logo

|

Home >

hindu-hub >

temples

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

இறைவர் திருப்பெயர்: உத்தராபதீஸ்வரர், ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.

தல மரம்:

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர்.

Sthala Puranam

 

cengattankudi temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது.

 

விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

 

பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம்.

 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

 

Sri Utthrapatheeswarar temple, Thiruchengattangudi.

 

Sri Ganesh worshiping - Sri Utthrapatheeswarar temple, Thiruchengattangudi.
Sri Utthrapatheeswarar temple, Thiruchengattangudi.
The holy pond of Sri Ganesh worshiping - Sri Utthrapatheeswarar temple, Thiruchengattangudi.

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்     :     சம்பந்தர்      -   1. நறைகொண்ட மலர்தூவி (1.61),                                           2. பைங்கோட்டு மலர்ப்புன்னைப் (3.63);                       அப்பர்       -   1. பெருந்தகையைப் பெறற்கரிய (6.84);   பாடல்கள்      :     சம்பந்தர்      -        அங்கமும் வேதமும் (1.6) திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்;                            சுந்தரர்       -        வார்கொண்ட (7.39.6) திருத்தொண்டத்தொகை;              பரணதேவ நாயனார்   -        சிவனந்தஞ் செல்கதிக்கோர் (11.24.69) சிவபெருமான் திருவந்தாதி;                       சேக்கிழார்     -       சீர் தரு செங்காட்டங்குடி (12.21.240) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                               அருகு அணையும் (12.28.468,469 & 484) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                               உரு நாட்டுஞ் (12.36.1,18 & 35) சிறுத்தொண்ட நாயனார் புராணம்.

Specialities

  • இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது.

 

  • சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம்.

 

மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது.

 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும்.

 

இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது.

 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 

நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 

  • சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார்.

 

  • இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது.

 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார்.

 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே), திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன.

 

இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர்.

 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடபடுகிறது.

சிறுத்தொண்டர் வரலாறு

 

இந்த நாயனாரின் இயற்பெயர் - பரஞ்சோதியார்; ஆயுர்வேதக்கலையும் அலகில் வட நூற்கலையும், தூய படைக்கலத் தொழிலும், பயின்றவர்; மதயானையையும், குதிரையையும் ஏறி நடத்துவிக்கும் ஆற்றலில் தேவர்களிலும், மண்ணுலகத்தோர்களிலும் மேம்பட்ட நிலையினர். பலகலைகளையும் பயின்றதன் முடிவாக சிவபெருமானின் கழல் அடைவதே ஞானம் என்ற உணர்வு ஓங்க, இறைவன் கழலுக்கு இவர்பால் பெருகிய அன்பு பள்ளத்தில் வீழும் நீர் போல அமைந்த பண்பினர். ஈசன் அடியார்க்கு இயல்பாகப் பணிசெய்யும் நலத்தவர்.

 

மன்னவனுக்குப் போர்த் தலைவராகச் சென்று பல நாடுகளை வென்று, பின் வாதாபியையும் வென்று, பெரும்பொருள் கொணர்ந்து குவித்தார். சிவனடிமைத் திறத்தினர் என்ற இவர் நிலை அறிந்த மன்னன், தன் தவறை உணர்ந்து நிறைந்த நிதிக் குவியல்களைக் கொடுத்து சிவத் தொண்டு சிறப்பாக செய்க என விடை கொடுத்து அனுப்பினான். முன்போல கணபதீச்சரத்தில் தொண்டுகள் செய்தார். சிவனடியார்களுக்கு சிறந்த பணி செய்ய திருவெண்காட்டுநங்கை என்ற நற்குண நங்கையை மணந்தார். சிவனடியார்களை நாள்தோறும் அமுது செய்வித்து அகமகிழ்ந்துப் பின் தான் உண்ணும் உயர்ந்த தவத்தை மேற்கொண்டு, நியதி வழுவாமல் வாழ்ந்து வந்தார். வரும் சிவனடியார்களை இனிய மொழிகள் கூறித் தாழ்ந்து வணங்கிப் போற்றி வழிபடுதலால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு சிறந்த இவரது மனையறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டுநங்கை வழி சீராளர் எனும் மைந்தர் அவதரித்தார். இவரது செயற்கரிய பக்தியின் நிலையை உலகறியச் செய்யும் பெருங்கருணையுண்டன் வயிரவக் கோலத்துடன் திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் சிவபெருமான்.

 

பெரும் பசியுடையவர் போல சிறுத்தொண்டர் இல்லம் சென்று "தொண்டனார்க்கு எந்நாளும் சோறளிக்கும் திருத்தொண்டர் வண்டார் பூந்தாரார் இம்மனைக் குள்ளாரோ?" என வினவினார். இவரது கோலம் கண்டு, மாதவம் மிக்கவர் இவரென சந்தனத் தாதையார் உணர்ந்து அவரிடம் "அமுது செய்விக்க எல்லையில் புகழ் அடியவரைத் தேடி அவர் சென்றுள்ளார்; எம்மை ஆளுடையவரே இல்லத்தில் எழுந்தருளி இரும்" என்றார். "பெண்கள் தனித்திருக்கும் இடத்தில் தனியாக நாம் புகோம்" என அகலும் நிலையில், திருவெண்காட்டுநங்கையார் முன்வந்து "அம்பலவர் அடியவர் எவரையும் அமுது செய்விக்கக் காணாதவராய் தேடிப் போயுள்ளார்; உடன் வந்துவிடுவார்; எழுந்தருள்க!" எனக் கூறினார். இறைவனார் அவரிடம் "ஒப்பில் மனையறம் புரப்பீர் உத்திராபதியுள்ளோம்; செப்பருஞ்சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்; எப்பரிசு அவர் ஒழிய இங்கு இரோம்; கணபதீச்சரத்தின் கண் வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்றவர் தாம் நண்ணினால் நாமிருந்த பரிசுரைப்பீர்" எனக் கூறி அகன்றார்.

 

அடியவர் எவரையும் காணாது வருந்தி மீண்ட சிறுத்தொண்டரிடம், மனைவியார் பயிரவர் கோலத்தில் வந்த அடியவர் விபரம் கூறினார். விரைந்து எய்தி பயிரவக் கோலம் கொண்டிருந்தவரைக் கண்டு திருப்பாதம் பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கி "நீரோ பெரியசிறுத்தொண்டர்?!" என இறைவனார் வினவ, "நீறணிந்த அடியவருடன் போற்றப் போதேன்; ஆயிடினும் நாதன் அடியவர் கருணையோடு அப்படி அழைப்பர்" எனச் சொல்லி "அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்" என்றார். அவரிடம் "பயிரவர் உத்திராபதியாகிய நாம் நிகழும் தவத்தீர், உமைக் காணும் படியால் வந்தோம்; எனக்குப் பரிந்தூட்டும் அரிய செய்கை உமக்கு இயலாது" என்றார்.

 

"சிவபெருமான் அடியவர் தலைப்படின் தேடமுடியாததில்லை" எனச் சொன்ன சிறுத்தொண்டரிடம் "ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் உணவு கொள்வோம்; பசு வீழ்த்திட்டு உண்போம் அதற்கான நாள் இன்று; ஊட்ட உனக்கு அரிது" என்றார். "விபரம் கூறினால் செய்வேன் எனக்கு அரியதில்லை" என்றவரிடம் "ஐந்து வயதிற்குட்பட்ட உறுப்பில் குறையில்லாத குழந்தை, ஒரு குடிக்கு ஒரு மகனாகத் தந்தை அரியத் தாய் பிடிக்கும் போது அவர்கள் மனம் உவந்து குறையின்றி அமைக்கும் கறியே நாம் உண்பது" என்றார். "அடியேனுக்கு இதுவும் அரிதன்று, எம்பெருமான் அமுது செய்யப் பெறில்" என்ற சிறுத்தொண்டர் மனைவியாரிடம் விபரம் கூறினார். "பொருள் கொடுத்தால் குழந்தை தருவார் உளரோ?! குழந்தையை பெற்றோர் அரிவார் இல்லை; தாழாமல் நாம் பெற்ற மகனை அழைப்போம் நாம்" என்றார். பாடசாலையில் இருந்து சீராளனை அழைத்து வந்து அரியசெய்கை செய்து, அமுதாக்கி பயிரவர் கோலம் பூண்டுள்ள அடியவரை அமுதுக்கு எழுந்தருளச் செய்தபோது, "தலைக்கறி நாம் விரும்பி உண்பது" எனத் தெரிவிக்க, சிறுத்தொண்டர் அது உதவாது என ஒதுக்கியதால் அஞ்ச, தாதியார் எதிர்பார்த்துத் தானே பக்குவம் செய்த தலைக்கறியை கொண்டு வந்து கொடுத்தார். "தனியே உண்ண மாட்டேன் ஈசன் அடியார் எவரேனும் இருப்பின் கொணர்க" என்றார் அடியவர் சிறுத்தொண்டர் வெளியில் எவரையும் காணாது, மீள வந்து பயிரவக் கோலம் கொண்ட அடியவரிடம் "இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன்; யானுந் திருநீறு சகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்" எனத் தாழ்ந்து இறைஞ்சினார்."உம்மைப் போல் நீறிட்டார் உளரோ?! எம்முடன் உண்பீர் நீர்" என்றார். அடியவரை உண்ணத் தொடங்குவிக்கும் நோக்குடன் சிறுத்தொண்டர் உண்ணத் தொடங்க, பயிரவர் வேடத்திலிருக்கும் இறைவர் தடுத்தருளி "ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நான் உண்ணத் தொடங்கும் அளவு பொறாது, நாளும் உண்ணும் நீ முன்பு உண்பதென்?! உன் மகனை அழை" என்றார். "இப்போது உதவான் அவன்" என்றவரிடம், "நாடி அழையும்" என்று பயிரவர் சொல்ல, தொண்டர் தன் மனைவியாருடன் வெளியே வந்து "மைந்தா வருவாய்" என அழைத்தார்; அவர் மனைவியார் "செய்ய மணியே சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம், உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்" அழைத்தார். பாடசாலையினின்றும் வருபவன் போல் சீராளத்தேவர் ஓடிவர, எடுத்துத் தழுவிக் கணவன் கையில் கொடுக்க, இருவரும் உள்ள சென்றபோது, பயிரவர் மறைந்தருளி, மலை பயந்த தையலோடு சரவணத்துத் தனயரோடும் சோமாஸ்கந்தராக விண்ணில் காட்சியளித்து அவர்கள் அனைவருக்கும் சிவானந்த வீடுபேறு அருளினார் இறைவனார்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருவாரூர் - திருமருகல் சாலையில், 'செங்காட்டங்குடி' என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில், அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக 3-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. தொடர்புக்கு :- 94431 13025 , 04366 - 270 278.

Related Content

முப்புராரி கோட்டம் ஈயப்பிள்ளையார்கோயில் மண்டபம்

கேரளபுரம் மகாதேவர் திருக்கோயில்