logo

|

Home >

hindu-hub >

temples

திருப்பனையூர்

இறைவர் திருப்பெயர்: சௌந்தரேஸ்வரர், அழகியநாதர், தாலவனேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: பிரஹந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : பராசர தீர்த்தம். (அமிர்தபுஷ்கரணி, திருமகள் தீர்த்தம்).

வழிபட்டோர்: சம்பந்தர்,சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர், சேக்கிழார், ப்தரிஷிகள் (கௌசிகர், காசிபர், பரத்வாஜர், கௌதமர்,அகத்தியர், அத்ரி, பிருகு),பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற் சோழன் ஆகியோர்.

Sthala Puranam

 

Panaiyur temple

  • இவ்வூருக்கு 'தாலவனம் ' என்றும் பெயர்; கோயிலுக்கு 'தாலவனேஸ்வரம் ' என்று பெயர்.

     

  • கோயில் வாயில் நுழைந்ததும் - துணை இருந்த விநாயகர் - தந்தையை இழந்து, பிறந்த கரிகாலனை, கொன்று அரசைக் கைப்பற்ற நினைத்த தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய் மாமனாகிய 'இரும்பிடர்த்தலையார் ' என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூர்க்கு அனுப்பி வைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட்டு, அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற் சோழனுக்குத் துணையிருந்ததனால் இவ்விநாயகர் 'துணை இருந்த விநாயகர் ' என்னும் பெயர் பெற்றார்.

     

  • சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின் வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று "தம்மையே புகழ்ந்து " என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி காட்டியருள, எதிர் சென்று தொழுது, வீழ்ந்து வணங்கி, 'அரங்காடவல்லார் அழகியர் ' என்று பதிகம் பாடி, அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும், ஊருக்கு வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் 'சந்தித்த தீர்த்தம் ' என்னும் பெயருடன் திகழ்கிறது.

 

தேவாரப் பாடல்கள்	: 

பதிகங்கள்    :    சம்பந்தர்      -	1. அரவச் சடைமேல் மதிமத்தம் (1.37);
                                
                    சுந்தரர்        -	1. மாடமாளிகை கோபுரத்தொடு (7.87); 

                    அப்பர்         -       செழுநீர்ப் புனற்கெடில (6.007.5); 

               மாணிக்கவாசகர்   -       திருப்பனையூரில் விருப்பன் ஆகியும் (8.02.87 வது வரி பாடல்) கீர்த்தித் திருவகவல்; 

                  சேக்கிழார்       -       காழியார் வாழ வந்து (12.28.519) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்; 
                                            பதிகம் பாடித் (12.29.52,53 & 54) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

Specialities

  • சிறிய ஊர், பழமையான கோயில்; கரிகாற் சோழன் வளர்ந்த ஊர்.

     

  • பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர்; இதற்கு "தாலவனம் " (தாலம் - பனை) என்றும் பெயருண்டு.

     

  • தல மரங்களாக இரு பனைமரங்கள் உள்ளன. இம்மரங்கள் நெடுங்காலமாக இருந்து வருகின்றன. வளர்ந்த இம்மரங்கள் முதிர்ச்சியுறுங் காலத்தில், "வித்திட்டு முளைக்காததாக" (வாழையைப்போல) இரண்டின் அடியிலும் முறையே பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன.

     

  • கல்வெட்டில் இறைவன் 'பனையடியப்பன்', 'பனங்காட்டிறைவன் ' என்று குறிக்கப்பெறுகின்றன.

     

  • சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக, இங்கு பிரகாரத்தில் உள்ள விநாயகரும் 'மாற்றுரைத்த விநாயகர் ' என்றழைக்கப்படுகிறார்.

     

  • சப்த ரிஷிகள் வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன.

     

  • பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி - தாலவனேஸ்வரர் - மேற்கு நோக்கியது - சதுர ஆவுடையார் - இப்பெருமானே தலத்திற்குரிய இறைவராவார்.

     

  • இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்பாக - இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணமுள்ளது.

     

  • இக்கோயில் கி. பி. 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டது என்றும்; கல்வெட்டில் இக்கோயில் "இராசேந்திர சோழப் பனையூர் " என்று குறிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு பேரளம் - திருவாரூர் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து சென்று 'பனையூர் ' என்று கைகாட்டியுள்ள கிளைப்பாதையில் 1 கி. மீ. செல்ல வேண்டும். குறுகலான மண்பாதை, பேருந்து செல்லாது. கார், வேன் செல்லும். தொடர்புக்கு :- 04366- 237 007.

Related Content