logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thirukkalumalam-ayiluru-pataiyinar

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்


 1.79 திருக்கழுமலம்    
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
    அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்     
          அரவமும் மதியமும் விரவிய அழகர்    
    மயிலுறு சாயல வனமுலை யொருபால்     
          மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்    
    பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்    
          பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்    
    கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.      1.79.1
                    
    கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்     
          கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்    
    பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்     
          படர்சடை யடிகளார் பதியத னயலே    
    வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்     
          மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்    
    கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.2
                    
    எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்     
          எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்    
    மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்     
          வகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்    
    பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்     
          பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட    
    கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்    
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.3
                    
    எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்     
          ஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்    
    திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்     
          தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி    
    வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச     
          மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த    
    கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.4
                    
    ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக     
          உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்    
    பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்     
          படஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்    
    நீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்     
          நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்    
    காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்    
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.5
                    
    முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி     
          முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்    
    பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த     
          பேரரு ளாளனார் பேணிய கோயில்    
    பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்     
          சாந்தமும் ஏந்திய கையின ராகிக்    
    கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்    
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.6
                    
    கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்     
          குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்    
    நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்     
          நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்    
    மலைக்கணித் தாவர வன்றிரை முரல     
          மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்    
    கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.7
                    
    புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்     
          பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்    
    பயம்பல படஅடர்த் தருளிய பெருமான்     
          பரிவொடு மினிதுறை கோயில தாகும்    
    வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்     
          வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்    
    கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்    
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.8
        
    விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்     
          வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்    
    பலங்களால் நேடியும் அறிவரி தாய     
          பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்    
    மலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்     
          மறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்து    
    கலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.9
                    
    ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்     
          அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்    
    நோம்பல தவமறி யாதவர் நொடிந்த     
          மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்    
    சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்     
          தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்    
    காம்பன தோளியொ டினிதுறை கோயில்     
          கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.    1.79.10
                    
    கலிகெழு பாரிடை யூரென வுளதாங்     
          கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்    
    வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்     
          வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்    
    ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்     
          உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்    
    மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்     
          விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.    1.79.11
        
    திருச்சிற்றம்பலம்    

 

Related Content

Becoming God Itself

Lead Happy Life

The Noble with the Lady

திருஞானசம்பந்தர் தேவாரம - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறைய

அயர்வு நீங்கு நெஞ்சமே