் அவ்விடஞ் சென்று கரியவனைக் கண்டு துயிலெழுப்பிச் சண்டைக்கு அழைக்க அவ்விண்டுவுமெழுந்து அவர்களுட னாயிரம் வருடஞ் சண்டை செய்தும் அவர்கள் தோல்வியடையா திருத்தலைக் கண்டு அவர்களை நோக்கிச் சொல்லுவாராயினர். வீரர்களே! நீங்கள் யுத்தஞ் செய்வதில் மிக்க வல்லவராகக் கானப்படுகின்றீர், உம்மை நான் மெச்சினேன், உங்கட்கு வேண்டும் வரங்களைக் கேட்பீர்களாக வென்றனர். 
அசுரர்கள் குலுங்க குலுங்க நகைத்து விண்டுவே! உனது வார்த்தை மிக வழகாயிருக்கிறது, முன்பின் பார்த்துப் பேசுவாயாக, யாராகிலுமிந்த வார்த்தையைக் கேட்டானகையார்களா? எம்மோடு யுத்தஞ் செய வல்லமை சிறிது மில்லாத நீயா வரங்கொடுக்கத் துணிந்தனை. நேர்த்தி! நேர்த்தி! இச் சமயம் நீ தப்பிப் பிழைத்து ஓடிப்போவதற்காக ஒரு தந்திர மெடுத்தாய் போலும். அழகு! அழகு! உனக்கு வேண்டுமானால் நாம் வரங்களைத் தருகின்றோம் பெற்றுக் கொள் என்றனர். 

திருமால் கேட்டு இதுமிக நல்ல சமயமென வெண்ணி நீங்களெனக்கு உண்மையாக வரந்தர வல்லீரோ வென்றனர். ஆம் தருவோம் தவறில் எங்களைக் காட்டிலு மீனர்களொருவருமில்லை இதற்குச் சாட்சியிப் பிரமனே-யென்றசுரர் கூறவே, அது தெரிந்த விஷ்ணு, அசுரர்களே! நீங்கள் என்கையாலிறந்து போகத் தக்க வர மருள வேண்டு மென்றனர். அவர்கள் திடுக்கிட்டு, ஓ! நாமா லோசியாது சொல்லி விட்டனம். இனி மறுப்பதிற் பிரயோசனமில்லையென்று நினைத்து நினது இஷ்டப்படியே செய்து கொள்ளக்கடவாயென்று கூறிய மாத்திரத்தில், அவர்களிருவரையும் விஷ்ணுமூர்த்தி தனது நிகங்களாற் கிழித் தெறிந்தனர். அவர்கள் இரத்தங் கடல் போற்பரவியது. அவர்கள் மேதை உலகமெங்கு மூடியது. அதனாலுலகிற்கு மேதினி யெனவும் பெயர்வந்தது. அவர்களிறந்தும் மாயையாற் சூக்குமரூபந்தாங்கி வேகமாக வெங்குந் திரிந்து தங்களைத் தந்திரத்தாற்கொன்ற மாயனை மறுபடியு நாடி அவர் தூங்குகையில் அவர்காதுகளினுழைந்துஉரு வெடுத்துவெளிவந்து, அனேகமான வருந்தவங்கள் செய் து பிரமனிடத்திற் பலவரங்களைப் பெற்று மதுபுர மென்றொரு பட்டினமுண்டாக்கிய திற்பல சேனா சமுத்திரஞ் சூழவாழ்ந்து, விண்ணுலகத்து இந்திரனாதியரைச் செயித்துத் திருப்பாற் கடலிற் சென்று, முன்பு எங்களைக் கொன்று விட்டதாக விறுமாப்படைந்திருக்கு நாரணனே! யுத்தத்திற்கு வாவென்றழைக்க விஷ்ணுமூர்த்தியுங் கோபித்துத் தனது பஞ்சாயுதங்களுடன் வெளிவந்து சாரங்க மென்னும் வில்லினை வளைத்துப் பலவம்புமாரி பெய்து ஆயிரம் வருடம் போர்புரிந்தும், அவர்கள் தோல்வியடை யாதிருப்பதைக் கண்டு தான் கைலாசபதியின்றிருவடியிற் கண் மலரிட்டு அருசித்துப் பெற்ற சக்கிராயுதத்தினைப் பூசித்து அவுணர்கள் மேலேவ, அது அவர்களைத் தொடர்ந்து எங்கு ஓடினும் எங்கு பதுங்கினும் விடாது வருதலைக் கண்டு ஈக்காட்டில் வந்து மறைந்தனர். உடனேயது அங்கும் வந்து அவர்களைப் பிளந்து கொன்றது.
அவர்கள் பிரமகத்தி விஷ்ணுமூர்த்தியைப் பற்றியது. அதைக்கண்ட சாலிகோத்திர முனிவரொருவர் அவரை நோக்கிப் பெருமானே இதோ தோன்றுகிற இருதய தாப நாசனியென்னுந் தீர்த்தத்தில் முழுகி நினது பிரமகத்தியினை நீக்கிக் கொள்வாயென்றனர். அவரங்ஙனமே செய்து அகமகிழ்ந்த மாதவனுடன் முனிவரறைவர். இத்தலந்திந் திவ்யமானது. இதிலியானும் வைகச் சித்தங் கொண்டிருக்கின்றேன். நீரும் அவ்வுளுறை யென்றனர். நாரணர் *எவ்வுள் என்றுகேட்டு ஆசையுடன் அவ்விடத்து நித்திரை செய்து கொண்டிருந்தனர். 
----------------------------------------
*எவ்வுள் என்றது திருவெவ்வளூரெனவாயது.


அங்கிறந்துபோன தானவர்கள் மறுபடியுஞ் சூக்குமரூபங் கொண்டு விஷ்ணுவின் மூக்கினுழைந்து அவர் இரத்தத் தினையுறிஞ்சுதலும் அவரெழுந்தனர். உடனே யசுரரோடக் கண்டு சக்கிராயுதத்தைப் பிரயோகித்து அவரை யழித்தனர். பின்னுமவர் பிரமகத்தியாய்க் கோர ரூபங் கொண்டு நாரணர் முன்வந்து அவரைச் சூழ்ந்துகொண்டு ஓய் நாரணனே! நீ எம்மை மூன்றுதரம் கொன்றும், இதோவந்தோ மறுபடியுஞ் சண்டைக்கு வாவென்னும், உம்மென்னும், மார்பைத் தட்டும், ஆரவாரிக்கும் உதட்டை மடிக்கும், ஈற்றினைக் கடிக்கும்,குப்புற்று விழும், விரைந்தோடும், மீட்டும்வரும் பொங்கியழும், அட்டகாசஞ் செய்யும், சீறா நிற்கும், என்முன்னிற்க வல்லவனாரடா வென்னும், இவனையின்று மென்றுதின்று போவேனென்னும், இதனைக் கண்ணூற்ற திருமால் பகற்காலத்துச் சந்திரன் போல முகம்வாடித் தான்செய்வ தின்னதெனத் தோன்றாது அச்சமுற்று எட்டுத் திக்குகளிலும் விழித்துவிழித்துப் பார்த்துச் சித்திரப் பதுமைபோலே நின்றனர். இதைக் கண்ணுற்ற சாந்த குணசீலராகிய சாலிகோத்திர முனிவர் அந்நாரணர் முகத்தினை நோக்கிக் கூறுவார். மாதவனே! அஞ்ச வேண்டாம், உலமனைத்தும் உய்யும் பொருட்டு ஒரு பெருங்கடவுள் உமார்த்த சரீர திவ்விய மங்கள விக்கிரக தேசோரூபமாய்ச் சகளீகரித்த பஞ்ச சாதாக்கியத்துள் தன்மசாதாக்கியராகிய சிவலிங்கப் பெருமானைப் பூசித்தாலன்றி இப்பிரமகத்தி நீங்காது. இப் பூசை யம உத்தமப் புண்ணிய தலங்களிற் செய்யிற் சீக்கிரத்திற் பலனுண்டாம். அத்தன்மையான வருமைத்தலம் இதோ நமக்குச் சமீபத்திலுள்ள மங்கல புரியேயாம். அவ்விடஞ் சீக்கிரஞ்சென்று பூசிப்பையாக வென்றனர். கேட்ட திருமால் அவ்விடஞ் சென்று பசுபதி விரதம் பூண்டு, சோம தீர்த்த்தத்தில் ஸ்நானஞ்செய்து நித்திய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு தேக மெல்லாந் திருநீறுபூசி, நெற்றியில் விபூதி திரிபுண்டரமாக விளங்கக் கண்ட முதலிய உறுப்புகளில் உருத்திராட்ச மாலை தரித்து ஒழுக்கத்திற் சிறிதுந் தவறாமல் பூசைக்கு வேண்டிய உபகரணங்களாகிய பீதாம்பரம், இரத்தினாபரணம், சந்தனம், திருமஞ்சனம், தூபம், திருபிபள்ளித் தாமம், தீபம், பஞ்ச கவ்வியம், கனிகள், தேன், திருவமுது சேகரித்துச் சிவாகமப்படி ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், புட்பதானம் தூபம், தீபம், நைவேத்தியம், பானீயம், ஆராத்திரிகை, சபசர்ப்பனையாஞ் சோடசோப சாரஞ்செய்து, உரை தடுமாற, என்பு நெக்குருக, உடலெல்லா மெனமயிர்ப் பொடிப்ப, ஆனந்தக் கண்ணீர் பெருக அஞ்சலித்து, மோட்ச விதாயமான பஞ்சாக்கரஞ் செபித்து, ஆயிரந் திருநாமங்களை யெடுத்துச்சொல்லி அருச்சனை பண்ணித் துதிசெய்து பேரன்பு வளர்ந்தோங்கத் தொழுது, அப்பனே! சரணம், அண்ணலே! சரணம், அங்கணா! சரணம், அரசே! சரணம், ஐயனே! சரணம், அண்ணா! சரணம், அருமறைப்பொருளின் அகப்பொருளே சரணம், மறைகளனைத்தினிலு மறைந்திருக்குமா மணியே சரணம், முனிவர் போற்று மூவா முதல்வனே சரணம், முத்தியளிக்கும் முக்கட்பரமனே சரணம், கலி மலங்கழிக்குங் கற்பகக் கொழுந்தே சரணம், போக மளிக்கும் போதப் பொருளே சரணம், இராஜ இராஜேஸ்வரா அடைக்கலம், அடைக்கலம் என்ற மாத்திரத்தில், அந்தர துந்துபி முழங்கவும், அமரர்கள் புஷ்பமாரி பொழியவும், உருத்திர கணிகையர் வெண்சாமரை வீசவும், கந்தருவர் பாடி வீரப் பிரதாபங்களை யெடுத்துச் சொல்லவும், ஞானசனந்தர் முதலான பெரியோர்கள் இரு பக்கத்திலு மிருந்து துதி செய்யவும், அஷ்டதிக்குப் பாலகர் எமது ஐயன்றிருவடிகளை முடிமீது தாங்கி வரவும், பச்சிளங் கொடியாகிய பார்வதி சமேதராய், விநாயக மூர்த்தி, சுப்பிரமணிய சுவாமி, திருநந்திதேவர், முதலானவர்கள் புடை சூழ்ந்து வர இடப வாகனத்தின்மீது அந்தரத்தில் ஒரு அலங்காரமாகச் சிவபெருமான் காட்சி கொடுத்தருளினார். கண்ட விட்டுணு வானவர் பேரன்புடையவராகித் தேகமெலாமுரோமம் சிலிர்க்கச் சிரசின்மேல் கைகளைக் குவித் துக் கொண்டு நாவுக குழறிச் சொற்கள் தடுமாற, ஆனந்தக் கடலில் விழுந்து ஆடிப் பெருங்காற்றில் வாழை மரஞ்சாய்வது போல பூமியில் விழுந்து, பணிந்தனர். 

சிவபெருமான் வாராய் மாயவனே! உன்குறை நீங்கிற்று, நீ கருதிய வரத்தைக் கேட்கக் கடவை, நீ செய்த பூசையாலுந், தியான யோகத்தாலும், மூலமந்திர செபத்தாலும், நா மகிழ்ச்சி யெய்தினோம் எனத் திருவாய் மலர்ந்தருளக் கேசவன் பணிந்து சுவாமீ! அடியேன் பூர்வத்தில் பன்றியாய்ச் சென்றுணராத நினது திருவடியை யிப்போது தரிசித்தேன். எனது பிரமகத்தினை யொழித்தேன், இனியெனக் கொரு குறையுமில்லை. முந்தி திருவெவ்வள்ளூரில் தீர்த்தேஸ்வரர் திருவடியைச் சிந்தித்து இருதய தாபநாசத் தடாகத்தில் படிந்து முன் பிரமகத்தியினை யொழித்துக் கொண்டேன். அத்தலத்திலேயே நான் எந்நாளும் வசித்துக்கொண்டு காலையிலு மாலையினு மிவ்விடம் வந்து தேவரீரைத் தரிசித்து வரல் வேண்டும். அன்றியு மத்தடாகத்தில் அமாவாசை புண்ணியகாலத்தில் எவர் நீராடினும் அவர்கள் பிணிகளனைத்து நீங்கப் பெற்று நினைத்தனவெல்லா முற்று வாழவேண்டு மென்றனர். பெருங்கருணை வள்ளலாகிய பரமசிவம் அவ்வரங்களைக் கொடுத்துப் பரசிவையுடன் சிவலிங்கத்திற் கரந்தருளினர். முகுந்தன் விடைபெற்றுத் திரும்பித் திருவெவ்வளூரில் அரவணைத்துயில் கொண்டு இவ்வுலகமும் எவ்வுலகமும் போற்றத் தன்னைத் தரிசிக்க வருவார் பலருக்கும் வேண்டிய பிரசாதமளித்து வீரராகவர் எனக் கொண்டாட எழுந்தருளியிருந்தனர். வீரராகவப் பெருமாளின் வினையை யொழித்த இத்தலத்திற்கு வினை நாசமெனவுமொரு பெயருண்டு. 
திருமால்வினைதீர்த்த சருக்கமுற்றிற்று.

----------------------

பால்வாசியறிந்த சருக்கம் 

சிவயோகச் செல்வர்களே! மால்வினை நாசமென்னு மிப்பதிக்கு மேற்கில் காரணை யென்னுமொரு நகருண்டு. அதில் ஆயர்குலதிலகனாக அரியகோன் என்னும் பெயரை வாய்ந்த ஒரு இடையனிருந்தனன். திருவெவ்வளூர் வீரராகவரின் பிரமகத்தியினை யொழித்த செகசென்மாதி காரண வஸ்துவாகிய சிவபெருமான் மகிமைகளைப் பல பேரடிக்கடி இவ்வாயனிடத்துக்கூற அதனாலிவனுக்குப் பரமபதியாகிய பரமேஸ்வரனிடத்தி லதிகவன்பு வாய்ந்து நாடோறுமப் பெருமானைத் தரிசித்து வந்தனன். அந்த அரியகோனும் அவனது கற்பிற் சிறந்த மனைவியாகிய விமலை யென்பவளும் புத்திரப்பேறு விரும்பிச் சுவாமியை வேண்டி வந்தனர். சில நாளைக்குள் அப்பெருமானருளால் அவர்கட்கு இலக்குமி யினையொத்தவொரு பெண் குழந்தை பிறந்தது. அப்புத்திரிக்குக் குணவதி யென்னும் பெயரைத் தாய்தந்தையரிட்டு நாளொருவண்ணந் தினமொரு மேனியாக வளர்த்து வந்தனர். அப்பெண் அதிரூப சௌந்திரியவதியாகிக் கரிய கூந்தலினையும், தேமற் படர்ந்ததனங்களினையும், தளிர்போன்ற கைகளினையும், விசாலமான அல்குலினையும் பெற்றனள். 


இத்தகைய வனப்பினையடைந்த இக்குணவதியை மணம்பேச ஆயர்குலத்த வருட் சிலர் வந்தனர். அங்ஙனம் வந்தவர்களை அரியகோனும் அவன் மனைவியும் பலவுபசாரத்துடன் வரவழைத்துத் திருமணம் பேசியனுப்பிவிட, அவர்கள் தங்களூர் போய்ச்சேரு முன்னர் இறந்தனர். மற்றுஞ் சிலர் இக்குணவதியை மண ம் பேச வந்தாரும் இவ்வாறேயாயினர். அதனால் இவள் தெய்வப் பெண்ணெனப் பயந்தஞ்சி யாரும் இவளைப் பற்றிப் பேசாது இருந்துவிட்டனர். சிலநாளைக்குள் அரிய கோனும் இவன்மனைவியுங் கைலாயமடைந்தனர். குணவதியேங்கித் துன்பமுறச் சுற்றத்தார் தேற்ற ஒருவாறு தேறி மனத்துயர் நீங்கித் தாய்தந்தையர்களுக் குண்டாயிருந்த சிவபக்தி தனக்கு முண்டாக அதனால் தனது செல்வத்தினை யெல்லாம் தருமத்திற் செலவிடத் துணிந்து சோமபுரத்தில் அனேகமான சோலைகளை யுண்டாக்கியும் தடாகங்களை யெடுத்தும், தருமசாலைகளைக் கட்டியும், அன்ன தானங்கள் செய்தும், பலருக்கு விவாக முடித்தும், வாழ்ந்து வருகையில் குணவதிக்கு முப்பத்திரண்டு வயதாயிற்று. அவள் கனவிலொரு நாள் சிவபரஞ்சோதி தோன்றி, குணவதியே! உன்னை நாமடிமையாகக் கொண்டனம். உனக்கு விவாக முடியா வண்ணம் நாமே தடுத்தனம். இனி நமது திருத்தொண்டினையே செய்துகொண்டிருக்கக் கடவாய் எனத் திருவாய் மலர்ந்தருளினர். 

விழித்து ஆயர்குல விளக்கான அம்மாது கனவினருமையினை யெண்ணியெண்ணி யானந்தங்கொண்டு முன்னினும் அதிக பக்தியினைப் பெற்றுக் குடச விருட்சத்தினடி யிலெழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானைச் சென் றிறைஞ்சியேத்தி இத் தலத்திலிப் பெருமானுக்குச் சந்திரனானவன் பாலபிடேகஞ்செய்து பலவரங்களைப் பெற்றானென்று பிறர் சொல்லக்கேட்டு என் செய்வேன்! நான் பிரதி தினமும் வேண்டுமான பால் அபிடேகத்திற்குக் கொடுத்து வருவேன், அதைக்கொண்டு விதிப்படி அபிடேகஞ் செய்வார் யாரையுங் காணேனே யெனத் துக்கித்துக் கொண்டிருந்தனள். அப்போது அவள் முன்னர், வேதத்தில் விளையாடும் விமலனாகிய சிவபெருமான் ஒரு முனிவர் வடிவங்கொண்டுவர அவரை நோக்கிச் சுவாமீ தேவரீர் எங்கெழுந்தருளியிருப்பது என்றனள். நாமிங்குதானிருப்பது என்ற முனிவரை குணவதியார் மிகுந்த வணக்கத்துடன் பணிந்து ஐய! நான் தினமுங் கொடுக்கும் பாலைக் கொண்டு எனையடிமையாகக்கொண்ட இச்சிவலிங்கப் பெருமானுக்கு அபிடேகஞ் செய்து வருவீரோ? என்றனள். அவ்வாறே செய்து வருவோமென விசைந்து அன்று முதல் குணவதியார் கொடுக்கும் பாலினைத் தினந் தோறும்பெற்று அருட்சோதியாகிய சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனமாட்டிப் பீதாம்பரமுதலியசாத்தி, கந்தமலர் மாலையணிந்து அமுது முதலிய படைத்துத் தூபதீபங் காட்டிப் பூசனை செய்துவந்தனர். குணவதி சிறிதுஞ் சோம்பாது நியமமாக வேண்டியபால் கொடுத்து வரப் பசுக் கூட்டங்கள் நாளுக்குநாள் விருத்தியாகிப் பிணிமுதலியவின்றி வாழச் செல்வம் விருத்தியாயது. 

இவ்வாறு நடந்துவருகையில் உலகத்தில் மழையின்றிப் பஞ்சம் வந்தெய்த அதனால் மிகத் துன்பப்படும் தனது சுற்றத்தினர்க்கு வேண்டிய உதவி செய்துவரக் குணவதிக்கு நாளுக்கு நாள் செல்வங் குறைந்துவிட்டது. அங்ஙனங் குறைந்தும் பாலனைத்துஞ் சுவாமிக்கே கொடுத்துவரும் தன்மையினை யுணர்ந்து முனிவரொரு நாள் குணவதியினிடம் வந்து அருள் கூர்ந்து, மாதே! நீ பால்முழுவதினையும் அபிடேகத்தினுக்கே கொடுத்து வருகின்றனை அதனால் இப்பஞ்ச காலத்தில் நினது சுற்றத்தினருக்கும் மற்றையருக்கும் உபகரிக்க உனக்கு வேறு வகையில்லை, ஆதலால் நாம் பிரதி தினமுனக்கு ஒரு பொற்காசு கொடுக்கின்றோம், அதனைப் பாலுக்கு விலையாகக் கொள்ளற்க. அக்காசினைக் கொண்டு நீ வேண்டிய தருமங்களைச் செய்துவரலாம். பானியம முங்குன்றாது பசுக் கூட்டங்களையும் பத்திரமாகப் பாதுகாக்க வேதுவுண்டா மென்றனர். புண்ணியவதியான குணவதியதற்கிசைந்து வணங்கியேற்று அவ்வூரிலிருக்கும் நிதிக்கோன் என்னும் செட்டியாரிடத் துத் தந்துமாற்றி வேண்டியதெல்லாம் பெற்றுத் தினந் தோறும் பந்துக்கள் முதலிய யாவருக்கு மன்னமளித்துப் பஞ்சந் தோன்றாத வண்ணஞ் செய்துவந்தனள். 

இங்ஙனம் நடந்தேறி வருகையில் குணவதியார் பசுக்களைக் கூலிக்கு மேய்க்கும் இடையர்கள் பாலைக் கரந்து விற்றுவிட்டு, அதற்குப் பதிலாகத் தண்ணீர் கலந்து அபிடேகத்திற்குக் கொடுத்து வந்தனர். அதுதெரிந்து முனிவர் ஒரு மாற்றுக் குறைவாகப் பொற்காசு கொடுத்துவர வாரம்பித்தனர். அந்தக் காசினை யெடுத்துக் கொண்டுபோய் மாற்ற, நிதிக்கோன் என்னுஞ் செட்டியார் அயலூருக்குப் போயிருந்தமையின், அச்செட்டியாரின் புத்திரன் அக்காசினை யேற்று வழக்கப்பிரகாரம் வேண்டியவைகளைக் கொடுத்துவந்தனன். 

அயலூருக்குச்சென்ற நிதிக்கோன் தன் காரியங்களை யெல்லா முடித்துகொண்டு தன்னூருக்குத் திரும்பி வீடுவந்துசேர்ந்து உணவு முதலியவுண்டு தனது புத்திரனை யழைத்து, குழந்தாய்! குணவதியார் பொற்காசு வந்துகொண்டிருக்கிறதோ வென்ன, தப்பாது வந்துகொண்டிருக்கிற தென்றனன், ஆனாலதனைக் கொண்டுவா பார்ப்போமென்று வாங்கிப் பார்த்து ஓ!ஓ! இக்காசு மாற்றுக் குறைந்திருக்கிறதே யிது வந்தவாறென்ன வென்றனன், தந்தையே! தாங்களூருக்குப் போகிறபோது குணவதியார் பொற்காசு தினம் வருமென்றும் அதிலொரு பழுதுமிராதென் றும் வேண்டியவெல்லாம் தாமதியாது கொடுப்பாயென்றுந் தாங்கள் சொல்லியபடியே செய்து வந்தேன். இதுவேயல்லாமல் எங்களிடத்தில் வேறு குறையில்லை. இதுதான் செய்தி யென்ற புத்திரனை நோக்கி அவ்வம்மணியாரிடத்து யாதொரு குறைவு நேரிடாது இவ்வாறு வந்தது ஆச்சரியமாக விருக்கிறது என்று வணிகர் ஆலோசித்துக் கொண்டிருக்கையில், குணவதியார் நிதிக்கோனிடம் பொற்காசுடன் வந்து செட்டியாரே! எப்போது வந்தீர்! போயிருந்த காரியம் யாவும் அனுகூலமாக முடிந்ததோ! என்றுகேட்டுப் பதிலறிந்து பொற்காசினை அவ்வணிகனிடங் கொடுக்க அவன் வாங்கி, அம்மணீ! முந்தியெலாம் நீ கொடுத்துவந்த காசு இதல்ல. இது வந்தவகையேது. என்னுடைய மகன்கையில் நீ கொடுத்தவெல்லாம் இப்படியேயிருக்கிறது என்றனன். வணிகரே! முனிவர் எனக்குக் கொடுத்துவரும் பொற்காசன்றி வேறெனெக்குக் கிடையாது. ஆகையால் இன்னமுங் கவனித்துப் பாருமென்ற குணவதியாரை நோக்கி, என் சொல்லிற் சிறிதும் பிழையில்லையென்ற செட்டியார் சொல்லை நம்பி, அம்மையார் முனிவரிடஞ் சென்று வணங்கிப் பெருமானே! தேவரீர் எனக்குக் கொடுத்துவருங் காசிலேதோ மாற்றுக் குறைவதாக வணிகர் சொல்லுகின்றன ரென்றனள். 
குணவதியே! கேள் நமது பெருமானுக்குத் தரும்பாலைத் திருடிக்கொண்டு நீரை கலந்து நினது இடையர் கொடுத்து வருகின்றார். அந்தக் குற்றத்தினை நீ நாடாமை யானாம் கொடுத்து வந்த காசில் மாற்றுக் குன்றவாசி யறிந்து ஈந்தோம் என்ற முனிவர் வார்த்தையினைக் கேட்ட குணவதியார் பதிலொன்றுங் கூறாது அஞ்சி முனிவர் கோமானே! ஏழையேனுடைய பாலினைத் தினங்கொண்டு சகத்காரண பிரபுவாகிய சிவபெருமானுக்கு உபயோகப்படுத்தி வந்தனை, பஞ்சமேலிட்ட காலத்தில் பொற்காசு உதவினை, பாலினீர் கலந்ததனைக் கண்டு அந்தப் பழியெனையடையா வண்ணம் வாசியறிந்தளித்தனை, நின்னருளுக் களவுமுண்டோ என்று கூறி விடைபெற்றுச் சென்று, இடையர்களை நோக்கிப் பாலினீர் கலந்ததென்னை யென்றுகேட்க, அவர்கள் கலங்கிப் பிழைபொறுத்தாள வேண்டுமென்று வணங்க, அவர்களிடத்திருந்தும் வணிகரடைந்த நஷ்டத்தினை வாங்கிக் கொடுத்து மறுபடியு முனிவரிடஞ்சென்று வணங்கிய குணவதியை முனிவர் நோக்கி, அன்பினுக்கி னியமாதே! நினது பக்தியினைக் கண்டு நாமுனிவராயிது காறும் வந்திருந்தோமென்று கூறிச் சிவலிங்க மிடமாக மறைந்தருளினார். 

அது கண்டு அவ்வம்மையார் அந்தோ! கெட்டேன் முனிவரை நமது தெய்வமென வறிந்தேனில்லை, என்று விருப்பினொடும் பரவிப்போற்றித் தாழ்ந்தெழுந்து இப்போய் வாழ்க்கைத் தவிர்த்தருள வேண்டுமென இறைஞ்சி அனலிற்படு மெழுகுபோல மனமுருகித் தொழுது நிற்க, பொன்போல் விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான் மயிலிளஞ் சாயல்போன்ற மலைமகளுடன் பளிங்கு மலைபோல் விளங்கும் இடபத்தின்மீது காட்சி கொடுத்தருள, அக்கணமே குணவதியார், தேவர்கள் பலர் மாரிபொழிய ஆகாயத்தில் தேவதுந்துபி முழங்க மண்ணுலகமும் விண்ணுலகமும் போற்றப் பரலோகஞ் சேர்ந்து சிவ சாம்பிராச்சிய மடைந்து வாழ்ந்தனள்.

புண்ணியமுனிவர்களே! சமஸ்தசரீர அந்தராத் மாவாக விளங்குஞ் சிவபெருமான் இத்தலத்தில் தன்னைத் தான் பூசைசெய்த செயலினை யாராயின், அன்பே யுருவா யமைந்த வம்மையாராகிய குணவதியார்மீது வைத்த கிருபையோ, திருப்பாசூர்த்தலத்து மகிமையோ, குடச விருட்சத்தின் கீழெழுந்தருளியிருக்கும் சோதி மயமான திவ்வியலிங்கத்தின் மாட்சிமையோ, மற்றையர்கள் செய்துவந்த பூசை போதாதென்றோ, நமது பெருமான் றிருவுளப் பாங்கினை நாமெங்ஙன மறிவோம். இவ்வாசி நாதராகிய சிவலிங்கப் பெருமானுக்குப் பாலபிடேகம் புரிந்தால் அதனாலுண்டாகும் புண்ணியம் இவ்வளவினதென்று கணித்தோதுதற்குப் பிரமனாலுமியலாது. அங்ஙனஞ் செய்பவர் இம்மையிலே மனைவி மக்கள் முதலாகிய சுற்றத்தார் செழித்தோங்கப் பெரும் போகம் அனுபவித்து, மறுமையிலே மாதேவன் வாழும் கைலை மலையில் கணங்களுக் குத்தலைமை பெற்று வாழ்வர். 

பால்வாசியறிந்த சருக்க முற்றிற்று.

-----------------------------------------------------------

வேயிடங்கொண்ட சருக்கம்

சிவபுண்ணியசீலர்களே! இக்கலியுகத்திலே வாசி புரியானது ஒரு காலத்திலே எங்கு மூங்கில்களானிறைந்து மிக நெருங்கிச் சிங்கம், புலி, யானை, கரடி முதலிய கொடிய மிருகங்கள் வாழுதற்கிடமாக விருந்தது. அம்மூங்கில் வனத்திலொரு பக்கத்தில் வேடுவர்கள் சிறிது காடழித்து நிலந்திருத்தித் தினை விளைவித்துக் குடியேறி வாழ்ந்துவந்தனர், இவ்வேடர்கட்குத் தலைவனாக வெள்ளாரை* என்னு மூரிற் குன்ற னென்னும் பெயருடையவனாய், பூர்வதவப் பயனால் முருகக் கடவுளிடத்து மிகுந்த பக்தியுடையவனாய், செல்வத்தில் மிக்கவனா யிருந்தனன். 
----------------------------------------------------
* வெள்ளாரை இவ்வூர் திருப்பாசூருக்கு வடகிழக் கிலுள்ளது.

இவ்வாறு இவ்வேடர்களிருந்து கொண்டிருக்கையில், அன்ன வாகனனும் அவன்றந்தையும் அனேக மாயிரங் காலந் தேடியுங்காணாது அவர்கட்கு அடிமுடி காட்டாது அமர்ந்த அண்ணலாகிய சிவபெருமான் ஒரு திருவிளையாட்டினைச் செய்யக்கருதி யொரு வெள்ளிமலை வடிவெடுத்து வந்தாலென்ன வொரு இடப வடிவங் கொண்டு வேடருடைய தினை நிலங்களை யெல்லா மழித்தனர். வேடுவர் தங்கள் நிலமழிவுற்றதற்குக் காரணமறியாது கடைசியாக இடபத்தின் குளம்பின் சுவடுகண்டு அவ்வழியே தொடர்ந்து தேடுகையில் அச்சுவடும் அவ்வனத்திலன்றி வேறிடங் காணாமையால், மயங்கி யதிசயித்து என்செய்வோம், இது காறுமித்தகைய நஷ்டநமக்கு நேர்ந்த தில்லை, இந்தவிட பத்தினைக் கண்டுபிடிப்பது எவ்வாறு, அதனைக் கொன்றாலல்லது நமக்குப் பிழைப்பில்லை. இம்மூங்கில் வனத்தி லொளித்திருந்து அதனை வெல்ல 
நம்மரசனாலன்றி முடியாது என்றெண்ணி வேடரெல்லாம் கூட்டங்கூடிக் கள், கிழங்கு, கனி, தினைச்சோறு முதலிய சேகரித்துக் கொண்டு, வெள்ளாரைக்குச் சென்று, குன்றனைக் கண்டு, தாங்கள் கொண்டு வந்தனவைகளைக் காணிக்கையாக வைத்துப் பணிந்து, நடந்த வரலாற்றினை யெடுத்துக்கூறி, இன்று வராவிடில் நாளைக் குத்தினை முழுவது நாசமாகி விடுமென்றிறைஞ்ச, அவர்கள் வேண்டுகோளுக் கிசைந்து, அக்குன்றன் வேட்டை மேற்செல்லத் தனது வேடுவரெல்லோருக்கு மறிவித்துக் காலிற் செருப்பிட்டுக் கையில் வில்லேந்தி, தோலுடுத்து, அம்புத் தூணியைத் தோளிற் றொங்கவிட்டு, சுரிகையைத் தாங்கி வெளிவர, இரு பக்கங்களிலும், வேடர்கள் மழு, வாள், வலை, வசம், பாச முதலிய சுமந்து, கொம்பு, துடி, வேய்ங்குழல் முரசு பம்பை முதலிய முழங்கப் பெருஞ் சமுத்திரம்போன்று தொடரத் தினைப் புனத்திற்குச் சமீபத்தில் வந்தனர். அப்போது இடபமானது சிங்கம் போற் கர்ச்சித்து இருகோட்டுப் பருவதம் போல நின்று, பூமி பள்ளமாகும்படிக் குளம்பினாற்கீறி, நான்கு பக்கங்களினு மோடியாடி* உன்னதமான பெரியவலுத்த மரங்கள் பலவற்றினை முறித்துத் தள்ளித் தினைக் கொல்லை முழுவதினையுஞ் சிதைத்தது. 
----------------------------------------------------------------
*இடபமாடியவிடத்திற்கு விடையூரென்று இன்னும் வழங்குகின்றது.

இதனைக்கண்ட வேடுவர்கள் கோபங்கொண்டு நெருங்கப் பயந்து திரும்பித் தங்கள் தலைவனிடங் கூற, அக்குன்றன் அக்காட்டினை நான்கு பக்கங்களிலும் காவல் செய்து வார் வளைத்து பாசம்வீசி, துடியினாற் சத்தம் விளைவித்து உட்புகுந்து திக்கனைத்துஞ் சேனையால் வளைந்து மெள்ளமெள்ள நெருங்கிச் செல்ல, இடபமானது முழங்கி ஆகாயமண்டலந் தாவியுலவ, அதனைக்கண்ட வேடுவர்கள் சிங்கத்தினைச் சூழ்ந்த யானை களையொத்தவர்களாகி இவ்விடபஞ்சீக்கிர நமது கையிற்கிட்டாதென வெண்ணி யோக காலத்தில், தங்களிடத்திலுள்ள அம்புகளை யெல்லாம் அவ்விடபத்தின் மீது மழையைப் போலப் பொழிந்தனர். அவ்வம்புகளி யாவும் அவ்விடபத்தின்மேல் புஷ்பம்போல விழுந்தன. இடபங் கர்ச்சித்து வேடர்களுடன் இந்த வுலகமெல்லா முய்யும் பொருட்டு மறைந்து விட்டது. 

குன்றன் உளம் வெருவி, ஒடுவாரை நிறுத்தி வாடி நொந்து வேடருடன் கூடித் தன்மனங்கொதித்துக் கோபித்துக் கூறுவான், ஐயோ! இனி நாம் செய்வது யாது? நாம் தோற்றனம், நம்மை யினி மதிப்பவர் யார்? இறக்கினும், பிறக்கினும் இவ்விடமே நங்கதியெனத் தீர்மானித்து அவ்விடபஞ் சென்ற இடந்தானெது காண்போமென்று எங்கணுமோடி மூங்கிற்காடு முழுவது நுழைந்து அலுத்துக் காணாது திரும்பி, மனமழிந்து, வாடி நிற்கையில், 
அவன் பூசிக்கும் வேலுடைச் சாமி தேவராளனா யெதிர்வந்து அக்குன்றனைத் தேற்றி, இதோ தெரிகிற மூங்கில் புதரினைச் சோதித்தால் அவ்விடபம் அகப்படுமென்று சொல்ல, அக்குன்றன் முதலிய வேடர்கள் அங்கனமே தேடவெண்ணிய மாத்திரத்தில் அவ்வேலன் மறைந்தனர்; வந்தவர் தங்கள் குலதெய்வமாகிய முருக வேளென்றெண்ணி யானந்தங் கொண்டு மூங்கில்களை யெல்லா மழித்துக்கொண்டு வருகையில், ஒரு பெருமூங்கில் வேறோடு மேருமலை சாய்ந்தாலென்னக் கீழே விழுந்தது. அதனடியிலிருந்து இரத்தம் ஆறு போல் பெருகியது. வேடுவர் பலரும் விழுந்து பதைப்புறக் கிடந்தனர். அப்போது சர்வலோகானுக்கிரக வற்புதவுருக் கொண்டு ஒப்பற்ற தனது சடைமுடியிற் சுவடு தோன்றவொரு சிவலிங்க ரூபமாய் முளைத்தனர். 

அக் கல்யாணசுந்தர மங்கள வடிவினைக் கண்ட அமரர்கள் ஆகாயத்தில் மலர்மழை சிந்தினர். தேவர் வித்தியாதரர், கின்னரர், கிம்புருடர், கருடர், காந்தருவர், சிவகணங்கள், யட் சர் முதலோர் சங்கர ஜய ஜய. சங்கர ஜயஜய வெனவார வாரித்தனர். அப்போது கிருபாநிதியாகிய சிவபெருமான் அழகிய நோக்கம் அவ்வேடர் கண்மீது படுதலும், அவர்கள் தேகத்தினிறம் வேறாகி வேதகத்தால் இரும்பு பொன்னானதுபோல வினையெலா நீங்கப்பெற்று,வாய்மை, ஞானம், அன்பு, மகிழ்ச்சி, ஆசாரம், சீலம், தூய்மை, ஒழுக்கம், மேன்மை, துறவு, அடக்க முதலிய அரிய செய்கைகளை யெல்லாமடைந்து விளங்கினர். அம்மூங்கிலின்கீழ் முளைத்த பெருமானுக்கு வேயீன்ற முத்தனெனு மருமைத் திருநாமம் விளங்கியது. பின்னர், அச்சேடச் செல்வர்களாகிய வேடுவர் அப்பெருமானது திருமேனியில் வெயில் முதலிய தாக்க வண்ண மூங்கிலினாலொரு பந்தர் வேய்ந்தனர். சுவாமியின் முடியினின்றும் பெருகி யோடிவருகிற உதிரத்தினைத் துடைக்கத் துடைக்க மேலுமேலும் பெருகி வருதலைக்கண்டு பயந்து கருணைக் கடலே ! நீயே யிவ்வுதிரம் பெருகினை நிறுத்த வேண்டுமென வேண்டிக்கொள்ள உடனே நின்றுவிட்டது. 

பின்னர் அச்சேடச் செல்வர்கள் தேவதேவனை யிறைஞ்சிச் செந்நீராலுண்டாகிய அனு சிதத்தினையாற்றிச் சோம தீர்த்தத்தில் விதியின் மூழ்கிப் பரமபதியைப் பூசைசெய்ய வெண்ணிச் சிவாகமங்களிற் குறித்தபடி திருமஞ்சன முதலிய திரவியந்தேடிப் பரிவுடன் பூசைசெய்தனர். திருவேணிநாதனாகிய திவ்விய சிவலிங்கவடிவினைப் பூசித்த தன்மையால் இச்சேடச் செல்வர் யாவருக்கு மேலவ ராயினர். இச் சுயம்புலிங்க மெழுந்தருளிய தலத்தினெல்லை ஐம்பத்தைந்து காதமாகும். இவ்வெல்லைக்குள் ஐந்து திருப்பதிகளைக் கொண்டு பெருமான் விளங்கினார். இத்தலங்களிலேயே மங்கலமுனி சோமன்முதலிய வனேகர் பூசைசெய்து முக்தி பெற்றனர். இச்சேடச் செல்வர் எங்கள் மூவா முதல்வனாகிய சிவபெருமானுக்கு ஆலயமும் மாடவீதிகளு மெப்போது உண்டாமோவென்று எண்ணி யொருநாள் நித்திரை செய்கையில் அருட்பெருங் கடவுள் அவர்கள் கனவிற்றோன்றிச் செல்வர்களே! வெகு சீக்கிரத்திலுங்கள் விருப்பத்தின்படி எனது அன்பனாகிய சோழனாம் கரிகாலன் இங்கு வந்து முடிப்பானென்று திருவாய் மலர்ந்தருளினர். நித்திரை விழித்துக் கனவினுண்மை யொருவரிலொருவர் கூறி மகிழ்ந்திருந்தனர்.


வேயிடங்கொண்டசருக்க முற்றிற்று.
-------

கரிகாலன்பதிகாணுஞ் சருக்கம். 

சிவானந்த முடையவரே! வேடுவர் தலைவனாகிய குன்றன் இடபத்தையெண்ணி வேட்டையின் மீதுற்ற போதே, அவ்விடபத்தினா-லழிந்ததினை யனைத்துமுன் விளைவினைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக விளைந்திருப்பதனைக் கண்ட அத்தினையினை விளைத்த வேடர்கள் இஃதென்னை! ஆச்சரியமாக விருக்கிறது. இத்தகைய விளைவினை நாமெப்போதுங் கண்டதில்லையேயென, அச்சங் கொண்டு நடுநடுங்கிப் பொறி கலங்கி ஏழுநாள் வரையில் உணவின்றிப் பதுமைகளைப்போல விளங்கினர். இவர்களைத் தேடிக்கொண்டு வந்த சில வேடுவர்கள் இவர்களையிட்டுக் கொண்டுபோய் வேடுவத் தலைவனும், மற்றையருமெங்கேயென்று கேட்க, அவர்கள் பதில் கூறியமாத்திரத்துக் கேட்ட அவர்களும் அச்சமுற்றனர். மற்றைய வேடர்கள் இவர்களைக் கண்டு இவர்கள் சுலபத்தில் தமது வசமாகாரென்று எண்ணியிருக்கையில் ஒரு மறவன அவர்களை நோக்கிச் சொல்லுவானாயினான் எயினர்களே! காஞ்சி மாநகரத்தில் கரிகாலச் சோழனெனுமொரு அரசனுளன். அவன் மனுநீதியும், தருமசிந்தையும் எக்குலத்தினரையும் காக்குங் குணமும், சந்திர சடாதாரியாகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மாறாத அன்புமுடையவன். அவன் சிவபூசை செய்தன்றி யொ ருபொழுதும் புசிப்பதில்லை, சுயம்புலிங்கமெங்குளதோ அவ்வவ் தலந்தோறுஞ் சென்று தரிசிக்கு நியமமுள்ளான். சிவலிங்கத்தையும், சிவகணங்களையும், விபூதி, உருத் திராட்ச பஞ்சாட்சர செபமுள்ள அடியார்களைக் காணும்போது சிவபெருமானைக் கண்டதாக நினைந்து தொழுவான். சிவனடியார்கள் விரும்பிய எப்பொருள்களையும் இல்லையென்னாது கொடுப்பான். தன்னரசின் கீழ் வாழுங்குடிகள் எவ்விதத்திலும் வருந்தா வண்ணம் காத்து வருவானென்றனன். 

இதைக்கேட்ட வேடுவர் அகமகிழ்ந்து ஆசை தூண்ட நமக்கு இவ்வுண்மையினை யுணர்த்த வல்லவன், அச்சோழனே யென்னத் தீர்மானித்து, நடந்தவற்றையெல்லா-மவனுக்கு மறிவிப்போமென நாடி, புலித்தோல், மயிற்பீலி, மான், மரை, கரடி, புலி,வேட்டை நாய், யானைக்கோடு,முத்தம், தேன், முதலிய காணிக்கையாகக் கொண்டு, காஞ்சி நகர் சென்று சோழனது மாளிகை வாயிலிற் சேர்ந்து தங்கள் வரவை அரச கோமானுக்குத் தெரிவிக்கும்படி வாயில் காப்பாளருக்குக்கூற, அவர்களரசனுக்குத் தெரிவித்து, அவன் கட்டளையின் படியுள்ளே விடுப்ப வேடுவர்கள் சென்று, வெண்குடை நிழற்ற, சோதிமயமான மகுடமின்ன, இரு பக்கங்களிலும் கவரி வீச, பலவரசர் சூழ்ந்து போற்ற, இரத்தினமயமான சிங்காசனத்தின் மீது இந்திரனுக்குச் சமானமாக வீற்றிருக்கும் சோழ மகாராஜனைக் கண்டு, இரு கரங்களையும் கூப்பிப் பூமியில் விழுந்து இறைஞ்சித் தாங்கள் கொண்டுவந்த திறைகளை முன்வைத்துப் போற்ற அவர்கள் முகத்தினை அரசனோக்கி வேடுவர்களே! 
நீங்களிங்கு வந்த காரணமென்னவென வினாயினான். பூ மண்டலாதிபதியே! பாவங்களை யொழித்துப் புண்ணியத்தினை விளைவிக்கும், பாலாற்றின் வட கரையிலே, ஈ நுழையாத வேய்க் காட்டிலே, நாங்களொரு பக்கத்திலே விளைத்து வந்த தினைப் புலத்தினை அழித்த ஒரு இடபத்தினைப் பிடிக்கும் பொருட்டு எங்கள் தலைவன் குன்றன் என்பான் நெருங்குகையில் அவ்விடப மறைந்து விட்டது. 

அதுகாணாது தியங்குகையில் முருகவேள் தேவராளனாய் எழுந்தருளி அவ்விடப மறைந்த மூங்கில் புதரினைக் காட்ட அதனை வெட்டுகையில், ஒரு மூங்கிலின் கீழ் இரத்த வெள்ளம் பெருகியது. அது என்னவெனநாட, வேத வேதாந்தங்கள் இன்னுங் கண்டு தெளியாத சிலம்பணிந்த சேவடியினையுடைய சிவபெருமான் சிவலிங்க ரூபமாக முளைத்திருக்கக் கண்டனம். இடபத்தாலழிந்த தினைப்புலம் இருமடங்கு அதிகமாகத்தானே விளைந்து விட்டது. இதனைக் கண்ணுற்ற வேடர் சிலர் அவசமாகி மருள்கொண்டு விளங்குகின்றார். இந்த உண்மைகளைச் சந்நிதானத்தில் விண்ணப்பிக்க வந்தனம். என்று கூறி வேடர் பணிந்தனர். சோழன் கேட்டமாத்திரத்தில் உடல் பூரித்து, ஆனந்தங் கொண்டு, அதிசய மெய்தி, அப்பதியைத் தரிசிக்க உவகை கொண்டு எழுந்து தனது மாளிகையை நீங்கி, இரதக ஜதுரகபதாதிகள் தன்னைச் சூழ்ந்துவர ஒரு அழகிய இரதமேறி வேகமாகச் சென்று மூங்கில் வனஞ் சமீபத்த மாத்திரத்தில் முன்னம் அவசமாகி மருள் கொண்டிருந்த வேடுவரெதிர் வந்து விபூதியளித்து ஆசிர்வாதங் கூற, விபூதியேற்று வணங்கி, அவர்களுண்மை தெரிந்துகொண்டு, அப்பாற் சென்று மூங்கிலடியில் முளைத்த முழுமுதற் கடவுளாம் முன்னைப்பழம் பொருட்கு முன்னைப்பழம் பொருளாகிய சிவபெருமானைத் தரிசித்துப் பூமியின்மேல் தண்டாகாரமாய் விழுந்து எழுந்து நிற்கையில், மறுபடியுஞ் சிவலிங்கப் பெருமான்றிரு முடியினின்றும் உதிரம் பெருகியது. அரசன் அதிர்ந்து மூர்ச்சித்துக் கீழ்விழுந்து மெள்ள வெழுந்தவுடன் இரத்தப் பெருக்கு நின்றுவிட்டது. அரசன் வாழ்ந்தேன்! வாழ்ந்தேன்! என்று மகிழ்ந்து கூத்தாடிப் பாடிப் பரவிப் போற்றித் துதித்து வாழ்த்திச் சமீபத்திலிருந்த சேடர்கள் முன்னடந்த விருத்தாந்தங்களை யெல்லாங் கூறக்கேட்டு, ஆ! ஆ! நாயினுங் கடையேனான இந்தச் சிறியனையு மதித்து உங்கள் கனவில் வந்து கலையெலாங் கடந்த கண்ணுதன் மூர்த்தி கழறினரோ? என் புண்ணியமே புண்ணியம், என் சென்மமே சென்மம், எனது கிருபாநிதி கட்டளை யிட்டவாறே ஆலயமாதி செய்து முடிப்பேன் என்றுகூறி, அரசன் அப்பதிக்குப் பாசூரென்று திருப்பெயரிட்டழைத்து அப்பெருமான் கருணையை யெண்ணி யெண்ணி ஆனந்த பூரிதனாய் வாழ்ந்து வந்தனன்.

கரிகாலன் பதிகாணுஞ் சருக்கமுற்றிற்று.

-------------------------

காளியைச் சிறையில் வைத்த சருக்கம்

சிவஞானிகளே! கண்ணுதலடியைக் கனவிலு மறவாக் கரிகாலச் சோழன் ஒருநாள் தன் சமீபத்திலிருந்த ஒரு சேனைத் தலைவனை நோக்கி எனக்குத் தெரியாத அரசர்களியாராகிலு முண்டோ வென்றனன். அவன், அரசே மோகூர் என்னும் பட்டினத்தில் ஒரு குறும்பனுளன் என்றனன்; கேட்ட சோழன் ஆ! ஆ! நாமிந்தவுலகினை யாளும் வித மிக நேர்த்தி நேர்த்தி யென்று கூறிக் கடுங்கோபங் கொண்டு, சிரித்துத் தலையசைத்து, இதுகாறு நமக்கு இச் செய்தியைத் தெரிவிக்காத தென்னையென்று மந்திரிகளைக் கேட்டனன். அவர்கள் பயந்து அரசனடியிற் பணிந்து எங்களையாண்டறூளும் மணிமுடி மன்னனே! மன்னிக்க வேண்டும், தயைகூர்ந்து எங்கள் வார்த்தையைக் கேட்டுச் செவி கொடுத்தருளுக. மோகூரையாளும் குறும்பன் மூவுலகத்தராலு மழிவானல்லன். அவன் விநாயகர், சுப்பிரமணியர், வயிரவர், காளி இவர்கணால்வர்களையும் வெகுகாலம் பூசிக்க அவர்கள் பிரத்தியட்சமாயினர். அவர்களிடம் பல வரங்களைப் பெற்றுத் தனது கோட்டைக்குக் காவலாக நான்கு திக்கினும் நான்கு கோயில்கள் கட்டி அவர்களை யெழுந்தருளச் செய்து தனக்கு ஒருவரு நேரின்றியாண்டு வருகின்றான். 
மோகூரையாண்டு வருகிறபடியால் அவனுக்கு மோகனென்னும் பெயருண்டு. இத்தகைய அவன் தவ வலிமையினைக் கண்டு சந்நிதானத்தில் விண்ணப்பியாது இருந்தன மென்றனர். மந்திரிகளே! அந்நான்கு தேவர்களும் அக்குறும்பனுக்குத் தஞ்சமென்றீர்கள், இங்கென்னை யாண்டுகொண்ட பாசூர் நாதன் எளியனோ! உங்களுக்குள்ளவறிவு இவ்வளவுதானா?

"என்னையாண்டருளுங் கோவையெள்ளினு ளெண்ணெய்போல, 
மன்னியேயெங்குநின்றுமலர்ந்தபேரொளி யானானை, 
யுன்னுருவாருள்ளநீங்கா தொளிர்பெரும் பருதியானை, 
யன்னையிலினியனாகியடைவதற்கருளுவானை."

"மாலயன் றேடுங்காலை வளரழற்பிழம் பானானை,
காலமூன்றறிந்துநின்றகடவுளைநடுவுமீறு, 
மூலமுமில்லா தானைமூன்று மொன்றிலாதானை, 
வேலைசூழ், ஞாலம் போற்றவேயிடங்கொண்டான்றன்னை."

"அருவமாயுருவுமாய்மற்றகண்டிதமாய்நின்றானைப்
பெருமிதக்கணங்களங்கிபெற்றொளிரவிசோமன்கள்
மருவரிமுதலாந்தேவர்வருந்திடவடுச்செய்தானை
யுருகுளத்தவர்கள்வேண்டிற்றுதவியபெருமான்றன்னை"

"கூற்றினைமார்க்கண்டற்காய்க் குழைந்தசேவடியினானை, 
மேற்றிகழ் தேவர்வேண்ட வேலைநஞ்சயின்றான்றன்னை, 
போற்றிடுமெவர்க்கும்பொய்யாப் பொருளதாம் புராணன்றன்னை, 
நாற்றிசைபரவப்போற்றுநானவற் கெளியன்போலும்."

என்று இருகரங்களையுமொன்றுடனொன்றுதாக்கி முடிதுளக்கி, கண்கள்சிவந்து விரைந்தெழ, அமைச்சர்கள்,அரசனே! நாங்கள் யுத்தத்தினுக்குச் செல்கின்றோம் தேவரீர் வேண்டாமென்று தடுக்க, அவர்களைப் பார்த்து அமைச்சர்களே! பயமுடையவர்கள் போருக்குப் போகுந் தகுதியுடையரோ? வஞ்சமான மந்திரிகட்குப் பேசவும் வாயுண்டோ? உங்கள் வார்த்தையினைக் கட்டி வையுங்களென்ற வரசனைப் பணிந்து, எங்கள் பிழையினை மன்னித்தருள வேண்டுமென்று மந்திரிகள் கூறிய மாத்திரத்து, நாமுமுடன் செல்வோம் படையினைச் சித்தஞ் செய்யுங்களென்று அரசன் கட்டளையிட்டனன். 

யுத்தகோலங் கொள்ளும்படி எங்குமுரசறைந்தனர். இதைக்கேட்டுப் பல நாளாகப் போரின்றித் தினவு கொண்டிருந்த புயங்களையுடைய வீரர்களாகிய காலாட்களும், யானை, குதிரை, தேர் முதலிய நடத்துபவரு மொருங்குசேர்ந்து பிரயாணமாகினர். வேல், வில், வாள், தண்டு,பாசம், சூலம், பரசு, கைவேல், குலிசம், மங்கி, சுரிகை, சொட்டை, முசலம், வேல் முதலிய பலவாயுதங்களை யேந்திய வீரர்கள் நெருங்கினர். பிரளய காலத்திற் கடல் கொப்புளித்துப் பிரவாகித்தாலென்ன, சேனைகளாரவாரித்து மிடை ந்தன. சோழனுமொரு இரதமேறிப் பிரயாணப்பட்டனன். இவ்வாடம்பரத்துடன் போருக்கு வருவதைக் கேள்வியுற்ற மோகன்றனது கோட்டை வாயல்களைக் காத்துக் கொண்டிருக்குந் தேவர்களை வணங்க அவர்கள் மோகனே! அஞ்ச வேண்டாம், சண்டைக்குச் செல்க, உன்றனக்கு அபஜெயம் வாராத வண்ணம் நாங்கள் வந்து உதவி செய்வோம் என்றனர். கேட்ட மோகன் ஆனந்தங் கொண்டு யுத்தசன்ன தனாய்த் தனது அபாரமான சேனையுட ன்வந்து எதிர்த்தனன். இருவரசர் படைகளும் ஒருவரோடொருவர் யுத்தஞ்செய்ய ஒருவர்மேல் ஒருவர் பிரயோகஞ் செய்யு மாயுதங்களால் பலர் மாண்டனர். எங்குமிரத்த வெள்ளம் பரவியது. இறந்தவர்கள் போக மீதி படையுடன் மோகன் மிகுந்த ஆவேசத்துடனெதிர்க்கச் சோழனுடைய சேனைக் காவலரவர்கள் படைகளைத் தாக்கி முறித்து மோகனே! நீ திரும்பி நின் பட்டினம் போய் இளைப்பாறுமென்று விரட்டினர். 

மோகன் பின் வாங்கிச் சென்று தன்னுடைய தேவர்கள் மலர்த்தாளேத்தி வணங்க அவர்கள் நால்வரும் பிரயாணமாயினர். காளி மற்றைய மூவர்களை நோக்கித் தென்றிசைவாயில் என்னுடைய காப்பிலிருக்கிறது. அங்கு நடக்குஞ் சண்டைக்கு நீங்கள் வர வேண்டாம் நானே போய் வெற்றிகொண்டு வருவெனென்று வீராவேசத்துடன் கிளம்பிச் சோழனெடும் படையினைப் பார்த்து இந்த யுத்தத்தில் மாய வேண்டியவர்கள் என்முன் வாருங்கள், மற்றையர் இக்களம் விட்டுப்போய் விடுங்களென்று கூறித் தனது சூலாயுதத்தினைச் சுழற்றி ஆகாயத்தில் வீசி, விற்படையினை யெடுத்து வெங்கணைகளைத் துண்டி மண்ணுலகமும் விண்ணுலகமு நடுநடுங்கச் சோழன் சேனையைக் கிட்டினள், அடுபடை கெட்டதெனவே முட்டினள், இமயனுங் குலைகுலைய வாள்கொண்டு யானை வீரர்களையும் குதிரை வீரர்களையும் வெட்டினள். அப்போது சோழனும் வாட்படைகளும் அமைச்சரும் யானை, குதிரை, தேர் வீரர்களும் காளியைச் சூழ்ந்து கொண்டனர். இங்கிது நன்று நன்றென உக்கிரத்துடன் காளியானவள் பார்திதுச் சில படைகளைப் பிரயோகிக்க, மண்ணன் படைகள் மாயமாய்ப் போயின. பிணக் குவியல்கள் மலைகள் போற்குவிந்தன. இரத்தமெங்குஞ் சொரிந்தன, நீண்முடி யெங்கும் விரிந்தன, வெம்படையெங் குமுறிந்தன, பருந்துகளெங்குந் திரிந்தன. நால்வகைச் சேனைகளும் வீடின, கவந்தங்க ளோடின, கூனிகள் நிணத்தை யருந்தியாடின, காளியின் பாதமேத்திப் பாடின, இங்ஙனந் தன் படைகள் சிதைவுறச் சோழனதன் படையினை நிறுத்திக் காளிமுன் சீக்கிரஞ் சென்று நினது வலியை யின்றே யொழிப்பேனென்னக் கேட்டுக் காளி இடியெனச் சிரித்து எனது அஞ்சாமையினையும் வீரப் பாட்டினையும் புவனமெங்கு மதித்து இருக்கின்றது. என்னைத் தொழத் தகுந்த மனிதனாகிய நீ வென்றிடுவேனென்று வீரம்பேசி யெதிர்ந்தனை, இன்று உன்னை இவ்வம்பினால் யாருங்காணக் கொன்றிடுவேனென்று கூறிச் சீறினள்.

அவ்வார்த்தையினை கேட்ட சோழன் வில்திரம் பேசிவிட்டதனாலேயே வென்றதாகுமோ? நீ சத்திதான் நானொரு மனிதன்றான் தப்பில்லை என்னுடனமர் செய்ய வருவாயென்றனன். காளி பல அம்புகளையேவினள், சோழன் அவைகளையெலாந் தடுத்தனன். காளி மேலுஞ் சில கணைகளையேவ சோழன் ஒருவாளியாலவைகளை யுமாற்றி ஆழியொன்று விட்டுக் காளியின் கரத்திலுள்ள வில்லினைத் துணித்தனன். காளி வெகுண்டு தண்டு ஒன்றினைச் சோழன்மேல் விட அவனதை விலக்கிக்கொண்டு பல கணைகளைப் பிரயோகிக்கக் காளி அவை தன் மேலுறாதபடி மாற்றி கொண்டனள், 
சோழன் சரமாரி பொழிந்தனன். காளி விட்டவொரு வேலானது அவைகளையெல்லா மறுத்து அக்கினியைக் கக்கிக் கொண்டு சென்று சோழன் மார்பிற்பாய அவன் சிவாய என்றவுடன் அது இரு துண்டமாயிற்று. சோழன் ஒருவேலினைக் காளிமேல் விட அது அவள் கவசத்தினைத் துணித்தது. அது கண்டு அக்காளி மிகவுங் கொடியதாகிய முத்தலைச்சூலா யுதத்தினை யெடுத்து அரசன் முடியினைக் கொண்டுவாவெனப் பிரயோகித்தனள். தாருகாசுரனைச் சம்மாரஞ் செய்யச் சங்கரனால் அவள் பெற்ற அப்படையானது அக்கினிப் பிழம்பாய், எதிர்த்த தெய்வப் படைகளையெல்லாம் விழுங்கிக் கொண்டு வரக்கண்ட சோழன், வாடியோடி வேயிடங் கொண்ட விமலனார் திருவடியில் விழுந்து அப்பனே! ஐயனே! அண்ணலே! நினக்கெதிரானவர்களெங்கு மின்மையால், நின்றிருவடிக் கன்பு பூண்ட எனக்கெதிரானவர்களுமிரார் என்றெண்ணியே காளியுடன் போர் செய்ய, என்படை பின் வாங்கின, யானுன தடைக்கலம், உன்னையல்லாது எனக்கு நற்றுணை வேறுண்டோ? இவ்வுண்மை யினையறிந்து அன்னையைக் காட்டிலுமினிய நீ யிப்போது அருள் செயாவிடில் என்னுயிரினை யிவ்விட த்திலேயே விடுவனென்றனன். 
அப்பொழுது, அன்பர் கருதியவற்றை யளிக்கு மண்ணலாகிய சிவபெருமான் இரங்கிச் சோழனே! நினது பெரும்படையுடன் செல்லுக நாமும் உன்னுடன் ஒரு அத்திரமாகி வருவோம். ஆகாய வழியாக நாம் வருதலை எமது இடபக் கொடி முழங்கிக் காட்டும் என்று அசரீரி பிறந்தது. இதைக்கேட்ட மாத்திரத்தில் வேந்தன் மலைகளை யொத்த தனது புயங்களைக் கொட்டி உய்ந்தேன்! எனவாரவாரித்து மூங்கிலடியில் முளைத்த மூவா முதல்வனே! அடியேனுக்குப் படைபல கிருபை செய்தருள வேண்டுமென்றனன். 

அக்கணம் ஆண்டவனருளினால் பலபடைகள் தனனை நெருங்கின. அரசன் கண்டு அரனடியில் வீழ்ந்து பணிந்து எழுந்து வெளிவந்து தன் சேனைகளையுஞ் சேர்த்துக் கொண்டு அண்டஞ் செவிடுறச் சேனை யெங்கணு மார வாரிக்க அரசன், நாராயண விருதய ஜெபமந்திரமாகிய ஐந்தெழுத்தினை யுச்சரித்துக் கொண்டே இரதமேறிக் காலாக்கினி ருத்திரனென வருங்கால், ஆகாயத்தில் விடைக்கொடி யினொலியினைக் கேட்டுள மகிழ்ந்து சிவனே! சிவனே! என வார்த்தனன். அமைச்சர்கள் அர அர அரவென அழைத்தனர். வானெலாம்பூமழைநிறைதரத் திக்கெ லாந் துந்துமி நாதங்கள்சூழ, வேதமோடரியயன் துதி ப்ப மாதவர், பூதவேதாளங்கள்போற்ற, சங்கநாதங்கள் பல்லியம், வீணைகடழங்க,முனிகணந்தோத்திரமெடுப்ப ஆதிநாயகன்வந்தனன், அமலநாயகன்வந்தனன், வேத நாயகன்வந்தனன், விமலநாயகன் வந்தனன், நீதிநாயகன் வந்தனன், நிமலநாயகன் வந்தனன் என்று பொற்சின் னம்பொலிந்தன, இம்மங்கள ஒலியினைக்கேட்ட காளி உதட்டினை யதுக்கிச் சோழனுக்கு முக்கண்மூர்த்தியுத வியாய்வந்தனரெனமுனிந்து, உக்கிரத்துடன், அண்ட முகடுமதிரக் கொக்கரித்துப் படைகளையெல்லாம் வருக வெனக்குறித்து, சூலம், வாள், கேடயம், அம்பு, சாப ம், பாச முதலியவற்றை யெத்திக்கினும் வீசி, ஊழி காலத்துத் தீயோவெனக் கண்களிலும், செவிகளிலும், நாசியிலும், வாயிலும், கனலைக்கக்கி, அண்டமியாவு நடுக்குறச் சோழன் முன்னே வந்து சொல்லுவாளாயினாள் 


மனிதனே! நீ பழையபடி யோடிப்போவையோ. அல்ல து போர் செய்குவையோவென, கேட்டவேந்தன், ஒ எ காளீ! சர்வ லோகைக சரண்யனாகிய சங்கரனென்பாலுளன் நின்னை யொரு பொருளாய் மதிப்பனோ? என்றனன். உடனே போர் விளைந்தது. சில கணங்கள் மலைகளைப் பிடுங்கிப் பறையடிக்கும், சில கணங்கள் கடலை யுண்டேப்ப மிடும், சில கணங்கள் பாதாளத்துச் சேடனைப் பிடுங்கும். இத்தகைய பூதங்கள் படையெங்கேயெஙகே யென்றெ திரிட்டன. மேருவை யொப்பாளாகிய காளி மற்றைய மலைகளை யொப்பாராகிய சேனையுடன் பூமியினடந்து வந்து அரசனே! என்னுடன் யுத்தஞ் செய்ய வருபவன் நீயோ? சிவனோ? என்றனள். நானே வருவனெனச் சோழன் கூறி திருப்பாசூர்நாதன் பசிய சரணைப் பரவிக் காளியின் சேனைமேற் பாய்ந்து கடும்போர் செய்தனன். காளியு மிகுந்த சினங்கொண்டு அதிக ஆவேசத்துடன் அம்புமாரி பொழிந்தனள். அப்போது அரசன் ஆற்றலுக்கு அஞ்சிக் காளியின் சேனையெல்லாங் கால் வாரிக் கொண்டன. சோழன் கருணைத் தடங்கடலாகிய பாசூர்நாதன் அளித்த தேரிலேறி அப்பெருமான் கொடுத்த ஆயுதத்துடன் காளிக்கு எதிர்செல்ல அவள் சோர்வுற்று எதிர் நின்றாள். உடனே அவளைப் பாசத்தாலிறுகக் கட்டித் தனது படையினை யேவி மோகன் சிரத்தினைக் கொண்டு அவன் பொருள்களை யெல்லாங் கிரகித்தனன். அப்போது யுத்த களத்திலிறந்த சேனை யனைத்தும் தேவ தேவனாகிய மகாதேவனருளால் பிழைத்து எழுந்தன. சோழன் காளியினைப் பாசூர்நாதன் சந்நிதானத்தில் விடுத்து இவளை என்ன செய்வது என்றனன். முன்னமே இவ்வூர் எல்லைகளைக் காவல் கொண்டிருக்கு மாகாளி, பாசூராளி, பொற்றாளி, எல்லையாளி என்ற நால்வருடன் இவளையும் விலங்கிட்டு, இவ்வாலயத்துள் வைப்பாயென நாதன் கட்டளையிட, அங்ஙனமே செய்து காஞ்சிக் கரிகாலச் சோழன்றன்னிக ரின்றிப் பரம சாம்பவ கோடிகளுளொருவனாய் வாழ்ந்து வந்தனன்.

காளியைச் சிறையில் வைத்த சருக்க முற்றிற்று.

----------------------------

அரவமாட்டிய சருக்கம்

சிவபாத விருதயர்களே! வேதமணம் வீசும் வேயினடியின் முளைத்த விமலனார் அனுக்கிரகம் பெற்று அரசு செய்துகொண்டிருக்குங் கரிகாலச் சோழன் மோகூர் காளியினைச் சிறையினில் வைத்த செய்தியைக் கச்சியூர்க் குறும்பனெனு மொரு(1). சமணன் கேள்விப்பட்டுப் பொறாமை கொண்டு அச்சோழனைச் சூழ்ச்சியில் வெல்லவேண்டு மென்று கருதி, தந்திரங்களில் வல்ல சில சமணர்களை யழைத்துக் கூற அவர்கள வ்வாறே செய்து முடிப்போமென வாக்களித்துச் சென்று ஒரு மந்திரயாகம் (2) வளர்த்தனர். அவ்வியாகத்திலிருந்து சிவந்த மேனியினையும், வளைந்த பற்களினையும், விரிந்த மயிரினையும், ஏழு நாவினையுமுடைய ஒரு அக்கினி தோன்றி, இங்கென்னை யழைத்த காரணமே தென்றது, காஞ்சி மாநகர்க் கரிகாலச் சோழன் திருப்பாசூரிலிருந்து கொண்டு மோகூரினைச் செயித்து, அவ்வூரினுக்குக் காவலாக விருந்த காளியாம் பெண்ணைச் சிறை வைத்தனன். அவனைத் தண்டித்தல் வேண்டுமென்று சமணர் கூற, அக்கினியவர்களைநோக்கி, அரசனீதி தவறு வானாயின் அக் குற்றமியாருக்காகும், அதைக் கவனிக்க வேண்டிய அவசிய நமக்கில்லை, சத்தியினையே செயித்து அவளைச் சிறை வைத்தானென்றால் அவனைச் செயிக்க நம்மால் முடியுமோ? நீதி குன்றாத பேருக்கு நிகழ்வது வெற்றியே யாகும், நீதியில் வழுவினோருக்கு நிகழ்வது தோல்வியாகும். சோழன் நீதி தவறாதவனாகையால் செயம் பெற்றான். நீதியைத் தவிறிய காளி தோல்வியுற்றாள். விரத பங்கங் கருதாத குலத்தினராகிய நீங்கள் இங்ஙனந் தீமைசெய்ய நினைக்கலாமோ என்றது. 
--------------------
1. இக்கச்சியூர் காஞ்சீபுரமன்று. திருப்பாசூரினு க்கு வடக்கிலிருந்த சமணர்பாடி.
2. இவ்வியாகம்வளர்த்தவிடம் கொழுந்தனூரென் று இப்போது வழங்குகின்றது.

சோழனுடைய வல்லமையினைக் கேட்டக் கச்சியூர்க் குறும்பன் பயந்து அவனை வெல்லும்படி யெங்களைக் கேட்டுக் கொண்டனன், நாங்களும் அங்ஙனமே செய்வதாக வாக்களித்தனம். ஆகையால் நீ இப்போது ஒரு பாம்பாக வேண்டியதென்று சமணர்கள் கேட்டுக் கொண்டவுடன் அவ்வக் கினியானது உடலை முறுக்கிச் சீறி, ஒலி படம் விரித்து பற்களினின்று நஞ்சுமிழ்ந்து, வாயைத் திறந்து, வாலாட்டி, கண்களினெருப்புப் பொழிய மண்மேல் பாம்பாகி ஆட்டியது. அதனையொரு குடத்திற் றங்கும்படி கேட்டுக் கொள்ள அது அவ்வண்ணமே குடத்தி னுழைந்தது. அரவே! கரிகாலச் சோழன் இந்தக் குடத்தைத் திறந்தவுடன் மலைபோ லெழும்பிச் சபையிலுள்ள அரசர் முதலான யாரையும் விழுங்கிடுவாயாகவெனக் கேட்டுக்கொண்டு, அதன் சம்மதத்தினையும் பெற்று, அக்குடத்தின் வாயைமூடி அப்பாம்பினை வாழ்த்திக் கையாற் றொழுது போற்றி, எங்களெண்ணத்தினை முடிக்க நீயல்லால் வேறில்லையெனப் பலதரமியம்பி மந்திரத் தடையினை விட்டு, பாம்படைத்த பாற்குடத்தினைக் கச்சியூர்க் குறும்பனிடஞ் சமணர்கள் சேர்த்தனர். 

அவன் கண்டு மகிழ்ந்து ஒரு திருமுகமெழுதிப் பாற்குடத்துடன் தந்திரத்தில் வல்ல சிலதூதர் வசமாகக் கொடுத்துச் சோழனுக்கு அனுப்பி வைத்தனன். அத்தூதுவர்கள் பாசூருக்கு வருவதற்கு முந்திக் கற்பக நாட்டுத் தேவேந்திரனை யொத்த கரிகாலன் கனவினில் வேயீன்ற முத்தர் வெளிவந்து அன்ப! நாளைய தினம் நினது சபைக்குப் பாம்படைத்த பாற்குட மொன்று வருமென்று கூறினர். சோழன் விழித்தெழுந்து பெருமானின் கருணை பெருக்கை வியந்து தனது நித்தியக் கடன்களை முடித்துக்கொண்டு மந்திரி பிரதானிகள் சூழச் சபையில் சிங்காசனத்திருந்து தான் கண்ட கனவினைத் தனது மந்திரி முதலியவர்கட் கெடுத்துச் சொல்லினர். 

அவர்கள் கேட்டு நமக்குப் பரங்கருணைத் தடங்கடலாகிய பாசூர்நாதனுளன், பயமில்லையென்று பேசிக் கொண்டிருக்கையில், கச்சியூர்க்குறும்பனனுப்பிய பாற்குடத்தினைத் தூதுவர்கள் கொண்டுவந்து சபையில் வைத்து, திருமுக வோலையினையீந்து தொழுது நின்றார்கள். அவ்வஞ்சகக் குறும்பனோலையை அரசன் படித்துப் பார்த்துத் தூதுவர்களே! நீங்களென் செய்வீர் பாவம், ஆலகாலமுண்ட ஆண்டவனென்பாலிருக்க விந்த அல்ப செந்துவாகிய பாம்போவெனைக் கொல்வது என்றுகூறி, இப் பாற்குடத்தினை நாம விழாவிட்டால் பயந்ததாக நிந்தனை வருமே என்றாலோசித்துக் கொண்டிருந்தனன். அப்போது, குவலயமெலாம் போற்றுங் கொன்றை வேணியங் கடவுள் ஒருகுடுமி வேடந் தாங்கினர், நெற்றியிற் சிந்தூரப் பொட்டிட்டு, வெண்ணீறுபூசி, கருடப் பச்சையிருகாதிலு சேர்த்து, முகரோம முறுக்கி, பாம்புகளை மாலைகளாகப் புனைந்து, பிரம்பேந்தி, பட்டணிந்து, இடது காலில் விருது கட்டி, சீடர்கள் பாம்புபெட்டிகளைத் தாங்கிவர, சிவிகையேரி செயகண்டி, தாளம், முரசு, கொம்பு, காளம், மணி முதலிய முன்னார்ப்ப, நான்கு வெள்ளிக் கம்பங்களின் மத்தியிலொரு பொற்கம்ப முயர, அதில் கசை, வாள், சம்மட்டி, கண்டை, உலக்கை, சேட்டையின் கொடிகள் முதலிய கட்டி, பரிசனமுன் கொண்டு செல்ல, சீடர்கள் யாரும் அம்பேந்தி ஆடிப்பாடித் தங்கள் வல்லபங்களை யோதிவர, பிடாரர் குருபரன் வந்தான், வந்தானென்று சின்னந் தாரை யூத, இராஜ ராஜேந்திரனாகிய கரிகாலச் சோழன் செய்த பூர்வத்தவப் பயனே திரண்டு ஒருவடி வங்கொண்டு வந்தாலென்ன, இராஜ சபையில் வந்தெழுந் தருளினர் மன்னர் மன்னவன் அக்குடிமிவேட முடையாரைத் தரிசித்த மாத்திரத்தில் இரு கரங்களையுந் தன்னை மறந்து சிரமேற்கூப்பி, சொற்குழறி, உரோமஞ்சிலிர்க்க, மந்திரியின் முகத்தை நோக்கி இக்குடுமியாவர்? எனது பூர்வ வினையை யொழிக்கவந்த புண்ணிய மூர்த்தியோ? என்ன, அக்குடுமி வேந்தனைப் பார்த்து, மன்ன! அரவ மாட்டவின்று நாம் வந்தோம் அங்ஙனஞ் செய்யவுமக்கு இச்சையோ? என்றனர். வாடிய பயிரினுக்கு மாரிவந்து தவுமாறு போல நாம் நாடிய குடிமியிங்கு நமக்கு நண்ணினரென்று அரசன் மகிழ்ந்து குடுமியாரே! இந்தப்பாற் குடத்துப் பாம்பை யாட்டுவீராக வென்று முன் வைத்தனர். 

பிடாரர் தலைவர் ஈங்கிது நமக்கு அரியதொழிலோ வென்று அந்தப் பாற்குடத்தை யவிழ்த்து, தட்டி, சிறிது தூர நீங்கி, பாம்பெதிர் நோக்க வூதி, மூடியைத் திறக்க, அதினின்றும் மலையினைப் போலெழும்பி, படம் விரித்து நின்றிடக் கண்டோரோடினர். அரசனும் நெஞ்சங்கலங்கினன், பாம்பாடலை காணும் பொருட்டுத் தேவர்கள ஆகாயத்தினெருங்கினர். குடுமியானவர் பாம்பினை நோக்கி அழைப்ப, அது திருவடியில் வணங்கி, உடல் குறுகி, படஞ்சுருங்கி நின்றது. குடுமி ஒரு முழந்தாளை யூன்றி ஒரு முழந்தாளை நீட்டி, ஒரு கரம் பாம்பைத் தூண்ட, ஒரு கரமடக்கி, மதுரகீத முண்டாம்படி, இசைக்குந் தகுந்த ஏழுதுளைக ளமைந்த மூங்கிலினைச் சுரைக்காயிற் சொருகிய வொரு கருவியினைத் தனது திருவாயினில் வைத்தூத, மலை களுருகின, கடலலையினை மோதாது அசைவற்றது, சூரியன் சந்திரனாயினன், காற்று சலனமற்றது, அக்கினி குளிர்ந்தது, 
சராசரப் பொருள்களனைத்தும் உணவு மறந்து பகை மறந்து ஒருதன்மையாயின, குடுமியானவர் பாம்பினை யெடுத்து எறிந்து எறிந்து ஆட்ட, நிருபன் கண்டு குடுமியே! நினக்கு வேண்டுவது யாது? என்ன இப்பாம்பினை நான் சுற்றிவிடில் இது சூழ்ந்த வட்டமெலாமெனக்கு நல்குதியென்ற குடுமிக்கு அங்ஙனமே தந்தோமெனத் தராபதி தாரை வார்த்தனன். உடனே சோமசுந்தரக் கடவுள் பாம்பினைச் சுழற்றி விட்டனர். அது ஒரு காத தூரம் போய் வளைந்து வந்து விழுந்தது. மறுபடியும் பிடித்துக் கச்சியூர்க் குறும்பனுடல் மாளச்செய் என்று எறிந்திடலும், அது பாம்புருவமாறி அக்கினி யுருவங் கொண்டு போய வனை யழித்தது. அரசர் கோமான திசயித்தனா, அண்டர்கள் கற்பகப் பூமழை பொழிந்தனர், அந்தரதுந்துமி யாகாயத்தில் முழங்கின, அரிய யனோடமரரெலாந்றொழுதேத் தித்துதி செய்தனர், வந்த குடுமியார் சிவிகை யேறிக் கோயிலிற் பிரவேசித்தனர்,உடன்வந்த பரிசன மறைந்தனர், நிருபன் ஆலயத்திற் சென்று ஆனந்த பரவசனாய்ப் பாடி, கண்ணீர் சொரியவுருகி, நெஞ்சழிந்து உடனடுங்கி நின்றவுடன், அரசனே! அரவின் வரவினை நின் கனவிற் கூறினோம், பின்னரதை யெடுத் தாட்டினோம், 
ஆகையால் நீ யெனக்குத் தத்தஞ் செய்ததனை மறவேல் என்றொரு அசரீரி பிறந்தது. பெருமானே! இவ்வண்ட மெலா முன்னதாக விருந்தும் என்னையொரு பொருட் டாக வெண்ணிவந்து சிறிது பூமி கேட்பதும் ஆச்சரியம். இங்ஙனங் கேட்பது அடியேனை யாட்கொள்ளவேண்டியே யன்றி வேறில்லை, நீயென்மாட்டு வைத்த திருவருளை யென்னென்று வியம்புவேன், எங்ஙனம் புகழ்வேன், என்று பலவாறு மொழிகுளறித் தொழுது புறம்போந்து, பாம்பு சூழ்ந்த வட்டமனைத்தும் பாசூர்ப் பெருமானுக்கென்று கற்சிலையிலெழுதி நாட்டிக் களித்தனன். பசுபதியாகிய பரமன் சுழற்றி விட்ட பாம்பினது தலை விழுந்த விடம் தலைக்காஞ்சியூரென்றும், குண்டி விழுந்தவிடம் குண்டியூரென்றும், உதப்பை விழுந்த விடம் உதப்பையென்றும் வால் விழுந்தவிடம் அரன்வாலென்றும், ஆடயெரிந்த விடம் ஆடரவின் பாக்கமென்றும், பாம்பினுடலில் பெரும்பாகம் விழுந்தவிடம் பெரும்பாக்கமென்றும் இப்போதுங் கூறிவருவர்.

அரவமாட்டிய சருக்க முற்றிற்று.

-----------

திருமலிசெல்வச் சருக்கம். 

சிவத்துக்கினிய செல்வர்களே! கருங்காலனையுதைத்த செங்காலனாகிய கண்ணுதலோன் கழலிணை மறவாக் கரிகாலச்சோழன் சிற்ப சாத்திரங்களில் வல்ல சிற்ப சாஸ்திரிகள் பலரையழைத்து, பவளச் செவ்வாய் பார்வதி சமேதனாகிய பாசூர்நாதனுக்கு வேண்டிய லாலயமாதி புரிகவென்று கட்டளை யிட்டனன். அச்சிற்பிகள் வலம்புரி விநாயகருக்கும், சுப்பிரமணியருக்கும், பாசூர் நாதருக்கும், தங்காதலியம்மனுக்கும் தனித்தனி விமானங்கள், மண்டபங்கள்,மதில்கள், கோபுரங்களுண்டாக்கி, வீதிகள், மாடங்கள்,சதுக் ங்கள், சந்திகள், சாலைகள், தெற்றிகள்,மன்றங்கள், பொதுக்கள், குன்றங்கள், சூளிகைகள், கூடங்கள் முதலிய, அன்னவாகனனுங் கண்டதிசயிக்க அமைத்தனர், 
முன்னர் தேவதேவனாகிய சிவபெருமான் திருவருளினால் மருள்கொண்ட சேடச்செல்வர் இந்நதகரின் அலங்காரங்களைக் கண்டு, நாம் நினைத்ததை முடித்தன னம்பரஞ்சோதியென்று கவலை தீர்ந்து எம் வாழ்வை மாற்றி நின்னிணையடிக்காளாக்குவா யெம்பெருமானே! என்று தோத்திரஞ்செய்து, எண்ணருங் கைலை யிலிருப்பிடங் கொண்டனர். இக்காட்சியினைக்கண்ட வரசர் ஈங்கிவர் பெற்றபேறு யார் பெற்றாரென்று வியந்து, சிவாலய பூசை முட்டாது நடந்தேறிவரச் சிலரை நியமித்து, நால்வகைச் சாதியினரையுங் குடியேற்றினன். பின்னரொரு நாள் மனத்தினும் வேகமான குதிரையேறி வடக்கு நோக்கிச்சென்று, வடவரையைச்சாடி, அதன்மீது தனது புலிக்கொடியை நிறுத்தி, நிடதமலை, ஏமகூடம், மகாகயி முதலிய தரிசித்து, இமயத்துந்தனது கொடியைநாட்டி, கங்கையையடைந்து, காசியாலயத்திளெழுந்தருளியிருக்கும் ஆதி சைவர்களாகிய குருக்கள்மார்களைத் தரிசித்து வணங்கி அவர்கட்குத் திருப்பாசூர்நாதன் திவ்விய சரித்திரங்களை யெல்லாமெடுத்துரைத்து அருமறை வேதாகமங்களை யுணர்ந்த அந்தணர்மணிகளைத் தேரின் மேலெழுந்தருளச் செய்துகொண்டு, வழியிலுள்ள பெருங் கருணையாளன் பிரபல தலங்களையெல்லாந் தரிசனஞ் செய்துகொண்டு, தேவர்கள் சூழ, இந்திரன் வருவதுபோலத் திருப்பாசூரிற் பிரவேசித்து, சிவாலயப் பூசனையைச் சிவாகமங்களிற் குறித்தபடி சைவ வேதியர்களைக்கொண்டு நடத்தி வந்தனன். சோழன் வடவரைக்கேகும்போது தன்னுடன் வலமிடந் தோள்போல் வந்த சோழகுமரருக்கும் சைவருக்கும், அப்பதிசூழெல்லையினை மூன்று பங்காக்கியீந்தனன். எம்பெருமான் பூசையென்றுந் தடைபடாது நிறைவேறிவர ஈக்காட்டுக் கோட்டத்தில் உத்தம குலோத்தமரான பழைய வேளாளர்களே யென்றுணர்ந்து அவர்களுக்கு முதன்மையீந்து அவர்களுள் குற்றமொன்றில்லாத மாதவரொருவரை நாடி, அவருக்கு உருத்திர தேவரெனப் பட்டங்கட்டி, மடாதிபத்திய முந்தந்து, மகேசுர பூசை வழுவாது நடந்தேறி வரச்செய்து சகல செல்வங்களும் வளர வைத்தனன்.

நிற்க, சத்தியுடன் சிவாலயம் உயிரோடு மெய்யுணர்வாயும், பரிவாரங் கரணங்களாயும், செய்குன்றிஞ்சி பொறிகளாயும், தத்துவங்கள் மாடங்களாயும், அகழி பூதவுடலாயும், நான்கு வாயல் நான்கு முகங்களாயும் பாசூரானது நான்முகனை யொத்து விளங்கும். ஆகாயத்தினைத் தாங்குவதுபோல உயரந்திருக்கும் வீடுகளின்மீது சந்திர காந்தக் கற்களினாலமைத்த இடம், மலைகளின் மீதுள்ள சுனைகளையொக்கும், அங்கு வருஞ் சந்திரனைக் கண்டு உருகியருவி போல வீழ்கின்ற புனலானது தேவாதி தேவனாகிய சிவபெருமானது சந்திர சடா பாரத்தினின்று மோடிவருங் கங்கையினை யொத்திருக்கும். வெள்ளியினாலும் பொன்னினாலும் பளிங்கினாலும் விளங்கு மாடங்களின்மீது, பொன்னாலும் நீலத்தாலும் பச்சையாலுங் கட்டியுவள அரமியங்கள் அன்னம் கருடன் இடபம் இவைகளின்மீது அயன்மால் இந்திரனேறியிருத்தலை யொத்திருக்கும். முற்காலத்தி லிந்திரனால் சிறகரியுண்ட மலைகளனைத்தும் வீதிகளிலடைந்து நிறைந்து பூமியிலிருந்து ஆகாயத் தளவு முயர்ந்து அவ்விந்திரனை வெல்லத் திருப்பாசூர் நாதனிடம் வரம்பெற்று வானத்தினையே நோக்கிப் பெரும்படை யெழுந்து யுத்தஞ் செய்ய மனிதராகிய படையைத்தன்மேல் வாழுதலை நிகர்க்கும்படியாக வொத்த வீடுகளெங்கும் விளங்கும். 

இத்தகைய வீடுகளின்மீது பொற்குடங்களுடன் கண்ணாடியை வைத்திருப்பது மலையின்மீது சந்திரன நாயகிகளும் விளையாடி யொருவர்மேலொருவர் துருத்திகொண்டு குங்குமநீரைவீச உபரிகைகளில் அந்நீர் தடாகம்போலத் தேங்க அதிற்சந்திரன் படிந்து தன்வெண்மேனி செம்மேனியாக விளங்குவன். பொன்னாற்குயிற்றி மணியாலிழைத்து ஓங்கிய மாடங்களின்மீது வண்டுகள் தேன்சொட்டுங் கற்பகப் பூவிலிருக்கும் நிலைபெற்ற அழகிய மின்னலைப்போல இடையினை வாய்ந்த மாதர்களுடைய மலர்மென் கூந்தலில் உள்ள மதுவினை யுண்டு மறுபடியுந் தன்னுலகை நாடாது இசை பாடித்திரியும். மானினை யேந்திய செவ்விய திருக்கரத்தினை வாய்ந்தவரது நெற்றிக் கண்ணால் வெந்து பொடியாக வீழ்ந்த மீனக் கொடியினையுடைய மன்மதன் பஞ்ச பாணங்கள் வீதிகடோறு நெருங்கிய இளைஞரிடத்திடமாகக் குலவும். விண்ணை முட்டிய நீண்ட மாடத்தெங்கும் அன்னநடை மடவார் நிற்கை, மயில்கள் பல நீண்ட மலைகளின் மேற்றோன்றுதல் போலும். மாதர்கள் மூட்டு மகிற்புகை சேர்ந்த மாளிகைகள்மீது காதுகளிலுள்ள மகரக் குழைகளின் பிரகாசம் தேக முழுதும் வீச நின்றுகொண்டிருத்தல், மேகந் தங்கிய வுயர்ந்த கிரிகளின்மீது மின்னற் கூட்டங்கள் விளங்குதலை யொக்கும். சந்திர மண்டலத்தினைத் தோய்ந்த மாடங்களின்மீது நெருங்கி வரிசையாக விளங்கு நீண்ட வெண் கொடிகளாடுவது, ஆகாய கங்கையிலுலவு மீன்களையொக்கும், அன்றியும் இத்திருப்பாசூரே மோட்சவீடு இவ்விடம் யாவரும் வாருங்களென்று பல வுலகத்தவர்களையுங் கூப்பிடுதலை யுமொக்கும், பிராமணர்கள் உபரிகைகளின்மீது ஏறியிறங்குவது தேவர்கள் ஆகாயத்தினின்றும் வீடுகளைச் சோபானமாகக் கொண்டு இறங்குவதனை யொக்கும். வளங்கணிலவு மணி மாடங்களிலுள்ள பிரகாசம் பொருந்திய பலகணி வாயல்தோறும், ஆபரணங்களை யணிந்த மடவார் முகங்கள் தோன்றுங் காட்சியானது, அனேகமான சந்திரர்கள் தங்கள் களங்கங்களை யொழித்துக்கொண்டு மலைகள்மேல் தோன்று தலை நிகர்க்கும், அவ்விடங்களிலுறையு மன்னங்கள் மறைவாக விருந்து அம்மாதர் கணடையினைக் கற்க முடியாது நேரே சமீபத்திலிருந்து பழகுதற்கு வாழுதலை நேரும், ஓங்கியவெழு நிலையோடுங் கூடிய மாடங்கள்தோறும் வாழும் பெண்கள் பகலுமிரவும் பாசூர்நாதனையே புகழ்ந்து பாடும் பாட்டினொலியும், நடன சாலைகளிலே நடிக்கு முருத்திர கணிகையரின் சிலம்பொலியும், பல்வாத்தியங்களி னொலியும், கல்வி பயிலுவோர்களொலியும், வேதவொலியும், வீதிகடோறும் தேர், கரி, பரி, ஆள்கள் சஞ்சரிக்கு மொலியும் கூடிக் கடலொலியினு மதிகப்பட்டு விளங்கும். எந்நிலத்திலு முண்டாகும் பொருள்களெல்லாம் இங்குக் காணப் படலால் கடலினையும், இறவாத பேரின்பத்தினைப் பயத்தலாற் சிவலோகத்தினையும், செல்வம் பொலிந்திருத்தலால் அளகா புரியினையும், அழகினால் பொன்னுலகத்தினையும், சகலபோகங்களு மமைந்திருத்தலினால் போகபூமியினையும், இப்பாசூரொத்தலினால் இதன் மகிமையினை யென்னவென யாவராலெடுத்துரைக்கக்கூடும். குங்குமமமைந்த புயங்களோடுங் கூடிய நாயகர்களையும், கோவைப்பழம் போன்ற வதரத்தினை வாய்ந்த அழகியவளையல்களைப் பூண்ட நாயகிகளும், சந்திரனையொத்த நெர்றியினைவாய்ந்த சேடியர்களும், எப்போதுங் குதூகலத்தோடு வாழுகின்றவர்களும், பரிசுத்தம் பொருந்திய நந்தவனங்களும், பிரகாசம் பொருந்திய வேதிகைகளும், தாமரையில் வசிக்கும் இலக்குமியின் வாசமும், மழலைத் தீஞ்சொல்லுமே யெங்கணுங் காணக்கூடிய அருமையான மங்கல நிறைந்த காட்சியினை யாவருக்குங் கொடுத்துக் கொண்டிருக்கும் இத்திருப்பாசூர்.

திருமலிசெல்வ சருக்கமுற்றிற்று.

----------

திருவிழாச் சருக்கம். 

சிவகரணங்களையுடைய முனிவர்களே! கவின்பெறுநீறும், கண்மணிமாலையும், கல்லாடையுமுடையார் கண்ணுதன் மூர்த்தியேயென்று, கனிந்து வணங்குங் கரிகாலச்சோழன், பண்ணவர்போற்றும் பாசூர்நாதனுக்குப் பல திருவிழா வெடுத்துப்பரிந்து, கண்களாரத் தரிசிக்க ஆவல்கொண்டு, அனாதியிற் சதாசிவத்தைம் முகமொன்றி லவதரித்து அவராலேயே தீட்சிக்கப்பெற்ற ஆதி சைவர்களாகிய குருக்கள்மாரை யழைத்து வேதபாஷியங்களாகிய காமிகாதி யாகமங்களின் கருத்தை விசாரித்து, வைகாசிமதி பூச நக்ஷத்திரத்தில், அழகெலா மொருங்கமைந்த ஆலயத்தில் விடைக் கொடியேற்றி, நான்கு மாடவீதிகளையு மலங்கரித்து, எங்கணு மகர தோரணங்கள்கட்டி, பற்பல மணிகளிழைத்த தம்பங்கடோறுங் கமுக மரங்களும், பசுங்குலை வாழை மரங்களு நட்டு, வீதிகளின் சந்திகளில் பூப்பந்தல்களைத் தூக்கி மாளிகைகளின்மீது வெண்கொடிகளை வரிசை வரிசையாக நிறுத்தி, ஒவ்வொரு வீட்டின் திண்ணைகள் மீதும் பூரண கும்பங்களை வைத்துத் தெருக்கடோறும் பனிநீர் 
தெளித்துப் பின்னர், தனிப் பரம்பொருளரந் தந்தையாகிய பாசூர்நாதருக்கும், தனித்தாயாந்தங் காதலியம்மைக்குங் காப்பணிந்து, பலவாபரணங்களையும், பல பீதாம்பரங்களையுந் தரித்து, பத்துத் தினங்களும் பொன்மயமான பற்பல விமானங்கள்மீதும், பற்பல வாகனங்கள்மீதும், விசித்திர வலங்காரமமைந்த இரதத்தின் மீதும் காலையிலும் மாலையிலும் மாடவீதி வலம்வரவெழுந்தருளச் செய்வித்தனன். 

ஒவ்வொரு நாளும், ஆனைமுகன், ஆறுமுகன், சண்டேசர், அம்மையாருடன் அருட்பெருங்கடவுளா மாண்டவனாகிய பாசூர் நாதன் காலையில் வீதிவலம் வந்த பின்னர்; இரவில் மகா சைவர்கள் வேதபாராயண மோதவும், குங்கிலிய தூபமெங்கணும் வீசவும், சிவனடியார்கள் நாமாவளிகள் கூறவும், வெண்கொற்றக் குடைநிழழைச் செய்யவும் சாந்தாற்றி நெருங்கவும், சாமரம் வீசவும், எள் விழுதற்குஞ் சிறிதுமிடமின்றி அன்பர்கணெருங்கி வரவும்; சூரியன், சந்திரன் நட்சத்திரம், யானை, யாளி, சிங்கம் போன்ற தீவர்த்திகள் முன்னும்பின்னு மாயிரமாயிரமா யேந்தவும்; தாளம், தண்ணுமை, திண்டிமம், சின்னம், சங்கம்,எக்காளம் பூரி, குடமுழவு, முரசு, பறை, கைப்படகம், யாழ், பேரிகை, காகளமுதலிய வாத்தியங்கள் முழங்கவும் வீதிவலம் வந்தனர். 
பிராமணமாதர் அட்ட மங்கலத்துடனே யெதிர்கொண்டனர். தேங்காய், தாம்பூலம், காசு, கற்பூரத்துடனே ஒவ்வொருவீட்டிலும் தீபாராதனை செய்தனர். சிலவடியார்கள் பாடினர், கிண்கிணியோசை, சிலம்போசை, மேகலை யோசை மிகுந்தோங்க அன்னநடைபோல நடையும், அரம்பையர் போலழகுமுள்ள நாட்டியப் பெண்கள் கூட்டங் கூட்டமாய்க் கூடியெங்கு நாட்டிய மாடினர்.

குடிசாரணியக் குருபரன்வந்தான்
புண்ணியாவர்த்தப் புராரிவந்தான்
மாணிக்கமாபுரி வள்ளல்வந்தான்
பிரளயாகலபுரப் பெம்மான்வந்தான்
மாயாபுரியில் மகிழ்வோன்வந்தான்
தங்காதலிபுரத் தாணுவந்தான்
அபயபுரத்தங் கண்ணல்வந்தான்
சோமபுரத்துச் சூலிவந்தான்
பரஞ்சுடர்ப்பதியின் பரமன்வந்தான்
மங்கலமாபுர மகேச்சுரன்வந்தான்
மால்வினைநாச வாணன்வந்தான்
வாசபுரியில் வாழ்வோன்வந்தான்
பாசூரெங்கள் பண்ணவன்வந்தான்


என இத்தலத்துப் பதின்மூன்று நாமங்களையுஞ் சொல்லி அன்பர்கள் தோத்தரித்து ஆரவாரித்தனர். இத்தகைய ஆடம்பரங்களுடன் பாசூர்நாதன் வீதிவலம் வந்து ஆகாயத்தினையளாவிய வெழுநிலைக் கோபுர வாயலையடைந்தனர். ஆதிசைவர்கள் நிவேதனத்துடன் தீபாராதனை காட்ட, உருத்திர கணிகையில் தாளவிசை மருவிய நடனமிட, ஆலத்தி சுழற்றி எச்சரிக்கை சோபனம் பாடினர். துவிதிய சம்புவாகிய நந்தியெம் பெருமான் வேத்திரப் படையுடன் முன்னே செல்லச் சிவாலயத்துட் பிரவேசித்துப் புண்ணியமூர்த்தி திருவோலக்கங் கொண்டெழுந்தருளியிருந்தனர். இவ்வகையாகப் பத்துத் தினமும் விழாக்கோலங் கொண்டு, பாலாற்றின் தீர்த்தமாடி, மவுன பலிதூவி, பிற பூசையு மாற்றித் தூக்கிய விடைக் கொடியை யிறக்கினர். வைகாசிமாதம் பிரமோர்ச்சவ முடிந்த பின்னர், ஆனிமாதம் வசந் தோற்சவமும், ஆடிமாதம் உலக மாதாவாகிய தங்காதலியம்மையாருக்கு ஆடி பூரவுற்சவமும், ஆவணிமாதம் மலைமகள் மகிழ்ந்தளித்த மூலாதாரப் பொருளாமத குஞ்சரத்திற்குச் சவுத்தி யுற்சவமும், புரட்டாசிமாதம் நவராத்திரி யுற்சவமும், ஐப்பசி மாதம் சூரனை பிளந்த சுந்தரவடிவேலேந்திய சுப்பிரமணிய சுவாமிக்குச் சஷ்டி யுற்சவமும், கார்த்திகை மாதம் ஞானதீப வுற்சவமும் மார்கழி மாதம் அகில லோகங்களையு மாட்டிவைக்கு மற்புத ஆனந்தத் தாண்டவ சபேசனுக்கு அபிஷேக தரிசன வுற்சவமும், தைமாதந் தெப்பலோற்சவமும், மாசிமாதம் சர்வசங்கார காலத்தில் பிரம விஷ்ணு முதலிய தேவர்களெல்லாம் பிணங்களாய்க் கிடக்கத்தனித்து நின்ற தற்பனிரவு காலமாடுஞ் சிவராத்திரி யுற்சவமும், பங்குனிமாதம் திருக்கலியாணசுந்தரம கோற்சவமும் நடத்திவைத்தனன். 

அன்றியும், நித்தியத் திருவிழா, மழைக்காலத்தில் பவித்திரோற்சவம், முன்பனிப் பருவத்தில்,விடியகால பூசை, பின்பனிப்பருவத்தில் திருப்பொன்னூசல் முதலியனவு நிறைவேற்றினர். இத்திருவிழா காலங்கடோறும், கரிகாலச்சோழன் அனேகமான பூதானம், கஜதானம், அசுவதானம், கோதானம், கன்னிகாதானம், சுவர்னதானம், அன்னதான முதலிய செய்து வந்தனன். 

பின்பு ஒருநாள் அரசவள்ளல் மங்கல தீர்த்தத்தில் நீராடி, அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, திருநீறுந் திருக்கண்மணி மாலையுந் தேகமெலாம் விளங்க வணிந்து, இருகைகளுஞ் சிரசின் மேற்குவியத் தோன்றிய பேரன்புடனே, செல்வத்திருக்கோபுர வாசலிற்சென்று, வணங்கியுள்ளே பிரவேசித்து முறையாகப் பிரதட்சணஞ் செய்து தெய்வத் தன்மையுடன் நிகரின்றியோங்கு மூங்கிலினடியில் தேசோமயனாந்தக் கடல்போல் விளங்குங் கருணாநிதியான பாசூர்நாதனைக் கண்ணாரக் கண்டு, கருத்திடமாகக் கொண்டு, அஷ்டாங்க பஞ்சாங்கமாக அடிக்கடி வணங்கி, மகிழ்ந்து, ஆனந்தக்கண்ணீர் சொரியத் தானே முளைத்த தயாபர மூர்த்தியாகிய முத்தையனைத் துதி செய்யத் தொடங்கினன். சங்கரா! நான் என்னிஷ்டமெல்லா நிறைவேறியது. சம்புவே!நான் பாக்கியவானாயினேன், சாம்பசிவனே! நான் பெற்றபேறு எவர்பெற்றார் சதாசிவனே! அநேக கோடி சென்மாந்திரங்களிலடியேன் செய்த புண்ணியங்களனைத்தும் இப்பிறப்பிற் பிரயோசனமாயிற்று, என்குல தெய்வமே! உன்னிடத்தில் மாறாத பத்தியே யெனக்கென்றும் வேண்டும் ஆரமுதே! உன்னைத் தெய்வமென்றுணராத மூடர்கள் என் வமிசத்திலெந்நாளும் பிறவாதிருக்க வேண்டும். அன்றியும் இவ்வற்புதத் தலத்தில் நடக்குந் திருவிழாவை பவத்தினைச் செய்பவரும், செய்யப் பொருளுதவி செய்பவரும், தரிசனஞ் செய்பவரும் இம்மையில் தனமும், பந்துசனமும் பெற்று மறுமையிற் சிவானந்த வாழ்வினையடையும்படி கிருபை புரிந்தருள வேண்டுமென்றனன். "அங்ஙனமே யாகுக" என்று அசரீரிபிறந்தது, சோழன்கேட்டு அடக்கக்கூடாத ஆனந்தங் கொண்டு, விடைபெற்று, மெல்லமெல்லத் திரும்பிப் புறம்போந்தனன்.

ஆலயத்திற்கு வேண்டிய வரும்பணியெலா நிறைவேற்றி, கற்றவர்களெல்லாம் போற்றுங் காமாட்சி சமேதராகிய கண்ணுதலா மேகாம்பர நாதர் வேத விருட்சமாகிய மாவடியி லெழுந்தருளப் பெற்ற காஞ்சி மாநகரத்திற் சென்று, பஸ்ம, ருத்திராட்ச, பஞ்சாட்சராதி சைவ தர்மங்களை நடாத்தி யுலகுபுரந்து புத்திர பௌத்திரருடன் வாழ்ந்து வந்தனன்.

சிவபோகத்தபசிகளே! நூறுகோடி பிரமர்கள், ஆறு கோடி நாரணர்கள், எண்ணீலா விந்திரர்கள், தலை மாலைகளையே மலர்மாலைகளாகக் கொண்ட தயாநிதியாகிய திருப்பாசூர்நாதன் திவ்விய மங்களகரமான மான்மியத்தினை, எனது அருட்குருவாகிய வாதநாராயண முனிவர் அடியேனுக்கு உபதேசித் தருளியபடி யின்று உங்கட்குச் சொன்னேன். இப்புராணத்தினைப் படிப்பவர்க்கும் செவியிற் கேட்பவரும் பிறருக்கெடுத்துச் சொல்லுபவரும், பொருளுரைப்பவருக்குப் பொன்னாதியீபவரும், அருசித்துப் பூசிப்பவரும் யாவரும் இம்மையிற் பதினாறு பேறும்பெற்று மறுமையிற் தங்காதலியம்மை சமேதராகிய பாசூர்நாதன் திருவடி நிழலிற்றங்கி வாழ்வரென்று சூதமுனிவர் நைமிசாரணியர் கேட்க அருளிச்செய்தனர்.

திருவிழாச்சருக்க முற்றிற்று.
---------

வாழிவிருத்தம். 

தங்காதலித்தாயோ டனுதினமுமொருவேயின் தனிநிழற்கீழ்ப்
பங்காகித் திருப்பாசூர் தனிலமர்ந்தோன் சேவடியும்பகர்துதிக்கை
யெங்கோனுமறுமுகனுஞ் சுத்தாத்துவித சைவத்தெழில்விளக்கு
மங்காதவெண்ணீறுங் கண்மணியு மைம்பதமு வாழ்கவாழ்க.

திருப்பாசூர் புராணம் முற்றிற்று. 

சிவஞானயோகிகள் திருவடிவாழ்க.


 

Related Content