logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppanaiyur-aravac-cataimel

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பனையூர் - அரவச் சடைமேல்


1.37 திருப்பனையூர்    
        
பண் -  தக்கராகம்        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    அரவச் சடைமேல் மதிமத்தம்    
    விரவிப் பொலிகின் றவனூராம்    
    நிரவிப் பலதொண் டர்கள்நாளும்    
    பரவிப் பொலியும் பனையூரே.    1.37.1
        
    எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்    
    உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்    
    கண்ணின் றெழுசோ லையில்வண்டு    
    பண்ணின் றொலிசெய் பனையூரே.    1.37.2
        
    அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்    
    மலரும் பிறையொன் றுடையானூர்    
    சிலரென் றுமிருந் தடிபேணப்    
    பலரும் பரவும் பனையூரே.    1.37.3
        
    இடியார் கடல்நஞ் சமுதுண்டு    
    பொடியா டியமே னியினானூர்    
    அடியார் தொழமன் னவரேத்தப்    
    படியார் பணியும் பனையூரே.    1.37.4
        
    அறையார் கழல்மேல் அரவாட    
    இறையார் பலிதேர்ந் தவனூராம்    
    பொறையார் மிகுசீர் விழமல்கப்    
    பறையா ரொலிசெய் பனையூரே.    1.37.5
        
    அணியார் தொழவல் லவரேத்த    
    மணியார் மிடறொன் றுடையானூர்    
    தணியார் மலர்கொண் டிருபோதும்    
    பணிவார் பயிலும் பனையூரே.    1.37.6
        
    அடையா தவர்மூ எயில்சீறும்    
    விடையான் விறலார் கரியின்தோல்    
    உடையான் அவனெண்1 பலபூதப்    
    படையா னவனூர் பனையூரே.    1.37.7
        
    இலகும் முடிபத் துடையானை    
    அலல்கண் டருள்செய் தஎம்மண்ணல்    
    உலகில் லுயிர்நீர் நிலமற்றும்    
    பலகண் டவனூர் பனையூரே.    1.37.8
        
    வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்    
    சிரமுன் னடிதா ழவணங்கும்    
    பிரமன் னொடுமா லறியாத    
    பரமன் னுறையும் பனையூரே.    1.37.9
        
    அழிவல் அமண ரொடுதேரர்    
    மொழிவல் லனசொல் லியபோதும்    
    இழிவில் லதொர்செம் மையினானூர்    
    பழியில் லவர்சேர் பனையூரே.    1.37.10
        
    பாரார் விடையான் பனையூர்மேல்    
    சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்    
    ஆரா தசொன்மா லைகள்பத்தும்    
    ஊரூர் நினைவா ருயர்வாரே.    1.37.11
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. அவனொண்.    

 

Related Content

Who is most beautiful ?

Panaiyoor - Paloor Siva Temple