|
Home > Events
திருக்கொள்ளம்பூதூர் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - - - - - - - - -
thirukkoLLampUDUr srI soundarAmbikai uDanuRai srI vilvavanEsurar swAmy temple mahA kumbAbishEham * * * * *
அமைவிடம்:
அ/மி. ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோயில், திருக்கொள்ளம்பூதூர், குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்.
இட குறிப்பு (Land Mark):
இத்தலம் திருவாரூர் மாவட்டம் குடவாசலிலிருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் "செல்லூர்" என்ற ஊரிலிருந்து மேற்கே 1-கி.மீ. தொலைவில் காவேரியின் பிரிவான வெட்டாற்றின் கீழக்கரையில் அமைந்துள்ளது. இது அகத்திய காவேரி, முள்ளியாறு, ஓடம்போக்கி எனவும் அழைக்கப்படும்.
தலவரலாறு:
வேடன் ஒருவன் கொள்ளையடித்து பிறர் பெருளைக் கவர்ந்து வாழ்ந்து வந்தான். சிவராத்திரியன்று இரவில் இத்தலத்தில் வந்து தங்கி, அடியார்களிடம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு விழித்திருந்தான். விடியற்காலையில் நான்காம் கால நிறைவில் அடியார்கள் பொருள் மூட்டைகளை கோயிலில் ஓரிடத்தில் வைத்துவிட்டு காவேரியில் நீராடச் சென்றனர். பொருள் நிறைந்த ஒரு மூட்டையை திருடி, காவலர்களிடம் பிடிபட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டான். சிவராத்திரியன்று விழித்திருந்து வில்வவன தலத்தில் தங்கியிருந்த புண்ணியத்தால் இறைவன் உமாதேவியாருடன் இடபாரூடராக வந்து, திருவைந்தெழுத்து உபதேசிக்க, முக்தி அடைந்தான்.
பிரமன், தமது படைப்புத் தொழிலில் செயலற்ற நிலை ஏற்பட, இத்தலத்திற்கு வந்து வில்வவனம் கண்டு மகிழ்ந்து சிவலிங்கம் நிறுவி பூஜித்தார். இறைவனார் அம்பிகையுடனும், முனிவர்கள், பூதகணங்களுடன் தோன்றி திருவைந்தெழுத்து உபதேசம் செய்து அருளினார். கும்பமுனிவர், குறுமுனிவர், தமிழ்முனிவர் என்று அழைக்கப்படும் அகத்திய முனிவர், பொதியமலை வந்து தங்கி, பின் திருமறைக்காடு, நல்லூர், நாகப்பட்டினம், அத்திப்புலியூர் ஆகிய தலங்களில் இறைவனை வழிபட்டு, பிரமன் பூஜித்து பேறுகள் பெற்ற இத்தலத்தில் வடதிசையில் ஒரு இலிங்கம் நிறுவி, தீர்த்தம் அமைத்து வழிபட்டு, இறைவன் இடபவாகனத்தில் தேவியுடன் எழுந்தருளிய திருக்காட்சி கண்ட தலம்.
பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன் இத்தலத்தில் பிரம்ம தீர்த்த கரையில் தங்கி இறைவனை வழிபட்டார். இறைவன் வேடன் உருவில் தோன்றி பூசல் செய்து, அர்ச்சுனனுடன் மற்போர் செய்தார். இறைவன், பின் மகிழ்ந்து பாசுபத அஸ்திரம் வங்கினார். அர்ச்சுனன் வழிபட்டதால் இத்தலம் காண்டீபவனம் எனவும், தீர்த்தம் அர்ச்சுன தீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது.
சிறப்பு:
இத்தலம் வில்வவனம், பிரமவனம், பஞ்சாட்கரபுரம், காண்டீபவனம் என யுகத்திற்கு ஒரு பெயராக வழங்கி வந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெரும் பெருமைகளை உடையது. வில்வவனம் என்றழைக்கப்படும் இத்தலத்தின் தீர்த்தங்களில் நீராடி வழிபடுவோர், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர். பிரமன், அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் இத்தலத்தில் தங்கி வழிபட்டுத் தங்கள் பெயரில் தீர்த்தங்களை அமைத்துள்ளனர். இத்தலத்தில் அமுதத்தின் துளிகளே வில்வ மரங்களாய்த் தோன்றியுள்ளன.
மேலும் விநாயகர், கங்கை, காவேரி, சாண்டில்யர், ஆதிசேடன், இடைக்காட்டுச் சித்தர், வரகுண பாண்டியன், சிலந்திச் சோழன், பிருகு முனிவர், காசிப முனிவர், மார்க்கண்டேயர், கண்ணுவ முனிவர், வசிஷ்டர், பொதிகையோர், வாமதேவன் ஆகியோர் வழிபட்டுப் பெரும் பயன்கள் அடைந்தத் தலம்.
இத்தலத்தில் எவரேனும் இறக்கநேரின் இறைவனாரே தேவியுடன் வந்து திருவைந்தெழுத்து உபதேசித்து முக்தி அளிப்பார்.
திருஞானசம்பந்தர் மதுரையில் சொக்கநாதப் பெருமான் திருவருளுடன் சமணர்களை வாதில் வென்று, பல அற்புதங்களை நிகழ்த்தி, சைவ சமயத்தை நிலைபெறச் செய்து, சோழநாடு மீண்டு திருக்களர், பாதாளீச்சரம் (பாமணி) தலங்களில் இறைவனைப் போற்றிப் பாடி பிற தலங்கள் பலவும் பரவிப் போற்றி முள்ளியாற்றின் (வெட்டாறு) மேற்கரையை அடைந்தார். ஆற்றில் ஓடக் கோலுக்கு எட்டா அளவு வெள்ளம் பெருக்கெடுத்தோட, ஓடக்காரர்கள் ஓடங்களை கரையோர மரங்களில் கட்டிவிட்டு அகன்றதைக் கண்ட திருஞானசம்பந்தர், ஆற்றின் கீழக்கரையில் சிவபெருமான் மகிழ்ந்துறையும் திருக்கொள்ளம்பூதூர் திருத்தலம் தோன்றக் கண்டார். கண்டவுடன் இறைவனைப் பணியத் திருவுள்ளத்தில் எழுந்தக் காதல் குறிப்பால் ஓடக்காரர்கள் இல்லா நிலையில், இறையருள் உந்துவிக்க, விரைந்து சென்று அவரே ஓடத்தின் கட்டவிழ்த்து, தம்முடன் வந்த திருத்தொண்டர்களை ஓடத்தில் ஏற்றி தாமும் ஏறி, இறையருள் பற்றைத் தவிர ஓடம் ஓட்ட எவ்விதப் பற்ற்க் கோலும் இல்லாநிலையில், இறைவனை நெஞ்சிலிருத்தி, நாவன்மையே கோலாகப் போற்றிப்பாடி, இறைவனார் திருக்கோயிலை அடைந்தார். (இத்தலத்தில் ஐப்பசி மாதத்தில் ஓடத் திருநாள் சிறப்பாக நடைபெறுகிறது.)
பஞ்சாரண்யத் தலங்களில் (திருக்கருகாவூர், திருஅவளிவணல்லூர், திருஅரதைப்பெரும்பாழி, திருஆலங்குடி, திருக்கொள்ளம்பூதூர்) இத்தலமும் ஒன்று.
கல்வெட்டுக்கள் - 1899ம் ஆண்டு இரண்டும், 1917ம் ஆண்டு ஆறும் ஆக எட்டு கல்வெட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவை மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராசராசன் காலத்தவை. ஆலயத்திற்கு நிலங்களும், திருவிளக்கு நிவந்தங்களும் அளிக்கப்பட்ட குறிப்புகள் உள்ளன.
திருநீலகண்டத்து பாணனார், மதங்கசூளாமணியார் திருவுருவங்கள், இவ்வாலயத்தில் எழுந்தருளி- விக்கப்பட்ட விபரங்களும் நிலம் விட்ட செய்தியும் உள்ளன.
இவ்வாலயக் கட்டுமான நேர்த்தி, நகரத்தார் திருப்பணியின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆலயத்துடன் நந்தவனம், பசுமடம், வழிபடுபவர்கள் தங்க விடுதிகள் பராமரிப்பு ஆகியன போற்றத் தக்கவையாகும்.
கும்பாபிஷேக விழா:
நிகழும் சர்வதாரி வருசம் ஆனித் திங்கள் 08ம் நாள், (22 - 06 - 2008) ஞாயிற்றுக்கிழமை, காலை 09.45 மணிக்குமேல் 10.30 மணிக்குள் அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூட்டியுள்ளது; அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அ/மி ஸ்ரீ சௌந்தராம்பிகை உடனுறை அ/மி ஸ்ரீ வில்வவனேசுரர் சுவாமியின் பேரருளைப் பெற்று உய்வுற அன்புடன் வேண்டுகிறோம்.
Back to Important Events Page
Back to Shaivam Home Page
|