logo

|

Home >

hindu-hub >

temples

திருமாகறல்

இறைவர் திருப்பெயர்: திருமாகறலீஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுவனநாயகி, புவனநாயகி.

தல மரம்:

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம். சேயாறு

வழிபட்டோர்:சம்பந்தர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், இந்திரன்.

Sthala Puranam

Magaral temple
திருமாகறல் திருக்கோயில் 
  • இந்திரன் வழிபட்ட தலம். 
  • மாகறன்,மலையன் என்னும் இரு அசுரர்கள் வழிபட்ட தலம். 
  • இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். (மாகறம் - உடும்பு)
  • இறைவனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் : அடைக்கலங்காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், உடும்பீசர், பாரத்தழும்பர், புற்றிடங்கொண்டார், நிலையிட்ட நாதர், மங்கலங் காத்தவர், பரிந்து காத்தவர், அகத்தீஸ்வரர் முதலிய திருநாமங்களாகும்.
  • வெள்ளை யானையின் மேல் முருகப்பெருமான் மகாவிஷ்ணுவிற்கு காட்சியளித்த தலம்.
  • இத்தலம் தொடர்பாகக் கிடைத்த செவி வழிச் செய்தி - இராசேந்திர சோழ மன்னனுக்கு நாடொறும் இக்கோயிலிலிருந்த பலா மரத்திலிருந்து பலாப்பழம் ஒன்று அனுப்பப்பட்டு, அது வழியில் தில்லையில் நடராசப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு, பின்பு மன்னனுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டு வந்தது. காலப்போக்கில் இக்கோயிலில் பணிசெய்தோர் இம்மரத்தை தீயிட்டு அழித்துவிட்டனர். பலாப்பழம் வாராதது அறிந்த மன்னன் ஆள் அனுப்பிச் செய்தியறிந்தான்; அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச்சென்று, மறுநாள் பொழுதுவிடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். அவ்வாறே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு விடப்பட்ட ஊர் (திருத்தணிக்கும் திருவள்ளுருக்கும் இடையில்) 'விடிமாகறல்' என்று வழங்கப்படுகிறது.
  • சேலம் சுப்பராயப் பிள்ளை என்பவர் தம் உடலில் இடுப்பின் கீழ் செயலற்றுப் போக எல்லாவித மருத்துவமும் செய்து பலனின்றிப்போக, திருமுறையில் கயிறுசார்த்திப் பார்த்து, இத்தலப்பதிகம் வர, இங்கு வந்து தங்கி, நாடொறும் இறைவனை வழிபட்டுத் தலப்பதிகத்தைப் பாராயணம் செய்து சிலகாலம் வாழ்ந்து இப்பெருமானருளால் உடல் பூரணகுணம் பெற்றுத் திரும்பினார். இந்நிகழ்ச்சி அண்மைக் காலத்தில் நிகழ்ந்ததாகும். இப்பகுதியில் உள்ள சமய அன்பர்கள் அனைவரும் இதை அறிவர்.

 

தேவாரப் பாடல்கள்     : பதிகங்கள்     :    சம்பந்தர்    -    1. விங்குவிளை கழனிமிகு (3.72); பாடல்கள்      :    சம்பந்தர்    -       ஆறைவட (2.39.5);      பட்டினத்துப் பிள்ளையார்   -       நிலாவு புகழ்த்திரு (11.30.64);                     சேக்கிழார்   -       அங்கண் அமரர் (12.28.984) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்.

Specialities

  • சிவலிங்கத் திருமேனி உடும்புபோல சிறுத்து உள்ளது; சுயம்பு மூர்த்தி; ஆவுடையார் பின்பு கட்டப்பட்டது.
  • மக்கட்பேறு வேண்டுவோர் இங்கு வந்து அங்கப்பிரதட்சணம் செய்யும் வழக்கம் முன் காலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
  • இங்கு திங்கள் கிழமை தரிசனம் விசேஷமாக சொல்லப்படுகிறது.
  • சம்பந்தரின் இப்பதிகம் 'வினை நீக்கும் பதிகம்' என்னும் சிறப்புடையது.
  • ஆலய விமானம் 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.
  • இக்கோயிலில் யானைமீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனி அழகுறக் காட்சித் தருவதைக் காணலாம்.
  •  மாசி மாதம் 10 நாள் பிரமோற்சவம்.
  • சோழமன்னர்களில் ``பூமேவி வளர் திருப்பொன்மாது புணர நாமேவு கலைமகள் நலம் பெரிது சிறப்ப`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பரகேசரி வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழதேவர், ``கடல் சூழ்ந்த பார்மன்னரும் சீர்மாதரும் அடல்சூழ்ந்த போர்மாதரு அமர்ந்துவாழ`` எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவர், மூன்றாங் குலோத்துங்க சோழதேவர், இவர்கள் காலங்களிலும்; பாண்டியரில் ``எம்மண்டலமும் கொண்டருளிய`` சுந்தரபாண்டிய தேவர் காலத்திலும் விசயநகரவேந்தர்களில் வீரதேவமகாராயர், கம்பண்ண உடையார் இவர்கள் காலங்களிலும், தெலுங்குச் சோழரில் விசயகண்டகோபால தேவன் காலத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இறைவர் ஆளுடையார் திரு அகத்தீச்சரமுடையார், மாகறல் உடைய நாயனார், திரு அகத்தீச்சரமுடைய நாயனார் என்னும் பெயர்களால் குறிக்கப்பெற்றுள்ளனர். இவ்வூர், சயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து மாகறல் நாட்டுக்கு உட்பட்டிருந்தது.
  • கோச்சடைய பன்மரான எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவரின் ஏழாவது ஆண்டில் இந்த அகத்தீசுவர முடைய நாயனாரின் சந்நிதியில் புதிதாகத் திருவீதிகளும் கண்டு, திருமடைவிளாகமும் ஏற்றினவன், மாகறல் பட்டியர் போயன் காமன் வரதன் ஆவன்.
  • மூன்றாங்குலோத்துங்க சோழன் காலத்தில், எயில்கோட்டத்து இருமரமான குலோத்துங்கசோழ நல்லூரில் விளைநிலம் முப்பது வேலியும் ஏரியும், ஊர்நத்தமும் கொல்லை நிலம் பதினொரு வேலியும் ஆக இந்த நாற்பத்தொரு வேலியும் பழந்தேவதான இறையிலி என்று இந்த அகத்தீச்சரமுடையார்க்குத் தேவதான இறையிலியாக விடப்பட்டுள்ளது. கோப்பரகேசரிவன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கசோழதேவர் திருவிளாகம் பெரும்பற்றப் புலியூரில் எழுந்தருளியிருக்கப் பெரிய உடையார் தேவரத்தே கேட்டருளி இத்தேவர்க்குத் தேவதான இறையிலியாக எயிற்கோட்டத்து மாகறல் நாட்டு இருமரமான குலோத்துங்க சோழ நல்லூரில் ஈராயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தைங்கலனே முக்குறுணி நெல் விளையக் கூடிய நிலத்தை விடுமாறு திருவாய் மொழிந்தருளினார் என்று ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

Contact Address

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு காஞ்சிபுரம் - உத்திரமேரூர் (வழி) ஓரிக்கை - பேருந்து பாதையில் உள்ள தலம். காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது. தொடர்பு : 09443596619

Related Content

திருக்கச்சிநெறிக்காரைக்காடு (திருக்காலிமேடு) காஞ்சிபுரத்தில

திருக்குரங்கணில்முட்டம் தலவரலாறு

திருவோத்தூர் கோயில் தலவரலாறு (திருவத்திபுரம், செய்யாறு)

திருவன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு)

திருவல்லம் (திருவலம்) தலபுராணம்