logo

|

Home >

devotees >

ilayankudi-mara-nayanar-puranam

இளையான்குடி மாற நாயனார் புராணம்

 

Ilayankudi Mara Nayanar Puranam

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது


இயலா விடைச்சென்ற மாதவர்க் கின்னமு தாவிதைத்த
வயலார் முளைவித்து வாரி மனையலக் கால்வறுத்துச்
செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க்
கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே

மன்னியலே ளாண்டொன்மை யிளைசை மாறர்
    வறுமையா லுணவுமிக மறந்து வைகி
யுன்னருநள் ளிருண்மழையி லுண்டி வேண்டி
    யும்பர்பிரா னணையவய லுழுது வித்துஞ்
செந்நென்முளை யமுதுமனை யலக்கா லாக்கிச்
    சிறுபயிரின் கறியமுது திருந்தச் செய்து
பன்னலரு முணவருத்தற் கெழுந்த சோதிப்
    பரலோக முழுதாண்ட பான்மை யாரே.

இளையான்கடியென்னும் ஊரிலே, வேளாளர் குலத்திலே, எத்தொழிலினும் சிறந்த வேளாண்மையால் வரும் குற்றமற்ற அளவிறந்த செல்வத்தையும், சிவனடியார்கண் மேலே முழுமையும் பதிந்த அன்பு கொண்ட சிந்தையையும் உடையவராகிய மாறனார் என்பவர் ஒருவரிருந்தார். அவர் தம்முடைய கிருகத்துக்கு வரும் சிவபத்தர்கள் எந்த வருணத்தாராயினும், மெய்யன்போடு அவர்களை எதிர்கொண்டு, அஞ்சலிசெய்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து, உள்ளும்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினாலொற்றி, ஆசனத்திலிருத்தி, சைவாகம விதிப்படி அருச்சித்து நமஸ்கரித்து, பின்பு கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையையுடையனவாய், உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை அவரவர் பிரீதிப்படி திருவமுதுசெய்விப்பார். இப்படித் தினந்தோறும் மாகேசுரபூசை பண்ணுதலாகிய சிவபுண்ணியத்தினாலே செல்வம் அபிவிருத்தியாக, அவர் குபேரனை ஒத்து வாழ்ந்திருந்தார். அப்படியிருக்குங் காலத்திலே, சிவபெருமான், அவ்விளையான்குடிமாறநாயனார் இந்தச் செய்கையைச் செல்வம் வந்தகாலத்திலன்றி வறுமை வந்த காலத்தினும் தளராது செய்யவல்லவர் என்பதையும், தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள்ளே புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர்செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், பிறர்க்குத் தெரிவித்து உய்விக்கும்பொருட்டுத் திருவுளங்கொண்டு, அந்நாயனாரிடத்திலே உள்ள செல்வமெல்லாம் நாடோறும் சுருங்கி வறுமை யெய்தும்படி அருள்செய்தார். அப்படிச் செல்வம் சுருங்கவும், நாயனார் மாகேசுரபூசையிலே பதிந்த தம்முடைய மனம் சிறிதும் சுருங்குதலின்றி, தம்மிடத்துள்ள நிலங்கள் முதலியவற்றை விற்றும், தம்மைக் கூட விற்று இறுக்கத்தக்க அவ்வளவு கடன்களை வாங்கியும், முன்போலவே தாஞ்செய்யும் திருப்பணியை விடாது செய்து வந்தார்.

அவர், மழைக்காலத்திலே மழைபெய்யும் ஒருநாள் இரவில் நெடுநேரம் எதிர்பார்த்திருந்தும், ஒருவருடைய உதவியும் இல்லாமல், பகன்முழுதும் போசனஞ்செய்யாமையால் பசி அதிகப்பட்டு; வீட்டுக்கதவைப் பூட்டிய பின்பு; திருக்கைலாசபதியானவர் சைவவேடங்கொண்டு எழுந்தருளிவந்து, கதவைத் தட்டி அழைக்க; நாயனார் கதவைத் திறந்து, அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய், மழையினால் நனைந்த அவருடைய திருமேனியை வஸ்திரம் கொண்டு துடைத்து, இருத்தற்கு இடங் கொடுத்து, அவருக்கு அமுதூட்டல் வேண்டும் என்னும் ஆசை மிகுதியால் தம்முடைய மனைவியாரை நோக்கி, "இந்தச் சைவர் மிக பசிகொண்டு வந்திருக்கின்றார். நமக்கு முன்னமே போசனத்துக்கு ஒன்றுமில்லை. ஆயினும், இவருக்கு எப்படியும் அன்னங்கொடுக்கவேண்டுமே; இதற்கு யாது செய்வோம்" என்றார். அதற்கு மனைவியார் "வீட்டிலே ஒரு பதார்த்தமும் இல்லை. அயலவர்க்கும் இனி உதவமாட்டார்கள். நெடுநேரம் ஆயிற்று. அரிசிக்கடன் கேட்கபோவதற்கு வேறிடமும் இல்லை. பாவியாகிய நான் இதற்கு யாது செய்வேன்" என்று சொல்லி, பின்பு "இன்று பகற்காலத்திலே வயலில் விதைக்கப்பட்ட ஈரத்தால் முன்னமே முளைகொண்டிருக்கின்ற நெல்லை வாரிக் கொண்டு வந்தால், இயன்றபடி அன்னஞ் சமைக்கலாம். இதுவேயன்றி, வேறொருவழியும் அறியேன்" என்று சொல்லித் துக்கித்தார். இந்த வார்த்தை செவிப்புலப்படுதற்குமுன், இளையான்குடிமாறநாயனார் மிக மனமகிழ்ந்து, அதற்கு உடன்பட்டு மிக மழைபொழிகின்ற மகா அந்தகாரமயமாகிய அத்தராத்திரியிலே ஒரு பெரிய இறைகூடையைத் தலையிலே கவிழ்த்துக்கொண்டு, காலினாலே தடவிக் குறிவழியே தம்முடைய வயலிற்சென்று, அதிலே அதிக மழையினால் நீர்மேலே மிதக்கின்ற நென் முளைகளைக் கையினாலே கோலி வாரி, இறை கூடை நிறைய இட்டு, தலையிலே வைத்துச் சுமந்துகொண்டு சீக்கிரம் திரும்பி வந்தார். அவரை எதிர்ப்பார்த்துக்கொண்டு வாயிலிலே நின்ற மனைவியார் மனமகிழ்ச்சியோடு அந்த நென்முளையை வாங்கி, சேறு போம்படி நீரினாலே கழுவியூற்றி, பின்பு தம்முடைய பிராணநாயகரை நோக்கி, "அடுப்பிலே நெருப்பு மூட்டுதற்கு விறகு இல்லையே" என்று சொல்ல, அவர் கிலமாயிருக்கின்ற வீட்டின் மேற்கூரையிலுள்ள வரிச்சுக்களை அறுத்து விழுத்தினார். மனைவியார் அவைகளை முறித்து, அடுப்பிலே மாட்டி, நென்முளையை ஈரம் போய்ப் பதமாகும்படி வறுத்து, பின் அரிசியாக்கி, நீர் வார்த்துக் காய்ந்திருக்கின்ற உலையில் அதையிட்டு, சோறாக்கி, தம்முடைய நாயகரைப் பார்த்து, "இனிக் கறிக்கு யாதுசெய்வோம்" என்றார், உடனே நாயனார் புறக்கடைத் தோட்டத்திற்குச் சென்று, குழியினின்றும் மேற்படாத சிறுபயிர்களைக் கையினாலே தடவிப் பிடுங்கிக் கொண்டு வந்து, கறி சமைக்கும்படி கொடுக்க; மனைவியார் அவைகளை வாங்கி ஆய்ந்து, நீரினாலே கழுவி, தமது சாமர்த்தியத்தினால் வெவ்வேறு கறியமுது செய்து முடித்து, நாயகருக்கு அமுதும் கறியும் பாகம் பண்ணப்பட்டமையைத் தெரிவித்து, "சைவரை அமுதுசெய்விப்போம்" என்று சொன்னார். நாயகர், நித்திரை செய்பவர்போலக் காட்டிய ஐயருக்குச் சமீபத்திற்சென்று, "சுவாமீ! அமுதுசெய்ய எழுந்தருளும்" என்று சொல்லி அழைக்க; அவர் ஒரு சோதிவடிவமாய் எழுந்து தோன்றினார். அதைக் கண்ட இளையான்குடிமாறநாயனாரும் மனைவியாரும் திகைத்து நின்றார்கள். பின்பு பரமசிவன் பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய்த் தோன்றி, இளையான்குடிமாறநாயனாரை நோக்கி, "அன்பனே! நம்முடைய அடியார்களை அமுதுசெய்வித்த நீ உன்மனைவியோடும் நம்முடைய பதத்தை அடைந்து, பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிரு" என்று திருவாய்மலர்ந்தருளி அந்தர்த்தானமாயினார்.

திருச்சிற்றம்பலம்

 


இளையான்குடி மாற நாயனார் புராண சூசனம்

மாகேசுர பூசை

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம். மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, "சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்" என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம். சிவதருமோத்தரம், "புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." எ-ம் பிரமோத்தரகாண்டம், "எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும் - வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாணிபினரை - யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே - கொள்ளத்தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்." எ-ம். சைவசமயநெறி, "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு - மீசனென வேயுளத்துளெண்" எ-ம். வரும்.

இம் மாகேசுர பூசையிற் சிறந்த புண்ணியம் பிறிது இல்லை. அது, "அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்து - ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று - ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை - யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்" என்னுந் திருவிளையாடற் புராணத்தினாலும், "படமாடக் கோயிற் பரமற் கொன்றீயி - னடமாடுங் கோயி னம்பற்கங் காகா - நடமாடுங் கோயி னம்பற்கொன் றீயிற் - படமாடுங் கோயிற் பரமற்கங் காமே." எ-ம். "தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் - துண்டது மூன்று புவனமு முண்டது - கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் - றெண்டிசை நந்தி யெடுத்திசைத்தானே." எ-ம். "அகர மாயிர மந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பரம யோகி பகலூண் பலத்துக்கு - நிகரில்லை யென்பது நிச்சயந் தானே." எ-ம். "ஆறிடு வேள்வி யருமறை நூலவர் - கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதி - னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலே - பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" என்னுந் திருமந்திரத்தினாலும், "மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் - கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா - னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் - கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்னுந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும், சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை; பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை" என்னும் அருணாசல மான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்க்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம் அது, "மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின்னன்பர்தம் பணியா - மறமது கிடைக்கின்" என்னும் தாயுமான சுவாமி வாக்கால் அறிக.

இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய மாகேசுரபூசையை, எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால், பெருஞ் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். இவர் விதிவழுவாதே மாகேசுரபூசை செய்தனர் என்பது, இங்கே "ஆர மென்பு புனைந்த வையர்த மன்பர்" என்னுந் திருவிருத்தத்தினாலும், "கொண்டு வந்து மனைப்பு குந்து" என்னுந் திருவிருத்தத்தினாலும் உணர்த்தப்பட்டது. இம்மாகேசுர பூசையை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை இவ்வளவு என்று சொல்லக்கூடாத பெரும் வியப்பைத் தருகின்றது! இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே "இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம்! நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம்! இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ! இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ! தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர்! மெய்யுணர்வுடையோர் தமக்கு எத்துணை இடர்வரினும், சிவனிடத்து அன்பு குன்றார் என்பது இதனால் அறிக. காரைக்காலம்மையாரும் "இடர்களை யாரேனு மெனக்கிரங்காரேனும் - படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவி - லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் - கன்பறா தென்னெஞ் சவர்க்கு." என்று திருவாய் மலர்ந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

See Also: 
1. இளையான்குடி மாற நாயனார் புராணம் (தமிழ் மூலம்) 
2. iLaiyAnkudimARa nAyanAr purANam in English prose 
3. Ilayankudi Mara Nayanar Puranam in English Poetry 

 


Related Content

इलयाङ्कुडि मारनार नायनार दिव्य चरित्र