logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppalanam-vethamodhi-vennulpuntu

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு


 1.67 திருப்பழனம்    
        
பண் -  தக்கேசி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்    
    பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்    
    நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று    
    பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.    1.67.1
        
    கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார் காலனைப்    
    புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந் தாளால்    
    எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான் மகளோடும்    
    பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழன நகராரே.    1.67.2
        
    பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல் விழிகட்பேய்    
    உறையுமயான மிடமாவுடையார் உலகர் தலைமகன்    
    அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல் பாடல்செய்    
    பறையுஞ்சங்கும் பலியும்ஓவாப் பழன நகராரே.    1.67.3
        
    உரமன்னுயர்கோட் டுலறுகூகை யலறும் மயானத்தில்    
    இரவிற்பூதம் பாடஆடி யெழிலா ரலர்மேலைப்    
    பிரமன்தலையின் நறவமேற்ற பெம்மான் எமையாளும்    
    பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.    1.67.4
        
    குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடை யண்ணல்    
    கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற் காவேரி    
    நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண் டெதிருந்திப்    
    பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழன நகராரே.    1.67.5
        
    வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின் னொலியோவா    
    மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியா மதிளெய்தார்    
    ஈளைப்படுகில் இலையார்தெங்கிற் குலையார் வாழையின்    
    பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழன நகராரே.    1.67.6
        
    பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார் திருமேனி    
    செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்த அகலத்தார்    
    கையாடலினார் புனலால்மல்கு சடைமேற் பிறையோடும்    
    பையாடரவ1 முடனேவைத்தார் பழன நகராரே.    1.67.7
        
    மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறா யெடுத்தான்தோள்    
    அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடர வூன்றினார்    
    நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான் வம்பாரும்    
    பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழன நகராரே.    1.67.8
        
    கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன் சடையார்விண்    
    முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந் தாவிய    
    நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக் காணாத    
    படியார்பொடியா டகலமுடையார் பழன நகராரே.    1.67.9
        
    கண்டான் கழுவா முன்னேயோடிக் கலவைக் கஞ்சியை    
    உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார் பாராட்ட    
    வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய் மிகவுண்டு    
    பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழன நகராரே.    1.67.10
        
    வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்    
    நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞான சம்பந்தன்    
    பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான் பழனத்தை    1.67.11
    வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார் நல்லாரே.    
        
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. பைவாயரவ.    

 

Related Content

Even if the Loved One does not come ...