logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஆத்மார்பண ஸ்துதி - கருத்துரையுடன்

(அப்பைய தீட்சிதர் இயற்றியது)


 

கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ | பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ || 1 ||

கருத்துரை :-

இந்த விசித்திரமான பிரபஞ்சத்தைப் படைத்தவரும் தேவர்களுக்குள் முதல்வனுமான உன் அபாரமான மஹிமைகளை யாரால் தான் அறிய முடியும்? ஆயினும் பக்தர்களுக்கு அந்த ஈசுவரனும் சுலபர் ஆகிவிடுகிறபடியால் பக்தியையே முன்னிட்டு நான் உம்மை ஸ்துதி செய்யப் போகிறேன். என் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.

க்ஷித்யாதீனாமவயவவதாம் நிச்சிதம் ஜன்ம தாவத் தன்னாஸ்த்யேவ க்வசன கலிதம் கர்த்ரதிஷ்டானஹீனம் | நாதிஷ்டாதும் ப்ரபவதி ஜடோ நாப்யனீசஸ்ச பாவ: தஸ்மாதாத்யஸ் த்வமஸி ஜகதாம் நாத ஜானே விதாதா || 2 ||

கருத்துரை :-

ஒரு குடம் கர்த்தாவான குயவனாலும் அதிஷ்டானமாகிற மண்ணினாலும் உண்டாகிறது. அதுபோல் இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டிக்கும் ஒரு கர்த்தாவும் அதிஷ்டானமும் அவசியம் தேவை. ஜடபதார்த்தம் சேதனனின் ஸம்பந்தமில்லாவிடில் உருமாறாது. ஆனால் யாராவது ஒரு சேதனன் இந்தப் பிரபஞ்ச சிருஷ்டியை செய்திருக்கலாமோவென்றால், தன்னுடைய கர்ம பலன்களுக்குக் கட்டுப்பட்ட எந்தச் சேதனனும் இதைச் செய்திருக்க முடியாது. மாயையும் ஜடமாதலால் அதனாலும் இந்தக் காரியம் இயலாது. ஆகையினால் எல்லாவற்றிற்கும் முதல்வனாயும், ஸ்வயம் ஸர்வ சக்தியுடையவனுமாகிய நீயே இந்த லோகத்தின் ஸ்ருஷ்டி கர்த்தா என்பதற்கு என்ன சந்தேகம்?

இந்த்ரம் மித்ரம் வருணமனிலம் பத்மஜம் விஷ்ணுமீசம் ப்ராஹுஸ்தே தே பரமசிவ தே மாயயா மோஹிதா ஸ்த்வாம் | ஏதைஸ்ஸார்த்தம் ஸகலமபி யச் சக்திலேசே ஸமாப்தம் ஸ த்வம் தேவ:  ச்ருதிஷு விதித: சம்புரித்யாதிதேவ: || 3 ||

கருத்துரை :-

உன் மாயையினால் மோஹமடைந்த பற்பல ஜகத் காரணவாதிகள் ஸ்வர்க்கத்திற்கதிபதியான இந்திரனையும், உலகத்திற்கு உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் தரும் சூரியனையும், பாபங்களைப் போக்கும் ஸமுத்ராதிபதியான வருணனையும், பலவானாகிய வாயுவையும், ப்ரம்மா விஷ்ணு ருத்திரன் முதலியவர்களையும் உலகத்தின் ஸ்ருஷ்டி கர்த்தாவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கூறிய தேவதைகள் எல்லோரும் உன் மகிமையின் ஒரு திவிலைக்குள் அடங்கிப்போனவர்கள். வேதங்களால் குறிப்பிடப்பட்ட ஆதியான பரம்பொருள் சகல சிருஷ்டிக்கும் காரணம் பரமசிவமாகிய நீயே.

ஆனந்தாப்தே: கிமபி ச கனீபாவமாஸ்தாய ரூபம் சக்த்யா ஸார்த்தம் பரமமுமயா சாச்வதம் போகமிச்சன் | அத்வாதீதே சுசி திவஸக்ருத் கோடிதீப்ரே கபர்தின் ஆத்யே ஸ்தானே விஹரஸி ஸதா ஸேவ்யமானோ கணேசை: || 4 ||

கருத்துரை :-

முன் சுலோகத்தில் இந்திரன் முதல் மும்மூர்த்தி வரையிலுள்ள ஸகல தேவர்களும் எவருடைய சக்தி லேசத்தில் முடிவடைகின்றனரோ, வேதங்களால் உணர்ந்தோதற்கரிய அவ்வித ஆதி தேவனாகிய பரமேசுவரனுக்கு, எவ்வித ஸ்வரூபம், எந்த ஸ்தானம், எவ்வித பரிவாரங்கள் என்பதை இந்த சுலோகத்தில் விரித்துரைக்கின்றார். அரூபமான பரமேசுவரனும் லோகானுக்ரஹத்தின் பொருட்டு லீலா விக்ரஹமெடுத்துக் கொள்ளுகிறார் என்பது சாஸ்திரங்களின் கொள்கை. ஜலம் உறைந்து பனிக் கட்டியாவது போல் ஆனந்த வெள்ளம் கெட்டியாகி ஒரு ஸ்வரூபமானது என்று சொல்லக்கூடியது பரமேசுவரனின் ஸ்வரூபம். அவருடைய சக்தியே உமையாகி அவரோடு சேர்ந்தது. அவர் இருப்பதோ கோடி ஸூர்யப்ரகாசமான ஒரு ஸ்தானம். அது ஸ்ருஷ்டிக்கு முன்னால் பரமேச்வரனின் இச்சையால் ஆனது. அந்த ஸ்தானம் அத்வாக்கள் என்ற தத்துவங்களுக்கு அப்பாலுள்ளது. வர்ண, பத, மந்த்ர, புவன, தத்வ, கலா என்பன ஆறு அத்வாக்கள், மூலாதார, ஸ்வாதிஷ்டான, மணிபூர, அனாஹத, சிவபதமடைய வேண்டியவர் செல்ல வேண்டும். அந்த ஸ்தானத்தில் தன் அம்சம் பொருந்தின சிறந்த கணங்களால் ஸேவிக்கப்படுகிறார்.

த்வம் வேதாந்தைர் விவிதமஹிமா கீயஸே விச்வநேத: த்வம் விப்ராத்யைர் வரத நிகிலைரிஜ்யஸே கர்மபிஸ்ஸ்வை: | த்வம் த்ருஷ்டானுச்ரவிக விஷயாநந்தமாத்ராவித்ருஷ்ணை: அந்தர் க்ரந்தி ப்ரவிலயக்ருதே சிந்த்யஸே யோகி ப்ருந்தை: || 5 ||

கருத்துரை :-

விஷயங்கள் இருவகை. ஒன்று இவ்வுலகில் அனுபவிக்கப்படுகின்ற அன்னபானங்களும், வீடு, பணம், பெண் பிள்ளை இவைகளும். மற்றொன்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட அப்ஸரஸ் முதலிய ஸ்வர்கக போகங்கள். முன் சுலோகத்தில் சொன்னபடி ஈசுவரன் வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாத பரசிவஸ்தானத்தில் இருப்பாராயின் அவரை நாம் உபாஸிப்பது எப்படி? உன் மஹிமைகள் உபநிஷத்துக்களால் பலவாறு போதிக்கப்படுகின்றன. வர்ண தர்மங்களைப் பரிபாலிக்கும் பிராமணர் க்ஷத்திரியர் முதலியவர்களால் நீ கர்மாவினாலேயே உபாஸிக்கப்படுகிறாய். யோகிகளோ விஷய போகங்களில் இச்சையற்றவர்களாய் உன்னை தியானம் மூலமாய் உபாஸிக்கிறார்கள். தியானத்தினால் அவர்கள் சரீரத்தினுள்ளிருக்கும் மூலாதாரம் மணிபூரம் ஆஜ்ஞாஸ்தானங்களிலிருக்கும் நாடிகளின் செடுக்குகளைத் தெறிக்கச் செய்து முக்தியை சாதித்துக் கொள்ளுகின்றனர். ஞான மார்க்கத்தினாலும் கர்ம மார்க்கத்தினாலும் யோகமார்க்கத்தினாலும் நீயே ஆராதிக்கப்பட்டு மோக்ஷ ஸாம்ராஜ்யமளிப்பவன் என்பது.

த்யாயந்தஸ்த்வாம் கதிசன பவம் துஸ்தரம் நிஸ்தரந்தி த்வத்பாதாப்ஜம் விதிவதிதரே நித்யமாராதயந்த: | அன்யே வர்ணாஸ்ச்ரமவிதிரதா: பாலயந்தஸ்த்வதாஜ்ஞாம் ஸர்வம் ஹித்வா பவஜலநிதெள ஏஷ மஜ்ஜாமி கோரே || 6 ||

கருத்துரை :-

மேற்கூறிய தியானத்தினால், ஸம்ஸாரஸாகரத்தை சிலர் தாண்டுகின்றனர். சிலர் உன் மூர்த்தியை பூஜை செய்து அப்பலனை அடைகின்றனர். மற்றும் சிலர் உன் கட்டளைப்படி வர்ணாஸ்ரம் தர்மங்களை வழுவாமல் நடத்தி வந்து பிறவிக் கடலிலிருந்து கரையேறுகிறார்கள். நானோ யோகிகளைப் போலத் தியானம் செய்ய முடியாதவனாய், உன் பக்தர்களைப் போல உன்னை அபிஷேகம், அர்ச்சனை, ஸ்துதி, நமஸ்காரம் முதலியன செய்து ஆராதிக்க சக்தியற்றவனாய், சிஷ்டர்களைப் போல உன் விதிகளை உணர்ந்து தர்மங்களை அனுஷ்டித்து கர்மாக்களை சிரத்தையுடன் செய்ய திறமையில்லாதவனுமாய் என் நற்கதிக்கு யாதொரு வழியையும் தேடிக்கொள்ளாமல் இந்த பயங்கரமான ஸம்ஸாரக் கடலிலேயே மூழ்கிக் கொண்டிடுக்கிறேன்.

உத்பத்யாபி ஸ்மரஹர மஹத்யுத்தமானாம் குலேஸ்மின் ஆஸ்வாத்ய த்வன் மஹிம் ஜலதேரப்யஹம் சீகராணூன் | த்வத்பாதார்ச்சா விமுக ஹ்ருதயஸ்சாபலா திந்த்ரியாணாம் வ்யக்ரஸ்துச்சேஷ்வஹஹ ஜனனம் வ்யர்த்தயாம்யேஷ பாப: || 7 ||

கருத்துரை :-

ஸ்ரீமத் ஆசார்ய தீக்ஷிதர் ஸ்ரீரங்கராஜ தீக்ஷிதர் முதலிய மஹான்கள் உதித்த இந்த புனிதமான குலத்தில் நான் பிறந்தும், உன் பெருமைகளைத் தெரிவிக்கும் வேத வேதாந்த புராணங்களில் ஏதோ சிறிது சிறிது கற்றறிந்திருந்தும் பாபியான நான் இந்திரியங்களுக்கு அடிமையாகி உன் திருவடி சேவையை மறந்து மிகவும் அற்பமான விஷய போகங்களில் ஈடுபட்டு உத்தமமான இந்த ஜன்மத்தைப் பாழ் செய்து கொள்கிறேன். ஐயோ என்ன பரிதாபம்! காமனை எரித்த பரமேசுவரா! (என் ஆசைகளை நீ எரிக்க மாட்டாயா?)

  அர்க்கத்ரோணப்ரப்ருதி குஸுமை: அர்ச்சனம் தே விதேயம் ப்ராப்யம் தேன ஸ்மரஹர பலம் மோக்ஷ ஸாம்ராஜ்ய லக்ஷ்மீ: | ஏதஜ் ஜானன்னபி சிவ சிவ வ்யர்த்தயன் கால மாத்மன் ஆத்மத்ரோஹீ கரணவிவசோ பூயஸாத: பதாமி || 8 ||

கருத்துரை :-

உன்னை ஆராதிப்பது அடியேனுக்கு இன்றும் அப்படி ஸ்ரமமான காரியமில்ல்லை. எருக்கு தும்பை முதலிய மணமற்ற, யாரும் வேண்டாத, எங்கும் கிடைக்கக்கூடிய புஷ்பங்களால் உன்னை அர்ச்சனை செய்தால் போதும். இவ்வளவு ஸுலபமான ஆராதனைக்கு ஏற்படும் பலமோ மோக்ஷஸாம் ராஜ்யமே. இதை அறிந்திருந்தும் மோக்ஷத்தைத் தேடிக்கொள்ளாத நான் ஆத்ம த்ரோஹியாகிறேன் என்பதில் ஐயமென்ன? சிவ சிவ என்ன பரிதாபம், நான் வீணாகக் காலத்தை விஷயசபலனாகவே கழித்து வருகிறேன். அதன் பயனாக அதோகதியை அடைகிறேன். உலகத்தில் கடுமையான க்லேசத்தை அனுபவிக்கும் ஒருவன் அதினின்றும் தன்னை விடுவித்துக் கொண்டு மஹத்தான சுகத்தையும் அடைய வெகு எளிய வழியை அறிந்திருந்தும் அதற்குப் பிரயத்தினம் செய்யாமல் துக்கத்திலேயே உழன்று கொண்டிருப்பானாகில் அவன் எவ்வளவு மூடன்!

கிம் வா குர்வே விஷமவிஷய ஸ்வைரிணா வைரிணாஹம் பத்தஸ் ஸ்வாமின் வபுஷி ஹ்ருதய க்ரந்தினா ஸார்த்த மஸ்மின் | உக்ஷணா தர்பஜ்வர பரஜுவர  ஸாகமேகத்ர பத்த: ஸ்ராம்யன் வத்ஸ: ஸ்மரஹர யுகே தாவதா கிம் கரோது || 9 ||

கருத்துரை :-

முன் சுலோகத்தில் கூறியதை இங்கு விரித்துரைக்கின்றார். ஸுலபமான துக்க நிவ்ருத்தி மார்க்கத்தை அறிந்திருந்தும் நான் துஷ்டத்தன முள்ள விஷய வாஸனையினால் தோற்கடிக்கப்பட்டவனானேன். பார்ப்பதற்கு ஸுகம் போலவும் இறுதியில் துக்கத்தைத் தருவதுமான இந்திரியார்த்தங்களில் ஆவேசத்துடன் பாயும் அநேக காலவாஸனா ஜடிலமான என் மனம் என்னைத் தூக்கி வாரிக் கொண்டுபோய் அனர்த்தங்களுக்கு உள்ளாக்கி விடுகிறது. நான் என்ன செய்வேன், ஒரு முரட்டுக் காளையுடன் ஒரே வண்டியில் பூட்டப் பெற்ற இளங்கன்று என்ன செய்யும்? காளை மேடுபள்ளம் பார்க்காமல் திமிரிக் கொண்டு அதிவேகமாய் ஓடவாரம்பிக்கும் போது இளங்கன்று எவ்வித பரிதாப நிலையை அடையும்? வாஸனை முடிச்சுக்களேறிய திமிர் கொண்ட என் மனத்துடன் நானும் இச்சரீரமாகிற வண்டியில் கட்டப்பட்டிருக்கிறேன். பலமற்ற நான் (ஜீவன்) துஷ்டவாஸனைகளால் அடக்க வொண்ணாத என் மனம் இழுத்த இடமெல்லாம் பரிதபித்துக் கொண்டே ஒடுகிறேன். என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

  நாஹம் ரோத்தும் கரணநிசயம் துர்நயம் பாரயாமி ஸ்மாரம் ஸ்மாரம் ஜநிபதருஜம் நாத ஸீதாமி பீத்யா | கிம்வா குர்வே கிமுசித மிஹ க்வாத்ய கச்சாமி ஹந்த த்வத் பாதாப்ஜ ப்ரபதனம்ருதே நைவ பச்யாம்யுபாயம் || 10 ||

கருத்துரை :-

இந்த்ரிய நிக்ரஹத்தில் அசக்தனாயும் ஸம்ஸார வேதனைகள் விலக்க விரும்புகிறவனாயுமிருக்கு மெனக்கு சரணாகதியைத் தவிர வேறு கதியில்லை என்பதைத் தெரிவிக்கிறார். ஸம்ஸாரவாழ்க்கையின் கஷ்டங்களை (ஜனனமரணாதிகளை) நினைத்து நினைத்து பயம் கொண்டு இதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கவலை உண்டானவர்களுக்கு விஷயங்களில் இயற்கையாகவே பிரவர்த்திக்கும் இந்திரியங்களை அடக்க முடியாதது பற்றி துக்கம் ஏற்படுகிறது. துர்வாஸனைக்கு அடிமையான சித்தத்திற்கும் முக்தியை விரும்பும் ஜீவனுக்கும் ஏற்படும் போராட்டட்தில் சளையுற்ற ஜீவன் தைன்யத்துடன் ஈச்வரனை நோக்கிப் புலம்புகிறான். “என்ன செய்வேன்? எங்கு செல்வேன்? எனக்கு எது உபாயம்? ஸ்வாமி ஒன்றும் வகையறியாத நான் உன் சரணத்தைப் பற்றிக் கொள்ளுகிறேன். எனக்கு நீர் தான் வழி காட்டவேண்டும்.” என்று.

உல்லங்க்யாஜ்ஞா முடுபதி கலாசூட தே விச்வவந்த்ய த்யக்தாசார: பசுவததுனா முக்தலஜ்ஜஸ்சராமி | ஏவம் நாநாவித பவததி ப்ராப்த தீர்க்காபராத: க்லேசாம்போதிம் கதமஹம்ருதே த்வத்ப்ரஸாதாத் தரேயம் || 11 ||

கருத்துரை :-

உன்னை சரணாகதி செய்யும் நான் பெரிய அபராதி என்று தெரிவித்துக்கொள்ளுகிறார். ஹேசந்த்ர கலாதரனே! உன் கட்டளைகளை மீறி நடந்தவன் நான். ஸ்ருதி ஸ்ம்ருதி புராணங்களின் மூலம் உன்னால் போதிக்கப்பட்ட கர்மாக்களையும் தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்காதவன். புத்தி பூர்வமாக உன் விதிகளை மீறிவிட்டு பயமும் வெட்கமும் கூட இல்லாமல் ஒரு விலங்கைப்போல விஷய ஸுகங்களையே பல இடையூறுகளுக்கு மத்தியில் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இவ்விதம் நான் அபராதியானது இந்த ஜன்மாவில் மட்டுமில்லை பலவிதமான அநேக கோடி ஜன்மாக்களிலும் இப்படியே அபராதியாக இருந்துள்ளேன். எல்லையற்ற துக்கக் கடலை உன் தயவின்றி வேறு எவ்விதம் நான் தாண்டப் போகிறேன்!

க்ஷாம்யஸ்யேவ த்வமிஹ கருணாஸாகர: க்ருத்ஸ்னமாக: ஸம்ஸாரோத்தம் கிரிச ஸபய ப்ரார்த்தனா தைன்ய மாத்ராத் | யத்யப்யேவம் ப்ரதிகலமஹம் வ்யக் தமாகஸ்ஸஹஸ்ரம் குர்வன் மூர்க்க: கதமிவ ததா நிஸ்த்ரப: ப்ரார்த்தயேய || 12 ||

கருத்துரை :-

கருணைக்கடலான நீ, என்னால் பல ஜன்மங்களிலும் மேற் கூறியபடி செய்யப்பட்ட அபராதங்களை நான் மிக்க பயத்துடனும் மிகவும் பஸ்சாத் தாபத்துடனும் பிரார்த்தனை செய்து கொள்வேனாகில் மன்னித்துவிடுவாய் என்பதற்கையமில்லை. ஆனால் உன்னைப்பிரார்த்தனை செய்து கொள்ள வெட்கமாயிருக்கிறது. ஏனெனில் நான் முன் செய்த அபராதங்களை க்ஷமித்துக் கொள்ளும்படி கேட்கும்பொழுதாவது அவ்வித அபராதங்களைச் செய்வதை நிறுத்தியவனாக வேண்டுமல்லவா? இப்பொழுதும் அதே குற்றங்களைச் செய்து கொண்டேயிருக்கும் நான் எப்படி உன்னிடம் தைர்யமாக வந்து என்னுடைய பழைய குற்றங்களை மன்னித்து விடும்படி வேண்டிக் கொள்வேன்?

ஸர்வம் க்ஷேப்தும் ப்ரபவதி ஜன: ஸம்ஸ்ருதிப்ராப்தமாக: சேத: ச்வாஸப்ரசம் ஸம்யே த்வத்பதாப்ஜே நிதாய | தஸ்மின் காலே யதி மம மனோ நாத தோஷத்ரயார்தம் ப்ரஜ்ஞாஹீனம் புரஹர பவேத் தத்கதம் மே கடேத || 13 ||

கருத்துரை :-

எவ்வித பாபிக்கும் கடைசியாக ஒரு வழி இருக்கிறது. அஃதாவது எனக்கு பயன்படுமா? என்பதைப் பார்ப்போம். தன் ஜன்மாக்களில் ஸம்பவித்த எல்லா அபராதங்களையும் மரண காலத்தில் ஈச்வர சரண கமலத்தில் மனத்தை ஈடுபடுத்துவதின் மூலம் விடலாம். ஆனால் அந்தக்காலத்தில் நான் பிரஜ்ஞை தவறியிருந்தால் என்ன செய்வது? அந்திய காலத்தில் பிரஜ்ஞையுடன் கூடி இருப்பது அரிது. வாத பித்த கபங்களின் விபரீதங்களால் மூர்ச்சை ஏற்பட்டும் விடலாம். ஆகையினால் ப்ராண வியோக சமயத்தில் மனத்தை ஈசுவரனிடம் செலுத்தி ஸர்வ பாபங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயமாக நம்பியிருக்கவும் முடியாது.

ப்ராணோத்க்ராந்தி வ்யதிகர தலத் ஸந்தி பந்தே சரீரே ப்ரேமாவேச ப்ரஸரதமிதா க்ரந்திதே பந்துவர்க்கே | அந்த: ப்ரஜ்ஞாமபி சிவ பஜந்நந்தராயை ரநந்தை: ஆவித்தோஹம் த்வயி கதமிமாமர்ப்பயிஷ்யாமி புத்திம் || 14 ||

கருத்துரை :-

அப்படியே சுய உணர்வில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் மனத்தை உன்னிடம் ஈடுபடுத்துவது அஸாத்யமான காரியம். ஏனெனில் பிராணன் வெளிக்கிளம்பும் ஸமயத்தில் ஒவ்வொரு பூட்டுகளிலிருந்தும் கிளம்ப எத்தனிக்கும் பிராண வாயுவினால் ஏற்படும் மரணவலியை உணர்த்துமேயொழிய அந்த பிரஜ்ஞை பிரயோஜனப்படுத்திக் கொள்ளகூடியதாக ஆகாது. சரீரத்திற்குள் இந்த வேதனையிருக்க, வெளியில் பந்து மித்திரர்கள், அன்பின் மிகுதியினால் கூக்குரலிட்டு அழுது கொண்டிருப்பார்கள். ஆதலால் அந்தக்கூச்சலினிடையே மனத்தைத்திருப்பி உன்னிடம் நாட்டுவதும் ஸாத்தியமாகாது. இவ்விதம் பல இடையூறுகளால் எனக்கு அந்த்ய காலத்தில் உணர்விருப்பினிம் மனத்தை உம்மிடம் ஒப்படைக்க நான் இயலாதவனாகவே ஆவேன்.

அத்யைவ த்வத்பத நலினயோ: அர்ப்பயாம்யந்த ராத்மன் ஆத்மானம் மே ஸஹ பரிகரை: அத்ரிகன்யாதிநாத | நாஹம் போத்தும் தவ சிவ பதம் ந க்ரியா யோகசர்யா: கர்த்தும் சக்னோம்யநி தரகதி: கேவலம் த்வாம் பரபத்யே || 15 ||

கருத்துரை :-

முன் சுலோகத்தில் சொன்னபடி அந்த்ய காலத்தில் மனதை ஈசுவரனிடம் அர்ப்பணம் செய்வது அஸாத்யமானபடியால் இப்பொழுது உன் நினைவு வந்திருக்கும் பொழுதே நான் உன்னிடம் என்னை ஸமர்ப்பணம் செய்து விடுகிறேன். என்னை மட்டுமில்லை. என் பரிவாரங்களையும் சேர்த்துக் கொண்டு ஆத்மார்பணம் செய்து விடுகிறேன். ஹே பரமசிவ! எனக்கு உன் இருப்பிடமோ தெரியாது, கர்மானுஷ்டானத்தையோ யோகாப்யாஸத்தையோ செய்ய என்னால் இயலாது. வேறு ஒரு வழியும் அறியாத நான் உன்னைச் சரணமடைவது ஒன்றையே அனுஷ்டிக்கிறேன்.

  யஸ்ஸ்ரஷ்டாரம் நிகில ஜகதாம் நிர்மமே பூர்வமீச: தஸ்மை வேதாநதித ஸகலான் யஸ்ச ஸாகம் புராணை: | தம் த்வாமாத்யம் குருமஹமஸா வாத்ம புத்தி ப்ரகாஸம் ஸம்ஸாரார்த்த: ஸரணமதுனா பார்வதீசம் ப்ரபத்யே || 16 ||

கருத்துரை :-

ஜகத்ஸ்ருஷ்டி கர்த்தாவான பிரமனை முதலில் சிருஷ்டித்து அவருக்கு வேதங்களை உபதேசித்த ஆதி குருவான பரமேஸ்வரனை தியானத்தினால் என் சித்தத்தில் நிறுத்தி என்னுடைய தாபங்களை விலக்கும் பொருட்டு அவரிடம் ஸரணாகதியடைகிறேன். சிருஷ்டி இருவகைப்படும். ஒன்று ப்ரகிருதி சிருஷ்டி. மற்றொன்று விக்ருதி சிருஷ்டி. ப்ரகிருதி சிருஷ்டியில் சிவனிடமிருந்து பிரமன் உண்டானது. சுருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஜீவன்களிடையே எவன் உன்னை ஸரணமடைகிறானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யாநந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான திவ்ய பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய். ஆகையினால் உன்னை நான் சரணமடைகிறேன். புல் முதலியவற்றைத்தின்று விவேகமற்றவைகளாய் தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பார மிழுத்தல் முதலிய காரியங்களில் க்லேசமும் துக்கமுமடையும் மாடுகளைப் போல ஜீவன் அஜ்ஞானியாய் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு பலவித கஷ்டங்களை அடைகின்ற இந்த ஜீவன்களை கட்டவும் அவிழ்த்து விடவும் யஜமானன் பரமேஸ்வரனே.

ப்ரஹ்மாதீன் யஸ் ஸ்மரஹர பசூன் மோஹபாசேன பத்த்வா ஸர்வானேகஸ்சிதசிததிக: காரயித்வாத்மக்ருத்யம் | யஸ்சைதேஷு ஸ்வபதஸரணான் வித்யயா மோசயித்வா ஸாந்த்ராநந்தம் கமயதி பரம் தாம தம் த்வாம் ப்ரபத்யே || 17 ||

கருத்துரை :-

சேதனாசேதன மயமான இந்த பிரபஞ்சத்திற்கு அப்பாலுள்ள நீ இரண்டுகால் நான்குகால் பசுக்களை அஜ்ஞானக் கயிற்றால் கட்டி அவர்களுக்குரிய காரியங்களைச் செய்வித்து இந்த ஸம்ஸாரத்தை நடத்தி வருகிறாய். இந்த ஜீவன்களிடையே எவன் உன்னைச் சரண மடைகின்றானோ அவனுக்கு ஞானத்தை அளித்து அவனுடைய கட்டை அவிழ்த்து விட்டு நித்யானந்த பரிபூர்ணமான உன்னுடைய அப்ராக்ருதமான பதவிக்கு அவனை அழைத்துக் கொள்ளுகிறாய். ஆகையால் நான் உன்னைச் சரணமடைகிறேன். புல் முதலியவற்றை மென்று தின்று விவேகமற்றவைகளாய் தன்னை வேலை வாங்கும் மனிதர்களுக்கு அடிமையாகி பாரம் இழுத்தல் முதலிய காரியங்களில் க்லேசமும் துக்கமுமடையும் மாடுகளைப் போல் ஜீவன் அஜ்ஞானியாய் இந்த வாழ்க்கைச் சக்கரத்தில் கட்டுண்டு பற்பல கஷ்டங்களை அடைகின்றான். இந்த ஜீவன்களைக் கட்டவும் அவிழ்த்து விடவும் யஜமானன் பரமேச்வரனே.

பக்தாக்ர்யாணாம் கதமபி பரைர் யோசிகித்ஸ்யாமமர்த்யை: ஸம்ஸாராக்யாம் ஸமயதி ருஜம் ஸ்வாத்ம போதெளஷதேந | தம் ஸர்வாதீச்வர பவமஹா தீர்க்க தீவ்ராமயேந க்லிஷ்டோஹம் த்வாம் வரத சரணம் யாமி ஸம்ஸாரவைத்யம் || 18 ||

கருத்துரை :-

இந்த ஸம்ஸாரம் என்பது ஒரு ரோகம். இந்த வியாதிக்கு வைத்தியம் செய்ய வேறு ஒரு வைத்தியனாலும் முடியாது. மற்ற தேவர்கள் சில வரங்களைக் கொடுக்கலாம். ஆனால், இந்த ஸம்ஸார வியாதியைத் தீர்க்க அவர்களால் இயலாது. இந்தப் பிணிக்கு வைத்தியன் நீ ஒருவனே. உன்னிடம் பக்தி செய்தவர்களுக்கு இந்த நோயைத் தீர்த்து விடுகிறாய். இதற்கு நீ வைத்துக்கொண்டிருக்கும் மருந்து ஆத்மஜ்ஞானம் என்பதே. இந்தப் “பிறப்பு இறப்பு” என்னும் நோயால் அநேக காலமாய் மிகவும் பீடிக்கப்பட்ட நான் உன்னைத் தவிர வேறு எங்கு சரணமடையப் போகிறேன். ஆகையால் நீயே எனக்குக் கதி. எனக்கு இந்த வியாதியை நிவ்ருத்தி செய்விக்க வேண்டும்.

  த்யாதோ யத்நாத் விஜிதகரணைர் யோகிபிர் யோ விமுக்த்யை                                                                                  (விம்ருக்ய:) தேப்ய: ப்ராணோத்க்ரமண ஸமயே ஸந்நிதாயாத்மனைவ | தத் வ்யாசஷ்டே பவபயஹரம் தாரகம் ப்ரஹ்ம் தேவ: தம் ஸேவேஹம் கிரிஸ ஸததம் ப்ரஹ்மவித்யாகுரும் த்வாம் || 19 ||

கருத்துரை :-

பொறிகளை அடக்கி த்யான யோகத்தை அப்யாஸம் செய்துவந்த பெரியோர்களுக்கு ப்ராண வியோக ஸமயத்தில் முன் வந்து நின்று தாரக மந்த்ரத்தை உபதேசிக்கும், முக்தி மார்க்கத்திற்கு பரமாசார்யனாகிய உன்னை நான் சரணமடைகிறேன். இந்த்ரிய நிக்ரஹம் செய்து வெகு தீவ்ரமான முயற்சியுடன் த்யான யோகத்தைப் பயிலும் யோகிகளாலும் நீ தேடப்படுகிறாய். அவர்களுக்கு நீ அந்த்ய காலத்தில் ப்ரஸன்னமாகி மோக்ஷத்திற்கு உதவும் உபதேசத்தையும் அருளுகின்றாய். ப்ரஹ்மஜ்ஞானத்தை உபதேசிக்கும் குரு நீயே. அத்தகைய உன்னை நான் த்யானாதிகளினால் உபாஸிக்க இயலாதவனாயினும் கேவலம் சரணாகதியில் ஆராதிக்க முயலுகின்றேன். த்யான யோகத்திற்கு வசப்பட்டு எப்படி யோகிகளுடைய மரண காலத்தில் அவர்களை முக்தி யடைவிக்கும் பொருட்டு நீ தானாகவே முன் வந்து நின்று உபதேசத்தை யருளுகின்றனையோ அவ்விதம் என் சரணாகதியையும் பொருட்படுத்தி என்னைக் காப்பாற்றுவாயாக.

தாஸோஸ்மீதி த்வயி சிவ மயா நித்ய ஸித்தம் நிவேத்யம் ஜானாஸ் யேதத் த்வமபி ய தஹம் நிர்கதிஸ் ஸம்ப்ரமாமி | நாஸ்த்யேவான்யத் மம கிமபி தே நாத விஜ்ஞாபநீயம் காருண்யான்மே சரணவரணம் தீன வ்ருத்தேர் க்ருஹாண || 20 ||

கருத்துரை :-

ஸ்வாமி! நான் உன் தாஸன், உன்னைத் தவிர வேறு கதி எனக்கு இல்லை, என்பதைத் தானே நான் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் நான் உன் தாஸன் என்பது சாச்வதமாய் ஏற்பட்ட நிலை. ஆதலின் நான் சொல்லிக்கொள்ளாமலே நீ அறிந்த விஷயம். நான் திக்கற்றவனாய் பரிதபிக்கும் நிலையில் காப்பவரின்றிச் சுழன்று கொண்டு வருகிறேன் என்பதும் முற்று முணர்ந்த உனக்குத் தெரியாததில்லை. இவ்விதம் பார்க்குங்கால் நான் உன்னிடம் தெரிவித்திக் கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஆகையினால் கருணையை முன்னிட்டு மிக்க பரிதாப நிலையிலிருக்கும் என்னுடைய சரணாகதியை ஏற்றுக் கொள்வாயாக.

ப்ரஹ்மோபேந்த்ரப்ரப்ருதிபிரபி ஸ்வேப்ஸித ப்ரார்த்தனாய ஸ்வாமின்னக்ரே சிரமவஸரஸ் தோஷயத்பி: ப்ரதீக்ஷ்ய: | த்ராகேவ த்வாம் யதிஹ சரணம் ப்ரார்த்தயே கீடகல்ப: தத் விச்வாதீச்வர தவ க்ருபாமேவ விச்வஸ்ய தீனே || 21 ||

கருத்துரை :-

ஏ ஸர்வேசா! ப்ரஹ்மா விஷ்ணு முதலியவர்கள் கூட உன்னிடம் தங்களுடைய அபீஷ்டங்களைத் தெரிவித்து வேண்டிக்கொள்ளும் பொருட்டு உன் வாயிலில் வந்து நின்று துதி செய்து உன்னைக் கண்டுகொள்ள ஸந்தர்ப்பத்தை ஆவலுடன் எதிர் பார்த்து இருக்கும் பொழுது அல்ப பிராணியாகிய நான் நினைத்த மாத்திரத்தில் உன்னை அழைத்து எனக்குச் சரணமளிக்கும்படி வேண்டுகின்றேனே! இந்த உரிமை எனக்கு எப்படிக் கிடைத்ததென்றால் நீ தீனர்களிடம் தயையுடையவன் என்ற பெரியோர்களின் மொழியை நம்பியே யல்லாது வேறு எவ்விதமாகும்?

கர்மஜ்ஞான ப்ரசய மகிலம் துஷ்கரம் நாத பச்யதந் பாபாஸக்தம் ஹ்ருதயமபி சாபாரயன் ஸந்நிரோத்தும் | ஸம்ஸாராக்யே புரஹர மஹத்யந்த கூபே விஷீதன் ஹஸ்தாலம்ப ப்ரபதனமிதம் ப்ராப்ய தே நிர்ப்பயோஸ்மி || 22 ||

கருத்துரை :-

கர்மாவைச் செய்து சுத்தியடைவதும் ஞானத்தைச் சம்பாதிப்பதும் சிரத்தையினாலும் விடாமுயற்சியினாலும் காலக்கிரமத்தில் ஸாதிக்க வேண்டுவன வாதலால் சோம்பேறியும் சபல புத்தியுள்ளவனுமாகிய என்னால் அஃதெல்லாம் நிறைவேற்ற முடியாத காரியம் என்பது திண்ணம். துர்வாஸனையினால் தடுக்கப்பட்ட காரியங்களில் ஊக்கமுடைய என் மனத்தையே என்னால் திருப்பமுடியவில்லையே. இந் நிலையில் ஸம்ஸாரமாகிற பாழுங்கிணற்ற்றில் பரிதபிக்கும் என்னைக் கரையேற்ற உன் கைப்பிடி கிடைத்திருப்பதால் இனி எனக்கு பயமில்லை.

த்வாமேவைகம் ஹதஜனிபதே பாந்தமஸ்மின் ப்ரபஞ்சே மத்வா ஜன்ம ப்ரசய ஜலதே: பிப்யத: பாரசூன்யாத் | யத்தே தன்யா: ஸுரவர முகம் தக்ஷிணம் ஸம்ச்ரயந்தி க்லிஷ்டம் கோரே சிரமிஹ பவே தேன மாம் பாஹி நித்யம் || 23 ||

கருத்துரை :-

ஜன்மத்திற்குப் பின் ஜன்மமாக எடுத்துக்கொண்டு ஸம்ஸாரமென்ற முடிவற்ற பாதையில் அவதிப் பட்டுக்கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஜீவனுடன் அந்தராத்மாவான ஈசன் ஒருவனே துணையாகக் கூடவே போய்க்கொண்டிருக்கிறார். இவ்விதம் ஜீவனுக்கு துணைவரும் பரமாத்மாவே மார்க்கபந்து ஆகிறார். பிறவிக் கடலினின்றும் கரையேற நிச்சயித்த பெரியோர்கள் அவர் தம் துணையாருக்கும் பகவானின் பஞ்ச முகங்களில் தென்னோக்கியதான அகோர முகத்தை சரணமடைந்து முக்தி யடைகிறார்க்ள். தீக்ஷிதர் அவர்கள் பரத்வாஜ கோத்தரத்தில் பிறந்தவர். ஆதலால் தன் குலத்திற்கு முதல்வரான பரத்வாஜ முனிவரின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதைத் தானும் பின்பற்ற நினைக்கிறார். பரத்வாஜ முனிவர் ஐந்து முகமுடைய பரமேச்வரனின் அகோர முகத்தின் மூலம் சிவதீக்ஷை பெற்றார் என்பது ஐதிஹ்யம். பரத்வாஜ் முனிவரைக் கரையேற்றிய அகோர முகத்தால் என்னையும் கரையேற்றுவாயாக என்று ப்ரார்த்திக்கிறார்.

ஏகோஸி த்வம் சிவ ஜனிமதாமீச்வரோ பந்த முக்த்யோ: க்லேசாங்காராவலிஷு லுடத: கா கதிஸ்த்வாம் விநா மே | தஸ்மா தஸ்மிந்நிஹ பசுபதே கோர ஜன்மப்ரவாஹே கின்னம் தைன்யாகரமதிபயம் மாம் பஜஸ்வ ப்ரபன்னம் || 24 ||

கருத்துரை :-

பசுக்கள் என்று சொல்லப்படும் ஜீவராசிகளை மாயாபந்தத்தால் கட்டிவைப்பவனும் அதனின்று அவிழ்த்து விடுபவனும் பசுபதி யாகிற நீயே. ஆதலால் உன்னைத் தவிர வேறு யாரை நான் அடைக்கலம் புகவிரும்புவேன். இந்த வாழ்க்கைத் துன்பங்களில், நெருப்புத் தணலில் விழுந்து விட்டவன் போல வேதனையால் துடிக்கும் என்னை, மிகப் பரிதாபமான நிலைக்கு இருப்பிடமான என்னை, மனத்தில் மிகுந்த பீதி யடைந்த என்னை, அடுத்தடுத்து பிரவாஹம் போல எனக்கு ஏற்படும் இந்தப் பிறவித் தொடரிலிருந்து விடுவிக்கும் பொருட்டு கருணை கூர்ந்து உடனே ஓடிவந்து ரக்ஷிக்க வேண்டும்.

  யோ தேவானாம் ப்ரதமமசுப த்ராவகோ பக்திபாஜாம் பூர்வம் விச்வாதிக சதத்ருதிம் ஜாயமானம் மஹர்ஷி: | த்ருஷ்ட்யாபச்யத் ஸகலஜகதீ ஸ்ருஷ்டி ஸாமர்த்த்ய தாத்ர்யா ஸ த்வம் க்ரந்தி ப்ரவிலயக்ருதே வித்யயா யோஜயாஸ்மான் ||25 ||

கருத்துரை :-

கோடைக்காலத்தில் மண்ணில் விளையாடும் துஷ்டக் குழந்தையை தாயார் அடித்துப் பாலூட்டி கட்டிலில் தூங்க வைப்பது போல ஸம்ஸார துக்கத்தினால் துவண்டுபோன ஜீவர்களைத் தண்டித்து அவர்களுடைய வினைப்பயனை அனுபவிக்கச் செய்து களைப்பாறச் செய்வதற்காக தாயினும் நூறு மடங்கு அன்பு கொண்ட ஈச்வரன் ருத்ரரூபியாகி ஸம்ஹார காரியத்தைச் செய்கிறார். பிறகு சிறிது காலம் கழித்து மறுபடியும் எழுப்பி போகங்களை அனுபவிக்கச் செய்கிறார். ஈசன் ஸர்வஜ்ஞன், ஸம்ஸாரத்திலுண்டாகும் ஸகலவித துக்கங்களையும் விலக்குகிறவர். ஆதலால் முதலில் உண்டாகும் ப்ரம்மதேவனை அருளோடு நோக்குகிறார். இதுவே சாக்ஷுஷ தீக்ஷையாகும். குரு திருஷ்டி மாத்திரத்தினால் தன்னிடமுள்ள ஞானத்தை சிஷ்யனிடம் தோற்றுவிப்பது சாக்ஷுஷதீக்ஷை எனப்படும். இதனால் ப்ரம்மதேவனுக்கு ஸகல உலகங்களையும் படைக்கும் திறமையுண்டாகிறது. இவ்விதமுள்ள ஈசன் எனக்கு ப்ரம்ம விஷ்ணுருத்ர கிரந்திகள் என்ற முக்தி மார்க்கத்திலுள்ள முட்டுக் கட்டைகளை நீக்குவதற்காக நான் சிவஜ்ஞானம் பெறும்படி கருணை செய்ய வேண்டும்.

யத்யாகாசம் சுபத மனுஜாஸ்சர்மவத் வேஷ்டயேயு: து:கஸ்யாந்தம் ததபி புருஷஸ் த்வாமவிஜ்ஞாய நைதி | விஜ்ஞானம் ச த்வயி சிவ ருதே த்வத் ப்ரஸாதாந்த லப்யம் தத்துக்கார்த்த: கமிஹ சரணம் யாமி தேவ த்வதன்யம் || 26 ||

கருத்துரை :-

வானத்தைப் பாய்போல் சுருட்டுவது முற்றிலும் முடியாத காரியம். இந்த மானிடவர்க்கம் அதையும் ஸாதித்து விட்டாலும் சாதித்து விடலாம். ஆனால் உன்னை யறியாமல் துக்கத்தை மட்டும் கடக்க முடியாது. உன்னை யறிவது என்பதோ உன் கருணையினாலல்லது கிடைக்கக் கூடியதல்ல. ஆதலால் துக்கத்தைக் கடக்க விரும்பும் நான் உன்னைச் சரணமடைவதைத் தவிர வேறு வகையறியேன். ஆதலால் உன்னருளைப்பெற உன்னையே சரணமடைகிறேன். வேறு யாரைச் சரணமடைய முடியும்?

கிம் கூடார்த்தை: அக்ருதகவசோ கும்பநை: கிம் புராணை: தந்த்ராத்யைர்வா புருஷமதிபி: துர்நிரூப்யைகமத்யை: | கிம்வா சாஸ்த்ரைரபல கலஹோல்லாஸ மாத்ர ப்ரதானை: வித்யா வித்யேச்வர க்ருததியாம் கேவலம் த்வத்ப்ரஸாதாத் || 27 ||

கருத்துரை :-

உலகத்தில் சுருதி, ஸ்ம்ருதி, புராணம், தாந்த்ரிக சமய நூல்கள், கலைகள், சாஸ்திரங்கள் என்று பலவிதமான வித்யைகள் ப்ரசாரத்திலிருக்கின்றன. இந்த வித்யைகளைக் கற்றுணர்ந்து மனிதன் யாதொருவித பலனையும் அடைவதில்லை. சுருதிகள் என்ற வேதங்களின் தாத்பர்யத்தைக் கண்டுபிடிப்பதே ஸாத்ய மில்லாமலிருக்கிறது. அது மறை பொருளாயிருப்பதால் புராணங்கள் மத விசார நூல்கள் எல்லாம் பரஸ்பரம் விரோதமான வழிகளைப் பின்பற்றுகின்றன. சாஸ்திர ஞானமே வாதி பிரதிவாதி கக்ஷி என்ற ரீதியில் பிரசண்ட கோலாஹலங்கள் செய்யப் பயன் படுகின்றனவேயன்றி வேறு பயன் அவைகளால் ஏற்படுவதில்லை. உண்மையான அத்வைத ஜ்ஞானம் உன் அருளால் ஏற்பட வேண்டுமே யொழிய வேறு வழியில்லை. ஸர்வவித்யைகளுக்கும் ஈசனாகிய நீயே ஞானத்தை யளிப்பவன்.

  பாபிஷ்டோஹம் விஷ்யசபல: ஸந்ததத்ரோஹசாலீ கார்பண்யைக ஸ்திரநிவஸதி: புண்யகந்தாநபிஜ்ஞ: | யத்யப்யேவம் ததபி சரணம் த்வத்பதாப்ஜம் ப்ரபன்னம் நைநம் தீனம் ஸ்மரஹர தவோபேக்ஷிதும் நாத யுக்தம் || 28 ||

கருத்துரை :-

எவ்வளவு குற்றமுள்ளவனாக இருந்தாலும் சரண மடைந்தவனை ரக்ஷிப்பது ஈசனின் இயல்பு. ஆகையால் தன்னிடத்தில் பாபங்களைச் செய்வதில் தீவிரமான ப்ரவ்ருத்தியும், புண்ணிய லேசத்தையும் செய்யாத சுபாவமும் இருந்தாலும், தேகத்தையே ஆத்மா என்று நம்பினதால் ஈசுவரனின் உபதேசம் வேத மொழிகள் ஆசார்ய வாக்யங்கள் இவைகளை அலக்ஷ்யம் செய்த துரோஹியாகி விட்டாலும் ஸம்ஸார வாழ்க்கையில் குடும்ப ரக்ஷணத்திற்காகப் பற்பல அற்ப காரியங்களில் ஈடுபட்டு மிகவும் கீழ்ப்பட்ட நிலையிலிருந்தாலும் சரணாகத ரக்ஷகனாகிய ஈசன் தன்னைக் காப்பாற்றியே ஆகவேண்டுமென வற்புறுத்துகிறார்.

ஆலோச்யைவம் யதி மயி பவான் நாத தோஷாநநன்தான் அஸ்மத்பாதாச்ரயணபதவீம் நார்ஹதீதி க்ஷிபேன்மாம் | அத்யைவேமம் சரணவிரஹாத் வித்தி பீத்யைவ நஷ்டம் க்ராமோ க்ருஹ்ணாத்யஹிததனயம் கின்னு மாத்ரா நிரஸ்தம் || 29 ||

கருத்துரை :-

என் குற்றங்களையே எண்ணி இவன் நம்மிடம் சரண்புக யோக்யன் அல்லன் என்று என்னை நீ உதைத்துத்தள்ளி விடுவாயானால் வேறு வகை தெரியாமல் இந்த க்ஷணமே நான் பயத்தினால் ஹ்ருதயம் வெடித்துப் போய்விடுவேன். தாய் வேண்டாமென்று தள்ளிய துஷ்டப்பிள்ளையை உலகத்தில் யார் ஏற்றுக் கொள்ளுவார்கள்?

  கஷ்ந்தவ்யம் வா நிகிலமபி மே பூதபாவி வ்யலீகம் துர்வ்யாபார ப்ரவணமதவா சிக்ஷணீயம் மனோ மே | ந த்வேவார்த்யா நிரதிசயயா த்வத் பதாப்ஜம் ப்ரபன்னம் த்வத் வின்யஸ்தாகில பரமமும் யுக்தமீச ப்ரஹாதும் || 30 ||

கருத்துரை :-

என்னை குற்றமுள்ளவனென்று தள்ளுவது உனக்கு அழகல்ல. என் குற்றங்களை மன்னித்தாவது அல்லது என் குற்றங்களுக்கேற்ற தண்டனையை விதித்தாவது என்னை உன் கிருபைக்குத் தகுந்தவனாகச் செய்து அங்கீகரிக்கத்தான் வேண்டும். மிக்க வருந்தி நீயே கதியென்று உன் காலடியில் விழுந்து உன்னிடமே ஸகல பாரத்தையும் ஒப்படைத்த ஒரு ஏழையை நிராகரிப்பது உன் பெருமைக்கு இழுக்கன்றோ? பாரத்தை ஈச்வரனிடம் ஒப்புவித்தலாவது, தான் என்ற அபிமானத்தை விட்டு, செய்பவன் செய்விப்பவன் எல்லாம் அந்தர்யாமியான பரமேச்வரனே என்று நம்பி எல்லாப் பொறுப்புகளையும் அவனிடமே சுமத்தி யிருத்தலாகும்.

ஸர்வஜ்ஞஸ்த்வம் நிருபதி க்ருபாஸாகர: பூர்ணசக்தி: கஸ்மாதேனம் ந கணயஸி மாமாபதப்தெள நிமக்நம் | ஏகம் பாபாத்மகமபி ருஜா ஸர்வதோத்யந்த தீனம் ஜந்தும் யத்யுத்தரஸி சிவ கஸ்தாவதாதி ப்ரஸங்க: || 31 ||

கருத்துரை :-

ஆபத்தில் மூழ்கிக்கிடக்கும் என்னை பரிபூர்ணசக்தியுடைய நீ ரக்ஷிக்காமல் இருக்கலாமா? நீ ஸர்வேச்வரனாதலால் வேறு ஒருவரின் உத்தரவைப் பெற்றுத்தான் என்னை காப்பாற்றவேண்டு மென்பதில்லை. நீ ஸர்வஜ்ஞனாதலால் என் கஷ்டதசையை அறியாமலில்லை. நீ கருணைக்கடலாதலால் என்பால் இரங்கக்கூடாதவனில்லை. நான் பாபி என்றாலும் பலவிதத்திலும் பொறுக்க முடியாத துன்பங்களை அநுபவித்து மிக்க பரிதாப நிலையை அடைந்திருக்கும் என்னை ஒருவனை மட்டும் காப்பாற்றிவிட்டால் உனக்கு என்ன குடிமூழ்கிப்போய்விடும். இதைச்சற்று ஆலோசித்துப் பார்.

அத்யந்தார்தி வ்யதிதமகதிம் தேவ மாமுத்தரேதி க்ஷுண்ணோ மார்க்கஸ்தவ சிவ புரா கேன வா நாதநாத | காமாலம்பே பத தததிகாம் ப்ரார்த்தனா ரீ திமன்யாம் த்ராயஸ்வைநம் ஸபதி க்ருபயா வஸ்துதத்வம் விசிந்த்ய || 32 ||

கருத்துரை :-

ஹே ஈச்வர! நான் கணக்கிட முடியாத கிலேசங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் கதியில்லை. என்னை இந்த துக்கஸாரத்திலிருந்து கரையேற்றிவிடு என்றவாறு உன்னிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் ரீதியானது எந்தப் புண்ணியவானால் தொடங்கப்பட்டதோ! அதுவே அநாதிகாலமாய் அநாதைகளுக்கு பிரார்த்தனா ரீதியாக வழங்கி வருகிறது. ஆதலால் நானும் அவ்வழியையே பின்பற்றி எனது துக்கங்களை உன்னிடம் தெரிவித்துக்கொண்டு உன்னை ரக்ஷகன் என்று சரணமடைகிறேன். இப்புராதன ரீதியைவிட்டு வேறு புதிதாய் உன்னிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் ரீதியை நான் எவ்விதம் அநுஷ்டிக்க முடியும்? இந்த நிலையை யுணர்ந்து என்னை நீ உடனே தயவுடன் காப்பாற்ற முன்வர வேண்டும் ஈச்வர! ‘நான்’ அநாதை, பாபி, துக்கிதன், எனக்கு உன்னைத் தவிர வேறு கதி கிடையாது, நீ தான் என்னை ரக்ஷிக்க வேண்டும்.’ என்றுதான் பக்தர்கள் உன்னை வேண்டிக் கொள்ளுவது வழக்கம். அப்படியேதான் நானும் உன்னை வேண்டிக்கொள்ளுகிறேன். ஒரு ஜீவன் ஈசனிடம் தன் பரிதாபத்தையும் பிரார்த்தனையையும் தெரிவித்துக்கொள்ள வேறு வழி கிடையாது. அநாதிகாலமாய் சரணமடைந்த பக்தர்களை ரக்ஷித்த நீ என்னையும் ரக்ஷிப்பாயாக.

  ஏதாவந்தம் ப்ரமண நிசயம் ப்ராபிதோயம் வராக: ச்ராந்தஸ் ஸ்வாமின்ன கதிரதுனா மோசநீயஸ்த்வயாஹம் | க்ருத்யாக்ருத்யவ்யபகத மதிர் தீனசாகாம்ருகோயம் ஸந்தாட்யைநம் தசன விவ்ருதிம் பச்யதஸ்தே பலம் கிம் || 33 ||

கருத்துரை :-

ஒரு குரங்காட்டி தன்னால் பழக்கப்பட்ட குரங்கை வீடுதோறும் கொண்டுபோய் ஆங்காங்கு அதைப் பற்பல விதமாய் ஆட்டிவைக்கிறான். அவ்விதம் அலைந்து திரிந்து கிலேசப்பட்ட அக்குரங்கு தன் களைப்பின் மிகுதியைப் பொறுக்க மாட்டாமல் மிகவும் பரிதாபமாகப் பல்லையிளிக்கிறது. அவ்விதம் இளிப்பது இனி என்னை விட்டுவிடமாட்டாயா? என்பது போல் தோன்றுகிறது. சஞ்சல ஸ்வபாவமுள்ளவனாதலாலும் அறிவீனனாதலாலும் ஜீவன் அக்குரங்கிற்குச் சமானமாகிறான்.

இவன் கோடிக்கணக்கான கர்ப்பவாஸத்தை அடைகிறான். காலனின் தண்டத்தாலடிக்கப்பட்டுப் பல்லை இளிக்கிறான். ஜன்மந்தோறும் தனது நன்மையை அறிந்து கொள்ளாமல் பலவிதமான சேஷ்டைகளைச் செய்து இடைவிடாது கிலேசங்களை அனுபவிக்கிறான். இப்படி இந்தக் குரங்கை ஆட்டிவைப்பதில் ஈசனுக்கு யாது பயன்? குரங்காட்டி போல அவர் பிச்சை எடுத்து ஜீவனம் செய்பவரா? அல்லது குறும்புள்ள பையனைப் போல குரங்கைத் துன்புறுத்தி வேடிக்கை பார்ப்பவரா? இந்தக் குரங்கு படும் அவஸ்தையையும் அது மிகப் பரிதாபமாய்ப் பல்லிளிப்பதையும் பார்த்து தயவு ஏற்பட்டு ஸர்வேச்வரன் இதை அவிழ்த்து விடக்கூடாதா?

மாதா தா தஸ் ஸுத இதி ஸமாபத்ய மாம் மோஹபாசை: ஆபாத்யைவம் பவஜலநிதெள ஹா கிமீச த்வயாப்தம் | ஏதாவந்தம் ஸமயமியதீ மார்த்தி மாபாதிதே ஸ்மின் கல்யாணீ தே கிமி தி ந க்ருபா காபி மே பாக்யரேகா || 34 ||

கருத்துரை :-

ஹே ஈச்வர! தாய் தகப்பன் பிள்ளை பெண்டிர் என்றவாறு பற்பல பந்தங்களால் என்னைப் பிணைத்து இந்த ஸம்ஸார மென்ற ஸமுத்திரத்தில் இப்படித் தள்ளியிருக்கிறாயே! இதனால் உனக்கு என்ன லாபம்? என்னை இத்தனை நாள் கஷ்டப்படுத்தியது போதாதா? இனியாவது எனக்கு நல்ல காலம் பிறந்து உனக்கு என்னிடம் தயவு உண்டாகாதா? உனது க்ருபை எனது பாக்யம்.

புங்க்ஷே குப்தம் பத ஸுகநிதிம் தாத ஸாதாரணம் த்வம் பிக்ஷாவ்ருத்திம் பரமபிநயன் மாயயா மாம் விபஜ்ய | மர்யாதாயாஸ் ஸகல ஜகதாம் நாயகஸ் ஸ்தாபகஸ்த்வம் யுக்தம் கிம் தத் வத விபஜனம் யோஜயஸ்வாத்மனா மாம் || 35 ||

கருத்துரை :-

பரமாத்மாவின் நித்ய ஸுக நிலையில் ஜீவாத்மாவுக்கு ஸமமான பாத்யமிருக்க, மாயையினால் ஜீவாத்மா அந்த ஸுகாநுபவத்திலிருந்து விலக்கப்பட்டு பல கிலேசங்களை அநுபவிக்கின்றான் என்ற வேதாந்த தத்துவத்தை ஒரு லெளகிக உதாஹரணத்தை உட்கருத்தாக வைத்துப் பேசுகிறார். தகப்பனாயிருக்கும் நீ உனக்கும் எனக்கும் பொதுவான ஆதம சுகம் என்ற ஐச்வரியத்தை எனக்கு ஆளக் கொடுக்காமல் என்னை வஞ்சனையாக பாகம் செய்து விலக்கிவிட்டு நீயும் ஏதோ பிச்சை எடுத்து ஜீவிப்பவன் போல் பாசாங்கு செய்துகொண்டு தனிமையில் அந்த ஐச்வரியத்தை நீயே அநுபவிக்கிறாயே! இது எப்படி நியாயமாகும்? உலகத்தவர்களுக்கு நியதிகளை விளக்கும் வேதங்களையும் தர்மசாஸ்திரங்களையும் ஏற்படுத்திய நீயே இவ்விதம் அக்கிரமம் செய்தால் யாரிடம் முறையிடுவது? உனக்கு மேல் அதிகாரி யிருந்தாலும் அவரிடம் முறையிடலாம். நீயே யாவர்க்கும் மேலான பிரபுவாதால் எனக்கு உன்னைத் தவிர முறையிடுவதற்கு வேறு புகலிடமும் கிடையாது. மாயை என்பது அவித்யை. அது தான் ஜீவாத்மா பரமாத்மாவினின்று விலகி யிருப்பதற்குக் காரணம். தாருகாவனத்தில் மஹர்ஷிகளுக்கு ஜ்ஞானோபதேசம் செய்யும் பொருட்டு லீலையாக பகவான் பிக்ஷை எடுத்தார் என்பது புராண ப்ரஸித்தம்.

நத்வா ஜன்மப்ரலய ஜலதே ருத்தராமீதி சேத்தீ: ஆஸ்தாம் தன்மே பவது ச ஜனிர்யத்ர குத்ராபி ஜாதெள | த்வத்பக்தானாமனிதரஸுகை: பாததூளீ கிசோரை: ஆரப்தம் மே பவது பகவன் பாவி ஸர்வம் சரீரம் || 36 ||

கருத்துரை :-

எவ்விதத்திலும் உன்னை ஜனன மரணங்களிலிருந்து விடுவிக்க முடியாது என்று உனது தீர்மானமாகில் எனக்கு அளிக்கப்படும் சரீரமானது எந்த ஜாதியில் என்னைப் பிறக்கச் செய்வதானாலும் சரி உன் பக்தர்களின் கால் பட்ட தூளிகளால் அமைக்கப் பெற்றதாயிருக்கட்டும் என்று தான் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன். ஏனெனில் அப்பொழுது எனக்கு உன்னிடம் இடைவிடாத சஞ்சலமற்ற பக்தி ஏற்பட ஹேதுவாகும். பெரியோர்களின் பாத தூளி சரீராரம்பத்திற்கு எப்படிக் காரணமாகும் என்றால் மாதாபிதாக்கள் உட்கொண்ட அன்ன பானாதிகளில் அவை சம்பந்தப்பட்டிருப்பதன் மூலம் என்று கூறலாம். (அல்லது ஆரப்தம் என்பதற்குப் பதிலாய் ஆலிஸம் என்ற பாடத்தை எடுத்துக்கொண்டால் பால்யம் முதல் ஸாதுக்களின் பாத தூளி சரீரத்தில் படுவது அநேக ஸந்தர்ப்பங்களில் ஸுலபமாகும்.)

கீடா நாகாஸ்தரவ இதி வா கிம் நஸந்தி ஸ்தலேஷு த்வத் பாதாம் போருஹ பரிமளோத்வாஹி மந்தானிலேஷு | தேஷ்வேகம் வா ஸ்ருஜ புனரிமம் நாத தீனார்த்தி ஹாரின் ஆதோஷான் மாம் ம்ருட பவமஹாங்காரநத்யாம் லுடந்தம் || 37 ||

கருத்துரை :-

மனுஷ்ய ஜன்மம் தான் வேண்டுமென்று நான் கேட்க்கவில்லை. புழு பூச்சி பாம்பு மரம் என்றவாறு எவ்வளவோ ஜீவராசிகள் இருக்கின்றனவே! அவற்றில் ஒன்றாய் என்னைச் சிருஷ்டித்தாலும் சம்மதமே. ஆனால் அப்பிரதேசத்தில் நான் சஞ்சரிக்கும்மிடம் உன் பாதத்தில் பட்ட இளங்காற்று வீசுமிடமாக இருந்தால் போதும். இந்த ஜனன மரணமென்னும் நெருப்பு நதியில் கிடந்து புரளும் எனக்கு உன் சரணகமலத்தின் மணங்கமழும் ஜில்லென்ற மந்த மாருதம் ஆறுதலையளிக்கட்டும். அவ்விதம் நீ கிருபை செய்வாயானால் எவ்வளவு காலம் இந்த ஸம்ஸாரத்தில் என்னைத் தள்ளிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஆக்ஷேபணை இல்லை. கிலேசப்படுபவர்களின் கிலேசங்களை நீக்கும் கருணாநிதியான நீ இந்த வரம் கொடுக்க மறுப்பாயா?

காலே கண்டஸ்புரதஸுகலா வேச ஸத்தாவலோக வ்யக்ரோதக்ரவ்யஸந ருதித ஸ்னிக்த ருத்தோபகண்டே | அந்தஸ்தோதை ரவதி ரஹிதா மார்த்தி மாபாத்யமானேபி அங்க்ரி த்வந்த்வே தவ நிவிசதாம் அந்தராத்மன் மமாத்மா || 38 ||

கருத்துரை :-

அந்தியகாலத்தில் வைத்யர்கள் கைவிட்டபிறகு பந்துக்களும் நண்பர்களும் கிரமமாக க்ஷீணித்துவரும் சுவாஸத்தை பரீக்ஷித்துக் கொண்டு பக்கத்தில் நெருக்கமாய்க் கூடிக்கொண்டு துக்கம் மிகுந்து ஒலமிடும் அந்த சமயத்தில், உயிர் வெளிச் செல்லுவதால் உண்டாகும் வேதனை, சரீரத்தினுள் பலவாறு பெருகி பொறுக்க முடியாதபடி துன்புறுத்தவும் கூடும். அந்தக்காலத்தில் கூட எனது அந்தக்கரணம் உனது திருவடிகளில் லயமடையவேண்டும்.

அந்த்ர் பாஷ்பாகுலித நயனானந்த ரங்கா நபச்யன் அக்ரே கோஷம் ருதித பஹுளம் காதராணாமச்ருண்வன் | அத்யுத் க்ராந்தி ச்ரமமகணயன் அந்தகாலே கபர்தின் அங்க்ரி த்வந்த்வே தவ நிவிசதா மந்தராத்மன் மமாத்மா || 39 ||

கருத்துரை :-

தாங்கமுடியாத துக்கத்தினால் பக்கத்தில் கண் கலங்கி நிற்கும் உயிருக்கு உயிரான என் சொந்த ஜனங்களைக் கண்ணால் பார்க்காமலும், மரிப்பவனைக்கண்டு பயத்துடனும் சோகத்துடனும் ப்ரலாபம் செய்பவர்களின் கூக்குரல்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமலும் ப்ராணன் வெளிக்கிளம்பும் போது ஏற்படும் சரீராவஸ்தைகளை லக்ஷ்யம் செய்யாமலும் அந்திய காலத்தில் என் மனம் அந்தராத்மாவான உன்னிடம் ஐக்யமடையட்டும்.

  சாருஸ்மேரானனஸரஸிஜம் சந்த்ரரேகாவதம்ஸம் புல்லன்மல்லீ குஸுமகலிகா தாம ஸெளபாக்யசோரம் | அந்த: பச்யாம்யசல ஸுதயா ரத்னபீடே நிஷண்ணம் லோகாதீதம் ஸததசுபதம் ரூபமப்ராக்ருதம் தே || 40 ||

கருத்துரை :-

மனதின் தியான ஸமாதியில் உதிக்கும் ஈச்வரஸ்வரூப ஸாக்ஷாத்காரத்தை சித்திரத்தில் வரைவது போல வர்ணித்துக் கூறுகிறார். ஈச்வரனின் சரீர காந்தியை மலரும் தருவாயிலிருக்கும் மல்லிகை மொட்டுகளின் மாலைக்கு ஒப்பிடிகிறார். அதில் வெண்மை, மணம், மென்மை, குளிர்ச்சி, இவை யெல்லாம் தோன்றுகின்றன. கருணாமூர்த்தியின் வதனத்தில் மந்தஹாஸம் தவழுகிறது. முடியில் இளம் பிறை ஒளி வீசுகிறது. அந்த ஸ்வரூபம் எங்கும் காணக்கிடைக்காத திவ்யங்களமானது. 224 லோகங்களுக்கு அப்பாலிருந்து பிரகாசிப்பது. அத்தகைய உன் ரூபம் எனக்கு இப்பொழுது தென்படுகிறது. (அடுத்த சுலோகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அந்த: பச்யாம் என்ற வாக்யத்திற்கு நான் காண்பேனா? என் அந்திய காலத்தில் உன் திருவுருவத்தை நான் காண்பது ஸாத்யமாகுமா? என்று அர்த்தம் செய்து கொள்வதே உசிதம் எனத் தோன்றுகிறது.)

ஸ்வப்னே வாபி ஸ்வரஸ விகஸத் திவ்ய பங்கேருஹாபம் பச்யேயம் கிம் தவ பசுபதே பாதயுக்மம் கதாசித் | க்வாஹம் பாப: க்வ தவ சரணாலோக பாக்யம் ததாபி ப்ரத்யாசாம் மே கடயதி புனர்விச்ருதா தேனுகம்பா || 41 ||

கருத்துரை :-

தானாக மலரும் தாமரைப் புஷ்பத்தின் அழகு வாய்ந்த உன் பாதங்களை கனவிலாவது நான் தெய்வச் செயலாகவாவது பார்க்க நேரிடலாகாதா? அதற்குக்கூட நான் கொடுத்து வைத்தவனில்லை. ஏனெனில் நான் அவ்விதமான பாபி. ஆனாலும் உலகம் புகழும் உன் கருணையைக் கடைப்பிடித்துக் கொண்டு கனவிலாவது அந்த திவ்ய தரிசனத்தின் பாக்கியம் எனக்குக் கிடைக்கும்படி நீ அனுக்ரஹம் செய்வாய் என்று நான் நம்பி ஆவலுடனிருக்கிறேன்.

  பிக்ஷாவ்ருத்திம் சர பித்ருவனே பூதஸங்கைர்ப்ரமேதம் விஜ்ஞாதம் தே சரிதமகிலம் விப்ரலிப்ஸோ: கபாலின் | ஆவைகுண்டத்ருஹிண மகிலப்ராணிணா மீச்வரஸ்த்வம் நாத ஸ்வப்னேப்யஹமிஹ நதே பாதபத்மம் த்யஜாமி || 42 ||

கருத்துரை :-

நீ பிக்ஷை எடுப்பதானாலும் சுடுகாட்டில் சஞ்சரித்தாலும் பூதங்களுடன் கூடித்திரிந்தாலும் மண்டை யோட்டைப் பூண்டிருந்தாலும் உன் மகிமையை என்னிடமிருந்து மறைத்துவிட முடியாது. நீ எப்படி நடித்துக்காண்பித்தாலும் நீ தான் கொசு முதல் பிரமன் விஷ்ணு முதலிய தேவதைகள் பரியந்தம் ஸகல பிராணிகளுக்கும் அதிபதி. இதை நான் அறிந்தவனாதலால் நினைவுள்ள போது மட்டுமல்லாமல் ஸ்வப்ன தசையில் கூட உன் சரணகமலங்களை நான் விடவே மாட்டேன்.

ஆலேபனம் பஸிதமாவஸதச் ச்மசானம் அஸ்தீனி தே ஸதத மாபரணாநி ஸந்து | நின்ஹோது மீச நிகில ச்ருதி ஸாரஸித்தம் ஐச்வர்ய மம்புஜபவோபி ச ந க்ஷமஸ்தே || 43 ||

கருத்துரை :-

சாம்பலைப் பூசிச் சுடுகாட்டில் வசித்து எலும்புமாலை பூண்டு நீ ஏழைக் கோலத்தை ப்ரகடனம் செய்தாலும் ஸகல வேதங்களாலும் உபநிஷத்துக்களாலும் தீர்மானமாய் கோஷிக்கப்படும் உன் ஐச்வர்யத்தை மறைக்கும் திறமை ப்ரஹ்ம தேவனுக்கும் கிடையாது.

விஹா பித்ருவனே வா விச்வபாரே புரே வா ரஜத கிரி தடே வா ரத்னஸானுஸ்தலே வா | திச பவதுபகண்டம் தேஹி மே ப்ருத்யபாவம் பரமசிவ தவ ஸ்ரீபாதுகாவாஹகானாம் || 44 ||

கருத்துரை :-

நீ சுடுகாட்டில் வஸித்தாலும் சரி அல்லது 224 புவனங்களுக்கு அப்பாலுள்ள உன் லோகத்தில் வசித்தாலும் சரி. நீ கைலாஸத்திலோ மேருமலையிலோ இருந்தாலும் சரி. நீ எங்கிருப்பினும் உன் சமீபத்தில் சிச்ரூக்ஷை செய்து கொண்டிருக்கும் பக்தர்களின் அடிமையாக என்னை ஏற்படுத்து.

விவிதமபி குணெளகம் வேதயந்த்யர்த்தவாதா: பரிமித விபவானாம் பாமராணாம் ஸுராணாம் | தநு ஹிமகா மெளலே தாவதா தத்பரத்வே கதி கதி ஜகதீசா: கல்பிதா நோ பவேயு: || 45 ||

கருத்துரை :-

பரமேசுவரன் ஒருவனே ஒழியப் பல பேர்கள் இருப்பது அஸாத்யம். அந்த ஒருவனுக்கு உட்பட்டே மற்றவர்கள் ஆட்சி நடத்துவது கிரமமாகும். இல்லையேல் உலகங்களுக்குக் கேடு விளையும். ஆனால் உன்னைத தவிர மற்ற விஷ்ணு முதலிய தேவதைகளின் பெருமைகளை விரிவாய் வர்ணிக்கிறார்களே என்றால் அவ்வித வர்ணனைகள் அர்த்தவாதங்கள் ஆகின்றன. அவை தாற்காலிகமான ஸ்துதிகள். முடிவான தீர்மானத்தைக் குறிக்கின்றனவாக மாட்டா. ஸர்வேச்வரனான உன்னைத் தவிர மற்ற தேவர்கள் ஒரு வரம்புடன் கூடிய மகிமையைப் பெற்றவர்களே. அவர்கள் தவறுகளைச் செய்பவர்களாயும், அந்தப் பாப பயன்களை அடைபவர்களாயு மிருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் பாமரர்கள். நீயோ ஞான கலைக்கு அடையாளமான சந்திரகலையை தரித்தவன். அளவற்ற தடையற்ற மகிமை வாய்ந்தவன்.

பலமபலமமீஷாம் பல்பஜானாம் விசிந்த்யம் கதமபி சிவ காலக்ஷேப மாத்ர ப்ரதானை: | நிகிலமபி ரஹஸ்யம் நாத நிஷ்க்ருஷ்ய ஸாக்ஷாத் ஸரஸிஹபவமுக்யைஸ் ஸாதிதம் ந: ப்ரமாணம் || 46 ||

கருத்துரை :-

தேவர்களின் பரஸ்பர பலாபலங்களை ஆராய்ச்சி செய்து கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள் பலர். அப்படி வீண் பொழுது போக்க எனக்கு அவசியமில்லை. கர்ம, உபாஸனா, ஜ்ஞான காண்டங்களின் பரமஸித்தாந்தத்தை ப்ரஹ்மா முதலியவர்கள் கடைந்து எடுத்துக் தெளிவாய் உரைத்து விட்டபடியால் நான் அவர்களின் வாக்கியத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு உன்னைச் சரணமடைவதே கதி என்பதை அறிந்திருக்கிறேன்.

ந கிஞ்சின்மேனே தஸ் ஸமபிலஷணீயம் த்ரிபுவனே ஸுகம் வா துக்கம் வா மம பவது யத்பாவி பகவன் | ஸமுன்மீலத்பாதோருஹ குஹரஸெளபாக்யமுஷி தே பதத்வந்த்வே சேத: பரிசயமுபேயான் மம ஸதா || 47 ||

கருத்துரை :-

எனக்கு இம் மூன்று லோகங்களிலும் வேண்டக் கூடியது மற்றொன்று மில்லை. கர்மவசமாய் சுகமோ துக்கமோ எது வரவேண்டிய பிராப்தியோ அது வரட்டும். அதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. நான் வேண்டுவது ஒன்றேதான். எப்பொழுதும் என்மனம் மலர்ந்த தாமரையின் உட்புறம் போல் அழகு மிகுந்த உன் இருசரணங்களில் ஈடுபடட்டும்.

உதரபரணமாத்ரம் ஸாத்ய முத்திச்ய நீசேஷு அஸக்ருதுபநிபத்தாம் ஆஹிதோச்சிஷ்டபாவாம் | அஹமிஹ நுதிபங்கீம் அர்ப்பயித்வோபஹாரம் தவ  சரண   ஸரோஜே தாத ஜாதோபராதீ || 48 ||

கருத்துரை :-

ஸ்வாமி! நான் இங்கு உன்னைத் துதிக்கும் முன் எவ்வளவோ அதமர்களை இந்த வாக்கினால் துதித்திருக்கிறேன். வயிறு வளர்ப்பதற்காக அல்பர்களைத் துதித்த வாக்கினால் உன்னைத் துதிப்பது பெரிய அபராதமாகும். நிந்திக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்டிருந்த என் வாக்கு அசுத்தமாகிவிட்டது. அதை இப்போது உன் விஷயத்தில் பிரயோகிப்பதனால் நான் செய்யும் அபராதத்தை நீ க்ஷமித்துக் கொள்வாயா?

ஸர்வம் ஸதாசிவ ஸஹஸ்வ மமாபராதம் மக்னம் ஸமுத்தர மஹத்யமு மாபதப்தெள | ஸர்வாத்மனா தவ பதாம்புஜமேவ தீன: ஸ்வாமின் அனன்யசரணச் சரணம் கதோஸ்மி || 49 ||

கருத்துரை :-

என் அபராதங்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டு என்னை இந்த ஆபத்துக்களினின்றும் நீ கைதூக்கி விடுவாயாக. ஹே ஸதாசிவ! எளியவனாகிய நான் எல்லாப்பற்றுகளையும் விட்டு வேறு சிந்தனையில்லாமல் என்னை நீயே காப்பாய் என்று நம்பி உன்னையே சரணமடைந்து விட்டேன்.

ஆத்மார்ப்பண ஸ்துதிரியம் பகவன் நிபத்தா யத்யப்யனன்ய மனஸா ந மயா ததாபி | வாசாபி கேவலமயம் சரணம் வ்ருணீதே தீனோ வராக இதி ரக்ஷ க்ருபாநிதே மாம் || 50  ||

கருத்துரை :-

நான் ஏகாக்ரசித்தனாக இருந்து இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை இயற்றவில்லை எனினும் தயாநிதியே! ஸ்துதி ரூபமான வார்த்தைகளை (மனமுருகாமல்) மட்டுமாவது சொல்லுகிறானே என்று கருணை புரிந்து என்னை ரக்ஷிப்பாயாக.

முற்றிற்று

 

Related Content

Paramashiva pancharatnastutih-பஞ்ச ரத்னஸ்துதி

சிவார்ச்சனா சந்திரிகை (அப்பைய தீக்ஷிதர்) - shivarchana chand

பிரம்மதருக்கஸ்தவம் (அப்பய்ய தீக்ஷிதர்) - மொழிபெயர்ப்பு அம்ப

ஆத்மார்பண ஸ்துதி - மகாலிங்க சாஸ்திரிகள் விரிவுரையுடன்