logo

|

Home >

hindu-hub >

temples

திருக்கச்சூர் (கச்சூர்) ஆலக்கோயில், மருந்தீசர் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: விருந்திட்டஈஸ்வரர், விருந்திட்டவரதர், கச்சபேஸ்வரர். (மருந்தீசர் கோயிலில் - மருந்தீசர்).

இறைவியார் திருப்பெயர்: அஞ்சனாக்ஷியம்மை. (மருந்தீசர் கோயிலில் - அந்தகநிவாரணிஅம்பாள், இருள்நீக்கித்தயார்.)

தல மரம்:

தீர்த்தம் : கூர்ம (ஆமை) தீர்த்தம்.

வழிபட்டோர்:சுந்தரர், அப்பர், சேக்கிழார், திருமால் முதலியோர்

Sthala Puranam

kaccur alakkoil

kaccur alakkoil

  • கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்: 
    • இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர் ' எனும் பெயருடையவர். பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது.. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும். செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
    • இக்கோயில் ஆலக்கோயிலாகும்; ஆதலின் 'கச்சபவூர் ' என்னும் பெயர் நாளடைவில் மருவி மக்கள் வழக்கில் 'கச்சூர் ' என்றாயிற்று என்பர்.
    • சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம். பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார்.
  • கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்
    • இந்திரன் ஒரு சாபத்தினால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்கள் ஆன அஸ்வினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்து நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகை தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க அவர் மருந்துமலை எனும் மலையில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அஸ்வினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு சிவபெருமான் மருந்து இருக்கும் இடத்தைக் காட்டி அருள் புரிந்தார். தேவர்கள் பலா, அதிபலா என்ற இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு இந்திரனின் நோய் தீர்த்தனர். நோய் தீர்க்க மருந்து கொடுத்ததால்  இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • மருந்தை எடுத்துச் செல்ல அம்பாள் ஒளியைப் பரப்பியதால் இருள்நீக்கியம்பாள் என்று பெயர்.
       

 

தேவாரப் பாடல்கள் : பதிகங்கள் : சுந்தரர்  -  1. முதுவாய் ஓரி கதற (7.41); பாடல்கள்  : அப்பர்   -     எச்சில் இளமர் (6.70.4);           சேக்கிழார்   -     பாடிய அப்பதியின் (12.29.174 & 177) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

Specialities

  • vishnu making siva puja
  • இந்தத் திருத்தலத்தில் இரண்டு சிவாலயங்கள் வழிபடவேண்டும். ஒன்று கச்சூர் ஆலக் கோயில் இரண்டாவது மலையடிவாரத்தில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில். முதலில் ஆலக்கோயிலையும், பின்பு மருந்தீசர் கோயிலையும் தரிசிக்க வேண்டும் என்பது மரபு.

1) கச்சூர்க் கோயில் - ஆலக்கோயில்,

இறைவன் - விருந்திட்ட ஈஸ்வரர், விருந்திட்ட வரதர், கச்சபேஸ்வரர்.
இறைவி -அஞ்சனாக்ஷியம்மை
தலமரம் -ஆல்
தீர்த்தம்- கூர்ம (ஆமை) தீர்த்தம்.

  • கூர்ம குளத்திற்கு அருகில் சுந்தரர் பசிக் களைப்பால் படுத்திருந்த 16 கால் மண்டபம் இருக்கிறது. 
  • கோயிலுக்கு எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபத்தூண்களில் அநுமந்தசேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்க்கை, ஆதிசேஷன், ஊர்த்த தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்களும், பக்க (தெற்கு) வாயில் முன்னால் மண்டபத் தூண் ஒன்றில் திருமால் ஆமை வடிவில் இறைவனை வழிபடும் சிற்பமும் உள்ளன.
  • மூலவர் சிவலிங்கத்திருமேனி; சுயம்பு மூர்த்தி - சிறிய பாணம்; கருவறை அகழி அமைப்புடையது.
  • சித்திரையில் நடைபெறும் பெருவிழாவில் 9-ம் நாளன்று இறைவன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின்முத்திரை உபதேச ஐதீகம் நடைபெறுகின்றது.
  • சுந்தரரின் 'முதுவாயோரி ' தலப்பதிகம் - கல்லிற்பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலில் சித்திரையில் நடைபெறும் பெருவிழா அனைத்தும் தியாகராஜாவுக்குத்தான். இத்திருவிழாவில் 9-ஆம் நாளன்று, இறைவன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின்முத்திரை உபதேச ஐதீகம் நடைபெறுகின்றது. 

2) மருந்தீசர் கோயில் (மலையடிவாரக் கோயில்)

இறைவன் - மருந்தீசர்
இறைவி- அந்தகநிவாரணிஅம்பாள், இருள்நீக்கித் தாயார்.
 இம்மலைக்கு மருந்து மலை-  ஒளஷதகிரி என்று பெயர். 
விநாயகர் - தாலமூல விநாயகர் (அ) கருக்கடி விநாயகர்.

  • மருந்தீசர் கோயில் உள்ள மலைக்கு மருந்து மலை - ஒளஷதகிரி என்று பெயர்.
  • (மருந்தீசர்) கோயிலை சுற்றிலும் இயற்கைச் சூழல் - அமைதியான இடம்.
  • இக்கோயிலுள் (மருந்தீசர் கோயில்) சென்றதும் உள்ள சிறிய மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்களில், இறைவன் அமுதுடன் சுந்தரை நோக்கியவாறு உள்ள சிற்பம் - கண்டு மகிழத்தக்கது.
  • இக்கோயிலில், படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய 'நடைபாதைக் கிணறு ' உள்ளது.
  • இக்கோயில் மூலவர், உயர்ந்த திருமேனி - கோமுகம் மாறியுள்ளது.
  • கோஷ்டமூர்த்தமாகவுள்ள பிரம்மாவுக்கு எதிரே, "சண்டேஸ்வரர் நான்கு முகங்களுடன் (சதுர்முக சண்டேசுவரராக) காட்சித் தருகின்றார் ". இந்த அமைப்பு இக்கோயிலில் உள்ள ஓர் அரிய உருவ அமைப்பாகும்.
  • கொடிமரத்தின் அருகே ஒரு மண்குழி உள்ளது. இது மருந்து எனப்படுகிறது.
  • மாசி மாத திருவிழாவின் 9-ம் நாளில், இறைவன் பிச்சையெடுத்துச் சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீகம் நடைபெறுகிறது.

 

  • இரந்திட்ட ஈஸ்வரர் வீற்றிருக்கும் சிறிய கோயில் உள்ளது. சித்திரையில் பெருவிழா நடைபெறுகிறது.
  • இக்கோயிலில், சோழமன்னர்களில் முதற்குலோத்துங்க சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதி ராஜதேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், மூன்றாங் குலோத்துங்கசோழன் இவர்கள் காலங்களிலும் பாண்டிய மன்னர்களில் ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியன்,  விஜயநகரவேந்தரில் அரியண்ண உடையார் மகன் விருப்பண்ண உடையார் காலத்திலும்; சாளுவ மன்னரில் நரசிங்கராயர் காலத்திலும் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் மூன்றாங்குலோத்துங்க சோழன் கல்வெட்டுக்கள் தான் மிகுதியாக உள்ளன.
  • இக்கல்வெட்டுக்களில் இறைவர் திருஆலக்கோயில் உடையார் என்னும் பெயரால் குறிக்கப்பட்டுள்ளார். இவ்வூர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து, செங்குன்ற நாட்டுத் திருக்கச்சூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 14 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு, திருக்கச்சூர்க்கு நித்தவிநோத நல்லூர் என்னும் வேறு பெயரைக் குறிப்பிடுகின்றது.
  • மூன்றாங் குலோத்துங்கசோழ தேவரது கல்வெட்டு, இத்திருக் கோயிலில் திருநாவுக்கரசு தேவரை எழுந்தருளுவித்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. மூன்றாங் குலோத்துங்க சோழனின் 35 ஆம் ஆண்டில் நந்திவர்மன் கட்டளைப்படி, திருஆலக்கோயில் உடைய இறைவர்க்கு அறுபத்து ஏழு வேலி நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானின் முப்பத்தாறாம் ஆண்டில் செங்குன்றமாகிய அருமொழிதேவ நல்லூரிலும், நிலங்கள் விடப்பட்டுள்ளன. 
  • திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் எட்டாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு, எண்ணெய் வியாபாரம் செய்யும் செக்காளர்கள், காஞ்சிமகாநகரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி உடையார் கோயிலில்கூடி, திருக்கச்சூர் செக்காளர்கள், திருக்கச்சூர் கோயிலுக்குத் திருவிளக்குகளுக்கு எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்ததை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
  • ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு, தேவாரத்து ஈஸ்வர முடையார் திருக்கோயிலையும், மணற்குடி என்னும் ஊர், திருக்கச்சூர் ஆலக்கோயில் உடையார்க்குத் தேவதானமான ஊர் என்பதையும், குறிப்பிடுகின்றது.
  • சாத்தனார் என்பவர் முத்தமிழ் ஆசிரியர் என்றும் அவரது தமிழ்ப்புலமை பெரிதும் பாராட்டத்தக்கது என்றும், அவர் வழியில் வந்த பெருநம்பி என்பவர் பொய்யாமொழி மங்கலம் என்னும் ஊரைக் காணியாகவுடையவர் என்றும், அவர் கச்சூர்க் கடிகை (கற்றோர் அவை) யாரில் ஒருவர் என்றும் ஒரு கல்வெட்டு அறிவிக்கின்றது.
     

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னைக்குப் பக்கத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பேருந்து சாலையில் 1-1/2-கி. மீ. சென்று, "தியாகராஜபுரம் - திருக்கச்சூர்" என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் வலப்புறமாக பிரிந்து செல்லும் சாலையில் சென்று திருக்கச்சூரை அடையலாம். (ஊருள் சென்றதும் வலப்பால் திரும்பிச் சென்றால் [கச்சூர்] ஆலக்கோயிலையும் இடப்பால் சென்றால் மலையடிக் கோயிலான மருந்தீசர் கோயிலையும் அடையலாம்.) தொடர்பு : 044 - 27464325, 09381186389

Related Content

திருஇடைச்சுரம் - (திருவடிசூலம்) ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் த

திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் (அச்சரப்பாக்கம்) தல