logo

|

Home >

hindu-hub >

temples

திருவாலங்காடு (ரத்னசபை) திருக்கோயில் தல வரலாறு

இறைவர் திருப்பெயர்: வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர்.

இறைவியார் திருப்பெயர்: பிரம்மராளகாம்பாள், வண்டார்குழலி.

தல மரம்:

தீர்த்தம் : சென்றாடு தீர்த்தம் ' (செங்கச்ச உன்மத்ய மோக்ஷ புஷ்கரணி), முத்தி தீர்த்தம்.

வழிபட்டோர்:கார்க்கோடகன், சுநந்த முனிவர் , சம்பந்தர் , அப்பர் , சுந்தரர், காரைக்கால் அம்மையார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்

Sthala Puranam

thiruvaalangadu temple

  • இத்தலம் 'வடாரண்யம் ' எனவும் பெயர் பெற்றது.
  • இறைவன் காளியுடன் நடனமாடிய தலம். காளி அன்னை உக்கிரமாக இருந்தபோது முஞ்சிகேச கார்க்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் காளியுடன் நடனமாடி ஊர்த்துவ தாண்டவத்தால் வென்று காளியின் கோபத்தை அடக்கினார். சிவபெருமான் காளிக்கு அருள் செய்து இங்கு எழுந்தருளி உள்ளார். அருகில் காளிக்குத் தனிக் கோயில் உள்ளது.
  • கார்க்கோடகன், சுநந்த முனிவர் முதலியோர் வழிபட்ட தலம்.
  • காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து நடராசப் பெருமானின் திருவடிக் கீழிருந்து சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலம்.
  • இங்கே வாழ்ந்த வேளாளர்கள் பழையனூர் நீலியால் வணிகன் உயிர் போகவும் தாம் கொடுத்த வாக்குப்படி தங்கள் உயிர் துறந்து சத்தியத்தை நிலை நாட்டினார்கள். இதனைத் `துஞ்ச வருவாரும்` என்னும் பாடலில் ஞானசம்பந்த சுவாமிகள் குறித்துள்ளார்.
  • காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்     - 1. துஞ்ச வருவாருந் (1.45);                அப்பர்       - 1. வெள்ளநீர்ச் சடையர் (4.68),                                 2. ஒன்றா வுலகனைத்து (6.78);                                                   சுந்தரர்       - 1. முத்தா முத்தி தரவல்ல (7.52); காரைக்கால் அம்மையார்    - 1. கொங்கை திரங்கி (11.2),                                 2. எட்டி இலவம் (11.3); பாடல்கள்  :   அப்பர்        -    மறைக்காட்டார் (6.51.7);  பரணதேவ நாயனார்         -    குறியார் மணிமிடற்றுக் (11.24.50); பட்டினத்துப் பிள்ளையார்     -   ஆலையங் கார் (11.30.65); சேக்கிழார்                    -   திரு ஆலங்காடு (12.21.342) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                     ஆலங்காடு அதனில் (12.24.63) காரைக்கால் அம்மையார் புராணம்,                                      குன்ற நெடும் (12.28.1007) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                      அங்கணர் தம்பதி (12.29.282 & 283) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

 

Specialities

thiruvaalangadu temple
  • மூலவர் சுயம்பு மூர்த்தி.
  • நடராசப்பெருமானின் ஊர்த்தவ தாண்டவத் தலமாகவும், பஞ்ச சபைகளுள் இரத்தினசபையாகவும் சிறப்புற்று விளங்குகிறது இத்தலம்.
  • மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
  • இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை உள்ளது.
  • கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் உள்ளன.
  • மூன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
  • இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் 'ரத்ன சபாபதி ' என்று அழைக்கப்படுகிறார்.
  • சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும்; திருமுறைபேழையும் உள்ளன.
  • சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணலாம்.
  • இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் விளங்குகிறது.
  • நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. 
  • கருவறை நல்ல கற்கட்டமைப்புடையது.
  • கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக உள்ளது.
  • பஞ்சபூத தல லிங்கங்கள் உள்ளன.
thiruvaalangadu temple
  • பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.-ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம் ' உள்ளது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரில் 'சாட்சி பூதேஸ்வரர் ' சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் உள்ளது.
  • தீப்பாய்ந்த வேளாளர்களின் மரவில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு சந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர். இம்மரபினரின் கோத்திரமே 'கூழாண்டார்கோத்திரம்'. அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம். சிவப்பற்றினை உணர்த்தும் இச்செய்தி நெஞ்சை நெகிழச் செய்கிறது.
  • பங்குனி உத்திரத்தன்றும், மார்கழித் திருவாதிரையன்றும் ஊர்த்துவதாண்டமுர்த்தி ஆண்டுக்கு இருமுறை திருவீதி எழுந்தருளி பழையனுர் சென்று வருகிறார்
  • கல்வெட்டில் நடராசப்பெருமானின் பெயர் 'அரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளிய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
  • கல்வெட்டுக்கள் 52 உள்ளன. இத்தலம் வடகரை மணவிற்கோட்டத்து மேல்மாலை பழையனூர் நாட்டுத் திருவாலங்காடு என்றும், ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேல்மாலையாகிய பழையனூர் நாட்டுத் திருவாலங்காடென்றும் வழங்கப்படுகின்றது. பெருமான் திருவாலங்காடு உடைய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார்.
  • இத்தலத்துள்  ஒரு மண்டபத்தை மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த அம்மையப்பன் பழியஞ்சிய பல்லவராயன் கட்டினான்.(468 of 1905) நடராஜப்பெருமான் திருவரங்கில் அண்டம் உற நிமிர்ந்தருளிய நாயனார் எனக் குறிப்பிடப்படுகிறார். இவருக்கு இலத்தூர்நாட்டு அரும்பாக்கத்துக் குன்றத்தூர்க் கோட்டத்து அறநிலை விசாரகன் திரைலோக்கிய மன்னன் வத்ஸராஜன் என்பவன் விளக்குக்காக நிலமளித்தான்.(482 of 1905) அம்மை வண்டார் குழலி நாச்சியார் எனவும், பிரமராம்பாள் எனவும் குறிப்பிடப்படு கிறார்.(495 of 1905).
  • ஏனைய கல்வெட்டுக்கள் நிலம் விற்றதையும், தண்ட நாயகருக்கு உத்தரவிட்டதையும் அறிவிப்பன. 477, 476 என்ற விஜய நகர அரசர் கல்வெட்டுக்கள் இம்மடி தர்மசிவாச்சாரியார், பொன்னம் பல சிவாச்சாரியார். அனந்தசிவாச்சாரியார், இவர்களுக்கு விழா நடத்த உத்திரவு அளித்துப் பொன் கொடுத்ததையும் உணர்த்துகின்றன. பராந்தகசோழன் I காலமுதல் விஜயநகர அரசர் காலம் வரையுள்ள இக்கல்வெட்டுகளால் இத்தலத்தின் தொன்மையை அறியலாம்.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் பேருந்துப் பாதையில் இத்தலம் உள்ளது. காஞ்சியிலிருந்தும், அரக்கோணத்திலிருந்தும், திருவள்ளூரிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துகள் உள்ளன.

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருமாகறல்

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)