logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்). பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்).

இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி, பெண்ணினல்லாளம்மை (மலைமேல் இருப்பவர்). திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்).

தல மரம்:

தீர்த்தம் : சங்குத் தீர்த்தம். பட்சித் தீர்த்தம் மலையைச் சுற்றி அமைந்த 12 தீர்த்தங்கள்: இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌஷிக தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பக்ஷி தீர்த்தம்.

வழிபட்டோர்:மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் முதலியோர்.

Sthala Puranam

 

kazukkunram Hill temple
திருக்கழுக்குன்றம் மலைக்கோயில் வேதகிரீஸ்வரர் 

 

 

 

  • இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி ' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.  ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.
  • கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்றுச் சென்றுள்ளன. 

 

kazukkunram Hill temple
  • கழுகுகள் இராமேஸ்வரத்தில் ஸ்னானம் செய்து, கழுக்குன்றத்தில் ஆகாரம் உண்டு, காசியில் அடைக்கலம் ஆவதாக  ஐதீகம்.
  • 500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம் ' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
  • சுரகுரு மகாராஜாவுக்கு சுவாமி இத்தலத்தில் காட்சி தந்தார். 
  • இத்தலம் இந்திரனால் பூஜை செய்யப்படுவது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மலைக்கோயிலில் கருவறை கோபுரத்தின் துவரம் வழியாக இடி சிவலிங்கத்தைச் சுற்றிப் பாய்கிறது. 
  • தாழக்கோயில் - மார்க்கண்டேர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.
  • இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
kazukkunram temple

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள்   :   சம்பந்தர்   -  1. தோடுடையானொரு காதில் (1.103);                  அப்பர்      -  1. மூவிலைவேற் கையானை (6.92);                  சுந்தரர்     -  1. கொன்று செய்த கொடுமை (7.81);            மாணிக்கவாசகர் -    1. பிணக்கிலாத (8.30) திருக்கழுக்குன்றப் பதிகம்; பாடல்கள்   :  சம்பந்தர்    -       அண்ணாமலை (2.39) திருக்ஷேத்திரக்கோவை,                                      அண்ணாவுங் கழுக்குன்றும் (3.64) பெருவேளூர்;                 அப்பர்      -        புறம்ப யத்தெம் (4.15.4) பாவநாசத்திருப்பதிகம்,                                       சிறையார் புனற்கெடில (6.7.3) காப்புத்திருத்தாண்டகம்,                                         ஆரூர்மூ லத்தானம் (6.70.2) க்ஷேத்திரக்கோவை,                                       கந்தமா தனங்கயிலை (6.71.9) திருஅடைவு,                                       பற்றவன்காண் (6.76.9) புத்தூர், பாண்டியநாடு,                                       உழையாடு (6.81.7) திருக்கோடிகா,                                       தேவார்ந்த தேவனைத் (6.99.7) திருப்புகலூர்;                                   சுந்தரர்      -        கச்சையூர் (7.31.4) இடையாறு;           மாணிக்கவாசகர்  -        கழுக்குன்று அதனில் (8.2.89 வது வரி பாடல்); சேரமான் பெருமாள் நாயனார்  -    இழையார் வனமுலை (11.7.59) பொன்வண்ணத்தந்தாதி;               சேக்கிழார்        -    திருக்கச்சி ஏகம்பம் பணிந்து (12.21.329 & 330) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                       திருக்கழுக் குன்றத்து அமர்ந்த (12.28.1131) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                       தண்டகமாந் திருநாட்டுத் (12.29.172 & 173) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

kazukkunram in view of bird eye
திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் பக்தவத்சலேஸ்வரர் 

 

Specialities

kazukkunram pond
  • மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
  • மலைக்கோயில் மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர்.
  • இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும்.
  • மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.
  • மலைக்குச் செல்லும் ஒரு பாதையில் பல்லவன் மகேந்திரவர்மன் காலத்திய குடைவரைக் கோவில் ஒன்றுள்ளது. கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது.
  • பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்பு.
  • இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அநுபவத்தில் உணர்ந்துள்ளனர்.)
kazukkunram pond in view of bird eye
  • மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.
  • தாழக்கோயில் - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
  • இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார்.
  • கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
  • சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
  • வலம்வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது.
  • பிரகாரத்தில் ஆத்மநாதர் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.
kazukkunram temple
  • அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.
  • சித்திரை திருவிழாவில்  3ம் நாள்  காலை அதிகாரநந்தி சேவையன்று பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களோடு மலைவலம் வருதல் சிறந்த காட்சி. பத்தாம் நாள் விழாவில் இரவிலும் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மலைவலம் வருவது நடைபெறுகின்றது.
  • 12 வருடத்திற்கு ஒருமுறை கன்னி ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்சதீபம் ஏற்றப்படும். இத்திருவிழாவிற்குப் புஷ்கரமேளா என்று பெயர். 
  • 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
  • கல்வெட்டுக்களில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம் ' என்று குறிப்பிடப்படுகிறது.

 

 

kazukkunram temple
  • பாண்டியமன்னன் ஜடாவர்மன் என்கிற திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன் காலத்தில் செயங்கொண்ட சோழ மண்டலத்தில் களத்தூர் கோட்டத்துத் திருக்கழுக்குன்றம் என்றும்(59 of 1909), சோழர் காலத்தில் களத்தூர் கோட்டத்தில் களத்தூர் நாட்டிலுள்ள உலகளந்த சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றது. இறைவன் திருக்கழுக்குன்றமுடைய நாயனார் ( 61 of 1909)என்று வழங்கப்படுவர். சண்முகப் பிள்ளையார் குறிக்கப்பட்டுள்ளார்( 62 of 1909). இராஷ்டிரகூட அரசன் கன்னரதேவன் காலத்தில் கருப்பக்கிருகத்தின் முன் மண்டபங்கட்ட ஈசானசிவாசாரியாரிடமிருந்து ஒருபட்டி நிலம் வாங்கப்பட்டது( 170 of 1894).பக்தவத்சலக் கோயில் குன்றத்தின் மேலுளதாக(189 of 1894, 57 of 1909) இரண்டு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. கோயிலைப் பழுதுபார்க்க விஜயநகர அரசன் பிரதாபபுக்கராயர் நிலம் தந்துள்ளார். மேலும் தம் பெயராகிய புக்கராயன் சந்தி விழாவிற்காகவும் நிலம் தானம் செய்யதுள்ளார்( 57 of 1909). ஆயிரப்பிரிவிலுள்ள மக்களால் திருமலை ஆளுடை நாயனார் கோயிலுக்கு நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது(58 of 1909). களத்தூர் பிரிவிலுள்ள மக்களால் அதே கோயிலுக்கு காளிங்கராயன் சந்தி விழாவிற்காக நிலம் தானஞ்செய்யப்பட்டது(59 of 1909). மாறவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி வீரபாண்டியதேவன் காலத்தில் ஒரு நபரால் சண்முகப் பிள்ளையார் கர்ப்பக்கிருகத்திற்கு விளக்கிடப் பசுக்கள் தானஞ் செய்யப்பட்டுள்ளன( 62 of 1909). விஜய நகர அரசன் வீரவிஜய பூபதிராயரது ஆட்சியில் அரசனுடைய அதிகாரியான நாகேசுவரமுடையான் விழாவிற்காக வரியைத் தள்ளுபடி செய்துள்ளான்(63 of 1909). 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒல்லாந்து நாட்டு அதிகாரிகளைப்பற்றிய அடையாளச் செய்திகள் குன்றின் ஒருகால்மண்டபத்தின் கீழ்த்தாழ்வாரத்தின் 8 சுவர்களின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன(66 to 73 of 1909). இவையன்றி விளக்கு முதலானவற்றுக்குப் பொன், நிலம், ஊர், ஆடுகள், பசுக்கள் முதலியன அளிக்கப்பட்ட செய்திகளும் அறியப்படுகின்றன.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன; இங்கிருந்து 14-கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம். செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன. தொடர்பு : 044 - 27447139, 09442811149

Related Content

திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு

திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் த

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் (அச்சரப்பாக்கம்) தல